Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிக்கல் நிக்கல் சல் தேரே - இணையத்தில் தெறிக்கும் 'காலா' பாடல்கள்

Featured Replies

நிக்கல் நிக்கல் சல் தேரே - இணையத்தில் தெறிக்கும் 'காலா' பாடல்கள்

நிக்கல் நிக்கல் சல் தேரே - இணையத்தில் தெறிக்கும் 'காலா' பாடல்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' திரைப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் தனுஷ் இன்று காலை வெளியிட்ட நிலையில், ரஜினி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன் ஆகியோரின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

மூன்று மொழிகளில் 'காலா'

 

திரைப்பட நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் 'காலா' திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாரித்துள்ளார். இன்று காலை, தமிழுடன் சேர்த்து தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களையும் அவர் வெளியிட்டார். இதற்குமுன், அவர் யு டியூப் தளத்தில் வெளியிட்ட காலா படத்தின் 'செம்ம வெயிட்டு' என்ற பாடலை தமிழில் 30 லட்சம் பேரும், தெலுங்கு மற்றும் இந்தியில் 2 லட்சத்திற்கும் அதிகமானோரும் கண்டு களித்துள்ளனர்.

எட்டு பாடல்கள் வெளியீடு

நிக்கல் நிக்கல் சல் தேரே - இணையத்தில் தெறிக்கும் 'காலா' பாடல்கள்

இன்றைய தினம், காலா திரைப்படத்தில் இடம்பெறும் செம்ம வெயிட்டு பாடல் உள்பட 9 பாடல்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளார் தனுஷ். டோப்படிலீக்ஸ், அருண்ராஜா காமராஜ், லோகன், கபிலன், ரோஷன் ஜேம்ராக், உமா தேவி, அறிவு ஆகியோர் காலா படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர்.

நிக்கல் நிக்கல் பாடலுக்கு வரவேற்பு

நிக்கல் நிக்கல் சல் தேரே - இணையத்தில் தெறிக்கும் 'காலா' பாடல்கள்

புதிதாக வெளியிடப்பட்ட 8 பாடல்களில் நிக்கல் நிக்கல் பாடல் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. டோப்படிலீக்ஸ் மற்றும் லோகன் இதற்கு வரிகளை எழுதியுள்ளனர். யு டியூப் தளத்தில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேலானோர் இதனை பார்த்துள்ளனர். உரிமை மீட்போம், கற்றவை பெற்றவை, போராடுவோம் போன்ற பிற பாடல்களிலும் வரிகள் அரசியல் சாயலோடு இருக்கின்றன. காலா திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜெயக்குமார்

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் காலா படத்தின் பாடல்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், காலா போன்ற காளான்கள் எல்லாம் காணாமல்தான் போவர்கள் என்றும், இன்று ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதால் ஞானம் வந்துவிடாது என்றும் தெரிவித்தார். அமைச்சரின் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் பலரும் இணையத்தில் மீம்ஸ்களை பதிவிட்டு பதிலளித்து வருகின்றனர்.

 

https://www.bbc.com/tamil/india-44051913

 

  • தொடங்கியவர்

‘காலா’ பாடல்கள் வெளியீடு!

 

 
kaala_music1xx

 

கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று மாலை காலா படப்பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

 

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/may/09/kaala-tamil---official-jukebox-2916404.html

  • தொடங்கியவர்

`காலாவில் அரசியல் இருக்கும்; ஆனால் அரசியல் படமல்ல!’ - இசை வெளியீட்டு விழாவில் கலகலத்த ரஜினி

 
 
Chennai: 

காலா அரசியல் படம் அல்ல; ஆனால் காலா படத்தில் அரசியல் இருக்கிறது எனப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.  

காலா இசை வெளியீட்டு விழா

 

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி - பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காலா. ரஜினியுடன், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடல்களை நடிகர் தனுஷ் இன்று காலை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

WhatsApp_Image_2018-05-09_at_6.46.17_PM_

இந்தநிலையில், காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காலா படக்குழுவினரோடு, திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அதேபோல், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திரண்டனர். 

