Jump to content

வாசனை – அனோஜன் பாலகிருஷ்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வாசனை – அனோஜன் பாலகிருஷ்ணன்

vasanai.jpg

இத்தனை காலம் கடந்து அவனை சந்திப்பேன் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் மட்டுமே எனக்கு மங்கலாக நினைவில் இருந்தது. ஜெயந்தனை கண்டவுடன் புதையுண்டிருந்த அவனின் முகம் ஞாபக அடுக்களில் இருந்து ஓர் அலைபோல் எழுந்து வந்து என் காலடியில் மோதி பொடிப்பொடியாக உதிர்ந்தது. அவன் தன் மனைவியை விட்டுவிட்டு என்னை மட்டும் தனியாக அழைப்பது மெலிதான சஞ்சலத்தைத் தந்தது. அவன் மனைவி தன் உறவினர் ஒருவரைப் பார்க்கப்போய்விட்டதாக நான் கேட்காமலே தொலைபேசியில் சொன்னான். ஹரிக்குச் சொல்லலாமா என்று யோசிக்கச் சங்கடமாகவிருந்தது. ஜெயந்தனைக் காதலித்து கடைசியில் ஹரியை கல்யாணம் செய்துகொண்டபோதும் ஜெயந்தனைப் பற்றி நான் ஹரியிடம் வாயே திறந்தது இல்லை.

ஜெயந்தனை சந்தித்தது மிகத் தற்செயல். அன்று மட்டும் ஃபஷன்பேக் செல்லாமல் இருந்திருந்தால் அவனைக் கண்டே இருக்க முடியாது. அந்தக் கொந்தளிப்பு நிகழ்ந்திருக்காது.

ஃபஷன்பேக் உடைய உள்படிகளால் இறங்கிவரும்போது அவன் என்னைப் பார்த்துக்கொண்டு இருந்ததினை தற்செயலாகக் கண்டேன். வலப்பக்க உதட்டைச் சுழித்து சிரித்தான். அவன் புன்னகை மெலிதாக வெடித்து என்மேல் பரவியதை உணர்ந்தபோது இப்போதும் என்தேகம் குளிர்கின்றது. அவன் அருகில் கூந்தலை மேவியிழுத்து கன்னங்கள் மினுங்க ஒரு பெண்ணிருந்தாள். மௌனமாக ஒருகணம் நின்றுவிட்டு சுதாகரித்து அவனைப் பார்த்துச் சிரித்தேன். என் அருகில் வந்தான். நானும் அவனை நோக்கிச் சென்றிருந்தேன். இருவரும் பேசத் தொடங்குவதற்கு ஏதோவொன்று இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.

“எப்படி இருக்குறீங்க..?” என்று ஆரம்பித்த சம்பிரதாய உரையாடல் நீண்டுகொண்டு சென்றது. தனக்கருகில் நிற்கும் அவளை தன் மனைவி என்று அறிமுகப்படுத்தினான். என்னைக் கட்டிப்பிடிப்பதுபோல் அருகில் வந்து என் தோள் மூட்டுக்களை தன் இடக்கையால் தட்டி மற்றைய கையால் என் வலக்கையைப் பிடித்து சிநேகமாகக் கதைக்கத் தொடங்கினாள்.

“வெளியே ரெஸ்டோரன்ட் ஒன்றுக்குப்போய் சாப்பிட்டுக்கொண்டு கதைப்பமா?” அவன் கேட்க அவன் மனைவி போகலாமே என்று என்னைப் பார்த்தாள். அவளுக்கு என்னைத் தெரியுமா? எங்கள் கதைகள் அவளுக்குத் தெரிந்திருக்குமா. அவசரமாகச் செல்ல வேண்டும், வேறொருநாள் சந்திப்போம் என்று சொல்லி ஒரு மாதிரி அவர்களைச் சாமாளித்துவிட்டுப் புறப்பட்டேன். போகும்போது அவன் மனைவி என் தொலைபேசி எண்னைக் கேட்டாள். கைத்தொலைபேசி எண்னைக் கொடுத்திருந்தேன். அதுதான் வம்பாகப்போனது. அடுத்தநாளே அவன் அழைத்தான். நீண்ட நேரம் கதைத்தான். மறந்தும் அவன் பழைய காதலைப் பற்றி பேசவேயில்லை. எப்படி அவனால் இப்படி நுட்பமாக உரையாட முடிகின்றது.

கட்டில் மெத்தையில் வீழ்ந்து படுத்தேன். தலை வலிக்கும்போல் தோன்றியது. அப்பாவும் தன் காதலியை இதுபோல் அம்மாவுக்குத் தெரியாமல் ரகசியமாகச் சந்தித்திருப்பாரா? அப்பாவின் காதலியின் கற்பனை விம்பம் ஒரு தேவதைபோல் எனக்குள் விரிந்தாள். அதுவொரு தனிக்கதை.

