"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 75
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 75 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை
அத்தியாயம் 11: இந்த அத்தியாயம் தேவநம்பிய தீசனின் பட்டாபிஷேகம் பற்றியது. தேவநம்பிய (கடவுள்களின் பிரியமானவர்) என்பது மன்னர் அசோகரும் பயன்படுத்திய அதே முன்னொட்டு. அசோகரின் கல்வெட்டுகளைப் வாசித்துப் புரிந்துகொண்ட ஜேம்ஸ் பிரின்செப் [James Princep], இலங்கை அரசு ஊழியரான ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் (George Turnour Jnr; 11 மார்ச் 1799 – 10 ஏப்ரல் 1843) உடனான கடிதப் பரிமாற்றத்தின் காரணமாக அந்தக் கல்வெட்டுகள், தேவநம்பிய தீசனால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை ஆரம்பத்தில் உருவாக்கினார். மன்னர் அசோகரும் தீசனும் நிலம் மற்றும் கடல் வழிகளில் இரண்டாயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் வாழ்ந்தவர்கள். அசோகரும் தீசனும் மிகவும் நல்ல நண்பர்கள் என்று மகாவம்சம் கூறுகிறது. இது எழுதப்பட்டது ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு ஆகும். அதாவது தீசனின் காலத்தில் இருந்து 900 அல்லது 800 ஆண்டுகளுக்குப் பின்பு ஆகும். தீசன் மற்றும் புகழ்பெற்ற பௌத்த பேரரசர் அசோகர் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்காவிட்டாலும், அவர்களை நண்பர்களாக காட்டுவதற்கான ஒரு விரிவான முயற்சி இதுவாக இருக்கும். அதாவது, மிகவும் பிரபலமான பௌத்த பேரரசர் அசோகரின் மகிமையைப் பகிர்ந்து கொள்வதும், அவரது மகிமையில் மூழ்குவதும் இதன் நோக்கமாக மகிந்த தேரருக்கு இருக்கலாம்? சுமார் இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாயிரத்து நானூறு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஒருவர் தொடர்பு கொள்ள எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! பருவக்காற்றுகளைப் பயன்படுத்தி வணிகக் கப்பல்களுக்கு ஒரு சுற்றுப் பயணம் செய்ய ஒரு வருடம் எடுத்திருக்கும். ஒரு பருவக்காற்றுடன் பயணம் செய்து, அடுத்த எதிர் பருவக்காற்றுடன் திரும்பிச் செல்ல காத்திருக்கும் சுமார் ஆறு மாத காலத்தில் பொருட்களைச் சேகரிக்கவும் வேண்டி இருந்தது.
உதாரணமாக, பாடலிபுத்திரத்தில் [Pataliputra] உள்ள அசோகரிடமிருந்து வந்த செய்தி, முதலில் கிழக்குக் கரையை அடைந்து, தாம்ரலிப்தா [Tamralipti] துறைமுகத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர், வடகிழக்கு பருவமழையுடன் இலங்கைக்கு பயணிக்க வேண்டும். தங்கி, திரும்பும் பயணத்திற்கான பொருட்களை சேகரித்து, பின்னர் தென்மேற்கு பருவமழையுடன் புறப்பட வேண்டும். பண்டைய காலங்களில், வணிகமும் வர்த்தகமும் இன்று இருப்பது போல் பரவலாகவோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்டதாகவோ இல்லை, எனவே கப்பல்கள் பயணத்திற்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. ஒரு தகவல் தொடர்புக்கு எனவே ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். மறைந்த திரு. எஸ்.யு. குணசேகரம் தனது "The Vijayan Legend and the Aryan Myth" என்ற கட்டுரையில், அசோகர் மற்றும் தீசன் ஆகிய இருவரும் வரலாறு அறிந்த ஆரம்பகால பேனா நண்பர்கள் என்று நகைச்சுவையாகக் கூறினார் என்பதைக் கவனிக்க. மேலே கூறிய பலவற்றை மிக தெளிவாக விரிவாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
