Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும்

Featured Replies

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும் – பி.மாணிக்கவாசகம்

women.jpg?resize=400%2C319
 
அனைத்துலக பெண்கள் தினம் இம்முறை இலங்கையில் முக்கியத்துவம் மிக்க ஒரு தினமாகக் கருதப்படுகின்றது. பெண்களுக்கு உள்ளுராட்சி அரசியலில் 25 வீத இட ஒதுக்கீடு வழங்கி அதன்  அடிப்படையில் தேர்தலும் நடந்து முடிந்துள்ளமையே இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.
 
பொதுவாகவே பெண்கள் இரண்டாம் தரத்திலேயே வைத்து கணிக்கப்படுவதாகவும், பல்வேறு விடயங்களிலும் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், திறமைகளும், உரிமைகளும் உள்ள போதிலும், தொழில் தளங்களிலும், சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படுவதில்லை என்றும் பெண்ணிலைவாதிகள் கூறுகின்றார்கள்.
 
இந்தப் பின்னணியில் வடகிழக்குப் பிரதேசங்களில் சமூக மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் பணியாற்றுகின்ற பெண்களிடம் இந்த ஆண்டுக்கான அனைத்துலக பெண்கள் தினம் குறித்து என்ன கருதுகின்றீர்கள் என்று வினவியபோது, பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பெண்களின் உரிமைகளுக்காகவும் அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் செயற்பட்டு வருகின்ற பெண்கள் செய்பாட்டு வலையமைப்பின் முக்கியஸ்தராகிய ஸ்றீன் ஸரூர் பெண்களின் எதிர்காலம் குறித்து அச்சமடைகின்ற ஒரு நிலைமை உருவாகியுள்ளதாக் குறிப்பிடுகின்றார்.
 
‘நாங்கள் இப்போது ஒரு சிக்கலான கால கட்டத்தில் இருக்கின்றோம். ஏனென்றால் பல விடயங்களில் மறுசீரமைப்பு நடைமுறைகளை தேற்கொள்ளப் போவதாக உறுதியளித்துத்தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனவே மாற்றங்களை ஏற்படுத்தும் என்று இந்த நல்லாட்சி அரசாங்கத்தை நம்பியிருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்காக ஒர் அரசியல் தீர்வு காணப்படும் என்று கூறினார்கள். அதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசினார்கள். ஒற்றையாட்சி, ஏக்கிய ராஜ்;ஜிய, ஒருமித்த நாடு, ஐக்கிய நாடு என்றெல்லாம் விவாதித்தார்கள். இப்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பு வராது என்பது என்னைப் பொருத்தவரையில் நன்றாகத் தெரிகின்றது’ என்றார் ஸ்றீன் ஸரூர்.
 
அரசியல் தீர்வுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகத் தெரிவித்ததைப் போலவே, பாரபட்சமான சட்டங்களைத் திருத்துவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
‘குறிப்பாக சிறுபான்மை இன மக்களை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம், பெண்கள் சார்ந்த நிறைய சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் என்றார்கள். குறிப்பாக முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம், நிபந்தனையுடன் கூடிய கருக்கலைப்பு உரிமைச் சட்டம், பீனல் கோட் குற்றவியல் சட்டத் திருத்தம், குடும்ப வன்முறைச் சட்டத்தை வலுப்படுத்துதல் போன்ற சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டதேயொழிய நடைமுறையில் எதுவும் நடைபெறவில்லை. நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்காக பொதுமக்களிடம் கலந்தாலோசனை செய்யப்பட்டது. அதற்காக எமது சகோதரிகள் களத்தில் இறங்கி பல நாட்கள் பெண்கள் சார்ந்து செயற்பட்டார்கள். நிலைமாறுகால நீதி;க்கான பொறிமுறைகள் சமமான காலத்தில் வரவேண்டும். நீதி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார்கள். இதனால் தங்களுக்கு ஏதாவது தீர்வு ஒன்று கிடைக்கும் என்று இந்த அரசாங்கத்தின் மீதான பெண்கள் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. எங்களைப் போன்ற செயற்பாட்டாளர்களும்சரி, குடும்பப் பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களாயினும்சரி, போராளிப் பெண்களானாலும்சரி எல்லோரும் இந்த அரசாங்கம் தங்களுக்காக ஏதாவது செய்யும் என்று நம்பியிருந்தார்கள். அம்மாமார்களான பெண்கள் இன்று தெருவில் இறங்கி ஒரு வருட காலமாகப் போராட்டம் நடத்துவதற்கும் இந்த அரசாங்கத்தின் மீதான எதிர்பார்ப்பும், நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான கலந்தாலோசனைகளும் காரணமாகின’ என்றார் அவர்.
 