ஹங்கரில் இருந்த ஹரியின் முழங்கை நீளமான மேற்சட்டையை தொட்டுப்பார்க்க மிருதுவாக கைகளில் அமிழ்ந்தது. ஒவ்வொரு சட்டைகளாக எடுத்து முகர்ந்து பார்த்தேன். ஹரியின்  வாசனை சட்டைகள் மீது வீசிக்கொண்டிருந்தது. ஹங்கரில் இருந்தன விதம்விதமான வரிகள் இடப்பட்ட சட்டைகள்.  ஹரி வரிகள் இடப்பட்ட சட்டைகளை அணிய விரும்புவார். சட்டைகளினை எடுத்து கட்டிலில் பரப்பிவிட்டு கைகளால் நீவீனேன். சாய்ந்து சட்டைகளின்மேல் வீழ்ந்து படுத்தேன். மென்மையாகக் கட்டில் மெத்தை அமிழ்ந்தது. மின்விசிறிகள் எனக்கு மேலாகச் சுழன்று கொண்டிருந்தன. மெலிதான வெயில் நீண்ட கோடுவடிவில் நீளமாக யன்னலால் நுழைந்து கட்டில் விளிம்பில் சாய்வாக விழுத்திக்கொண்டிருந்தது. எழுத்து சென்று பழுப்பு நிறமான திரைச்சீலையினை இழுத்து மூடும்போது வெளியே பார்த்தேன். கொள்ளுப்பிட்டி சுவாரசியமாக இயங்கிக்கொண்டிருந்தது. இராணி வீதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பன்னிரண்டாவது தளத்தில் எங்களுடைய குடியிருப்பு இருந்தது. யன்னலால் நோக்கும்போது பாசங்கற்ற கொள்ளுப்பிட்டியின் இயக்கத்தினைப் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

ஒவ்வொரு முறையும் ஹரி வேலைக்குச் சென்றபின் யன்னலால் குதூகலிக்கும் சிறுமிபோல் ஆர்வங்கள் சுடர்விட வேடிக்கை பார்ப்பேன். மழைநாட்களினை யன்னலினால் பார்க்கும்போது இன்னும் சுவாரசியமாக இருக்கும். பலசமயம் கண்ணில் தென்படும் முச்சக்கர வண்டிகளை வேகமாக எண்ணுவேன்.

திரைச்சீலையினை இழுத்து மூடிவிட்டு படுக்கையில் வீழ்ந்தேன். மின்விசிறிகள் சுழல இதமான காற்று என்மீது படர்ந்தது. ஹரியின் சட்டையின் பொத்தான்களை விரலால் சுழற்றிக்கொண்டு சட்டையின்மேல் படுத்து வாசனையை முகர்ந்தேன். முகர முகர ஹரியின் வாசனை வந்துகொண்டேயிருந்தது. என் அப்பாவின் வாசனையை நினைத்துப்பார்த்தேன். ஆண்தன்மையான கருணை நிரம்பிவழியும் வாசனை அது.

அப்பாவுக்கு எப்போதும் என்மீது பிரியம் அதிகமாக இருந்தது. சின்ன வயசில் மடியின் மேல் இருந்திவைத்து இறுக்கமாக தலைமயிர் பின்னிவிடுவார். ஒவ்வொருமுறையும் அப்பாவின் தோள் மூட்டுகளை பிடித்துக்கொண்டு தொங்கும்போதும் அப்பாவின் வாசனை என்னில் பரவும். சிறுமியாக இருக்கும்போது பலமுறை அப்பா வேலையால் வரும்போது ஓடிச்சென்று அப்பாவினை எட்டிப்பிடிப்பேன். அப்பாவின் வேர்வை வாசம் வீசிக்கொண்டிருக்கும். சைக்கிள் மிதித்து கொக்குவிலில் இருந்து நல்லூர் வரை அப்பா வியர்வை வழிய வேலைக்குப் போய் வருவார்.

அப்பா யாழ்.மாநகரசபையில் கிளார்க் வேலையிலே இருந்தார், இறுதிவரை அதிலேயே கிடைக்கப்பெற்ற பதவியிலே இருந்தார். சிவப்பு நிறமான பிளாஸ்ட்டிக் கூடையினை சைக்கிள் கைப்பிடியில் கொழுவிக்கொண்டு சைக்கிளினை இறுக்கி மிதித்துக்கொண்டு போய்வருவார். ஞாயிற்றுக் கிழமைகளில் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வேண்டச் செல்லும்போது நானும் அப்பாவோடு செல்வேன். சைக்கிள் பாரில் ஏறி அமர்ந்துகொண்டு என் தலை அப்பாவின் மார்பில் இடிக்க சைக்கிளில் பயணிப்பது அலாதியான ஒன்று. அப்பாவின் வியர்வையில் இருந்து அந்தவாசம் வந்துகொண்டேயிருக்கும்.

எங்கள் வீட்டுக்குப் பின்னால் எக்கச்சக்கமான தென்னை மரங்கள் இருக்கும். சில்லென்று காற்றுவீச மெல்லமாகத் தென்னை ஓலைகள் அசைய பூவரசு வேலிக்கு அருகில் நாம் மரத்திலான தடிமான கதிரைகளைப் போட்டுவிட்டு அமர்வோம். கதிரைகளில் சப்பாணியிட்டு நான் அமர்ந்திருப்பேன். சிறுமியாக இருக்கும்போது அப்பாவின் மடியில் அமர்ந்து நெஞ்சில் தலைசாய்த்து தோள் மூட்டுகளைப் பிடித்துக்கொண்டு அப்பாவை பேசவிட்டு அமர்ந்திருப்பேன். அப்பாவின் இதயத்துடிப்பு காதில் கேட்கும். சிலசமயம் தாடி மழிக்கப்பட்ட நாடியில் முளைவிட்ட அப்பாவின் மயிர்கள் என் கன்னங்களில் மெலிதாகக் குத்தி உரசும். காற்றில் கலையும் என் கூந்தலைத் தடவிக்கொண்டு அப்பா கதைத்துக்கொண்டு இருப்பார்.

