Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிழலுக்குப் பின் வரும் வெயில்

Featured Replies

நிழலுக்குப் பின் வரும் வெயில்

 

 
kadhir7

லிங்கி கடந்த நான்கு மணி நேரமாகக் காத்துக் கொண்டிருந்தாள். காலை எட்டு மணிக்கு இந்திராம்மாவின் வீட்டுக்கு வந்தாள். இந்த இரண்டு வாரத்தில் இது மாதிரி காத்துக் கொண்டிருப்பது மூன்றாவது தடவை. 
தினமும் காலை ஏழரை மணியிலிருந்து பதினொன்று வரை மூன்றுவீடு பார்ப்பாள். இரண்டு வீட்டில் பாத்திரம் தேய்த்து வீடு பெருக்கி விட்டால் போதும். மூன்றாவது வீட்டில் அதிகப்படியாக துணிகளை மெஷினில் போட்டு எடுத்து உலர்த்தும் வேலை. அதன் பின் பதினொன்று பதினொன்றே காலுக்கு வக்கீல் வீட்டுக்குப் போய் சமைத்துத் தர வேண்டும். வக்கீல் வீட்டு சாப்பாட்டுக் கடை முடிந்ததும் அவளும் அங்கேயே சாப்பிட்டு விடுவாள். ஆனால் இந்திராம்மாவைத் தேடிக் கொண்டு வந்த இந்த ஒவ்வொரு தினமும் அவளால் ஒன்றிரண்டு வீடுகளுக்கு வேலைக்குப் போக முடியவில்லை. இன்று நாலு வீடுகளுக்கும் போக முடியாது போய்விட்டது. 
போன தடவை போல இன்றும் வீட்டிலிருந்து காபித் தண்ணி கூட குடிக்காமல் பறந்து கொண்டு வந்தாள். இந்திராம்மாதான் கதவைத் திறந்தாள். 
""காபி சாப்பிடாம கூட ஓடி வந்தியா?'' என்று கேட்டாள் வழக்கம் போல.
லிங்கி வெட்கத்துடன் தலையை ஆட்டினாள். 


""இன்னிக்கி ஞாயித்துக்கிழமை ஆச்சே. எல்லாம் லேட்டுதான். இப்பதான் டிகாஷன் போட்டேன். இரு. உனக்கும் காபி போட்டு தரேன்'' என்றாள். அடுப்பில் பால் கொதித்துக் கொண்டிருந்தது. 
லிங்கி ஷெல்பில் இருந்த காபிக் கோப்பைகளை எடுத்து சாப்பாட்டு மேஜையில் வைத்தாள். சர்க்கரை டப்பா, ஸ்பூன், டிகாஷன் வைத்திருந்த பில்டர் எல்லாம் சமையல் மேடையில் ஒழுங்குபடுத்தி வைத்தாள்.
பால் எடுக்கப்பட்டு மேடை மீது வைத்திருந்த பால் கவரை குழாயில் தண்ணீர் பிடித்துக் கழுவி உலர வைத்தாள். காலையில் வந்து குப்பைகளை நிரம்பியிருக்கும் கூடைகளை எடுத்துச் செல்பவனுக்காக கூடைகளை வாசலில் கொண்டு போய் வைத்தாள். 
அவள் வேலை செய்வதை இந்திராம்மா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையும் கூட. கவனிக்கப்படும் குறுகுறுப்பைத் தாங்க முடியாது லிங்கி இந்திராம்மாவைப் பார்த்து ""என்னம்மா?'' என்றாள். 
""நான் இதையெல்லாம் உன்னை செய்யின்னேனா? எதுக்கு இப்படியெல்லாம் செய்யிற? உன்னை படிக்க வெச்சிருந்தா உன் கெட்டிக்காரத்தனத்துக்கு எப்படியோ இருக்க வேண்டியவ நீ'' என்றாள். 

