Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்!

 
 
assasination+rajiv+gandhi.jpg


வரலாற்றின் வழிநெடுகே, எப்போதோ நடந்த ஒரு சம்பவம் எப்போதோ நடக்கப் போகும் மற்றொரு சம்பவத்தை பாதித்தோ, வடிவமைத்தோ வரலாற்றின் போக்கையே மாற்றிவிடுவதை நாம் பார்க்கிறோம். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள், இந்திய விடுதலைப் போர், ஜெர்மனியில் ஹிட்லரால் கையாளப்பட்ட யூத அழிப்பு என இவை அனைத்துமே வேறு எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்களின் எதிரிவினைகள் தான். சமகாலத்தில் சொல்லவேண்டுமானால் அமெரிக்காவில் நிகழ்ந்த ரெட்டை கோபுர இடிப்பு சம்பவத்தைச் சொல்லலாம். சி.ஐ.ஏ தன் சுயநலத்திற்காக பின்லாடனையும் அவர் பயங்கரவாதத்தையும் ஆதரித்து வளர்த்தெடுக்கும் போது, ஒருநாள் அமெரிக்காவிற்கும் அவரால் ஆபத்து வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் வந்தது! இந்த வரலாறுகளையெல்லாம் தெரிந்தவர்கள் இன்று தனக்கு ஆபத்து என்றவுடன் அமெரிக்கா தானே வளர்த்த பின்லாடனை பயங்கரவாதி என அறிவித்துக் கொன்றபோது ஆச்சரியத்தில் கொஞ்சமாய் சிரிக்கவும் செய்கிறார்கள்! வரலாறு தெரிந்தவர்களுக்கு நிகழ்கால சம்பவங்களின் 'ட்விஸ்ட்'கள் எப்போதுமே ஒரு ஆச்சரியம் தான். இதுபோல் நமக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட சம்பவம் ஒன்றும் உண்டு. ஆனால் அதை வரலாற்று ரீதியாக, அறிவு ரீதியாக அணுகாமல் உணர்வு ரீதியாக மட்டுமே அணுகி உண்மைகளை தொலைத்துக்கொண்டெ இருக்கிறோம்.

2009 மே மாதம் ஈழத்தில் நிகழ்ந்த இன அழிப்பிற்கான வேர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை அதாவது 1987 வரை பின்னோக்கி நீண்டிருந்தாலும், அவை பிரம்மாண்டமாக வளரத் துவங்கியது மே21, 1991ல் இருந்துதான். சுருக்கமாய்ச் சொல்லவேண்டுமானால்  ஈழப்போராட்டத்தின் இறுதித் தோல்வி 2009ல் இலங்கையில் ஏற்படவில்லை, 1991ல் ஶ்ரீபெரும்புதூரிலேயே தொடங்கிவிட்டது!

ராஜீவ் கொலைக்கு வெளிப்படையான காரணமாகச் சொல்லப்படும் 'அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கான விடுதலைப்புலிகளின் பழிவாங்கும் நடவடிக்கை' என்பதை அவ்வளவு சுலபமாக நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இந்திய துணைக் கண்டத்தில் 'ஈழம்' என்ற தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் இருக்கும் ஒரு இயக்கம், அத்துணைக்கண்டத்தின் 'நாட்டாமை'யான இந்தியாவின் பிரதமரை வெறும் பழி உணர்ச்சியில் கொன்றிருக்குமா? ஒருவேளை கொன்றால் அது வருங்காலத்தில் அந்த இயக்கத்திற்கு அரசியல் ரீதியாக பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காதா? அது கூட தெரியாத அப்பாவிகளாக அவர்கள் இருந்திருந்தால் ஒரு நாட்டின் (இலங்கை) ராணுவத்தை எதிர்த்து இவ்வளவு பெரிய தனி இயக்க ராணுவத்தை கட்டமைத்திருக்க முடியுமா அல்லது தனி ராஜாங்கமே நடத்தியிருக்கத்தான் முடியுமா? 

ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்பிரமணியஸ்வாமி, சந்திராசாமி ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தபோதும் அவர்களை சி.பி.ஐ விசாரிக்காமல் விட்டதும், ஊடகங்கள் அதைப்பற்றி இன்றளவும் பேசாமல் இருப்பதும், சோனியாவே அதைப்பற்றி மவுனம் காப்பதும் கண்டிப்பாக ராஜீவ் கொலையில் அவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்பதை மட்டுமல்லாமல் இது ஒரு சர்வதேச 'high profile' கொலை என்பதையும் தெளிவாகக்  காட்டுகிறது. (இது பற்றி திருச்சி வேலுசாமி தன் தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற ராஜீவ் கொலை பற்றிய நூலில் தெளிவாக ஆதாரங்களுடன் விளக்குகிறார்.) ஆனால், அதனால் மட்டும் சிலர் சொல்வதைப் போல் விடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் கொலையில் முற்றிலும் தொடர்பு இல்லை, அது முழுக்க முழுக்க சுப்பிரமணியசுவாமி போன்றோரின் செயல்தான் என்பதையும் நம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் ராஜீவ் கொலையைப் பற்றி நேரடியாக பிரபாகரனிடம் கேள்வி எழுப்பட்டபோது, அது ஒரு துன்பியல் சம்பவம் என்றும் அதைப் பற்றி தாம் பேச விரும்பவில்லையென்றும் சுருக்கமாக முடித்துக்கொண்டாரேயொழிய குற்றச்சாட்டை மறுக்கவில்லை. ஆக இப்படி குழப்பங்களால் முடியப்பட்டிருக்கும் ராஜீவ் கொலையின் மர்மங்களையொட்டிய செய்திகளையும், உண்மைகளையும் வைத்து அலசினால் சில சதிக்கோட்பாடுகளை (conspiracy theory) நம்மால் யூகத்தின் அடிப்படையில் வரையறுக்க முடிகிறது

இந்திராகாந்தி அரசு புலிகளுக்கு ஆயுதமளித்ததும் பயிற்சி அளித்ததும் நம் அனைவருக்குமே தெரியும். இந்திராகாந்தி இயல்பாகவே இந்தியாவை இந்தியத் துணைக்கண்டத்தின் 'பெரியண்ணனாக' ஆக்குவதில் ஈடுபாடு கொண்டவர். அதுமட்டுமல்லாது சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவுக்கு 'ரவுடி' என்ற முகம் வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஆக தனக்கு அடங்காத இலங்கையை அச்சுறுத்தவும், சீனாவை மிரட்டவும் அமெரிக்கா பின்லாடனை வளர்த்ததைப் போல விடுதலைப் புலிகளை வளர்க்கிறார். அவர் எதோ ஈழத்தின் மேல் உள்ள பாசத்தில் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என நினைப்பது அபத்தமாகவே படுகிறது. ஏனெனில் எந்த பெரிய நாடும் கொள்கை கோட்பாடுகளில் சம்பந்தமேயில்லாத ஒரு போராளி இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கிறதென்றால் ஒருநாள் தன் நோக்கம் முடிந்தபின் அவ்வியக்கத்தை 'பலியிடப்' போகிறது என்றே அர்த்தம். அப்படி இந்திராவால் வளர்க்கப்பட்ட பிரபாகரனுக்கு, பின் எம்.ஜி.ஆரின் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கிறது. இங்கே ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தீவிர ஈழ ஆதரவாளர் எனச் சொல்வதும் கூட மிகைப்படுத்தப்பட்ட விசயமாகவே தெரிகிறது. ஏனெனில் மத்திய அரசு புலிகள் ஆதரவு நிலையில் இருந்தவரை எம்.ஜி.ஆர் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததையும், இந்திராவின் மரணத்திற்குப் பின் ராஜீவின் புலிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு அவர் தாவிவிட்டதையும் நாம் அவரது ஒரு பேட்டியின் மூலம் அறியலாம். 1987ல் எம்.ஜி.ஆரை அமெரிக்காவின் பால்டிமோர் மருத்துவமனைவில் பேட்டி கண்ட திரு.பார்த்தசாரதி இந்தியன் எக்ஸ்பிரஸ்சில், புலிகள் இந்தியாவின் பொறுமையை சோதித்துவிட்டதாகவும், தமிழகத்தில் எஞ்சியுள்ள புலிகளை விரட்ட தாம் உத்தரவிட்டுள்ளதாகவும், சிறி சபாரத்தினம் கொல்லப்பட்டபோது புலிகளை வன்மையாகக் கண்டித்த கருணாநிதி இப்போது புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் எம்.ஜி.ஆர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது சென்னையில் உள்ள புலி அலுவலகங்கள் சோதனையிடப்பட்டதும் அவர் ஆட்சியில் தான் என்றும் எழுதியிருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக அமைதிப்படையின் அட்டூழியங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தபோது ராஜீவ் காந்தியோடு இணைந்து ஒரு பொதுக்கூட்டத்திலும் பங்கு கொண்டார். இதன்மூலம் அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கு புலிகள் பதிலடி கொடுத்தபின் ராஜீவின் புலி எதிர்ப்போடு எம்.ஜி.ஆர் ஒத்துப்போகிறார் என்பதும் தேசியவாதியாகவே நடந்துகொள்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அந்த நிலைப்பாட்டில் நின்று தொடர்ந்து செயல்படும் அளவிற்கு அவர் நீண்டநாட்கள் உயிர்வாழவில்லை என்பது ஒருவகையில் அவரது புகழுக்கு சாதகம்தான்!! 