அம்மாவோடு அப்பா கதைத்ததைவிட என்னோடு கதைத்தது அதிகமாக இருக்கும். நான் வளரவளர அப்பா என்னோடு இன்னும் நெருக்கமாகப் பேசுவார். ஆனால் அப்பா எனக்குச் சொல்லாத ஒன்று இருந்தது. அம்மா அதனை தொடர்கதைபோல் வேகமாக பின்னொருநாளில் சொன்னாள். அம்மா அதனை மிகச்சாதரணமாக எனக்குச் சொன்னது இன்னும் தெளிவான காட்சிகளாக நினைவிருக்கின்றது.

அது அப்பாவின் இருபத்தியோராவது வயதில் நடந்த கதை. அப்போது அப்பா பிட்டக்கொட்டுவையில் நாலாம் குறுக்குத்தெருவிலுள்ள தானியங்கள் ஏற்றுமதி செய்யும் கடையில் கொஞ்சக்காலம் கணக்குவழக்குகள் பார்த்துக்கொண்டிருந்தார். அக்கடை மூட்டை மூட்டையாகக் களஞ்சியங்களை பத்திரப்படுத்தி சிறுகடைகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய கடையாகவிருந்தது. தாத்தாவின் நண்பர் ஒருவருக்கு வேண்டப்பட்டவரின் கடை என்பதால் சிபாரிசின்பேரில் அப்பாவுக்கு வேலை கிடைத்தது. கிழமைக்கு நான்கு நாள் அங்கேயே தங்கி வேலைபார்க்க வேண்டியிருந்தது. கொட்டுவையில் இருத்து வெள்ளிக்கிழமை பின்னேரம் இரவுத்தபால் புகையிரதத்தில் புறப்பட்டு யாழ்ப்பாணம் அதிகாலையில் வந்துசேர்வார். மறுபடியும் திங்கள் காலமை யாழ்தேவியில் புறபட்டு கொட்டுவை போய்ச்சேருவார். இந்தப் புகையிரதப் பயணத்தில்தான் அப்பா அந்தப் பெண்ணைக் கண்டாராம். சிவப்பு நிற சேலையுடுத்தி நீல நிறமான நீண்ட பெண்களுக்குரிய கைப்பை தோளில் இருந்துவழிய அந்தப்பெண் போய்வருவதினை திங்கள்தோறும் யாழ்தேவியில் கண்டார். காணும்போது எப்போதும் சிவப்பு சேலையிலே அவள் இருப்பாளாம். யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு வவுனியாவில் அவள் இறங்கிவிடுவாளாம்.

முதலில் அவளின் நீல கைப்பை அப்பாவின் கண்களில் விநோதமாகத் தட்டுப்பட்டதாம். அவளுக்கு நீண்ட கூந்தல் என்று அப்பா ரசித்துச்சொல்வாராம் என்று அம்மா என்னை படியில் இருத்திவைத்து தலைமயிரைப் பின்னிக்கொண்டு சொன்னபோது அம்மாவின் முகத்தை நான் திரும்பிப் பார்த்தேன். நல்லண்ணை வைத்து நன்றாகத் தேய்த்து பொறுமையாக சீவி நீண்ட ஓட்டைப்பின்னல் போட்டு அவள் இருப்பாளாம் என்று அம்மா சலனம் இல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தாள். அம்மாவிடம் சிவப்பு நிற சீலை இருந்ததே இல்லை.

௦௦௦

நான் உயர்தரம் படிக்கும்போது ஜெயந்தனைக் காதலித்தேன். சிவச்சந்திரன் என்ற பிரபல பௌதிகவியல் ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்கு பௌதிகவியல் படிப்பித்துக்கொண்டிருந்தார். நீண்ட பனைமரச் சிலாகில் குற்றிகள் பிணைக்கப்பட்டு வாங்குகள் தயாரிக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட நானூறுக்கும் அதிகமானவர்கள் ஒரு பிரிவில் படித்துக்கொண்டிருந்தோம். அங்கேதான் ஜெயந்தனைச் சந்தித்தேன். மெலிதான மீசை அவனின் உதட்டில் படர்ந்திருக்கும். தலையை எப்போதும் மேவியிழுத்து காற்றில் கலைய வருவான். ஒவ்வொரு முறையும் என்பின்னால் வரும்போது நான் கவனிக்கத் தொடங்கினேன். அப்பா வேண்டித்தந்த லுமாலா சைக்கிளினை மிதித்து செல்லும்போது நான் செல்லும் வீதிகளுக்குப் பின்னால் அவன் வந்துகொண்டிருந்தான். பத்தடி தள்ளி இடைவெளிவிட்டே நாகரிகமாகப் பின்தொடர்ந்து தனது சைக்கிளில் வந்துகொண்டிருப்பான். ஒழுங்கைகளுக்குள் நுழையும்போது மட்டும் எனக்கு அருகில் சைக்கிளில் சமாந்தரமாக நெருங்கிவந்து தொண்டை கரகரக்க பேசமுயல்வான். முதலில் நான் பயந்தேன். இரண்டாம் நாள் அவனைப்பார்க்க பயம்போய் சிரிப்பு எஞ்சத்தொடங்கியது. அந்த சிரிப்பு மூன்றாம் நாளில் அவன்மேல் பரிதாபமாக மாறத்தொடங்கியது.