 


அவள் இந்த வீட்டில் வேலை செய்ததில்லை. ஆனால் அவள் அக்கா சுகுணா இங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். சுகுணாவின் புருஷன் நான்கு வருஷம் அவளுடன் குடித்தனம் நடத்தி ஒரு பெண் குழந்தையைக் கொடுத்து விட்டு பக்கத்து வீட்டில் இருந்த டீச்சரை இழுத்துக்கொண்டு ஓடி விட்டான். அவன் சுகுணாவுடன் இருந்த போதும் அவனால் சுகுணாவுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அக்காவின் குடும்பத்தையும் லிங்கிதான் காப்பாற்ற வேண்டியிருந்தது. அதனால் சுகுணாவின் புருஷன் ஓடிப் போனதும் ஒரு விதத்தில் லிங்கிக்கு நிம்மதியாக இருந்தது.
அவள் குடும்பக் கஷ்டங்களைப் பார்த்து வக்கீலின் மனைவி தன் சிநேகிதியான இந்திராம்மாவின் வீட்டில் சுகுணாவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தாள். சுகுணாவுக்குக் கிடைக்கும் சம்பளம் அவளுக்கும் அவள் குழந்தைக்குமாவது போதுமானதாக இருக்கும் என்று லிங்கி சந்தோஷப்பட்டாள். ஆனால் அந்த சந்தோஷம் வெகு நாள் நீடிக்கவில்லை. வேலைக்குச் சேர்ந்த மூன்றாம் வருஷம் சுகுணா ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டாள். வீட்டுக்குப் போகும் வழியில் ஒரு மாடு மிரண்டு ஓடி வர அதன் மீது மோது
வதைத் தடுப்பதற்காக ஆட்டோவை ஒடித்துத் திருப்பிய டிரைவர் அவள் மீது மோதி விட்டான். பலத்த அடி. ஆஸ்பத்திரியில் வைத்து மூன்று மாதம் வைத்தியம் செய்தார்கள். வீட்டுக்குத் திரும்பினாலும் சுகுணாவால் வெகு நேரம் நிற்க முடியாமல் முதுகில் ஒரு மரண அவஸ்தை. அதனால் அவளால் வேலைக்குப் போக முடியாமல் போய் விட்டது. ஆறு மாதமாக வீட்டில்தான் இருக்கிறாள். 

 


சுகுணா இந்திராம்மாவின் வீட்டுக்கு வந்து வேலை பார்த்த போது தினமும் குழந்தையையும் கூட்டிக் கொண்டு வந்து விடுவாள். மல்லிக்கு அப்போது மூன்று வயது ஆகியிருந்தது, இந்திராம்மாவுக்கு குழந்தையை மிகவும் பிடித்துப் போய் விட்டது. அவளுக்கும் ஒரே ஒரு பெண்தான். ஆனால் அவள் அமெரிக்காவுக்குப் படிக்கப் போனவள் படிப்பு முடியும் போது கூடப் படித்த இத்தாலியனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு அங்கேயே தங்கி விட்டாள். ஐந்து ஆறு வருஷத்துக்கு ஒரு முறை வந்து அம்மாவையும் அப்பாவையும் பார்த்து விட்டுப் போகிற வழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தாள். அது இந்திராம்மாவுக்கு பிடிக்கவில்லைதான். ஆனால் என்ன செய்ய முடியும்? ""ஆற கடக்கற வரதான் அண்ணா தம்பி எல்லாம். ஆற கடந்தப்பறம் நீ யாரோ நான் யாரோன்னு தெரியாமலா வசனம் எழுதி வச்சான்? நமக்கு வாச்சது அவ்வளவுதான்'' என்று ஆரம்பத்தில் புலம்பிக் கொண்டிருந்தாள். பிறகு நிறுத்தி விட்டாள்.

 


