Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் பார்வையிலேயே கலைஞரை கவர்ந்த தொண்டர்

Featured Replies

முதல் பார்வையிலேயே கலைஞரை கவர்ந்த தொண்டர் - பகுதி 1

 

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

கலைஞர்படத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP

கலைஞர் அவர்கள், 1970களில் மெரினா கடற்கரையில் காந்தி சிலையின் பின்புறமுள்ள மணல் பரப்பில் இரவு நேரங்களில் நண்பர்களோடு அமர்ந்து கடல் காற்றை சுவாசித்து பல விசயங்கள் குறித்து விவாதிப்பதுண்டு. அப்போது தூரத்தில் இருந்து ஈழப் போராளி நண்பர்களோடு பார்த்ததுண்டு. தன்னுடைய வாகனத்தில் ஏறும்போது வணக்கம் தெரிவித்தால், ஒரு நிமிடம் நின்று, யாரு, என்ன? என்று நலம் விசாரிப்பது கலைஞருடைய வாடிக்கை. அப்படித்தான் என்னுடைய முகம் அவருக்கு அறிமுகமானது.

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 1979-ஆம் ஆண்டில் இருந்து என்னை பெயர் சொல்லி அழைக்கும் அளவில் கலைஞர் அவர்களுக்கு பரிச்சயமானேன். தி.சு.கிள்ளிவளவனும், எம்.கே.டி.சுப்பிரமணியமும் (இவர் யாரென்றால் பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுகவை ராபின்சன் பார்க்கில் துவங்கிய நிகழ்ச்சியின் அழைப்பிதழில் இடம்பெற்ற 6, 7 பெயர்களில் இவரும் ஒருவர்), நானும் அன்றைக்கு அரசினர் தோட்டத்திலுள்ள திமுக சட்டமன்ற அலுவலகத்திற்கு செல்லும்போது தான், முழுமையாக கலைஞருக்கு நான் அறிமுகமானேன்.

காங்கிரஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பில் இடம்பெற்று பழ.நெடுமாறனோடு அந்த கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நேரத்தில் சில பிரச்சனைகள் நிகழ்ந்தன. அப்போது தி.சு.கிள்ளிவளவனையும், என்னையும் அழைத்து கலைஞர் அவர்கள் இதுகுறித்து விசாரித்ததும் உண்டு.

தமிழக விவசாயிகள் சங்கம், நாரயணசாமி நாயுடு தலைமையில் தமிழகமெங்கும் போராட்டத்தை எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு எதிராக முன்னெடுத்தது. அப்போது அந்த விவசாய சங்கத்தில் மாணவர்கள், இளைஞர்களை பொறுப்பெடுத்து களப்பணிகள் ஆற்றியதுண்டு. நாராயணசாமி நாயுடு எப்போதும் என்னுடன் தொடர்பில் இருப்பார். என்னுடைய கிராமத்தில் 8 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானார்கள் என்பதை கலைஞர் அறிந்து அதனை கண்டித்ததும் உண்டு. நாராயணசாமி நாயுடுவை சந்திக்க வேண்டும். சென்னைக்கு வந்தால் சொல்லுப்பா என்று கலைஞர் என்னிடம் கூறினார். அவரை சந்திக்கவும் ஏற்பாடுகளை செய்தேன்.

சென்னையில் பாண்டி பஜாரில் 19-05-1982 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பின் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டதை ஒட்டி என்னோடு அவர் தங்கியிருந்ததற்காக, எங்களுடைய இருப்பிடமான மைலாப்பூர் 39, சாலைத் தெரு வீட்டை காவல் துறையினர் சோதனை நடத்திய போது தொலைபேசியில் அழைத்து கலைஞர் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

கலைஞர்படத்தின் காப்புரிமைMAIL TODAY

குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை போன்றவர்ககளை கலைஞர் தான் கைது செய்தார் என்று எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, பகிரங்மாக குற்றஞ்சாட்டியதை மறுத்து குட்டிமணியிடம் இருந்து கைப்படக் கடிதம் வாங்கி, வழக்கறிஞர் கரிகாலன் மூலமாக கலைஞரிடம் கொடுத்து எம்.ஜி.ஆருக்கு தக்க பதிலை வழங்கியதெல்லாம் அப்போது பரபப்பாக பேசப்பட்டது. இதற்காகவே கரிகாலன் எழும்பூர் கென்னட் லேனில் உள்ள அவருடைய விடுதியில் தினமும் சந்தித்ததும் உண்டு.

ஈழப்பிரச்சனை கடுமையாக உருவெடுத்த போது, குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோருக்கு வெலிக்கடை சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் அவர்களுக்கு கருணை காட்டி தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று பழ.நெடுமாறன் அவர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் கையொப்பம் வாங்கி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று என்னிடம் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவை தயார் செய்து கலைஞரிடம் முதலில் கையொப்பம் வாங்குங்கள் என்று சொன்னபோது, நானும், தி.சு.கிள்ளிவளவனும் 05-09-1982 அன்று மதியம் 12 மணியளவில் கலைஞரைத் தொடர்பு கொண்டோம். அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்றக் கட்சி அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள் என்றார்.

நாங்கள் செல்லும்வரை காத்திருந்து, மனுவைப் படித்துவிட்டு யார் தயாரித்தது என்று கேட்டவுடன், உடனே கிள்ளிவளவன், ராதா தான் என்றார். ஆங்கிலத்தில் முதல் கையெழுத்தாக அந்த மனுவில் கையொப்பமிட்டார். அதுமட்டுமல்ல, மறுநாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணிகள் முடிந்துவிட்டதா? டெல்லிக்கு பிரதமர் இந்திரா காந்திக்கு உடனே அனுப்புங்கள். தாமதமாகிவிடப் போகிறது என்று நினைவு வைத்து எங்களிடம் பேசியதெல்லாம் மறக்க முடியாது.

ஆனால் சிங்கள அரசு நியாயங்களை மீறி இவர்களை தூக்கிலிடப்பட்டப்பின் பெரியார் திடலில் 29-08-1983 அன்று நடந்த நிகழ்வில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோரின் படங்களை திறந்து வைத்து கலைஞர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். ஈழப் பிரச்சனையில் அப்போது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு கேட்பதெல்லாம் கலைஞருக்கு வாடிக்கை.

