Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தமிழக முஸ்லிம்களின் பிளவு மறையும் நேரம்'

Featured Replies

இது தமிழக முஸ்லிம்களின் பிளவு மறையும் நேரம்'

 
MUSLIMபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்)

"வட இந்திய - தென்னிந்திய முஸ்லிம்களுக்கு இடையிலேயான கல்வி மற்றும் வியாபாரம் குறித்த ஒப்பீட்டு ஆய்வு" என்ற தலைப்பில் வட இந்திய பத்திரிக்கையாளர் சையத் உபைதுர் ரஹ்மான் அண்மையில் எழுதிய கட்டுரையில் ஒரு சுவாரசியமான தகவலை குறிப்பிடுகிறார். ஒட்டுமொத்த உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் மேற்படிப்பு கல்வி நிறுவனங்களுக்கு இணையான எண்ணிக்கையில், சென்னை மாநகரிலேயே தமிழக இஸ்லாமியர்களால் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகிறது என்பதுதான் அந்தத் தகவல்.

நான்கு கோடி முஸ்லிம்கள் வாழும் உ.பியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் இஸ்லாமியர் எண்ணிக்கை மிகவும் குறைவு. 50 லட்சத்திற்கும் குறைவான இஸ்லாமியர்களே இங்கு வசிக்கின்றனர். இரு மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையை, விகிதாச்சாரத்தை கணக்கில் கொள்ளும்போது இந்த பெருவித்தியாசம், நமக்கு தமிழக முஸ்லிம்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை தெளிவுபடுத்துகிறது.

இன்று தமிழக முஸ்லிம்கள் காணும் இந்த முன்னேற்றங்களுக்குப் பின்னால் ஒரு நீண்ட, நெடிய வரலாறு உண்டு. மேற்கல்வியைப் பொறுத்தவரை பெரிய முன்னேற்றங்கள் சுதந்திரத்திற்கு அடுத்து ஏற்பட்டவை ஆகும். 1877ல் சர் சையத் அகமது கான் அலிகரில் "முகம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி"யை நிறுவி 39 வருடங்கள் கழித்த பின்னரே 1916ல் சென்னையில், அன்றைய ஆங்கிலேய அரசு இஸ்லாமியர்களுக்கென கல்லூரியை நிறுவியது.

சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியப் பிரிவினையை அடுத்து, அன்று நிலவிய கசப்பான சூழலில், சென்னை மாகாணத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த காங்கிரஸ் அரசு இஸ்லாமியர்கள் அனுபவித்து வந்த பல சலுகைகளை பறித்தது. அதுவரை அமலில் இருந்த இடஒதுக்கீடு பறிபோனது. திருவண்ணாமலை, ராஜபாளையம், ஈரோடு என்று முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடித்தன. உயிர்ச்சேதம், பொருள் சேதத்தோடு சென்னை மாகாண இஸ்லாமியர்கள் அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள நேரிட்டது.

முஸ்லிம்களுக்காக துவங்கப்பட்ட 'அரசு முகம்மதன் கல்லூரி'யை அன்றைய காங்கிரஸ் அரசு பொதுக் கல்லூரியாக மாற்றி, நாளடைவில் அது மகளிர் கல்லூரியானது. இந்த நெருக்கடிகளுக்கு இடையே கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயிலின் கடின முயற்சியால் சமூகம் ஒன்று திரண்டு, இழந்த அரசுக் கல்லூரிக்கு பதிலாக, சென்னை மாகாணமெங்கும் பல தனியார் கல்லூரிகளை உருவாக்கியது.

MUSLIMபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பல நூற்றாண்டுகளுக்கும் மேலாகக் கடல் கடந்து தென் கிழக்கு ஆசியாவில் வணிகம் செய்து, பொருளாதாரத்தில் மேம்பட்டிருந்த தமிழ் முஸ்லிம்களால், கல்லூரிகளை உருவாக்க முடிந்தாலும் அரசியலில் சமபங்கு என்பது எட்டாக்கனியானது. அதை பெறுவதற்கு மீண்டும் திராவிட இயக்கம் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக எழும் வரை காத்திருக்கவேண்டிய சூழல்.

