Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயிரம் நாள்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் தோனி! - எப்படி இருந்தது அந்த அனுபவம்? #VikatanExclusive

Featured Replies

ஆயிரம் நாள்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் தோனி! - எப்படி இருந்தது அந்த அனுபவம்? #VikatanExclusive

 
 

மே 10 2015 - சுண்டி விடப்பட்ட டாஸ் காயின் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தின் வெடிப்புகள் விரிந்த பிட்ச்சில் சத்தமே இல்லாமல் விழுகிறது. வெற்றி தோனிக்கு! அதற்கே ஆர்ப்பரிக்கிறது, மஞ்சளை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்ட அந்த பெருங்கூட்டம்! பேட்டிங்கை தேர்ந்தெடுக்கிறார் தோனி. 'Live It Abhi' என்ற கவுன்ட் டவுனோடு தொடங்குகிறது அந்தப் போட்டி. 'இந்தப் பொழுதை கொண்டாடித் தீருங்கள்' என்ற அந்த வார்த்தைகளின் மதிப்பை அந்தப் பொழுதில் மஞ்சள் ஜெர்ஸியை நேசிக்கும் எந்த ரசிகனும் உணர்ந்திருக்கமாட்டான். ஏனெனில் அதுதான் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னையில் ஆடிய மேட்ச். 

இரண்டு ஆண்டுகள் இடைவேளை! இறுகிப் போயிருக்கும் சென்னை பிட்ச் கூட நெகிழத் தொடங்கியிருந்தது. சம்மர் வெக்கேஷனில் கொண்டாட்டமாக மாறும் சேப்பாக்கம் சுற்றுவட்டாரம் சட்டப்பிரச்னையில் சிக்கி தேமேவென அமர்ந்திருக்கும் மூன்று ஸ்டேண்டுகள் போல காற்று வாங்கியது. வியர்வை கசகசத்த ஸ்டேடியத்தின் இரும்பு சேர்களில் இப்போது கடல்காற்றின் உப்புவாடை மட்டுமே! தோனியையும் ரெய்னாவையும் ப்ராவோவையும் தங்களின் சீனியர் ப்ரோவாக பார்க்கத் தொடங்கியிருந்த ரசிகனுக்கு சூதாட்டப் புகார்களில் இருந்த உண்மை, லோதா கமிட்டியின் பரிந்துரைகள், ஐ.பி.எல் கொண்டாட்டத்திற்குப் பின்னால் இருக்கும் வியாபாரம் எதைப் பற்றியும் கவலை இல்லை! சென்னை சூப்பர்கிங்ஸின் சிக்ஸ் மழையை திரும்பவும் பார்க்கவேண்டும் என்பதுதான் அவனின் ஒரே ஆசை! கிரிக்கெட் ரசிகர்களுக்கே உண்டான குணம் இது.

ஆயிரம் நாட்கள் கழித்து திரும்பவும் சொந்த மண்ணில் களமிறங்கத் தயாராகிறது சென்னை சூப்பர்கிங்ஸ். சோம்பல் முறித்துக்கொண்ட மஞ்சள் ஜீன்கள் பரபரப்பாக ஓடத்தொடங்குகின்றன. 'இப்ப திறப்பாங்களா அப்பத் திறப்பாங்களா?' என ஒவ்வொரு நாளும் கவுன்ட்டரை எட்டிப்பார்த்து ஏமாறும் ரசிகர்களை சேப்பாக்கம் ரயில்நிலைய சுவர்கள் கவனித்துக்கொண்டே இருக்கின்றன. 2ம் தேதி முதல் டிக்கெட் கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகிறது. முதல் நாளிரவே முற்றுகையிடுகிறார்கள் ரசிகர்கள். வழக்கமாக இந்த நள்ளிரவு வரிசை எல்லாம் பள்ளிகளின் வாசலில் தான் நடக்கும். இந்த முறை ஹாஸ்டல் வாசலில். விக்டோரியா ஹாஸ்டல் சாலை வாசலில்...!