திரு. நெடுமாறன் அவர்கள் மதுரையில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் சென்று இலங்கைக்கு படகில் தன்னுடைய சகாக்களோடு செல்ல வேண்டுமென்று தியாகப் பயணத்தை 07-08-1983அன்று துவக்கினார். இந்த நிகழ்வை வாழ்த்தியனுப்ப கலைஞர் வருவதாக இருந்தது. ஆனால் கலைஞருக்கு உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. எனவே பேராசிரியரை அனுப்புகிறேன் என்று என்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசி 18-08-1983 அன்று நடைபயணத்தில் இருந்த நெடுமாறனை பாண்டிக் கண்மாய் பகுதியில் பேராசிரியர் சந்தித்தார்.

கலைஞர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், கி.வீரமணி, அய்யன் அம்பலம் ஆகியோர் கலந்து பேசி கலைஞர் தலைமையில் டெசோ என்ற தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பை , 13-05-1985 அன்று தொடங்கினார்கள். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகளிலும், ஆலோசனைக் கூட்டங்களிலும் நான் பங்கேற்றேன்.

டெசோ பேரணிகளும், மாநாடு போன்ற பொதுக் கூட்டங்களும் கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, சேலம், வேலூர் போன்ற நகரங்களில் கலைஞர், நெடுமாறன், வீரமணி, அய்யன் அம்பலம் கலந்து கொள்ள சிறப்பாக நடந்தது. இதற்கிடையில் நெடுமாறன் அவர்கள் இரகசியமாக இலங்கைக்கு சென்றபோது, அவர் தனித்தனியாக கலைஞர் அவர்களுக்கும், வீரமணி அவர்களுக்கும் கைப்பட எழுதிய கடிதங்களை என்னிடம் நான் இலங்கைக்கு சென்றபின் ஒப்படையுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். அதன்படி 02-11-1985 அன்று இரவில் தலைவர் கலைஞர் அவர்களின் ஆலிவர் இல்லத்தில் வழங்கினேன்.

அப்போது தலைவர் அவர்களோடு மன்னை நாராயணசாமி, துரைமுருகன், இரகுமான்கான் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது தலைவர் என்னை தனியாக அழைத்து, எப்போது பழ.நெடுமாறன் இலங்கைக்குச் சென்றார். அங்கு கொடும் துயரங்கள் நடக்கின்றதே. பத்திரமான இவர் திரும்ப வேண்டுமே? இதை என்னிடம் நீ ஏன் உடனடியாக சொல்லவில்லை? கோபல்சாமி மூலமாகவாவது இதை என்னிடம் முன்கூட்டி சொல்லியிருக்கலாமே? அதற்காக தான் அவர் தாடி வளர்த்தாரா?

உடல்நிலை சரியில்லை என்று வேலூர் டெசோ பேரணிக்கு வரமுடியவில்லை என்று நீதானே காரணம் சொன்னாய். அப்போதே உண்மையை என்னிடம் சொல்லியிருக்கலோமே என்று கடிந்து கொண்டார். பின் நிலைமைகள் அங்கே எப்படி இருக்கிறதோ? என்று தனது கவலையை தெரிவித்திருந்தார். நெடுமாறனுடைய இந்த பயணத்தை அகநானூறு பாடல்களோடு முரசொலியில் 04-11-1985இல் விரிவாக உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதினார்.

இதற்கிடையில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் 1985 செப்டம்பர் என்று நினைவு. ஈழத் தலைவர்கள் ஆன்டன் பாலசிங்கம், சந்திரஹாசன், சத்தியேந்திரா ஆகியோர் சென்னையில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

அப்போது தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், கி.வீரமணி, அய்யன அம்பலம் ஆகியோர் இணைந்து நடத்திய "டெசோ" இந்த மூவரையும் நாடு கடத்தியதை உடனடியாக கண்டித்தனர். அன்றைக்கு மாலையே டெசோ சார்பில் சென்னையே குலுங்கிய மாபெரும் பேரணியும் நடந்தது. 1985 செப்டம்பரில் வெறும் ஆறு மணி நேரத்தில் இந்த பேரணி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியாக அமைந்தது ஒரு ஆச்சர்யமான நடவடிக்கையாகும். அப்போது டி.ஆர்.பாலு ஒன்றுபட்ட சென்னை மாவட்ட தி.மு.க செயலாளர். இந்தப் பேரணிக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் பங்கேற்றது அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆரையே அதிரவைத்தது.

கலைஞர்படத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP

இதற்கிடையே, ஈழத் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கில் நாடு கடத்தியது தவறு என்றும், அவர்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்துவர வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. என்னோடு சந்திரஹாசனுடைய மனைவி நிர்மலா நித்யானந்தம் சர்வதேச சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நானும் அவரும் இணைந்து இந்த வழக்குப் பணிகளை விரைவாக செய்தோம். அப்போது கலைஞர் அவர்கள் இதைக் குறித்து அவ்வப்போது நிலைமை என்ன என்று விசாரிப்பார். சில நேரங்களிலும் நேரடியாகவும் அழைத்துக் கேட்பார்.

அன்றைய தினம் வெள்ளிக்கிழமை. மறுநாள் நீதிமன்றம் விடுமுறை. முறைப்படி உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் மறுநாள் சனிக்கிழமை முறையிட்டு, வழக்கை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டுவர முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையில் நிர்மலா சந்திரஹாசன் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு தந்தி மூலமாக நாடுகடத்தப்பட்ட மூவரையும் திரும்ப அழைக்க வேண்டுமென்று அவசரமாக முறையிட்டார். இன்றைக்கு இருக்கின்ற நவீன வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத அந்த நேரத்தில், நீதிமன்ற விடுமுறை நாளில் இந்த வழக்கையும் காத்துக் கிடந்து நடத்தியது ஒரு பரபரப்பான சூழ்நிலையே.

இந்த பேரணிகளுக்குப் பின், மாபெரும் டெசோ மாநாடு, 04-05-1986 அன்று மதுரை பாண்டியன் ஹோட்டலில் வாஜ்பாய், என்.டி. ராமாராவ், எச்.என். பகுகுணா, ஃபரூக் அப்துல்லா, ராமுவாலியா, ராசைய்யா, கே.பி.உன்னிகிருஷ்ணன், ஓம் பிரகாஷ் சவுதாலா போன்ற பல அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் என்னைப் போன்றோர்கள் எல்லாம் அப்போது முன்னின்று மாநாட்டின் ஏற்பாடு மற்றும் முக்கியப் பணிகளை செய்தோம்.

