Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்வை – அனோஜன் பாலகிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்வை – அனோஜன் பாலகிருஷ்ணன்

1981-இல் அச்சாகிய ஈழநாடு பத்திரிகையில் வெளியான இந்த துண்டுச்செய்தியை வாசிக்காமல் இக்கதைக்குள் செல்ல முடியாது என்பதால் இதை வாசித்தே ஆகவேண்டிய கட்டாயம்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரியருகே தமிழ் புதிய புலிகளின் தலைவர் செட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரருகே கழுத்திலிருந்த மட்டையில் “தேச விடுதலைக்காகச் சேர்த்த பணத்தைக் கையாடல் செய்ததற்காகவும்சகதோழர்களை சிங்கள இனவாத அரசுக்கு காட்டிக்கொடுத்ததற்காவும் இந்த மரணதண்டனை வழங்கப்படுகிறது” என்று எழுதப்பட்டிருந்தது. வீதியில் அனாதரவாக வீசப்பட்ட அவரின் சடலம் கருப்புப் போர்வையால் மூடப்பட்டிருந்தது.

1

மேயர் அல்பேர்ட் துரையப்பா ‘முஸ்தபா’ தையல்கடையில் மிகச்சாதாரணமாக தேநீர் ஆவிபறக்க தகர மூக்குப் பேணியுடன் அமர்ந்திருந்தார். தையல் இயந்திரத்திலிருந்து சடசடக்கும் ஒலி எழுந்து எழுந்து அமர்ந்து பரவிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் இங்கே வருவது வழமை. யாழ்ப்பாண பட்டினத்தில் சனநெருக்கடி மிக்க பகுதிக்குள் அந்தத் தையல் கடை ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது. யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை   அந்தக்கடையில் அடிக்கடி காணமுடியும் என்பது மக்களுக்குத் தெரிந்தே இருந்தது. வீதியில் நடந்து செல்லும்போது வணக்கம் சொல்லும் அனைவர்க்கும் புன்னகைத்தவாறே வணக்கம் சொல்வது சளைக்காமல் நடைபெறும் ஒன்று.

இன்று அவர் கையோடு போர்வை ஒன்றை எடுத்து வந்திருந்தார். அதன் இருபுறத்தையும் தையலோடி இறுகத் தைக்க வேண்டியிருந்தது. எவ்வளவு வற்புறுத்தியும் முஸ்தபா தைத்ததற்கு கொடுத்த கூலியை வாங்க மறுத்தான். இருந்தாலும் பலவந்தமா “பிடியும் ஐசே” என்று காசை திணித்துவிட்டு, தன் வெள்ளை வேட்டி சட்டையை நீவிவிட்டுக்கொண்டு புறப்பட ஆயர்தமானர்.

அப்போதுதான் தம்பி அவர்கள் முன் மெல்லிய காற்றெனத் தோன்றினான். துரையப்பாவை நேர்கொண்ட பார்வையில் பார்த்துக்கொண்டே இடுப்பில் மறைத்துவைத்த கைத்துப்பாக்கியை எடுத்தான். துரையப்பா சுதாகரித்து தடுமாற முஸ்தப்பா குறுக்கே பாய்ந்தான். கணப்பொழுதில் முதலாவது குண்டு வெடித்தது. சனம் துப்பாக்கி வேட்டோசையினால் வெருண்டு அக்கம்பக்கம் சிதறி ஓடத்தொடங்கியது. துரையப்பா திகைத்து பின்வாங்கி கடைக்குள் நுழைய அவர் கையிலிருந்த போர்வையை ஏறக்குறையப் பறித்தவாறு யாரோ ஒருவன் ஓடத் தொடங்கினான். தோள்பட்டையில் இரத்தம் வடிய முஸ்தபா கடைக்குள் துரையப்பாவை தள்ளிக்கொண்டு புகுந்தான்.

தம்பி அந்தக்கனவை மீண்டும் மீண்டும் தனக்குள் ஓட்டிப்பார்த்தான். அவன் மீதே அவனுக்கு எரிச்சல் வந்தது. எத்தனைத் தடவையோ துரையப்பாவை கொல்லவேண்டும் என்பது அவனது வாழ்நாள் திட்டமாக இருந்தது. இன்றுதான் அவரைக் கொல்ல முயல்வது போல கனவுவந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்பதை கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. முஷ்டியை மடக்கி காற்றில் குத்தினான்.

