Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி தின் ரெட் லைன் - சினிமா ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

c

 

the thin red line

நிஜமாகவே ஒரு போரை நேரில் கண்டது போல உணர்ந்தேன்.

எதுவெல்லாம் வாழ்வென்று நினைக்கின்றோமோ அதற்கு எதிர் திசையில் நின்று ஒரு நிழலைப் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வின் எதிர் முனை. வேட்டை சமூகத்தின் ஆழ்மனம் இன்னமும் துப்பாக்கி தூக்கிக் கொண்டு வெறி பிடித்து அலைகிறது. தோட்டாக்களின் கணக்கும் எதிரிகளின் கணக்கும் சமன்செய்யும் ராட்சச  சமன்பாடுகளை போர் என்று சொல்லி நாமே வளர்த்தெடுப்பது நிச்சம் சர்வ நாசத்துக்கான இன்னொரு முயற்சி.

எத்தனை வீரம் பேசினாலும்.. துப்பாக்கியின் தோட்டா இடம் மாறி விட்டால் உயிர் போகும் படபடப்பு சொல்லி மாளாது. 

படத்தில்... ஆஸ்டென் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு அமெரிக்க ராணுவ C கம்பனி முன்னேறி செல்கிறது. ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு புல்லட் வந்து வந்து பாய்கிறது. கொத்து கொத்தாய் அமெரிக்க வீரர்கள் செத்து விழுகிறார்கள். யாரெல்லாம் கதை நாயகன் போல தோன்றுகிறானோ அவனெல்லாம் அடுத்த நொடி எவ்வித  தனித்த ஷாட்களும் இன்றி குண்டடி பட்டு சரிகிறான். பார்க்க பார்க்க அமெரிக்கா பக்கம் பரிதாபம் ஏற்படும் காட்சி சடுதியில் மாறும் போது ஜப்பான் பரிதாபமாக மண்டியிட்டு அமர்கிறது. போரின் நயவஞ்சகமே இதுதான். ஒரு கை ஓங்குகையில் சரிந்த கையில் மானுடம் வீழ்ந்து கொண்டிருக்கும். மண்டியிட்ட வெற்றியின் கோப்பையில் யார் வேண்டுமானாலும் மூத்திரம் அடிக்கலாம்.

ஒரு கட்டத்தில் தலைமைக்கும் கேப்டனுக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. தலைமை இன்னும் முன்னேற சொல்கிறது. வெற்றி வேண்டும் பிசாசு மனம் அத்தனை சீக்கிரத்தில் சமாதானம் அடையாது. அது எட்டு திசைகளிலும் நா நீட்டி குருதி குடிக்கும். கேப்டன், "ஏற்கனவே நிறைய பேர் செத்து விட்டார்கள். இனியும் முன்னேறினால் அது தற்கொலைக்கு சமம்" என்று வாதிடுகிறான். அவன் பேச பேச, அவனருகே என்ன பேசுகிறார்கள்... பேச்சின் முடிவு என்னவாக இருக்கும் என்று உள்ளே பயந்து கொண்டு  கண்களால் ஆராய்ந்து கொண்டு நிற்கும் சக வீரர்கள்.... சிறுபிள்ளையின் தோல்வி சாயல்கள். ஒரு கட்டத்தில் முற்றிய மனநிலையில் 7 பேரைக் கூட்டிக் கொண்டு முன்னேறுகிறான் கேப்டன். க்ளைமாக்ஸ் சண்டையைப் போல அப்படி ஒரு யுத்தம். துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டேயிருக்கின்றன. புற்கள் கருகுகின்றன. புகை மண்டலம் பரவுகின்றது. மனிதர்கள்  நொடிக்கு நொடி வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே முள்ளாய் நகர்கிறார்கள். பார்க்க பார்க்கவே மூன்றாம் உலகப்போரின் கோர முகம் நமக்குள் வந்து வந்து போகிறது.

