Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி அரசியலின் பேராபத்து

Featured Replies

ரஜினி அரசியலின் பேராபத்து

 

 
top1
RAJINIKANTH
TOP2
TOP3
TOP4
TOP4
TOP5
top1
RAJINIKANTH

அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதன் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களைப் பற்றி அதில் ஒரு குறிப்பு இருந்தது. அவர்கள் ஏன் கைதுசெய்யப்பட்டார்கள்; எதற்காக இந்தக் கைதுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன என்ற விவரணை அதில் இல்லை. என்ன காரணமாக இருக்கும் என்று இணையத்தில் துழாவியபோது கிடைத்த செய்திகள் ஆச்சர்யமூட்டின.

 

 

ஒரு அமெரிக்கக் கதை

ஃபிலெடெல்பியா நகரிலுள்ள ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடைக்கு 21 வயதான ராஷன் நெல்சன், டாண்டே ராபின்சன் இருவரும் செல்கின்றனர். இருவரும் கறுப்பர்கள். அங்கே அவர்களுடைய இன்னொரு நண்பர் ஆண்ட்ரூவுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த இளைஞர்களில் ஒருவர் கழிப்பறைக்குச் செல்ல முனையும்போது அனுமதி மறுக்கிறார் கடையின் மேலாளர் - வெள்ளையர். சாப்பிடுவதாக இருந்தால் அவர்கள் அங்கே இருக்கலாம் அல்லது உடனே வெளியேற வேண்டும் என்கிறார். பேச்சு போய்க்கொண்டிருக்கும்போதே போலீஸாரை அழைக்கிறார். போலீஸார் அங்கு வந்த வேகத்தில் இரு இளைஞர்களையும் கைதுசெய்து விலங்கு மாட்டுகிறார்கள். இதற்குள் அவர்கள் சந்திக்கவிருந்த நண்பர் – அவர் வெள்ளையர் - வந்து சேர்கிறார். இவையெல்லாமும் சில நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்துவிடுகின்றன.

அமெரிக்காவின் பெரும் சங்கிலி உணவகங்களில் ஒன்றும், உலகெங்கும் 27,500-க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்ட ‘ஸ்டார்பக்ஸ்’ விதிகளின்படி, சாப்பிட வருபவர்கள்தான் அதன் காபி கடைகளுக்கு வர வேண்டும் என்பதில்லை. சும்மா கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டிருந்தும் செல்லலாம். இந்த இளைஞர்கள் இருவரும் ஒரு வியாபாரப் பேச்சின் நிமித்தம் அங்கு வந்திருந்திருக்கிறார்கள். பேசிவிட்டுக் கலையலாம் என்றிருந்தார்களா அல்லது நண்பர் வந்ததும் சாப்பிடலாம் என்றிருந்தார்களா என்பது தெரியாது. அங்கு வழக்கமாகச் சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் என்பது பின்பு தெரியவந்திருக்கிறது. போலீஸார் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. வந்த வேகத்தில் அவர்கள் இளைஞர்களுக்கு விலங்கிட்டதை மெலிசா டிபினோ என்ற வெள்ளைப் பெண்மணி படம் எடுக்கிறார். தார்மிக உணர்வோடு அதைப் பகிர்கிறார்.

சமூக வலைதளங்களில் இந்தக் காணொலி பரவுகிறது. பார்ப்பவர்கள் கொந்தளிக்கிறார்கள். கறுப்பர் – வெள்ளையர் வரையறைகளைத் தாண்டி ‘ஸ்டார்பக்ஸ்’ கடைகளில் கூடி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். விளைவாக ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கெவின் ஜான்சன் மன்னிப்பு கேட்கிறார். “இனி கடைக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் கழிப்பறையைப் பயன் படுத்திக்கொள்ளலாம்” என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார். கூடவே, வரும் மே 29 அன்று அமெரிக்கா முழுவதுமுள்ள கடைகள் மூடப்பட்டு, நிறபேதம் உட்பட எந்தப் பாரபட்சத்தையும் தங்களை அறியாமலும்கூட வாடிக்கையாளர்களிடம் வெளிப்படுத்தி விடாமல் இருக்க ‘ஸ்டார்பக்ஸ்’ ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கிறார். காவல் துறை தனியே விளக்கம் அளித்திருக்கிறது.