தென்பகுதியைச் சேர்ந்தவர்களும் நம்பிக்கை இழந்துள்ளனர் 
 
இந்த கால கட்டத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் இந்த அரசாங்கத்திற்கு நல்ல பாடம் புகட்டியிருக்கின்றது என்று குறிப்பிடுகின்ற ஸரூர், தென்பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகக் கூறுகின்றார்.
 
‘லசந்த விக்கிரமதுங்க, என்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்களின் விடயங்களில் நீதி கிடைக்கும். லஞ்ச ஊழல்களுக்கு நீதி கிடைக்கும். அதில் ஈடுபட்டவர்களுக்கு ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையில்தான் சிங்கள மிதவாதிகள் இந்த அரசு ஆடசிக்கு வருவதற்கு வாக்களித்தார்கள்.  தமிழ் முஸ்லிம் மக்களும் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்பினார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உடைந்து போயிருக்கின்றது.  அதேபோல முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட பொதுபலசேனா போன்ற அமைப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது நடக்கும் என்று நம்பினார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால், அம்பாறையிலும் கண்டி தெல்தெனிய, திகன போன்ற இடங்களில் முஸ்லிம்கள் மீண்டும் தாக்கப்படுகின்றார்கள். இந்த நிலையில் உள்ளுராட்சித் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்த அரசாங்கம் தொடர்ந்து தாக்கப் பிடிக்குமா என்பது சந்தேகமாக இருக்கின்றது. இதனால் எல்லோரும் நம்பிக்கை இழந்து போயிருக்கின்றார்கள்’ என்றார் அவர்.
 
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருக்கும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்பட்டிருப்பதாகவும், குறிப்பாக பெண்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தையும் அவர் வெளியிடுகின்றார்.
 
‘2020 ஆம் ஆண்டில் இறுக்கமான ஒரு சர்வாதிகார அரசாங்கத்தின் கீழ் கடுமையான கண்காணிப்புக்குள் பெண்களாகிய நாங்கள் வரப்போகின்றோம் என்று அஞ்சுகிறோம். பிரதேசவாதம், இனவாதம், சாதி வாதம், மதவாதம், தேசியவாதம், பெரும்பான்மைவாதம் எல்லாமே இப்பொழுது ஓங்கி நிற்கின்றன. பெண்களாகிய நாங்கள் மிதவாத அரசியல் செய்பவர்கள். இந்தத் தீவிரவாதங்களுக்கு எதிரானவர்கள். எனவே பெண்களாகிய எங்களைச் சுற்றி இந்தத் தீவிரவாதங்கள் பல வேலிகளையும் அரண்களையும் அமைத்திருக்கின்றன. அந்தத் தடைகளை உடைப்பதென்பது இலகுவான காரியமல்ல. இதனால் எதையும் செய்ய முடியாதவர்களாக நாங்கள் மாறியிருக்கின்றோம். இவற்றை எதிர்த்து முறியடிப்பதென்பது நீண்டகாலச் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் தான் இந்த சர்வதேச மகளிர் தினத்தையும் நாங்கள் நம்பிக்கை இழந்த நிலையில் எதிர்கொண்டிருக்கின்றோம்’ என்றார் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் முக்கியஸ்தராகிய ஸ்றீன் ஸரூர்.
 
