Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே...! - - ‘மெர்க்குரி’ விமர்சனம்

Featured Replies

பிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே...! - - ‘மெர்க்குரி’ விமர்சனம்

 
 

பாழடைந்த ஃபேக்டரி, அதில் மாட்டிக்கொள்ளும் ஐந்து இளைஞர்கள்... என ஹாலிவுட்காரர்கள் தேய்த்தெடுத்த ஒன்லைனை வைத்து கார்ப்பரேட் அராஜகத்துக்கு எதிராக `மெர்க்குரி' படத்தை இயக்கியிருக்கிறார், கார்த்திக் சுப்புராஜ். 

மெர்க்குரி கழிவுகளால் கேட்கும் திறன் மற்றும் பேசும் திறனை இழந்த இந்துஜா, சனத், தீபக், ஷஷான்க் மற்றும் அனிஷ் ஆகியோர் `ஹோப்' பள்ளியின் முன்னாள் மாணவர்கள். தங்களது அலுமினி மீட்டிற்காக ஒன்றுகூடும் இந்த ஐந்து பேரை, ஏன் பிரபுதேவா கொலை செய்யத் துரத்துகிறார், இவர்களுக்கும் பிரபுதேவாவிற்கும் என்ன சம்பந்தம்? என்பதை சமூக அக்கறை கலந்தும் கார்ப்பரேட்டின் பேராசையால் ஏற்பட்ட விளைவு என்ன என்பதையும் `மெர்க்குரி'யாக நமக்குக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 

`It was going well' எனத் தொடங்கும் அலுமினி மீட்டிங், பார்ட்டியில் தொடங்குகிறது படம். தங்களுக்குக் காது கேட்காமல் இருந்தாலும், ஹெடெசிபலில் பாட்டை ஒலிக்கவிட்டு நடனமாடி மகிழ்கிறார்கள் அந்த ஐந்து பேர். இந்துஜாவின் பிறந்தநாளில் தன்னுடைய காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும் சனத், இந்துஜாவைத் தனியாக காரில் அழைத்துச் செல்கிறார். நண்பர்களும் உடன் வந்துவிடுவதால், வேகம் எடுக்கிறது பயணம். அந்த வேகத்தால் ஒரு விபத்து ஏற்படுகிறது. விபத்தால் ஏற்படும் ஒரு சிக்கலிலிருந்து இந்த ஐந்து பேரும் மீண்டார்களா இல்லையா என்பது மீதிக்கதை.

படத்தின் காஸ்ட்டிங்கில் எந்தவிதக் குறையும் சொல்லமுடியாத அளவிற்கு நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார், இயக்குநர். எண்ணிக்கை குறைவு என்றாலும் அந்தந்தக் கேரக்டர்களுக்கு நடிகர்கள் பக்காவாகப் பொருந்திருக்கிறார்கள். குறிப்பாக, பிரபுதேவாவின் பாடி லாங்குவேஜ் அபாரம். துள்ளல் நடனம், குட்டிக் குட்டி காமெடி ரியாக்‌ஷன்கள்... என இதுவரை கண்களைக் குளிரவிட்டவர், முதன்முறையாக மிரட்சியைப் பரிசாகக் கொடுத்து முதுகுத்தண்டை சில்லிட வைக்கிறார், பிரபுதேவா. 

மெர்க்குரி

படத்தில் ஆங்காங்கே பல குறியீடுகளைத் தனக்கே உரித்தான ஸ்டைலில் உதிர்த்திருக்கிறார், கார்த்திக். படத்தின் மிக முக்கியமான அந்த இரண்டு காட்சிகளிலும் மான் ஒன்று வருவதை, `DEER CROSSING' இடத்திலுள்ள சிசிடிவி கேமராவோடு சம்பந்தபடுத்தி சொல்லவரும் குறியீடு நச்!. இந்தப் படத்தை ஏன் சைலன்ட் மூவியாக எடுக்க வேண்டும் எனும் கேள்வி எழ வாய்ப்பு கொடுக்காததே, இயக்குநரின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. வசனங்கள் வரும் ஓரிரு காட்சிகளையும் சாமர்த்தியமாக சைலன்ட் ஆக்கியிருக்கிறார்.