இந்தியாவின் சாதி பேதத்துடன் அமெரிக்காவின் நிற பேதத்தை ஒப்பிடலாம் என்றாலும், பாகுபாட்டுக்கு எதிரான குடிமைச் சமூகத்தின் இப்படியான எதிர்வினைகளையெல்லாம் இங்கே எப்போது பார்க்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. ஜனநாயகம் என்பது இதெல்லாமும்தான். ஆனால், வெறும் தேர்தலை மட்டும், அதிலும் தனிப் பெரும்பான்மையினரின் முடிவுகளை மட்டும் ஜனநாயகமாக நம்முடைய ஜனநாயகத்தைச் சுருக்கிக்கொண்டிருக்கிறோம்.

 

ஏன் அரசியல்வாதிகளை ஒதுக்குகிறார்கள்?

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகளின் வழியாகவே அரசியல் மாற்றங்கள் நடந்தேற வேண்டும் என்றாலும், வெளியே அதற்கான உத்வேகம் குடிமைச் சமூகத்திலிருந்தும் வர வேண்டும். குடிமைச் சமூகம் குரல் எழுப்பு வதற்கான துணிச்சலை அரசியல் கட்சிகளின் செயல் பாடுகள் தர வேண்டும்.

குடிமைச் சமூகமானது அரசியலமைப்பு கொடுத்த சட்டகத்துக்குள் செயல்படுவது. அரசியல் கட்சிகளோ அந்தச் சட்ட எல்லையைப் பொருட்படுத்தாமல் வெகுமக்களின் நலன்களுக்கேற்ப அந்த எல்லையை உடைக்கவோ மீறவோ விஸ்தரிக்கவோ கூடியன. சட்டத்தை உருவாக்கும் / மாற்றும் அதிகாரம் அவற்றிடமே இருக்கிறது. ஒரு நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்றால், இந்த இரு தரப்புகள் இடையிலான பரிவர்த்தனையும் ஊடாட்டமும் தொடர்ந்து சரிவர நடக்க வேண்டும்.

இந்தியாவில் அரசியல் சமூகத்திடம் இன்று ஒரு பண்பு மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகளே முக்கியம் என்றாகிவிட்ட கட்சிகள் தன்னை அரசியல் கட்சிகளின் பண்பிலிருந்து குடிமைச் சமூகத்தின் பண்பு நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கின்றன. அதாவது, அமைப்பை விஸ்தரிப்பதற்குப் பதிலாக, அமைப்புக்குள் நின்று யோசிக்க அவை பழகுகின்றன. விளைவாகவே சாமானிய மக்களின் நம்பிக்கையை அவை இழக்கின்றன.

தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் நடந்த முக்கியமான போராட்டங்களை எடுத்துக்கொள்வோம். மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டம், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம், காவிரிப் படுகையில் எரிவாயுத் திட்டங்கள் கொண்டுவரப்படுவதற்கு எதிரான போராட்டம். இவை மூன்றையுமே மக்கள் தன்னெழுச்சியாக நடத்தினார்கள். பெண்கள் முன்னின்றார்கள். தமிழ்நாட்டில் அரசே மதுக்கடைகளை நடத்தும் நிலையில் மதுவிலக்குக்கானப் போராட்டத்தைக் கடுமையான முகத்துடன் காவல் துறை எதிர்கொண்டது. தடியடித் தாக்குதல் எதையும் பொருட்படுத்தாமல் பல பெண்கள் மதுக் கடைகளுக்குச் சென்று மது பாட்டில்களை உடைத்துப்போடுவதையும் கடைகளுக்குப் பூட்டுப்போடுவதையும் பல இடங்களில் நானே பார்த்திருக்கிறேன்.

இந்தப் போராட்டங்கள் மூன்றிலுமே மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எதிர்க்கட்சிகள் எடுத்தன. ஆனால், போராட்டத்தைத் தங்களுடையதாக்கிக்கொள்ள அவர்களால் முடியவில்லை. ஏன்? பல கட்சித் தலைவர் களுக்கே இந்தக் கேள்வி இருக்கிறது. போராட்டத்தில் ஆதரவு தெரிவித்தாலும் மக்கள் ஏன் அரசியல்வாதிகளோடு கைகோக்க மறுக்கிறார்கள்?

 

எதிர்ப்பு எது நிமித்தமானது?

கூடங்குளம் போராட்ட சமயம் மீனவர் ஒருவர் சொன்ன விஷயம் இங்கே பொருத்திப்பார்க்கக் கூடியது. “அதிமுக அரசாங்கம் மிருகத்தனமா எங்களைத் தாக்குது. பதிலுக்கு எங்களுக்கு திமுக ஆதரவு கொடுக்க வருது. இந்த ஆதரவு அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாடா, அணுசக்திக்கு எதிரான நிலைப்பாடா? இந்தச் சந்தேகம் எங்களுக்கு இருக்கு. நாளைக்கு திமுக ஆட்சிக்கு வந்தா அப்போ என்ன நிலைப்பாட்டை அது எடுக்கும்? இந்தச் சந்தேகம் எங்களுக்கு இருக்கு!”