இந்நிகழ்வில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அழைக்க நெடுமாறன் கேட்டுக் கொண்டதால் நேரில் சென்று அழைத்தேன். அப்போது 'அண்ணே பயிற்சி பணிகள் ஏற்கனவே திட்டமிட்டுவிட்டோம். அதனால் வர இயலவில்லை' என்றார். எனவே பிரபாகரன் சார்பில் பேபி சுப்பிரமணியம், திலகர் கலந்து கொண்டனர்.

அப்போது மாநாடு (Conclave) துவங்கும் போது, திடீரென என்.டி.ராமாராவ் கலைஞரிடம் எல்.டி.டி.ஈ மற்றும் இலங்கை தமிழர் இயக்கங்களின் பெயர்களின் விரிவாக்கத்தை ஆங்கிலத்தில் கேட்டார். அருகில் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த பழ.நெடுமாறன், என்னிடம் 'ராதா இந்த அரங்கத்தில் இதை பற்றியான புரிதலுள்ள ஆட்கள் யாருமில்லை, நீங்களே எழுதிக் கொடுங்கள்' என்று என்னிடம் கூறினார். நான் அனைத்திற்கும் விரிவாக்கம் எழுதி கொடுத்தேன்.

இந்த நிகழ்வில் பேராசிரியர், கி. வீரமணி, முரசொலி மாறன், வைகோ, அய்யன அம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.டி. தண்டபாணி, பொன் முத்துராமலிங்கம் மாநாட்டு அரங்கில் இருந்தனர்.

இந்த மாநாட்டில் பல அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் குறிப்பாக எல்.டி.டி.ஈ (LTTE) அமைப்பின் தலைவர் பிரபாகரன் சார்பில் பேபி சுப்பிரமணியம் ,திலகர், கலந்து கொண்டனர். டி.யு.எல்.எப் (TULF) சார்பில் ஏ. அமிர்தலிங்கம் மற்றும் எம். சிவசிதம்பரம், ஈ.பி.ஆர்.எல்.எப் (EPRLF) சார்பில் எஸ். வரதராஜபெருமாள், ப்ரோடெக் (ProTEC) சார்பில் எஸ்.சி.சந்திரஹாசன்,ஏ.தங்கதுரை, ஆகியோர் பங்கேற்றனர்.

கலைஞர்படத்தின் காப்புரிமைMANPREET ROMANA

ஈரோஸ் (EROS) சார்பில் ஈ. ரத்தினசபாபதி, கோவை மகேசன், ஆகியோர் டி.ஈ.எல்.எப் (TELF) எம்.கே.ஈழவேந்தன் சார்பில் பங்கேற்றனர். டெலோ (TELO) சார்பாக மதி, தமிழ்நாடு தகவல் மையம், மதுரையின் சார்பில் மகேஸ்வரி வேலாயுதம், தமிழ்நாடு தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (TIRU) எஸ். விநாயகம், ஈ.பி.ஆர்.எல்.எப். (EPRLF) சார்பில் ரூபன், பிளாட் (PLOTE) அமைப்பின் சார்பில் முகுந்தன் மற்றும் ENDLF போன்ற பல்வேறு ஈழ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

மாநாடு தொடங்கியதற்கு பின்னர் புகைப்படக் கலைஞர்களை அனுமதிக்கவில்லை. அதனால் தாமதமாக வந்த பிளாட் பிரதிநிதிகளை படமெடுக்கவில்லை.

மாலையில் மதுரை ரேஸ் கோர்சில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வாஜ்பாய், என்.டி.ராமாராவ் உள்பட, அகில இந்திய தலைவர்கள் உரையாற்றினார்கள். நான் மாநாட்டு பிரதிநிதிகளுக்கு அறைகளை ஒதுக்குதல், மாநாட்டு பாஸ்கள் போன்ற நிர்வாகப் பணிகள் மட்டுமல்லாமல், மாநாட்டின் தீர்மானங்களை முரசொலி மாறனோடு சேர்ந்து ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டிருந்தேன். மாநாடு முடிந்தவுடன் தலைவர் கலைஞர் என்னை அழைத்து பாராட்டினார்.

என்னுடைய திருமணத்தை 12-05-1986 அன்று மயிலாப்பூர் கச்சேரி சாலை, இராஜா திருமண மண்டபத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் பழ.நெடுமாறன் தலைமையில் நடத்தி வைத்தார்.

அந்த நிகழ்வில் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.இராம்மூர்த்தி, வி.பி.சிந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சோ.அழகிரிசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் வி.இராமசாமி, இரத்தினவேல் பாண்டியன், தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் சிவ. சிதம்பரம், அமிர்தலிங்கம் அன்று சென்னையில் இல்லாததால் அவருடைய துணைவியார் மங்கையர்கரசி அமிர்தலிங்கம், ஈழவேந்தன், சந்திரகாசன் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

விடுதலைப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்றோர், பிளாட் இயக்கம், டெலோ இயக்கப் போராளிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் தான் பிரபாகரனை முதன்முதலில் சந்தித்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும் போது, கடந்த 03-05-1986 அன்று மதுரையில் டெசோ பேரணியில் திரு. சிறீ சபாரத்தினத்தை கொன்றுவிடாதீர்கள் என்று நானும், என்.டி.ராமாராவ் மற்றும் அகில இந்திய தலைவர்கள் கேட்டுக் கொண்ட பின்னும் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

நெடுமாறன் அவர்களுக்கு இதைப் பற்றி நன்கு தெரியும். இந்த சூழ்நிலையில் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து என்ன செய்ய முடியும்? என்ற வினாவை எழுப்பினார். அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகளை உளவு பார்த்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதிகளையும் நாளைக்கு எம்.ஜி.ஆர் உளவு பார்ப்பார் என்று கலைஞர் பேசினார்.

இந்த திருமண நிகழ்வையும், கலைஞர் பேச்சையும் மறுநாள் 13-05-1986 அன்று முரசொலியில் முழுப்பக்க கட்டுரையாக வெளியிட்டபோது, கலைஞர் என்னை தொலைபேசியில் அழைத்து முரசொலி கட்டுரையை பார்த்தாயா என்று கேட்டதெல்லாம் நினைவுகள்.