அடிப்படை உரிமை சார்ந்த விடயங்கள் தீர்க்கப்படவில்லை
 
இதேவேளை, கொழும்பைச் சேர்ந்த பெண்கள் செயற்பாட்டாளராகிய பாரதியின் கருத்து இவ்வாறு இருக்கின்றது:   ‘சர்வதேச பெண்கள் தினமானது, வழமையான ஒரு நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றதே தவிர, பெண்களுக்கான தேவைகளை, எங்களுடைய நாட்டைப் பொருத்தமட்டில், பெண்கள் இதுவரையில் அனுபவித்து வருகின்ற சி;க்கல்களில் இருந்து வெளிக் கொண்டு வருவதற்கான எந்த ஓர் அடிப்படை உரிமை சார்ந்த விடயங்களுக்கும் தீர்த்து வைக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் சர்வதேச மகளிர் தினம் என்பது ஓர் அடையாள தினமாக அனுட்டிக்கபட்டு வருகின்றது. அது ஓர் ஆடம்பர தினமாகவும் மாற்றப்பட்டு வருகின்றது’ என சுட்டிக்காட்டினார் பாரதி.
 
இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பது அவருடைய கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
 
‘வழமையான இந்த அடையாளச் செயற்பாடுகள் ஆடம்பரமான நினைவுகூரல்களில் இருந்து விடுபட்டு, பாதிக்கப்பட்டு பல வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற பெண்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையில் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்குப் பிறகு இவ்வாறான நிகழ்வுகள் அனுட்டிக்கப்படலாம்.
 
எமது நாட்டில் பெண்களுக்கென்று தனியான அமைச்சு ஒன்று செயற்பட்டு வருகின்றது. ஆனால் அதன் நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வளவு தூரம் பயனடைகின்றார்கள் என்பது கேள்விக்குரிய விடயம். ஆகவே, அரச மட்டத்தில் இருப்பவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பெண்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெறுமனே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதன் ஊடாக மட்டும் பெண்களை மேம்படுத்த முடியாது’ என்றார் பாரதி.
 
நடராஜா சுமந்தியின் கருத்து
 
நடாஜா சுமந்தி கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். பெண்களின் பிரச்சினைகளுக்காகவும், பெண் உரிமைக்காகவும் பல்வேறு தளங்களில் அவர் செயற்பட்டு வருகின்றார்.
 
‘பெண்கள் கல்வியில் முன்னேறியிருக்கின்றார்கள். அதேபோன்று பல்வேறு துறைகளிலும் பல்வேறு விடயங்களிலும் முன்னேறியிருக்கின்றார்கள். ஆயினும் பெண்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசியலில் ஈடுபடுகின்றார்கள். அரசியலில் ஈடுபடுவதற்குப் பெண்கள் முன்வந்தாலும்கூட,  அவர்களுக்கு நிறைய தடைகள் இருக்கின்றன. வருடா வருடம் சர்வதேச பெண்கள் தினத்தை நாங்கள் அனுட்டித்தாலும், இவ்வாறாக பெண்களுக்கு ஏன் தடைகள் இருக்கின்றன என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கின்றது. பெண்கள் எவ்வளவுதான் கஸ்டப்பட்டு முன்னுக்கு வந்தாலும் ஆண்கள் மத்தியில் இருந்து பெண்களுக்குப் பெரிய எதிர்ப்பு காணப்படுகின்றது. அது இல்லாமல் செய்யப்பட வேண்டும். அதற்காக ஆண்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது’ என்று தனது உள்ளக் கிடக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
 
அனைத்துலக பெண்கள் தினம் என்பது வெறுமனே சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படக் கூடாது என்பதை அவர் வலியுறுத்துகின்றார். 
 