2

வரும் மாதம் குடியரசு தினம் வருகிறது. ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். கடல் காற்றின் இரைச்சலை மீறி மேடை உக்கிரம் கொண்டிருந்தது. பெற்றோமக்ஸின் வெளிச்சம் குழுமியிருந்த மக்களின் முகத்தில் பட்டுத்தெறித்தது.

தம்பியும் அவன் நண்பர்களும் இந்த விஷயத்தில் உறுதியாகத்தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் மீசை துளிர்விடும் பதின்ம வயதுகளின் இறுதியில் இருந்தார்கள். மூன்று நாட்களுக்கு மேல் ஹர்த்தால் செய்யவேண்டும். ஒட்டுமொத்தமாகத் தமிழர்களின் எதிர்புணர்வை சிங்கள அரசுக்குக் காட்டவேண்டும். எல்லோருக்கும் ஒருமித்த உணர்வுதான் இருந்ததாகத் தோன்றியது தம்பிக்கு. கூட்டத்திலிருந்து தம்பியும் நண்பர்களும் விலகி தனியாகப் பிரிந்து நடந்தார்கள். பனைமரத்தில் கட்டியிருந்த ஒலிபெருக்கி கருவிகள் உக்கிரமாக அலறியவாறிருந்தன.

நிலவு விரிந்த ஒளிகளைச் சிதறவிட்டிருக்கும் வல்வெட்டித்துறை கடற்கரையில் அரசப் பேருந்து ஒன்றை எரிப்பதாகத் தம்பியும் அவனின் இரண்டு நண்பர்களும் திட்டம் தீட்டியதைச் சங்குகளும் சிற்பிகளும் ஈரம்படிந்த மண்ணில் காதைச் சாய்ந்து கேட்டுக்கொண்டிருந்தன.

நண்பர்கள் அனைவரும் சென்றுவிட தம்பி தனியே கடற்கரையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அலைகளின் மேலே நுரைகள் வெடித்து பொடிப்பொடியாகி உதிர்ந்து கொண்டிருந்தன. அப்படியே ஈர மண்ணில் தலையைச் சாய்த்து அண்ணார்ந்து வான் பார்த்துப் படுத்தான்.

இருட்டு அடர்த்தியில் வீழ்ந்து களைத்திருந்தது. மெல்லிய கீறலாக ஒளிபடர அவள் விண்ணிலிருந்து விடுபட்ட பறவையின் இறக்கையின் அலைவில் கீழே மிதந்துவந்தாள். தம்பி அவளையே பார்த்தவாறிருந்தான். நெருங்க நெருங்க அவள் உருவம் ஜொலித்து பிரகாசமாகி துலக்கம் அடைந்தது. அவளின் ஒளியின் முன்னால் நட்சத்திரங்கள் சோகை இழந்து கரைந்தன. அலைகள் பாதத்தின் விளிம்பு வரை நுரைத்துக்கொண்டு எழுந்து வந்து தழுவிச் சென்றன. அப்போதுதான் அவளின் வருகை நிகழ்ந்துகொண்டிருந்தது. அவளின் கையில் ஒரு போர்வை இருந்ததைத் தம்பி கவனித்தான்.

தேவதையின் வருகை ஒன்றை இச்சமயம் அவன் எதிர்பார்க்கவில்லை. இளம் சூடு உடலில் படர எழுந்துகொள்ள முயற்சி செய்தும் முடியாமல் அச்சத்தின் எல்லையில் தடுமாறி சிதறிக்கொண்டிருந்தான்.

புன்னகை குமிழ அவனை உற்றுப்பார்த்து, கையிலிருந்த போர்வையை அவள் கொடுத்தாள். மறுப்பேதும் சொல்ல இயலாதா தன்மையில் தன் இருகரம் நீட்டி தம்பி அதனை வாங்கினான். வெதுவெதுப்பில் போர்வை கையில் கசந்தது.

3

செட்டிக்கு சொந்தவூர் கல்வியங்காடுதான். தனபாலசிங்கம் என்பது தான் அவர் பெயராக இருந்தாலும் செட்டி என்ற பெயரிலே அனைவருக்கும் தெரிந்தவராக இருந்தார். கொஞ்சம் தடித்த குரல்தான். கவர்ச்சியாக உரையாடக்கூடியவர். கருகரு முடி கருவேப்பிலை கொழுந்தை நினைவுபடுத்தும்.

