Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடல் யோசித்தது…! - செ.டானியல் ஜீவா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடல் யோசித்தது…! - செ.டானியல் ஜீவா

Barack Obama

 

‘எனக்கொரு நண்பன் உண்டு, அவன் தனக்கென வாழாத் தலைவன்!’ என்ற கிறிஸ்தவப் பாடல் சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடித்தமான ஒன்று. இந்தப் பாடலின் வரிகளை என் நண்பன் குமாரைக் காணும் போது அவ்வப்போது எடுத்து விடுவேன். அதை நான் பாடும் போதெல்லாம் அவன் பதிலுக்கு என்னை கேலியும் கிண்டலும் செய்வதோடு, என்னைப் பார்த்து ‘பன்னாடை பன்னாடை’ என்று திட்டவும் செய்வான்.

குமாருக்கு நாற்பத்திரண்டு வயதிருக்கும். பொது நிறமும், நல்ல உடல் கட்டோடு உயரமாகவும் இருப்பான். ரொம்பவும் கறாரானவன் போல் தன்னைக் காட்டிக்கொள்வான். நெஞ்சில் அடர்ந்து கிடக்கும் கறுத்த முடியெல்லாம் வெளியில் தெரியும்படியாக சேர்ட்டின் மேற்பக்கப் பட்டனைத் திறந்து விட்டபடியே எப்போதும் வலம் வருவான். எதிரில் வரும் பெண்களெல்லாம் தனக்காக அலைகிறார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. நினைப்பதோடு நின்று விடமால் நண்பர்களுக்கெல்லாம் அதையே சொல்லித் திரிவான். சிலவேளைகளில் நெஞ்சை நிமித்தியபடி எவருக்கும் அஞ்சாதவன்போல் மிதப்போடு அலைவான். ஆனால் எதுவுமே உருப்படியாக அவன் செய்ததே இல்லை.

கல்லுரியில் படித்த காலத்தில்தான் குமார் எனக்கு நண்பனானான். அப்போது தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்வது பெரிய சாதனையாகவே நான் நினைக்கிறேன். காரணம், புரிந்துகொள்ள முடியாத அவனது போக்குத்தான். எப்போது என்ன செய்வான் என்பது யாருக்குமே புரியாது.

சிறுவயதாக இருக்கும்போது, பரவைக் கடலில் கட்டப்பட்டுக் கிடந்த வள்ளத்தில் ஏறி விளையாடும்போது தடுக்கி விழுந்ததால் என்னுடைய ஒற்றைக் காலில் முறிவு ஏற்பட்டது. இடது காலை கொஞ்சம் தென்டித் தென்டித்தான் நான் நடப்பேன். என்னைச் ‘சொத்தி’ என்று சிலர் கூப்பிடுவது எனக்குத் தெரியும். நண்பனாக இருந்தும் குமார்கூட என்னைச் ‘சொத்திக்காலன்’ என்று கூப்பிடுவதில் தனிக் கவனம் எடுப்பான். நான் நல்ல கறுப்பாக இருப்பேன். புகைப்பதும், குடிப்பதும் எனக்கு வாடிக்கையான விடயம். நான் கறுப்பாய் பிறந்தேன் என்பதில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மை எனக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது. சினிமாப் பாடல்களில் ‘கறுப்பு’ என்பது அழகென்று சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அதை அனுபவித்து பார்த்தால் தான் அதன் வலி தெரியும். என் தலைமுடி கறுத்த நிறத்தில் சுறுண்டிருக்கும். ஆனால், தோற்றத்தில் கட்டையாகவும், நிறத்தில் கறுப்பாகவும் இருந்ததோடு, தென்டித் தென்டித் நடப்பதால் மனதளவில் சோர்ந்துபோன உணர்வே எப்போதும் என்னுள் இருப்பதுண்டு.

ஒருவருடன் கொஞ்ச நாட்கள் பழகினாலே அவர்களது போக்கை நான் இனம் கண்டு கொள்வேன். அதுபோல் அவர்கள் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது புறந்தள்ளுகிறார்களா என்பதையும் எனக்குள்ளாகவே உணர்ந்து கொள்வேன். அப்படித்தான் குமாரை நான் அடையாளம் கண்டு கொண்டேன். ஆனால் நான் காட்டிய கரிசனையையும் மீறி அவன் என்னை அலட்சியப்படுத்துவதும் பின் தானாகவே என்னோடு ஒட்டிக் கொள்வதுமாகவே இருந்து வந்தான்.