WhatsApp_Image_2018-05-09_at_6.46.13_PM_

விருந்தினர்கள் அனைவரும் வந்தபிறகு கடைசியாக மைதானத்துக்கு வந்த ரஜினி, ஒளிப்பதிவாளர் முரளியின் மகனுடன் சிறிதுநேரம் அளவளாவிட்டுச் சென்றார். நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார். காலாவின் நிறம் கறுப்பு என்பதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக இயக்குநர் ரஞ்சித் உள்பட பெரும்பாலானோர் அந்த நிறத்திலேயே உடையணிந்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக தாராவி செட் அமைக்கப்பட்ட விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதன்பின்னர், படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநர் சாண்டி, தனது குழுவினரோடு நடனமாடினார். அதன்பின்னர், காலா படத்தின் ஒளிப்பதிவாளர் முரளி, கலை இயக்குநர் ராமலிங்கம், பாடலாசிரியர்கள் கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் மேடையேறினர். அவர்களிடம் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து திவ்யதர்ஷினி கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய பாடலாசிரியர் உமாதேவி, `கல்வியோ, சினிமாவோ, அரசியலோ எதுவும் விளிம்புநிலை மக்களுக்குச் சென்று சேர வேண்டும்’’என்றார். படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனது குழுவினருடன் லைவ் பெர்ஃபார்ம் பண்ணினார். 

அதன்பின்னர் மேடையேறிய பா.ரஞ்சித், படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். மேலும், அவர் பேசுகையில், ``ரஜினி சாருக்கு பவர்ஃபுல்லான வாய்ஸ். அதை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன் என நினைக்கிறேன்’ என்று கூறி அமர்ந்தார். தயாரிப்பாளர் தனுஷ் பேசுகையில், ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்துப் பேசினார். தொழில் மீதான ரஜினியின் பக்தியைக் காலா படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் தெரிந்துகொண்டதாகக் கூறிய தனுஷ், தயாரிப்பாளருக்கு அவர் அளிக்கும் மரியாதை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். 

rajini_21158.jpg

 

இறுதியாக மேடையேறிய ரஜினி, ``இது இசை வெளியீட்டு விழாபோல் இல்லை. படத்தின் வெற்றி விழா போல் இருக்கிறது’’ என்று கூறி வழக்கமான நக்கல், நையாண்டியுடன் பேச்சைத் தொடர்ந்தார். சிவாஜி பட வெற்றி விழா குறித்து பேசிய ரஜினி, அந்த விழாவில் கலைஞர் பேசிய விஷயங்களை மறக்க முடியாது. 75 ஆண்டுகளாக ஒலித்த அந்தக் குரலைக் கேட்க தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த மக்களில் நானும் ஒருவன். விரைவில் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும் என ஆண்டவனை நான் வேண்டிக் கொள்கிறேன்’’ என்றார். சிவாஜி வெற்றி விழா தொடங்கி, காலா படத்தின் ஷூட்டிங் முடிந்தது வரை விரிவாகவே ரஜினி பேசினார். இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ், ஒளிப்பதிவாளர் முரளி எனப் படக்குழுவினரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர் பாராட்டினார். மேலும் அவர் பேசுகையில், கோச்சடையான் படத்தின் மூலம் புத்திசாலிகளுடன் மட்டுமே பழக வேண்டும், ஆலோசனைகள் கேட்க வேண்டும். அதி புத்திசாலிகளுடன் பழகக் கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். லிங்கா படத்திலிருந்து நல்லவனாக இருக்க வேண்டும், ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது என்ற பாடத்தை கற்றுக் கொண்டேன்’ என்றார். அதேபோல், இமயமலைக்குப் போவதே கங்கையைப் பார்க்கத்தான். சில இடங்களில் மௌனமாகவும், சில இடங்களில் ரெளத்ரமாகவும் கங்கை நடமாடிக்கொண்டும் போகும். நதிகள் இணைப்பு என்பதே என் நீண்டநாள் கனவு. குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளையாவது இணைக்க வேண்டும். அது நடந்த மறு கணமே நான், இறந்தால் கூட கவலை இல்லை’’ என்றார். காலா படத்தில் அரசியல் இருக்கும், ஆனால் அது அரசியல் படம் இல்லை என்று குறிப்பிட்ட ரஜினி, இதுவரை தனக்கு அமைந்த வில்லன் கேரக்டர்களில் எனக்குச் சவால் அளித்த கதாபாத்திரங்கள், பாட்ஷாவின் ஆண்டனி மற்றும் படையப்பாவின் நீலாம்பரி கேரக்டர்கள். அந்த கேரக்டர்கள் வரிசையில் காலாவில் நானா படேகரின் கதாபாத்திரம் நிச்சயம் இடம்பெறும் என்று குறிப்பிட்டார். அரசியல் வருகை குறித்து ரஜினி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றதுடன், விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும்’ என ரஜினி பேசினார்.

