Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுகல்: இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள் – தர்மு பிரசாத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடுகல்: இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள் – தர்மு பிரசாத்

nadukal_FrontImage_691-195x300.jpg

ஈழத்து போர்க்காலப் படைப்புகள் கருணையுடன் கை தூக்கிவிடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகி விட்ட பின்னர், சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. நம்பகமான புனைவுக்கான புறச்சூழலோ, நுண்தகவற்செறிவோ, படைப்புமொழி குறித்த ஓர்மையோ, சொல்முறையில் கவனமோ இல்லாத ஆழமில்லாப் படைப்புகள் எப்போதும் வெளிவருபவை. இது அவை குறித்தான புகார்கள் இல்லை.

ஆழமும் உள்விரிவுமற்ற குறைப்படைப்புகள் ஈழத்தின் நவீன முகங்களாக உரையாடப்படும் போதும், போரின்/ போராட்டத்தின் பன்முக வெளியைக் கருணையோடு அணுக வேண்டித் தங்கள் எளிமையான அரசியற் கருத்துகளின் மேல் அறிதற் குறைபாடுகளைச் சுற்றிப் போர்க்காலப் படைப்புகள் எனத் தரும்போதும், அவற்றின் படைப்பூக்கமில்லாத அரசியற் பிரச்சாரங்களை அலுப்புடன் வாசிப்பது குறித்த புகார்களே இவை.

தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலும் ஈழப்போர் என்ற மீள வேண்டியதும், மீளவே முடியாததுமான இரத்தச் சகதிக்குள் தன் கால்களை ஊன்றி மேல் எழுந்துவர முயன்றிருக்கிறது. முயற்சி என்ற அளவில் பாராட்டக்கூடியது தான். ஆனால் அவரிடம் இருக்கும் போராட்டம் குறித்த ‘சிறுவன் மனநிலை’ மேலெழ முடியாமல் அதே ஈழப்போர்ச் சகதிக்குள் வீழ்ந்து போரின் இரத்தச் சாட்சியமாக இருப்பதாகப் பாவனை செய்கிறது.

இது ஈழப்போராட்டத்தை எழுதுவதாகச் சொல்லும் பலரிடமும் இருக்கும் பாவனைக் குறைபாடு தான். அவர்களால் உணர்ச்சிகரமாக மட்டுமே போராட்டத்தை எதிர்கொள்ள முடிகிறது. போராட்டம் என்றால் வேறு தெரிவுகளே இல்லாமல் அதன் எதிர்கால ‘நல்விழைவை’ மட்டுமே கற்பனை செய்ய முடிகிறது. எதிர்கால நல்விழைவுக்காகப் போரைப் புனிதப்படுத்தி அதற்கு எவ்வளவு உடல்களைப் பலியிடவும் தயங்குவதில்லை.

போராட்டத்தின் இருட்டும் குழப்பமுமான தெளிவில்லாத பாதை குறித்த அச்சமும், அவற்றின் நிகழ்பேரழிவுகள் குறித்த சிறு சந்தேகமேனும் இருப்பதற்கான தடயங்களும் எழுத்துகளில் இருப்பதில்லை. போரின் நிகழ்கால விழைவுகளின் கோரத்தைக் காட்ட அன்றாடச் சீவியத்திற்கே சிரமப்படும் ஏதிலியான மக்களின் கண்ணீரை உள்ளங்கைகளில் ஏந்தியபடி வருவார்கள். தீபச்செல்வன் நாவலில் தியாக / புனிதப்படுத்தப்பட்ட வித்துடலின் மேல் நடப்பட்டிருக்கும் நடுகல்லை நமக்குக் காட்டுகிறார்கள்.

நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்ட சலவைக்கற்களின் அழகில் அல்லது அதன் காவியச் சோகத்தினுள் மூழ்கினால் நடுகல்லின் கீழே புதைந்திருக்கும் உடல்களின் குவியலினுள் இருக்கும் வெறுமையையும், அழிவையும், கசப்பையும், அறிந்துகொள்ள விரும்பாதவர்களாகி போரின் குரூர யதார்த்தத்தின் முன், பின்முதுகு காட்டி நிற்பவர்களாகி விடுவோம்.

கதைசொல்லி விநோதன் போரில் சாவடைந்த அவரது அண்ணனின் நடுகல்லின் நினைவுகளைச் சொல்லிச் செல்கிறார். அந்நடுகல்லைத் தன்மகனின் இருப்பாக நினைவில் பொதிந்திருக்கும் விநோதனின் தாய் நமக்குப் புதியவர் அல்ல. அவர் போராட்டத்தின் ஆரம்ப நாளில் இருந்தே கண்ணீர் உகுக்கும் கண்களுடன் செய்வதறியாது போர்க்களத்தின் விளிம்பில் நடந்து வருபவர்.

