Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்மைக்கு சவாலாக விளங்கும் ஒருமை

Featured Replies

பன்மைக்கு சவாலாக விளங்கும் ஒருமை

 

இலங்­கையின் வர­லாற்றில் மீண்டும் ஒரு தடவை கசப்­பான நிகழ்­வுகள் இப்­போது இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முடுக்­கி­வி­டப்­பட்­டுள்ள இன­வாத சிந்­த­னைகள் நாட்டின் ஐக்­கி­யத்­தை கேள்­விக்­கு­றி­யாக்கி இருக்­கின்­றன. நல்­லாட்­சிக்கு சவா­லாக விளங்­கு­கின்ற இத்­த­கைய நிகழ்­வு­களின் கார­ண­மாக நாடு பதற்ற­ம­டைந்­தி­ருக்­கின்­றது. ஏற்­க­னவே இந்­த­நாட்டில் விதைக்­கப்­பட்ட இன­வாதம் இப்­போது விருட்­ச­மாக வளர்ந்து பல்­வேறு சிக்­கல்­க­ளையும் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் சிறு­பான்­மை­யி­னரின் இருப்பு மற்றும் எதிர்­காலம் என்­பன தொடர்பில் இப்­போது சிந்­திக்க வேண்­டிய ஒரு நிலை­மையும் மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது.

பல்­லின மக்கள் வாழும் நாடு

இலங்கை என்­பது பல்­லின மக்­கள் வாழு­கின்ற ஒரு நாடாக விளங்­கு­கின்­றது. இங்கு பல்­லின மக்­க­ளி­னதும் உரி­மை­களும் உரி­ய­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். பல்­லின கலா­சா­ரங்­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்க வேண்டும். நாம் எமது மதத்­தையும், கலா­சா­ரத்­தையும் நேசிக்­கின்ற அதே­வேளை பிற­ரு­டைய மதத்­தையும் கலா­சா­ரத்தையும் நேசிக்க, மதிப்­ப­ளிக்க கற்றுக் கொள்­ளவும் வேண்டும். இது மிகவும் முக்­கி­ய­மா­னதும் உன்­ன­த­மா­ன­து­மான ஒரு பண்­பாக விளங்­கு­கின்­றது. பன்மைச் சமூகம், பன்­மைத்­துவம், பல்­லின கலா­சாரம் என்ற சொற்கள் மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக விளங்­கு­கின்­றன. விட்டுக் கொடுப்பு, அர்ப்­ப­ணிப்பு, புரிந்­து­ணர்வு என்­பன பன்­மைத்­து­வத்தின் உறு­திப்­பாட்டுக்கு உந்­து­சக்­தி­யாக அமையும் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. ஒரு இனம் இன்­னொரு இனத்தை அடி­மைப்­ப­டுத்த முற்­ப­டு­தல்­கூ­டாது. அவ்­வாறு அடங்கி நடக்க வேண்­டிய அவ­சி­யமும் கிடை­யாது. அவ்­வாறு அடி­மைப்­ப­டுத்த முயல்­வதால் பல்­வேறு சிக்­கல்கள் மேலெ­ழும்­பு­வ­தையும் தவிர்த்­து­விட முடி­யாது. ‘மற்­றைய மனி­தரின் விருப்­ப­மின்றி அவனை நிர்­வ­கிப்­ப­தற்கு எந்­த­வொரு மனி­த­னுக்கும் தகுதி கிடை­யாது’ என்று கூறிய ஆபி­ரகாம் லிங்­கனை நாம் அடிக்­கடி நினைவில் இருத்­திக்­கொள்ள வேண்டும்.