மேலே சென்றால் ஜப்பானிய ராணுவப் படை பதுங்கு குழிக்குள் பத்திரமாக நின்று கொண்டு நொடிக்கு பல தோட்டாக்கள் சிதறும் 5 துப்பாக்கிகளை நிறுத்தி வைத்து ஜம்மென்று அடித்து நொறுக்குவதைக் காண முடிகிறது. தட்டு தடுமாறி உயிர் போய் உயிர் கொண்டு மேலே சென்ற அமெரிக்க படை... கொலை வெறியோடு 

சுற்றி வளைக்கிறது. மாட்டிக் கொண்ட பின், துப்பாக்கி பிடுங்கப் பட்ட பின்........ இருந்த தைரியமும்....... இருந்த ஆவேசமும் பயமாக மாறி... நடுங்குகிறது. குத்த வைத்து அமர்ந்து கொண்டு, ஆடையின்றி அமர்ந்து கொண்டு, தியானம் செய்து கொண்டு, சரணாகதி ஆகிக் கொண்டு, மண்டியிட்டு பரிதாபமாக ஜப்பானிய வீரர்கள் இருக்கும் காட்சி பதற வைக்கிறது. பொதுவாகவே எதிரி படையிடம்  மாட்டிக் கொண்ட வீரர்கள் நிலை காண சகியாதது. பொறுத்து, விளையாடி கொல்வது வெற்றி கொண்ட படையின் பொழுது போக்கு. வக்கிர வடிகால். வஞ்சம் தீர்க்கும் முறை. பார்வையில் சுய கழிவிரக்கத்தோடு நகரும் காட்சிகள்......போர்க்களத்தின் முகமூடியை உரித்து போடுகிறது. நிஜ முகத்தில் வழியும் குருதியில் அரசியல் புழுக்கள்.

"இந்த நாடு வெற்றி வாகை சூடி விட்டது. அந்த நாடு அப்படி போரிட்டு வெற்றி கொண்டது", என்றெல்லாம் வரலாறு பேசுவதை நான் மறுபரிசீலனை செய்கிறேன். ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னும், முன்னால் நின்று போரிடும் வீரர்களின் மன உளைச்சலும்... தடுமாற்றவும்.. வெறி கொண்ட மனமாற்றமும்... வேறு வழியில்லாத இயலாமையும் இருக்கிறது. தோற்றுப் போன படைகளின் பின்னால் குமுறி அழுகும்... தசை நார்களின் சொத சொதத்த குடும்ப வாழ்வியலின் ரத்த நாளங்கள் வெடிக்கின்றன.

சண்டையிட்ட ஒவ்வொரு இடைவெளியின் போதும்... வீட்டு ஞாபகமும், மனைவி நினைவும், காதலியின் பிரிவும், அம்மா பாசமும், பர்ஸுக்குள் இருக்கும் ஏதோ ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் காலத்தை நிறுத்தி கேள்வி கேட்கிறது. கசிந்து விட்ட வீரத்தின் பின்னால் கதவு பிடித்துக் கொண்டு எட்டிப் பார்க்கும் அன்பின் சுவடுகளைக் காண முடிகிறது. எதற்கு இத்தனை ஆயுதம்....?  எதற்கு இத்தனை போர்.....! எதற்கு இத்தனை குரூரம்....

யோசிக்க யோசிக்க பற்றிக் கொண்டு எரிகிறது பச்சைக்காடுகளின் வயிறு.

இந்த இயற்கை மிக குரூரமானது என்று ஒரு வசனம் கூட இடையே வருகிறது. ஆம்... இந்த மனிதர்கள் கூட தான் என்று இயற்கையும் மார் தட்டும். ஒரு ராணுவ வீர கதா பாத்திரத்தின் மனைவி ஒரு கட்டத்தில் இன்னொருவருடன் காதல் வந்தது குறித்தும்.......தனிமை தன்னை காவு வாங்கி விட்டது....என்றும்..... உன்னிடமிருந்து  விவாகரத்து வேண்டும்....... என்னை விடுவித்து எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கடிதம் வருகிறது. படித்து விட்டு என்ன எதிர் வினை புரிவதென்று தெரியாமல் சோர்ந்து சிரிக்கும் அந்த வீரனைப் பார்க்கவே பயமாக இருந்தது. ஒவ்வொரு போர் வீரனின் மனநிலையும் கணிக்க முடியாதவை. அது எப்போது எதை செய்யும் என்று கணிக்க முடியாத அழுத்தங்களால் சூழ்ந்திருக்கிறது. எல்லாம் அறிந்த தவிப்புகளின் வசமே இருக்கிறது அவை. இடையே மனநலம் பிறழ்ந்து தடுமாறும் வீரன் ஒருவனைக் காணுகையில்... ராணுவ வாழ்வின் போராட்டமும், கொடூரமும் சம்மட்டியால் சுடுகிறது. 