திராவிட இயக்கத்தின் ஆரம்ப காலகட்டத்திலேயே நீதிக் கட்சி இஸ்லாமியர்களை திராவிடர்கள் என்று வரையறுத்தது மட்டுமல்லாமல் கிலாஃபத் போராட்டத்தில் ஆதரவு, சர் சையத் உஸ்மானுக்கு அமைச்சரவை பதவி, முஸ்லிகளுக்கு இடஒதுக்கீடு, யுனானி கல்வி என்று பல உரிமைகளை அளித்தது. காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த தந்தை பெரியார், இஸ்லாத்தின் சமூக நீதியையும் சகோதரத்துவத்தையும் தனது மேடைகளில் பெரிதும் ஆதரித்துப் பேசினார்.

1940களில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிடினும் பெரியாரின் தலைமையிலான திராவிட இயக்கம், திராவிடர் கழகமாக உருவெடுத்தபோது இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுத்தது. அதே போல் இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபையில் திராவிட இயக்கம் இல்லாத குறையை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் தனது வாதங்களின் மூலம், தமிழை தேசிய மொழியாக்கவும் இடஒதுக்கீடுக்காகவும் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1950களின் இறுதியில் மீண்டும் திராவிட இயக்கத்தின் மாபெரும் அரசியல் சக்தியாக தி.மு.க. தலையெடுத்து, பேரறிஞர் அண்ணா சுட்டிக்காட்டிய பின்னர்தான், இந்தியா சுதந்திரம் அடைந்து 15 வருடங்கள் கழித்து ஒரு இஸ்லாமியருக்கு சென்னை மாகாண அமைச்சரவையில் மீண்டும் பதவி கிடைத்தது. 1962ல் காமராஜரின் மூன்றாவது மந்திரிசபையில், சங்கரன்கோவிலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் மஜீது உள்ளாட்சித் துறை அமைச்சராக்கப்பட்டார். சட்டமேலவையில் முஸ்லீம் உறுப்பினர்களே இல்லாத நிலையில் தி.மு.கதான் முஸ்லீம் லீகைச் சேர்ந்த திருச்சி அப்துல் வஹாப் ஜானியை மேலவை உறுப்பினராக்கியது.

1938ல் இந்தி எதிர்ப்பு போரட்டத்தில் தந்தை பெரியாரோடு களத்தில் இறங்கிய தமிழ் முஸ்லிம்கள் 1965ஆம் வருட இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவுடன் பின்னிப் பினைந்தனர். அச்சமயம் திமுகவின் பொதுக்குழுவில், "மத சிறுபான்மை அணி அமைக்கவேண்டும்" என்றெழுந்த கோரிக்கையை, அறிஞர் அண்ணா "காயிதே மில்லத் தலைமையிலான முஸ்லீம் லீக் நட்புக் கட்சியாக இருக்கும் போது அது தேவையில்லை" என்று மறுத்துவிடும் அளவிற்கு முஸ்லீம் சமூகத்தோடும் லீகோடும் திமுகவின் உறவு இருந்தது.

MUSLIM

சுதந்திரத்தின்போது சென்னை மாகாணத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அங்கம் வகித்த முஸ்லீம் லீக், மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் சென்னை மாகாண சட்டசபையில் 1967ல் திமுகவுடன் கூட்டணி கட்சியாக சட்டசபைக்குள் காலடி எடுத்துவைக்க முடிந்தது. முஸ்லீம் லீக் சார்பாக மட்டுமல்லாமல் தி.மு.க. சார்பாகவும் முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர், அமைச்சரவையில் இடம் என்று பல அரசியல் பொறுப்புகளுக்கு வந்தனர்.

1967ல் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த நேரத்தில் அச்சிரப்பாக்கத்தை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கும், பெருநாள் தொழுகை நடத்துவதற்கும் பெரும் பிரச்சனை ஏற்பட்டிருந்தது. தில்லியில் இருந்த காயிதே மில்லத் மூலம் செய்தி அறிந்த முதல்வர் அண்ணா, தனது மேற்பார்வையில் எந்த தடங்கலுமின்றி பெருநாள் தொழுகையை நிறைவேற்றவும் அங்கு பள்ளி கட்டுவதற்கும் ஆவண செய்தார்.