கலைஞர்படத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP

இன்னொரு சம்பவத்தையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். 1989 தேர்தலுக்குப் பின் பிப்ரவரி 5ஆம் தேதியென்று நினைக்கின்றேன். நண்பர் குட்டி மூலமாக தலைவர் கலைஞருக்கு கடிதம் கொடுத்துவிட்டு ரகசியமாக ஈழச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

மறுவாரம், ஜூனியர் விகடன் கழுகுப் பகுதியில் இந்த செய்தி வெளிவந்தது. அதன் ஆசிரியராக இருந்த சுதாங்கனும், ராவும் பிப்ரவரி 7ஆம் தேதி என்னிடம் தொலைபேசியில் இது என்ன உண்மைதானா? என்று கேட்டதற்கு நான் ஒன்றும் தெரியவில்லை என்று மறுத்தேன்.

ஆனால், அரசல் புரசலாக ஈழ நண்பர்கள் மூலமாக காதுக்கு வந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இந்த செய்தி வந்தவுடன் சட்டமன்றத்தில் குமரி அனந்தன் கேள்வி நேரத்தில் எழுப்பினார். அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பணியில் இருக்கும்போது, முதலமைச்சர் கலைஞர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். உனக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டார். எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டேன்.

வைகோ அவர்கள் இந்தியாவிற்கு 03-04-1989அன்று மாலை திரும்பியதாக என்னுடைய நினைவு. அந்த சமயத்தில், தினமும் நீதிமன்றத்திலிருந்து அண்ணாநகரில் அவருடைய வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கு சற்று நேரம் இருந்துவிட்டு 7 மணிக்கு தான் என்னுடைய வீட்டிற்கு திரும்புவேன்.

நாடு திரும்பிய அன்றைய தினமே வைகோ அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்து விடியற்காலை 5 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார். அடுத்த நாள் 04-04-1989ஆம் தேதி, அண்ணா நகர் - ஒய் பிளாக் வீட்டிற்கு விடியலில் சென்றபோது, முகம், கால் எல்லாம் கறுத்து உடல் மற்றும் மனம் அலுப்பாக காட்டிக் கொள்ளாமல், எப்போதும் போல சிரித்துக் கொண்டு பேசினார். நேராக தலைவர் கலைஞருடைய கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றோம்.

கலைஞர் அவர்களை தனியாக சந்தித்து பேசினார். பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டுமென்றார். அதற்கான ஏற்பாடுகளை செய்தேன். அறிவாலயத்தில் அன்றைக்கு தொலைபேசி மேசையிருக்கும் இடம் இன்றைக்கு செய்தியாளர் கூடமாக மாறிவிட்டது.

அந்த இடத்தில் அன்றைய சென்னை மாவட்டச் செயலாளர் டி.ஆர்.பாலு உடனிருக்க பத்திரிகையாளர் மத்தியில் என்னுடைய சொந்த விருப்பமும், பொறுப்பின் காரணமாக இலங்கைக்குச் சென்றேன். கலைஞர் அவர்களுக்குத் தெரியாது என்று குறிப்பிட்டார். அன்று மாலையும், மறுநாள் பத்திரிக்கைகளிலும் இவை தலைப்புச் செய்திகளாக வந்தன.

(கருணாநிதி கைதான காணொளி அடங்கிய ஒளிநாடா, எவ்வளவு சிரமங்களுக்கிடையில் அன்றைக்கு அண்ணா அறிவாலயத்தில் இருந்த சன் தொலைக்காட்சிக்கு சென்று சேர்ந்தது என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் அடுத்த பகுதியில்)

https://www.bbc.com/tamil/india-45030452

  • தொடங்கியவர்

முதல் பார்வையிலேயே கலைஞரை கவர்ந்த தொண்டர் - பகுதி 2

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

கலைஞர்படத்தின் காப்புரிமைSTR/ GETTY IMAGES

சட்டமன்றத் தேர்தல் 1989இல் நடப்பதற்கு முன், தலைவர் கலைஞர் அவர்களும், முரசொலி மாறனும் என்னிடம் வைகோ அவர்களின் முன்னிலையில் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம், தஞ்சை மாவட்டம், நாகை மாவட்டம், தென் ஆற்காடு மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், வடஆற்காடு மாவட்டம், சேலம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், கோவை மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டம் வரை, அந்த மாவட்டங்களில் இருந்த ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று திமுகவின் வெற்றி வாய்ப்புகளை கள ஆய்வு செய்து, ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்கள் யார் என்று கண்டுவர பணித்தார்கள்.

வைகோ அவர்கள் அப்போது என்னை தனியாக அழைத்து ராதா, தலைவர் நம்பிக்கையோடு கொடுத்திருக்கிறார். மிகவும் கவனமாக செய்யுங்கள். இதில் எந்தவொரு தவறோ, பிழையோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

நான் ஆறு மாத காலம் என்னுடைய அம்பாசிடர் காரில் பயணித்து இந்த பணிகளை மேற்கொண்டேன். அவ்வப்போது கலைஞரிடம் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசுவதுண்டு. நான் அந்த பணிகளைப் பற்றிய விவரங்களை சொல்வதுண்டு.

இந்த பணிகளை செய்த மாவட்டங்களில் நான் வழங்கிய இந்த அறிக்கையில் இருந்த பெயர்களில்தான் கழக வேட்பாளர்களாக 70% பேர் அறிவிக்கப்பட்டனர். நான் தலைவர் தலைமையில் நடக்கும் தேர்தல் நேர்காணலுக்கு இந்த பணியின் காரணமாக செல்லமுடியவில்லை. அப்போது கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

நேர்காணலுக்கு வராமல் வாய்ப்பு பெற்ற ஒரே நபர் நீங்கள்தான் என்று வைகோ குறிப்பிட்டார்கள். அந்த ஆய்வில் பொன்முடியின் பெயரை தெய்வாசிகாமணி என்றும், கே.என்.நேருவையும் பட்டியலில் சேர்த்திருந்தேன். இவர்களைப் பற்றி நான் எழுதிய பின்புலத்தைப் பற்றிய குறிப்புகளை தலைவர் கலைஞர் அவர்கள் படித்ததெல்லாம் நினைவில் உள்ளது.