சுப்பிரமணியசுவாமி மற்றும் சந்திராசாமி ஆகியோர் சி.ஐ.ஏவின் இந்திய ஏஜண்ட்கள் என்ற குற்றச்சாட்டு பலகாலமாக உண்டு. எப்போதோ ஒருகாலத்தில் கூட்டணி தயவில் சட்ட அமைச்சராக இருந்த, மக்கள் செல்வாக்கு என்பதே முற்றிலும் இல்லாத ஒருவர் இன்றளவும் இந்திய அரசியல் உலகில் பதவி எதும் இல்லாவிடினும் செல்வாக்காக வலம் வருவதையும், எந்த நாட்டுப் பிரதமரையும், ஜனாதிபதியையும் (ஒபாமா உட்பட) நினைத்த நேரத்தில் சந்திக்க முடிவதையும், சர்வதேச அரசியல் ப்ரோக்கராக செயல்படுவதையும் பார்க்கும்போது குற்றச்சாட்டு உண்மைதான் என்ற முடிவுக்கே வரமுடிகிறது.

மேலுள்ள செய்திகளையெல்லாம் வைத்து கணக்குப்போட்டால் சில விசயங்களை அடுக்கி சில தியரிகளை முன்வைக்கலாம். முதலில் இந்தியா புலிகளை (போராளிக்குழுக்களை) ஆதரிக்கிறது, ஆயுதங்கள் கொடுக்கிறது. இந்தியாவுடன் இலங்கை அரசு இணக்கமான பின் அல்லது ராஜீவ் இலங்கையுடன் இணக்கமான பின் போராளிகளுக்கு கொடுத்த ஆதரவில் இருந்து பின் வாங்குகிறது. போராளிகளை ஒடுக்குவதற்கான வேலைகளில் இறங்குகிறது.  புலிகளை எவ்வகையில் எல்லாம் provoke செய்து கெட்டவர்களாகக் காட்டமுடியுமோ அதையெல்லாம் செய்கிறது இந்திய அரசு. உதாரணத்திற்கு அசோகா ஓட்டலில் பிரபாகரனை தங்க வைத்து மிரட்டியது போன்ற பல விசயங்களைச் சொல்லலாம். (அதே நேரம் இந்திய அரசு புலி ஆதரவாக இருந்தபோது, புலிகளின் சக போராளியான டெலோ தலைவர் சிறி சபாரத்தினம் புலிகளால் கொல்லப்பட்டபோது அதற்கு இந்திய அரசிடமிருந்து பெரிய எதிர்ப்பு இல்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்)

ஒருகட்டத்தில் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தால் ஈழம் சாத்தியமே இல்லை என்ற உண்மை புரியத்துவங்கும் போது ராஜீவ் கொலை செய்யப்படுகிறார். இந்த இடத்தில் இது ஒரு தனி இயக்கச் சதியாக இல்லாமல் பின்னணியில் சர்வதேச சதிகள் இருப்பதற்காக வாய்ப்புகள் கண்டிப்பாக தெரிகிறது. உதாரணத்திற்கு "பிரதமர் என்றெல்லாம் யோசிக்காதீர்கள். நீங்கள் செய்துவிடுங்கள், பின் நடப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் கொள்கைகளுக்கும் வருங்காலங்களில் உறுதுணையாக இருக்கிறோம்" என 'யாரோ' உறுதியான வாக்குறுதி கொடுக்காமல் புலிகள் அந்த கொலையைச் செய்திருக்க வாய்ப்பில்லை. இந்த வாக்குறுதி அநேகமாக இந்தியாவைவிட பெரிய, சக்திவாய்ந்த நாடு எதோ ஒன்றில் இருந்துதான் வந்திருக்கவேண்டும். சு.சாமி, சந்திராசாமி ஆகியோரின் தலையீட்டைப் பார்க்கும் போது சி.ஐ.ஏவின் சார்பாக புலிகளை அணுகிய ப்ரோக்கர்களாக அவர்கள் இருந்திருக்கலாம். சுப்பிரமணியசாமியின் தலையீடு, சி.பி.ஐயின் மவுனம், பிரபாகரன் ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டை மறுக்காதது போன்ற விசயங்களையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது ராஜீவ் மீதான புலிகளின் கோபத்தையும், சந்தர்ப்பத்தையும் மிகச் சரியாக உபயோகித்து ராஜீவை கொலை செய்ய புலிகளை 'சிலர்' பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற முடிவிற்கே நம்மால் வரமுடிகிறது.