காலையில் ஒன்பது மணிக்கு சுகுணா குழந்தையைக் கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும் என்று வேலைக்கு வந்த இரண்டு நாளிலேயே இந்திராம்மா சொல்லி விட்டாள். மாலை ஐந்து மணி வாக்கில் அவர்களை வீட்டுக்கு அனுப்புவாள். காலை மத்தியானம் சாயந்திரம் என்று மூன்று வேளையும் டிபன் சாப்பாடு குழந்தைக்கு பால், பழம் எல்லாம் கொடுத்து விடுவாள். மல்லிக்கு நான்கு வயதாகும் போது ஸ்கூலில் சேர்க்கும் பிரச்னை ஏற்பட்டது. ஃபீஸ் அதிகம் கேட்காத ஆரம்பப் பள்ளியைத்தேடிக் கொண்டிருந்தாள் லிங்கி. அப்போது இந்திராம்மா லிங்கியைக் கூப்பிட்டாள்.
""எங்கியாவது ஸ்கூல்ல ஆத்திர அவசரத்துக்கு சேத்திட்டு நாளைக்கு மேல படிக்கணும்னா அட்மிஷன் கெடைக்கறது கஷ்டம். அப்ப கேக்கற பணமும் உன்னால குடுத்து மாளாது'' என்று சொல்லி ஒன்பதாவது கிராஸில் இருந்த ஹைஸ்கூலில் சேர்த்து விட்டாள். படிப்புச் செலவு எல்லாவற்றையும் இந்திராம்மாவே பார்த்துக் கொண்டாள். பனசங்கரி அம்மன்தான் இந்திராம்மாவாக வந்திருக்கு என்று சுகுணா லிங்கியிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.
இந்த வருஷம் மல்லி ரெண்டாம் கிளாசுக்குப் போகிறது. அதற்கு பீஸ் கட்டியாக வேண்டும். இரண்டு வாரம் முன்புதான் லிங்கி குழந்தையையும் அவள் ஸ்கூலில் தந்த பிரமோஷன் கார்டையும் எடுத்துக் கொண்டு வந்து இந்திராம்மாவைப் பார்த்தாள். ஒண்ணாம் கிளாசில் அவள் எடுத்த அட்டகாசமான மார்க்குகளைப் பார்த்து இந்திராம்மாவுக்கு பெருமை பிடிபடவில்லை. 

 


""ஏண்டி ராச்சசி நெறய மார்க்கு எடுத்திட்டேன்னு ரொம்ப மண்டக் கனம் வந்திருச்சா?'' என்று கேட்டபடி குழந்தையின் கன்னத்தை நிமிண்டிக் கொஞ்சினாள் இந்திராம்மா.
மல்லி தலையை உயர்த்தாமல் சிரித்துக் கொண்டிருந்தது.
""எப்போ பீஸ் கட்டணும்?'' என்று இந்திராம்மா லிங்கியிடம் கேட்டாள்.
""மே ரெண்டாம் தேதி கடைசி நாள்னு சொன்னாங்க'' என்றாள் லிங்கி.
""ரெண்டு வாரம் இருக்கே. சரி நீ நாளன்னிக்கு வா. எத்தனை மணிக்கு வரே?''
காலையில் இருக்கும் வேலைகளை நினைத்து, ""மத்தியானம் வரட்டுமா?'' என்று கேட்டாள் லிங்கி.
ஒரு நிமிஷம் யோசித்து விட்டு ""காலேலயே நீ சீக்கிரமா வந்திட்டு சீக்கிரமா போயிடு'' என்றாள் இந்திராம்மா. சொன்ன தினத்தன்று லிங்கி ஏழரைக்கு வந்தாள். அன்று யுகாதிப் பண்டிகை. ஒரு வீட்டில் வேலைக்கு வர வேண்டாம் என்று முன் தினமே சொல்லி விட்டார்கள். 

 

 

கதவைத் திறந்த இந்திராம்மாவின் கணவர் லிங்கியைப் பார்த்ததும் இந்திராம்மா குளித்துக் கொண்டுஇருப்பதாகக் கூறினார். அவள் வாசலிலேயே நின்றாள்.
அவர் ""உள்ள வந்து உக்காரு. இப்பதான் குளிக்கப் போயிருக்கா.
அவ்வளவு சீக்கிரம் வந்திருவாளா?'' என்று சிரித்தார். 
""பரவால்லே அங்கிள்'' என்று அவள் வாசல் வராந்தாவில் போட்டிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து கொண்டாள். அவர் சொன்னது பொய்யில்லை என்று நிரூபிப்பது போல எட்டரை மணிக்கு இந்திராம்மா குளித்து முடித்து விட்டு வெளியே வந்தாள். 
""வந்திட்டியா? கொஞ்சம் இரு. நீலாக்கா வரேன்னிச்சு.. திண்டி ஆச்சா?'' என்று கேட்டாள்.
சாப்பிடவில்லை என்று லிங்கி தலை ஆட்டினாள். தனக்கு டிபன் எதுவும் வேண்டாம் என்று இந்திராம்மாவிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது. சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டும். ஆனால் அவள் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்று பேசாமலிருந்து விட்டாள்.