நடுகற்களின் கீழ்புதைக்கபட்ட வித்துடல்கள், உயிரற்ற வெறும் சடலங்கள் மட்டுமல்ல, அவை மறுமையின் மீட்சிக்காக விதைக்கபட்டிருக்கும் வீரியமிக்க வித்துகள். ஒருதுளி கருணைமிகுந்த நீராவது அந்த உறங்கும் வித்துகளின் மீது விழுந்தால் அவை உயிர்த்தெழுந்து விடும் என்பது போராட்டகாலக் கதையாடல்கள். ஆனால் எலியாகனெட்டி நடுகற்களை அதிகாரத்தின் மூலக்கூறுகளாகவே அறிமுகம் செய்கிறார்.

//கல்லறை என்பது விசேஷமான ஒருமனநிலையைத் தூண்டுகின்றது. இந்த மனநிலையைப் பற்றி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஒருகெட்ட பழக்கம் நம்மிடம் உள்ளது. இதுபற்றி நாம் எண்ணுகிற வெளிப்படுத்துகிற பெருமிதம் ஒருவிதமான இரகசிய சந்தோஷத்தை, நிறைவை நமக்குத் தருகிறது// போராட்ட காலத்தில் அதிகார இருப்பை நினைவுறுத்தும், மறுமையில் மீந்திருப்பதான கற்பனைச் செய்யும் குறியீடுகளாகவுமிருந்த நடுகற்கள், இறுதிப்போர்ப் பேரழிவின் பின்னர் நினைவுகூறலின் சிறுதடயங்களாக எஞ்சியிருக்கின்றன.

போரில் உறவுகளை இழந்தவர்களுக்கு அவை சிறுதடயங்களின் நினைவுகூறல் மாத்திரமல்ல. விநோதனின் அம்மா பொதிந்து வைத்திருப்பது போன்ற இறந்தவர்களின் இருப்பும். ஆனால், விநோதனிற்குப் போராட்டத்தின் மேலான சிறுவன் மனநிலையால் நடுகற்களின் மீதான வாஞ்சை போர்-பின்சூழலிலும் குறைவதில்லை. நடுகற்களை உயிர்ப்பிற்கும் கருணைமிகுந்த நீரின் ஊகுத்தலுக்காகக் காத்திருக்கிறார். அவரின் காத்திருத்தல், இழந்த அண்ணனை மீட்டுக் கொள்வதற்கு பதில் இறந்த காலத்தை மீள் வருவிக்க விரும்புகிறது.

இன விடுதலைக்காகப் போராடச் சென்ற போராளி மற்றும் மகனின் மரணத்தைப் போர்க்களத்தில் ஒத்திவைக்கப் பிரார்த்தனைகளுடன் இருக்கும் தாய் என இரு முரண்பட்ட உணர்வுகளுக்கும், உயிரியல் இருப்புகளுக்குமான போராட்டமுமே நாவலின் களம். மகனின் இலட்சியவாதத்திற்கும், தாயின் நடைமுறை வாழ்விற்கான எத்தனிப்பு இன்னும் விரிவான பின்னணியில் வைத்து உரையாடப்பட வேண்டியவை. அவற்றைத் தீபச்செல்வன் தாய், மகன், தம்பி, தங்கைகளுக்கான உணர்ச்சிகரமான உறவின் பிணைப்பாக உரையாட முயல்கிறார்.

அதன் பின்னர், எழுதிச் செல்வதெல்லாம் தன் பதின்மங்களின் நம்பிக்கைகளை மட்டுமே. அவையும் போராட்டத்தின் அசுரப் பிரச்சாரங்களை ஒட்டி உருவாகிக் கொண்ட மேம்போக்கான போராட்டம் குறித்த நம்பிக்கைகள். அவை போரை இருமைகளாக மட்டும் நோக்கக் கூடிய நோய்த்தொற்றுடன் கூடிய புரிதலில் இருந்து புடைத்து வரும் நம்பிக்கைகள். போராட்டத்தையொட்டி உருவாக்கப்பட்ட கதையாடல்களையும் நம்பிக்கைகளையும் தான் கண்டடைந்த உண்மைகளாகத் தீபச்செல்வன் எழுதியிருப்பதை படிக்க நமக்கு அலுப்பே வருகிறது. அது போரின் கதைகள் குறித்தான அலுப்பு அல்ல, போராட்டத்தை இன்னும் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது குறித்தான சலிப்பு!

