Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹெல்மெட் போடாத தம்பதியை எட்டி உதைத்த போலீஸார்...! சம்பவ இடத்திலேயே பலியான 3 மாத கர்ப்பிணிப் பெண்

Featured Replies

ஹெல்மெட் போடாத தம்பதியை எட்டி உதைத்த போலீஸார்...! சம்பவ இடத்திலேயே பலியான 3 மாத கர்ப்பிணிப் பெண்

 
 
ஹெல்மெட் போடாத தம்பதியை போலீஸார் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் திருச்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்ப்பிணி பலி
 
திருச்சி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் தொந்தரவுகள் தருவதாகக்  குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி  திருவெறும்பூர்  கணேஷா  ரவுண்டானா  பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகளை வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் கையைக் காட்டி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
127552b7-2543-439a-9e15-adf48471aa6f_212
 
ஆனால், ஹெல்மெட் போடாமல் சென்ற அவர்  நிற்காமல் சென்றதால் போலீஸார், அவர்களை மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்து சென்று மறித்தனர். அப்போது காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் பைக்கில் சென்ற தம்பதியினரை எட்டி உதைத்துள்ளார். இதனால் பைக்கை ஓட்டி வந்தவர் தடுமாறி சாலையில் கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
trichy_21366.jpg
 
இவர்கள் திருச்சி அய்யம்பேட்டை அடுத்த சூழப்பேட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், வாகனத்தை ஓட்டி வந்தவர் ராஜா - என்கிற தர்மராஜ் என்பதும், பின்னால் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷா இவர் 3 மாத கர்ப்பிணி எனத் தெரியவந்துள்ளது. அவர்  மேல் வேன் ஏறியதால் சம்பவ இடத்திலேயே உஷா பலியானார். 
 
இந்நிலையில் இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். பின், போலீஸ்மீது பொதுமக்கள் கல்வீசித் தாக்கினர். அப்போது போலீஸ் காமராஜ் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். இந்நிலையில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருச்சி தஞ்சை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/118557-3-months-pregnant-woman-has-been-killed-by-police-in-helmet-check-up.html

 

 

 

வாகன சோதனையில் எட்டி உதைத்த ஆய்வாளர்; மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணி பலி, கணவர் படுகாயம்: 3000 பேர் சாலை மறியலால் ஸ்தம்பித்தது திருச்சி நெடுஞ்சாலை

 

 
b620c8ae-26fd-410f-8a76-fafaa6bf2db0

எட்டி உதைத்தால் சாலையில் விழுந்த கர்ப்பிணி உயிரிழந்தார். இதனால் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்ட காட்சி

திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மட் அணியாமல் வந்த தம்பதிகள் வாகனத்தை காவலர் எட்டி உதைத்ததால் சாலையில் விழுந்த கர்ப்பிணி பெண் மீது பின்னால் வந்த வேன் மோதி பலியானார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3000 பேர் சாலை மறியல் செய்ததால் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது.

இன்று மாலை திருச்சி துவாக்குடி அருகே வாகன சோதனை நடந்துக்கொண்டிருந்தது. அப்போது திருச்சி துவாக்குடி ஐயப்பன் நகரை சேர்ந்த உஷா மற்றும் ராஜா தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். உஷா குழந்தையின்மை சிகிச்சை பெற்று தற்போது கர்ப்பிணியாக இருந்தார். அதனால் வாகனத்தை ராஜா மெதுவாக ஓட்டி வந்துள்ளார்.

அப்போது திருச்சி கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த சிலர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராஜா, கணேஷ் தம்பதிகள் வந்த இருசக்கர வாகனத்தை மடக்கியுள்ளனர். ராஜா ஹெல்மட் அணியவில்லை.

இதனால் பயந்துபோன அவர் தவிர்ப்பதற்காக சென்றபோது ஆய்வாளர் காமராஜ் உள்ளிட்ட ஊர்க்காவல் படையினர் விரட்டி பிடிக்க முயன்றுள்ளனர். இதில் காமராஜ் எட்டி உதைத்ததில் ராஜாவின் மோட்டார் பைக் சாலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சாலையில் விழுந்த உஷா மீது பின்னால் வந்த வேன் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் கீழே கிடந்த ராஜா மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார்.