இலங்கை பல்­லின மக்கள் வாழு­கின்ற பன்­மைத்­துவம் கொண்ட ஒரு நாடாக இருந்­த­போதும் சிறு­பான்­மை­யி­னரின் நிலை­மைகள் அவர்­க­ளுக்­கான வாய்ப்­புகள் என்­பன எவ்­வா­றுள்­ளன? என்று சிந்­திக்­கு­மி­டத்து திருப்தி கொள்­ள­மு­டி­யாத ஒரு நிலை­மையை உண­ர­மு­டி­கின்­றது. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான இன­வா­தி­களின் கோஷங்­களும், கோரிக்­கை­களும், செயற்­பா­டு­களும், இலங்­கையின் வர­லாற்றில் அவ்­வப்­போது மேலோங்கி வெளிப்­ப­டு­வதும் யாவரும் அறிந்த விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. சுதந்­தி­ரத்­திற்கு முன்­ன­ரா­யினும் சரி அல்­லது சுதந்­தி­ரத்­திற்குப் பின்­ன­ரா­யினும் சரி, சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளுக்கு பஞ்சம் காணப்­ப­ட­வில்லை என்­பது கசப்­பான உண்­மை­யே­யாகும். ஒரு நிலை­வா­திகள் இதனை ஏற்­றுக்­கொள்­வார்கள். மறுப்­ப­வர்கள் இன­வா­தி­க­ளா­கவே இருப்­பார்கள்.

 

சுதந்­தி­ரமும் எதிர்­பார்ப்பும்

இலங்­கையின் சுதந்­தி­ரத்­திற்­காக பல்­லின மக்­களும் ஒன்­று­பட்டு ஐக்­கி­யத்­துடன் குரல் கொடுத்­தி­ருந்­தனர். நாட்டை அந்­நிய ஆட்­சியில் இருந்து விடு­விப்­பதே இவர்­களின் பிர­தான குறிக்­கோ­ளாக இருந்­தது. இந்த வகையில் இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்த பின்னர் பல்­வேறு சிறப்­பான மாறு­தல்கள் இடம்­பெ­றப்­போ­கின்­றன என்று நாட்­டு­மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். குறிப்­பாக சிறு­பான்­மை­யி­னரின் எதிர்­பார்ப்பு சற்று அதி­க­மா­கவே இருந்­தது. இந்த எதிர்­பார்ப்­புகள் மழுங்­க­டிக்­கப்­பட்டிருப்­ப­தனை சுதந்­தி­ரத்தின் பின்­ன­ரான நிகழ்­வுகள் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றன. கால­னித்­துவ ஆட்சி ஒன்றில் இருந்து நாடொன்று விடு­ப­டு­கின்­றது என்­னும்­போது அது தனது சுய­வெ­ளிப்­பாட்டின் முக்­கிய கட்­டத்தை எய்­தி­விட்­டது என்­பதும், கிடைக்கும் அர­சியல் சுதந்­தி­ரத்தின் பின்னர் அது தன்னை செழு­மையும் சிறப்பும் உள்ள ஒரு நாடாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் இறங்­கவும் போகின்­றது என்­பது பொது­வான எதிர்­பார்ப்­பாகும். ஆனால் இலங்­கையின் வர­லாறோ அந்த எதிர்­பார்ப்­பு­களை மறு­த­லிப்­ப­தா­கவே அமை­கின்­றது என்று பேரா­சி­ரியர் கார்த்­தி­கேசு சிவத்­தம்பி கவ­லைப்­பட்­டுக்­கொள்­கின்றார்.

மேலும் பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சிக்கு ஆட்­பட்­டி­ருந்த தென்­னா­சிய மற்றும் தென் கிழக்­கா­சிய நாடு­களின் அனு­பவ வர­லாற்றில் இலங்கை பெறும் இடம் பல வகை­களில் சிக்­கல்கள் பலவும் நிறைந்­த­தாகும். இலங்கை சுதந்­திரம் பெற்ற வரு­டத்­தி­லேயே அதன் இனக் குழும பிளவுப் பிரச்­சி­னை­களும் தோற்­று­விக்­கப்­பட்டு விட்­டன என்றும் பேரா­சி­ரியர் கா. சிவத்­தம்பி தெரி­வித்­தி­ருக்­கின்றார். இதே­வேளை, இந்­திய அர­சி­ய­ல­மைப்பின் சிருஷ்­டி­கர்த்­தா­வான ரீ.ஆர். அம்­பேத்கார் சுதந்­திரம் குறித்து பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கின்றார். “எமக்கு சுதந்­திரம் ஏன் இருக்க வேண்டும்? எமது அடிப்­படை உரி­மை­க­ளுடன் மோதலை ஏற்­ப­டுத்தும் சமத்­து­வ­மின்மை, பார­பட்­ச­மாக நடத்­தப்­ப­டுதல் என்­பவை நிறைந்த எமது சமூக அமைப்­பினை மாற்­றி­ய­மைக்­கவே சுதந்­திரம் வேண்டும்” என்று சொல்­கிறார் அம்­பேத்கார்.