என்னை திமுகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கும்போது, திமுகவிற்கு நீதான் முதல் செய்தித்தொடர்பாளர் என மகிழ்ச்சியோடு என்னிடம் சொன்னதெல்லாம் நன்றியோடு எண்ணிப் பார்க்கின்றேன்.

ஜூன் 21, 2001ஆம் தேதி நள்ளிரவில் கலைஞர் அவர்களை உலகமே கண்ணீர் வடிக்கும் நிலையில் நான் ஆற்றிய பணிகளை கலைஞரும் பாராட்டினார். முரசொலி மாறன் பொதுக் குழுவிலே இதை குறித்து என்னை பாராட்டி பேசியதும் உண்டு.

கலைஞர்படத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP/ GETTY IMAGES

இந்த துயரச் சம்பவம் குறித்து நேரடியாக சன் டிவி செய்தியாளர், கே.கே.சுரேஷ் குமார், "நள்ளிரவில் கலைஞர் கைது" என்ற நூலில் 65வது பக்கத்தில் தலைவர் கலைஞர் கைது குறித்த சி.டி.யை எவ்வளவு சிரமங்களுக்கிடையில் அன்றைக்கு அண்ணா அறிவாலயத்தில் இருந்த சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் காவல்துறையினரின் கண்ணில் சிக்காமல் ஓடி ஒளிந்து சேர்த்தக் காட்சியை குறிப்பிடுகின்றார்.

"கலைஞர் கைது செய்யப்பட்டதன் வீடியோ கேசட்டை எடுத்து ஓடிவந்த கே.எஸ்.இராதாகிருஷ்ணனின் "சாகசம்". கலைஞர் கைதை வெளி உலகிற்கு காட்ட உயிர் நாடியாக இருந்த அந்த விலைமதிப்பற்ற வீடியோ கேசட்டை, கேமராவில் இருந்து எடுத்து, எங்கள் எம்.டி. கலாநிதி மாறனிடம் கொடுத்தோம் என்றேன் அல்லவா! அப்போது அதை கவனித்த காவல்துறை துணை ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன், கேசட்டை பறிக்க வேண்டும் என்று பரபரப்படைந்தார்.

ஆனால் காவல்துறை அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி, அந்த கேசட்டை எங்கள் எம்.டி. அருகில் இருந்த தி.மு.க. வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு கண்ணை காட்டி, கேசட்டை அவர் கையில் சொருகினார். இதையடுத்து, கேசட்டை தனது இடுப்பில் சொருகிக் கொண்ட கே.எஸ்.இராதாகிருஷ்ணன், போலீசார் சந்தேகப்படாத வகையில் அங்கிருந்து மெல்ல நகர்கின்றார்.

போலீசார் கண்கள் கலாநிதி மாறன் அவர்களையே வட்டமடித்தபடி இருக்க இதை கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பயன்படுத்திக் கொண்டார். வெளிச்சமான பகுதியை விடுத்து, இருட்டான பகுதிக்குள் அவர் ஓடி மறைகிறார்.

அண்ணா அறிவாலயத்திற்கு நேர் வழியில் செல்லாமல், வீடுகள் சூழ்ந்த குறுக்கு சாலைகளின் வழியே இராதாகிருஷ்ணன் முன்னேறிச் செல்கிறார்.

இதற்கிடையே, எங்கள் எம்.டி. கலாநிதிமாறன் கையில் கேசட் இல்லாதது கண்டு, வெகுண்டெழுந்த கிறிஸ்டோபர் நெல்சன், அந்தப் பகுதியில் இருந்து சென்ற, அனைவரையும் பிடித்து சோதனையிடுமாறு போலீசாரை விரட்டுகிறார். இரண்டு போலீசார் இராதாகிருஷ்ணன் சென்ற பாதையில் பின்தொடர்கின்றனர். ஆனால் ஒரு கையால் இடுப்பில் இருந்த கேசட்டை பதற்றத்துடன் பற்றியபடியே, ஓட்டமும் நடையுமாக அவர் அண்ணா அறிவாலயத்தின் பின்பக்க கேட்டை அடைகிறார். (இந்த தகவலை என்னிடம் கூறிய இராதாகிருஷ்ணன், நெல்லையில் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் படித்தபோது விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டபோது கூட முதலில் வரவேண்டும் என்று இப்படி மூச்சு வாங்க ஓடியதில்லை என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.)

கேட்டுக்கு உள்ளே இருந்த கூர்க்காவை அவர் மெல்லிய குரலில் அழைக்க, கூர்க்காவோ, "ஆகேவாலே கேட் சே ஜாவோ" (முன்வாசலுக்கு போ) என இந்தியில் சத்தமாக கூற, கடுப்படைந்த கே.எஸ்.இராதாகிருஷ்ணன், நேரம் காலம் புரியாமல் கடமை உணர்ச்சியை காட்டுகிறானே என நொந்துபோய், தனது முகத்தை நல்ல வெளிச்சத்தில் கூர்க்காவிடம் காட்டுகிறார்.

பதற்றமடைந்த கூர்க்கா அதன் பிறகே கேட்டை திறந்துள்ளார். உள்ளே தலைதெறிக்க ஓடிய இராதாகிருஷ்ணன், அண்ணா அறிவாலயத்தில் மூன்றாவது தளத்தில் இருக்கும் சன் டி.வி.யை அடைந்து அந்த கேசட்டை சன் தொலைக்காட்சி செய்திப்பிரிவில் அப்போது பணியில் இருந்த ஏழுமலை வெங்கடேசனிடம் ஒப்படைத்த பிறகே, தான் பெரும் நிம்மதி அடைந்தேன் என்று கேசட்டை எடுத்து வந்து மயிர்க்கூச்செரியும் நிகழ்வை என்னிடம் விவரித்தார்.

கலைஞர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதே நேரம், கலாநிதி மாறன் அவர்களிடம் இருந்து கேசட் அனுப்பிவைக்கப்பட்டது குறித்த தகவல் வர, செய்தி தயாரிக்கும் பணி மின்னல் வேகத்தில் தொடங்கியது.

