Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
141018-2-696x331.png

 

 
 

 

இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவில், 1980 களில் ஒரு நாடு மட்டும் அசுர வேகத்தில் ஒளிவீசத்தொடங்கியது.

அந்த நாட்டின் பெயர் புர்கினா ஃபசோ (Burkina Faso). ஒளிவீச காரணம் கேப்டன் தோமஸ் சங்காரா (Thomas Isidore Noël Sankara). இன்று அவன் உயிருடன் இருந்திருந்தால், ஆபிரிக்காவில் முதல் அபிவிருத்தி அடைந்த நாடாக தோற்றம் பெற்றிருக்கும் புர்கினோ ஃபசோ.

இளம் புரட்சிகர தலைவனாக, ஏகாபத்திய எதிர்ப்பாளனாக ஆபிரிக்க மக்களிடையே அடையாளம் காணப்பட்ட தோமஸ் சங்காராவுக்கு மூன்றாம் உலகம் சூட்டிய பெயர் ‘ஆபிரிக்காவின் சே குவாரா’.

1983ம் ஆண்டு இராணுவ புரட்சி நடவடிக்கை ஒன்றின் மூலம் Burkino Faso நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தோமஸ் சங்காரா கைப்பற்றினான். ஆட்சிக்கு வந்ததும் அவன் கொண்டுவந்த முற்றிலும் மாறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் புர்கினோ ஃபாசோ நாட்டு மக்களுக்கு புதிய உற்சாகத்தை தந்தன. இருண்ட கண்டத்தின் ஓர் இருண்ட கரும்புள்ளியிலிருந்து புறப்பட்ட தீக்குச்சி பிளம்பு போல் பிரகாசிக்க தொடங்கியது அச்சிறிய நாடு. தனித்துவமான பேச்சுவல்லமை. கடுமையான உழைப்பு. தன் மக்களுக்காக எதையும் செய்ய துணியும், மற்றவர்களை செய்யவைக்கும் மனநிலையை உருவாக்கும் நேர்மறை சிந்தனை என்பன ஆபிரிக்க மக்களை அ(வ)ன்பால் கட்டிப்போட்டது. தோமஸ்  சங்காரா

குறிப்பாக 1984ம் ஆண்டு அக்டோபர் 4ம் திகதி நியூயோர்க்கின் ஐ.நா முன்றலில் தோமஸ் சங்காரா தனது புர்கினோ ஃபாசோ நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றிய உரை அதிமுக்கியம் வாய்ந்தது. ‘நான் இங்கு இருக்கும் அனைவரிடமும் பேச விளைகின்றேன். காரணம் நான் மனிதன். மனிதாக இருப்பவர்கள் எவரும் எனக்கு அன்னியமானவர்கள் அல்ல’ என தொடங்கியது அவனது உரை.

ஏழ்மை, வறுமை என்பவற்றை காரணம் காட்டி, தாம் ஆபிரிக்க நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகள் செய்கிறோம் எனும் மார்தட்டிக்கொள்ளும் சர்வதேச நாடுகளை முற்றாக புறக்கணித்த தோமச் சங்கார, தனது சொந்த நாட்டு மக்களின் ஆற்றலைத் திரட்டி நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடத்தொடங்கினான். Upper Volta என பிரெஞ்சு மொழி பெயரால் அழைக்கப்பட்ட நாட்டை Burkino Faso என பெயர் மாற்றம் செய்தான். நேர்மையான  மனிதனின் தேசம் என்பது அதன் பொருள்.

அவன் ஆட்சிக்கு  வந்த போது வயது 33. அப்போது அந்த நாடு பிரெஞ்சு காலனித்துவ ஆதிக்கத்திலும் ஊழல் நிறைந்த நாடாகவும் இருந்தது. தோமஸ் சங்காரா ஆட்சிக்கு வந்ததும் ஊழலை முடிவுக்கு கொண்டுவர புதிய  நடைமுறைகளை அறிமுகப்படுத்தினான். தன் நாட்டின் நாட்டின்  அனைத்து நில மற்றும் தாது  வளங்களை தேசியச் சொத்தாக்கினான். நாட்டின் கடன் சுமையை முற்றாக குறைக்க தொடங்கினான். சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும்  உலக வங்கி ஆகியனவற்றின் தன்  நாட்டின் மீதான செல்வாக்கை படிப்படியாக பலமிழக்க செய்தான். உங்கள் நாட்டில் விதைக்கும் நாடுகளே, உங்களை கட்டுப்படுத்தி ஆழ்கின்றன என பொதுமக்களிடம்  எடுத்துரைத்தான்.

