Jump to content

ஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு


Recommended Posts

பதியப்பட்டது

ஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு


 

 

oru-nimida-kadhai-ilavasankalukkum-vilai

 

பொம்மி கேட்டைப் பிடித்துக்கொண்டு நின்றாள். உடையில் மிகக் குறைவாக மூன்று நான்கு சிறிய மற்றும் சற்றே பெரிய கிழிசல்கள் மிக நேர்த்தியாகப் 'பின்' போட்டு மூடப்பட்டிருந்தது . எண்ணெய் சீப்பைக் காணாத முடி, சிக்குப்பிடித்து உருட்டையாக மேலே தூக்கி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தக் கோலத்தில் கூட அழகான உருண்டைக் கண்கள் பளிச்சிட்டு ஏதோ ஒரு வசீகரத்தைச் சொன்னது.

 

"பாப்பா....யாரு ரத்தினத்தோடு பொண்ணா? வா, கிட்ட வந்து குந்து....தாத்தா புல் புடிங்கித்தாரேன்...ஓரமா எடுத்துப் போடு...வா...." முண்டாசு கட்டிய தோட்டக்காரக் கிழவன் வேலைக்கு ஆள் தேடினான்.

" மாட்டேன்...அம்மா கோபப்படும்"

பொம்மிக்கு நன்றாக நினைவில் இருந்தது.

சில மாதங்கள் முன் நடந்தது. அன்று காலை கஞ்சி சுடச்செய்து கொடுத்து பின் அம்மா வேலைக்குக் கிளம்பும் போது...

"அம்மா... இஸ்கோலு கிடையாதுதானே. என்னையும் இட்டு கிட்டுப்போ..."

"அய்ய....உனக்கு இன்னாத்துக்கு கண்ணு இந்த கஸ்மாலம் புடிச்ச வேல....நீ படிச்சு ஆபீசரா வரணும். ரெஸ்ட் எடு..."   - பேசிக்கொண்டே தலையை ஒரு கோடாலி முடிச்சிட்டு புடவையை இழுத்து மூடிக் கிளம்பினாள்.

"அம்மா...போரடிக்குது...நானும் வாரேன்...." ஐந்து வயது பெண்ணின் மிகச் சுலபமாக நிறைவேற்றக்கூடிய ஆசையாக இருந்ததால் குடிசை தட்டியை மூடிப் பத்திரப்படுத்தி பொம்மியுடன் கிளம்பினாள்.

" எந்த வூடும்மா..?"

"அதோ.. தெரியுது பார் பங்களா...மொத வேல அங்கதான்.." அவசரமாக பொம்மியை பின் தள்ளி உள்ளே நுழைந்தாள்.

"என்னடி ரத்தினம்....ஆடி அசைஞ்சு வர...? அது யாரு...உன் பொண்ணா? இதோபாரு...வேலைக்கு வைக்கும்போதே சொன்னேனில்ல.....தனியாதான் வரணும்னு. போ கொண்டு விட்டுட்டு வா. உன்னைத்தவிர வேறு யாரும் உள்ளே நுழையக் கூடாது..."

வேலை போய்விடுமோ என்ற பயத்தோடு ரத்தினம், பொம்மியை அவசரமாக கேட்டிற்கு வெளியே தள்ளிச்சென்றாள்.

"பொம்மி.... இதப்பாரு...இந்த வூடு மட்டும்தான் இப்புடி.. கேட்டாண்டையே நில்லு...நான் வேலை முடிச்சுட்டு ஓடியாந்துடுறேன்"

லேசாக உறைக்கத் தொடங்கிய காலை வெயிலில் பொம்மி கேட்டிற்கு வெளியே நின்றாள்.கேட் வழியாகத் தோட்டத்தில் தெரிந்த மிகப்பெரிய கொய்யா மரம் கவனத்தை ஈர்த்தது.

" அட....எம்மாம் பெரிசு பார்ரா இந்தக் கொய்யா..."

லேசாக இலைகள் மூடப்பட்டு நடு நடுவே மஞ்சள் நிறத்தில் எட்டிப்பார்த்த கொய்யாக்கள் வசீகரித்தன.

மெதுவாக கேட்டைத் திறந்து உள்ளே சென்றாள். பழங்கள் எட்டாத் தொலைவில் கண்ணடித்தன. பொம்மிக்கு நாக்கில் ஜலம் ஊறியது. சுற்றும்முற்றும் பார்த்தாள். சின்னதாகக் கீழே கிடந்த கூழாங்கல்லைக் கையில் எடுத்து மிக நேர்த்தியாக கிரிக்கெட் பந்து வீசுவதைப்போல் வீசினாள். ஆனால் அங்கே இறைவனுடன் நடந்த மாட்ச் பிக்ஸிங்கால், கல் ஜன்னலில் பட்டு, ஒரு மிகப்பெரிய சத்தத்தை உண்டு பண்ணியது.

"யாரது...வாசல்ல யாரு...." தூக்க முடியாத சதை பற்றுக்களைச் சுமந்து ஓடி வந்த எசமானி அம்மாள் போட்ட சத்தத்தில், பொம்மிக்கு ஜுரமே வந்துவிட்டது. ரத்தினம் கை மருந்து கொடுத்தாள். இங்கிலீசு மருந்து கொடுத்தாள். பொம்மி ஜுர வேகத்தில் தூக்கிப்போட்ட உடம்புடன் முணு முணுத்துக் கொண்டிருந்தாள்.... எம்மாம் பெரிய கொய்யா...

பொம்மிக்கு ஜுரம் வடிந்து சரியாகத்தான் போயிற்று. இரண்டு வாரத்திற்குப் பின் இஸ்கூல் விட்டு வந்த பொம்மி கைகளில் பெரியதாக இரண்டு கொய்யாபழம் வைக்கப்பட்டது.

"ஹைய்யா... பங்களா வூட்டு பழமா...?" இரண்டு கைகளிலும் வைத்துத் தின்றவளுக்குக் கிழட்டு வேலைக்காரனுக்கு மறைவில் அம்மா கொடுத்தும் பெற்ற நகக்கீறல்கள் பற்றித்தெரியாது.

தோட்டக்கார கிழவன் பொம்மியிடம் வந்தான்.

" குட்டி....வா வந்து எல்பு பண்ணு...."

பொம்மி கலவரத்தோடு அவனைப்பார்த்தாள்.

"தாத்தா....எசமானி அம்மா திட்டும்....நா வரமாட்டேன்..."  - அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒரு உணர்வு தோட்டக்காரன் மனதைக் கிள்ள...

"சரி பாப்பா, அங்கேயே இரு. உனக்கு அணில் கடிச்சுப்போட்ட கொய்யாப் பழம் கொண்டாரேன், தின்னு."

மெதுவாக உள்ளே சென்று கைகளில் பாதி கடித்த பழங்கள் இரண்டுடன் பொம்மியிடம் வந்தான்.

மேலே, தலைக்கு மேலே பழங்களைக் கடித்துப் போட்ட வவ்வால் ஒன்று வேகமாகப் பறந்து சென்றது.

அன்றைய தலைப்புச்செய்தியாக வந்த நீப்பா வைரஸ் பற்றிய செய்தியை படிக்க யாருக்கும் அங்கு நேரமில்லை.

இந்த முறை கிடைத்த இலவச கொய்யாக்களின் விலை சற்று அதிகமே!

http://www.kamadenu.in

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீப்பா வைரஸ் வவ்வால் மூலமாக பரவுகின்றதாம்......பாவம் சிறுமி.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.