உண்மைதான். அரசும் ஆளுங்கட்சியும் எந்தச் சட்டகத்துக்கு உட்பட்டு இன்று ஒரு திட்டத்தை முன்னெடுக்கின்றனவோ அதே சட்டகத்துக்கு உட்பட்டுதான் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தை முன்னெடுக்கின்றன. உதாரணமாக, மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே என்ன கொள்கை வேறுபாடு? நியூட்ரினோ திட்டத்தை அரசுத் திட்டம் என்கிற வகையில் மார்க்ஸிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. இதே திட்டத்தை டாடா முன்னெடுத்தால் இதே மார்க்ஸிஸ்ட் கட்சி அப்போது என்ன முடிவெடுக்கும்?

மக்களின் எதிர்ப்பு அது அரசுத் திட்டமா, தனியார் திட்டமா என்ற வியாக்கியானத்தில் இல்லை. தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாவதால் அவர்கள் எதிர்ப்புக் கொடி பிடிக்கிறார்கள். அவர்களுக்கு அரசும் சரி, டாடாவும் சரி; வெவ்வேறு வகைமை என்றாலும் இரண்டுமே நிறுவனங்கள். கத்தி எந்தப் பெயரில் இருந்தாலும் கத்தி என்றே அவர்கள் பார்க்கிறார்கள்.

இன்று மக்கள் எதிர்கொள்ளும் பல போராட்டங்களில் அரசியல் கட்சிகள் தங்களை இணைத்துக்கொண்டாலும், அந்த இணைப்பானது அவர்களுடைய உண்மையான ஈடுபாட்டின் அடிப்படையிலானது அல்ல என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கிறது. அரசியல் கட்சிகளின் அடையாள நிமித்த ஆதரவு அல்லது எதிர்ப்பானது வெறும் தேர்தல் அனுகூலங்களுக்கானது என்பதை மக்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள்.

அது, மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டமோ, ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டமோ, சட்டம் என்ன சொல்கிறது என்பதை மக்கள் பொருட்படுத்தவில்லை. “சட்டம் என்னவாக இருந்தாலும், மக்கள் நலனுக்கேற்ப அது மாற்றப்பட வேண்டும்” என்கிறார்கள். நியாயமாக அரசியல் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு இது. நேர் எதிராக சட்ட வரையறைக்கு உட்பட்ட நியாயத்தையும் எதிர்ப்பையுமே அரசியல் கட்சிகள் பேசிக்கொண்டிருக்கின்றன. பிளவு நடக்கும் இடம் இது.

தேர்தல் வெற்றியையே பிரதானமாகக் கருதும் கட்சிகள் மக்களிடமிருந்து பிளவுபட்டுவிடுவதால், அரசியல் இன்னும் கூடுதலாகப் பணமயமாகிறது. மக்கள் யாரையெல்லாம் எதிர்க்கிறார்களோ அந்தந்த சக்திகளோடுதான் பணத்துக்காக கட்சிகள் கைகோக்க வேண்டியிருக்கிறது. ஆக, ‘மக்கள் பிரச்சினையா? அறிக்கைகள் விடு! ரொம்பப் பிரச்சினையா? ஒரு ஆர்ப்பாட்டம் நடத்து! தேர்தல் நெருங்கையில் மட்டும் களத்தில் இறங்கிக்கொள்ளலாம். முடிந்தது ஜனநாயகம்!’ என்பதாக ஜனநாயகம் மேலும் சுருங்குகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா இந்தப் போக்கை நன்கு வளர்த்தெடுத்தார். அவருக்குச் சாத்தியப்பட்ட ‘பிம்ப அரசியல்’ இதற்குப் பெரும் உதவியாக இருந்தது.

 

ஜெயலலிதாவிடமிருந்து மறு தொடக்கம்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவருடைய இடத்தில் ரஜினி தொடங்குகிறார். ‘மக்கள் பிரச்சினைகளுக்காக நீங்கள் அடையாள நிமித்தப் போராட்டங்கள், பேரணிகள், கூட்டங்கள்கூட நடத்த வேண்டாம். அன்றாட அறிக்கைகள், பேட்டிகள்கூட தர வேண்டாம். நேரடியாக தேர்தல். அப்புறம் ஆட்சி’ என்ற வழிமுறையை உருவாக்க முனைகிறார் ரஜினி.