அவனுடைய அப்பா கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். தகப்பன் இறந்து ஆறுமாதம் கூட ஆகாத நிலையில் அவனுடைய தாய் பக்கத்து ஊரைச் சேர்ந்தவனோடு ஒடிப்போய்விட்டாள். அதன்பின் அவனுடைய வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவனையும், அவன் தங்கையையும் அவனது மாமியார்தான் வளர்த்தாள். குமாருடைய கல்லூரிப் படிப்பை இடையிலேயே நிறுத்திய அவனது மாமியார், யாழ்ப்பாணத்திலுள்ள புடவைக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டாள். சில வாரங்களிலேயே கடையில் களவெடுத்ததாக குற்றம் சாட்டி வேலை யிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் புலிகளோடு அடிபட்டுக் கொண்டிருந்த போது, சனங்களெல்லாம் அகதி முகங்களுக்கு செல்ல, இவனோ இரவோடு இரவாக சங்கக் கடையை உடைத்து அங்கிருந்த பொருட்களையெல்லலாம் எடுத்து விற்றான். அது பற்றி அவனிடம் கேட்ட போது,’ இது அரசாங்கச் சொத்துத்தானே… எடுத்தால் தப்பில்லை…!’ என்றான். இப்படிச் சின்னச் சின்னக் களவென்று நிறையச் செய்தான்.

எப்போதுமே சமத்துவம் பேசிவந்த அவன், கணவனால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தையின் தாயை விரும்பி திருமணமும் செய்து கொண்டான். அவளை அவன் காதலிக்கிறபோது, தான் இயக்கத்தில் இருப்பதாக ஒரு பொய்யை சொல்லி வந்தான். அதை அவள் உண்மையென நம்பினாள். இயக்கம் இருந்த காலத்தில் எப்படி யாழ்ப்பாணத்திலுள்ள பெண்களுக்கு போராளிகளின்மேல் பரிவும், பயம் கலந்த பாசமும் இருந்ததோ, அந்த அடிப்படையில் இவளுக்கும் அவன் மீது காதல் மலர்ந்தது.

தன்னை ஒரு இடதுசாரி என்றே சொல்லி வந்தவன், மதம் சார்ந்த முறைப்படியே திருமணம் செய்து கொண்டான். திருமணம் நடந்த முதலிரவில், அவன் மனைவி தேவி காதுக்குள் முணு முணுக்கத் தொடங்கினாள். ஆவலோடு அவன் படுக்கையில் சாய்ந்தபோது அவள் கேட்டாள் ‘ஏதும் ஆயுதம் சட்டைக்குள்ள வைச்சிருக்கிறீயா…?’

அவன் சிரிச்சுக் கொண்டே ‘அடியே விசரி… நான் இயக்கத்தை விட்டு விலகிட்டேன். மக்கள் போராட்டம் ரொம்ப நாளாகுமாம் அதுவரைக்கும் நான் காத்திருக்கேலாதெண்டு விலகிட்டன்… இப்ப என்னட்ட ஒண்டுமில்லை.’ என்று அவன் சொல்ல.

‘நான் நம்ப மாட்டேன்’ என்று அவள் காதுக்குள் முணுமுணுக்க – ‘இந்தா பார்…!’ என அவன் தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டான். அதன் பின்னரே அவள் அவனை ஆக்கிரமித்தாள்.

அடுத்தடுத்து தேவிக்கு பிள்ளைகள் பிறந்தன. ஏற்கனவே அவளுக்கு இருந்த இரண்டு பிள்ளைகளோடு குமாருக்கென மேலும் மூன்று பிள்ளைகள் பிறந்து மொத்தம் ஐந்தாகியது. குமார் கல்யாணம் கட்டிய நாளிலிருந்து அதிகம் வேலைக்குப் போவதில்லை. தேவியின் உடன் பிறந்த சகோதரர்கள் நான்குபேர் வெளிநாடுகளில் இருந்தார்கள்.இருவர் கனடாவிலும், ஒருவர் பிரான்சிலும் மற்றவர் ஜேர்மனியிலும் இருந்தார்கள். இதைவிட ஊரோடு இரு சகோதரிகள் இருக்கிறார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் அனுப்பி வைக்கும் பணத்திலேயே குமார் குடும்பம் நடத்தி வந்தான்.