‘சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்கள் பெண்கள் என்று பெண்கள் மத்தியில் அறிவூட்டிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அறிவூட்டப்பட வேண்டிய ஆண்கள் பகுதியில் இந்த அறிவூட்டல் தொடர்பில் பெரிய பலவீனமே காணப்படுகின்றது. இதனால் எங்கு சென்றாலும் அவர்களுக்கு சமத்துவம் இல்லாத நிலையே ஏற்படுகின்றது. பெண்களுக்கு இயல்பான சூழலை ஆண்கள் மத்தியில் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த விடயத்தில் ஆண்கள் மத்தியில் எதிர்காலத்தில் நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருப்பதை எங்களால் உணர முடிகின்றது. பெண்களின் உரிமைளுக்காகப் பெண்கள் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போதும், பெண்கள் மட்டுமே போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்களுக்காக ஆண்களும் இணைந்து செயற்பட வேண்டும், அவர்களின் உரிமைகளுக்காக ஆண்களும் இணைந்து போhடக் கூடிய நிலைமை உருவாக்கப்பட வேண்டும் அப்போதுதான் இந்த மகளிர் தினம் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்’ என்றார் நடராஜா சுமந்தி.
 
பெண் உரிமைகள் நிறுவன ரீதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும்
 
முல்லைத்தீவைச் சேர்ந்த மொகமட் சாலி ஜெனூபா பெண்களின் உரிமைகள் நிறுவன ரீதியாக்ப பாதுகாக்கப்பட வேண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றார்.
 
‘பெண்கள் சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஆனாலும் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படுவதில்லை. அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கமும், அரச அதிகாரிகள், பணியாளர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும். அதற்காக நிறைய செயற்பட வேண்டி இருக்கின்றது. சட்ட ரீதியாகவும் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள். பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கான நீதி வழங்கப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல் அந்த நீதி மழுங்கடிக்கப்படுகின்றது. நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னரும், தேர்தலுக்குப் பின்னரும் பெண்கள் அரசியல் குழுக்களினாலும், அரசியல் தரப்புக்களினாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சட்ட ரீதியாக நீதி வழங்கப்பட வேண்டும். அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும். சட்டங்கள் சரியாகப் பேணப்பட்டு, அதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும்போது, பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தனித்துவமாகத் தமது செயற்பாடுகளையும், பொருளதார ரீதியான வாழ்க்கையையும் அதனோடு இணைந்த முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்’ என்றார் ஜெனுபா
 
அரசியலில் குதித்துள்ள பெண்கள் பாராட்டப்பட வேண்டும்
 
ராஜ்மோகன் பிரியதர்சினி மாங்குளத்தைச் சேர்ந்தவர். யுத்தகாலத்திலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பெணிகளின் உரிமைகளுக்காகவும், பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் செயற்பட்டு வருகின்றார்.
 
‘பெண்களில் பலர் தமது உரிமைகளுக்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் செயற்படுவதற்கு குடும்பங்களில் இருந்து துணிவோடு வெளியில் வந்துள்ள போதிலும், அவர்களுக்கு எதிரான பாகுபாடான நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. பல பெண்கள் பெண்ணிலைவாதிகளாக,  செயற்பாட்டாளர்களாக முன்வந்து உள்ளுராட்சித் தேர்தலில் துணிந்து களமிறங்கியிருந்தார்கள். தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும்சரி, தோல்வி அடைந்திருந்தாலுi;சரி, அதற்காக அவர்களை நான் இந்த மகளிர் தினத்தில் பாராட்டுகிறேன். குடும்பச் சூழலில் இருந்து, குடும்பம் மற்றும் சமூகுக் கட்டுப்பாடுகளைக் கடந்து தமக்காகவும், ஏனைய பெண்களுக்காகவும், தலைமைத்துவத்தை ஏற்று அரசியல் வெளியில் உழைப்பதற்கு முன்வந்துள்ள அவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகள், அவர்கள் மீதான அடக்குமுறைகள் என்பன தொடர்பில் ஆண்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆண்களும் பெண்களும் சமூகத்தின் இரு கண்கள் என்ற ரீதியில் இரு தரப்பினரும் சமத்துவத்துடன் இணைந்து செயற்படுவதற்குரிய வழி வகைகளைச் செய்வதற்கு, இந்த மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்றார் பிரியதர்சினி.
 
சமத்துவமான வன்முறைகளற்ற சமூகம் வேண்டும்
 
பிஸ்லியா பூட்டோ  புத்தளத்தைச் சேர்ந்தவர். பெண்கள் செயற்பாட்டாளராகிய அவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருக்கின்றார். சமத்துவமான வன்முறைகளற்ற சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அவருடைய நிலைப்பாடு.
 