எனினும் இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் சமத்­து­வ­மின்மை, பார­பட்­ச­மாக நடத்­தப்­ப­டுதல் போன்ற விட­யங்கள் இன்னும் இடம்­பெற்­றுக்­கொண்டே இருக்­கின்­றன. சமூக அமைப்பு இன்னும் மாற்­றப்­ப­டா­துள்ள நிலையில் பிழை­யா­னதும் முறை­யற்­ற­து­மான செயற்­பா­டுகள் இன்னும் குறை­வ­தாக இல்லை. சுதந்­திரம் நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்றத் தவறி இருக்­கின்­றது. கால­னித்­துவ காலத்­திலும் பின்­கா­ல­னித்­துவ வர­லாறு என்­பது மிகவும் மோச­மாகிப் போய் இருக்­கின்­றது. இணைந்து வாழ­வேண்­டிய நாட்டு மக்கள் இனம், சாதி, மதம், மொழி என்ற ரீதியில் தமக்­கி­டையே பிள­வு­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்டு பிரிந்து வாழ்­வது கொடு­மை­யிலும் கொடு­மை­யாகும். மக்­க­ளி­டை­யே­யான பிள­வு­க­ளுக்கும் பிரி­வு­க­ளுக்கும் இன­வாத அர­சி­யல்­வா­திகள் முக்­கிய காரண கர்த்­தாவாகி இருக்­கின்­றனர். தமது அர­சியல் இருப்­பினை தக்க வைத்­துக்­கொள்­வ­தற்­காக நாட்டு மக்­களை இவர்கள் பலிக்­க­டா­வாக்கி இருக்­கின்­றனர். பிரித்­தாளும் நட­வ­டிக்­கையில் இத்­த­கைய அர­சி­யல்­வா­திகள் வெற்றி கண்­டி­ருப்­ப­த­னையே கடந்­த­கால மற்றும் நிகழ்­கால நிகழ்­வுகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. ஆயு­தத்தை கையில் எடுத்­த­வர்கள் ஆயு­தத்­தி­னா­லேயே அழிந்து போவார்கள் என்­பார்கள். இதைப் போலவே இன­வா­தத்தை கையில் எடுத்­த­வர்கள் இன­வா­தத்­தி­னா­லேயே அழிந்து போன வர­லா­று­களும் உல­க­ளவில் இல்­லாமல் இல்லை. இதைத் தெரிந்து கொண்டும் இன­வா­திகள் திருந்­தாமல் இருப்­பது வேடிக்­கை­யாகும்.

 