எட்டி உதைத்து விபத்தை ஏற்படுத்திய ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர்கள், ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கொந்தளித்து திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலால் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பல கிலோ மீட்டர் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் சக்தி கணேஷ் ஆய்வாளர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆய்வாளர் காமராஜ் மதுபோதையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22970344.ece?homepage=true

  • தொடங்கியவர்

வாகன சோதனையின் போது உயிரிழந்த கர்ப்பிணி உஷாவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

 

 
usha


திருச்சி: திருவெறும்பூரில் வாகன சோதனையின் போது போக்குவரத்துக் காவலர் எட்டி உதைத்ததால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்குக் காரணமான போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ள உஷாவின் உறவினர்கள், கொலை வழக்குப் பதிவு செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜா, உஷா இருவரும் திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, வாகனச் சோதனையில் நிற்காமல் சென்றதால் காவல் ஆய்வாளர் காமராஜ், துரத்திச் சென்றார். 

இதில், ஆய்வாளர் எட்டி உதைத்தில் கீழே விழுந்த கர்ப்பிணி உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போக்குவரத்துக் காவலரின் மோசமான நடவடிக்கையால் கர்ப்பிணி உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தை தொடங்கினர். 

இரவு 7.30 மணியளவில் தொடங்கிய போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. ஒரு காவலர் செய்த தவறை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்துவதா? என்று போராட்டத்தில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்டக் கதறினர்.

போலீஸ் குவிப்பு: திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர் சக்தி கணேஷ், டிஎஸ்பி கோடிலிங்கம் மற்றும் 4 பட்டாலியன் போலீஸார் என 300-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டோர் கல்வீச்சில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர். இந்த தடியடி சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.

மறியல் போராட்டத்தால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள், காவல்துறை, வருவாய்த்துறை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. போலீஸார் விரட்டிச் சென்றதில் ஆங்காங்கே இருசக்கர வாகனங்களும் கீழே விழுந்து சேதமடைந்தன. கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் 50-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மறியல் போராட்டம் 4 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதனால், திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நெரிசலில் சிக்கிய பேருந்துகளில் இருந்து மக்கள் கீழே இறங்கி நடந்து சென்று மாற்றுப் பாதையில் செல்லத்தொடங்கினர். நெரிசலில் சிக்கிய வாகனங்களைத்தவிர்த்து இதர வாகனங்கள் அனைத்தும் புதுக்கோட்டை சாலை வழியாக திருப்பி அனுப்பப்பட்டன. ஆம்புலன்ஸ் வாகனஙகள் பலவும் நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு மாற்றுப்பாதையில் செல்ல நேரிட்டது.

போர்க்களமானது: கணேஷா ரவுண்டானா பகுதியின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்களின் கண்ணாடி துகள்களே சாலையில் ஆக்கிரமித்திருந்தன. போலீஸார் நடத்திய தடியடியால் மக்கள் விட்டுச் சென்ற காலணிகள், வீழ்த்தப்ட்ட வாகனங்கள் என சாலை முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.

ஆணையர் பேட்டி: சம்பவம் தொடர்பாக, திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் அ. அமல்ராஜ் கூறியது:  போக்குவரத்து ஆய்வாளர் விரட்டிச் சென்றதில் கீழே விழுந்து பெண் உயிரிழந்துள்ளார். சம்பவத்துக்கு காராணமான காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். வாகனங்களை சேதப்படுத்திய நபர்கள் தொடர்பாக சிசிடிவி கேரமா பதிவுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

http://www.dinamani.com/tamilnadu/2018/mar/08/வாகன-சோதனையின்-போது-உயிரிழந்த-கர்ப்பிணி-உஷா-உடலை-வாங்க-உறவினர்கள்-மறுப்பு-2876800.html

  • தொடங்கியவர்

`உஷா சொல்லி முடிப்பதற்குள் காமராஜ் எட்டி உதைத்துவிட்டார்!’ - மனைவியை இழந்த ராஜா கண்ணீர்