https://www.vikatan.com/news/cinema/124604-kaala-audio-release-function-held-in-chennai.html

  • தொடங்கியவர்

நேற்று சூப்பர் ஸ்டார்.. இன்று தலைவர்.. நாளை..? -காலா விழாவில் தனுஷ் அதிரடி பேச்சு!

 
 

ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் இரண்டாம் முறையாகக் களம் இறங்கியுள்ள 'காலா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.

ரஜினியின் அரசியல் பிவேசத்திற்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்பதாலும், ஒடுக்கப்பட்டோருக்கு குரல் கொடுத்து வரும் ரஞ்சித் மீண்டும் ரஜினியை வைத்து  இயக்கும் படம் என்பதாலும் பெருத்த எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்து வருகிறது.

 

இந்நிலையில் இன்று பல எதிர்ப்பு மற்றும் அதிருப்திக்கு மத்தியில் நடந்த இந்தப் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அரசியல் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு முன்னர் பேசிய தனுஷ் அதற்கான டீசர் காட்டும் வகையில் பேசினார். 


 காலா


தனுஷ், "தலைவருக்கு(ரஜினி)  புகழ்ந்தால் பிடிக்காது. அதனால அவரிடம் கத்துக்கிட்ட சில விஷயங்களைப் பகிர்கிறேன்" என்று ஆரம்பித்தார். "படத்தின் கடைசி நாள் 11.30 மணிக்கு முடிய வேண்டிய ஷூட்டிங் 2.30 மணி வரை நீண்டது. அப்போதும் முதல் படத்தில் வேலை செய்வதுபோல அவர் காட்டிய தொழில் பக்தியை, அப்போது கற்றுக்கொண்டேன். இந்தக்  கதையை ரஞ்சித் அவரிடம் சொல்லும்போது தயாரிப்பாளரிடமும் கதையைக் கூறுங்கள் என்று சொல்லும்போது தயாரிப்பாளரை மதிக்கும் பண்பை கற்றுக்கொண்டேன். 

வாழ்க்கையில் பிரபலமாவதற்கு இரண்டு வழி இருக்கு. ஒண்ணு கஷ்டப்பட்டு முன்னேறி பெரிய இடத்தை அடைவது மற்றொன்று அந்த இடத்தில் இருக்கும் ஒருவரைத்  தாக்கி பேசி பிரபலம் அடைவது.(தனுஷ் இதைக் கூறும்போதே அரங்கம் அதிர்ந்தது). இப்படி 40 வருடங்களாக இவரால்(ரஜினி) வாழ்ந்தவர்களும், பிழைத்தவர்களும். இவரைப் பற்றி தவறாகப் பேசியும், பழுத்த மரம்தான் கல்லடி படும் என்று பொறுமையாய்  இருந்து வருகிறார். இதில் அவரது பொறுமையைக் கற்றுக் கொண்டேன்.