நீலாக்காவை லிங்கிக்கும் தெரியும். அவள் இந்திராம்மாவை விட ஏழெட்டு வயது சிறியவள். ஆனால் வயது வித்தியாசம் இல்லாமல் அவள் எல்லோருக்கும் நீலாக்காதான். பதினேழாவது கிராஸில் நீலாக்காவின் வீடு இருக்கிறது. வீடா அது ? அந்தக் கால மாளிகை. அதைச் சுற்றி அப்படி ஒரு விசாலமான தோட்டம். மரமும் செடியும் பூவும் காயுமாக விளைந்து கிடக்கும் தோப்பு. அவளுக்கு ஊரில் தெரியாத ஆளே கிடையாது. "நீலாக்கா எலெக்ஷனில் நின்றால் அவள்தான் மல்லேஸ்வரம் எம்மெல்யே' என்று இந்திராம்மா சிரிப்பாள். எந்த விஷயம் தெரிய வந்தாலும் இங்கேயிருந்து அங்கே, அங்கே யிருந்து இங்கே என்று ஊர் பூராவும் டமாரம் போட்டு விடுவாள். நல்ல செய்தியும் சரி, கெட்ட செய்தியும் சரி அவளுக்கு எல்லாம் ஒன்றுதான். தனக்குத் தெரிய வந்தது தன் வாயில் நிற்கக் கூடாது என்று அப்படி ஒரு பரோபகாரம். 


இந்திராம்மா லிங்கிக்குக் குடிக்க நீர் கொண்டு வந்து கொடுத்தாள். ஐஸ் தண்ணி. வெளியே எட்டு மணிக்கே பொரிக்கிற வெய்யிலுக்கு இதமாக இருந்தது. டிபன் கொடுத்தாள். உப்பிட்டு நல்ல மணத்துடன் சுவையாக இருந்தது. காபி கொடுத்தாள். சொட்டுத் தண்ணி விடாமல்கெட்டியான பாலில் கலந்த டிகாஷன் காபி. இந்திராம்மா தனக்கு ஒன்று பிறருக்கு ஒன்று என்று வைத்துச் செய்ய மாட்டாள் என்று சுகுணா பெருமையுடன் லிங்கியிடம் சொல்லியிருக்கிறாள். 
சமையல் களேபரமெல்லாம் முடிய பத்தரை ஆகி விட்டது. ""ஏன் இன்னும் நீலாக்கா வரலே?'' என்றபடி இந்திராம்மா வாசலுக்குப் போய்ப் பார்த்து விட்டு வந்தாள். அதற்கப்புறம் கால் மணிக்கு ஒரு தரம் வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். மணி பதினொன்று ஆவதைப் பார்த்து லிங்கிக்கு "படபட'வென்று இருந்தது. நீலாக்காவும் வந்த பாடில்லை.


அப்போது போன் ஒலித்தது.
""நீலாக்கா என்ன ஆச்சு? ஒம்பது மணிக்கே வரேன்னு சொன்னே?''என்று இந்திராம்மா கேட்டாள்.
மறுமுனையிலிருந்து விடாமல் ஐந்து நிமிஷம் பேச்சு சப்தம்.
இந்திராம்மா போனைக் கீழே வைத்து விட்டு லிங்கியிடம் ""நீலாக்கா வீட்டுக்காரரு மயக்கம் போட்டு விழுந்திட்டாராம். சுகராம். ஆஸ்பத்திரிக்கு போயிட்டு இருக்கா. நானும் அங்க உடனே போகணும். நீ வர்றியா?'' என்று கேட்டாள்.
லிங்கி தயங்கி நிற்பதை பார்த்து ""நீ வேலைக்கு போ. இன்னிக்கு நீ வந்த காரியம் ஆகல. நானே போன் பண்ணுறேன்'' என்றாள்.
லிங்கி அவளிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள். பணம் கிடைக்கவில்லையே என்று ஒரு மாதிரியாக இருந்தது. நீலாக்காவிடமிருந்து இந்திராம்மாவுக்கு பணம் வர வேண்டியிருக்குமோ? அதனால்தான் அவள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாளோ என்று லிங்கி நினைத்தபடி நடந்தாள். 