தினமும் எனக்காகப் பின்னால் சலிப்பில்லாமல் வரத்தொடங்கினான். அவனின் உடைகள் கச்சிதமாக இருக்கும். இறுக்கமான கால்தசைகளை கவ்விப்பிடிக்கும் நீளக் காற்சட்டையும் பொருத்தமான வண்ண நிறத்தில் தெரிவுசெய்யப்பட்ட முழுக்கைச் சட்டையை கைமுழங்கைவரை மடித்துவிட்டும் அவன் வருவான். அவன் கண்களில் மிகுந்த தயக்கம் இருந்தது. வகுப்பு முடிய ஆண்களே சைகிளினை எடுத்துக்கொண்டு முதலில் வீடுசெல்வார்கள். ஆண்கள் எல்லோரும் சைக்கிள் எடுத்துமுடிய பெண்களை வகுப்பில் இருந்து வெளியேற விடுவார்கள். சில பொடியன்கள் ஒழுங்கை கரையில் நிற்பார்கள் அவர்களுக்குத் தேவையானவர்கள் செல்லும்வரை. நான் செல்லும் பாதையில் மௌனமாக மெல்ல மெல்லமாக ஜெயந்தன் சைக்கிளினை மிதித்துச் சென்றுகொண்டிருப்பான். நான் வேமகாக அவனை முந்திச்செல்வேன். அவனுக்குப் பின்னால் செல்லும்போது அவனது உடைகளை உற்றுக்கவனிப்பேன். தன் உடல்வாகுக்கு மிகப்பொருத்தமான அளவுகளில் உடைகளைத் தேர்வுசெய்யும் நேர்த்தியைப் பார்த்து வியந்துகொண்டிருந்தேன். என் அப்பாவும் அப்படிதான் உடையணிவார்.

மதனுக்கும் ஜெயந்தனுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. மதன் அதிகம் உடையலங்காரத்தில் கவனம் எடுத்துக்கொள்ள மாட்டான். சோம்பலாகவே செயல்படுவான். சிவந்த மேனி. நீண்ட மூக்கு. ஏறத்தாழ மூன்று நாளுக்கு ஒருமுறைதான் பள்ளிக்கூடம் வருவான். பத்தாம் ஆண்டின் நடுப்பகுதியில் எங்கள் பாடசாலைக்கு இடம்பெயர்வின் பின் புதிதாகப் படிக்கவந்தான். தயக்கம் கலந்த கண்களை நேருக்குநேராக முதலில் பார்த்தேன். அதிகம் கதைத்துக்கொள்ளாமல் இருந்தாலும் கொஞ்சநாளில் அவனும் கதைக்கத் தொடங்கினான். அவனின் கதையில் எப்போதும் மென்மைத்தனம் இருக்கும். அவன் உடல் நெளிவுகள் பெண்மையோடு வெளிப்படும். பிரடியில் சடையாக வளர்ந்துள்ள முடிகளை கதைக்கும்போது கைகளால் கோதிக்கொண்டு கதைப்பான்.

அந்தப் பிள்ளை ஏன் இப்படி இருக்கு என்று நண்பிகள் அவன்மேல் பொறாமைப்பட்டார்கள். அவன் என்னோடு மட்டும் கட்டுக்கடங்காமல் கதைக்கத் தொடங்கினான். ஆண்கள் ஒரு வரிசையிலும் பெண்கள் ஒரு வரிசையிலும் இருப்போம். ஆனால் இடைவேளை நேரம் நாங்கள் மாறிமாறி அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தும் கதைப்போம். கதைக்கும்போது என் இரட்டை சடை ஆடிக்கொண்டு இருப்பதினை அவன் பார்த்துக்கொண்டு இருப்பான். அவன் என்னோடு பழகி நான்காவது மாதத்தில் அவனுக்கு நான் கடிதம் கொடுத்தேன். நான் அக்கடிதத்தை கொடுக்கும்போது என் நண்பிகளுக்கு அப்போது பொறாமையாக இருந்தது. இப்போதும் சரியாகத் தெரியாவிட்டாலும் அவனிடம் இருந்த பெண்மைதான் கவர்ந்ததாக இருக்கலாம்.

அது வருடத் தொடக்கத்தின் பாடசாலை விளையாட்டுப் போட்டி நிகழும் சமயம். சனிக்கிழமை அன்று நாங்கள் பயிற்சிக்கு மைதானத்தில் எங்கள் வகுப்பும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுமாகக் கூடியிருந்தோம். தண்ணிக் குழாயடியில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது மதன் தனியே தண்ணீர் குடித்துவிட்டு முழங்காலைக் கழுவிக்கொண்டிருந்தான். என்னவென்று வினவ முழங்காலில் காயம் ஏற்பட்டுவிட்டதாகக் காட்டினான். சிவந்த புண் தோலுரிந்திருந்தது. சற்றுமுற்றும் பார்த்துவிட்டு என்னை சட்டென்று இறுகிக் கட்டியணைத்தான். என் உடல் ஒருமுறை குளிர்ந்து அடங்கியது.

000

வேகமாக பறந்துவந்த கொக்கு யன்னலில் அடிபடுவதுபோல் வந்து சுதாகரித்து வேகமாக வளைவாக திரும்பி பறந்துசென்றது. யன்னல் கரையில் நின்ற நான் திடுக்கிட்டுப் பார்த்தேன்.

தோய்க்க வேண்டிய சட்டைகளையும் வேறு உடைகளையும், காலுறைகளையும் கழற்றி ஹங்கருக்குக் கீழ் அவர் வைப்பார், அல்லது வேலையால் வந்தவுடன் மேல்சட்டையைக் கழற்றி குஷன் இருக்கையின்மேல் போடுவார். ஹங்கருக்குக் கீழ் இருந்த உடைகளை எடுத்துக்கொண்டு சலவை இயந்திரத்தை நோக்கிச் சென்றேன்.

ஆறுமணிக்குப் பிறகுதான் ஹரி வேலைத் தளத்தால் திரும்புவார். குளித்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு அரிசியை மின்னடுப்பில் போட்டுவிட்டு நீண்ட எல்.ஈ.டி தொலைக்காட்சிக்கு முன் வந்தேன். ஹரியைச் சுற்றி அப்பாவின் நினைவு சம்பந்தமில்லாமல் வந்தவாறிருந்தது.