செட்டியைக் கண்டபோது பெரும் திடுக்கிடலாகவே இருந்தது மகேஸ்வரனுக்கு. நல்ல வெளிச்சம் கூடியிருக்கும் பொழுதிலே அவரின் வீடு வந்து சுதந்திரமாகச் சந்தித்தார்.

“வந்தாச்சோ?”

“தப்பியாச்சு”

“என்ன?”

“நானும் பத்மநாதன், சிவராசா, ரத்னகுமாராக தப்பீட்டம்”

“எப்படி?”

“அதை பேந்து சொல்லுறன்; இப்ப எனக்கொரு உதவி தேவை”

மகேஸ்வரன் தமிழீழ ஆதரவாளர்தான் என்றாலும் கொஞ்சம் பயந்த சுபாவம் உடையவர். இலங்கை சிங்கள அமைச்சர்களை வரவேற்று அழைத்துவந்த அருளம்பலத்தின் வலதுகையான குமாரகுலசிங்கத்தை இவர்கள் தான் தட்டினார்கள் என்ற செய்தியை நன்கறிந்தவர் மகேஸ்வரன். காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு அனுராதபுர சிறையில் தண்டனைக்காலத்தில் இருப்பவர்கள். எப்படி தப்பித்தார்கள். எழுந்து திமிரும் கேள்விகளையும் பதற்றத்தையும் மறைத்து “என்ன உதவி?” என்றார்.

“எனி தனிநாடு அமைக்க முற்றுமுழுதாக போராடுவதாக இருக்கிறோம். அரச படைகளுடன் சண்டை பிடிக்க ஆயுதங்கள் தேவை, அதற்கு காசு நிறைய வேணும்… நீர்தான் ஏற்பாடு செய்யோணும்”

விலங்கமான விசயமாகப்பட்டது. மகேஸ்வரன் வல்வெட்டித்துறையில் பிரபலமான கடத்தல்காரர்தான். குட்டிமணி, தங்கதுரை அளவுக்குப் பிரபலம் இல்லை எனினும் சளைக்காமல் தூத்துக்குடிக்கு வள்ளம்விட்டு சீலை,தங்கம் என்று பெரிய கைபார்த்துக் கொண்டிருந்தவர். சமாளிக்க எண்ணம் மனதில் எழுந்தது.

“செட்டி உமட நோக்கம் நல்ல நோக்கம்தான், ஆனாப்பாரும் இப்ப நிலைமை சரியில்லை..”

செட்டியின் முகம் இருண்டுவந்தது. அதைக்கவனிக்கத் தவறாத மகேஸ்வரன் இன்னும் குரலை சரிப்படுத்தி நீண்ட நேரம் கதைத்தார்.

“இப்ப உமக்கு ஏற்ற ஆக்களை நான் சொல்லுறன், அவையளோட போய் நில்லும்”

“ஆர்?”

“தம்பியோடையும் அவன்ர கூட்டாளியளோடையும்”

“தம்பியா, ஆர் அவன்?

4

தம்பியும் அவன் கூட்டாளிகளும் மூன்று நாள் சாப்பாடு இல்லாமல் மறைவாக அலைந்தார்கள். மரவள்ளிக்கிழங்குதான் தோட்டத்தில் பிடுங்க முடிந்தது. கிடைத்த கிழங்குகளை காற்சட்டை பொக்கற்றில் அடைந்து பசிக்கும்போது சருகுகளைக் குமித்து சுட்டுச் சாப்பிட்டார்கள். சேர்ந்து இயங்குவது அபாயமானது. பிரிந்து திரிவோம் என்று முடிவெடுத்த போது சில்வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

தம்பி வந்து சேர்ந்த போது குட்டிமணியும் தங்கதுரையும் ஒன்றாகவே இருந்தார்கள். ஒருசேர புன்னகை உதட்டில் வெடித்தது.

“அடேய்..” என்றார் தங்கதுரை. அவரின் கேசம் உப்புக்காற்றில் அலைந்தது. இடக்கையால் கோதி அமைதிப்படுத்தினார். தம்பி அவர் அருகில் வந்து “தேடுகிறார்கள்..” என்றான்.