‘சமத்துவத்துடன் கூடிய வன்முறைகளற்ற ஒரு சமூகத்தை இந்த ஆண்டின் மகளிர் தினத்திலாவது உறுதி கொண்டு, உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் பெண்களுடைய பிரச்சினைகளைப் பெண்களே கதைக்க வேண்டியிருக்கின்றது. பெண்களுக்காகக் குரல் கொடுக்கின்ற ஆண்களையும் எதிரிகளாக நோக்குகின்ற ஒரு கட்டமைப்பே எங்கள் சமூகத்தில் நிலவுகின்றது. இந்தக் கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும். இதற்கு சமத்துவத்துடன் கூடிய ஒரு கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும். அத்தகைய கலாசாரம் உருவாக்கப்பட்டால், எற்றத்தாழ்வுகள் இல்லாமல், சமூகத்தை சமநிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். சர்வதேச மகளிர் தினம் மார்ச் மாதத்தில் மாத்திரமே கொண்டாடப்பட வேண்டும். அதன் மூலம் சமத்துவம் வரும் என்று நான் சொல்லமாட்டேன். குடும்ப வாழ்க்கையாக இருக்கலாம், தனிநபருடைய செயற்பாடுகளாக இருக்கலாம், எங்களுடைய அன்றாடச் செயற்பாடுகளில் சமத்துவத்தை ஏற்படுத்தும்போதுதான், வாழ்நாள் முழுதுக்குமான நிரந்தர சமத்துவ நிலை ஏற்படும் என்பதுதான் எனது கருத்து, என்னைப் பொருத்தவைரயில், பெண்களுடைய முன்னேற்றத்திற்கு அவர்களைப் பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும்.  சமூகம் சார்ந்து அவர்களை உயர் நிலைக்குக் கொண்டு செல்வதும் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு அவசியம் என்று நான் நினைக்கிறேன்’ என்றார் பிஸ்லியா பூட்டோ.
 
பிரச்சினைகளும் பெண்களின் சாதனைகளும் பேசப்பட வேண்டும்
 
மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமாகிய வேலு சந்திரகலா வெற்றிச்செல்வி என்று அறியப்பட்டவர். போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறிப்பாக மாற்றுத்திறனாளிப் பெண்களின் உரிமைக்காகவும் அவர்களது வாழ்;க்கை மேம்பாட்டுக்காகவும் உழைத்து வருகின்றார்.
 
சர்வதேச மகளிர் தினம் என்பது பொதுவாக ஒரு கவனயீர்ப்பு தினமாக செய்யப்படுவதே வழமை. சில இடங்களில் அது ஒரு கொண்டாட்ட தினமாக மாறியுள்ளது. ஆனால் அது  கொண்டாட்டத்திற்குரிய நாளல்ல. அது கவனயீர்ப்பு நாள்தான். அந்த கவனயீர்ப்பில் பெண்களுடைய பிரச்சினைகள் பெண்களுடைய சாதனைகள் பற்றியான விடயங்களைப் பரவலாக, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என்று எல்லோருடனும் சேரிந்து கலந்துரையாடும் வகையில் நிறைய நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டும். குடும்ப வன்முறை என்றால், தனியாக அதைப்பற்றி எல்லோருடனும் கலந்துரையாட வேண்டும். அப்படியான கலந்துரையாடல்களின் மூலமே சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பெண்கள் மனதளவில் நிறைய விடுதலையைப் பெறுவார்கள். அத்தகைய விடுதiதான் பெண் விடுதலை என்று நான் நினைக்கிறேன். முக்கியமாக கிராம மட்டத்தில் மட்டுமல்ல. வாழ்க்கையின் பல மட்டங்களிலும் படித்தவர்கள், படியாதவர்கள் என்று சமூகத்தில் உள்ளவர்களிடையே கலந்துரையாடல்கள் பரவலாக்கப்பட வேண்டும்.  படித்தவர்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. படித்த சமூகத்திலும் பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, பெண்களுடைய பிரச்சினைகளில் தனித்தனியே கவனம் செலுத்த வேண்டும்’ என்றார் வேலு சந்திரகலா.
 