அண்ணாவின் மறைவுக்கு அடுத்து வந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்கள் இழந்தவற்றுக்கு ஈடாக கலைக் கல்லூரி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கை, யுனானி படிப்பு என்று பல உரிமைகளை மீட்டது மட்டுமல்லாமல் மீலாது விழாவிற்கு விடுமுறை போன்ற சலுகைகளையும் பெற்றனர்.

1990கள் தான் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் மோசமான காலகட்டம் என்று கூறலாம். இதற்கு முன்னர் தமிழ் இஸ்லாமிய சமூகம் நெருக்கடிகளை சந்திக்காமலில்லை. 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாஸ்கொ டா காமா இந்தியாவுக்கு கடல் வழியில் கோழிக்கோடு வந்தடைந்ததிலிருந்து பிரச்சனை ஆரம்பித்தது. படிப்படியாக முஸ்லிம்கள் கடல் வணிகத்தில் இருந்து ஒடுக்கப்பட்டு, ஆங்கிலேய ஆட்சியில் முற்றிலும் ஒதுக்கப்பட்டனர்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை கோடிகட்டிப் பறந்த கடல்வழி வணிகத்தின் எச்சமாக இன்று "மரைக்காயர்" என்ற பட்டப்பெயர் மட்டுமே அவர்களிடம் உள்ளது. கடல் வணிகத்தில் முஸ்லிம்களின் வீழ்ச்சி தமிழகத்தின், இந்தியாவின் வீழ்ச்சியும் கூட. இதனை நன்கு உணர்ந்த அன்றைய ஆட்சியாளர்களான கோழிக்கோடு சாமுத்ரியிலிருந்து இராமநாதபுர சேதுபதிகள் வரை முஸ்லிம்களுக்கு தங்களால் இயன்றவரை உறுதுணையாக இருந்தார்கள். அதே போல் இந்திய பிரிவினைக்குப் பின்னர் தமிழக முஸ்லிம்களுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது திராவிட இயக்கமும் பின்னர் தி.மு.கவும் உறுதுணையாக இருந்தனர்.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

அதுவரை ஒற்றுமையாக பிரச்சனைகளை எதிர்கொண்ட முஸ்லிம்கள் 1990களில் முதன்முறையாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் அவலம் ஏற்பட்டது. ஒரு புறம் "பரிணாம வளர்ச்சி" பெற்ற திராவிட ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார் செல்வி ஜெயலலிதா. இன்னொரு புறம் இஸ்லாமிய தூய்மைவாதம் அல்லது வஹாபியம் பேசி, கடுங்கோட்பாடுகளை முன்னிறுத்தும் அடிப்படைவாத இயக்கங்களின் அசுர வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தன.

தமிழ் இஸ்லாமிய சமூகத்தில் புரையோடிப் போயிருந்த வரதட்சணை மற்றும் சில மூடப் பழக்கவழக்கங்களை எதிர்த்த இந்த இயக்கங்களின் ஆரம்பகால செயல்பாடுகள் தமிழ் இஸ்லாமிய இளைஞரிடையே அமோக வரவேற்பை பெற்றன. விரைவிலேயே இந்த இயக்கங்கள் பன்மைத்துவ சமூகத்தின் யதார்த்தம் புரியாமல், இஸ்லாமியரை பிற சமூகத்தவருடன் இணைக்கும் பாலமாக விளங்கிய தர்ஹாக்கள், மீலாது விழாக்கள், கலை, கலாச்சாரம் ஆகியவற்றை தூய்மைவாதம் பேசி எள்ளி நகையாட ஆரம்பித்தன. பாபர் மசூதி இடிப்பு என்று இந்துத்வம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய முக்கிய தருணத்தில் இஸ்லாமிய சமூகம், பிளவுபட்டு போனது பெருந்துயரம்.