“கேள்விப்பட்டோம், மிச்சாட்கள் எங்க?”

“கலைஞ்சிட்டம் நான் மட்டும் இங்கே வந்திட்டன்”

“அதுவும் நல்லதுதான், இப்போதைக்கு ராமேஸ்வரம் போய் கொஞ்ச நாள் இரு”

“நாளண்டைக்கு வள்ளம் ஒண்டு போகுது, போறியா?” இதுவரை அமைதியாவிருந்த குட்டிமணி செம்பிலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு மீதித் தண்ணீரில் கொப்பளித்துக்கொண்டு கேட்டார். கொப்பளித்த தண்ணீர் மண்ணில் சட்டென்று ஊறிச் சென்றது.

தம்பி யோசிக்காமல் “சரி” என்றான்.

“சாப்பிட்டியா?”

“இல்லை”

“சரி வா சாப்பிடுவம்”

பாயில் மூவரும் அமர்ந்தார்கள். இறால் குழம்பு சட்டியில் இருந்தது. சுடச்சுட புட்டும் கனவாய்க்கறியும் வந்தது. கோப்பையில் செறிவாகக் கொட்டி சாப்பிடத் தொடங்கினார்கள். தம்பி எதுவும் பேசவில்லை. நிச்சயம் அற்ற தனிமை அவர்களிடம் ஊறியிருந்தது.

“எப்படி பிழைச்சது?”

“பஸ்ஸை மறிச்சுட்டோம், எல்லோரையும் இறக்கிவிட்டுவிட்டு நடு வீதியில் வைத்துத்தான் கொளுத்தினம்…விக்” சொல்லிக்கொண்டிருக்கும்போதே தம்பிக்கு விக்கியது.செம்பிலிருந்த தண்ணீரை தங்கதுரை எடுத்துக்கொடுத்தார். இரண்டு மிடக்கு குடித்துவிட்டு “அதற்குள்ள பொலிஸ் வந்திட்டு, என்னோட நிண்டவர்கள் ஓட வெளிக்கட்டாங்க, நானும் பாஞ்சுட்டேன்”

“அப்ப கொளுத்தேல்ல?”

“ஹும்..”

திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தபின் “அண்ணை இன்னும் எவ்வளவு காலம் தான் இந்தக்கடத்தல்? நாங்கள் முழு உக்கிரமாக எங்கட எதிர்ப்பைச் சிங்கள அரசுக்கு காட்டவேணுமல்லோ” என்றான் தம்பி.

“மேயர் என்னவாம்?” தங்கதுரை அதைப் பொருட்படுத்தாது கேட்க, விழிகள் மிளிர்ந்து கூர்மையடைய தம்பி அவரைப்பார்த்து “சீக்கிரம் துரையப்பாவை அனுப்போணும்” என்றான்.

மிளிர்ந்த கண்கள் சரிய அவனில் களைப்பையும் நித்திரைக்கான ஏக்கத்தையும் கவனித்த தங்கதுரை தம்பி படுப்பதற்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்யலானார். ஓலைப்பாயை இழுத்து தரையில் விரித்து தலையணி ஒன்றையும் எடுத்துப் போட்டார்.

“நுளம்பு வரும்; இந்தா போர்வை” என்று கம்பளிப்போர்வை ஒன்றைத் தூக்கி தம்பியின் கைகளில் எறிந்தார். நல்ல தடித்த போர்வை. இரண்டு பக்க கரையும் மடிக்கப்பட்டு அழுத்தமாகத் தைக்கப்பட்டிருந்தது.

மூன்றாம்நாள் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்ட படகில் தம்பியும் குட்டிமணியும், கடத்தல் பொருட்களுடன் இருந்தார்கள். அலைகளை உந்தித்தள்ளிக்கொண்டு படகு வேக வேகமாக ராமேஸ்வரத்தை நோக்கி முன்னேறிப் பாய்ந்தது.

5

செட்டி ராகவனையும் கணேஷ் ஐயரையும் சந்தித்தது இருள் கவியும் ஒரு மாலை வேளையில். மூடிய வீடு என்றாலும் ஹரிக்கன் மண்ணெண்ணெய் லாம்புகள் ஒளிர்ந்து மாறும் முகபாவனையனைத்தையும் ஆளாளுக்கு தெளிவாகக் காட்டியவாறிருந்தன. செட்டியுடன் தப்பித்து வந்த ரத்னகுமாரும் உடனிருந்தார்.