ஏதோவொரு கட்டத்தில் நானும் அப்பாவும் அதிகம் பேசமால் விலத்திக்கொண்ட்டோம். இல்லையில்லை அவரே விலத்திக்கொண்டார். அது எப்போது நடந்தது என்று யோசித்துப் பார்த்தேன். மிக நுட்பமாக அது விடுபட்டிருந்தது உறைத்தது. பலமுறை இராணுவம் எங்கள் வீட்டுக்கு வந்து போனார்கள். எனக்கும் அப்பாவுக்கும் இடையில் அதிகம் பேசாத் தன்மை அப்போதுதான் உருவாகியதாக இருக்கவேண்டும். இதுவரை இருந்த இயல்பு நிலை வீழ்ந்ததுபோல் இருந்தது. இரண்டு முறை அப்பாவை விசாரணை என்றபெயரில் படைத்தள தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். சீலன் அண்ணா முத்திரைச் சந்தியடியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருந்தார். அப்பாவின் முகம் விறைத்தபடி இருக்கும். என்னோடு அதிகம் கதைக்கவும் மாட்டார். ஏதோவொன்றை நினைத்து கடுமையாக யோசித்துக்கொண்டு கதிரையில் இருப்பார்.

௦௦௦

அப்பா அந்தப் பெண்ணை தினமும் சந்திக்கும்போது அவர்மேல் காதல் அரும்பத் தொடங்கியதாம். ஆனால் ஒருநாள் கூடப் பேசியது இல்லையாம். ஒரு நாள் எதிர் எதிர் இருக்கைகளில் நேருக்குநேர் பார்த்துக்கொண்டு அவர்கள் இருவரும் புகையிரதப் பெட்டியில் அமர்ந்திருக்கவேண்டி ஏற்பட்டது. அப்பாவுக்கு நேராக அவள் ஒற்றைப் பின்னல்போட்ட நீண்ட கூந்தலை கழுத்துக்கு முன்னால் சுழற்றிப் போட்டுவிட்டு சீலையில் அமர்ந்திருந்தாள். அப்பா அவளுடைய கைப்பையையும் கைகடிகாரத்தையும் இறுதிவரை பார்த்துக்கொண்டு இருந்தார். அவர்களுக்கு இடையில் எந்த உரையாடலும் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு ரயில் பயணங்களும் வெவ்வேறு கோணங்களுடன் கழிந்துகொண்டே இருந்தன. இறுதியாக அப்பாவுக்கு யாழ்ப்பாணத்தில் மாநகரசபையில் வேலை கிடைத்தது. கொட்டுவை வேலையையும் விடவேண்டியதாகியது. பயணங்கள் நிரம்பிய ஒரு சுமையில் இருந்து விடுவித்துவிட்டதாக தாத்தா குதூகலப்பட்டார். அப்பாவுக்கு அந்தக்குதூகலம் இல்லாமல் இருந்தது. சிவப்பு சேலையும் நீல கைப்பையும் அவர் பிரஞ்சையில் எஞ்சி ஈரமாக வடிந்திருந்தது என்று அம்மா சொன்னார்.

அப்பா கொழும்பில் இருந்தபோது சிங்களம் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். உச்சரிப்பில் கூட சிங்களவர்கள்போலவே அப்பாவால் பேசமுடியும் என்று பலர் வியந்து அப்பாவைப் புகழ்வார்கள். சிங்களத்தில் நன்கு தேர்ந்த தமிழர்கள் சிங்களம் கதைத்தால் இருக்கும் சிறிய நுணுக்கமான வித்தியாசம்கூட அப்பாவின் பேச்சில் இருக்காதாம் என்று என் காதுபடவே பலர் சொல்வார்கள். அதில் முக்கியாமனவர் சீலன் அண்ணா. சீலன் அண்ணா அடிக்கடி அப்பாவை சந்திக்க வருவார். அவரை சந்திக்க வரும்போது அப்பாவும் அவரும் மெலிதான குரலில் கதைத்துக்கொண்டு இருப்பார்கள். நானும் அம்மாவும் தள்ளியே இருப்போம். அப்பா சீலன் அண்ணாவுக்கு நிறைய கடிதம் எல்லாம் எழுதிக்கொடுப்பார். அடிக்கடி பின்னேரம் சீலன் அண்ணாவுடன் போய்வருவார்.  அம்மா “ஏன் அந்தப் பொடியளுக்கு சிங்களம் படிப்பிக்க போறியல்.. தேவையில்லாத பிரச்சினை வரும்”  என்று அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார். அப்பா பெரும்பாலும் அம்மாவுக்கு பதிலளிப்பது இல்லை. மௌனமாகவே கடந்துவிடுவார். சீலன் அண்ணா சுடப்பட்டதும் அப்பா மிகவும் உருக்குலைந்து போனார்.

௦௦௦

ஜெயந்தன் மீண்டும் அழைத்தான். சரியாக நாலுமணிக்கு வரச் சொன்னான். முச்சக்கர வண்டி ஒன்றை பிடித்து அங்கே சென்றேன். தேகம் வியர்த்திருந்தது. வெளிக்கதவருகே ஜெயந்தன் நின்றுகொண்டிருந்தான். என்னை கண்டு புன்னகைத்து உள்ளே அழைத்துச்சென்றான். அவளைக்கண்டு திடுக்கிட்டேன். அவன் மனைவி கண்ணாடிமேசையில் கன்னத்தை இருகைகளால் ஊன்றி காத்திருந்தாள். மெலிதான பொறாமை கிளர்ந்து எழுந்தது.