தேவநம்பிய தீசன் முடிசூட்டப்பட்டபோது பல அதிசயங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது; அவருக்கு நம்பமுடியாத பல செல்வங்கள் கிடைத்தன. அத்தியாயம் XI / தேவநம்பிய தீசனின் முடிசூட்டு விழாவில், 8 முதல் 10 வரை: "பட்டாபிஷேகம் செய்து கொண்டபோது பல அற்புதங்கள் நிகழ்ந்தன. இலங்கைத் தீவு முழுவதும் பூமிக்குள் ஆழப் புதைந்து கிடந்த புதையல்களும், மணிகளும் தரைமட்டத்துக்குத் தாமாக வந்தன. இலங்கைக்கருகே மூழ்கிப்போன கப்பல்களில் இருந்த அணிகலன்கள் பலவும், இயற்கையாகக் கடலிலுள்ள செல்வங்களும் கரையில் வந்து ஒதுங்கின." என்று கூறுகிறது. அவர் அவற்றை தனது நண்பர் அசோகருக்கு அனுப்பினார், அசோகர் அவற்றைப் பிரதிபலனாகப் பெற்று, புத்தரிடம் தஞ்சம் புகுந்து கொள்ளுமாறு தீசனிடம் கேட்டுக் கொண்டார். அசோகர் அந்தப் பொருட்களைப் பெற்றபோது 'இதோ, எனக்கு இத்தகைய விலைமதிப்பற்ற பொருட்கள் எதுவும் இங்கு இல்லை' என்று நினைத்தார். அசோகர், தீசனின் முதல் முடிசூட்டு விழாவிற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது முடிசூட்டு விழாவைச் செய்யும்படி தீசனைக் கோரினார். இதில் வேடிக்கை என்னவென்றால், தீசன் அனுப்பிய தூதரகள் அங்கு ஐந்து மாதங்கள் தங்கியிருந்து, பின்னர் வெசாக்க மாதத்தில் (மே) திரும்பி வந்து பன்னிரண்டு நாட்களில் தமது வீட்டிற்குச் சென்றனர். மே மாதத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசாது, ஆனால் அவை பன்னிரண்டு நாட்களில் வீட்டிற்கு போய்ச் சேர்ந்தனர் ?? பாவம் மகிந்த தேரர், ஏனென்றால் அவ்வளவுதான் அவரின் ஞானம்! இதுவும், கடல் பயணம் பற்றிய விரிவான விளக்கமும், சூழலும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. அசோகருக்கும் தீசனுக்கும் இடையிலான நட்பு, கவிஞர் பிசிராந்தையார் மற்றும் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் இடையே தமிழ்நாட்டில் நிலவிய நட்பின் கதையின் நகலாகும் என்பது வெள்ளிடைமலை.
“கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல்! அதற்பட ஒழுக”லென்று
[புறநானுறு 216, ” வேந்தே! பிசிராந்தையாரும் நீயும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கிறீர்களே தவிர நீங்கள் இருவரும் சிறுபொழுதுகூட ஒருவரை ஒருவர் நேரில் கண்டதில்லை. இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன என்கிறது இந்த சங்கப்பாடல்]
இன்னும் ஒன்றையும் நான் சொல்லவேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிற மண்ணும் அதாவது செம்மண்ணும் அசோகனால் இலங்கைக்கு கொண்டுபோக கொடுக்கப்பட்டது. இருப்பினும், தம்பபன்னி என்ற பெயர் சிவப்பு நிற மண்ணின் காரணமாக வந்தது என்பதையும் அது இலங்கையின் உட்புறத்தில் ஏராளமாகக் அல்லது தாராளமாகக் இருக்கிறது என்பதையும், அதனால் இது ஒன்றும் விசேடமான பொருள் இல்லை, காவிக்கொண்டு போவதற்கு என்பதை தீசனின் ஆட்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை விசேடமான பொருளாக இலங்கைக்கு கொண்டு போனார்கள். இது எதைக் காட்டுகிறது அல்லது சொல்லுகிறது என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
மேலும் கங்கையின் நீர், வலம்புரிச் சங்கு, பருவம் கொழிக்கும் எழில் மங்கை, பொற் கலசங்கள், விலையுயர்ந்த மெத்தை, உயர்ந்த மூலிகைகள், ஆருயிரம் வண்டி நிறைய பறவைகளால் கொணரப்பட்ட மலையரிசி, மற்றும் ஒரு அரசனுடைய கோலாகலமான பட்டாபிஷேக வைபவத்துக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் தன்னுடைய நண்பனுக்கு பரிசுப் பொருள்களாகத் தூதுவர்களின் மூலம் அசோகன் அனுப்பினான் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றைக் கவனியுங்கள் 'ஆருயிரம் வண்டி நிறைய பறவைகளால் கொணரப்பட்ட மலையரிசி' யை இலங்கைக்கு கொண்டு போக அந்தக் காலத்து கப்பல்கள் எத்தனை தேவைப்பட்டு இருக்கும்? கொஞ்சம் யோசியுங்கள்?? அது மட்டும் அல்ல, இந்த அரிசி கொண்டுவரப்பட்டது பறவைகளால் என்ற வரி, ஒளவையார், அகநானூறு: 303: 8-14 பாடலை உங்களுக்கு நினைவூட்டிட வில்லையா?