“எங்களைப்பற்றி ஆர் சொன்னது?”

“அதுபெரிய கதை; உங்களைப்பற்றித் தானே ஊரே கதைக்குது”

“என்ன கதைக்குது?” ராகவன் மோவாயை தடவிக்கொண்டு கேட்டார்.

செட்டி ஒருகணம் மௌனமாகிவிட்டு “சரி சொல்கிறேன், ஜீவராஜவுக்கு அடைக்கலம் கொடுத்தது நீங்களும் குலமும் தானே?”

அந்தப்பதில் கணேஷ் ஐயரையும் ராகவனையும் மௌனப்படுத்தியது. இது எப்படி வெளியே கசிந்தது என்ற சிந்தனை துளிர்விட ஆழமாக ஓர் இடத்தில் பயமும் அலைபாய்ந்தது. வட்டுக்கோட்டையில் எம்.பீயாகவிருந்த தியாகராஜா கடுமையான அரச ஆதரவாளராக இருந்தார். அவரை கொலைசெய்ய முயன்று தோல்வியடைந்து தேடப்படும் நபராக ஜீவராஜா இருந்தார். புன்னாலைக் கட்டுவனில் வைத்து தலைமறைவாக வாழ கணேஷ் ஐயரும், குலமும் கொஞ்சக்காலம் ஜீவராஜாவுக்கு உதவி புரிந்திருந்தார்கள்.

“உங்கட போராட்டம், மாணவர் பேரவையில் உங்கள் பங்களிப்பு எல்லாம் நல்லாய் தெரியும். தமிரசுக்கட்சி உங்களை நல்லாய் பயன்படுத்துது. நீங்க காட்டுற வேகம் அவர்களிடம் இல்லை…” செட்டி சொல்லிமுடிக்க ராகவனும் கணேஷ் ஐயரும் சந்தேகம் எழுந்து அலைந்து வடியும் கண்களை அசைத்தவாறு என்ன பதில் சொல்வதென்று யோசித்தனர். ஏற்கனவே அந்த விசனம் அவர்களிடம் பரவியிருந்தது.

“நாங்க தனியாக நின்று வேலை செய்யோணும், தமிழரசுக்கட்சியை நம்பிப் பிரயோசனம் இல்லை. ஆயுதப்போராட்டத்தை தொடங்க வேணும்” செட்டி படபடவென்று சொல்லிக்கொண்டு சென்றார். ரத்தினகுமாரன் மௌனமாகவே அவருடன் இருந்தார். நாழிகைகள் வீழ்ந்து கரைந்தவாறிருந்தன.

“சரி சாப்பிடுவோம்” ராகவன் அதற்கு தயாராகினார்.

வெள்ளைப்புட்டும் முருங்கக்காய் குழம்பும் வந்தது. பிசைந்து சாப்பிடும் போதும் கதைத்தார்கள். “ஆயுதங்கள் எடுக்கலாம், பயிற்சி எடுக்க இடமும் பார்க்கலாம். அதற்கு எல்லாத்துக்கும் காசு வேணும்” செட்டி தொடர்ந்தார்.

“அதுக்கு என்ன செய்யலாம் எண்டுறியல்?”

“கொள்ளையடிக்கோணும்”

“கொள்ளையா எங்க?” திடுக்கிட்ட குரலாக ஒலித்தது.

“தெல்லிப்பழை கூட்டுறவு சங்கம்” இதுவரை மௌனமாகவிருந்த ரத்தினகுமார் இப்போது வாய்திறந்தார்.

“இப்ப நாங்க உங்களுக்கு என்ன செய்ய வேணும்?”

“கொஞ்ச நாள் தங்க இடம் வேணும்”

கணேஷ் ஐயரும் ராகவனும் சிறிய யோசனைக்குப்பின் சம்மதித்தனர்.

“தம்பிய உங்களுக்குத் தெரியுமா?” செட்டி சாரத்தை இறக்கி இழுத்துக் கட்டிக்கொண்டு அவர்களிடம் அதைக் கேட்டார்.

“தம்பியா; யார்ட தம்பிய?”

“பஸ் எரிக்கப்போய் பிரச்சினை பட்டாங்களே வல்வெட்டித்துறை பொடியல், அந்த செட்டை  தெரியுமா?”