பாழடைந்த ஃபேக்டரி, அதில் மாட்டிக்கொள்ளும் ஐந்து இளைஞர்கள் என ஹாலிவுட்டில் எக்கச்சக்கமாகப் பயன்படுத்தபட்ட கதைக்களம் என்பதால், முதல்பாதியில் `Hills Have eyes', `Wrong turn' போன்ற படங்களின் சாயல் ஆங்காங்கே தெரிகிறது. இரண்டாம் பாதியில் அப்படியே யூ-டர்ன் போட்டு வேறு பக்கமாக திரைக்கதையைத் திரும்பியிருப்பது கார்த்திக் சுப்புராஜ் டச்.

படத்தின் ரியல் ஹீரோ சந்தோஷ் நாராயணன்தான். இடைவெளிகளில் இட்டு நிரப்பும் இசைக்கு இந்தப் படத்தில் வேலை இல்லை. முதலிலிருந்து இறுதிவரை எங்கும் எதிலும் அவர்தான். கரி படிந்த சமையல் கூடத்தில் தொடங்கும் ச.நாவின் விரல்வித்தை நேரம் ஆக ஆக இதயத்துடிப்பை அருகிலிருப்பவர் கேட்கும்படி அதிரச் செய்கிறது. அதுவும் பட்பட்டெனத் தாவும் இன்டர்வெல் சீக்வென்ஸில் சந்தோஷின் இசை மிரட்டல்!

மெர்க்குரி

ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா கோணங்கள் படத்தின் தன்மையை விட்டு விலகாமல் பார்த்துக்கொள்கிறது. அதேபோல் படத்தின் கலர் டோன் கதைசெல்லும் மனநிலைக்கு ஏதுவாக இருக்கிறது. `ஜிகர்தண்டா’ படத்திற்கு தேசியவிருது வாங்கிய எடிட்டர் விவேக் ஹர்ஷன், தான் ஒரு நல்ல தொழில்நுட்பக் கலைஞர் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். வசனம் இல்லாத படம் என்பதால், அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், ஒரு மணி நேரம் 30 நிமிடங்களுக்குள் படத்தை கட் செய்து கொடுத்திருக்கும் எடிட்டரைக் கட்டாயம் பாராட்டலாம்.

சைலன்ட் மூவி என்பதால் வழக்கத்தைவிட மிகையாக ரியாக்ட் செய்ய வேண்டும் என்ற தேவை இருக்கிறதுதான். ஆனால், சில காட்சிகளில் துருத்தித் தெரியும் இந்துஜா, தீபக் பரமேஷ் போன்றவர்களின் ஓவர் ஆக்டிங்கைத் தவிர்த்திருக்கலாம். தொழிற்சாலையில் சிக்கிக்கொண்டவர்கள் இளைஞர்களாக இருந்தும், ஒருவர்கூட  பிரபுதேவாவை எதிர்த்து சண்டைபோடாமல் பயந்து ஓடுவது நகைப்புக்குரியது.

மெர்க்குரி

மெர்க்குரி கழிவுகள் அங்குள்ள குழந்தைகளை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதைத் திரைப்படத்திற்குள் உணர்வுப்பூர்வமாக காட்டாமல், படம் முடிந்தபிறகு வரலாற்றுச் செய்திகளைப் போடுவது, பார்வையாளர்கள் இருக்கையை விட்டுக் கிளம்பும்போது ரெடிமேடாகத் தூண்டப்படும் காட்சிகளாக இருக்கிறது. `We ended up in a wrong war' என்ற கதையின் மையக் கருவை நியாயப்படுத்த நிறைய காட்சிகளை கார்த்திக் சுப்புராஜ் யோசித்திருந்தாலும், க்ளைமாக்ஸில் இருக்கும் லாஜிக் சறுக்கல்கள்தான், `It could have ended the right way' எனத் தோன்ற வைக்கிறது.