சட்டரீதியான மாற்றங்கள் தேவை
 
புத்தளத்தைச் சேர்ந்த பெண்கள் செயற்பாட்டாளராகிய ஜுவேரியா முகைதீன் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் விடயத்தில் சட்ட ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடுகின்றார்.
 
‘கடந்த 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டு சட்ட ரீதியாக  அவர்கள் மோசமான முறையில் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்ற ஒரு நிலைமை இலங்கையில் காணப்படுகின்றது. ஏனெனில் இந்த சட்டத்தை மதம் சார்ந்ததென்று, அரசாங்கம் மதத் தலைவர்களின் தீர்மானத்திற்கு விட வேண்டிய அவசியமில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற அரசாங்கமே இந்தச் சட்டத்திற்குப் பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்தது. எனவே, இது விடயத்தில் அரசாங்கம் பாராமுகமாகவே இருக்கின்றது. ஏனெனில் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என கூறப்பட்ட போதிலும், இந்த ஆண்டாகிய 2018 வரையிலும் அது நடைபெறவில்லை. பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீட்டை வழங்கி அவர்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட்டுள்ள முக்கியமான இந்த வருடத்தின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டாவது முஸ்லிம் பெண்களுடைய உரிமைகள் விடயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சகலரும் முன்வர வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்’ என்றார் ஜுவேரியா.
 
பெண்களின் உரிமைகள் காலாகாலம் கேள்விக்குரியது. 
 
மொகமட் மஜீத் ஜென்சிலா முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல்வேறு தளங்களில் பெண்களின் உரிமைகள் சமத்துவமமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது அவருடைய ஆவல்.
 
‘பெண்களுடைய சமத்துவமான உரிமைகள் என்பது காலா காலமாக கேள்விக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. குடும்பம், சமூகம், பெண்களுக்கான அரசியல் என்ற பல்வேறு தளங்களின் கட்டமைப்புக்களில் பெண்களுக்கான உரிமைகள் சமத்துவமாக வர வேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கின்றது. அரசியலில் பெண்களுக்காக 25 வீத இடம் ஒதுக்கப்பட்ட போதிலும், அது தேர்தலின் பின்னர் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்ற ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. பெண்களின் உரிமைகள் பேணப்படுவதற்கும், பாதுகாக்கப்படுவதற்கும், குடும்பம், சமூகம் என்ற வட்டங்களைக் கடந்து, அரசியல் பரப்பில் தீர்மானங்களை மேற்கொள்கின்ற நிலைகளில் பெண்களுடைய பிரதிநிதித்துவங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறாகப் பெண்கள் பங்களிப்பு செய்வதில் உள்ள கஸ்டங்கள் தடைகள் என்பவற்றை நீக்குவதற்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டவர்களும் தாமதமின்றி முன்வர வேண்டும்’ என்றார் ஜென்சிலா.
 
போராடிப் பெறுகின்ற நிலைமை மாற வேண்டும்.
 
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஹன்சானி அழகராஜா பெண்கள் பல துறைகளிலும் முன்னேறியிருப்பதனால், அவர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிட்டது என்று அர்த்தப்படாது என குறிப்பிடுகின்றார்.
 
‘சம உரிமை என்பது பெண்களின் பிறப்புரிமை. ஆனால் அதனை ஒவ்வோர் இடத்திலும் போராடியே பெற வேண்டிய நிலையிலேயே நாங்கள் இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும். வருடத்தில் ஒரு நாள் மட்டுமே வருகின்ற சர்வதேச மகளிர் தினத்தில் மாத்திரம் பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பது என்றில்லாமல், ஒவ்வொரு நாளுமே பெண்களின் உரிமைக்காக, அவர்கள் தங்களுடைய அந்தஸ்தை பல மட்டங்களிலும் நிலைநிறுத்திக் கொள்வதற்கான தினமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே என்றுடைய கருத்து.
 