குமார் செய்த சில தவறுகளுக்காக ஒரு நாள் இயக்கம் பிடித்துக் சென்று அடித்ததோடு விட்டு விட்டார்கள். அதன் பின் சிறிதுகாலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தான் குமார். தேவிதான் அவனை சமாதானப் படுத்தி வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காகக் கொழும்புக்குக் கூட்டி வந்தாள். சில நாட்கள் இருவரும் ‘லொட்சில்’ தங்கியிருந்தார்கள். குமாரின் வெளிநாட்டுப் பயணம் தாமதமாகியதால் குமாரை கொழும்பில் விட்டுவிட்டு ஊருக்குத் திரும்பி விட்டாள் தேவி. அது அவனுக்கு வாய்ப்பாக அமைந்தது. தன்னுடைய வழக்கமான குழப்படிகளை ஆரம்பித்தான் குமார். அவனுக்கு வெளிநாட்டுப் பணம் தவறாது வந்து கொண்டிருந்தது. அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு கொழும்பில் ஆட்டம் போட ஆரம்பித்தான். தினமும் ஆறுமணிக்கு மேல் குடி போதையிலேயே இருப்பான். நிறைய நண்பர்கள் அவனோடு நட்பாக இருந்தார்கள்.

றஞ்சினி என்ற யாழ்ப்பாணத்து பெண் வெளிநாடு போவதற்காக் கொழும்பு கொச்சிக்கடை றெட்ணம் றோட்டில் அவர்களுடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்தாள். அடிக்கடி பக்கத்தலுள்ள கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலுக்கு முன்னால் இருக்கும் சிவன் கோயிலுக்கு போய் வருவாள். அவளை தற்செயலாக கோயிலில் சந்தித்திருந்தான் குமார். தான் இன்னும் கல்யாணம் செய்யவில்லை என்றும், தமிழ்ஈழம் கிடைக்கும் வரை தான் கல்யாணம் செய்வதில்லை என்ற முடிவோடு இருப்பதாகவும் அவளுக்குச் சொன்னான். வெளிநாட்டில் இருக்கிற தன்னுடைய அண்ணன்மார் தன்னை அங்கு எடுக்கப் போவதாகவும், அதற்காகத்தான் கொழும்பில் காத்திருப்பதாகவும் கதை விட்டான். இல்லாத பொல்லாததையும் சொல்லி அவளை தன்மேல் அனுதாபம் கொள்ள வைத்தான். இருவருக்கும் இடையே அந்ரங்க உறவொன்று மலர்ந்தது. றஞ்சினியும் அவனுடைய கதைகளை நம்பி அவன் பின்னால் திரிந்தாள். நல்ல சாப்பாடு, படங்கள் பார்ப்பது, விதம்விதமான உடுப்புகள், காசு என்று பல்வேறு வகைகளில் அவளை சந்தோஷப்படுத்தி தன்னிடம் வசப்படுத்திக் கொண்டான்.

றஞ்சினி கோயிலுக்குப் போய் வரும் போது ஒரு தெய்வீகக் களை அவள் முகத்தில் படிந்திருக்கும். அளவான் திருநூற்றுப் பூச்சு அவள் நெற்றியை எப்போதும் அலங்கரிக்கும். பண்பான தோற்றத்தை கொண்ட அவள், எப்படிக் குமாரின் பொய்யான வார்த்தைக்களுக்குள் விழுந்திருப்பாள்? வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வரும் பெண்கள் இப்படி ஏமாற்றப் படுவதும், இல்லையேல் தாங்களாகவே மாறிப்போவதும் காலத்தின் கோலமாகிவிட்ட காலகட்டம் அது. தோற்றத்தை கொண்டு யாரையும் நம்பிவிட முடியாத ஒரு நிலை அப்போது இருந்தது. சுயநலத்துக்காக எந்த வேடத்தையும் போட ஆணும் சரி பெண்ணும் சரி தயாராகவே இருந்தார்கள்.