உதட்டை பிதுக்கி இல்லை என்றார்கள்.

“துணிச்சல்காரப் பொடியல், அவங்களோடையும் கதைக்கோணும்”

“சரி நாளைக்கு காலை கதைப்பம். எனக்கு விடிய அஞ்சு மணிக்கு கோயில  பூசை இருக்கு, நான் போகோணும் இப்ப படுப்பம்” என்று கணேஷ் ஐய்யர் படுக்க தயாராக எல்லோரும் உறங்கச் சென்றார்கள். இருள் முற்றாகக் கவிந்து மூடியிருந்தது.

6

porvai.jpg

தங்கதுரை இளனியை சீவிக்கொண்டிருத்த போது தம்பி பக்கத்திலே தீவிர யோசனையுடன் இருந்தான். மீன் வலைகள் வெயிலில் காயப்போட்டிருந்தார்கள். கொக்குகள் தங்கள் வெளிர்நிற இறக்கைகள் திறந்து மூடியவாறு வலைமேல் நடந்து இரை கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் நீண்ட அலகுகளால் தேடியாவறிருந்தன. வெயில் இன்னும்இன்னும் செறிவடைந்துகொண்டே சென்றது. நடைச்சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். செட்டியும் மேலும் இருவரும் அவர்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.

வெட்டிய இளனியை தம்பிக்கு கொடுத்துக்கொண்டு செட்டியை தங்கதுரை பார்த்தார். செட்டியிடமிருந்து சிநேகமான புன்னகை ஒன்று ஒளிர்ந்தது.

“என்ன செட்டி இந்தப்பக்கம்?”

“எல்லாருக்கும் அடைக்கலம் இப்ப இந்தியா தானே.. ஹஹா. உங்களைத் தேடித்தான் இதுக்கால வந்தோம், தெல்லிப்பழை கூட்டுறவு சங்கதில் கொள்ளையடிச்சுட்டோம்.”

“உண்மையாகவா?” தங்கதுரையின் குரலில் நிஜமாகவே ஆச்சரியம் இருந்ததை தம்பி கவனித்தான்.

“97 ஆயிரம் ரூயாய் தேறிச்சு ஆயுதம் வாங்கப்போறம் எனிமேல் சண்டை தான்.” உற்சாகமான வார்த்தையில் செட்டி சொல்ல, தம்பியின் கண்கள் செட்டியின் கண்களைச் சந்தித்துக் கலந்தது. அந்தளவு காசு அப்ப தமிழரசுக் கட்சியிடம் கூட இருந்திருக்குமோ தெரியாது. பெரும் பணம் செட்டியின் வித்தையில் சிக்கியிருந்தது.

“நீதான் தம்பியா?” செட்டி அவனைப் பார்த்துக் கேட்டார். தம்பி தலையை அசைத்தான்.

“என்னப்பா என்னை வெருண்டு பார்க்கிறீர், உம்மைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நல்ல தைரியமான பொடியனாமே நீர், கொப்பற்ற பேரென்ன?”

“வேலுப்பிள்ளை”

அவர்களுக்கு இடையிலான சந்திப்பு இப்படித்தான் ஆரம்பமாகியது. தங்கதுரைக்கு அது பிடிப்பில்லாமல் இருந்தது. அடிக்கடி தம்பியும் செட்டியும் சந்திப்பதை ஆட்சேபிக்கத் தொடங்கினார்.

“செட்டி கிரிமினல். கொள்ளைக்காரன். ஏகப்பட்ட வழக்குகள் அவனிடம் இருக்கு. சின்ன வயசிலே சீர்சிருத்தப் பள்ளிக்குப் போய் வந்தவன். அவனுக்கு தேசவிடுதலை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தன்னை காக்க இதை இப்ப போர்வையாக அணித்து கொள்றான் அவனோட சேராத..”