பெண்கள் இன்று பல துறைகளிலும் முன்னேறியிருக்கலாம். பல்வேறு பதவிகளை வகிக்கலாம். ஆனால் அது மாத்திரமே பெண்களின் உரிமைகளை நிலைநிறுத்தியுள்ளது என்று கொள்ள முடியாது. இயற்கையிலேயே சமஉரிமை உடைய பெண்கள் சகல துறைகளிலும், சகல மட்டங்களிலும் ஆண்களைப் போலவே உரிமைகளையும், சலுகைகள் வசதிகளையும் உடையவர்களாக மாற்றம் பெற வேண்டும் என்பதே சர்வதேச மகளிர் தினத்தில் எங்களுடைய எதிர்பார்ப்பாகும்’ என்றார் ஹன்சானி அழகராஜா.
 
இரண்டு வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லை
 
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்ற கலாவதி சின்னையா வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
 
‘பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறிப்பாக பாலியல் வன்முறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறைக்கு உள்ளாகிய வவுனியா கனகராயன்குளத்தைச் சேர்ந்த ஹரிஷ்ணவி என்ற சிறுமி மரணமடைந்து இரண்டு வருடங்களாகின்றன. ஆனால் இன்னும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இவ்வாறு பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கி;றார்கள். நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான நீதி வழங்குவதில் இழுத்தடிப்பும் பாராமுகமான போக்கும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இது மிகவும் வேதனைக்குரியது.
 
இந்த நிலையில், உரிமைகளுக்காகத் தொழிலாளர் பெண்கள் நடத்திய போராட்டத்தின் அடையாளமாகவே சர்வதேச மகளிர் தினம் பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றது. இருந்தாலும், பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காக இன்னும் போராட வேண்டிய நிலையிலேயே இருக்கின்றார்கள். ஆடைத்தொழிற்சாலைகளில், ஏனைய பலதரப்பட்ட தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டத்துறையிலும் தொழில் செய்கின்ற பெண் தொழிலாளர்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் சமப்ளம் உட்பட பல விடயங்களில் இரண்டாம் தரத்திலேயே இன்னும் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்;த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த சர்வதேச மகளிர் தினத்தில் நாங்கள் விடுக்கின்ற கோரிக்கையாகும்’ என்றார் கலாவதி.
 
சர்வதேச தினம் கிராம மட்ட பெண்களுக்கான ஒரு தளம்
 
சிவாகர் விஜித்தா திருகோணமலையைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர். பெண்கள் அமைப்பின் ஊடாகப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
‘பெண்னிலைவாதிகளும், பெண்களுக்கான செயற்பாட்டாளர்களும் நாளாந்தம் பெண்களுக்கான உரிமைகள் குறித்து பேசுகின்றார்கள். செயற்படுகின்றார்கள். போராடுகின்றார்கள். ஆனால் கிராம மட்டத்தில் உள்ள பெண்கள் சர்வதேச பெண்கள் தினத்திலேயே தங்களுடைய பிரச்சினைகள் குறித்தும், தமது உரிமைகள் குறித்தும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அதைப்பற்றி சிந்திக்கவும், தங்களுடைய பிரச்சினைகளை வெளியில் கொண்டு வருவதற்கும் இந்தத் தினம் நல்லதொரு தளமாக அவர்களுக்கு அமைந்திருக்கின்றது. இதனால் இந்த சர்வதேச மகளிர் தினம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. ஆனால் சர்வதேச மகளிர் தினத்தின் மூலம் மட்டும்தான் பெண்களின் பிரச்சினைகளையும் உரிமைகள் சார்ந்த விடயங்களையும் வெளியில் கொண்டு வரலாம் என்று சொல்வதற்கில்லை. பல்வேறு வேலைத்திட்டங்கள், பலதரப்பட்ட வௌ;வேறு நடவடிக்கைகளின் ஊடாகவும் பெண்களுடைய பிரச்சினைகளை பெண்களுக்கான செயற்பாட்டாளர்கள் வெளிக் கொணர்ந்திருக்கின்றார்கள். அவற்றுக்காகப் போராடியும் வருகின்றார்கள். பெண்கள் அமைப்புக்களின் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு நாங்கள் திருகோணமலையில் தீர்வுகளைக் கண்டிருக்கின்றோம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமும், நீதியும் பெற்றுத் தருவதற்கான பல நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்திக்கின்றோம். அவற்றில் முன்னேற்றத்தையும் கண்டுள்ளோம். என்றாலும், இது மட்டும் போதும் என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால் எத்தனையோ பிரச்சினைகளும் உரிமை சார்ந்த விடயங்களும் பல்வேறு மட்டங்களிலும் தேசிய மட்டத்திலும் தீர்க்கப்பட வேண்டி இருக்கின்றன. அதற்காக ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது’ என்றார் விஜித்தா.
 