அனைத்து குழந்தைகளுக்கும் கல்விக்கு முதலில் முன்னுரிமை அளித்து தேசிய அளவிலான எழுத்தறிவு பிரச்சாரத்தை தொடக்கினான். விவாசயத்தில் தாம் தன்னிறைவு காண்பதற்கு புதிய நெறிமுறைகளை வகுத்தான். நில சீர்த்திருத்தை கொண்டுவந்தான்.  மூளைக்காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், தட்டம்மை ஆகியவற்றுக்கு எதிராக 2.5 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை 15 நாளில் செய்து முடித்தான்.

பாலைவனமாகிக் கொண்டிருந்த சாஹெல் எனும் நிலப்பகுதியில் 10 மில்லியன் மரம் நடும் திட்டத்தை தொடக்கினான்.  நில பிரபுத்துவ நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தை பெற்று விவசாயிகளுக்கு அவற்றை வழங்கினான். கோதுமை உற்பத்தியை இரட்டிப்பதற்காக அவன் மேற்கொண்ட இந்த முயற்சியின் பயனாக ஒரு ஹெக்டேருக்கு 1700 கிலோ கிராம் எனவிருந்த கோதுமை உற்பத்தி, மூன்று வருடத்தில், ஒரு ஹெக்டேருக்கு 3800 கிலோ கிராம் என அதிகரித்தது. உணவு உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடைய வைத்தது.  கிராமப்புறங்களில்  தேர்தலுக்கான வரிமற்றும் உள்நாட்டு வரிகள் இடைநீக்கிவிட்டு, ரயில் மற்றும் சாலை கட்டுமான திட்டத்தை உருவாக்கினான்.

ஒவ்வொரு கிராமத்திலும், மருத்துவ வைத்தியசாலை கட்டிடம் அமைக்கப்படவேண்டும் என கட்டளையிட்டான். உங்களது சொந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, பாடசாலைகளை கட்டுமாறு 350 கிராம சேவக நிலையங்களுக்கு உத்தரவிட்டான்.

பெண்களின் பாலியல் ரீதியாக துன்புறுத்தவர்கள், கட்டாய திருமணம் செய்வோர், பலாத்காரம் செய்வோரை நாடுகடத்த தொடங்கினான். பெண்களுக்கு நேரடியாக அமைச்சரவை பொறுப்புக்கள் அளித்து வீடுகளை விட்டு வெளியில் அவர்கள் வேலை செய்வதை ஊக்குவித்தான். நிறைமாத காலத்தில்,  பாடசாலையில் தங்கியிருந்து கல்வி கற்றுக்கொடுக்க பெண் ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கினான். ஒவ்வொரு அரச பணியாளனும் தனது ஒரு மாத சம்பளத்தை, பொது மக்கள் திட்டத்திற்கு என வழங்க வேண்டும் என்று கட்டாய உத்தரவிட்டான். கியூபாவின் புரட்சித்தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவை முன்மாதிரியாக கொண்டு, தனது நாட்டிலும், கியூபன் ஸ்டைல் புரட்சிப்பாதுகாப்பு கமிட்டிக்குழுவை அமைத்தான்.

உவகாடுகு எனும் நாட்டின் தலைநகரில் இருந்த இராணுவ ஆயுத களஞ்சிய சாலையை, மாநிலத்துக்கு சொந்தமான சூப்பர்மார்க்கெட்டாக உருவாக்கினான். நாட்டின் முதலாவது சுப்பர்மார்கெட் அது.

