Jump to content

வான்கோழி நடனம் - ரஸவாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வான்கோழி நடனம் - ரஸவாதி

 

 

 

வுஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரத்தில் இருந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட கார் ஓடும் தூரத்தில் “ரறல்கன்”  நகரம் இருக்கின்றது. நகரம் என்று சொல்ல முடியாது. அதி அற்புத கிராமம். அங்கேதான் அந்த எழுத்தாளர் தனது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் இறந்தபொழுது  மனைவி அவருடன் இருக்கவில்லை. அவர் ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு முன்பதாக இலங்கை போய் விட்டார்.

அவரின் இறப்பைப் பரிசோதித்த வைத்தியர்கள் ‘இயற்கை மரணம்’ – அடல்ற் டெத் என்று வாக்குமூலம் சொன்னார்கள். அவருக்கு ஏகப்பட்ட வருத்தங்களும் மனவருத்தங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் அவரது மனைவி தனது கணவனின் இறப்பில் சந்தேகம் இருக்கின்றது என்று இலங்கையில் இருந்தபடி தெரிவித்தார்.

பின் வளவிற்குள் அவர் எழுதிய எல்லாப் புத்தகங்களும் – ஒன்றும் விடாது – போட்டுக் கொழுத்தப்பட்டிருந்தது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

0000

அவரது மேசையில் ஒரு கட்டுரை பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது.

“நான் இந்தியா போய் வந்த நேரமெல்லாம் எத்தனையோ தடவைகள் நடிகர்திலகம் சிவாஜிகணேசனுடன் உரையாடி, விருந்துண்டு மகிழ்ந்திருக்கின்றேன். கண்ணதாசனுடன் கலந்துரையாடியிருக்கின்றேன்.

ஒருமுறை நான் ‘பாபா’வின் தரிசனத்திற்காகச் சென்றபோது, எங்கோ ஒரு மூலையில் அமர்ந்திருந்த என்னைத் தேடி வந்த பாபா,

“நீங்கள் சமூகத் தொண்டுகள் பல புரிவதற்கென்றே பிறந்துள்ளீர்கள்” என ஆசீர்வாதம் செய்தார்.

|என்னுடைய தந்தை பச்சைப் பாலகனாக இருந்தபோது தாத்தாவுடன் எட்டயபுரம் சென்றிருக்கின்றார். அப்போது பாரதியார் அவரைத் தன் மடிமீது இருத்தி வெள்ளிக்கிண்ணத்தில் பால் பருக்கினார். அப்படி பாரதியாரின் மடியில் குழந்தையாகத் தவழ்ந்து விளையாடவில்லையே என்று ஒரு கவலை எனக்கு எப்பவும் உண்டு” இப்படி அந்தக் கட்டுரை விரிந்து செல்கின்றது.

00000

அவர் இழுத்து விடும் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் பேரும் புகழும் என்று எழுதி ஒட்டியிருந்தது. அவர் தன் புகழுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார். காரைக்கால் அம்மையார் போல் தலை கீழாக நடக்கவும் கத்தி விளிம்பின்மேல் கழைக்கூத்தாடிபோல் விளையாடவும் தயாராகவே இருந்தார்.

2009ஆம் ஆண்டு இறுதியுத்தத்தின் பின்னர் அரச விருந்தினராக இலங்கை போய் வந்தார். காலாதிகாலமாக இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல், சிங்கள அரசிடமும் புத்தபிக்குகளிடமும் தமிழினம் அடிமைப்பட்டுக் கிடந்தும் அவருக்குப் புத்தி வரவில்லை. அதன்பிறகு அவருக்கொரு கனவு வந்தது. நாடு ஆறுமாதம், காடு ஆறுமாதம் என தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே அது. என்னதான் புகுந்தநாடு சொர்க்கமாக இருந்தாலும் அதைக் காடு என்றுதான் சொல்லிக்கொள்வார்.

அதன்பின்னர் பல தடவைகள் இலங்கை போய் வந்தார். தனது பலத்தைப்  பரீட்சிக்கும் முயற்சியாக இலங்கையில் பல முயற்சிகளை செய்தார். அவை படு தோல்வியில் முடிந்தன. அவருக்கு அதன்பின்னர் தாய் நாட்டில் வரவேற்பு இருக்கவில்லை. எண்ணங்களை மெல்லப் பறக்கவிட்டு, இரவோடிரவாக அவுஸ்திரேலியா வந்துவிட்டார்.