தனிச் சிங்­கள சட்டம்

1956 ஆம் ஆண்டில் முன்­வைக்­கப்­பட்ட தனிச் சிங்­கள சட்டம் இந்­நாட்டு மக்­களை கூறு­போட்­டது. ‘சிங்­களம் மட்டும்’ என்ற கருத்­தினை ஏற்­க­னவே எதிர்த்­த­வர்கள் கூட பின்னர் அர­சியல் இலாபங்­க­ளுக்­காக இதனை வர­வேற்றுப் பேசி இருந்­தனர். தனது அர­சியல் இருப்­பினை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு ‘சிங்­களம் மட்டும்’ என்ற போர்வை அவ­சியம் என்றும் கரு­தினர். ‘எம் தேசிய போராட்­டத்தில் ஒரு முக்­ கிய கட்­டத்தை இம் மசோதா மூலம் நிறை­வேற்­று­கின்றோம். இந்­நாட்டை அந்­நிய சக்­திகள் ஆக்­கி­ர­மித்த காலத்தின் முன்னர் சிங்­கள மொழி பெற்­றி­ருந்த இடத்தை நாம் மீண்டும் பெறு­வது இத்­தீவின் அபி­வி­ருத்தி வர­லாற்றில் ஒரு முக்­கிய கட்­ட­மாகும்’ என்றும் சிலர் கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி இருந்­தனர். இதற்­கி­டையில் ‘இந்த மொழி தொடர்­பான விடயம் புரி­கின்­றதைப் போல மக்­களை கிளர்ச்­சி­யூட்­டு­வ­தற்கு வேறெ­த­னையும் நான் கண்­ட­தில்லை’ என்று எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க அப்­போது தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­வேளை, தமி­ழ­ரசுக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அ. அமிர்­த­லிங்கம் பின்­வ­ரு­மாறு தனது நிலைப்­பாட்­டை தெளி­வு­ப­டுத்தி இருந்தார். தனிச் சிங்­களம் எனும் கொள்கை இந்த நாட்டில் பொது வாழ்க்­கையில் தமிழ் மொழியை அதற்­கு­ரிய ஸ்தானத்தில் இருந்து வெறு­மனே விலக்கி வைப்­பதை மட்டும் கரு­த­வில்லை. ஆனால் அது இந்த நாட்டின் தமிழ்­மொழி பேசும் மக்­களை இலங்­கையின் அர­சியல், பொரு­ளா­தாரம் மற்றும் கலா­சார வாழ்க்கை என்­ப­வற்றில் இருந்தே வெளியே தள்ளி வைக்­கின்­றது என்று அமிர்­த­லிங்கம் வலி­யு­றுத்தி இருந்தார். தனிச் சிங்­கள சட்டம் கொண்டு வரப்­ப­டு­வ­தனைக் கண்­டித்து பலர் கருத்­து­களை வெளிப்­ப­டுத்­தியும் இருந்­தனர். சிறு­பான்­மை­யி­னரை வலிந்து சிங்­கள மொழியை ஏற்­கும்­படி நிர்ப்­பந்­திப்­பது இனக்­க­ல­வ­ரத்­துக்கு வழி­வ­குக்கும் இலங்­கைக்கு மிகப் பெரிய ஆபத்து வர­வுள்­ளது. அம் மக்கள் தமக்கு அநி­யாயம் நடப்­ப­தாக உணர்ந்தால் அவர்கள் நாட்டில் இருந்து பிரிந்து போகக்­கூட தீர்­மா­னிக்­கலாம் என்று லெஸ்லி தீர்க்க தரி­ச­னத்­துடன் வலி­யு­றுத்தி இருந்தார். கொல்வின் ஆர்.டி. சில்­வாவின் கருத்தும் இதனை நிழற்­ப­டுத்­து­வ­தா­கவே இருந்­தது. சிங்­களம் மட்டும் சட்டம் எதிர்­பா­ராத விளை­வு­களைத் தரும். இரத்தம் வடியும், துண்­டிக்­கப்­பட்ட இரு சிறு அர­சுகள் ஒரு அரசில் இருந்து தோன்­றக்­கூடும். அண்­மையில் வெளி­யே­றிய ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் மீண்டும் எம்மை ஏப்பம் விடவும் ஏது­வா­கலாம் என்று கொல்வின் இதன்­போது தெரி­வித்­தி­ருந்தார். எனினும் பல வெளிப்­பா­டு­க­ளுக்கும் மத்­தியில் தனிச் சிங்­கள சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. சிறு­பான்­மை­யினர் இதன் மூலம் மொழி ரீதி­யான புறக்­க­ணிப்­பிற்கு உள்­ளாக நேர்ந்­தது. இதன் தாக்க விளை­வுகள் தொழில்­ உள்­ளிட்ட பல்­வேறு நிலை­க­ளிலும் எதி­ரொ­லி­ருத்­தி­ருந்­தன.