Burkino_Faso.jpg

புர்கினோ ஃபசோ

ஆட்சியிலிருந்த போது, உலகின் மிக குறைவான சொத்துடைய, ஏழ்மையான நாட்டு ஜனாதிபதி எனும் பெயரையும், மிக குறைந்த சம்பளம் பெறும் நாட்டு ஜனாதிபதி எனும் பெயரையும் பெற்றான். அவனது மாத சம்பளம் 450 அமெரிக்க டாலர்கள் தான். அதுவும், தன்னிடமிருந்த கார், நான்கு மோட்டார் சைக்கிள்கள், மூன்று கிட்டார்கள், உடைந்த குளிர்சாதன பெட்டி என்பவற்றை பராமரிப்பதற்காகத்தான் அந்த சம்பளத்தையும் பெற்றுக்கொண்டான்.  அரசியல் அந்தஸ்து காரணமாக பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு உயர் சொத்தையும், அவன் தன்னுடயதாக்கவில்லை.

கிட்டார் வாசிப்பதிலும், காற்பந்து விளையாடுவதிலும் அதிக நாட்டம் கொண்ட தோமஸ் சங்ககார நாட்டிற்காக புதிய தேசிய கீதமொன்றையும் தனது கிட்டார் இசை மூலம் உருவாக்கியிருந்தான்.

ஒரு முறை ஏனைய ஆபிரிக்க தலைவர்கள், ‘ஏன் இந்த நாட்டில், உங்களது புகைப்படங்கள் ஏதும் பொதுவிடங்களில் வைக்கப்படுவது இல்லை’ என கேள்வி எழுப்பபிய போது தோமஸ் சங்காரா  அளித்த பதில், ‘காரணம், எனது நாட்டில் 7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் உள்ளனர்’.

அவன் சொன்னது உண்மைதான். தோமஸ் சங்காராவின் வழியில் ஏராளமான இளைஞர்கள் அணி திரண்டனர். ஆனால் நாட்டை ஏழ்மை நிலையிலிருந்து மெல்ல மெல்ல மீட்டு வந்தவனுக்கு பகைமை வேறு வடிவில் வரத்தொடங்கியது. அவனது கொள்கைகள் நடுத்தர வர்க்கத்தினரின் சுகபோகங்களை கட்டாயமாக கைவிடச்செய்தன. பழங்குயிடினத்தவரின் பாரம்பரிய உரிமைகள், சொத்துக்கள் பறிக்கப்பட்டு பொதுச்சொத்துக்கள் ஆகின. அனைவரையும் மீண்டும் உழைக்க  பணிக்கப்பட்டனர். இதனால் நடுத்தர வர்க்கத்தினரும், பழங்குடியினரும் தோமஸ் சங்காராவுக்கு எதிராக திசைதிருப்பட்டனர்.

பிரான்ஸ் நாட்டின் நிதிமுதலீடுகளையும் காலப்போக்கில் சங்காரா புறக்கணிக்க தொடங்கியதால்,  பிரான்ஸும், ஐவரி கோஸ்டும் தோமஸ் சங்காராவின் ஆட்சி மீது மறைமுக பகைமை கொள்ளத்தொடங்கின.

தோமஸ்  சங்காரா

முடிவு; 1987ம் ஆண்டு அக்டோபர் 15ம் திகதி தோமஸ் சங்காரா திடீர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிப்புரட்சி (Coup d’état) ஒன்றினால் படுகொலை செய்யப்படுகிறான்.  பிரான்ஸ், அமெரிக்காவின் மறைமுக உதவியுடன், தோமஸ் சங்காராவின் நெருங்கிய நண்பன் Blaise Compaoré வினால் இந்த சதிப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.   இன்றைய புர்கினோ ஃபசோ நாட்டின்  அதிபர், தோமஸ் சங்காராவின் படுகொலைக்கு காரணமான அவனது நண்பனே.

இதில் குறிப்பிடத்தக்கது, இராணுவ புரட்சி மூலம் புர்கினோ ஃபசோ  நாட்டின் பதவியை கைப்பற்றுவதற்கு தோமஸ் சங்காராவுக்கு உதவியதும் இதே Blaise Compaoré தான்.  தான் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தோமஸ் சங்காரா  நிகழ்த்திய உரை ஒன்றில் கூறிய வசனங்கள் ‘புரட்சிகளை முன்னின்று நடத்தும் தனிப்பட்ட புரட்சியவாதிகள் கொல்லப்படலாம். ஆனால் உங்களால் அவர்களது சிந்தனைகளை கொல்ல முடியாது’.