 

30 வருடங்களுக்கு முன்பு வெளியான `பேசும் படம்' என்ற வசனமில்லாத படத்திற்குப் பிறகு வந்திருக்கும், மெளனப் படம் இது. தமிழ்சினிமாவின் புதுப்புது முயற்சிகளுக்கு இந்தப் படம் ஒரு தொடக்கம்!

https://cinema.vikatan.com/movie-review/122815-mercury-movie-review.html

  • தொடங்கியவர்

கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ - சினிமா விமரிசனம்

 

 
-mercury-2018-04-11-11-16-35am

 


திரைப்படம் எனும் கலை வடிவத்தின் மீது அதீதமான ஆர்வமும், புதுமையான பரிசோதனைகளை முயற்சிக்கும் தீராத தாகமும் கொண்ட இயக்குநர்களால்தான் சிறந்த திரைப்படங்கள் உருவாகின்றன. அப்படியொரு அபாரமான முயற்சிதான் ‘மெர்க்குரி’. திரைப்படத் துறையில் தன்னை வலுவாக நிறுத்திக்கொண்ட பல வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் முயற்சித்த ‘பேசும்படம்’ எனும் பரிசோதனையை, தனது நான்காவது படைப்பிலேயே சாதிக்க முயன்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் துணிச்சலையும் ஆர்வத்தையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்; ஆதரிக்க வேண்டும்.

mercury-7591.jpg

கள்ள நகல்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் பெருகிவிட்ட சூழலில், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் என்பது மலினமாகவும் சலிப்பாகவும் ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், பார்வையாளர்களை திரையரங்குக்குள் கொண்டுவருவது என்பது ஒவ்வொரு இயக்குநருக்கும் பெரிய சவாலாக உள்ளது. புதுமையான திரைக்கதையினாலும், திறமையான தொழில்நுட்பங்களினாலும் இந்தச் சவாலை அற்புதமாக எதிர்கொண்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். ‘மெர்க்குரி’ தரும் வித்தியாசமான அனுபவத்துக்காகவே திரையரங்கில் கண்டுகளிக்க வேண்டிய கட்டாயத்தைக் கோரி நிற்கிறது. 

*

ஐந்தே ஐந்து பிரதான பாத்திரங்கள் (இதிலும் பிரபுதேவா மட்டுமே நமக்கு அதிகம் பரிச்சயமானவர்), இரண்டு, மூன்று களங்கள் ஆகியவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு, ‘வசனங்கள் ஏதுமற்ற’ ஒரு ஹாரர் மற்றும் திரில்லர் திரைப்படத்தைத் தந்து அசத்தியிருக்கிறார் இயக்குநர். ஒரு பெண் உள்ளிட்டு, காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத நான்கு இளைஞர்கள், கண் பார்வையற்ற ஓர் இளைஞன் என இரு வேறு வகை மாற்றுத்திறனாளிகளுக்கிடையே நிகழும் வாழ்வா, சாவா போராட்டம், இருக்கையின் நுனியில் அமர்ந்திருக்கும் பதற்றத்தையும் சுவாரசியத்தையும் தருகிறது. 

வணிக லாபத்துக்காக, மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைப்பதென்பது உலகளாவிய பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த மக்கள் இந்த ஆபத்தை பலகாலமாக எதிர்கொண்டு வருகிறார்கள். 1984-ம் ஆண்டு போபால் நகரத்தில் நிகழ்ந்த கொடூரமான விபத்து போன்று உலகெங்கும் நிகழும் பேரழிவுகள் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். அவ்வகையான பிரதேசங்களில் பல்வேறு வகை ஊனங்களைக் கொண்ட குழந்தைகள் பிறப்பதும் தொடர்கதையாகிக்கொண்டு வருகிறது. 