“ஹாய்..” என்றாள்.

நானும் பதிலுக்கு புன்னகைத்துக்கொண்டு அதையே சொன்னேன். என்னாச்சு உறவிணரைப் பார்க்க போகவில்லையோ.. கணவனை தனிய அனுப்ப ஏதும்? ச்சே ச்சே.. ஏதோ நமக்கு என்ன. நான் எதையும் கேட்காமல் அமைதியாக முகத்தை வைத்திருந்தேன். ஜெயந்தன் என்னைப் பார்த்து சிரிப்பதில் அநாவசியத்தன்மை இல்லாமல் இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.

மெலிதான மஞ்சள்நிற ஒளி எங்களின் மேசையைச் சுற்றி மின்குமிழினால் பரவவிடப்பட்டிருந்தது. என் கண்களை அவன் கண்கள் வளைந்து நெளிந்து ஊடுருவியது. சட்டென்று கண்களைத் தாழ்த்திக்கொண்டேன். பின் நிமிர்ந்து பார்த்தேன் என்னைப் பார்த்து அவன் சிரித்தான். அவன் கண்கள் என் கண்களை சந்தேகம் இல்லாமல் மறுபடியும் ஊடுருவின. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது கண்கள் வேறுவடிவில் ஜெயனை இன்பமாக உரிமையுடன் ஊடுருவி இருந்தது. அந்தக் குளிரூட்டப்பட்ட ரெஸ்டாரண்டிலும் எனக்கு சாதுவாக வியர்த்ததுபோல் இருந்தது. இப்படித்தான் யாழ்ப்பாணத்திலுள்ள பெரிய கடை வீதியிலுள்ள மலயான் கபேயில், ஒருநாள் அவனின் பலந்த கெஞ்சுதலுக்காக பயந்து பயந்து தயங்கி வெட்கப்பட்டு அவனுடன் இருவரின் தோள் மூட்டுக்களும் இடிக்கும் வைகயில் டியூட்டரி கொப்பியை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்து வடையும் சம்பலும் தொட்டுச் சாப்பிட்டது நினைவில் வந்தது. வெள்ளவத்தை கடற்கரையை ஒட்டிய காப்பட் சாலையில் வாகனங்கள் காற்றை உராய்ந்துகொண்டு மிகைவேகத்தில் சென்றுகொண்டிருந்தன. அருகிலிருந்த கண்ணாடியால் பார்க்க கடற்கரையும் அதனை மறைக்க முயலும் தாழ்வான மரங்களின் கிளைகளும் தென்பட்டுக்கொண்டிருந்தன.

கறுப்பு நீளக் காற்சட்டையும் பச்சை மேற்சட்டையும் இறுக்கமாக அணிந்த பரிமாறுநர் அருகில்வந்து “மொகத ஓடர் சேர்?” என்று புன்னகைத்தான்.

“என்ன சாப்பிடுவம்?”  மெனுக்கார்டை குனிந்து பார்த்துக்கொண்டு கேட்டான்.

“நீங்க சொல்லுங்க..” என்றேன்.

“ஏதும் குடிப்பமோ?” அவன் என் முன்னால் மெனுகாட்டை நகர்த்தினான்

“எனக்கு ஏதென்றாலும் சரி, நீங்க சொல்லுங்கோ..” அவன் மனைவியை பார்த்துச் சொன்னேன். அவன் மனைவி தலைமையிரை மேவியிழுத்து பின்னால் விட்டு கூந்தலாக முடிச்சுப் போடாமல் கேசத்தை அலையவிட்டிருந்தாள். கன்னங்கள் திருப்பிவைத்த வளைவான புதிய கரண்டிபோல் பளபளப்பாக இருந்தன. மெலிதான கிரனைட்கற்கள் மினுங்கும் தோடுகள் கன்னங்களில் சுருண்டு வளர்ந்திருந்த கேசத்தின் இடைவெளியூடாகத் தென்பட்டன. ஜெயனின் மனைவி என்னைப் போலவே கழுத்தில் மெலிதான சங்கலி அணிந்திருந்தாள். ஆனால், அவளுடையது டைமன்டாக இருக்கவேண்டும்.

நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். கிளாஸ் முழுவதும் நிரப்பப்பட்ட வோட்டர்மிலோன் பழரசத்தை குடித்துக்கொண்டு அவன் தன் அவுஸ்திரேலிய வாழ்க்கையைப் பற்றிச்சொல்லத் தொடங்கினான். அவன் மனைவி என்னைப்பற்றியும் கேட்கக் தொடக்கினாள். நன்கு பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி அடைக்கப்பட்ட சான்விச்சை மெல்வதுகூட எனக்குக் கடினமாகத் தோன்றியதுபோல் இருந்தது. அப்போது ஜெயனிலிருந்து வீசிக்கொண்டிருக்கும் ஃபெர்பியும் வாசனையிலிருந்து அவனின் வியர்வை வாசம் கசிந்ததை உணர்ந்தேன். அந்த வாசனை ஒரு ஏவுகனைபோல் எழும்பிப் பறந்தது.