யுத்­தமும் விளை­வு­களும்

கல்வி, தொழில் நிலை, அர­சியல் என்­ பன உள்­ளிட்ட பல்­வேறு புறக்­க­ணிப்பு நிலைகள் யுத்­தத்தின் மேலெ­ழும்­பு­கைக்கு வலு­ச்சேர்த்­தி­ருந்­தன. இன­வாத சிந்­த­னை­யா­ளர்­களே இந்­நி­லைக்கும் கார­ண­மாக இருந்­தி­ருக்­கின்­றனர். யுத்­தத்தின் கொடு­மையால் நாடு ஏற்­க­னவே பல்­வேறு சுமை ­க­ளையும் அனு­ப­வித்­தி­ருக்கின்றது. நாட் டின் அபி­வி­ருத்­திக்கு தோள் கொடுக்­கக்­கூ­டிய இளைஞர் குழாம் இரு பக்­கத்­திலும் இழக்­கப்­பட்­டிருக் கின்­றது. பலர் வித­வை­க­ளா­கினர். இன்னும் பலர் அங்­க­வீ­னர்­க­ளா­கினர். மன நோயா­ளி­க­ளா­கவும் மேலும் பலர் வலம் வந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். நாட்டின் அபி­வி­ருத்தி பின்­ன­டைவு கண்­ட­தோடு சர்­வ­தே­சமும் இலங்­கையைச் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்­கும்­நிலை மேலோங்­கி­யது. சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை கணி­ச­மாகக் குறை­வ­டைந்­த­தோடு அந்­நிய செலா­வணி வரு­வாயும் வீழ்ச்சி கண்­டி­ருந்­தது. இனப்­பி­ரச்­சினை கருக்­கொண்­டது. இலங்­கையின் அமை­தி­யற்ற சூழ்­நி­லை­யா­னது இந்­திய அர­சி­ய­லிலும் பல்­வேறு தாக்க விளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்தி இருந்­தது. ரஜீவ் காந்­தியின் கொலைத் தழும்பு இலங்கை தேசத்தின் தேகத்தில் இருந்தும் இன்னும் மறை­ய­வில்லை.

இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய தீர்­வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பல பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. தமிழ் மக்­களின் பாது­காப்பு மற்றும் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தி அவர்­களை தேசிய இன­மாக ஏற்­றுக்­கொள்ளல் உள்­ளிட்ட பல விட­யங்­களை மையப்­ப­டுத்தி திம்பு பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. எனினும் ஜே.ஆர். ஜெய­வர்­தன தலை­மை­யி­லான ஐ.தே.க. அர­சாங்­கத்­தினால் இது நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

1987 ஆம் ஆண்டு இடம்­பெற்ற இந்­திய இலங்கை உடன்­ப­டிக்கை இலங்­கையின் வர­லாற்றில் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக விளங்­கு­கின்­றது. அதி­கார பர­வ­லாக்­கத்­துக்­கான அடிப்­ப­டை­யாக அர­சி­ய­ல­மைப்­புக்கு 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் முன்­வைக்­கப்­பட்டு மாகாண சபை முறை உரு­வாக்­கப்­பட்­டது. எனினும் இது எதிர்­பார்த்த சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­த­வில்லை. 2000 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு திருத்­த­யோ­சனை முன்­வைக்­கப்­பட்­டது. எனினும் ஐக்­கிய தேசியக் கட்சி இந்த சட்ட மூலத்தை பாரா­ளு­மன்­றத்தில் எரித்­தது. இதனால் இந்த முயற்சி பலிக்­க­வில்லை. 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்­ப­டிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. 2006– 2008 காலப் பகு­தியில் சர்­வ­கட்சி பிர­தி­நி­தி­கள் ­குழு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. 63 தட­வைகள் கூடிய இந்தக் குழு 13 ஆது திருத்தச் சட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட இரண்டு பக்க யோசனை ஒன்­றினை முன்­வைத்­தி­ருந்­தது. இதற்­கி­டையில் யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டுள்ள நிலை­யிலும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு இது­வரை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. புதிய அரசியல் யாப்பு இனப்­பி­ரச்­சினை உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வினை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை முன்­வைப்­பதில் இப்­போது இழு­ப­றி­யான நிலை உரு­வாகி இருக்­கின்­றது. இன­வா­தி­களின் கெடு­பி­டிகள் நல்­லா­ட்சி அர­சாங்­கத்தின் ஸ்திர­மற்ற நிலை போன்ற பல விட­யங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு முன்­வைக்கும் விட­யத்தை கேள்­விக்­கு­றி­யாக்கி இருக்­கின்­றன. இதன் கார­ண­மக புதிய அர­சி­ய­ல­மைப்பு முன்­வைப்பு குறித்து நம்­பிக்கை இல்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.

