Jump to content

கடைசி கடுதாசி - சோம.அழகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

                                                               கடைசி  கடுதாசி

 

அன்புள்ள  அமுதினிக்கு,

                         அன்றைய திகதி நினைவில்லை. அன்று ஏன் எனக்கு மட்டும் புது பட்டுப் பாவாடை சட்டை அணிவித்து காலையிலேயே எனக்குப் பிடித்த பருப்புக் குழம்பு செய்திருந்தாய்? “ஆறு வயசாயிட்டது…. இனியெங்கிலும் அவளை ‘அம்மா’ எண்டுதான் விளிக்க வேணும். சரி தன்னே?’ என்று மாமி என்னைப் பார்த்துக் கூறவும், “பரவாயில்லை ! அவளுக்கு எப்படி இஸ்டமோ அப்படியே விளிக்கட்டும்” என்றாயே? நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்ததை அவ்வளவு ரசித்தாயா? நாம் நட்டு வைத்த செடியில் கொத்துக் கொத்தாய்ப் பூக்கள் பூத்தது, அண்ணன் (அவனது பெயர் ஏன் எனது நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது?) ஒரு கொத்தைப் பறித்து அதில் ஒரு பூவின் நடுவில் இருந்த மெல்லிய நார் போன்ற ஏதோ ஒன்றை உருவி எனது நாக்கில் வைத்தது, அதன் சுவையைச் சரியாக உள்வாங்கி இனிப்புதான் என உறுதிபடுத்தும் முன்பே மாமி வந்து, ‘முதல் பூ சாமிக்குத்தான் வைக்க வேணும். இல்லையெண்டா சாமி கோவிச்சுப்போடும்’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டது, மாமி வீட்டில் இருக்க நாம் கோவிலுக்குச் சென்று திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் இடிபாடுகளுக்கிடையில் குசினியில் பருப்புக் குழம்பு சிதறியிருக்க ஓர் ஓரமாய்க் கிடந்த மாமியைப் பார்த்து ‘சாமியிடம் சென்று விட்டாள்’ என்று நீ அழுதது, என்னையும் அண்ணனையும் அழைத்துக் கொண்டு வெகு தூரத்திற்கு நீ ஓடியது – தெளிவாக இல்லையென்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலைந்து கிடக்கும் நினைவுகளைச் சரியாக ஒட்ட வைத்திருக்கிறேன் என நம்புகிறேன். நாம் அனைவரும் கடைசியாகக் களித்திருந்த அந்த நாள்தான் எனது பிறந்தநாளா? அதெப்படி வீட்டிலிருந்து கோயிலுக்குச் சென்று வந்த அந்த சிறிய நேர இடைவெளியில் வீடு நாடு இரண்டும் அற்றவர்களாகிப் போனோம்?

 

                        ராஜா நிதானமாக நின்று கொன்று குவித்துவிட்டான். தெய்வம் அன்றே கொன்றதோ? அந்தப் பெயர் அறியா பூவின் தேனை முதலில் சுவைத்ததற்குத்தான் சாமி அன்றைக்கே உன்னை என்னிடம் இருந்து பிரித்து விட்டதா? தன்னை யாரென்றே தெரியாதவர்களைக் கூட பழிவாங்கும் (ஓரு வேளை தெரிந்து கொள்ளாததற்குத்தான் இந்த தண்டனையோ?) சாமியை எனக்கு எவ்வாறு புரிய வைக்கப் போவதாக உத்தேசம்?