கலைஞர் கைது தகவல் கிடைத்து அதிகாலை 4 மணிக்கே செய்தி ஆசிரியர் ராஜா, அலுவலகம் வந்து சேர, சூரியன் உதிக்கும் முன்பே சன் செய்தியாளர்கள் கருப்பசாமி, பால்முருகன், சிவராமன், வேலாயுதம், ரமேஷ், இந்துஜா, காயத்ரி மற்றும் கேமராமேன்கள் மணி, மாரி, மோகன், வெங்கட், லோகநாதன், பாபு, இந்திரசேனா, சேகர் உள்ளிட்ட அனைவரும் அலுவலகத்தில் ஆஜராகி இருந்தனர்.

செய்தியாளர்களும், கேமராமேன்களும் துரிதமாக களப்பணியில் இறங்குகின்றனர். காலை 5 மணிக்கெல்லாம், சன் தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பு தொடங்கியது.

கலைஞர் கைது செய்தி அறிந்து சன் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு மூத்த துணை ஆசிரியர்கள் துரைக்கண்ணு, மாடக்கண்ணு, ரசூல், ஜார்ஜ், சிவகங்கை மணிமாறன், விஜயரங்கம், ஸ்ரீதர் உள்ளிட்டோர் (இவர்களுக்கு பிற்பகலில்தான் பணி) சன் டி.வி. அலுவலகத்திற்கு காலை ஆறரை மணிக்கே பதற்றத்துடன் விரைந்து வந்தனர்.

பின்னர் இவர்கள் கைவண்ணத்தில் செய்தியை மேலும் மெருகேற்றும் பணி தொடங்கியது. சொக்கலிங்க ரவி, ஞானேஸ்வரி, ஈவெரா ஆகியோரின் கணீர் "டப்பிங்" குரலுடன் செய்தி தயாரிப்பாளர்கள் பாலகுமார், முரளி, ஜெகஜீவன் ராம் ஆகியோரின் "காட்சி எண்ணத்தில்" கலைஞர் கைது நிகழ்வு பின்னர் விரிவாக ஒளிபரப்பாக தொடங்கியது. சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் கலைஞர் கைது செய்திகள் விடியற்காலை முதலே ஒளிபரப்பாக தொடங்கியது.

மேலும் பக்கம் 92ல், பெர்னாண்டஸ் அண்ணா அறிவாலயம் நோக்கி பயணப்பட்டனர். அந்த நிகழ்வை 'லைவ்' வாக தருகிறார் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

ஜார்ஜ் பெர்ணான்டஸ் இப்போது பேசுகிறார்; மிஸ்டர் இராதாகிருஷ்ணன்.... எமர்ஜென்சி காலத்தில் நான் அனுபவித்த அவஸ்தைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அது 1975 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் போலீசார், உளவுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து பாதுகாப்பு பிரிவுகளும் - என்னை கைது செய்ய தேடுதல் வேட்டையை தொடங்கி இருந்தனர்.

வட மாநிலங்களில் - மாறுவேடம் பூண்டு நான் தலைமறைவாக திரிந்தேன். எனது இருப்பிடங்கள் தெரிந்து என்னை பாதுகாப்புப் படையினர் நெருங்கி வந்து கொண்டே இருந்தனர். இங்கிருந்தால் என்னை எப்படியும் பிடித்துக்கொள்வார்கள் என்பதால் தமிழகத்துக்கு தப்பி வந்தேன்.

அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. கலைஞர் அரசு எனக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால், அப்படியே சென்னை வந்து சேர்ந்தேன்.

நம்பிக்கை பொய்க்கவில்லை. சென்னையில் சாந்தோம் பகுதியில் கலைஞர் அரவணைப்பில் பாதுகாப்பாக இருந்தேன். சென்னையில் தங்கியிருந்த நாட்களில் உறைவிடம், உணவு, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களையும் தனது நேரடி கண்காணிப்பில் பார்த்துக்கொண்டார் கலைஞர்.

பின்னர் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டேன். மாறு வேடத்தில் ரயிலில் நான் செல்லும் தகவலை மத்திய உளவுப்பிரிவின் தலைவர் எம்.கே. நாராயணன் எப்படியோ மோப்பம் பிடித்திருந்தார். அவர் கொடுத்த தகவலின்படி நான் ஆந்திர மாநிலத்தில் ரயிலில் செல்லும்போது கைது செய்யப்பட்டேன்.

இது ஜார்ஜ் பெர்ணான்டஸின் மலரும் நினைவுகள். எமர்ஜென்சி கொடுமையின் சில பக்கங்களை புரிந்துகொள்ள முடிந்தது" இவ்வாறு கே.எஸ். இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜார்ஜ் பெர்ணான்டஸ்படத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP/ GETTY IMAGES

இந்நூலில் 145 வது பக்கத்தில், நள்ளிரவில் கலைஞர் அவர்களை கொடுமையாக கைது செய்யப்பட்டது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு உரிய புகார் மனுவை நான் தயார் செய்து ராயப்பேட்டையில் இருந்த மாநில மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்து செல்லும்போது உடன் ஆலடி அருணாவும், ஆ. ராசாவும் வந்தனர். தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு பேக்ஸ் மூலமாக டெல்லிக்கு அனுப்பியும் வைத்தேன். அது குறித்தும் சுரேஷ்குமார் எழுதியுள்ளார்;

கலைஞர் முரசொலி மாறன், டி.ஆர். பாலு மற்றும் தி.மு.க. தொண்டர்கள் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தி.மு.க. புகார் கொடுத்தது.

பேராசிரியர் க. அன்பழகன் தயார் செய்த புகார் மனுவை, ராயப்பேட்டையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் ராஜா, தி.மு.க. வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி சாமித்துரையிடம் நேரடியாக கொடுத்தனர்.

இதை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சாமித்துரை, ஞானசம்பந்தம் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் ஜூலை 3ம் தேதி சென்னை மத்திய சிறை சென்ற நீதிபதிகள் கலைஞரிடம் 29ம் தேதி நள்ளிரவு நடந்தவை குறித்து விசாரணை நடத்தினர்.

மாநில மனித உரிமை ஆணைய நீதிபதிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஒரு குழு வேலூருக்கும், மற்றொரு குழு கடலூருக்கும் சென்றன.

வேலூர் சென்ற குழு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.ஆர். பாலுவிடம் விசாரணை மேற்கொண்டது. மேலும் அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க. தொண்டர்களிடமும் மாநில மனித உரிமைகள் குழு விசாரணை நடத்தியது.