சமீபகாலமாகப்  பலரும்  மனது வருத்தப்படும்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களையும் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்கவேண்டுமா என்றேன். அதற்கு  அவர், " எல்லாரும் நண்பர்கள்தான் எல்லாரையும் கூப்பிடுங்கள்" எனச் சிரித்துக்கொண்டே கூறினார். இன்னா செய்தாருக்கும் நன்மை செய்து விடல் என்ற திருக்குறளுக்கு ஏற்ப வாழ்பவரிடமிருந்து பெருந்தன்மையும், மன்னிக்கிற குணத்தையும் கத்துக்கிட்டேன். 

காலா

முதலில் வில்லன், குணசித்திர நடிகர், பிறகு ஹீரோ, ஸ்டார், ஸ்டைல் மன்னன், சூப்பர் ஸ்டார், இன்று தலைவர் (அடங்க மறுக்கிற அரங்கத்தின் குரலோசை முடிவதற்குள்) நாளை உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன் என்று கூறினார். 

இறுதியாக, 'காலா' படத்தை தனுஷாக தயாரிக்கவில்லை 'பாட்ஷா' படத்தை முன் சீட்டில் உட்கார்ந்து பார்த்த ரசிகன் வெங்கடேஷ் பிரபுவாகத்தான் தயாரித்திருக்கிறேன்" என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/124613-in-kaala-audio-launch-dhanush-speech.html

  • தொடங்கியவர்

காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய 10 விஷயங்கள் என்ன?

நடிகர் ரஜினி காந்த் தனது திரைப்பட தோல்விகள், நதி நீர் இணைப்பு, அரசியல் கட்சி துவக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை புதன்கிழமை இரவு நடந்த காலா இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார்.

ரஜினி காந்த்படத்தின் காப்புரிமைAFP CONTRIBUTOR

''கருணாநிதி குரலை கேட்க வேண்டும்''

காலா திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் புதன்கிழமை நடந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ரஜினி, காலா இசை வெளியீட்டு விழாவை பார்க்கும்போது படத்தின் வெற்றி விழா போன்று இருக்கிறது எனச் சொல்லி கடந்த தசாப்தத்தில் அவரது திரைப்பட வெற்றி தோல்விகள் குறித்து பேசினார். பேச்சின் துவக்கத்திலேயே, திமுக தலைவர் கருணாநிதி குறித்து தனது பேச்சில் குறிப்பிட்டார்.

''கடைசியாக சிவாஜி திரைப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினேன். அதில் பெரியவர் டாக்டர் கலைஞர் கலந்து கொண்டு கௌரவித்து பேசினார். அவர் பேசிய விஷயத்தையும் குரலையும் என்றைக்கும் மறக்க முடியாது. 75 ஆண்டுகளாக தமிழகத்தின் மூலையெங்கும் ஒலித்த அவரது குரலை, தற்போது கேட்க தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். கூடிய விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன். ஆண்டவனையும் வேண்டிக்கொள்கிறேன்'' என்றார் காலா திரைப்பட நாயகன்.

சிவாஜி திரைப்படத்திற்கு பிறகு ரோபோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து வெற்றி விழா கொண்டாட விரும்பியதாகவும், ஆனால், உடல்நிலை மோசமானதால் சிங்கப்பூர் சென்று மருத்துவ உதவிகள் மூலமாகவும் ரசிகர்களின் பிரார்த்தனைகள், ஆசீர்வாதங்கள் மூலமாகவே பிழைத்து வந்ததாகவும் குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

ரஜினி காந்த்படத்தின் காப்புரிமைDHANUSH/FACEBOOK

கோச்சடையான் தோல்வி ஏன்?

'' உடல் விரைவில் குணமடைய வேண்டுமானால் மருத்துவர்கள் மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்க அறிவுறுத்தினார்கள். மனது கெட்டுப் போனால் உடல் கெட்டுப்போகும் என்றும் மனதுக்கும் உடலுக்கும் தொடர்பு உண்டு என கூறினார்கள். எனக்கு நடிப்பு தவிர வேறு வேலை தெரியாததால் மீண்டும் களமிறங்கினேன்'' என்று ரஜினி பேசினார்.