அவன் கூறியது போன்றே, ஆபிரிக்காவின் சே குவாராவாக அனைத்து ஆபிரிக்க மக்களின் மனங்களிலும் உயிர் வாழ்ந்து வருகிறான். 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஆபிரிக்க புரட்சியவாதியுமாக அடையாளப்படுத்தப்படுகிறான். தோமஸ் சங்காரா கொல்லப்பட்டதும் உடனடியாக புர்கினோ ஃபசோ நாடு ஆபிரிக்காவின் மற்றுமொரு இருண்ட தேசமாக மீண்டும் மாறிவிட்டது.   உலக  வங்கியிடமும், ஐ.நாவிடமும் சர்வதேச உதவிகளுக்காக கையேந்தும் நாடாகிப்போனது.

அவன் இறந்த பின்னர் நாட்டின் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றிய Blaise Compaoré, தோமஸ் சங்காராவின் உடலை மிகச்சாதாரணமாக ஒதுக்குப்புற கிராமப்புறமொன்றில் புதைத்து விடுகின்றான்.  இன்று வரை தோமஸ் சங்காரா பற்றி புர்கினோ ஃபசோ பற்றி அந்நாட்டுக்குள் யாரும் வெளிப்படையாக கருத்துப்பகிர்வதற்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. Blaise Compaoré

கடந்த ஏப்ரல் மாதம், சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் சர்வதேச டாக்குமெண்டரி திரைப்பட விழா நடைபெற்றது. இதில் சுவிற்சர்லாந்தின் Christophe Cupelin என்பவர் உருவாக்கிய கேப்டன்  தோமஸ் சங்காரா (Captain Thomas Sankara) எனும் டாக்குமெண்டரி திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

முப்பதுக்கும் குறைவான பெரியவர்கள் மட்டுமே திரைக்கு முன்னாள் கூடியிருந்தனர்.  நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் ‘ஆபிரிக்காவின் சேகுவாரா’ என வர்ணித்து எழுதப்பட்ட  இரட்டைச் சொல்லே நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிற்று. கடந்த சில தினங்களுக்கு முன்னர் லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் சுவிற்சர்லாந்து படைப்பாக இந்த டாக்குமெண்டரி காட்சியிடப்பட்டது.

ஏற்கனவே தோமஸ் சங்ககாராவை பற்றி பல டாக்குமெண்டரிகள் வெளிவந்துள்ளன.  யூடியூப் வலைத்தளத்தில் அவனது தனித்தனி உரைகளும் பல பதிவேற்றப்பட்டுள்ளது. எனினும் தற்போது Christophe Coupelin உருவாக்கியுள்ள டாக்குமெண்டரி அவை அனைத்திலும் மிக நேர்த்தியான, சுருக்கமான, தெளிவான திரைக்கதை (Screen play) கொண்டதாக அமைந்துள்ளது. காரணம் மூன்று வருட முயற்சியில் உருவாக்கப்பட்ட டாக்குமெண்டரி இது.

தோமஸ் சங்காராவை ஆபிரிக்க சே குவாரா என வர்ணிப்பதற்கு இருவருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உண்டு. தோமஸ் சங்காரா, சே குவாரா இருவருமே ஏகபோக முதலாளித்துவத்திற்கும், ஏகாபத்தியத்திற்கும் எதிராக போராடுவதற்கு ஆயுத புரட்சியே சரியென நம்பியவர்கள். விவசாய நில சீர்த்திருத்தம், கல்வியறிவு புகட்டும் பிரச்சாரங்களில் தீவிரமாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர்கள். இருவரும் இராணுவ சீருடையில் பெரிதும் காட்சியளித்தவர்கள். இருவருமே தமது 40 வயதுக்கு முன்னர் கொல்லப்பட்டவர்கள். (சே குவார 39/சங்காரா 38). தான் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக சங்காரா தற்செயலாக கலந்து கொண்ட பொது நிகழ்வு சே குவாரா கொல்லப்பட்டதன் 20வது வருட நினைவு தினமாகும்.