 

                        சுற்றி இருந்தவர்களையும் சுற்றி நடப்பவற்றையும் புரிந்து கொள்ள இயலா அந்த வயதில் நான் இங்கு கொண்டு வரப்பட்ட போது ரோஸி அக்காவும் அமலா பாட்டியும் என்னை அவர்களோடு இணைத்துக் கொண்டார்கள். கடந்த பத்து வருடங்களாக ஒரே அறையில் சமைத்து உண்டு உறங்கி உயிரோடு இருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் உயிரோடு வைக்கப்பட்டிருக்கிறோம். அவ்வப்போது வெளிநாடுகளிலிருந்து வரும் சிலர் இங்கு செய்து தரப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். அவர்களுக்குக் காட்சிப் பொருட்களாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

            ஊரெல்லாம் சிதற அலறி ஓடவிட்டு

           பேரினை நீக்கி அகதியெண்டு பெயரிட்டு

           முள்வேலி முகாம்களில் அடைத்திட்டு – அவரவர்

           பணிகளில் மூழ்கி நினைப் பொழிந்தாரே !  

உயிரற்ற பிணங்களுக்கும் உயிரோடிருக்கும் அகதிகளுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை.

 

            உணவு, நீர், கழிப்பறை – மற்றவர்களைப் போல் புறவசதிகள் குறித்த புகார்கள் என்னிடம் இல்லை. புகார் சொல்ல விவரம் போதாத வயதிலேயே இவ்வாழ்க்கைக்குப் பழகிப் போனது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த மனதைத் துவண்டு போகாமல் பார்த்துக் கொள்வதுதான் கொடுமையானதாக இருக்கிறது. நான் இங்கு வந்த புதிதில் திறந்தவெளியில் மயக்க மருந்தில்லாமல் நடைபெற்ற பல அறுவை சிகிச்சைகளை அவ்விடத்தை நிறைத்திருக்கும் குருதியின் நெடி வரவழைக்கும் குமட்டலையும் மீறி பார்த்திருக்கிறேன். ‘வலி உயிர் போகுதே !’ என்று துடிதுடித்தவாறே சாமியிடம் சென்றுவிட்ட கால் துண்டாகிப் போன அம்மனிதரின் ஓலம் என் காதுகளில் தங்கிவிட்டது. உடல் துண்டாகிப் போன வலியில் மட்டும்தான் உயிர் போகுமா ? மனது பல துண்டுகளாகிப் போன வலியில் எல்லாம் உயிர் போகாதா ? காலமும் சூழலும் மாறுபடுவதற்கான இந்தக் காத்திருப்பு தந்த பொய்யான நம்பிக்கை இனியும் கைகொடுக்காது. இத்தனை வருடங்களும் இந்த உப்பு சப்பில்லாத நம்பிக்கையை மனது ஏற்றுக் கொண்டதற்குக் காரணமே உயிரை மாய்த்துக் கொள்ளும் துணிவின்மைதான். இப்போது துணிவிருந்தும் அளவிற்கதிகமான கெடுபிடிகள் இறுக்குகின்றன. ஒவ்வொரு விடியலையும் ரீங்காரமிடும் பூச்சிகளோடும் கானமிடும் குயில்களோடும் தொடங்குவது, குழந்தைகளுடன் விளையாடுவது, அக்கம் பக்கத்தினருடன் கதைத்துக் கொண்டிருப்பது, விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு நினைவுக் குழியில் சேமிக்கப்பட்டு புதைந்து கிடக்கும் உங்களுடனான கொஞ்சமே கொஞ்சம் தருணங்களை மீட்டெடுக்க முயல்வது, இரவான பின் வான விரிப்பில் நட்சத்திரங்களை எண்ணியும் நிலாவை ரசித்தும்/ரசிக்க முற்பட்டும் உறக்கத்தோடு மல்லுக்கட்டுவது – இங்குள்ள அடக்குமுறைகளுக்குட்பட்டு மனதை உயிரோடு வைத்திருக்க உதவும் அத்தனை முயற்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்று வருகின்றன. தனது வெளிச்சத்தில் நடந்தேறிய அத்தனை கொடூரங்களைக் கண்ட பிறகும் கள்ள மௌனம் சாதிக்கும் இந்நிலா, இம்முள்வேலியினுள் பூக்களாய் வளைய வரும் பிஞ்சுகளின் உணவு நேரத்தில் மட்டும் அவ்வப்போது எட்டிப்பார்த்து குற்றவுணர்வில் குறுகுறுக்கிறது. இயற்கையின் படைப்பில் மரணம் என்பது அவரவர் கட்டுப்பாட்டில் இல்லாதது கொடுஞ்சாபம். ‘இந்த வாழ்க்கை போதும்’ என்று முடிவெடுக்கவும் எனது முடிவைத் தேடிக் கொள்ளும் உரிமையும் கூட மற்ற உரிமைகளைப் போல் மறுக்கப்படுகிறது. முள்வேலிக்கு அந்தப் புறம் நின்று ‘தன்னம்பிக்கை வகுப்புகள்’ எடுப்பவர்கள் மீது எழும் பரிதாபத்தை நமட்டுச் சிரிப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ‘எதுவும் மாறப்போவதில்லை’ என்னும் நிதர்சனத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் மனது இவ்வளவையும் மீறி ஒவ்வொரு முறையும் ‘இந்த நிலை மாறும்; இதுவும் கடந்து போம்’ என்று ஏமாற விழையும் விநோதம்தான் புரியவில்லை.