தன்னுடைய படங்களை ஓட்டுவதற்கான உத்திகளில் ஒன்றாக, ‘அரசியலுக்கு வருகிறேன், இதோ.. அதோ...’ என்று பூச்சாண்டி காட்டுவதைக் கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் செய்துவரும் ரஜினி, ஐந்து மாதங்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். “விரைவில் அரசியல் கட்சியை அறிவிப்பேன்” என்றவர் கட்சிக்கான முன்னோட்டமாக ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற பெயரில் இன்று நடத்திக்கொண்டிருப்பவை யாவும் மக்களைக் கொச்சைப்படுத்துபவை. பிம்ப அரசியலின் வழி எதேச்சாதிகாரத்துக்கு அழைத்துச் செல்பவை.

மூன்று விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

முதலாவது, யார் எதிர்த்தரப்பு என்பதையே சொல்லாமல் காற்றில் வாள் சுழற்றுவது. இது ஒரு ஆபாசம். மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு பறித்துவருவதே தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய அரசியல் பிரச்சினை. பிரச்சினைகளின் சூத்திரதாரி பாஜக - பிரதமர் மோடி. அடுத்து அதிமுக - முதல்வர் பழனிசாமி. இந்த இருவரையும் விமர்சித்து, இதுவரை அவர்களுடைய பெயர்களைக்கூட உச்சரிக்கவில்லை ரஜினி. பின் யாரை எதிர்த்து தமிழ்நாட்டைக் காக்கப்போகிறேன் என்று கூட்டத்துக்குக் கூட்டம் சவடால் விடுகிறார்? கலைஞர்கள் துணிச்சல்காரர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கோழைகள் அரசியலுக்கு வரக் கூடாது.

இரண்டாவது, போராட்டங்களை சமூக விரோதமாகச் சித்தரிக்கும் ஒரு தொனி ரஜினியிடம் தொடர்ந்து வெளிப்பட்டுவருகிறது. மனித குலம் இதுவரை அடைந்திருக்கும் சமத்துவ உரிமைகள் அனைத்துமே போராட்டங்களின் விளைவுதான் – யார் யாரோ செய்திருக்கும் தியாகம்தான். மக்களுக்கு எதிரான அரசவாதியாகவே (statist) ரஜினி வெளிப்படுகிறார்.

காவிரிப் போராட்டங்கள் சமயத்தில் ரஜினி தெரிவித்த கருத்து நம் கவனத்துக்குரியது. இந்தப் போராட்டங்களின்போது, போராட்டக்காரர் ஒருவர் போலீஸ்காரரைத் தாக்கினார். அந்தத் தாக்குதல் கடுமையான கண்டனத்துக்குரியது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அது ஒன்றையே காரணமாக்கி, “உள்ளதிலேயே பெரிய வன்முறை சீருடையில் இருக்கும் ஒரு காவலரைத் தாக்குவதுதான்!” என்ற ரஜினியின் கருத்து சாமானிய மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வன்முறையைச் சிறுமைப்படுத்துவது. ஆபத்தானது. சொல்லப்போனால், போராட்ட நாளன்று கிரிக்கெட் போட்டிக்குச் சென்ற ரசிகர்களை ஆர்பாட்டக்காரர்கள் சிலர் தாக்கினார்கள். அது வன்முறை இல்லையா?

இந்தச் சம்பவங்களுக்கெல்லாம் ஒரு மாதம் முன்புகூட அடுத்தடுத்து பொது ஜனங்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டதற்காகக் கடுமையான கண்டனங்களைச் சந்தித்தது தமிழகக் காவல் துறை. வாகனச் சோதனையின்போது நிறுத்தாமல் சென்றார் என்பதற்காக சாலையில் சென்ற மோட்டார் சைக்கிளை ஒரு காவலர் உதைத்தபோது தடுமாறி விழுந்த அந்தப் பெண் இறந்தார். இந்த வன்முறை மோசம் இல்லையா? அப்போதெல்லாம் ரஜினி என்ன செய்துகொண்டிருந்தார்?

வன்முறையை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுவது அபத்தம் என்றாலும் அரச வன்முறைக்கு ஈடாக எதையும் கூறிட முடியாது. “அரசு என்பதே ஆன்மாவற்ற இயந்திரம். வன்முறையை விட்டுவிட்டு அரசால் இயங்கவே முடியாது. ஏனெனில், அதன் இருப்புக்கு ஆதாரமே வன்முறைதான்” என்ற காந்தியின் கூற்றை இங்கே நினைவுக்குக் கொண்டுவந்தால், அரசுக்கு எதிரான வன்முறைகள் எங்கிருந்து பிறக்கின்றன என்பதை உணர்ந்துவிடலாம். நீதிமன்றக் காவலிலேயே வருஷத்துக்கு 900 பேர் இறக்கும் ஒரு நாட்டில் உட்கார்ந்துகொண்டு யாருடைய நியாயத்தைப் பேச ரஜினி அரசியலுக்கு வருகிறார்?