'' ராணா திரைப்பட வேலைகள் நடந்தபோதுதான் உடல்நலம் குன்றியது. ஒரு சில புத்திசாலிகள் ராணா திரைப்படத்தையே சற்று மாற்றி அனிமேஷனில் செய்யலாம் என்றார்கள். எனது மகள் சௌந்தர்யா அனிமேஷன், சிஜி துறையில் நிபுணர் என்பதால் ஏழு எட்டு நாட்களில் நடித்தால் போதுமானது என்றார்கள். ஆகவே, மீண்டும் நடிக்கத் துவங்கினேன். அது தொழில்நுட்பம் முழுமைபெற்ற காலகட்டம் இல்லை. காலதாமத்திற்கு, படம் முழுமையான தரத்துடன் வரவேண்டுமெனில் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகை செல்வாகும் என்றார்கள் அந்த அதிபுத்திசாலிகள்'' என்று அவர் தெரிவித்தார்.

'' அப்போது இத்தோடு நிறுத்திவிடலாம் என நான் சொல்லிவிட்டேன். ஏனெனில் எனக்கு இத்திரைப்படத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது. அவர்கள் சொல்லும் தொகையை பார்த்தால் படத்தின் பட்ஜெட் எங்கேயோ போயிருக்கும். ஆகவே தலை போவதற்கு தலைப்பாகை போனால் பரவாயில்லை என்றுதான் படத்தை வெளியிட்டேன். அது நன்றாக வசூல் செய்யவில்லை. ஆகவே வெற்றி விழா கொண்டாடவும் முடியவில்லை.

அப்படத்தில் நான் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். புத்திசாலிகளுடன் பழக வேண்டும். அதிபுத்திசாலிகளுடன் பழக கூடாது, அவர்களின் ஆலோசனையை கேட்கக் கூடாது. அதிபுத்திசாலிகள் பல யோசனைகளை செய்வார்கள். ஏனெனில் அவர்கள் இருக்கும் இடத்தில் பல கதவுகள், ஜன்னல்கள் மூடி இருக்கும். ஆனால் நேரம் வரும்போது ஓடிவிடுவார்கள் ஆகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என கோச்சடையான் திரைப்பட தோல்வியின் பின்னணியை விவரித்தார் ரஜினி.

தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்.

''நிறைய கதைகளுக்கு பிறகு லிங்காவின் கதை பிடித்திருந்தது. ஏனெனில் தண்ணீர் பஞ்சம், அணைப் பற்றிய கதை. எனக்கு தண்ணீர் என்றாலே எனக்கே தெரியாமல் ஒரு ஈடுபாடு வந்துவிடுகிறது. தண்ணியில்லாமல் மக்கள் கஷ்டப்படுவதால் நாயகன் அணை காட்டும் கதாபாத்திரம் அது''

'' நான் இமயமலைக்குச் செல்வதே கங்கையை பார்ப்பதற்குத்தான். சில இடங்களில் ரௌத்திரமாகவும், மெதுவாக நடனமாடியும், பின்னர் மௌனமாக போகும். ஆகவே, நதிநீர் இணைப்பு என்பது என் கனவு. தென்னிந்திய நதிகளை மட்டும் இணைத்து விட்டால் மறுநாளே நான் கண்ணை மூடிவிட்டாலும் எனக்குப் பரவாயில்லை'' எனப் பேசினார் ரஜினி.

ரஜினி காந்த்படத்தின் காப்புரிமைARUN SANKAR

''மகள் வயதையொத்த நடிகையுடன் டூயட் கிடையாது''

''தண்ணீர் பற்றிய கதை என்பதால் 'லிங்கா' உடனே செய்யலாம் என ஒப்புக்கொண்டேன். அது நான் நினைத்த அளவுக்கு போகவில்லை. இத்திரைப்படத்தின் மூலம் நான் இரண்டு விஷயம் தெரிந்துகொண்டேன். ஒன்று, நல்லவனாக இருக்கணும் ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது. அது திரைப்படத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி. ரொம்ப நல்லவனாக இருந்தால் அபாயமானது மேலும் கோழை என நினைத்து விடுவார்கள் !''