தோனி

படபடவென விற்றுத் தீர்கின்றன டிக்கெட்டுகள். 'வாங்கியாச்சா? ஒண்ணு கிடைக்குமா? எப்படி வாங்குனீங்க?' என ஒவ்வொருவரின் இன்பாக்ஸிலும் நிரம்பி வழியும் கேள்வி பதில்கள். ஆன்லைனில் புக்கிங் தொடங்கிய ஒரே மணிநேரத்தில் அத்தனை மேட்ச்களுக்கும் டிக்கெட்கள் விற்றுத் தீர்கின்றன. முதலும் முக்கியமுமான காரணம் - ஏழாம் நம்பர் ஜெர்ஸியைப் போட்டுக்கொண்டு உள்ளே நடந்து வரும் அந்த ஒற்றை உருவம், சென்னை சூப்பர்கிங்ஸின் லக்கி சார்ம், வடக்கு ஆதிக்கம் செலுத்தும் ஒரு ஸ்போர்ட்டில் தமிழகத்தின் திறமைகளை வைத்து இரண்டு முறை கோப்பைகளைத் தாங்கிய அந்தக் கைகள்! ரவிசாஸ்திரியின் ஸ்டைலில் சொல்வதானால்... The name is Mahendra Singh Dhoni!  

2008-ல் ஐ.பி.எல்லின் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஸ்டார் ப்ளேயர்கள் இருந்தார்கள். மும்பைக்கு சச்சின், கொல்கத்தாவிற்கு கங்குலி, பெங்களூருக்கு டிராவிட், ஐதராபாத்திற்கு லக்‌ஷ்மண், டெல்லிக்கு சேவாக், பஞ்சாபிற்கு யுவராஜ் சிங் இருந்தார். அரசியலைப் போலவே ஐ.பி.எல்லிலும் தனித்துவிடப்பட்டது தமிழகம்தான். ஏலத்தில் ஆறு கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார் தோனி. ஆறு கோடி பேருக்கு சொந்தக்காரரானார். பத்தாண்டுகள் கழித்தும் 'தோனி ஐ லவ் யூ' என அவருக்குக் கேட்காத தூரத்தில் இருந்தாலும் கத்தித் தீர்க்கிற சிறுவர்கள் இதற்கு சாட்சி. 

ஏழாம் தேதியே சென்னை அணி முதல் போட்டியில் விளையாடிவிட்டதுதான். அதுவும் மும்பைக்கு நிகரான ரசிகர் கூட்டத்திற்கு இடையே...! ஆனாலும், சொந்த ஊரில் மாமன், மச்சான் முன்னால் ஆடுவதுதானே ஸ்பெஷல்? இத்தனை நாட்கள் கழித்து தோனி அண்ட் குழுவை நேரில் பார்க்கப்போகும் சந்தோஷம், அந்த ஆட்டத்தின் ரிசல்ட் நன்றாக இருக்கவேண்டுமே என்ற பதட்டம், போட்டி நடக்குமா நடக்காதா என்ற பயம் - இவை எல்லாவற்றையும் சுமந்துதான் நேற்று ஸ்டேடியம் வந்தார்கள் ரசிகர்கள்.

மேட்ச் பார்க்கச் சென்றவர்களை முதலில் வரவேற்றது ட்ராபிக் ஜாம். அதன்பின் கையில் பதாகையோடு நரம்பு புடைக்க முழக்கமிடும் இளைஞர் படை. அதைத் தாண்டிப் போனால் குறுக்கே தடுப்புகளைப் போட்டு நிற்கும் போலீஸ்காரர்கள். இந்தப் புள்ளிவரை காக்கியும், கறுப்புமாக இருந்த சூழல் மறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சள் மினுங்கத் தொடங்குகிறது. கண்களில் கொஞ்சம் நம்பிக்கை வர தங்களின் கேட் நோக்கி ஒவ்வொருவராக நடக்கத் தொடங்குகிறார்கள். கையில் கொடி, தலையில் தொப்பி, கன்னத்தில் ஓவியம் என பார்ட் பார்ட்டாக தங்களின் பேவரைட் அணிக்காக டெடிகேட் செய்கிறார்கள் சிலர்.

கம்பி தடுப்புகளுள் நிற்கும்போதும் சிலர் வந்து 'காவிரிக்காக காட்டுங்க' என கறுப்பு பேட்ஜ்களை நீட்டுகிறார்கள். மறுக்காமல் 'சரிண்ணே' என வாங்கிச் செல்கிறார்கள் உள்ளே. இங்கே எதிரி சி.எஸ்.கே இல்லை என கொடுத்தவர்களும் வாங்கியவர்களும் உணர்ந்தேதான் இருந்தார்கள்.