அதன்பின்னர் தாய்நாட்டிற்கும் புலம்பெயர்ந்த நாட்டிற்கும் இடையே இலக்கியப் பாலமாக இருக்கின்றேன் என சொல்லியபடி இலங்கை போய் வந்தார். அப்படிப் போய் வரும்போதுதான், தனக்குத் தோதாக இலக்கியம் பேசும் இளம் பெண்ணொருத்தியைத் தள்ளிக் கொண்டு வந்தார். வந்தவர் கோபத்துடன், ”உனக்கும் இலக்கியத்திற்கும் சுத்த சூனியம்” என என்னிடம் நேரிடையாகச் சொன்னார்,

இது தெரியாமலா இத்தனை காலம் என்னுடன் வாழ்க்கை நடத்தினார், மூன்று பிள்ளைகளையும் பெத்து வளர்த்தார்? தான் ரறல்கன் என்ற இடத்திற்குப் போகவிருப்பதாகவும் விருப்பமென்றால் என்னையும் வரும்படி கேட்டார்.

‘விருப்பமா இருந்தா‘ என்ற வார்த்தையின் அர்த்தம் ‘வைப்பாட்டி’ என்பதைத்தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

பிள்ளைகளின் படிப்பு என்னவாகும் என்று கேட்டதற்கு,

”அவர்கள் இஞ்சையிருந்து என்னத்தைக் கிழிக்கப் போகினம். அவர்களையும் கூட்டிச் செல்வோம்” என்றார். நான் அதற்கு மறுத்துவிட்டேன். அப்போது மூத்தவள் பன்னிரண்டும், அடுத்தவள் பத்தும், கடைக்குட்டிப் பையன் ஏழும் படித்துக் கொண்டிருந்தார்கள். தமிழர்கள் பெரும்பாலும் அறிந்திராத ரறல்கன் என்னும் பகுதியில் போய் அவர் ஒளிந்து கொண்டார். அதன்பிறகு அவருக்கு உலகத்துடனான தொடர்பு அறுந்து போனது.

இரண்டுமாதம் கழித்து விவாகரத்துக் கடிதம் வந்தபோது நான் ஆடிப் போய்விட்டேன். என் வாழ்க்கை சீரழிந்து சின்னாபின்னமாகிப் போய் விட்டது.p16-1024x683.jpg

அதன் பிறகும் அவர் கதைகள் எழுதினார், நான் நிஜத்தில் அனுபவித்தேன். பிள்ளைகள் பெற்றுக் கொள்வதில் இருவருக்குமே சமபங்கைத் தந்த இறைவன், அவர்களை வளர்ப்பதில் ஏன் ஓரவஞ்சனை காட்ட வேண்டும்?

எழுதுவது எதற்காக? மனிதனை வாழ்வாங்கு வாழ வழி காட்டுவது எழுத்தாகும். ஆளைப் பாக்காதீர்கள், ஆட்டத்தைப் பாருங்கள் என்று அவர் அடிக்கடி சொல்வதன் தாற்பரியத்தை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இப்போது நான் ஒரு அனாதை. விதவை. கணவனை இழுந்தவள் விதவை என்றால் நானும் ஒரு விதவைதான்.

அந்தக் காலத்தில் கடல்கோள் நடந்தது, லெமூரியாக் கண்டம் அழிந்தது என்று சொன்னபோது நம்ப மறுத்தோம். எங்கள் காலத்திலேயே சுனாமி வந்தது, இப்போது நம்புகின்றோம்.

முன்னர் மன்னர்களைப் புகழ்ந்து பாடி புலவர்கள் பரிசில்கள் பொற்கிழிகள் பெற்றார்கள். ஆனால் புலவர்கள் ஒருபோதும் அடுத்தவர்களைத் தூற்றிப் பாடி அவற்றைப் பெறவில்லை. ஆனால் இப்போது அடுத்தவர்களைக் காட்டிக் கொடுத்து, இகழ்ந்து,  வீடு வளவு பத்திரிகை அடிக்க காசு வாங்குகின்றார்கள்.

காலம் நகர்கின்றது.