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் மீலாது விழாக்களுக்கு பின்னணியில் தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் பாரம்பரியம் உண்டு. சுதந்திரத்திற்கு முன்னதாக, இஸ்லாமியர்களுக்கு சமூக விழிப்புணர்வு ஊட்டவும், அரசியல்படுத்தவும் தந்தை பெரியார், மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா என்று பல தலைவர்கள் இஸ்லாமியர்களுடன் நேரடியாக உரையாட, மேடையமைத்துக் கொடுத்த மதநல்லிணக்க விழா அது. அப்படிப்பட்ட ஒரு மீலாது விழா மேடையில்தான் திருவாரூரில் அறிஞர் அண்ணா முதன்முறையாக மு.கருணாநிதியை சந்தித்தார்.

இந்தப் பாரம்பரியமிக்க மீலாது விழா, அடிப்படைவாத இயக்கங்களால் ஷிர்க் (இணை வைப்பது) என்று கண்டனத்துக்கு உள்ளானது. இதில் வேடிக்கை என்னவென்றால் அதுவரை சென்னையில் நூற்றாண்டுக்கும் மேலாக எந்த பிரச்சனையுமின்றி மீலாது விழா ஊர்வலம் நடத்தி வந்த முஸ்லிம்களுக்கு செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியில் அதைக் கைவிட வேண்டிய நிர்பந்தம்.

இவர்கள் பட்டியலிட்ட ஷிர்க்கில் தமிழகத்தில் கட்சி, மத பேதமின்றி அனைவரும் ரசித்த நாகூர் ஹனீபாவின் பாடல்களும் அடங்கும் என்பது முஸ்லீம் அல்லாதவர்களுக்கு ஆச்சரியமாகப் படலாம். நாகூர் ஹனீபா வெறும் இஸ்லாமிய பாடகர் மட்டுமல்ல; தி.மு.கவின், திராவிட இயக்கத்தின் எழுச்சிக் குரல். தந்தை பெரியாரும், காயிதே மில்லத்தும், அறிஞர் அண்ணாவும், கோடானுகோடி தமிழர்களும் ரசித்த குரல். தி.மு.கவின் மாநில மாநாடுகள் அவருடைய இசைக் கச்சேரியுடன் துவங்கக்கூடிய சம்பிரதாயம் இருக்குமளவுக்கு முக்கிய குரல். இஸ்லாத்தில் இசை ஹராம் (தடுக்கப்பட்டது) என்று வாதிட்டவர்கள் நாகூர் ஹனீபாவின் பாடல்களையும் விட்டு வைக்கவில்லை.

MUSLIM

1990களில்தான் தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும்போக்கு சூடுபிடித்தது. சினிமா என்பது ஒரு ஊடகம் என்று புரிந்து கொள்ளாமல் ஹராம் பட்டியலில் சேர்த்தவர்களுக்கு அந்த வெகுசன ஊடகத்தின் வீரியம் புரியவே இல்லை. இந்த வலிமையான ஊடகத்தில், தலித் மக்களின் பிரச்சனையை தனது படங்களின் மூலம் விவாதத்திற்கு உட்படுத்தும் பா.ரஞ்சித் போன்ற ஒரு கலைஞனை, இன்றளவும் இஸ்லாமிய இயக்கங்களால் உருவாக்க முடியவில்லை. மனிதர்களை பண்படுத்தும் இலக்கியம் 'ஹராம்' என்று புறப்பட்ட இந்த தூய்மைவாத இயக்கங்களின் 'ஷிர்க்' பட்டியலில் மதசார்பற்ற திராவிட இயக்கம் தமிழ்ப்படுத்திய "வணக்கம்" ஷிர்க்கானதுதான் உச்சகட்டக் கொடுமை.

தூய்மைவாதிகளின் பிரச்சனையே புனித நூலை தேவைப்படும்போது நேர்பொருளில் மட்டுமே பார்ப்பது. ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கும் என்ற அடிப்படை தெரிந்திருந்தும் தமிழ் பண்பாட்டின் முகமன் "வணக்கத்தை" இறை வழிபாட்டுடன் குழப்பி, தமிழக இஸ்லாமிய இளைஞர்களை மண்ணோடு பிணைக்கும், வாழ்வை மேம்பட வைக்கும், கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றிலிருந்து அந்நியப்படுத்தினர். கலையை பிற சமூகத்துடன் பிணைக்கும் நட்புப் பாலமாகவும் ஒரு பாதுகாப்பு கேடயமாகவும் பயன் படுத்துவதற்கு பதிலாக முற்றிலும் புறக்கணித்தது இஸ்லாமிய சமூகத்திற்கு பேரிழப்பு.