டாஸ் நேரம் நெருங்க நெருங்க ஸ்டேடியம் நிறைகிறது. உப்புக்காற்று அடைத்த காதுகளை ஆலுமா டோலுமாவும் ஜித்து ஜில்லாடியும் அடித்து உடைத்துக்கொண்டிருந்தன. திடீரென ஸ்டேடியம் ஹை வோல்ட்டேஜில் அலறுகிறது. மைதானத்தின் ஒரு மூலையில் சின்னப் புள்ளியாக நுழைகிறது அந்த உருவம். அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் விசில் போடுகிறார்கள் மச்சான்கள். 'தோனீஈஈஈஈஈஈ......'- இத்தனை ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்த அத்தனைக் காதலையும் கொட்டி அலறுகிறது ஒரு குரல். பற்றிக்கொள்கிறது மைதானம். 'தோனி.... தோனி.... தோனி...' - 30 ஆயிரம் பேரின் ஒருமித்த குரல். கிட்டத்தட்ட பாகுபலி இரண்டாம் பாகத்தின் இடைவேளைக் காட்சிதான். மகேந்திர சிங் பாகுபலி என அவர் பதவியேற்காதது மட்டும்தான் குறை. முதுகைக் காட்டி நிற்கிறார் தோனி. டாஸ் காயின் சுண்டிவிடப்படுகிறது. வெற்றி தோனிக்குத்தான். நாஸ்டாலஜியா நரம்புகளுக்குள் ஓட.. ''Dont miss this, Live It Abhi'  என முடிவு செய்கிறார்கள் ரசிகர்கள்.

தோனி

தல, சின்னத்தல, ரூட்டுத்தல, ஆட்டத் தல, ட்வீட்டுத் தல என ஒவ்வொருவராக உள்ளே நுழைகிறார்கள். எதிரணி அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸுக்கும் ஆர்ப்பரிக்கிறது கூட்டம். அது சிக்ஸுக்கான சத்தமல்ல, 'நீ போடு மச்சி பாத்துக்கலாம்' என பவுலர் நண்பனை தேற்றும் சத்தம். எல்லாரையும் விட பிராவோ இதன் அருமையை உணர்ந்திருப்பார். நடுவே டுப்ளேஸ்ஸிக்கும் ஜடேஜாவுக்கும் சில சங்கடங்கள் நிகழ, 'சி.எஸ்.கே... சி.எஸ்.கே... சி.எஸ்.கே' என மொத்தமாக எழுந்து நின்று தங்கள் ஆதரவைக் கொடுக்கிறது கூட்டம். ஆட்டத்தை சிக்ஸ் அடித்து இயல்புநிலைக்கு மாற்றுகிறார்கள் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.

தன் பந்தை ரஸல் நொறுக்கும்போதெல்லாம் சுணங்கிப் போகிறார் பிராவோ. உடனே ஒருமித்த குரலில் அவருக்கு எனர்ஜி கொடுத்து ஓடவைக்கிறார்கள் ரசிகர்கள். இது இன்னிங்ஸின் கடைசி ஓவர் வரை தொடர்கிறது. லோக்கல் பையனான தினேஷ் கார்த்திக்கிற்கும் வஞ்சனை இல்லாமல் பாசம் காட்டுகிறார்கள். அடித்து வெளுத்த ரஸலுக்கும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். ஹர்ஷா போக்லே, ''Thats the sportsmanship' என சிலிர்த்திருப்பார்.

வாட்சனும் ராயுடுவும் சென்னைக்காக பந்தை பறக்கவிட்ட நொடியில் ஆர்ப்பரித்தாலும் எல்லாருக்கும் 'இரண்டு விக்கெட் போனா நல்லாயிருக்குமே' என கொஞ்சமே கொஞ்சம் ஆசையும் உள்ளே ஒரு ஓரத்தில் இருந்திருக்கும். ஆசையும் நிறைவேறியது. நான்காவது ஆளாக களமிறங்குகிறார் தோனி. 'இதுக்கு மேல என்ன?' என இருப்பதை எல்லாம் கொடுத்து கத்துகிறது கூட்டம். அத்தனை பிரஷரையும் உள்வாங்கிக் கொண்டு 'டொக்' என பந்தைத் தடுக்கிறார் தோனி. ஒருகட்டத்தில் சின்னத் தல அவுட்டாக பில்லிங்ஸ் களமிறங்குகிறார். ஆனாலும் கூட்டத்தின் கவனம் தோனியின் மீதே!