ஒருவேளை இந்த யூகங்கள் எல்லாம் உண்மையென்றாலும், இதை ஏன் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட புலிகள் வெளியிடவில்லை என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஆனால் ராஜீவ் கொலைக்குப் பின்பு ஏற்பட்ட படுபயங்கர அவப்பெயரால் யாரையுமே பகைத்துக்கொள்ள முடியாத இக்கட்டான சூழலிலேயே அவர்கள்  இருந்தார்கள்! அதுமட்டுமல்லாமல் தாங்கள் ஒரு கொலையாளியாக பயன்படுத்தப்பட்டதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளமுடியாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

எது எப்படியோ! இறுதியாக புலிகள் மட்டுமே ராஜீவ் கொலையைச் செய்யவில்லை என்பதும், பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்கின்ற உண்மையையும் நம்மால் ஓரளவிற்கு அனுமானிக்க முடிகிறது! ஆனால் யாரால், எதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்ற விஷயம் மட்டுமே முற்றிலும் விளங்காத மர்மமாக இருக்கிறது. இந்தியாவிலேயே இருக்கும் சுப்பிரமணிசாமியை விசாரித்தால் உண்மை தெரியலாம். ஆனால் இந்திய சி.பி.ஐ அந்த அளவிற்கு எல்லாம் நல்ல, சுயமான அமைப்பு கிடையாது என்பதும் நமக்குத் தெரியும்! ஆக என்ன நடந்தது என்ற உண்மையை சுப்பிரமணியசாமியும், சந்திராசாமியும் அவர்களாக சொல்ல மாட்டார்கள். மேலும் சொல்லக்கூடிய ஆண்டன் பாலசிங்கமும், பிரபாகரனுன் உயிரோடு இல்லை! இந்நிலையில் ராஜீவ் கொலைப் பின்னணி கடைசிவரையில் இப்படி மர்மமாகவே இருக்கப்போகிறதா இல்லை விதை போல எப்போதாவது வெளியில் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எல்லா கொலைகளிலும் கொலையுண்டவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ராஜீவ் விசயத்தில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட புலி இயக்கமும் அவர்களின் நியாயமான போராட்டமும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அழிக்கப்பட்டதும், 'மிகப்பெரிய வழக்குகளில் உண்மையான குற்றவாளி கிடைக்கவில்லையா?? கவலையில்லை! கையில் கிடைத்தவனை தூக்கில் போட்டு கொதிப்படைந்திருக்கும் பொதுமக்களை சாந்தப்படுத்து' என்ற இந்திய நீதிமன்றங்களின் வழக்கப்படி தூக்கு தண்டனை பெற்று கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரது சொல்லொனாத் துயரமும் உலகத் தமிழர்களை மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்குவதாய் இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் யூகத்திற்கு இடமின்றி உறுதியாகச் சொல்லலாம். ராஜீவ் கொலையால் சோனியாவை விட, ப்ரியங்காவை விட, ராகுலை விட, ஒட்டுமொத்த துன்பத்தை அனுபவித்தவர்கள், அனுபவித்துக் கொண்டிருப்பவர்ர்கள் தமிழர்களே!! தமிழினத்திற்கு துன்பத்தையும், துயரத்தையும் அள்ளி வழங்கிய பெரும் 'துன்பியல்' சம்பவமாகவே அக்கொலையை வரலாறு பதிவு செய்யும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது!!! அச்செயலை செய்துமுடித்தபின் பிரபாகரனுக்கும் கூட அது தெரிந்தே இருக்கலாம்!!!

http://donashok.blogspot.com/search/label/விடுதலைப்புலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.