 

                        அவ்வப்போது இங்குள்ளவர்கள் காணாமல் போவது வாடிக்கையான ஒன்றாகிப் போனதால் அமலா பாட்டி காணாமல் போன பிறகு யாரிடமும் நெருக்கம் காட்டாமலேயே இருக்கிறேன். காணாமல் போனவர்கள் வேறு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறி ‘அவர்கள் உயிரோடுதான் இருப்பார்கள்’ என்பதைச் சொல்லாமல் சொல்லி ஆறுதலுரைக்க முற்படுகிறாள் ரோஸி அக்கா. சில மாதங்களுக்கு முன்பு நான்கு தொப்பிக்காரர்கள் ரோஸி அக்காவை இழுத்துச் சென்றார்கள். அவளும் காணாமல் போய்விட்டாள் என நினைத்துக் கொண்டிருந்த இரண்டாம் நாள்  அவளைக் கொண்டு வந்து போட்டார்கள். ஒரு வாரம் உடம்பிற்கு முடியாமல் அழுதுகொண்டும் அனத்திக் கொண்டும் கிடந்தவளைச் சுற்றி இருப்பவர்கள் கவனித்துக் கொண்டார்கள். கொஞ்சம் சகஜமான நிலைக்குத் திரும்ப ஆரம்பித்ததும் அவள் செய்த முதல் காரியம், அமலா பாட்டி எங்களுக்குக் கட்டி விட்ட மார்கச்சைகளை அதிக இறுக்கத்துடன் எனக்குக் கட்டி விட்டதுதான். வலி தாங்க இயலாது ரோஸி அக்காவிடம் சென்று நின்ற போது , “இன்னும் எத்தன நாளைக்கு ஒன்ன இப்படிக் காப்பாற்ற இயலும் எண்டு தெரிய இல்ல. அது வரை இந்த வலிய கொஞ்சம் தாங்கிக்கத்தான் வேணும். இது ஒண்டும் அவ்ளோ பெரிய வலி இல்ல தங்கச்சி” என்று என்னைக் கட்டியணைத்து உச்சந்தலையிலும் முகத்திலும் கண்ணீர்த்துளிகளைத் தெளித்தாள். இன்னும் சிறிது நாட்களில் அவளுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. ஒரு புத்தம் புது உயிரை இவ்வுலகிற்கு வரவேற்கும் ஆர்வமோ அதற்கான கொண்டாட்ட மனநிலையோ அவளிடம் மட்டுமல்ல, வேறு யாரிடமும் இல்லை. யாருக்குமே வேண்டாத ஓர் உயிராகப் பிறக்கப் போகும் அந்தப் பாப்பாவையும் என்னை உயிராய் நினைத்த இன்னும் நினைத்துக் கொண்டிருக்கும் உன்னையும் நினைத்து ஓரளவு ஆறுதலடைகிறேன்.     