 

ஒரு வாரம் கழித்து மறுபடியும் லிங்கி இந்திராம்மாவைத் தேடித் தானாகவே சென்றாள். அவளுக்கு எவ்வளவு வேலைகளோ, என்ன கஷ்டமோ மறந்து போயிருப்பாள் என்று நினைத்துக் கொண்டு லிங்கி போனாள். கூடவே சுகுணாவையும் அழைத்துக் கொண்டு போனாள். அரை மணியில் வேலையாகா விட்டால் அக்காவை அங்கேயே விட்டு விட்டு தன் வேலைகளைக் கவனிக்க இந்திராம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு போய் விடலாம் என்று ஐடியா போட்டுக் கொண்டு போனாள். 
அவளைப் பார்த்ததும் ""மூணு நாளா நினச்சுகிட்டே இருக்கேன். உன்னை கூப்பிட்டு அனுப்பணும்னு. என்னவோ ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு வேலை'' என்றாள். சுகுணாவைப் பார்த்து ""எப்படி இருக்கே? ஆள் பாதியா தேஞ்சு கெடக்கயே. எதுக்கு கடவுள் உன்னைப் போட்டு இப்படி வதைக்கணும் ?'' என்று வருத்தப்பட்டாள்.
வழக்கம் போல இருவருக்கும் காபி கொடுத்தாள். பேச்சு வாக்கில் அன்று வேலைக்காரி மட்டம் போட்டு விட்டாள் என்றாள். 
லிங்கி ""அதுக்கென்னம்மா. நான் பண்ணிட்டு போறேன்'' என்று துடைப்பக் கட்டையை எடுக்கச் சென்றாள். இந்திராம்மா அவளை எவ்வளவோ தடுத்தும் லிங்கி ""நம்ம வீட்டிலே செய்யறதுக்கு என்னம்மா?'' என்று வீடு பெருக்கி பாத்திரங்களைத் தேய்த்துப் போட்டாள். பிறகு இந்திராம்மாவிடம் ""நான் இப்ப வேலைக்கு போறேன். அக்கா இங்கதான் இருக்கும்'' என்றாள்.


பதினோரு மணி வாக்கில் லிங்கி சுகுணாவுக்குப் போன் செய்தாள்.
""அக்கா நீ எங்க இருக்க?''
""இங்க அம்மா வீட்லதான் இருக்கேன். பேங்குக்கு போயிட்டு வரேன்னு அரை மணிக்கு முன்னதா போனாங்க'' என்றாள்.
லிங்கிக்கு நிம்மதியாக இருந்தது. தங்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் பணம் எடுக்கச் சென்றிருக்கிறாள் என்று நினைத்தாள். வக்கீல் வீட்டில் வேலைகளை முடித்து விட்டு லிங்கி சாப்பிட உட்கார்ந்த போது சுகுணாவிடமிருந்து போன் வந்தது. 
""லிங்கி. அம்மா இப்ப எனக்கு போன் பண்ணாங்க. பேங்கிலேந்து. பணம் எடுத்திட்டாங்களாம். ஆனா நீலாக்காவ அங்க பாத்தாங்களாம். அவங்க வீட்டுல வந்து சாப்பிடணும்னு நீலாக்கா கூட்டிகிட்டு போறாங்களாம். நீ லிங்கிய ஞாயத்துக் கெழம வரச் சொல்லு. நா பணம் குடுத்து அனுப்பறேன். நீ அலைய வேணாம்னாங்க. ஆட்டோல போறதுக்கு பணம் இல்லேன்னா ஐயா கிட்ட வாங்கிக்கிட்டு நீ வீட்டுக்கு போன்னு சொன்னாங்க'' என்றாள் சுகுணா. 
லிங்கிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பணம் கைக்கு வந்து சேர வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை என்று நினைத்தாள். இந்திராம்மா மிகவும் நல்லவள். சுகுணாவால் நடக்க முடியாது என்று ஆட்டோ சத்தம் கொடுத்து அனுப்புகிறாள். ஞாயிற்றுக்கிழமை போய் லிங்கி நிற்க வேண்டும்.

 