இந்த நிலையில்தான் ரஞ்சனி குமாரின் பார்வையிலிருந்து திடீரென விலகிச் சென்றாள். அவள் தொடர்புபட்ட இடங்களிலெல்லாம் அவன் அவளைத் தேடிப் பார்த்தான். கோவிலில் அவளுக்காக காத்திருந்து தவித்துப் போனவன், அவள் தங்கியிருந்த வீட்டை தேடிப்பிடித்துச் சென்றான். அவளை இலங்கையின் காவல்துறையினர் கூட்டிச் சென்றதான தகவல் மட்டுமே அவனுக்கு கிடைத்தது.

அந்த வீட்டிற்கு போய் வந்த நாளின் பின் அவன் நிறையவே குடிக்கலானான். ஏற்கனவே கலியாணமான அவனுக்கு ரஞ்சினியிடம் ஏற்பட்ட நெருக்கமானது காதலாக அங்கீகரிக்கக் கூடிய ஒன்றாக இருக்க முடியாது என்றாலும், அவனைப் பொறுத்தவரை கொழும்பில் இருக்கும்வரை இளமைக்கு தீனியாக தனக்கு கிடைத்த ரஞ்சனியின் இதமான நெருக்கம் அறுந்துபோன சோகமே அவனை வாட்டியது. அந்த ஏக்கமே அவனுக்கு கண்ணீரை வரவழைத்தது. ஒரு சில வாரத்தில் அவன் இயல்பு நிலைக்கு வந்தான். அவளை மறந்துவிடும் மனநிலையோடு வேறு யாரும் அகப்படமாட்டார்களா என்று அலையவும் ஆரம்பித்தான்.

றஞ்சினி எங்கேயிருக்கிறாள்…? அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்ற யோசனையோ, அல்லது அவளை மீட்க வேண்டுமென்ற முயற்சியோ அவன் எடுக்கவில்லை.

நான் கனடா வந்து இறங்கிய கொஞ்ச நாட்களுக்குள் அவனும் வந்து சேர்ந்து விட்டான். வந்தவுடன் எப்படியோ என்னைத் தேடிப் பிடித்து என்னோடு ஒட்டிக் கொண்டான். மார்க்கத்தில் ஒரு தமிழ் குடும்பத்தின் வீட்டில் குமார் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கியிருந்தான். அந்த வீட்டாரைப் பற்றி நிறைய முறைப்பாடுகள் எனக்குச் சொல்லுவான். சாப்பாடு கொடுப்பதிலிருந்து தன்னைச் சரியாக கவனிப்பதில்லை என்பது வரை வாய் வலிக்காமல் சொல்லிக் கொண்டிருப்பான். ஒருநாள் என்னை தனது அறைக்கு கூட்டிச் சென்றான். அவனுடைய வீட்டுக்காரர் என்னை வைத்துக் கொண்டே பகிடியாக இவனுடைய திருகுதாளம் பற்றி சொன்னார்கள். அவன் சிரித்து மழுப்பிக்கொண்டிருந்தான். ஒன்று மட்டும் எனக்குச் நன்றாகவே விளங்கியது. அவன் வாடகைக் காசு ஒழுங்காக கொடுப்பதில்லையென்று.

ஓரிரண்டு வருடங்களில் குமாரின் ஸ்பொன்சரில் அவனுடைய மனைவியும் ஐந்து பிள்ளைகளும் கனடாவுக்கு வந்துவிட்டார்கள். தனி அறையில் இருந்த குமார் மூன்று அறை கொண்ட தொடர்மாடிக்கு மாறிவிட்டான். குடும்பம் வந்தவுடனேயே ‘வெல்பெயருக்கு’ போய் விட்டான். அவனுக்கு அரசாங்கம் கொடுக்கும் பணம் ஒரளவு போதும். ஆனால் குமாருடைய குடியாலும், வீண் செலவுகளாலும் அரசாங்கம் கொடுக்கின்ற பணம் அவர்கள் குடும்பத்திற்கு போதவில்லை.