நீங்களும் கடத்தல் தானே செய்றியல் என்ற கேள்வி தம்பியின் தொண்டைவரை வர அவசரமாக விழுங்கினான். “அண்ணை, நீங்கள் கடத்தல் செய்தாலும் உங்களிட்ட இருக்கிற தேசவிடுதலை உணர்வு பற்றி எனக்கு நல்லாய் தெரியும். ஆனா உங்களை வெறும் கடத்தல்காரனாகத்தான் எல்லாரும் பாக்கினம். செட்டியில குறைபாடுகள் இருக்கலாம். ஆனா கெட்டிக்காரர் அவருடைய திறமையை இங்கால திருப்பிவிட்டா சரி”

“மயிர திருப்புவாய், அவன் ஒட்டுண்ணி, அவனால் அழிவுதான் எஞ்சும்” கடுமையாகவே தங்கதுரை அவனின் விழிகளை ஊடுருவி பார்த்துச் சொன்னார்.

ஆனால், தம்பிக்கு செட்டியின் பேச்சு மீது அதீத ஈர்ப்பு கிளைவிட்டுப் படர்ந்தது. தொடர்ந்து கடத்தலை செய்துகொண்டு அப்ப அப்ப எதிர்ப்புகளை அரசாங்கத்துக்கு காட்டுவதில் தம்பிக்கு விரும்பம் இல்லை. தங்கதுரையின் பேச்சை மீறி செட்டியிடம் விரும்பிப் பழக விரும்பிக்கொண்டே இருந்தான். அவர்கள் கோடாம்பாக்கத்தில் மூடிய அறையில் சந்தித்து அதிக நேரம் பேசினார்கள்.

7

செட்டியும் தம்பியுமாக மீண்டும் வள்ளத்தில் வந்து வல்வெட்டித்துறையில் இறங்கினார்கள் நல்ல மத்தியானப் பொழுதில். தண்ணீர் விடாய்த்துக்கொண்டே இருந்தது. கைவசம் தண்ணீர் போர்த்தல் இருக்கவில்லை. குடிசைக்கு வந்தவுடன் தம்பி தண்ணீரை வாளிக்கால் அள்ளி அள்ளிக் குடித்தான். அதைப்பார்த்துக் கொண்டு செட்டி சொன்னார் “உன் தாகம் பெரிய தாகமாக மாறவேண்டும்”

தம்பி நிமிர்ந்து அவரைப் பார்த்தான். இருவருக்கும் அதன் அர்த்தம் புரிந்தது. கண்களால் சைகை செய்தார்கள்.

“நமது அடுத்த திட்டம் துரையப்பாவை தட்டுறதுதான்” செட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.

“திட்டம் வகுக்கவேணும்”

“அல்பிரட் துரையப்பாவை தட்டினால் பெரிய மாற்றம் உண்டாகும். அவனால் தான் தமிழர் ஆராட்சி மாநாட்டில் பதினோரு பேர் அநியாயமாக சாகடிக்கப்பட்டார்கள். துரோகிகளைச் சாய்க்கோணும்” செட்டியின் பேச்சு சீரான அம்பாகப் பாய்ந்து கொண்டேயிருந்தது. “நான் பிஸ்டல் எடுத்துத் தருகிறேன், உனக்கு நம்பிக்கையான பொடியலை வைத்துக்கொள்”

அந்தக் காலத்தில் துருப்பிடித்த துப்பாகிகள்தான்; கிடைப்பதும் சுலபம்தான். சுட்டால் எந்தப் பக்கம் சுடும் எனத் தெரியாது. குறி பார்த்து சுடுவது விசர் வேலை. குத்து மதிப்பில் சுட வேண்டியதுதான். மேயர் தரவளி முக்கிய புள்ளிகளை போடுவதானால் துப்பாக்கியின் குறியை அதிஷ்ட தேவதையிடம் விட முடியாது என செட்டிக்கு தெரியும்.

தங்கதுரையும் குட்டிமணியும் தம்பியை அடிக்கடி தொடர்புகொள்ள முயன்றாலும், அவனைப் பிடிப்பது கடினமாகவே இருந்தது. கிருபாகரன், கலாவதி, நற்குணராஜா என்ற மூன்று பேரோட தம்பி சுற்றித் திரிவதாகக் கேள்விப்பட்டார்கள். செட்டியுடன் தம்பி இருப்பது அவர்களுக்குக் கவலையே தந்துகொண்டிருந்தது.