இரண்டாவது, எனக்கு 65 வயது. அதிகபட்சம் நாற்பது நாற்பத்தி ஐந்து வயதுடைய கதாபத்திரத்தில் நடிக்கலாம். 30-35 வயது நாயகனாக நடித்து என்னுடைய மகளுடன் சிறு குழந்தையாக வளர்ந்த எனது நண்பர் சத்ருகன் சின்ஹா மகளை ஹீரோயினாக எனது திரைப்படத்தில் நடிக்க வைத்தது சரியல்ல என உணர்ந்தேன். இத்தோடு இது போன்ற விஷயங்களை நிறுத்திவிட வேண்டும் என முடிவுசெய்தேன்.''

 

''ரஜினி முடிந்துவிட்டார் என்றார்கள்''

'' கோச்சாடையான் சரியாக போகவில்லை. அனிமேஷன் படமாகிவிட்டது. லிங்காவும் சிறப்பாக வெற்றி அடையவில்லை என்றவுடன், அவ்வளவுதான் ரஜினி முடிந்துவிட்டார் என்றார்கள். இது நாற்பது வருடமாக சொல்லிக்கொண்டே இருப்பதுதான். அவர்களையும் குறை சொல்வதற்கு இல்லை. ஏனெனில் அவர்களும் இக்குதிரை என்னடா ஓடிக்கொண்டே இருக்கிறது! எனப் பார்த்தார்கள்.

பத்து வருஷம் பாத்தாங்க, இருபது வருஷம் பாத்தாங்க, முப்பது வருஷம் பாத்தாங்க, நாற்பது வருஷமா ஓடிட்டே இருக்கிறதே எனப் பார்த்தார்கள். பொறாமை வரத் தானே செய்யும். வயிறெல்லாம் எரியத்தான் செய்யும்.

நான் என்ன செய்வது? நான் ஓட வில்லை. நீங்கள் தான் என்னை ஓட வைக்கிறீர்கள். ஆண்டவன் ஓட வைக்கிறார். அது அவர்களுக்கு புரிவதில்லை. நான் என்ன செய்வது? '' என தனது திரைப்பட வாழக்கை முடிவுக்கு வருவது மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்தார் ரஜினிகாந்த்.

செவிட்டு தவளை கதை

''நான்கு தவளைகள் ஒரு மலை ஏறவேண்டும். அவை ஏறத்துவங்கிய போது கீழே இருந்த மற்ற தவளைகள் மேலே தேள், பாம்பு இருக்கும் எனக் கூறின. கீழே உள்ள தவளைகள் கத்திக்கொண்டே இருந்ததில் மூன்று தவளைகள் மேலே இருந்து கீழே விழுந்துவிட்டன. ஒன்று மட்டும் மேலே சென்று விட்டது. எல்லாருக்கும் ஆச்சர்யம். காரணம் என்னவெனில் ஒரு தவளைக்கு மட்டும் காது கேட்காது. ஆகவே யார் என்ன சொன்னாலும் என் ரூட்டில் நான் போய்க்கொண்டே இருப்பேன்'' என தனது பாணியை விவரித்தார் ரஜினி.

ரஜினி காந்த்படத்தின் காப்புரிமைARUN SANKAR

ரஞ்சித்துக்கு வாய்ப்புத் தந்தது எப்படி?

''வயதுக்கேற்ற கதை, காலத்துக்கேற்ற கதை செய்ய வேண்டுமென முடிவெடுத்து அதற்கான கதைகள் கேட்கத் துவங்கினேன். சௌந்தர்யா பரிந்துரையின் பேரில் ரஞ்சித்திடம் கதை கேட்டேன்.