புதிதாக சேர்ந்த வீரன் ஒருவன் குண்டடி பட்டு இறக்கும் தருவாயில் வாய்விட்டு அழுவது கனத்த டாங்கிகளை சில் சில்லாக உடைத்து விடும் போர்க்கள நிஜம். வலி பொறுக்காமல் விஷம் கேட்டு அருந்தும் காட்சிகளும் உண்டு. "என்னால் நகர கூட முடியாது. விட்டு விட்டு முன்னேறுங்கள்" என்று சொல்லி... "பாய்.... என்னை மறந்துடாத" என்று முனங்கி அழும் மரணங்கள் கொடூரங்கள். நாய்களும் மற்ற மிருகங்களும் பிணங்களை கடித்து தின்னும் காட்சி போரின் கோரப் பற்கள் கொண்டு கண்ணைக் கிழிக்கிறது.

இரு நாடும் சேர்ந்து ஒன்றை ஒன்று அடித்துக் கொள்வதாக இரு நாட்டு வீரர்களையும் அழித்துக் கொல்கிறது. அந்தக்காட்டைப் போலவே போரிடும் மனங்களும் பற்றி எரிகின்றன. அமைதியின்றி அலைகின்றன. "என் வயதான பெண்மணிக்கு எழுதுங்கள்......என் இறப்பைப் பற்றிய செய்தியை எப்படியாவது கொண்டு சேர்த்து விடுங்கள்" என்று  கெஞ்சும் ஒரு வயதான வீரனின் இறுதி கெஞ்சல்கள் அருகில் இருக்கும் வீரர்களையும் குலை நடுங்க செய்பவை. "வாக்கை எப்படி காப்பாற்றுவது..... அந்த பெண்மணி யாரென்றே எனக்குத் தெரியாதே" என்று மனம் உழலும் சக வீரனின் நெஞ்சுக்குள் இனம் புரியாத தோட்டாக்கள் பாய்வதை வெளிப்படுத்தும் முகத்தை நாம் அத்தனை சீக்கிரம் மறந்து விட இயலாது. இத்தனை பலிகள் கொடுத்து இறுதியில் ஜெயிப்பவரின் வெற்றிக்கு பின்னால் இருப்பது அத்தனையும் வியாபரம். சந்தை. 

இவ்வுலகம் மிக மோசமான வியாபாரத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் கூட ஓர் ஆக்கிரமிப்பின்... ஓர் அதிகாரத்தின் ஓர் அரசியலின் மையத்தையே மீண்டும் மீண்டும் நடுகிறது.

ஜப்பான் படை சுற்றி வளைத்து விட... ஏற்கனவே குண்டடி பட்டு கத்தவும் முடியாத வேவு பார்க்க வந்த அமெரிக்க வீரன் எதிரிகளிடமும் மாட்டாமல் ஆற்றில் அடித்துக் கொண்டு செல்லும் காட்சி...யாருமறியா மரணம். ஒரு தனிமனிதனின் மரணம் யாருக்கும் தெரியாமல் இருக்கவே கூடாது. கடைசியில் அவன் மரணித்ததாவது தெரிய வேண்டும். காலத்தில் இம்மாதிரி மரணங்களை எச்சில் தொட்டு அழிக்கிறது போர். இருப்பதிலேயே கொடுமையான மறைவு காணா பிணம் ஆவது. அந்த வீரனின் வீட்டுக்கு அவன் என்னாவாகிறான் என்ற கேள்வி அந்த ஆற்றிலிருந்து விழும் அருவியாக கொட்டிக் கொண்டே இருக்கிறது. 