கடலூர் சிறைக்கு சென்ற மற்றொரு குழு அங்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. வினரிடம் விசாரணை நடத்தியது. உண்மை நிலவரங்களை கேட்டறிந்தனர்.

பின்னர் அனைரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதிகள் உத்தரவிட்டனர்." என கே.கே.சுரேஷ்குமார் தெளிவாக படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

கர்நாடகாவில் நடந்த ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா தீர்ப்புக் கொடுத்தாரே, அந்த வழக்கை சென்னை நீதிமன்றத்திலிருந்து கர்நாடகா நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் நானும், டெல்லி சம்பத்தும் துவக்கத்தில் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தான்.

அப்போது டெல்லியில் வழக்கறிஞர் மோகன் இந்த வழக்கில் ஆஜரானார். வழக்கு ஆவணங்களை தயார் செய்தார் (வழக்கு எண் Transfer Petition-Criminal No. 77 & 78 of 2003). தலைவர் கலைஞருடைய அனுமதியோடு முரசொலி மாறன் வழிக்காட்டுதலோடு இந்த பணிகளை செய்தோம். இதை யாரும் இப்போது நினைத்து பார்ப்பதில்லை.

மறைந்த முரசொலி மாறன் அவர்கள் திமுக பொதுக்குழுவில் இதற்காக என்னை பாராட்டியதுண்டு. இப்போது இதை நன்கு அறிந்தவர்கள் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசாவும், அவருடைய நேர்முக உதவியாளராக இருந்த அகிலன் ராமநாதன் அவர்களும்தான்.

கலைஞர்படத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP/ GETTY IMAGES

இதே 2002 காலக்கட்டத்தில் மத்திய ராஜாங்க அமைச்சராக இருந்த ஆ.ராசா, சுஷ்மா சுவராஜ், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக கேபினெட் அந்தஸ்த்தில் இருந்தபோது, ஆ.ராசாவை வேறு துறைக்கு மாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆ.ராசாவை வேறு துறைக்கு ராஜாங்க அமைச்சராக முயற்சிகள் நடந்து என் கவனத்திற்கு வந்து தலைவர் கலைஞரின் பார்வைக்கு கொண்டு சென்றேன்.

உடனே உனக்கு வெங்கய்யா நாயுடு நம்பர் தெரியுமில்ல. போடு, நான் பேசறேன் என்று கேட்டார். உடனே என்னுடைய கைபேசியில் வெங்கய்ய நாயுடுவுக்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தபோது, "நாயுடுகாரு, ஏன் ராஜாவை வேறு துறைக்கு மாத்துறீங்க. என்னுடைய பிரதிநிதியை எனக்குத் தெரியாமல் மாற்றுவது கூட்டணித் தர்மமல்ல. பிரதமரிடம் என்னுடைய கோபத்தை சொல்லிவிடுங்கள்" என்று கறாராக சொன்னதெல்லாம் நினைவில் உள்ளது.

கடந்த 2002இல் சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் செங்கை சிவத்தை வேட்பு மனுதாக்கல் செய்து ஜெயலலிதாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். நீதான் பொறுப்பு என்று என்னிடம் அந்த பணியை ஒப்படைத்தபோதுதான் அவருடைய மனிதாபிமானத்தை காண நேர்ந்தது.

நானும் செங்கை சிவமும் மூன்று நாட்கள் இந்த பணியும், அலைச்சலுமாக இருந்தோம். தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை கைபேசியில் தொடர்பு கொள்வார். பணிகளை சொல்வது மட்டுமல்ல. நேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு வேலையைப் பாருங்கள் என்று சொன்னபோது, அவருடைய தாயுள்ளத்தைப் பார்க்க நேர்ந்தது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுத வேண்டும். உனக்குத் தான் அதைப் பற்றி முழுமையாக தெரியுமே எழுதிக் கொடு என்றார். முழுமையாக நான்கு பக்க கடிதமொன்றை ஆங்கிலத்தில் தயார் செய்து கையெழுத்திட்டு அனுப்பும்போது, பக்க எண்கள் இல்லாமல் கடிதம் இருந்தது. நான் பக்கத்தை போட்டு எடுத்து வருகின்றேன் என்றேன்.

வேண்டாம்பா, நீதானே கடிதம் எழுதினே, உன் கையெழுத்து இந்த கடிதத்தில் இருக்கட்டும் நீயே பேனாவில் போட்டுக்கொள் என்று பெருந்தன்மையாக சொல்லிய தலைவர் கலைஞர். அந்த கடிதம், முரசொலியில் அப்படியே அச்சாகி வரும்போது, நான் கைப்பட எழுதிய பக்க எண்ணுடன் இருப்பதை பார்க்கையில் சற்று மகிழ்ச்சியாக இருக்கும்.

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, உனக்கு கலாம் நெருக்கம்தானே. இன்றைக்கு ஸ்டாலினை அழைத்துச்செல். நாளைக்கு நானும் அவரை பார்க்க வேண்டும். ஏற்பாடு செய் என்றார். இருவரையும் அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்றதெல்லாம் மறக்கவே முடியாது.

வைகோ அவர்கள், போடாவில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு திருமங்கலத்தை நோக்கி பகலில் அழைத்துச் செல்லப்பட்டபோது, என்னிடம் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அன்று முழுவதும் கேட்டது மட்டுமல்ல, வைகோ சாப்பிட்டாரா? நள்ளிரவில் திருமங்கலத்தில் காவல் துறையினர் ஏன் வைகோவை இவ்வளவு சங்கடப்படுத்துகின்றனர் என்றெல்லாம் இரவு முழுவதும் தலைவர் கலைஞர் விசாரித்ததெல்லாம் மறக்க முடியாது.

கலைஞர்படத்தின் காப்புரிமைHK RAJASHEKAR/THE INDIA TODAY GROUP/GETTY IMAGES

வேலூர் சிறையில் வைகோ இருக்கும்போது, யார், யார் அவரை சந்தித்தனர் என்று கேட்டார். அதனை உடனடியாக என்னால் சொல்ல முடியவில்லை. சங்கொலியில் வந்த செய்திகளை வைத்து பட்டியலாக தயாரித்து கொடுத்தேன். அதற்குப் பின், அவர் வேலூரில் வைகோவை சந்திக்க தீர்மானித்தார். ஆனால், என்னிடம் அவர் வெளிப்படையாக சொல்லவில்லை.