அவர் முழுமையான கதை தயாரிக்க 15 நாட்கள் வேண்டுமென்றார். ஆனால் சரியான நேரத்துக்கு வரவில்லை. சில நாட்களுக்கு பிறகு வந்து மீண்டும் சில நாட்கள் வேண்டுமென்றார். இதுவரை தயாரித்த கதையை சொல்லுங்கள் என்றேன். அவர் மறுத்துவிட்டார். '' உங்களுக்கு இது ஒரு படம், எனக்கு இது பெரிய வாய்ப்பு. எனக்கு முதலில் கதையில் நம்பிக்கை வரவேண்டும்'' என்றார். அவர் சந்தர்ப்பவாத்தியல்ல அவருக்குத் தன் மேல் நம்பிக்கை இருந்தது அப்போதே நான் இவர்தான் அடுத்த படத்துக்கான இயக்குநர் என முடிவு செய்தேன்'' எனப் பேசினார் ரஜினி.

''காலா அரசியல் படம் இல்லை''

''கபாலிக்குப் பிறகு அடுத்த திரைபபடத்தில் நடிக்க கதை கேட்டேன். வெற்றிமாறன் சொன்ன கதை அருமை. ஆனால் அரசியல் திரைப்படம். அப்போது எனக்கு அரசியலில் இறங்கும் எண்ணம் இல்லை. ஆகவே மக்களை குழப்ப ஆசைப்படவில்லை. எனவே இப்போதைக்கு வேண்டாம் என வெற்றிமாறனிடம் சொன்னேன்.

ரஞ்சித்தை மீண்டும் கூப்பிட்டேன். கதை இருக்கா என கேட்டேன் அவர் எனக்கான கதை இல்லை என்றார். நான் மும்பை தாராவி தமிழர்கள் குறித்து அவரிடம் சொன்னேன். திருநெல்வேலியில் இருந்து 80 வருடத்துக்கு முன்னர் அங்கே சென்ற தமிழர்கள் அங்கே உள்ளனர். முதலில் 80 - 85% மக்கள் அப்பகுதியில் தமிழர்களே பிறகு சுருங்கி சுருங்கி தற்போது 60 - 65% பேராக சுருங்கிவிட்டனர் என்றேன்.

கபாலி உங்களின் படம். காலா எனது படமாகவும் உங்களின் படமாகவும் இருக்க வேண்டும் என ரஞ்சித்திடம் கூறினேன்'' என்றார்.

ரஜினி காந்த் அரசியல் கட்சி துவங்கவுள்ளதாக கூறியுள்ள நிலையில், காலா அரசியல் நுழைவுக்கு முன்னோட்டமான படமாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் கருதி வந்த நிலையில் ''காலா அரசியல் படம் கிடையாது ஆனால் படத்தில் அரசியல் இருக்கும்'' எனத் தெளிவுபடுத்தினார் ரஜினி காந்த்.

ரஜினி காந்த்படத்தின் காப்புரிமைARUN SANKAR

''எனக்குச் சவாலான வில்லன்கள்''

எனது திரைவாழ்வில் எனக்குச் சவாலாக அமைந்த, எனது திரைப்படத்தில் நடித்த வில்லன்கள் இருவர்தான். ஒருவர் 'பாட்சா' ஆண்டனி, மற்றொருவர் 'படையப்பா' நீலாம்பரி. தற்போது 'ஹரிதாதா'. எனக்கே அவருடன் நடிக்க குஷியாகிவிட்டது என நானா படேகர் உடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த்.

''நேரம் வரும்''

ரஜினி அரசியல் கட்சி துவங்குவது குறித்து பேசுகையில் ''எனக்கு இன்னும் அரசியல் கட்சித்துவங்க தேதி வரவில்லை. கடமை இருக்கிறது. நேரம் வரும். நேரம் வரும்போது ஆண்டவன் ஆசிர்வாதத்தோடு மக்கள் ஆதரவோடு தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்ல நேரம் பிறக்கும்'' என்றார்.

https://www.bbc.com/tamil/india-44064632

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.