Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தனித்தமிழ்ப்பற்று' பிறமொழி வெறுப்பைக் குறிக்கிறதா? செம்மொழிப் புதையல்-2

Featured Replies

'தனித்தமிழ்ப்பற்று' பிறமொழி வெறுப்பைக் குறிக்கிறதா?

செம்மொழிப் புதையல்-2

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

சமற்கிருதமோ, ஆங்கிலமோ கலக்காமல் தனித்தமிழில் பேசிப்பாருங்கள்! நம்மவர் பலரும் உங்களைத் தீவிரவாதியைப் பார்ப்பதுபோலக் கலவரத்துடன் பார்ப்பார்கள். அத்தகைய பார்வையில் ஏதேனும் உண்மை உள்ளதா என்று சற்றே சிந்திக்கலாம்.

கவிதையின் கருதான் முக்கியமேதவிர, மொழி ஒரு பொருட்டல்ல. கவிதைக்கான உயர்ந்த கருப்பொருள் கவிஞனின் உள்ளத்தில் மேலோங்கிவிட்டால், கலப்புமொழியிலும் அக்கவிதை அற்புதமாக வெளிப்படும் என்று பேசும் படைப்பாளிகள் தற்காலத்தில் அதிகம்.

புகழ்பெற்ற கவிதைகள் தூய தாய்மொழியிலேயே அமைகின்றன!

தாய்மொழியில் தூய்மை காப்பது குறித்து சிறப்பாகத் தனிக்கவனம் செலுத்தாத கவிஞர்கள் படைத்த புகழ்பெற்ற கவிதைகளை உற்று நோக்கினால், வியத்தகு முறையில் அக்கவிதைகள் தூய தாய்மொழியில் அமைந்திருப்பதைக் காணலாம். காட்டாக, சில கவிதைகளை ஆய்வோம்.

பெற்றோர் சூட்டிய மருள்நீக்கியார் என்ற அழகிய தமிழ்ப் பெயரை நீக்கிவிட்டுத் தருமசேனர் என்ற வடமொழிப்பெயர் தாங்கிப், வடமொழிச் சார்பான சமண சமயத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்தார் நாவுக்கரசர். அவ்வாறு பயணித்ததன் விளைவாக, நாவுக்கரசர் பெருமானின் அழகுதமிழ்த் தேவாரப்பாடல்களிலும் ஆங்காங்கே சில வடமொழிச் சொற்கள் விரவிக் கிடக்கக் காணலாம்.

நாவுக்கரசரின் தனித்தமிழ் தேவாரப் பாடல்கள்

இருப்பினும், நாவுக்கரசர் தேவாரங்களில் உலகெங்கும் பெரும்புகழ்பெற்று அனைவராலும் கொண்டாடப்படும் சில தேவாரப்பாடல்களில் வடமொழிச் சொற்கள் அறவே இல்லை என்பதை  நாமறிவோம். அதில் ஒரு தேவாரப்பாடலை இங்கு காண்போம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே. அப்பர் தேவாரம்.

மேற்கண்ட நாவுக்கரசர் பெருமானின் தேவாரப் பாடல் அனைவரின் உள்ளம் கொள்ளை கொண்டதன் காரணம் அப்பாடலில் காணும் அழகு தனித்தமிழின் ஆட்சியேயாகும் என்பது தெளிவு.  

தனித்தமிழ் திருவாசகங்கள்!

சிவனடியார் மட்டுமல்லாது தமிழன்பர்கள் அனைவரின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட  மணிவாசகரின் திருவாசகப் பாடல்கள் பலவும் தனித்தமிழில் அமைந்துள்ளதாலேயே அக்கவர்ச்சியைப் பெற்றுள்ளன என்பதும் இங்கு கட்டாயம் குறிப்பிடத்தகுந்த ஆய்வுப் பொருள். காட்டாக,

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே! - திருவாசகம் 39.3

என்ற திருவாசகத்தை ஆய்வு செய்வோம். 'தான் ஈன்ற கன்றின்பால் கொண்ட எதிர்பார்ப்பில்லாத அன்பு' ஒன்றினால் மட்டுமே மனமுருகும் தாய்ப்பசுவின் மனம்போலவே, இறைவன் திருவடிகளின்பால் அன்பு கொண்டு உருகவேண்டும்; அத்தகைய ஆற்றலைத் தந்தருளுமாறு இறைவனிடம் வேண்டுகின்றது இத்திருவாசகம். இப்பாடல் உணர்த்தும் "கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்"  என்னும் இறைப்பற்றுக்கும் இறையன்புக்கும் இணையான உறுதிப்பாடு எங்கும் நாம் கண்டதுண்டோ? இவ்வாற்றலைத் தரும் ஆற்றல் தனித்தமிழுக்கே இயலும் என்பதை உற்று உணர்க!

எத்திசையும் புகழ் மணக்கும் மற்றுமோர் திருவாசகம்!

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே. - திருவாசகம் 5.15

இப்பாடலில் இறைவனே யாதுமாகி நிற்கும் பேரழகைச் சொல்லோவியத்தில் வடிக்கும் ஆற்றல் தனித்தமிழால் நிகழ்ந்தது என்பதையும் உணர்க!

தனித்தமிழால் கம்பன் காட்டும் மருதநில எழிற்தோற்றம்!