தேவி கனடா வந்த பின், யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் எல்லாக் காரியங்களையும் தானாப் பழகிக் கொண்டாள். கிழமை நாட்களில் தன்னுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிப் போவதும், வருவதுமாக அவளுடைய நாட்கள் கடந்தன. மேலும் சில தமிழர்களும் பிள்ளைகளை பள்ளியில் கொண்டுவந்து விடுவதற்காக வருவார்கள். அதில் ஏற்பட்ட ஒரு தொடர்பில், நடுத்தர வயதுடைய ஒருத்தனோடு தேவிக்கு நட்பு ஏற்பட்டது. அவனை சந்திப்பதோடு, வீட்டில் குமார் இருக்கும் போதும் அவனோடு தொலைபேசியில் அவள் உரையாடுவாள். குடும்பத்தில் அக்கறையில்லாத குமாரின் நடத்தையே அவளை அலட்சியமாக நடக்க வைத்தது.

குமாருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனக்குப் போன் பண்ணுவான். அவன் என்னோடு நிறையவே கதைக்க வேண்டுமென்று சொல்வான். மனைவியோடு பிரச்சனையென்றால், நேரிலும் வந்து சந்தித்தும் கதைப்பான். அவனுக்கு ஆறுதல் அளிப்பது என்னுடைய வார்த்தைகள்தான் என்று சொல்வான். அவனுடைய முறைப்பாடுகளில் முக்கியமானது அவனுடைய மனைவி பற்றியது. அவள் எந்த நேரமும் தொலைபேசியில் யாரவது ஒருவரோடு கதைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதுதான் அவனது குற்றச்சாட்டாக இருக்கும். யாரோ ஒருவனோடு தொடர்ச்சியாகக் கதைக்கிறாள் என்று சொல்லி ஆவேசப் படுவான். நான் அதைக் கேட்டு சிரிப்பேன். என் சிரிப்பு அவனை சினக்க வைக்கும். கண்களை அகலமாக விரித்து கோபமாக என்னைப் பார்ப்பான். பயந்ததுபோல் நான் சிரிப்பதை நிறுத்தி விடுவேன்.

குளிர் காலம் ஆரம்பித்திருந்தது. கொட்டும் பனியில் உடல் விறைத்துக் கிடந்தது. முதல்நாள் இரவு இலக்கியவாதிகள் சிலரை சந்தித்து பேசிக்கொண்டிருந்ததில் வீடு திரும்பும்போது அதிகாலை மூன்றுமணியாகிவிட்டது. வேலை அலுப்பும் சேர்ந்துகொண்டதால் அடித்துப் போட்டதுபோல் தூங்க ஆரம்பித்தேன்.

அதிகாலை நாலு மணியிருக்கும், தொபைபேசி மணி கிணுகிணுத்தது. ‘இந்த நேரத்தில் யார் போன் பண்ணுவார்கள்…?’ என்று தூக்கக் கலக்கத்திலும் திட்டியபடி மறுபுறம் திரும்பிப் படுத்துவிட்டேன். மீண்டும் தொலை பேசி மணி அடித்தது. உடல் சோர்ந்து கிடந்தாலும், என்னவோ ஏதோ என்ற அச்ச உணர்வும் சேர்ந்தகொண்டது. கண்ணைக் கசக்கிக் கொண்டு தொலை பேசியில் விழுந்த இலக்கங்களைப் பார்த்தேன். சலிப்புத்தான் ஏற்பட்டது. குமார்தான் அழைத்தான். ‘ஏன் இந்த நேரத்தில் இவன் எடுக்கிறான்…?’ என்று யோசித்தபடி தொலை பேசியை எடுக்காமலே மீண்டும் திரும்பிப் படுத்துவிட்டேன். அவனோ திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருந்தான். கடைசியில் சகிக்கமுடியாமல் எரிச்சலோடு தொலைபேசியை எடுத்தேன். மணி அடித்தவுடன் எடுக்காதற்கு முதலில் என்மேல் எரிந்து விழுந்தான். என் மௌனம் எனது மனநிலையை அவனுக்கு வெளிப்படுத்தியருக்க வேண்டும். தானாகவே விசயத்துக்கு வந்தான்.