மனைவி இல்லாத சமயங்களில் எனக்குத் தூது விடுகின்றார். மெல்பேர்ண் வரும்போது என்னையும் தரிசிப்பார். எனது வீட்டில் தங்கி நிற்பார்.

அவர் என்னை விட்டுப் பிரியும்போது நான் கார் கூட ஓடிப் பழகியிருக்கவில்லை. அதன் பின்னர் கார் பழகி, வேலைக்குப் போய் என் மூன்று பிள்ளைகளையும் படிப்பித்து ஆளாக்க நான் பட்ட பாடு யாருக்குத் தெரியும்?

2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் காவுகொண்ட அரசுடன், ஒன்றாக உணவுண்டு மகிழ்ந்ததை நினைத்து நினைத்து மனம் வருந்தினார். ஒரு கட்டத்தில் தான் ஏன் இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

போர்முனையில் நடந்த கொலைகளை கண்டு அசோகர் மனம் கலங்கி பவுத்தரானார் என்பார்கள். அசோகர் யுத்தகளத்தில் நடந்து செல்லும் காட்சி கண்முன்னே விரிகின்றது. தண்ணீர் தண்ணீர் என முனகும் குரல்கள். இவர் என்ன செய்வார். பாவம். பழிச்சொல்லுக்கு ஆளாகி விட்டாரே!

பதுங்குகுழிக்குள் இருந்த எத்தனையோ நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளை – டோசரினால் இடித்துத் தள்ளி மண் மூடிச் சாக்காட்டினார்கள். இரசாயன ஆயுதங்களினால் மனித உயிர்களைக் கருக்கினார்கள். இவற்றைப் பற்றியெல்லாம் எழுதாமல், ஒன்றுமே நடவாதது போல் வேறு எதையோவெல்லாம் எழுதிப் பிதற்றினேனே என மனம் கலங்கினார்.

|எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் செயற்கரிய செயல்கள் புரிந்தோர் வாழும்போதே கெளரவிக்கப்படல் வேண்டும் என்ற நன்நோக்கில்தான், தொடர்ச்சியாக நான் பல கட்டுரைகளை இணையச் சஞ்சிகைகளில் எழுதி வருகின்றேன். ஆனால் அதற்கும் சிலர் வேப்பிலை அடித்துவிடுகின்றார்கள். ஊன் உறக்கமின்றி, இரவு பகல் பாராது இந்த நோயுற்ற வேளையிலும் நான் இதை பெருவாரியாக எழுதி வருவதால், சிலவேளைகளில் இக்கட்டுரைகள் மாட்டைப்பற்றி எழுதச் சொன்னால் மரத்தைப்பற்றி எழுதி, மாட்டை அதில் கொண்டுபோய் கட்டிவிடுவது போல அமைந்துவிடுவதுண்டு| என்று என்னிடம் ஒருமுறை சொல்லிக் கொண்டார்.|

௦௦௦௦

ஒருதடவை பிரபல பெண் எழுத்தாளரும் சமூகசேவகியுமான மங்கை வருத்தம் காரணமாக வைத்தியசாலையில் இருந்தார்.

இவர் கவலைப்படும் போதெல்லாம் மங்கை தொலைபேசியில் உரையாடி இவருக்கு ஆறுதல் சொல்லுவார்.

“அண்ணா! ஒண்டுக்கும் ஜோசியாதையுங்கோ. காலம் கைகூடி வரும்போது எல்லாம் சரிவரும் அண்ணா!!”

காலம் கைகூடி, அவருக்கு ஒரு புதிய மனைவியையும் குடுத்துவிட்டது. இனியென்ன கவலை அவருக்கு?

”மங்கை சுகமில்லையெண்டு ஒஸ்ரின் ஹொஸ்பிற்றலிலை போய்ப் படுத்திட்டாவாம். அவரைப் பற்றி கொஞ்சம் குறிப்பெடுக்க வேண்டும்” என்றார் அவர்.

“அவவைப் பற்றி எத்தினை தரம் எழுதியிருப்பியள்!” சீறி விழுந்தேன் நான்.

“ஓமப்பா! அதோடை கொஞ்சம் சேத்துக்கட்டி எழுதினால் சரி. எப்ப பொறியிறாவோ தெரியாது. அவவும் நானும் சமகாலத்திலை எழுதத் தொடங்கின்னாங்கள். ஒருக்கால் அவவைப் போய்ப் பாக்க வேணும்.”