இவையனைத்திற்கும் மேலாக கடுமையான நெருக்கடிக்கிடையே, இஸ்லாமிய சமூகத்தை கட்டிக் காப்பதற்காக காயிதேமில்லத் உருவாக்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் "ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் பிற கட்சிகளின் பின்னால் மாரடிப்பவர்கள்" என்று நையாண்டி செய்யப்பட்டது. நெகிழ்வுத்தன்மை கொண்ட மார்க்கத்தில், கடுங்கோட்பாடுகளை முன்வைக்கும் அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கங்களே இஸ்லாமியர்களுக்கு ஒரே அடைக்கலம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. விளைவு, சில குடும்பங்கள் மட்டும் பிளவு படவில்லை, பல முஸ்லிம் ஜமாத்துகளும் பிளவுபட்டுப் போயின. முதன்முறையாக பல குடும்பங்கள், ஜமாத் தலைவர்கள் காவல் நிலையம் ஏற வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. தவறான வழிகாட்டுதலால் பல இளைஞர்கள் இன்றும் சிறையில் வாடும் அவலம்.

முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அரசு வேலைகள் கிடைக்காவிடினும், காயிதேமில்லத்தின் பெருமுயற்சிக்குப் பின் திறக்கப்பட்ட முஸ்லீம் கல்லூரிகள், மற்றும் அவற்றை பின்தொடர்ந்து உருவான பொறியியல் கல்லூரிகளால் தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஆசியாவில் வேலை வாய்ப்பை பெற்று, முன்னேறிய பல முஸ்லீம் இளைஞர்களின் பொருட்கொடையால்தான் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் தமிழகத்தில் வளர்ந்தன என்பதுதான் நகைமுரண்.

MUSLIMபடத்தின் காப்புரிமைARUN SANKAR

இந்த அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கங்களின் வழிமுறைகளை சமீப காலமாக தமிழக தேர்தல் களமும், காலமும் மறு பரிசீலனை செய்ய வைத்துள்ளன. 2011ல் மீண்டும் தமிழக முதல்வரான செல்வி ஜெயலலிதா, சிறுபான்மையினரை அரவணைத்துச் செயல்பட்டார். இயக்கங்களுக்கு அல்லாமல் பொதுக் கட்சிகளுக்கே பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் வாக்களிக்கின்றனர் என்பதை தமிழக தேர்தல் களம் ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் தெளிவாக நிரூபித்துள்ளது.

இயக்கங்களிடையே மிகப் பெரியதும் கட்டுக்கோப்பானதுமானதுமான இயக்கம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத். 2014 பாராளுமன்ற தேர்தலில் அது எடுத்த நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அதன் இயக்கத்தினரே வாக்களிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவ்வியக்கத்தின் "உணர்வு" இதழில் அதனை ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல், இனிமேல் தேர்தல் நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை தவிர்ப்போம் என்று அறிவித்தது. இன்று அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள், மோசமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, இயக்கத்தின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிட்டனர்.

இருப்பினும் 2016ல் சென்னை மாநகரம் பெருவெள்ளத்தால் அவதிப்பட்டபோது இஸ்லாமிய இயக்க இளைஞர்கள் கோயிலிலிருந்து குடிசைகள் வரை ஆற்றிய மீட்புப் பணி, தமிழர்களின் கலாச்சார உரிமையை மீட்டெடுக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த பிற போராட்டங்களில் பங்கெடுப்பு போன்றவை இயக்கங்களில் நடைபெற்றுவரும் நல்ல மாறுதல்களை சுட்டிக்காட்டுகின்றன. 1990களில் ஆரம்பித்த பிளவு மறையும் இவ்வேளையில், தமிழகம் புதிய, மாபெரும் சவால்களை எதிர் நோக்கியுள்ளது.

https://www.bbc.com/tamil/india-44649920

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.