ஜெயந்தனை அப்போது சந்திக்கும்போது அவனின் சேர்ட்டில் இருந்து வீசும் வாசம் ஆண்மையாக இருக்கும். அது அப்பாவின் வாசனைதான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். இறுதியில் அப்பா இறந்து இறப்புவீட்டில் படுக்கவைக்கப்பட்டிருந்தபோது ஊதுபத்தி வாசனைகளும் வீட்டு விறாந்தை முழுவதும் நிறைந்திருந்தன. நான் அழாமல் இருப்பதை நம்ப முடியாமலும் ஏன் அழுகை வரவில்லை என்று யோசித்துக்கொண்டும் இருந்தேன். மூன்று வருடங்களின் பின் அப்பா புகையிரதத்தில் சந்தித்த அந்தப் பெண்ணை சந்தித்துக்கொண்டார். அப்போது அப்பா பேசினார். அவளும் நீண்ட நாள் சிநேகிதம்போல் தடங்கள் இன்றிப் பேசத்தொடக்கினாள். அப்பா கடைசிவரை அவள் காதலித்தாலா என்று கேட்கவும் இல்லை, தான் காதலித்ததாகச் சொல்லவும் இல்லை. அதனை எனக்கு அம்மா சொல்லும்போது கண்கள் அகலமாக விரியக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பா கடைசிவரை தன் காதலை என்னிடம் சொன்னதே இல்லை. நானும் சொன்னதும் இல்லை. அப்பாவின் இறப்புவீட்டிலும் அப்பாவின் உடலைப்பார்த்து அதனையே மீண்டும்மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

வேலைத் தளத்தில் இருந்து வரும்போது அப்பா சுடப்பட்டார். நானும் அம்மாவும் போய்ப் பார்க்கும்போது அப்பா சைக்கிள்மேல் குப்புற வீழ்ந்திருந்தார். அவர் அணிந்திருந்த சட்டை இரத்தத்தில் சிவப்பு நிறமாகி காய்ந்துபோய் இருந்தது. அருகில் சிவத்த பிளாஸ்டிக் கூடை அநாதரவாகக் கிடந்தது. அம்மா கதறியழுது மயங்கி வீழ்ந்திருந்தார். அப்பாவின் உடல் அருகில் செல்லும்போது அந்த வாசனை இல்லாமல் இரத்தத்தின் வாசனை வந்தது என் குடலை புரட்டத் தொடங்கியது.

ஜெயந்தனின் வாசனை இப்போதும் அப்படியே இருந்தது. ஆனால் அது அப்பாவின் வாசனையில்லை என்பதை ஒரு கணத்தில் உணர்ந்தேன். வீடு திரும்பி வரும்போது அவன் மனைவியுடன் அவனைச் சந்தித்துவிட்டு வருவதை நினைக்கும்போது என் கண்கள் மெலிதாகக் கசிந்து அப்பாவின் வாசனையை நினைவு படுத்திக் கொண்டிருந்தது. ஹரி, ஜெயந்தன் இருவர்மீது இருந்துவரும் வாசனையும் வித்தியாசம் இல்லாமல் இருப்பதினை வெறுப்புடன் உணர்ந்தேன். அழுகை வெடித்து வந்தது. கண்களில் இருந்து வழியும் கண்ணீர் உதட்டில் உப்புச்சுவையை உணர்வித்தது. வாயைப் பொத்திக்கொண்டு என் அடுக்கு குடியிருப்பை நோக்கிச் செல்ல யாரும் பார்க்க முதல் ஓடிச்சென்று லிப்ட்டில் நுழைந்தேன்.

குளியறையில் சென்று தனிமையில் அழுதேன். தொண்டை விக்கி அடைத்தது. அப்பாவின் சிவப்பு இரத்தம் அவரின் சட்டை முழுவதும் நனைந்து இருக்க இரத்த வாசனையுடன் அந்த வாசனையும் படிப்படியாக வர, மதன் பிரடியை கோதிக்கொண்டு தண்ணி குழாயடியில் என்னைக் கட்டிப்பிடித்த விம்பம் நினைவுக்குவர ஜெயந்தனின் வாசனையும் மலயான் கபேயில் வடையை அங்காலும் இங்காலும் பார்த்துவிட்டு சட்டென்று எனக்கு அவன் தீத்திடிவிட்டது நினைவுக்கு வந்தது. அப்பாவின் கூடை சைக்கிளில் இருந்து தள்ளி விழுந்திருந்தது. ஏன் அழுகிறேன் என்று தெரியாமல் நீண்ட நேரம் அழுதேன். முகத்தை நன்றாகக் கழுவிவிட்டு வெளியேவர ஹரியும் உள்ளே வந்தார். தொண்டை எரிந்துகொண்டிருந்தது.

“ஏன் முகம் ஒரு மாதி இருக்கு….. டீ போட்டாச்சா?”  ஷோபாவில் அமர்ந்துகொண்டு காலுறையை கழற்றத் தொடங்கினார். நான் மௌனமாக அவரைப் பார்த்துக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்றேன்.

“எங்க வெளில வெளிக்கிட்டிட்டீர்போல…” சீலையை மாற்றாமல் நின்ற என் கோலத்தைப் பார்த்துக்கொண்டு கேட்டார். அவர் அருகில் சென்று கழற்றிய அவர் காலுறைகளை எடுத்தேன். மேல்சட்டையைக் கழற்றி குஷன் இருக்கையில் வைத்துவிட்டு உள்ளறைக்குச் சென்றார். வேர்வையில் தோய்ந்த மேல்சட்டையையும் எடுத்தேன். அதில் இருந்து கசிந்த அந்த வாசனையை நுகர உலுக்கமாக திடுக்கிட்டேன். அந்தச் சட்டையைப் பார்க்க வெறுப்பு ஆழமாகக் கசிந்து தகித்தது. அது என்றும்போல் அப்பாவின் வாசனைக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாமல் இருந்தது. நடுங்கும் கைகளால் தூக்கி வாளிக்குள் போட்டேன். எதற்கு என்ன வேண்ட வேண்டும் என்று தெரியாமல் வெளியே சென்றேன் என்று யோசிக்க அழுகை மறுபடியும் வந்தது. கைப்பையை தோள் மூட்டில் கொழுவிக்கொண்டு வெளியே மீண்டும் விருட்டென புறப்பட்டேன். அறைக் கதவின் இடைவெளியில் தென்பட்ட நிலைக் கண்ணாடியில் என் விம்பத்தைப் பார்த்தேன். சிவப்பு நிறச் சீலையில் நீல நிறமான நீண்ட கைப்பை தோள் மூட்டில் இருந்து வழிந்துதொங்கிய என் விம்பத்தை அது காட்டியது. ஏதோவொன்றை வேண்ட வேகமாகப் படியால் கீழிறங்கிச் செல்லத் தொடங்கினேன். அப்பாவின் வாசனை மறுபடியும் என் நினைவில் வந்துகொண்டிருந்தது.