சூழலியல் சார்ந்த இந்த தீவிரமான பிரச்னையை, ஒரு ஹாரர்-திரில்லர் திரைப்படத்தில் உறுத்தாமலும் நுட்பமாகவும் இயக்குநர் இணைத்தவிதம் பாராட்டுக்குரியது.

*

கொடடைக்கானலை நினைவுப்படுத்தும், பாதரச தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மலைப்பிரதேசம் அது. பல உயிர்களைப் பறித்ததோடு ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாக அந்த தொழிற்சாலை இருந்திருப்பது செய்தித்தாள்களின் வழியாக துவக்க காட்சிகளில் சுட்டிக்காட்டப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான ‘சிறப்பு’ப் பள்ளியில் படித்த நான்கு இளைஞர்கள், சில வருடங்களுக்குப் பிறகு ஒன்று கூடுகிறார்கள். பள்ளியில் நிகழும் கலை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலிகளுக்குப் பிறகு தங்களின் சந்திப்பைக் கொண்டாடத் துவங்குகிறார்கள். அவர்களில் ஓர் இளைஞன், பல காலமாக தனக்குள் ஒளித்து வைத்துக்கொண்டிருந்த காதலை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அமைத்துக்கொள்கிறான். அவளும் ஒப்புக்கொள்கிறாள். அவர்களுக்குள் மகிழ்ச்சியும் உற்சாகமும் பீறிடுகிறது. கொண்டாட்ட மனநிலையுடன் அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் இடையே, ஒரு விபத்து நேர்வதைக்கூட அவர்கள் கவனிப்பதில்லை. பிறகு அதைப்பற்றி அறிய நேர்ந்ததும், பதற்றத்துடன் மூடி மறைக்கிறார்கள். ஆனால், அது அத்தனை எளிதானதாக முடிவதில்லை. பெரிய ஆபத்தாக அவர்களைத் துரத்தி வருகிறது.

அந்த ஆபத்திலிருந்து அவர்கள் தப்பிக்கும் முயற்சிகளையும், தப்பித்தார்களா இல்லையா என்பதயும் திகில் கலந்த விறுவிறுப்புடன் மீதக் காட்சிகள் விவரிக்கின்றன.

*

துள்ளல் மற்றும் அதிவேக நடன அசைவுகளாலும் கோணங்கித்தனமான நகைச்சுவையாலும் இதுவரை நம்மைக் கவர்ந்த பிரபுதேவா, இத்திரைப்படத்தில் முற்றிலும் வேறு மாதிரியான புது அனுபவத்தைத் தருகிறார். அவரது திரைப்பயணத்தில் ‘மெர்க்குரி’ ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். தனக்கு இழப்பை ஏற்படுத்திய அந்த நால்வரையும் இவர் கொலைவெறியுடன் பழிவாங்கத் துடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்துள்ளன. அவர்கள் எப்படியாவது தப்பித்துவிட வேண்டுமே என்கிற பதற்றம் நமக்குள் பரவுகிறது. இந்தத் துரத்தலுக்கான காரணத்தை நாம் அறியும் இறுதிக்காட்சி, மிக நெகிழ்வானதாக அமைந்திருக்கிறது. அதுவரையான மிரட்டல் உடல்மொழியிலிருந்து விலகி வேறுவிதமான நடிப்பைத் தந்து நம்மைக் கவர்ந்துவிடுகிறார் பிரபுதேவா. 