இனி, கம்பராமாயணப் பாடல்களுள் உள்ளம் கவர்ந்த பாடல்கள் பலவும் தனித்தமிழில் அமைந்துள்ளதும் ஆய்வுக்குரியது. காட்டாக,

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ - கம்பராமாயணம்:35.

என்ற கம்பனின் சொல்லோவியத்தில் இயற்கை என்னும் இளையகன்னியின் மருதநில எழிற் தோற்றம் உயிரோவியமாய் நம் கண் முன்னே கொண்டுவருவது தனித்தமிழின் மாட்சியே என்பதில் ஐயமில்லை!

தனித்தமிழின் ஆற்றல்!

மேற்கண்ட பாடல்களைப் படைத்த அருளாளர்கள் தனித்தமிழ் ஆர்வலர்கள் அல்லர். ஆனால், அவர்கள் படைத்த இப்பாடல்கள் தனித்துவத்துடன் ஒளிவீசி மிளிர்வதன் மறைதிறவு (இரகசியம்)  அவை தனித்தமிழில் உருவானதேயாகும்.  

அருளாளர்களால் அருளப்பட்ட நம்மை மெய்மறக்கச்செய்யும் இப்பாடல்கள் திட்டமிட்டுத் தனித்தமிழில் உருவாக்கப்பட்டனவா என்ற வினாவுக்கு 'இல்லை' என்பதே உறுதியான விடை. அப்படியானால், அப்பாடல்கள் எவ்வாறு உருவாயின? கவிதையுணர்ச்சி மேலோங்கிய பக்தி நிலைகளில் படைக்கப்பட்ட அப்பாடல்கள்  படைத்தவரறியாமலேயே இயல்பாகத் தூய தாய்மொழியாம் தனித்தமிழில் அமைந்தன.

தாய்மொழியின் ஆளுமை ஆற்றல்!

தமிழ்மொழி மட்டுமல்ல, எம்மொழியிலும், கவிதையுணர்ச்சி மேலோங்கிய நிலையில் படைக்கப்பட்ட கவிதைகள் இயல்பாகவே தனித்த தாய்மொழியில் அமைந்துவிடும் பாங்கைக் காணலாம். மக்கள் கவிஞர் ஷேக்ஸ்பியர் கவிதைகளை ஆய்வுசெய்த ஆங்கில மொழியியல் ஆய்வர்கள் பின்வரும் முக்கியமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்:

1. ஷேக்ஸ்பியர் நடையில் தாய்மொழிச் சொற்களே மிகுதியாகக் காணப்படுகின்றன.

2. ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் கவிதை உணர்ச்சி மேம்பட்ட இடங்களில், தாய்மொழிச் சொற்களின் விழுக்காடு இன்னும் பலமடங்கு மிகுதியாகக் காணப்படுகின்றன.

தனித்தமிழ் பயிற்சி நல்கும் ஆற்றலும் ஆளுமையும்!

இயல்பாகவே தனித்தமிழில் படைக்கும் திறன் மிக்கோர் உயர்ந்த படைப்புகளைப் படைக்க வல்லமை பெற்றிருப்பதும், அத்தகைய திறன் இயற்கையில் கைவரப் பெறாதவர்கள் "செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற பழமொழியின்படி, தனித்தமிழ்த் திறன்களை மேம்படுத்திக்கொள்வது அவர்தம் ஆளுமையையும், மொழியாற்றலையும் மேம்படுத்தும் என்பது திண்ணம்.

தனித்தமிழ் முயல்க!

எனவே, தனித்தமிழ் பற்றாளர்கள் தம் படைப்புத்திறனையும் ஆளுமையையும் மேம்படுத்தும் நோக்கோடு பயணிக்கிறார்கள் என்பதை ஏனையோர் உணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். தாமும் அவ்வழியில் முயலவேண்டும்.

இதுவரை நாம் கண்ட 'காட்டுகள்' நமக்குப் பின்வரும் தெளிவுகளைத் தரவல்லவை:

1. தமிழ்ப்பண்பின் வெளிப்பாடே 'தனித்தமிழ் ஆர்வ'த்தை தோற்றுவித்ததேயன்றி, அயல்மொழி வெறுப்பு அன்று.

2. தனித்தமிழ் இயக்கம் அயலின மொழிப்பற்றை (ஆரியமொழிப் பற்றை) எதிர்த்துத் தோன்றியதன்று.

3. தமிழில் ஆரியமொழிக்கலப்பை ஏற்காது என்பதால் தனித்தமிழ் இயக்கம் ஆரியமொழிக்கு எதிரானது என்பது நச்சுத்தனமான கருத்து.

4. தனித்தமிழ் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பிறதாய்மொழியாளரும் பங்களித்துள்ளனர்.

தனித்தமிழைப் பழிப்போரே "தமிழ்மொழி வெறுப்பு வெறியர்கள்"

அதைவிடுத்து, தனித்தமிழ் ஆர்வலர்களை "மொழிவெறியர்கள்" என்று கட்டம் கட்ட முயல்பவர்களே உண்மையில் "தமிழ்மொழி வெறுப்பு வெறியர்கள்" என்று தம்மைத் தாமே அடையாளம் காட்டிக் கொள்கின்றார்கள் என்பதையும் உணர்தல் நல்லது.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலி னால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

புதையல் வேட்டை தொடரும்!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.