1987ம் ஆண்டு தனது நெருங்கிய நண்பனால் சங்கார படுகொலை செய்யப்பட்டு 25 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அவனது இறப்பு இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. காரணம் Blaise Compaoré தான் இப்படுகொலைக்கு சூத்திரதாரி, பிரான்ஸ், அமெரிக்க நாடுகள் தான் இதற்கு பின்புலமாக செயற்பட்டன என இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டும், நேரடியாக பகிரங்கமாக முன்வைக்கப்படவில்லை. யார் மீதும் வழக்கும் பதியப்படவில்லை. மன்னிப்பும் கேட்கப்படவில்லை.

கூட்டமொன்றில் சங்காரா கலந்து கொண்டிருந்த போது, இராணுவ சீருடை தரித்த மர்மக்குழுவொன்றினால், சங்காராவும், அவனது சக 12 அரச தலைவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் இதற்குரிய எந்தவித புகைப்பட, வீடியோ ஆதாரங்களும் கிடைக்கப்படவில்லை. ஆனால் சங்காராவை யார் கொன்றிருப்பார்கள் என இன்றைய சூழ்நிலையில் பலர் ஆராய்ச்சி செய்து தமது முடிவுகளை வெளியிட்டுள்ளனர். புத்தகங்களாவும் இவை வெளிவந்துள்ளன. தோமஸ் சங்காரா இறந்து 20 வருடங்களுக்கு பிறகு 2007, அக்டோபர் 15ம் திகதி புர்கினோ ஃபசோ, மாலி, செனகல், நைகர், தன்சானியா, புரூண்டி, பிரான்ஸ், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அரச மரியாதையுடன் அவன் நினைவு கூறப்பட்டான்.

இந்த டாக்குமெண்டரி நிச்சயமாக இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆபிரிக்க தலைவன் ஒருவனை பற்றிய மறு ஆய்வினை காலப்பொக்கிஷமாக கொடுக்கும் என எதிர்பார்ப்பதாக இதன் இயக்குனர் Christoph Cupelin டாக்குமெண்டரி காட்சி முடிவடைந்த அன்று கருத்து தெரிவித்து விடைபெற்றார்.

அருகிலிருந்த ஆபிரிக்க நண்பன் ஒருவர் படம் முடிந்ததும் கூறினான். ‘நாங்கள் எந்த நாட்டில் இருக்கிறோம் என்றே தெரியாதிருந்த மக்களிடம், நீங்கள் இருக்கும் நாட்டின் பெயர் புர்கினோ பசோ. இதன் எல்லைகள் இவைதான் என வரையறை செய்து கொடுத்தவன் சங்காரா. அவனை படுகொலை செய்ததை தமது அதிசிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாக இன்று வரை மனதுக்குள் சந்தோஷப்பட்டுக்கொள்ளும் நாடுகள் எவை என உங்களுக்கும் தெரிந்திருக்கும்’ என்றான்.

தோமஸ் சங்காராவை உங்களுக்கு தெரிந்த ஆபிரிக்கர்களிடம் கேட்டுப்பாருங்கள். தெரியாது  என கூறுபவர்களை கண்டிருக்க மாட்டீர்கள்.  ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு அவனை பற்றி தெரிந்திருக்கிறது என்ற கேள்வி என்னுள் இன்னமும் தொக்கி நிற்கிறது…

தோமஸ் சங்காராவை பற்றி சுவிற்சர்லாந்து இயக்குனர் Christophe Cupelin உருவாக்கிய அந்த புதிய டாக்குமெண்டரி திரைப்படம் இன்னமும் பொதுமக்கள் காட்சிக்கு வரவில்லை. அவ்வாறு வெளிவந்து காணும் சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள். உங்களுக்கு வேறு சில ஞாபகங்கள் தோன்றக் கூடும்…

– 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

http://www.velichaveedu.com/141018-2-a/?fbclid=IwAR1hm9bE5TjtSN5SFjbBt7rK2BfaPYsC2Rcg3s0eS_OT8VmbXVJF_8LR2xw

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.