கிளிநொச்சியில் பலதார திருமணம் ஒரு முக்கிய பிரச்சினை 
 
அனைத்துலக பெண்கள் தினத்தையொட்டி, அரசியலில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி மாவட்டப் பெண்களைக் கௌரவிக்கவுள்ளதாக கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரம் சுகந்தினி  –   கூறுகின்றார்.
 
‘பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதற்காக ஆழமாக வேலை செய்தேன். அ;த முயற்சியின் பயனாகப் பல பெண்கள் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்கள். பெண்களுக்கான அரசியல் உரிமை நாற்பது வருடங்களுக்குப் பின்னர் இப்போதுதான் கிடைத்திருக்கின்றது என்று கூறுகி;ன்றார்கள். எனவே, அரசியலில் துணிந்து களமிறங்கிய பெண்கள் அனைவரையும் நாங்கள் இந்த சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கி;ன்றோம். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் ஊடாக அவர்களுடைய உரிமை சார்ந்த பல பிரச்சினைகளுக்குத் தீரு;வு காண முடியும் என்பது எங்களுடைய நம்பிக்கை.’
 
‘சர்வதேச மகளிர் தினத்தில் மாத்திரம் நாங்கள் பெண்களின் பிரச்சினைகள் உரிமைகள் குறித்து பேசுவதில்லை. பொதுவாகவே கிளிநொச்சி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், கஞ்சா மற்றும் கசிப்பு, உள்ளிட்ட மதுபாவனையால் பெண்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளையும் பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இதற்காக மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மட்டங்களில் விழிபபுணர்வு செயற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டிக்கின்றோம்’ என்றார் சுகந்தினி.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் பலதார திருமணங்கள் பெரிய பிரச்சினையாகக் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்;.
 
‘இதையம்விட கிளிநொச்சி மாவட்டத்தில் பலதார திருமணத்தினால் பெண்கள் பாதிக்கப்படுகின்ற பிரச்சினை முக்கியமாகக் காணப்படுகின்றது. இளம் பெண்களையும், திருமணமாகி கணவனைப் பிரிந்தவர்களும், விதவைப் பெண்களையும் ஏற்கனவே திருமணமாகிய ஆண்கள் ஏமாற்றி திருமணம் செய்வதைக் கண்டறிந்துள்ளோம். கடந்த ஆண்டில் மாத்திரம் எங்களுடைய பெண்கள் அமைப்புக்கு இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. சட்ட உதவி மன்றத்தின் ஊடாக அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
 
குறிப்பாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எங்களுக்குக் கிடைத்த ஒரு முறைப்பாட்டின்படி மட்டக்களப்பைச் சேர்ந்தவராகக் கூறப்படுகின்ற ஆண் ஒருவர் ஐந்து பெண்களைத் திருமணம் செய்ததன் பி;ன்னர், ஆறாவதாக 18 வயது யுவதி ஒருவரை வவுனியாவில் திருமணம் செய்ய முயற்சித்துள்ளார்;. இதை அறிந்த அவருடைய ஐந்தாவது மனைவி பொலிசாரிடம் முறையிட்டபோது, அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக எ;ங்களிடம் முறையிடப்பட்டிருக்கின்றது.
 
இவ்வாறு திருமணம் செய்த ஆண்களினால் சட்ட விரோதமான முறையில் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தவிர்ப்பதற்காக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம்’ என்றார் சுகந்தினி.

http://globaltamilnews.net/2018/69965/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.