 
''என் குடும்பத்தை இப்படி அழிச்சிட்டாரே. அவருக்கும் குடும்பம் இருக்கிறது" என்று உஷாவின் கணவர் ராஜா கண்ணீர் மல்க கூறினார்.
உஷா
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த சூலமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்த ராஜா, நேற்று மாலை 7 மணியளவில் தன் 3 மாத கர்ப்பிணி மனைவியைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரது பைக் திருச்சி துவாக்குடி டோல் பிளாசா அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு சோதனைக்கு நின்றுகொண்டிருந்த டிராஃபிக் போலீஸார், அவர்களை மறித்தார்கள். ஓரமாக வண்டியை நிறுத்துவதற்குள், ராஜாவின் சட்டையைப் பிடித்து போலீஸார் இழுத்ததுடன், 7 கிலோ மீட்டர்வரை அவரை துரத்திச் சென்று, திருச்சி  திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதி அருகே அவர்களின் பைக்கை மறித்ததுடன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ், எட்டி உதைத்ததில் ராஜாவும் பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
 
இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா பலியானார். அடுத்து இந்தச் சம்பவம் குறித்த தகவல் அந்தப் பகுதியில் பரவ அப்பகுதியில்
உள்ள பொதுமக்கள் 5,000-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் பலமணி நேரம் நீடித்தது. போராட்டக்காரர்களிடம் திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ், டி.சி சக்திகணேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், கல்வீச்சும், வாகனம், மற்றும் பேருந்துகள் தாக்குதலுக்குள்ளானது. இறுதியில் போலீஸார்,  தடியடி நடத்தி போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இந்தத் தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர். 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 12-ம் வகுப்பு படித்த மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட ராஜா, “பைக்கில் வந்துகொண்டிருந்த எங்களின் பைக்கை, துவாக்குடி டோல் பிளாசா அருகே போலீஸ்காரங்க மறிச்சாங்க. நான் வண்டியை ஓரமாக நிறுத்துவதற்குள் ஒரு போலீஸ்காரர், என் சட்டையைப் பிடித்து இழுத்தாரு. ஒரு குற்றவாளியைப்போல நடத்துறீங்களே எனக் கேட்டேன். அடுத்து என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கால்மணி நேரம் அங்கேயே நிறுத்தி வைத்திருந்தார். அவங்க என்னிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, மற்ற வண்டிகளைப் பிடிக்கும் வேலைகளைச் செய்ததால், அவளை ரோட்டில் நிற்க வைப்பது சரியாக இல்லை என்பதால், கிளம்பிவந்தோம். நாங்கள் ரொம்ப தூரம் வந்துவிட்டோம். அப்போது உஷா, பின்னால் ஒரு போலீஸ்காரர் விரட்டிவருவதாகக் கூறினார். அவள் சொல்லி முடிப்பதற்குள், வேகமாக அந்தப் போலீஸ்காரர் கோபமாக எட்டி உதைத்தார். அடுத்து வண்டி நிறுத்துவதற்குள் மீண்டும் உதைத்தார். இதில் நிலைதடுமாறிய நாங்கள், வண்டியோடு கீழே விழுந்தோம். அதில் இருவருக்கும் பலத்த அடி. உஷாவுக்கு தலையில் அடி. அடுத்து ஆம்புலன்ஸ் வர வைத்து, அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் எங்களை அனுப்பி வைத்தாங்க. துவாக்குடி ஆஸ்பத்திரியில் எனக்கு சிகிச்சையளித்தபோதுதான், உஷா இறந்துட்டானு சொன்னாங்க. அந்தப் போலீஸ்காரருக்கும் குடும்பம் இருக்கும். என் குடும்பத்தை இப்படி அழிச்சிட்டாரே” எனக் கதறினார்.
உஷா கணவர் ராஜா
இந்நிலையில் இறந்துபோன உஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு, மருத்துவர் சரவணன் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. அப்போது, மக்கள் அதிகாரம், புதிய தமிழகம், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பாவியான உஷா உயிரிழப்புக்குக் காரணமாகப் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ்மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களைப் போலீஸார் செய்யக் கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். இதனால் திருச்சி மருத்துவமனை வளாகம் பரபரப்பாக உள்ளது. உஷாவையும் உஷாவின் வயிற்றில் இருந்த சிசுவின் மரணத்துக்குக் காரணமான அந்தப் போலீஸ்காரரைத் தூக்கில் போடும் அளவுக்கு வழக்குப்பதிவு செய்யுங்கள் எனப் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/118641-police-personnel-destroys-my-family-says-ushas-husband.html