 

                            அப்பாவைப் பற்றி நான் கேட்க ஆரம்பிக்கும் வயது வரும் முன்னரே பிரிந்துவிட்டோம். ஒருவேளை அப்பாவை எதிரில் காண நேர்ந்தால் எவ்வாறு அடையாளம் காண்பேன்? நான் இப்போது உன்னைப் போல் இருக்கிறேனா ? அப்பாவைப் போல் இருக்கிறேனா? நீ கனடாவிலோ ஆஸ்திரேலியாவிலோ நலமாய் இருக்க வேண்டுவதாய் ரோஸி அக்காவிடம் நான் கதைத்த போது அவள் ஒருபடி மேலே சென்று, “எனது பெற்றோர் உயிரோடு இருப்பின் வெளிநாடுகளில் இருக்கட்டும். இம்மண்ணில் எனில் மண்ணுள் இருக்கட்டும்” என்றாள் இங்கு நிலவும் சூழலை நினைத்து அழுதுகொண்டே. ஒரு நாள் நமது வீட்டில், ஏதோ ஒரு செடியின் கன்றை எனது கைகளில் தந்து எனது கைகளை உனது கைகளுக்குள் கொணர்ந்து, “ஏதாவது கதைத்துக் கொண்டே செடி நட்டால் நன்றாக வளர்ந்து அழகழகாய்ப் பூக்கும், மகளே !” என்று என்னைக் குயிற்றும்படி பணித்தாய். அப்போது அப்படி நான் என்ன சொன்னேன் என்று வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தாய் ? அன்று செடியை நட்ட பிறகு உனது கைகளில் அப்பிக் கிடந்த மண்ணின் மணத்தையும் எனது வாசத்தையும் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து இப்போதும் நினைவு கூர்ந்து நுகர முயன்று விழியோரம் நீர் கோர்க்கிறாய் என உறுதியாய் நம்பலாம்தானே? ஒரு நேரம் நீ உயிரோடு இருப்பதாகத் தோன்றுகையில் உடனே உன்னைக் காண வேண்டுமெண்டு பாசத்தில் அழுகிறவள் மற்றொரு நேரம் நீ இருக்கிறாயா இல்லையா என்ற கேள்வியின் விடையை நினைத்து பயத்தில் அழுகிறேன். ஆனால் ஒரு போதும் நீ இல்லாத ஓர் உலகை நினைத்துப் பார்க்கும் வலிமையை மட்டும் பெற்றதே இல்லை. அவ்வலிமை எனக்கு வேண்டவும் வேண்டாம்.

 

                        அப்பா, அண்ணன், மாமி, நீ, நான் – அனைவரும் ஒரே வீட்டில்……. சரி, வேண்டாம் ! ஒரே முகாமில் மகிழ்ச்சியாக…….. இல்லை! அனைவரும் ஒரே முகாமில் சேர்ந்திருந்தாலே போதும். அதுவே மகிழ்ச்சிதான். பதினாறு வயது நிரம்பிய ஒரு சாதாரண பெண்ணுக்கு இதுவே பெருங்கனவாகிப் போனது ஏன்? இங்கு இருப்பவர்கள் இதைக் கேட்டு, “ஒனக்கு ரொம்பத்தான் பேராசை” என்று பகடி செய்கிறார்கள். சுற்றி நடப்பவை ஏதோ அரைகுறையாகப் புரிகிறது. முழுவதுமாய்ப் புரிந்து கொள்ளும் முனைப்பு இல்லை. புரிந்தவற்றில் இருந்து ஒரு கேள்வி – “நாம் தமிழல்லாமல் மலையாளமோ மராத்தியோ பேசுபவர்களாக இருந்திருந்தால் உதவி கிட்டியிருக்குமோ?”