“அவர் ஒருத்தரையும் பாக்க விரும்புகின்றா இல்லையாம் எண்டு அவைன்ரை தங்கைச்சி காலமை சொன்னவா!”

“உதென்ன கதை… நானும் அவவும் தமிழ்ச்சங்கத்திலை எத்தினை வருஷம் ஒண்டா இருந்து பணி புரிஞ்சனாங்கள்.”

இவர் ஒரு இலக்கியக்கோமாளி என்பதையும் சங்கத்திற்குள் இருந்து கொண்டு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையையும் ஆட்டி, சங்கத்தை நாசமாக்கியவர் என்பதை அந்தப் பெண்மணி அறிந்து கொண்டார். மேலும் நான் உயிருடன் இருக்கும்போது இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ததும் காரணமாக இருந்திருக்கலாம். அதனால் தன்னை வந்து பார்ப்பதை அவர் அறவே விரும்பவில்லை என உறவினர்களுக்குச் சொல்லிவிட்டார். அது ஒரு ‘மரண வாக்குமூலம்’ என்பதால் இவர் ஒரு ஓரமாக ஜன்னல் கண்ணாடியூடாக நின்று அந்தப் பெண்மணியை பார்த்துக் கொண்டார்.

ஒருவர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, தன்னை வந்து பார்க்கவேண்டாம் என்று சொல்லிய பின்னரும் ஒழித்திருந்து பார்ப்பது எவ்வளவு கேவலமானது.

௦௦௦௦

அவர் தன்னுடைய சொத்து உழைப்பு பணம் முழுவதையும் தனது புகழுக்காக செலவழித்தார். புலபெயர்ந்த பின்னரும் ஏழையாக இருப்பவர் இவர் ஒருத்தர் தான். தனக்குத்தானே குழி பறித்தார். அறளை பெயர, கண்டவன் நிண்டவைனைப் பற்றியெல்லாம் கட்டுரை வடித்தார். சங்கக்கடை மனேஜரைப் பற்றி எழுதினார். சாமான் நிறுத்து விற்கும் சேல்ஸ்மனைப் பற்றி எழுதினார். அரசியல்வாதி ஆகப்போகின்றாரோ என்னும் அளவிற்கு மக்களின் மனங்களில் ஊடுருவ முற்பட்டார்.

நல்லவேளை துப்பாக்கிச் சூட்டினால் இறக்கவில்லை. இயற்கை மரணம் என்று சொன்னதற்கும் மனைவி ஆப்பு வைத்துவிட்டார்.

௦௦௦௦

அவரின் செத்தவீட்டிற்கு நானும் போனேன். போகத்தானே வேண்டும்.

“உவர் எப்ப , அரச விருந்தினராகப் போனாரோ அண்டைக்கே அவர் செத்துப் போனார்” மனைவி செத்தவீட்டில் அழுது குழறினார்.

”இது நடந்தும் இப்ப ஏழெட்டு வருசமாப் போச்சு. அதுக்குப் பிறகு தான் இஞ்சை வந்து ஒழிச்சு இருந்தவர். ஆராவது இந்த ஏழெட்டு வருஷத்திலை இவரை வந்து இஞ்சை பாத்திருப்பியளா? அவர்தானே உங்களைத் தேடித் தேடி வந்தார். இப்ப செத்தவீட்டுக்கெண்டவுடனை கிழம்பி வந்திட்டியள்” செத்தவீட்டிற்கு வந்திருந்த எழுத்தாளர்களைத் திட்டித் தீர்த்தார்.

அவரது மூன்று பிள்ளைகளில் இரண்டுபேர்கள் வந்திருந்தார்கள். அவர்களது கண்களில் இருந்தும் ஒரு சொட்டுக் கண்ணீரும் வரவில்லை.

அவரது மனைவி இல்லாத சமயங்களில், யாரோ ஒரு பெண்ணுடன் மாலை வேளைகளில் அவர் உரையாடிக் கொண்டிருந்ததாக அயலவர்கள் பொலிசுக்குச் சொன்னார்கள். அதன் பின்னர் அவரது இறப்பில் திருப்பம் ஏற்பட்டது.