8

பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு மொரிஸ்மைனர் காரில் அல்பேர்ட் துரையப்பா வந்து சேர்ந்தார். மிக அமைதியாக இருந்தது சூழல். கைகளை மடக்கிவிரித்துச் சோம்பலை விரட்டினார். கோயில் வாசலில் இருந்து மணிச்சத்தம் கேட்க ஆரம்பித்திருந்தது. சிலிப்பரை காருக்குள் கழட்டிவிட்டுவிட்டு இறங்கினார். நிலம் குளிர்ந்தது. அவர் ஒரு கிறித்தவர். யாழ் சனங்களை மடக்க அவர் எல்லாக் கோவிலுக்கும் போவார். வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அடிக்கடி போவதும் வழக்கம்.

“வணக்கம் ஐயா” என்ற குரல் அவரை நோக்கி மெதுமெதுப்பான பாம்பென சலனம் இல்லாமல் வந்தது. மூன்று யுவன்கள் நின்றிருந்தனர். புன்னகை படர வணக்கம் என்று சொல்லிய ஒரு கணப்பொழுதில் அவரை நோக்கி முதலாவது துப்பாக்கி குண்டு வந்தது. அடுத்த கணத்தில் அடுத்த குண்டு வந்தது. சுதாகரிக்க முதல் வீரிட்டு அலறிக்கொண்டு நிலத்தில் சாய்ந்து வீழ்ந்தார் துரையப்பா. குருதி கொப்பளித்துக்கொண்டு பாயத்தொடங்கியது.

மொரிஸ்மைனர் டிரைவர் பதறி அடித்து கதவை திறக்க அவரை இழுத்து தள்ளியது ஒரு உருவம். சில கணத்தில் சுட்டவர்களைத் தாங்கியபடி மொரிஸ்மைனர் வேகமாக எதிர் திசையில் சீறிப் பறந்து கொண்டிருந்தது.

அல்பேர்ட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார் என்கிற செய்தி நாடு முழுவதும் பரவியபோது தம்பி,கிருபாகரன், கலாவதி, நற்குணராஜா மூவரும் செட்டியுடன் இருந்தனர்.

“வலு திறமான வேலை” செட்டி உற்சாகத்தில் மிதந்து தத்தளித்துக் கொண்டிருந்தார். நேரம் நடுயிரவு பன்னிரண்டைத் தாண்டி அதிகாலை ஒன்றை எட்டிப்பிடிக்க விரைந்துகொண்டிருந்தது. தம்பி பாயில் படுத்து அப்படியே நித்திரையாகிப் போனான். செட்டி அருகிலிருந்த போர்வையை எடுத்து தம்பி மீது போர்த்துவிட்டார். அவன் கை போர்வையை அனிச்சையாக அழுத்திப் பற்றிக்கொண்டது.

மெல்லிய ஒளிக் கீறல். கொஞ்சம் செல்லச்செல்ல அந்த ஒளி பிரகாசமாகி ஒரு பெண் எனத் தோன்றியது. அவள் வானிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். அவள் முகம் அழுதுவடிந்து உக்கிரமாக இருந்தது. திடுக்கிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான் தம்பி. அவளின் கை நீண்டு அவனின் முன்பே வந்தது. “என் போர்வையை திருப்பித்தா” என்றாள் கோவம் தெறிக்க. தன்னில் சுற்றியிருந்த போர்வையை அவசரமாக அவிழ்த்துப்பிடுங்கி அவளிடம் நீட்டினான். போர்வை ஈரத்தால் பிசுபிசுத்தது. தொட்டுப்பார்க்கச் சிவந்த நிறத்தில் கையில் ஏதோ ஒட்ட கையை உதறி சுதாகரித்துப் பார்க்க இரத்தம் என்று புரிந்தது. தேகம் புல்லரித்து கையை உதறி திடுக்கிட்டுப் பார்க்க, தேவதையின் முகம் விகாரமாகிச் சென்றது.

“நீயே வைத்துக்கொள்.. நீயே வைத்துக்கொள்” என்று அலறிக்கொண்டே அவள் ராச்சத அன்னம் என சுழன்று தத்தளித்துப் பறந்தாள். தம்பி அவளையே வெறித்துப் பார்த்தவாறிருந்துவிட்டு பெருமூச்சுவிட்டு நிலத்தில் கையைக் குத்தினான். கையிலிருந்த இரத்தம் மண் முழுவதும் அப்பியது.

முற்றும்

அம்ருதா ‘ஆனி மாத’ இதழில் வெளியாகிய சிறுகதை.

 

http://www.annogenonline.com/2018/07/28/porvai/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.