‘நான் என்ர மனுசியோட பெரிய பிரச்சினைப்பட்டுட்டன். உன்னோட நிறையக் கதைக்க வேணும் உன்ர வீட்ட வரணும்’ என்றான்.

‘அதுக்கென்ன வாவன். இந்த நேரத்தலை எப்படியடா வரப் போற..?’என்று நான் கேட்டேன்.

‘பஸ்சிலதான்’

‘விடியத்தான் நான் வந்து படுத்தனான், வீட்டு முன் கதவை உள்ளால திறந்து விட்டுட்டு நான் படுக்கிறன். நீ உள்ள வந்து என்னை எழுப்பாமல் சோபாவிலை படு. நான் நித்திரையால எழும்பின பிறகு எல்லாத்தையும் விபரமாகச் சொல்லு.’ என்று

சொல்லிவிட்டுத் தொலைபேசியைத் துண்டித்தேன். அலுப்போடு எழுந்து சென்ற நான் பூட்டியிருந்த கதவை உட்பக்கமாகப் திறந்து விட்டிட்டு மீண்டும் வந்து தூங்க ஆரம்பித்தேன்.

நான் பகல் பத்துமணிக்கே படுக்கையிலிருந்து எழுந்தேன். குமார் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தான். நான் குளித்துவிட்டு வெளியில் போவதற்கு ஆயத்தமானேன். அவன் என்னுடைய காலடிச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டான். அவனுக்குப் பக்கத்தில் நான் உட்கார்ந்தேன். அவன் முகத்தைப் பார்த்ததும் பதற்றமானேன்.

‘என்னடா என்ர முகத்தில நடந்தது..?’

‘என்ர பொஞ்சாதியும் அவளின்ர முதல் தாரத்து மூத்த பிள்ளையும் சேர்ந்து அடிச்சுப் போட்டாளுகள்.’

‘நீ என்ன செய்தனீ..?’

‘ நான் வந்ததையும் கணக்கெடுக்காமல் யாரோ ஒருத்தனோடு கதைத்துக் கொண்டிருந்தாள், நான் சாப்பாடு போடச் சொல்லிக் கேட்டதையும் அவள் காதிலை வாங்கேல்லை. ஆத்திரம் வந்தது, அடிச்சுப்போட்டன். அவளுக்கும் நல்ல காயம் வைச்சிட்டன். ஆனால், இரண்டு பேரும் சேர்ந்து என்னை பிச்சுப் பிறாண்டிப் போட்டாளுகள்! என்ன வீட்டிலை இருக்கக் கூடாது எண்டு வெளியில போகச் சொல்லிப் போட்டாள். நான் ஊருக்குப் போறதெண்டு முடிவு செய்து போட்டன்.’

‘ஏன்டா அவசரப்படுகிறாய்?’

‘நான் முடிவு செய்து போட்டன். இனி இங்க என்னால இருக்க முடியாது. இவளின்ர முகத்திலையும் முழிக்க நான் விரும்பல்லை. அவளின்ர கதையை இனி விடு. பேசிப் பிரயோசனமில்லை. ஆனால் ஒரு விசயம் மட்டும் எனக்குப் புரியேல்லை. நான் இந்தச் சோபாவில படுத்துக் கிடக்கேக்க ஒரு கனவு கண்டனான்…கடல் யோசிச்சுக் கொண்டு இருக்குதாம் என்னைச் சுனாமி போல வந்து அழிக்க… இந்தக் கனவின்ர அர்த்தமென்னடா மச்சான்..?’

‘நீ போறதெண்டு முடிவெடுத்திட்ட பிறகு ஏன்ரா கனவுகளுக்கெல்லாம் பயப்படுறாய்? உன்னுடைய முடிவிலை நீ உறுதியாக இருக்கிறியா எண்டு மட்டும் யோசி!’ என்று சிரித்தபடி சொல்லிவிட்டு,

‘வா கோப்பிக் கடைக்கு போவம்.’ என்றேன். அவன் எந்த மறுப்பும் சொல்லாமல் எழுந்து வந்தான்.