கீழ் படியாத கேப்டனை போரின் ஒரு கட்ட முடிவில் வீட்டுக்கு அனுப்பும் வேலையையும்..........வெற்றி மட்டுமே விதி என்று நம்பும் அகோரா பசிக்கு ஆளான தலைமை செய்கிறது. சில வெற்றி மோசமான மனநிலையை படைக்கும் என்பதற்கு சான்று இது.

நிஜம் ஒரு பக்கம் சுட... இந்த படம் மறுபக்கம் ஆச்சரியத்தில் என்னை அசைத்துப் பாக்கிறது. எப்படி இப்படி ஒரு படத்தை எடுக்க முடிந்தது. ஒவ்வொரு ஷாட்க்கும் எத்தனை செலவு செய்தார்கள் என்று தெரியவில்லை. மொத்த செலவு 52 மில்லியன் என்று இணையம் சொல்கிறது. எத்தனை நாள் படப் பிடிப்பு நடத்தினார்கள் என்றும் தெரியவில்லை. ஒருவேளை அனுமதி வாங்கிக் கொண்டு நிஜமான ஒரு போர் சூழலில் படம் பிடித்தார்களா என்று கூட சந்தேகம் வருகிறது.

நிறைய விருதுகளை வாங்கிய இந்த படம் எச்சரிக்கை மணியை அடிக்கிறது. யானை வரும் ஓசை அது. மோசமான மனித சிந்தனையின் விளைவு தான் போர் என்ற தத்துவத்தை துப்பாக்கியில் மாட்டிக் கொண்டு பூமியை வலம் வருகிறது. இவ்வேளையில்"சீமான்" கூறிய வசனம் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.

"ஆயுதம் வாங்கின காசுக்கெல்லாம் அரிசி வாங்கியிருந்தா எம்மக்கள் பசிங்கிற வார்த்தையே கேட்ருக்க மாட்டாங்கள்ல....."

மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ளும் இடத்தில் பழங்குடி கூட்டம் ஒன்று வாழ்கிறது. இதுதான் நிஜத்தை யானைக்கால்கள் கொண்டு மிதிப்பது என்பது. விழும் நிழலில்... படியும் ரத்தத்துக்கு யார் பதில் தேடுவது என்று நியாயம் வியர்க்க பார்த்துக் கொண்டிருக்கும் இந்த "தி தின் ரெட் லைன்" படத்தில் நான் அறிந்து கொண்ட புரிந்து கொண்ட... உணர்ந்து கொண்ட எல்லாவற்றுக்கும் அழுகையோ.... அமைதியோ... பயமோ.. படபடப்போ.... எல்லாவற்றையும் தாண்டி உயிர்கள் கொல்லப்பட படைக்கப்படவில்லை.... என்பதும்......... இந்த உலகம் வாழும் அனைத்து உயிரினங்களுக்குமானது என்பதும். இங்கே ஏகாதிபத்தியம் தான் இத்தனையும் செய்கிறது. தனிமனித தன்முனைப்புக்கு 

பழியாவதில் ஆரம்பிக்கிறது போர். போரின் கைகளில் விரல்கள் ஒருபோதும் கிடையாது. அத்தனையும் துப்பாக்கிகளே.  துப்பாக்கிகள் எப்போதும் எதிரே தான் நீளும் என்பதற்கு எப்போதும் உத்திரவாதம் கிடையாது என்பது தான் வரலாறு சொல்லும் நிஜம்.

படத்தொகுப்பு......இசை.... நடிப்பு.... கேமரா எல்லாவற்றையும் மீறி போரே முன்னால் நிற்கிறது. அத்தனை தத்ரூபம்.அத்தனை நிஜம். அது, எட்டிப் பார்க்கும் கண்களை  "தி தின்  ரெட் லைன்-ஜாக்கிரதை " என பதைபதைக்க வைக்கிறது. படம் முடிந்த பிறகு மூளையில் எங்கோ ஒரு தோட்டா ஒட்டிக் கொண்டிருப்பதாக நம்புகிறது மனம். 

அது பயங்கரம்.

Film: The Thin Red Line (1998)

Director : Terrance Malick

Language: English

http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/35235-2018-06-01-03-42-09

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.