முற்றும்

கல்குதிரை -26 – கார் கால இதழ் – 2016 இல் பிரசுரமாகிய சிறுகதை.

 

 

http://www.annogenonline.com/2017/04/22/vaasanai/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தக் கதை எனக்கு சத்தியமாய் புரியல்ல...புரிந்தவர்கள் அல்லது இதைக் கொண்டு வந்து இணைத்தவர் விளக்கம் தரவும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்களுக்கு அப்பாவைப் போலவே ஒருவர் வாழ்க்கைத்துணையாக இருக்கவேண்டுமாம். இது புரியவில்லையா உங்களுக்கு?? 

உளவியலின்படி ஆண்களும் அம்மாவைப் போல ஒரு துணையைத்தான் தேடுவார்களாம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தப் பெண்ணுக்கு எல்லோருடைய வாசனையையும் நுகர்வதே வேலையாய் போட்டுது.காதலிக்கிறது தப்பில்லை, காதல் கப்பல் கவிழ்ந்து விட்டால் மீண்டும் தேடிச்சென்று ஓட்டப் போகக் கூடாது.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, suvy said:

இந்தப் பெண்ணுக்கு எல்லோருடைய வாசனையையும் நுகர்வதே வேலையாய் போட்டுது.

இந்தப் பெண்களுக்கு என்று பன்மையில் சொல்லலாம்தானே சுவி ஐயா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, கிருபன் said:

இந்தப் பெண்களுக்கு என்று பன்மையில் சொல்லலாம்தானே சுவி ஐயா?

ஏன்  கிருபன் சகோதரி ரதியிடம் வாங்கிக் கட்டுறதுக்கு துணைக்கு ஆள் தேடுறீங்கள் போல.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎10‎/‎12‎/‎2018 at 4:58 AM, கிருபன் said:

பெண்களுக்கு அப்பாவைப் போலவே ஒருவர் வாழ்க்கைத்துணையாக இருக்கவேண்டுமாம். இது புரியவில்லையா உங்களுக்கு?? 

உளவியலின்படி ஆண்களும் அம்மாவைப் போல ஒரு துணையைத்தான் தேடுவார்களாம்?

இந்தக் கதையில் அதை விட அர்த்தமானது ஏதோ உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரதி said:

இந்தக் கதையில் அதை விட அர்த்தமானது ஏதோ உள்ளது 

வாசித்ததில் எனக்கு விளங்கியதை நான் சொன்னேன். நீங்கள் உங்களுக்கு விளங்கியதைச் சொல்லுங்கள். சிலவேளை படைப்பாளிக்கு தெரியாத நுணுக்கமான விடயமும் ஒளிந்திருக்கும்.

முன்னர் ஷோபாசக்தி சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது. ஒரு படைப்பு வெளியிடப்பட்ட பின்னர் அது எழுதியவருக்கு சொந்தமில்லை. அதை வாசிப்பவர்கள் புதிய கதைகளை உருவாக்குகின்றார்கள். அந்த வாசிப்பு அனுபவத்தைக் கொடுப்பதுதான் படைப்பாளியின் நோக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரதி said:

இந்தக் கதையில் அதை விட அர்த்தமானது ஏதோ உள்ளது 

இக் கதையில் அர்த்தமுள்ளது வாசனைதான்..... இப்பவும் நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும் பிள்ளைகள் தாயின் முந்தானையை/சேலையை  கைக்குள் பிடித்தபடி கட்டை விரலை சுவைத்தபடி தூங்குவார்கள். வெளிநாட்டிலும் கூட பிள்ளைகளுடன் ஒரு துணிப் பொம்மையை பிரியாமல் வைத்திருப்பார்கள்.அது அழுக்கேறி இருந்தாலும் துவைக்கவும் விட மாட்டார்கள். அது தவறி விட்டால் அப்பிள்ளைகளால் நிம்மதியாக தூங்க முடியாது. அவ்வளவுக்கு வாசனை ஆக்கிரமித்து இருக்கிறது. இது பெரியவர்களிடமும் உள்ளது. பிரிந்திருக்கும் காதலர்கள் /கணவன் மனைவி கூட தமது இணையின் ஒரு பொருளை தம்முடன் வைத்திருப்பார்கள். ஆனால் வெளியே சொல்ல மாட்டார்கள்.இந்த வாசனைக்காக அக்கம் பக்கத்து வீடுகளில் ஆடைகளை திருடுகின்ற காளைகளும் இருக்கின்றார்கள்.

போலீசாரும் நாயுடன் இணைந்து துணியை வைத்து அதன் வாசனையில் மோப்பம் பிடிப்பதில் கில்லாடிகள். .....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.