இந்­திய வம்­சா­வளி மக்கள்

இந்­திய வம்­சா­வ­ளி­யினர் இந்த நாட்டில் மிக நீண்ட வர­லாற்றை கொண்­ட­வர்­க­ளாக விளங்­கு­கின்­றனர். சுதந்­தி­ரத்­திற்கு முன்­னரும் பின்­னரும் என்று இம் மக்கள் பல்­வேறு நெருக்­கீ­டு­க­ளையும் அனு­ப­வித்­தி­ருக்­கின்­றனர். இம் மக்­க­ளுக்கு வாக்­க­ளிக்கும் உரி­மையை வழங்கக் கூடா­தென்று 1928 காலப் பகு­தி­யி­லேயே கோஷங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. கொழும்பில் வசிக்கும் இந்­தி­யரை விட தோட்­டத்து கூலிக்கு நான் மிகவும் அஞ்­சு­கின்றேன். இந்­தியத் தொழி­லாளி காலையில் ஆறு மணிக்கு வேலைக்­குப்போய் மாலை ஆறு மணிக்கே தனது கூலி லயன்­க­ளுக்குத் திரும்­பு­கின்றான். இத்­தீவில் நிகழ்­வன பற்றி அவ­னுக்கு என்ன தெரியும்? எனவே அர­சியல் விட­யங்­களில் வாக்­க­ளிக்கும் தகைமை அவ­னுக்கு இல்லை என்றே கூறுவேன் என்றும் அக்­காலப் பகு­தியில் முன்­வைப்­புகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்­னரும் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரை ஒடுக்கும் நிலை­களில் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை. சுதந்­தி­ரத்தின் பின்னர் ஐக்­கிய தேசி­யக்­கட்சி இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் எழுச்சி நிலை கண்டு பொறாமை கொண்­டதன் விளை­வாக இம் மக்­களின் பிர­சா­வு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் பறித்­தெ­டுத்­தது. இதனால் இம் மக்கள் அர­சியல் ரீதி­யாக நிர்க்­க­தி­யான நிலைக்கு உள்­ளா­னார்கள். மேலும் பொரு­ளா­தாரம், அரச தொழில்­வாய்ப்­புகள், சமூக நிலை­மைகள் என்­பது உள்­ளிட்ட மேலும் பல துறை­க­ளிலும் பின்­ன­டை­வினை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் எதிர்­நோக்­கு­வ­தற்கும் பிர­ஜா­வு­ரிமை மற்றும் வாக்­கு­ரிமை பறிப்பு நிலைகள் செல்­வாக்குச் செலுத்தி இருந்­தன. இதனால் ஏற்­பட்ட தழும்­புகள் இன்னும் கூட முற்­றாக மாறாத ஒரு நிலையே காணப்­ப­டு­கின்­றது.

சுதந்­தி­ரத்­துக்குப் பிற்­பட்­ட­கால குடி­யு­ரிமைச் சட்­டங்­களும் இலங்கை இந்­திய ஒப்­பந்­தங்­களும் பல்­வேறு நியா­ய­மான கண்­ட­னங்­க­ளுக்கு உள்­ளாகி இருந்­தன. இவற்றின் விளை­வாக இலங்­கைவாழ் இந்­திய தமி­ழர்­களில் ஒரு பகு­தி­யினர் இந்­தியா திரும்ப நேரிட்­டது. 1987 ஆம் ஆண்­ட­ளவில் மூன்று இலட்­சத்து 37 ஆயி­ரத்து 410 பேரும் அவர்­க­ளு­டைய பிள்­ளை­க­ளான ஒரு இலட்­சத்து 23 ஆயி­ரத்து 952 பேரும் இந்­திய குடி­யு­ரிமை பெற்று இந்­தியா சென்­றனர். இந்­தியா செல்ல வேண்­டிய 84 ஆயிரம் பேர் தவிர்ந்த ஏனையோர் இலங்கைக் குடி­யு­ரி­மையைப் பெற்றுக் கொண்­டனர் என்று பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் தனது கட்­டுரை ஒன்றில் வலி­யு­றுத்தி இருக்­கின்றார். மேலும் மலை­யக மாவட்­டங்­களில் செறிந்து வாழ்ந்த இந்­தியத் தமி­ழர்­களில் மூன்று இலட்­சத்து 37 ஆயி­ரத்து 410 பேர் இந்­தி­யா­விற்குத் திரும்­பி­ய­வி­டத்து (1987 இறு­தி­வரை) 1981 ஆம் ஆண்டின் குடி­சன மதிப்­பீட்டு அறிக்­கை­யின்­படி 75 ஆயிரம் பேர்­வ­ரையில் வட­மா­கா­ணம் சென்று குடி­யேறி இருந்­தனர் என்றும் பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் குறிப்­பி­டு­கின்றார். இதே­வேளை, இலங்­கையில் காலத்­துக்­குக்­காலம் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் இந்­திய வம்­சா­வளி மக்கள் பெரிதும் பாதிப்­புக்கு உள்­ளான நிலை குறித்தும் இதனால் ஏற்­பட்ட இடம்­பெ­யர்­வுகள் குறித்தும் கலா­நிதி ஏ.எஸ். சந்­தி­ரபோஸ் தனது கட்­டுரை ஒன்றில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்க விட­யங்­க­ளாக உள்­ளன.