பன்னிரெண்டு தடவை அடித்து ஹாலில் இருந்த கடிகாரம் தன் கடமையைச் செய்த திருப்தியில் ஓய்ந்தது. பத்து நிமிஷத்துக்கு முன்பு இந்திராம்மா அவளிடம் ""இன்னிக்கு நீ வேலை செய்யிற வீட்டுக்காரங்க கிட்டவரலேன்னு சொல்லிட்டியா?'' என்று கேட்டாள்.
லிங்கி தலையை ஆட்டி ஒரு அரைச் சிரிப்பை சிந்தினாள்.
இந்திராம்மாவின் கணவர் அவளிடம் ""இன்னிக்கி நீலாக்காவை சாப்பிட கூப்பிட்டிருக்கியா?'' என்று கேட்டார்.
""ஆமா. பொழுது விடிஞ்சு பொழுது போனா என்னத்தையோ சாக்கா வெச்சு கூப்ட்டு சாப்பாடு போடுறா. அதுக்கு பதிலா நாமளும் நாலுல ரெண்டுல கூப்பிட வாணாமா?'' என்று சிரித்தாள் இந்திராம்மா.
அப்போது வாசலில் காலிங் பெல் ஒலித்தது.
லிங்கி விரைந்து சென்று கதவைத் திறந்தாள்.
நீலாக்கா அவளைப் பார்த்து ""அட லிங்கியா? எப்பிடி இருக்க? ரொம்ப நாளாச்சு உன்னயப் பாத்து'' என்று சிரித்தாள்
""நல்லா இருக்கேம்மா. நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுல அய்யா எப்பிடி இருக்காரு? உடம்பு சரியில்லேன்னாங்களே''என்று கேட்டாள். 
""ஆமா . இப்ப பரவா இல்லே. எல்லாரும் நல்லா இருக்கோம்'' என்றாள் நீலாக்கா.
இந்திராம்மாவும் அவள் கணவரும் அவளை வரவேற்றார்கள்.


""இந்திரா. பசி கொல்லுது. நீ வேற சாப்பிடக் கூப்பிட்டியா? ஒருகை பாத்துரணும்னு காலேலேர்ந்து ஒண்ணும் சாப்பிடலே'' என்று சிரித்தாள் நீலாக்கா.
""அந்தக் கதை எல்லாம் வேணாம். சாம்பார் சாதம் சாப்பிட்டதுமே வயிறு புல்லுன்னு ஆரம்பிச்சிடுவே. இன்னிக்கு பாக்கலாம்'' என்று சிரித்தாள் இந்திராம்மா.
எல்லாரையும் உட்கார வைத்து லிங்கிதான் பரிமாறினாள். நீலாக்காவுக்கு உண்மையிலேயே நல்ல பசிதான் போல. எல்லாவற்றையும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். சாப்பாட்டு மேடை ஒரே கலகலப்பாக இருந்தது. 
சாப்பிட்டு முடிந்ததும் இந்திராம்மா லிங்கியை சாப்பிடச் சொல்லி விட்டு ஹாலில் இருந்த மற்ற இருவருடனும் சேர்ந்து கொண்டாள். லிங்கிக்கும் நல்ல பசி. இந்திராம்மா நன்றாகச் சமைத்திருந்தாள்.


சாப்பிட்டு விட்டு பாத்திரங்களைத் தேய்த்து உள்ளே வைத்து விட்டு அவள் ஹாலுக்கு வந்தாள்.
அவளை பார்த்ததும் ""வெய்யிலா இருக்கே. கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்கு போறியா?''என்று இந்திராம்மா கேட்டாள். 
""இல்லம்மா. நான் கிளம்பறேன். ரேசன் கடேல இன்னிக்கு சர்க்கரையும் சீமத் தண்ணியும் கொடுக்கறாங்க. போய் வாங்கணும்'' என்றாள் லிங்கி.
""சரி.அப்ப ஒரு நிமிஷம் இரு" என்று எழுந்து உள்ளே இருந்த பெட்-ரூமுக்குச் சென்றாள். பீரோவைத் திறக்கும் சப்தம் கேட்டது.
திரும்பி வந்து அவளிடம் பணத்தைக் கொடுத்தாள்.""கேர்புலா கொண்டு போ. நிறையப் பணம்'' என்றாள் இந்திராம்மா.
அதை வாங்கிக் கொண்டு லிங்கி இந்திராம்மாவின் காலில் விழுந்தாள்.
""அடடே இதென்ன பைத்தியம் மாதிரி. எழுந்திரு. எழுந்திரு. நல்லா இரு'' என்றாள் இந்திராம்மா.
நீலாக்கா இந்திராம்மாவை "இதெல்லாம் என்ன?' என்று கேட்பது போல் பார்த்தாள்.
""இங்க சுகுணா இருந்தால்ல. அவ கொழந்தைக்கு ஸ்கூல் பீஸ்'' என்றாள் இந்திராம்மா.
""ரெண்டாம் கிளாஸ் போகுது. அதுக்கு பீஸ் பதினேழாயிரமாம்'' என்றார் இந்திராம்மாவின் கணவர்.
""அடேயப்பா!'' என்றாள் நீலாக்கா.