poster.jpg

மாற்றுத்திறனாளிகளை அடிப்படையாகக் கொண்ட பாத்திரங்கள் என்பதால், பார்வையாளர்களிடமிருந்து இரக்கத்தையும் நெகிழ்ச்சியையும் கோரும் எவ்விதமான காட்சியையும் இயக்குநர் உருவாக்காதது பெரிய ஆறுதல். அதிக அளவு சத்தத்துடன் இசையை வைத்து நடனமாடி தங்களின் சமையல்காரரை தொந்தரவு செய்யும் சராசரியான, இயல்பான இளைஞர்களாகத்தான் அவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். நான்கு இளைஞர்களுமே தங்களின் பங்கைச் சிறப்பாகத் தந்திருக்கிறார்கள் என்றாலும், இதில் பிரத்யேகமாக தனித்துத் தெரிகிறார் இந்துஜா. சனத்தின் நடிப்பும் அருமையாக உள்ளது. காதலின் ஏக்கத்தையும் அது நிறைவேறிய மகிழ்ச்சியையும் அற்புதமாக பிரதிபலித்துள்ளார்.

 

இயக்குநரின் புத்திசாலித்தனமான திரைக்கதையைத் தாண்டி, தொழில்நுட்பர்களின் அற்புதமான கூட்டணியும் இத்திரைப்படத்தின் சிறப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது. ‘வசனமில்லாத’ இந்தத் திரைப்படத்தின் மெளன இடைவெளிகளை தனது அபாரமான பின்னணி இசையின் மூலம் நிரப்பியுள்ளார் சந்தோஷ் நாராயணன். கவித்துமான, திகிலான, நெகிழ்ச்சியான காட்சிகளை தனது இசையின் மூலம் மேலதிக உயரத்துக்கு இட்டுச் சென்றுள்ளார். குணால் ராஜனின் அசத்தலான ஒலி வடிவமைப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். 

எஸ். திருவின் ஒளிப்பதிவு இத்திரைப்படத்தின் முக்கியமான பலம். மலைப்பிரதேசத்தின் அழகியலை திகிலுடன் குழைத்துத் தந்துள்ளார். குறிப்பாக, தொழிற்சாலைக்குள் நிகழும் காட்சிகளை பிரத்யேகமான வண்ணத்தில் பதிவு செய்திருப்பது அற்புதமானது. ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற எடிட்டர் விவேக் ஹர்ஷனின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது.

அந்த இளைஞர்களை துவக்கக் காட்சியில் பொறியியல் மாணவர்களாகப் போகிறபோக்கில் காட்டிவிட்டு, பிறகு நிகழும் தொழிற்சாலை சம்பவங்களோடு இணைத்திருப்பது முதற்கொண்டு இயக்குநரின் புத்திசாலித்தனமும் கச்சிதமான திட்டமிடலும் திரைக்கதையில் பல இடங்களில் வெளிப்படுகிறது. அந்த இளைஞர்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்ளும் சைகை மொழி தொடர்பான காட்சிகள் பல இடங்களில் இயல்பாகவும் சில இடங்களில் மிகையான உடல்மொழியுடனும் அமைந்துள்ளன.
*

‘I know what you did last summer’ முதற்கொண்டு, 2016-ல் வெளியான ‘Don’t Breathe’ வரையான பல ஹாலிவுட் திரைக்கதைகளை ‘மெர்க்குரி’ நினைவுப்படுத்தினாலும், தன்னுடைய தனித்தன்மையை படம் முழுவதிலும் இயக்குநர் பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது. பார்வையாளர்களுக்குத் திகிலையும் சுவாரசியத்தையும் தரும் ஹாரர் மற்றும் திரில்லர் படமாக மட்டும் நின்றுவிடாமல், சமூக அக்கறை சார்ந்த விஷயத்தையும் இதில் உறுத்தாமலும் வலுவாகவும் பின்னியிருப்பதே இத்திரைப்படத்துக்கு பிரத்யேகமான சிறப்பைத் தருகிறது. 

இத்திரைப்படம் ஓர் அபாரமான அனுபவத்தை தந்தாலும், சில நெருடல்களும் பிசிறுகளும் இல்லாமல் இல்லை.