கோப்பிக் கடைக்கு முன்னால் காரை நிறுத்தி விட்டு, இருவரும் நடந்து வந்தோம். கடைக்குள் போவதற்காகக் கதவை நான் திறக்க முற்பட்ட போது, கவுண்டரடியில் ஒரு பெண் கோப்பி வாங்குவதற்காக நிற்பது தெரிந்தது. தமிழ் பெண்ணாக இருக்கவேண்டும் என நான் நினைக்கும்போதே, குமார் அவளைக் கண்டதும் சட்டென முகத்தை மறைத்துக் கொண்டு திரும்பவும் காரை நோக்கி விரைந்து நடந்தான். நான் கூப்பிட்டும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப் பெண்ணை எட்ட நின்றபடியே உற்றுப் பார்த்தேன். எப்போதோ பார்த்த ஞாபகம். அதேவேளை, எதற்காக குமார் அவளைக் கண்டதும் ஓடி மறைகிறான் என்று சிந்தித்தபடி நின்றிருந்தேன். அவளது நினைவு எனக்குள் வர மறுத்தது. அவளைப் பார்த்தபடியே கழிப்பறையை நோக்கிச் சென்றேன்.

திரும்ப வரும்போது அவள் அங்கு இல்லை. இரண்டு கோப்பிக்கு சொல்லிவிட்டு நின்றேன். அவள் பற்றிய நினைவை மிண்டும் மனதில் கொண்டுவர முயன்றேன். வர மறுத்தது. கோப்பியை பெற்றுக்கொண்டு நான் வெளியே வர முயன்றபோது, இரண்டு கனடிய படை வீரர்கள் உள்ளே வருவதற்காக எனக்கு வழிவிட்டு கதவை திறந்து பிடித்திருந்தார்கள். நான் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வாசலை கடந்து வந்தேன். அந்தப் படையினரை கண்டதுமே என் மனதில் அந்தப் பெண்ணைப்பற்றிய பின்னோக்கிய நினைவுகள் பதிவாகியது.

புலிகளோடு போரிட்டு யாழ்ப்பாணக் குடாவை இலங்கைப் படையினர் கைப்பற்றியபோது இராணுவத்தின் வஞ்சக வலைக்குள் வீழுந்த பெண்களில் இவளும் ஒருத்தி. சலுகைகளுக்காக புலிகளை இராணுவத்துக்கு காட்டிக் கொடுக்கத் துணிந்தவள். புலிகள் இவளை குறி வைத்ததும், தப்பித்து கொழும்புக்கு சென்றுவிட்டதாக சொல்லப்பட்டவள். பணத்துக்காக எந்த வேசமும் போடக்கூடியவள். எப்படியோ எல்லாரிடமும் தப்பித்து கனடாவுக்கு வந்து சேர்ந்துவிட்டாள் என நினைத்துக் கொண்டேன். ஆனாலும் மனதில் ஒரு உறுத்தல்.

‘இவளைக் கண்டு என் நண்பன் குமார் ஏன் பதுங்க வேண்டும்?;’ என நினைத்தபடி கோப்பியோடு காரில் வந்து ஏறினேன்.

கோப்பியை வாங்கிக்கொண்ட குமார், ஒரு புன்சிரிப்போடு என்னைப் பார்த்தான். அவன் சிரிப்பு ஏனோ எனக்கு எரிச்சலை மூட்டியது. ஆனாலும் அமைதியாக அவனைப் பார்த்துக் கேட்டேன்,

‘ஏன்டா குமார்…. அந்தப் பொம்பிளையை பார்த்திட்டு ஏன் இந்த ஒட்டம் ஓடி வந்தாய்?

சாதாரணமாக கேட்பதுபோல் கேட்டேன். அதற்கு அவன் சிரித்தபடி,

‘அவள் தான் என்ர பழைய ரஞ்சினி….! கொழும்பில ஆமி பிடிச்சுக் கொண்டு போனது எண்டு சொன்னது ஞாபகம் இருக்குதா?’ என்றான்.

‘அது உன்ர பழைய காதலியல்லோ… அவளா இவள்..?’ என்று ஆச்சரியத்தோடும் எரிச்சலோடும் கேட்டேன்.

அவன், ‘ம்…’ என்று இழுத்தான்.

(முற்றும்)

http://www.nanilam.com/?p=11737

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.