இலங்­கையின் வன்­செ­யல்­களில் உட­னடி பாதிப்­புக்கு இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரே உள்­ளா­கி­யுள்­ளனர். அர­சியல் ரீதி­யாக சமத்­துவம் கிடைக்க வேண்டும் என்­ப­தற்­காக வடக்கு பகு­தி­யினர் போரா­டினர். ஆயுதம் ஏந்த வேண்­டிய ஒரு கட்­டாய சூழ்­நி­லைக்கும் இவர்கள் தள்­ளப்­பட்­டனர். எனினும் ஆயுதப் போராட்­டமும் இறு­தியில் தோல்­வியில் முடி­வ­டைந்­தது. பெரும்­பான்மை மக்கள் அசா­தா­ரண சூழ்­நி­லை­க­ளின்­போது இந்­திய வம்­சா­வ­ளி­யினர் மீதே தாக்­குதல் நடத்தி இருந்­தனர். முப்­பது வருட யுத்தம் இவர்­களை வெகு­வாகப் பாதித்­தி­ருந்­தது. 1983 இனக்­க­ல­வ­ரத்­தின்­போது இந்­திய வம்­சா­வளி வர்த்­த­கர்­களின் மீதும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் மீதும் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இன்­று­வரை அதன் விளை­வு­களை இம்­மக்கள் அனு­ப­வித்து வரு­கின்­றனர். நாவ­லப்­பிட்டி, மாத்­தளை, பதுளை, ஹப்­புத்­தளை, பலாங்­கொடை போன்ற பல இடங்­களில் செறி­வாக இருந்த எமது மக்கள் வெளி­யே­றிச்­சென்­றனர். மேலும் சிலர் வேறு வழி இல்­லாது சிங்­கள மக்­க­ளாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்டு வாழ­வேண்­டிய இக்­கட்­டான சூழ்­நி­லை­யையும் எதிர்­கொண்­டி­ருந்­தனர். சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து நேச­மாக வாழும்­போது தமக்கு பாதிப்பு ஏற்­ப­டாது என்றும் இவர்கள் எண்ணம் கொண்­டி­ருந்­தனர். சிங்­க­ளப்­பா­ணியை பின்­பற்­றுதல், சிங்­களம் பேசுதல் என்­பன இதன் ஒரு கட்­ட­மே­யாகும். ஏழை மக்­க­ளுக்கு இதை­விட வேறு உபாயம் தெரி­ய­வில்லை.