  • தொடங்கியவர்

திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – கமல்ஹாசன் அறிவிப்பு

 

 
kamal1jpg

கமல்ஹாசன் | கோப்புப் படம்

திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மகளிர் தின விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. அதில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக, 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்த கமல்ஹாசன், பின்னர் 10 லட்ச ரூபாயாக தொகையை உயர்த்தினார். தமிழக அரசு சார்பில் உஷாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22984527.ece?homepage=true

  • தொடங்கியவர்

போலீஸ்: மக்களின் எமனா? காவலனா?

 

திருச்சியில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற, ராஜா என்பவரின் இரு சக்கர வாகனத்தைத் துரத்திச் சென்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் ராஜாவின் மனைவி உஷா மரணம் அடைந்தது பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப் படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப் படம்

உஷாவின் மரணத்தைத் தொடர்ந்து, தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இரவு நேரத்தில் பொதுமக்கள் தன்னெழுச்சியாகக் கூடி நடத்திய போராட்டத்தை, தடியடி நடத்தித்தான் காவல் துறையால் கலைக்க முடிந்தது.

காவல் அதிகாரி துரத்திச்சென்றபோது ஏற்பட்ட விபத்தித்தால் அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், அவர் உதைத்தாரா இல்லையா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

காமராஜ் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தாலும், காவல் துறையைச் சேர்ந்த சிலர் பொதுமக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவமும் பார்க்கப்படுகிறது.

மனைவியை இழந்த ராஜா (மத்தியில்) Image captionமனைவியை இழந்த ராஜா (மத்தியில்)

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் இத்தகைய பிரச்சனைகளுக்குக் காரணம் ஊழல் என்று ஒரே வார்த்தையில் கூறிவிடலாம் என்கிறார்.

"ஊழல்வாதிகள் உயர் பதவிக்கு வந்தால், அடக்குமுறை மூலம் மட்டுமே அவர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதால் மேலிருந்து கீழ்வரை அனைவரும் பாதுகாக்கப்படுகிறார்கள். எனவே ஒரு காவலர், தலைமைக்காவலர், ஆய்வாளர் என அனைவரும் தங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ, அதை முறைகேடாகப் பயன்படுத்தவே முயல்கிறார்கள்," என்கிறார் தேவசகாயம்.

policeபடத்தின் காப்புரிமைM G DEVASAHAYAM / FACEBOOK

"மதுவிலக்குக்காக போராட்டம் நடத்திய பெண்ணை பொது இடத்தில வைத்து அறைந்த உதவி காவல் கண்காணிப்பாளருக்கு அடுத்த சில மாதங்களிலேயே பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அத்தகைய அதிகாரிகள் பாதுகாக்கப்படுவதற்கு அரசியல்வாதிகளுடன் அவர்களுக்கு உள்ள தொடர்புதான் காரணம்," என்கிறார் அவர்.

கைது மட்டும் போதாது

"இத்தகைய செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பினால் மட்டும் போதாது. உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவசரகால விசாரணை நடத்தி, அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை உள்ளது. இரண்டு, மூன்று பேர் அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டால், பிறர் இவ்வாறு நடந்துகொள்வதைத் தவிர்ப்பார்கள்," என்று கூறுகிறார் அவர்.

காவல் ஆய்வாளர் காமராஜ் Image captionகாவல் ஆய்வாளர் காமராஜ்

காவல் துறையினருக்கு பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்வது என்று அவ்வப்போது வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டபோது, பயிற்சியின்போது கற்றுக்கொண்டவற்றை அமல்படுத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லாதபோது, பயிற்சிகளால் என்ன பலன் அளிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் தேவசகாயம்.