இப்படி பல நினைவுகளோடு 2012 கட்டத்தில், திரும்பவும் டெசோ அமைக்க வேண்டும், நீதான் அதற்கான பணிகளை ஆற்றவேண்டும் என்ற பொறுப்பை ஒப்படைத்தார்.

முள்ளிவாய்க்காலில் 2009இல் நடந்தது என்னதான்பா? விவரமா சொல்லுப்பா என்றார். நான் இந்த துயரத்தைக் குறித்து ஒரு சி.டி.யை அவரிடம் கொடுத்தேன்.

அவர் இரவு பார்த்துவிட்டு மறுநாள் காலையில் அவரை சந்தித்தபோது கலைஞர், இரவெல்லாம் தூங்கலைப்பா, நீ கொடுத்த முள்ளிவாய்க்கால் குறுந்தகடை பார்த்து என்னாலேயே பொறுக்க முடியலைப்பா. டெல்லிக்காரங்க என்னை ஏமாத்திட்டாங்கப்பா. நான் சொன்னேன். பிரணாப் முகர்ஜி, சிவசங்கர மேனன் மத்திய அரசுக்கு அன்றைக்கு தெரிந்துதான் இது நடந்தது.

மத்திய அரசின் அதிகாரிகள் விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார் தான் இந்த கொடுமைகளை நடத்தினார்கள் என்று சொன்னபோது, யாருப்பா அவரு, அவங்களுக்கு இதுல என்ன சம்மந்தம் என்று அறியாமல் கலைஞர் கேட்டார். பிறகெதுக்கு சிவசங்கரமேனன் என்னை பார்க்க வேண்டும் என்று கேட்டார்.

அது மட்டுமில்லையா, பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மாளின் சிகிச்சைக்கும் அனுமதிக்கவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டும் நம் மீது உள்ளது என்றேன்.

உடனே, கலைஞர் அந்தம்மா வர்றதே எனக்குத் தெரியாதப்பா. நள்ளிரவுல வந்தாங்களாம். மத்திய அரசின் இம்மிகிரேசன் அதிகாரிகள் தான் திருப்பி அனுப்பினார்கள். தமிழக அரசின் காவல் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வெளியே தான் இருப்பார்கள். அவர்களும் இரவு என்பதால் என்னிடம் சொல்லவும் இல்லை. திரும்ப சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக அந்தம்மாவை அழைத்தபோது, அவர் மறுத்துவிட்டார். வேறென்னப்பா என்னால் செய்ய முடியும் என்றார்.

டெசோ மாநாட்டுப் பணிகள் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடத்த கலைஞரே நேரடியாக கவனித்தார். மாநாட்டுத் தீர்மானங்கள் அதைக் குறித்தான ஆவணங்களை எல்லாம் என்னை தயார்படுத்தச் சொன்னார். ஈழத்தமிழர்களையும் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வர என்னைப் பணித்தார்.

நிறைவாக அந்த மாநாட்டை நடத்த என்னுடைய பணிகளையும் அவர் பாராட்டியதும் உண்டு. இத்தோடில்லாமல் மாநாட்டின் தீர்மானங்களை ஐ.நா. மன்றத்தில் வழங்கவும், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கான ஏற்பாடுகளை என்னை செய்ய கலைஞர் பணித்தார். இப்படி இந்த பணிகள் செய்த பல விடயங்களை விரிவாக இந்த இடத்தில் சொல்ல இயலவில்லை.

கலைஞர்படத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP/GETTY IMAGES

ஆனால், ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஐ.நா. மன்றத்தில் நம்முடைய அறிக்கை தாக்கலாகி, அது குறித்து ஐ.நா. மன்றமே பதிலளிக்க வேண்டுமென்றும், அதற்கான ஏற்பாடுகளை பார் என்றும் கலைஞர் பல சமயம் என்னிடம் சொல்லியுள்ளார்.

அதன்படியே, நான் உரிய மனுக்களை அனுப்பி ஐ.நா. மன்ற அறிக்கையில் 23-02-2017இல் என்னுடைய பெயரும், திமுக என்று குறிப்பிட்டு வெளியானது. ஆனால், அதை பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடிய நிலையில் இல்லாமல் கலைஞர் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டார் என்பது தான் என்னுடைய கவலைகள்.

முரசொலியில் ஏன் கட்டுரை எழுத மாட்டேங்கிற. தினமணியில் உன்னுடைய கட்டுரை நன்றாக இருக்கிறதே என்பார். கலைஞரும் - முல்லைப் பெரியாறு, கலைஞரும் - ஈழத் தமிழர்கள், இலங்கைத் தமிழர் பிரச்சனை, தமிழக மேலவை, 1950 ஆகஸ்ட் மாதம் 26,27 தேதிகளில் திமுக துவங்கியபோது, நெல்லை மாவட்ட மாநாடு, கோவில்பட்டியில் நடந்த பேச்சை சிறு பிரசுரமாக 'இளைஞர் குரல், அன்று போலவே! என்றும் ஒலித்திட!' என்ற தலைப்பில் வெளியிட்டது போன்ற எனது நூல்களுக்கு சிறப்பாக அணிந்துரையும் கலைஞர் அவர்கள் கொடுத்த்தோடு மட்டுமல்லாமல் அந்த நூலில் உள்ள சிறப்புகளையும் பாராட்டுவார்கள். காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறப்பு வெளியீடாக திமுக சமூகநீதி, DMK Social Justice என்ற இரண்டு நூல்களுக்கும் தலைவர் கலைஞரே அணிந்துரை கொடுத்து, திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிட்டது.

எவ்வளவோ நினைவுகள். எதைச் சொல்ல, எதை ஒதுக்க என்பது மனதில் பிடிபடவில்லை. ஆனால், பல சமயம் உன்னை நாடாளுமன்றத்திற்கு, சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியாமல் காலம் தள்ளிக் கொண்டு போகின்றதே என்று என்னிடம் கலைஞர் கூறுவதுண்டு.

நெஞ்சக்கு நீதியில் எனது புகைப்படத்தோடு எழுதியுள்ளீர்களே அதுபோதும். பல அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் உங்களின் நெஞ்சுக்கு நீதியில் இடம் பெறவில்லையே. காலமும், வரலாறும் இதை பார்த்துக் கொள்ளும் என்றேன்.

https://www.bbc.com/tamil/india-45030458

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.