இந்­திய வம்­சா­வ­ளி­யினர் இந்­தி­யர்கள் என்ற சிந்­த­னையை விடுத்து இலங்­கையர் என்ற சிந்­த­னை­யுடன் வாழ வேண்டும் என்ற கருத்து 1950– 60 களில் நில­வி­யது. எனினும் இன்று இந்­திய வம்­சா­வ­ளி­யினர் சிங்­க­ள­வர்­க­ளுடன் அத­னிலும் மேலாக இணைந்து வாழு­கின்­றனர். இதனால் இவர்­களின் தனித்­துவம் சில வேளை­களில் இழக்­கப்­பட்­டுள்­ளது. மலை­யக மக்கள் வித்­தி­யா­ச­மான அனு­ப­வத்தைப் பெற்றுக் கொண்­டுள்­ளனர். 1956, 1978, 1981, 1983, 1985 போன்ற காலங்­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­களில் சமூக ரீதி­யாக இந்­திய வம்­சா­வ­ளி­யினர் அதிகம் பாதிக்­கப்­பட்­டனர் என்றும் கலா­நிதி சந்­தி­ரபோஸ் தெரி­வித்­துள்ளார். இதே­வேளை நாட்டின் இன­வன்­மு­றை­க­ளி­னாலும் 1972 இல் பெருந்­தோட்­டங்­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­றதன் பின்னர் ஏற்­பட்ட வேலை­யின்மைப் பிரச்­சினை, உண­வுப்­பற்­றாக்­குறை என்­ப­வற்றால் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளி­னாலும் கணி­ச­மான இந்­திய வம்­சா­வ­ளி­யினர் வட­மா­காணம் சென்று குடி­யே­றினர். இவர்கள் இந்­திய, மலை­யக அடை­யா­ளங்­களை கை விட்டு உள்ளூர் மக்­க­ளுடன் கலந்­து­விடும் ஒரு போக்கும் காணப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நல்லாட்சிக்கு சவால்

நல்லாட்சி அரசாங்கம் 2015 இல் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் ஏற்படுத் தப்பட்டது. பல்வேறு வாக்குறுதிகளையும் நல்லாட்சி அரசாங்கம் வழங்கி இருந்தது. நாட்டுமக்களிடையே நல்லிணக் கத்தை ஏற்படுத்தி சாந்தியையும் சமாதானத் தை யும் மேலோங்கச் செய்யும் நடவடிக் கைகள் குறித்தும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி இருந்தது. எனினும் அரசாங்கத்தின் பல்வேறு முன்னெடுப் புகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் தற்போது நிலைமைகள் தொடர்ந்து கொண் டிருக்கின்றன. தீய சக்திகளின் பிற்போக்கான செயற்பாடுகளின் காரணமாக நாட்டில் அதிருப்தியான நிலைமைகள் மேலெழுந்து வருகின்றன. இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் வலுவடைந்து வருகின் றன. பல்லின மக்களும் வாழுகின்ற நாட் டில் பன்மைக்கு சவாலாக ஒருமையை வலியுறுத்தும் இனவாதம் மேலெழும்பி வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமையைக் காணமுடியவில்லை. ‘இலங்கையர்’ என் கிற பொது வரையறையின் கீழ் ஒன்றாக கைகோர்த்து செயற்படவேண்டியவர்கள் தமக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டு விரிசல்களுக்கு வித்திட்டு வருகின்றமை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலேயாகும். இலங்கைத் திருநாட்டில் இரத்த ஆறு ஓடிய காலங்களை இன்றும் யாரும் மறந்து விடவில்லை. அந்தக் காலம் இனியும் உருவாக இடமளித்தல் கூடாது. ஒவ்வொரு இனத்தவருடைய தனித்துவம் பேணப்பட்டு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.

நாடு இப்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் பல கசப்பான சூழ்நிலைகளைச் சந்தித்த நாட்டு மக்கள் மீண்டும் அத்தகைய சூழ்நிலைக்கு முகம் கொடுக்க திராணியற்றவர்களாக உள்ளனர். இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி யாரும் அரசியல் இலாபம் தேட முற்படுதல் கூடாது. சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கக்கூடாது. அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள சிறப்பான பலவழிகள் காணப்படுகின்றன. இவ்வழிகளைப் பின்பற்றி அரசியல் இருப்பையும் ஆதிக்கத்தையும் தக்க வைத்துக்கொள்ள முற்பட வேண்டும். இதை விடுத்து அப்பாவி மக்களை பலிக் கடாவாக்கக் கூடாது. அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தம்மா லான உச்சகட்ட பங்களிப்பை வழங்க தனிநபர்களும், கட்சிகளும் முன்வர வேண்டும். ‘நான்’ என்று சொல்லும் போது உதடு ஒட்டுவதில்லை. உறவு கொள் வதில்லை. ‘நாம்’ என்று சொல்லும் போதே உதடு ஒட்டுகிறது. உறவு கொள்கிறது. எனவே நாம் என்ற பரந்த நோக்குடன் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலமே நாடும் வளம் பெற முடியும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-10#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.