""புஸ்தகம் யூனிபாரம்னு மொத்தமா இருபதாயிரம் குடுத்திருக்காங்க அம்மா'' என்றாள் லிங்கி.
""வெரி குட் இந்திரா. உன்னப் பாத்தா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு'' என்றாள் நீலாக்கா.
""அப்படி எல்லாம் ஒண்ணுமில்லே'' என்றாள் இந்திராக்கா. ஆனால் அவள் முகத்தில் பெருமையும் மகிழ்ச்சியும் தெரிந்தன.
அப்போது நீலாக்காவின் போன் ஒலித்தது . எடுத்துப் பேசினாள்.
""யாரு ரம்யாவா? ஆமா. நான் இந்திரா வீட்டுக்கு சாப்பிட வந்தேன். உனக்கு தெரியுமா அவ வீட்டுல வேலை பாத்துகிட்டு இருந்தால்ல சுகுணான்னு. அவளுக்கு இப்ப ரொம்ப உடம்பு முடியலன்னு வேலைக்கு வரத நிறுத்திட்டா. ஆனா அவ குழந்தை படிப்பு செலவெல்லாம் இந்திராதான் பாத்துக்கிறா. ரெண்டாங் கிளாசுக்கு போற குழந்தைக்கு இருபதாயிரம் குடுத்திருக்கா. ஷீ இஸ் ரியலி க்ரேட்'' என்றாள்.
இந்திராம்மா நீலாக்காவைத் தடுப்பது போல வாயில் விரலை வைத்து "உஷ்' என்றாள்.


நீலாக்கா ""நானா? இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன். ஈவ்னிங் பாக்கலாமா?'' என்று போனைக் கீழே வைத்தாள்.
பிறகு லிங்கியைப்பார்த்து ""கொஞ்சம் ஐஸ் வாட்டர் கொண்டு வாயேன். ஒரே தாகமா இருக்கு'' என்றாள்.
லிங்கி கிச்சனுக்குச் சென்று அங்கு இருந்த பிரிட்ஜைத் திறந்தாள். ஐஸ் வாட்டர் இருந்த பாட்டிலையும் இரண்டு தம்ளர்களையும் எடுத்துக் கொண்டு வந்தாள். 
நீலாக்கா மறுபடியும் போனில் இருந்தாள்.""...ஆமாங்கறேன் மாலதி . இந்தக் காலத்துல யார் இப்பிடியெல்லாம் பண்ணறாங்க? அதுவும் வேலையை விட்டுட்டு போனதுக்கு அப்புறம்? இந்திராவுக்கு தங்க மனசு. நான்லாம் என்ன பண்ணறேன்? இங்கேர்ந்து வாங்கி அங்க கொடுக்கறது. அவ்வளவுதான் இந்திரா மாதிரி கைக்காசை எடுத்து குடுக்கறதுன்னா சும்மாவா? ரொம்பப் பெரிய மனசு. சரி, நீ இன்னிக்கி ராத்திரி மெட்றாஸ் போறியா? எப்ப திரும்பி வருவே?'' என்று இன்னும் இரண்டு நிமிஷம் பேசி விட்டு லிங்கியிடமிருந்து நீரை வாங்கிக் குடித்தாள்.
பிறகு எழுந்தபடி ""கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம்னு பாத்தேன். அதுக்குள்ள நூத்தியெட்டு கால்'' என்று கிளம்பினாள்.


அவள் சென்ற பின் "அப்பா என்ன பேச்சு என்ன பேச்சு. இன்னிக்கு அவ போற இடமெல்லாம் இந்திராம்மாவோட புராணம்தான்'' என்றார் இந்திராம்மாவின் கணவர் சிரித்தபடி.
""ரொம்ப நல்லவ'' என்றாள் இந்திராம்மா.
அவள் முகத்தில் ஒளி வீசிய பெருமையையும் சந்தோஷத்தையும் மறுபடியும் லிங்கி பார்த்தாள்.
இந்திராம்மாவிடம் விடை பெற்றுக் கொண்டு லிங்கி வெளியே வந்தாள். ஒவ்வொரு தடவையும் போல வெய்யில் "சுரீர்' என்று தோலைப் பொசுக்க வந்தது போல் அடித்தது. யுகாதிப் பண்டிகை அன்றே நீலாக்கா வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தபடி லிங்கி நடந்தாள்.

 

 

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.