"முன்பு மாவட்ட ஆட்சியருக்கே மாவட்டம் முழுமைக்குமான நிர்வாக நடுவர் அதிகாரம் இருந்தது, தற்போது காவல் ஆணையரகம் உள்ள மாநகரங்களில், அந்த மாநகருக்கான நிர்வாக நடுவர் அதிகாரம் காவல் துறை ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகளிடமே அத்தகைய அதிகாரங்கள் இருந்தால் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும். பழைய முறையே அமல்படுத்தப்பட வேண்டும்," என்று நிர்வாகச் சீர்திருத்தம் செய்ய வலியுறுத்துகிறார் தேவசகாயம்.

'அதிகாரம் - வரம்பு மீறிய உணர்வுகளுக்கான வடிகால்'

பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் அசோகன், பாதியில் கைவிடப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வை மேற்கோள் காட்டினார்.

"ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர்கள் குழுவை வைத்து இரண்டு வாரங்களுக்கு ஓர் ஆய்வு நடத்த உத்தேசிக்கப்பட்டது. அந்த ஆய்வில் ஒரே பின்புலம், கலாசாரம், அறிவுத் திறன் ஆகியவை உடைய மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தக் குழுவில் ஒரு பாதி மாணவர்கள் சிறைக் கைதிகளாகவும், மறு பாதி மாணவர்கள் சிறைக் காவலர்களாகவும் நடித்தனர்."

அசோகன் Image captionஅசோகன்

"ஆனால், அந்த ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், காவலர்களாக நடித்த மாணவர்கள் கைதிகளாக நடித்த மாணவர்கள் மீது தங்கள் அதிகாரத்தை செலுத்தி, அவர்களை உடல் ரீதியாகத் தாக்கி இன்பம் கண்டனர். அதிகாரம் தங்கள் கிடைக்கும்போது, அதை வரம்பு மீறிய தங்கள் உணர்வுகளுக்கான வடிகாலாகப் பார்க்கும் மனநிலையே இதற்குக் காரணம்," என்கிறார் அவர்.

ஒரு வேளை அந்த அதிகாரி உதைக்காமல், வண்டியை ஓட்டிச்சென்றவரே பதற்றத்தில் கீழே விழுந்து, அங்கு கூடியிருந்தவர்களால் காவல் அதிகாரியால்தான் அவர் தள்ளிவிடப்பட்டார் என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாமே, என்ற கேள்விக்கு கும்பலாக சேரும்போது மனிதர்களிடம் உளவியல் மாற்றம் வருவது இயல்புதான் என்கிறார் அசோகன்.

'காவல் துறையினர் அச்சத்துடன்தான் பணியாற்றுகின்றனர்'

ஓய்வுபெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் தில்லைநாயகம் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசும்போது, " ஒரு பெண் அமர்ந்திருக்கும் வாகனத்தைத் துரத்திச்சென்று தாக்குவது என்பது நம்பும் வகையில் இல்லை. இரு சக்கர வாகனத்தை ஒட்டிச் சென்றவர் பதற்றத்தில் நிலை தடுமாறி விழுந்திருக்கலாம்," என்று கூறினார்.

காவல் துறைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"காவல் துறை குறித்து ஊடகம் உருவாக்கியுள்ள பிம்பத்தாலும், காவல் துறையில் உள்ள சில தவறான நபர்களின் நடத்தையாலும் அவர்களே பதற்றத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்திருந்தாலும், காவல் அதிகாரி உதைத்துத்தான் விபத்து நிகழ்ந்ததாக கருதப்படலாம்," என்கிறார் தில்லைநாயகம்.

"மனித உரிமை, ஊடகம் உள்ளிட்டவை வலுவடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் காவல் துறையினர் அச்சத்துடன்தான் பணியாற்றுகின்றனர். மன அழுத்தத்தை குறைக்க வழங்கப்படும் பயிற்சிகளும் பலன் அளிப்பதில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் அரசியல் கட்சிகள் மற்றும் சாதிச் சங்கங்களின் எண்ணிக்கையால் காவல் துறை மீதான அழுத்தங்களும் அதிகரித்து வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-43326457

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.