தோனி

மலை போன்ற எதிர்பார்ப்பு நுரையீரல் வரை அழுத்துவதாலோ என்னவோ தோனி சிங்கிளைத் தாண்டி ரன் எடுக்கவே திணறுகிறார். பிராவோவிற்கே பூஸ்ட் கொடுக்கும் ரசிகர்கள் தோனியை விட்டுவிடுவார்களா என்ன? அவர்கள் அளித்த ஒரு டன் உற்சாகத்தில் இழுத்து சாத்துகிறார் ஒரு பவுண்டரி. அடுத்தப் பந்து இறங்கி வந்து ஒரு சிக்ஸ். சேப்பாக்கம் 'ஹேஹேஹேப்பாக்கம்' ஆகிறது. ஆனாலும், அடுத்தடுத்து சிங்கிள்கள்தான். ரசிகர்கள் எதிர்பார்த்த தோனி இவரில்லை. மறுபக்கம் பிரஷரை எல்லாம் தோனி உறிஞ்சிக்கொண்ட இலகுவில் பந்தை ஜாலியாக சிதறடிக்கிறார் பில்லிங்ஸ்.  

'பியூஷ் சாவ்லா பால், இதுல தல அடிச்சு ஆடலாம்' என நினைக்கும்போதே அப்பீலுக்கு போகிறார் தினேஷ் கார்த்திக். திரும்பிப் பார்த்தால் தோனி க்ரீஸில் இல்லை. அவுட்! 30 ஆயிரம் வாய்களையும் பிளாக் மேஜிக் போல கட்டிப்போடுகிறார் சாவ்லா. 'பிரட் லீயோ முரளியோ, பந்துனு ஒண்ணு போட்டா அடிக்கத்தான் செய்வேன் என்ற ஆட்டிட்யூடில் இருந்த தோனி இல்லை இது. Something is missing' என உணர்கிறார்கள் ரசிகர்கள். அவர்களின் பயமே இந்த ஸ்டேட்மென்ட், 'Something has changed' என மாறிவிடக்கூடாது என்பதுதான்.

தோனி

கடைசி ஓவர். இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள். வினயின் குட் லென்த் டெலிவரி பிட்ச்சைத் தொட்ட நொடி... 'மட்ட்ட்ட்ட்' என ஒரு சத்தம் கேலரியின் கடைசி சீட் வரை கேட்கிறது. அந்த சத்தமே பந்து எல்லை தாண்டிவிடும் என்பதை உணர்த்த... எங்கும் சத்தம்! இது ஜெயிக்கிற சத்தம்! கொண்டாடித் தீர்க்கிறார்கள் ரசிகர்களும் வீரர்களும். கூட்டம் இன்னமும் சீட்டை விட்டு நகர்ந்தபாடில்லை. பிரசன்டேஷனில் தோனி பேசுவாரே! சென்னை ஆடியன்ஸுக்கு அவர் நன்றி சொல்ல, பதிலுக்கு கூட்டம் அவருக்கு கைதட்ட... எல்லாம் சுபம்!

 

இதோ! லீக் போட்டிகள் முடிந்து, அடுத்த ஆட்டம் சென்னையில் நடக்குமா என்பது உறுதியில்லை. அடுத்த ஆண்டு ஐ.பி.எல்லில் தோனி இருப்பாரா என்பதும் உறுதியில்லை. திணறினாலும் தடுமாறினாலும் பத்தாண்டுகளாக தங்களுக்கு எக்கச்சக்க வெற்றிகளை வாங்கித்தந்த அவரை விட்டுக்கொடுக்க ரசிகர்களும் தயாரில்லை. இத்தனை பிரச்னைகளையும் தாண்டி வந்த ரசிகனுக்காகவாவது, ஐ.பி.எல்லை விட வயது குறைந்த குட்டிப் பையன் அவரைப் பார்த்தவுடன் அடிக்கும் விசிலுக்காகவாவது, எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காமல், 'தோனி... தோனி' என தொண்டை கரகரக்க குரல் கொடுக்கும் கோடிக்கணக்கான மச்சான்களுக்காகவாவது நீங்கள் பழைய அதிரடிக்காரர் ஆகவேண்டும் தோனி!    

https://www.vikatan.com/news/sports/121968-live-documentation-of-the-csk-home-match-which-received-a-warm-welcome-amidst-all-the-ruckus.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.