அவரது உடலை மீண்டும் பரிசோதித்த வைத்தியர்கள், அவரது குருதியின் மாதிரியில் ‘பிறிற்ரிசினன்’ என்ற மருந்தின் செறிவு கூடுதலாக இருப்பதாகச் சொன்னர்கள். அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால், பொலிசார் அந்தப் பிணத்தைப் புதைக்கச் சொல்லியிருந்தார்கள்.

௦௦௦௦

அடுத்தவாரம் ஒருநாள் அதிகாலை எனது வீட்டுக் கதவைப் பொலிஸ்காரர்கள் தட்டினார்கள்.

எதிர்பார்த்ததுதான்.

”அவர் உண்மையிலேயே நடந்ததை நினைத்து நினைத்து உருகி உருகிச் செத்தார் என்பதை எப்படிப் புரிய வைப்பேன். ஏதோ நான் தான் அவரைக் கொன்றேன் என்பதுமாப் போல்தான் உலகம் கதைக்கின்றது. அவரது முதல் மனைவி நான் என்பதால் அவர்கள் அப்படிச் சொல்லக்கூடும்.

எத்தனையோ தடவைகள் இலங்கை போய் வந்தபோதும், அங்குள்ள மக்கள் படும் அவலங்களை எந்த ஒரு படைப்பிலும் தான் எழுதவில்லையே என கவலை கொண்டிருந்தார். முப்பது வருடங்களுக்கும் மேலாக நடந்த யுத்தத்தைப் பற்றி எதுவும் எழுதாமல் இருந்துவிட்ட குற்ற உணர்வில் அவர் தினம் தினம் வேதனைப்பட்டு புழுப்போல் துடித்து இறந்து போனார்” இப்படித்தான் நான் பொலிஸாரிடன் அவரைப்பற்றிச் சொல்லி வைத்தேன்.

மேலும் தொடர்ந்தேன்,

”நான் கடந்த ஒரு வாரமாக அங்குதான் இருந்தேன். இறந்த அன்று இரவுகூட அவர் என்னுடன் நெடுநேரம் கதைத்தபடி இருந்தார். அவரது பேச்சு எனக்கு அலுப்புத் தட்டியது. எந்த நேரமும் எழுத்து எழுத்தாளர்கள்… சீ எண்டு போச்சு.

கிலோக்கணக்கில் புத்தகங்களை எழுதியதுதான் மிச்சம். ஒரு சதத்திற்கும் பிரயோசனம் இல்லை.

நான் ஒரு கட்டத்தில் அயர்ந்து தூங்கிவிட்டேன். விடியப்புறம் எழுந்து பார்த்தபோது படுக்கையில் இறந்து கிடந்தார்.

நான் என்னிடம் உள்ள திறப்பினால் வீட்டைப் பூட்டிவிட்டு வந்துவிட்டேன்.”

என்னுடைய வாக்குமூலத்தை எழுத்தில் போட்டு, என்னிடமிருந்து கையொப்பமும், கை அடையாளமும் பெற்றுக் கொண்டார்கள். தேவை ஏற்படின் மீண்டும் சந்திப்போம் என்று கூறிவிட்டு பொலிஷார் சென்றுவிட்டனர்.

௦௦௦

உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்.

அவர் என்னை விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துவிட்டார் என்பதற்காக நான் அவரைப் பழி வாங்கவில்லை. 2009 ஆம் ஆண்டு பல ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த அரசுடன் ஒன்றாக விருந்துண்டு மகிழ்ந்தார் என்பதற்காகவே அவரை நான் பழி வாங்கினேன்.

இதற்காகவே நான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன்.

எண்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களின் ஆவிகள் தினமும் என் கழுத்தை நெரிப்பதை யார் அறிவார்கள்?

அவரின் அத்தனை புத்தகங்களையும் எரித்த தீப்பெட்டியினால்தான், நான் இப்போது என் சுவாமி அறையில் இருக்கும் விளக்கையும் ஏற்றுகின்றேன்.

௦௦௦௦௦

 

http://eathuvarai.net/?p=5797

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வித்தியாசமான..  நல்ல கதை போல் உள்ளது. 
அரைவாசி மட்டும் வாசித்தேன்,  தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டியுள்ளமையால்  நிச்சயம் வாசிப்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்பிற்கு நன்றி கிருபன்

யாராகினும்  நின்று அறுப்பதே நன்று

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.