‘ராஜா ஹரிச்சந்திரா முதல் ‘பேசும்படம்’ வரையான பல மெளனத் திரைப்படங்களுக்கான மரியாதை இந்தத் திரைப்படம் என்கிற துவக்க அறிவிப்பு ‘மெர்க்குரியில்’ நியாயமாகப் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்று எழுகிற நெருடலை புறக்கணிக்க முடியவில்லை. ‘Silence is the most powerful scream’ என்கிற தலைப்பின் மையத்தை, தொடர்ச்சியாக ஒலிக்கும் பின்னணி இசை ஆங்காங்கே சிதைத்துவிடும் சோகமும் நிகழ்ந்திருக்கிறது. இறந்தவரின் ஆன்மா பழிவாங்குமா, அதுவும் பார்வையற்றதாக இருக்குமா என்பது முதற்கொண்டு எண்ணற்ற சந்தேகங்களும் கேள்விகளும் எழுகின்றன.

படத்தின் இறுதிக்காட்சி கவித்துவமான நீதியுடன் அமைந்திருந்தாலும், கூடவே நம்பகத்தன்மையை சிதறடித்திருக்கும் ஆபத்தையும் இயக்குநர் கவனித்திருக்கலாம். ‘We end fighting wrong war’ என்று பிரபுதேவாவின் பாத்திரம் தாமதமாக வருந்தினாலும், தங்களிடமிருந்த குறைபாடு காரணமாக விபத்துக்குக் காரணமாகிவிட்ட அப்பாவி இளைஞர்கள் கொடூரமாக பலியானதில் ஏதோவொரு வகை அநீதியுள்ளது. இதுபோன்ற சூழலியல் பிரச்னைகளில் போராட்டத்தின் கவனம் மையத்தை நோக்கி அல்லாமல் பல்வேறு வகையில் திசை திரும்புவதை இயக்குநர் குறியீடாகச் சொல்ல விரும்பினாரா என்பது தெரியவில்லை. இதுபோன்ற பிசிறுகளைத் தவிர்த்திருந்தால், இத்திரைப்படம் முழுமையை நோக்கி பெரும்பான்மையாக நகர்ந்திருக்கும். பாத்திரங்களின் அறிமுகம் உள்ளிட்ட முதல் பாதியின் பல காட்சிகளை இன்னமும் சுருக்கியிருக்கலாம்.

மொழி எல்லையைக் கடந்திருப்பதாலும், சூழலியல் சார்ந்து உலகளாவிய பிரச்னையை உறுத்தாமல் உரையாடியிருப்பதாலும், சர்வதேச அளவில் ஒரு முக்கியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது, ‘மெர்க்குரி’.

http://www.dinamani.com/cinema/movie-reviews/2018/apr/21/கார்த்திக்-சுப்பராஜின்-மெர்க்குரி---சினிமா-விமரிசனம்-2904693--2.html

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: 'மெர்க்குரி'- வேற லெவல்

 

 
downloadjpg

திரைத்துறையின் நீண்ட வேலை நிறுத்துக்கு பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'மெர்க்குரி'. இப்படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

 

பச்சைமால்

‏இரவு தூக்கத்தை திருடிவிட்டது

அந்த கார்ப்பரேட் கம்பேனி மேல கல் அடிக்கிறது சூப்பர்

Arul Sellvam

‏இந்துஜா உடலுக்குள் புகுந்து தன்னுடைய கடைசி ஆசைகளை தீர்க்கத் தெரிந்த பிரபுதேவாவின் ஆவிக்கு தன் நிலைக்கு காரணமான ஐவரையும் கொல்ல நினைக்கையில் அந்த ஐவரில் யாராவது ஒருவரின் உடலுக்குள் புகுந்து இலகுவாய் பழிதீர்க்கத் தெரியாமல் போனதின் காரணம் என்ன? #டவுட்டு #Mercury

yUvi   D for DhanUsh

‏காப்பர் வேண்டாம் மீத்தேன் வேண்டாம் என சத்தமாகப் போராடுகிறோம். ஆனால் அதன் ஆபத்தையும் தாக்கத்தையும் எதிர்ப்பையும் சத்தமில்லாமல் சொல்லி விட்டீர்கள் கார்த்திக்  சுப்பாராஜ்.