 

                        இத்தனை காலமாக நான் எழுதிய பல மடல்களை, கூடிய விரைவில் விடிவுகாலம் வரப்போவதாய் நினைத்து நம்பிக்கையோடு நிறைவு செய்திருந்தேன். ஒவ்வொரு நாளையும் பொழுதையும் கொல்வதற்கு வழி தெரியாமல் கழித்த நீண்ட நெடிய இந்த பத்து ஆண்டு காலகட்டத்திற்கும் எனது வயதிற்கும் இதற்கு மேல் என்னிடம் தன்னம்பிக்கையை எதிர்ப்பார்ப்பது நியாயமல்ல. நமது இந்நிலைக்காக யார் மீதும் கோபப்படும் மனநிலை கூட இல்லை. உணர்வுகள் அனைத்தையும் உருவி வெளியே போட்டுவிட்ட இவ்வாழ்க்கையை முழுவதுமாய் உணர வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். இந்த முகாமில் ஒரு விசித்திரத்தைக் காண்கிறேன். ஆரம்பத்தில் ‘உறவுகளைக் கண்டு மீண்டும் கூடி களித்து கதைக்கப் போகிறோம்’ என்று நம்பிக்கையுடன் இருந்த பலரில், இப்போது தாய்மார்கள் மட்டுமே, ‘பிள்ளை கட்டாயம் வருவான்/ள்’ என்று உறுதியுடனும் இன்னும் அதிகமான நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். நீயும் அப்படித்தானா? எனில், ‘நான் இங்குதான் இருக்கிறேன்’ என்று எட்டு திசைகளையும் நோக்கி நான் உரக்கக் கத்தினால், என்னைக் கண்டடைந்து எனது மனதிற்கு உயிரூட்டி நான் உயிரோடு இருப்பதற்கான காரணியாகி, நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமைகளோ அதன்பின் இருக்கும் அரசியலோ எனக்கு முழுமையாகப் புரியாதபடி பார்த்துக்கொள்வாயா? உன்னிடம் மீண்டும் குழந்தையாகிப் போகவே விரும்புகிறேன். அமுதினியின் கையால் மீண்டும் அமுதுண்ண வாய்க்குமா? 

 

           மனதின் ஆழத்தில் ஒன்றிரண்டு சொட்டுக்களென கிடக்கும் உணர்வுகளும் இக்கடிதத்தின் இறுதி முற்றுப்புள்ளியோடு முற்றிலுமாக வறண்டு விடும்போல இருக்கிறது. அநேகமாக இதுதான் நான் எழுதும் கடைசி கடுதாசியாக இருக்கும் என நினைக்கிறேன். உனது வடிவான முகம் மெல்ல மெல்ல மறக்கத் தொடங்குகிறது. உனது முகம் மறைய மறைய இனம் புரியாத பயம் (பயத்திற்குக் கூட ‘இனம்’ புரியவில்லை!) மனதை நிரப்பிக் கொண்டே போகிறது. ‘அம்மா’ – இச்சொல்லை என் குரலில் நானே கேட்பதற்கான சூழலும் வாய்ப்பும் அமையுமா? முதலும் கடைசியுமாக  ஒரு முறையேனும் எழுத்திலாவது உன்னை விளித்துக் கொள்கிறேன்…….. “அம்மா!”

 

                                                                        இன்னமும் உனக்காக உயிரோடு இருக்கும்  

                                                                                                உனது  மகள்

                                                                                                     ஆதிரை.

 

-       சோம. அழகு

நன்றி  திண்ணை, 19 டிசம்பர் 2017.          

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனசைப் பிறாண்டும் ஒரு மடல் ...... போர்களில் இறந்தவர்களைவிட வாழ்பவர்கள்தாம் வலிகளின் சுமைதாங்கிகளாய் வாழ்ந்து மடிகின்றார்கள்.....! 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.