“புலம் கந்தாக இரவலர் செலினே,
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் 10
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,”
Part: 75 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37
Chapter 11: This chapter is about the consecrating of Devanampiyatissa. Devanampiya (Beloved of the Gods) is the same prefix, the King Asoka also used. James Princep who deciphered the inscriptions of Asoka initially toyed with the idea that Devanampiyatissa of Lanka must have caused those inscriptions to be written because of his correspondence with George Turnour, a Ceylon Civil Servant. The King Asoka and Tissa lived more than two thousand kilometres apart along the land and sea routes. The Mahavamsa claims that Asoka and Tissa were very good friends. This is an elaborate ploy to make Tissa and the glorious Buddhist Emperor Asoka to be friends even though both never met each other. The intention is to share the glory of the most famous Buddhist Emperor Asoka, and to bask in his glory. Imagine the time it would have taken for one to communicate over a distance of more than two thousand kilometres about two thousand four hundred years ago! It would have taken one year to make a round trip for merchant ships using the monsoonal winds. Travel with one monsoonal wind and stay for about six months collecting stuffs to go back with the next opposite monsoonal wind. A message from Asoka in Pataliputra first need to reach the eastern shore, say to the seaport Tamralipti. Then travel with the, say, North-East Monsoon to Lanka. Stay and collect stuffs for the return journey, and then depart with the South-West Monsoon. There would not have been much commerce in those days to have readily available ships to travel. It would take more than one year for one communication. The alleged friendship between Asoka and Tissa would be analysed later. Late Mr. S. U. Gunasegaram in his article “The Vijayan Legend and the Aryan Myth” quipped that these two, Asoka and Tissa, as the earliest pen friends known to history.
It is alleged that many wonders happened when Devanampiyatissa was crowned; many unbelievable wealth came available to him. He sent those to his friend Asoka, and Asoka reciprocated in kinds and requested Tissa to take refuge in the Buddha. Asoka thought when he received those goods: ‘Here, I have no such precious things’. Asoka also requested Tissa to have a second coronation, after six months of his first coronation. The embassy sent by Tissa stayed for five months before returning in the month of Vesakha (May) and reached home in twelve days. North East monsoonal wind is not active in the month of May, but they reached home in twelve days. They were given red coloured earth also. However, they should have known that name Tambapanni was because of the red coloured earth and it must have been available in plenty in the interior of Lanka. The king Asoka sent also a maiden in the flower of her youth, 11 – 31. What happened to her when she was handed over to Tissa? The poor girl is left in the lurch! The alleged friendship between Asoka and Tissa is a copy from the story of friendship prevailed in Tamil Nadu between the poet Pisiranthaiyar and the Chola king Koperumcholan. The Chola king Koperumcholan is also an accomplished poet.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 76 தொடரும் / Will follow
துளி/DROP: 1960 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 75]
https://www.facebook.com/groups/978753388866632/posts/33027448740237014/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.