Bharath Pasapugazh

‏ஒரு மனுஷன் இப்படியும் யோசிக்க முடியுமானு பார்த்து வியந்த படம் #Mercury  

Ahamed K Rifai

‏#Mercury ஒரு ஹவுஸ்புல் காட்சியில் திரையரங்கில் ரசிகர்கள் உட்பட நடிகர்களும் பேசாமல் பார்த்த முதல் படம்..  அற்புதமான முயற்சி.. நுணுக்கமாக ஒளிப்பதிவு,இயக்கம்..  மிரள வைக்கும் இசை, நடிப்பு..  தேசிய விருது பெற வாழ்த்துகள்..  @karthiksubbaraj & team 

@subbu53

@karthiksubbaraj படத்தில் சில குறைகள் இருந்தாலும் அடுத்தடுத்து பல நிறைகள் வந்து அவற்றை ஒன்றில்லாமல் ஆக்குகிறது.ஆரம்பத்தில் பீத்தோவனை பற்றி சொன்னது சிறப்பு.மொத்தத்தில் #mercury பேசாபடமாக மட்டுமில்லாமல் சமூக அவலங்களை எடுத்துரைக்கும் விதமாக உள்ளது.Veralevel sir. 

Rockstar AK™      

‏சைலன்ட் ஃபிலிம் என்பது நமக்கு தியேட்டர்ல ஒரு ஃபர்ஸ்ட் டைம் எக்ஸ்பீரியன்ஸுன்றதால ஆரம்பிச்சப்ப கொஞ்ச நேரம் இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு.. ஆனா கதை நகர்ற Pace கொஞ்சம் தொய்வா ஃபீல் பண்ண வைக்குது..அதேபோல ரொம்ப Easily Predictable ஆ தான் கதை நகருதுன்றது ஒரு ஏமாற்றம்..Let's see

sathiz vijay

‏@karthiksubbaraj சார் இது போல ஒரு படம் என் வாழ்க்கையைப் பார்த்ததும் இல்ல பார்க்கப் போறதும் இல்ல #Mercury sema

SURESH EAV

‏சத்தமே இல்லாத உலகப் படத்துக்கு எதுக்கு பாஸ் சப்டைட்டில் ,  இல்லை சப்டைட்டில் போட்டாத்தான் படம் புரியுற அளவுக்கு எடுத்து வச்சிருக்கிங்களா  , சைலன்ட் படத்துல சப்டைட்டில் போட்டு இப்பத்தான் பாக்குறேன்

VIJAY R

‏#மெர்க்குரி @karthiksubbaraj    உங்களின் திறமைக்கு முதலில் தலைவணங்குகிறேன். வசனம் இல்லை பின்னணிஇசையில் சென்றாலும் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தை கொடுக்கவில்லை மாறாக ஓர் சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளது .வாழ்த்துக்கள் குருவே.

FяєԀԀiєVJ

‏லவ் பண்ணா பேயடி வாங்கி தான் சாகணும்.

சித்ரா தேவி

‏கண் தெரியாத ஒருத்தர் இறந்து பேய் ஆகிட்டா அந்த பேய்க்கும் கண் தெரியாதா ? #மெர்குரி

Kamalakannan

‏நம் புலன்களை மலடாக்கி, நம் குரல்வளைகளை நசுக்கும் நம்முடைய சரியான எதிரிகளை கண்டடைவோம். வாழ்த்துகளும் நன்றிகளும்

AKⅈℒAℕ

‏#Mercury அருமை சகோதரன்  ஒளிப்பதிவு,இயக்கம்..  மிரள வைக்கும் இசை, நடிப்பு.. 

ASRohithKingstonBaba

‏திரையரகுங்களில் பேசாமலே ஜெயிச்ச #மெர்குரி

DbS02gfUwAATFpUjpg
 
 

http://tamil.thehindu.com/opinion/blogs/article23627155.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.