மூன்றாவது, இது ஒன்றும் ரகசியம் இல்லை. ரஜினியின் அரசியல் முன்மாதிரி லீ குவான் யூ. வளர்ச்சியின் பெயரால் எதேச்சாதிகாரத்தை உருவாக்குவதற்கான சர்வதேச முன்மாதிரி. ஜனநாயகம் நீக்கப்பட்ட சிங்கப்பூரின் தந்தை. திரைத்துறைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது, ‘‘வேலைநிறுத்தம் எனக்குப் பிடிக்காத வார்த்தை’’ என்று சொன்னவர்தான் ரஜினி. தன்னுடைய அமைப்பில், ‘எவரும் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது, பொதுவெளியில் பேசக் கூடாது’ என்று அறிவித்திருப்பதன் மூலம் தன்னை நம்பி வருபவர்களிடம் ஏற்கெனவே இருக்கும் சொந்தக் குரலையும் பறிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ரஜினி.

ஒரு குடிமகருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமைக்கு எதிரானது இது. எந்த ஒரு அரசியல் அல்லது பொது அமைப்பும் அதன் தலைமைக்கு மட்டுமல்ல; தொண்டர்களுக்குமானது. கட்சிப் பெயரை அறிவிப்பதற்கு முன்பே தொண்டர்களின் குரலை முடக்கிவிட்டு, இப்போதே வாக்குச்சாவடிகள்தோறும் உறுப்பினர்கள் சேர்ப்பு, உறுப்பினர்கள் சேர்ப்புக்கேற்ப குழு அமைப்பு என்று அவர்களை வேலை வாங்க ஆரம்பித்திருப்பதன் மூலம் ஒரு மக்கள் தலைவராக அல்ல; கணக்கார்த்த ஓட்டு வியாபாரியாகவே ரஜினி வெளிப்படுகிறார்.

 

அரசியலற்றதன்மையின் வெளிப்பாடு

அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரும் வரவேற்புக்குரியவர்கள். அதிலும் நட்சத்திரங்கள் அரசியலுக்கு வரும்போது கூடவே ஒரு புதுப் பட்டாளத்தையும் அரசியலரங்குக்குக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள் என்பதால் கூடுதல் வரவேற்புக்குரியவர்கள் ஆகிறார்கள். அதுவரை எந்தக் கட்சியும் சாராத மக்களின் ஒரு பகுதியினர் அரசியல்மயப்படவும், ஜனநாயகத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்பதே இந்த வரவேற்புக்கான அடிப்படை. மேடைக்கு மேடை “உங்கள் குடும்பத்தைப் பாருங்கள்” என்று சமூகத்துக்கு உபதேசிப்பதன் மூலம் அந்த வரவேற்புக்கும் பொருத்தமானவர் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார் ரஜினி.

நவீன வாழ்க்கையானது ஏற்கெனவே அவரவர் குடும்பங்களைத் தாண்டி சிந்திக்க முடியாத சுயநலச் சிறையிலேயே சமூகத்தின் பெரும்பான்மையினரை அடைத்துவைத்திருக்கிறது. அரசியல்மயப்படுத்தலில் மிக அடிப்படையான பணி மனிதனை இப்படியான சுயநலச் சிறையிலிருந்து விடுவிப்பதும், சமூகத்தை நோக்கி அவனுடைய அக்கறைகளைத் திருப்புவதும்தான். வீட்டிலிருந்து வீதியில் இறங்கும் ஒருவனை மீண்டும் மீண்டும் ‘வீட்டைக் கவனி’ என்று திருப்புவதில் என்ன பொது நலன் இருக்கிறது?

யாவும் அரசியலற்றதன்மையின் வெளிப்பாடுகள். எதேச்சாதிகாரத்துக்கான தீர்க்கமான அறைக்கூவல்கள். ஏற்கெனவே தேர்தலுக்கு மட்டுமானதாகச் சுருங்கி, மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகத்தின் கழுத்தில் மேலும் ஒரு விரலாகவே ரஜினியின் கை பதியும் என்று தோன்றுகிறது!

சமஸ்,

http://tamil.thehindu.com/opinion/columns/article23922289.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.