இறந்துபோன தனது அண்ணனுடைய புகைப்படம்/நடுகல்லைத் தேடிச்செல்லும் விநோதன் முடிவில் கண்டடையும் தரிசனம் நமக்கு அயர்ச்சி தருவது. அது முப்பது வருடப் போராட்டத்தின் பொது மனநிலையையொட்டி உருவாக்கிய மேம்போக்கான புரிதல் சார்ந்தது. விநோதன் தன் பதின்மங்களின் சிறுவனாகப் போராட்டத்தைப் புனிதமானதாக- தூயதாக- விடுதலைக்கான ஒற்றையடிப் பாதையாக புரிந்துகொள்வதிலும் தவறுகள் இல்லை. ஆனால் அவன் போர் முடிந்த பின்னரும், பல்கலைக்கழகம் சென்று முதிர்ந்த அனுபவங்கள் கிடைத்த பின்னரும் அதே ‘சிறுவன் மனநிலையுடன்’ போராட்டத்தை அணுகுவதும், போராட்டத்தின் தற்சிதைவுக்கான காரணத்தை இன்னும் எதிர்த்தரப்பிடம் தேடிக்கொண்டிருப்பதும் மேம்போக்கானது.

அந்நோய்த்தொற்றுடன் கூடிய பார்வையாலேயே தீபச்செல்வனால் இறுதிப்போரின் பின் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் முன்னாள் போராளி நண்பனைத் துரோகியாக இனம்காட்ட முடிகிறது. உயிரிழந்து போன போராளிகளைப் புனிதமாக அணுகும் அவரால், இறுதிப் போரில் போராளி நண்பனின் உயிரின் பிழைத்திருப்பு நண்பனைத் துரோகியாக்கி விட்டு தன் தோல்வியின் குற்றவுணர்வைத் துடைத்துக் கொள்ள முடிகிறது. குறைந்தபட்சம் நண்பனை பின்-போர்க்காலச் சிதைவுகளின் எச்சமாக உரையாடக் கூடத் தீபச்செல்வன் செல்ல வேண்டிய தூரம் மிகத் தொலைவானது.

பிரேம் (பின்னுரையில்) தீபச்செல்வனின் தன்வரலாறாக நாவலை வாசிக்கிறார். ஆனால் நாவலை, தன்வரலாறாக வாசித்தால் அபத்தமானதும், உருமறைப்புச் செய்யப்பட்ட பின்பாதிகளுடனும் கூடிய பழுதான பிரதியாக இருக்கும். தீபச்செல்வனால் கருந்திரையிட்டு மறைக்கப்பட்ட அவருடைய தன்வரலாற்றின் பின்பகுதி தான் நுண்ணுணர்வுள்ள நல்லபடைப்பாளியாக அவர் உரையாடி இருக்க வேண்டிய நல்ல இலக்கியத்திற்கான சத்தான பகுதி. ஆனால் அவரின் பிரச்சாரப் புடைப்புகளின் நோய்க்கூறு அவற்றை மறைத்துவிட்டு உரையாடவே முற்படும். அவரை உண்மைகளைத் தேடும் படைப்பாளியாகவோ, தான் கண்ட உண்மைகளைத் திரித்துக்கூறும் படைப்பாளியாகவோ ஆக்குவதும் இந்தக் கருந்திரையிட்ட உருமறைப்புத் தான். கருந்திரையிட்டு மறைக்கப்பட்ட இடத்தில் தன்வரலாறு தனது ஆன்ம ஒளியை (அப்படி ஒன்று இருந்தால்) இழந்து கூழாங்கற்கள் ஆகி விடுகின்றன. இனவாதம் எனும் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்.

தீபச்செல்வனின் அண்ணன் போராட்டம் மீதிருந்த வேட்கையால் போராடச் சென்று, விடுதலைக்காகத் தன்னைப் பலியிட்டுக் கொண்டவர். ஆனால் அவரின் தங்கை தோல்வி தவிர்க்கவே முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிந்த புலிகளின் நெருக்கடியான இறுதிக்கட்டத்தின் போது வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு, அடிப்படைப் பயிற்சிகள் கூட இல்லாமல் போரின் முன்களத்திற்கு அனுப்பப்பட்டவர். இந்த இலட்சியவாத அண்ணன் – வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட தங்கை என்ற இரு எதிரீடுகளையும் கொண்ட போர்க்களத்தை அவர் உரையாடியிருந்தால் தன்வரலாறு / நாவல் தொட்டிருக்கக் கூடிய தளம் வேறு. வீரச் சாவடைந்து நடுகல் நடப்பட்டு, புனிதமாகப்பட்ட அண்ணனின் உயிர்ப்பலியும், கருந்திரையிடப்பட்டு மறைக்கப்பட்ட தங்கையின் பின்பாதியும் கொள்ளும் முரணே ஈழ யுத்தத்தின் கள யதார்த்தம்.

அண்ணனின் போராட்டக்களம் இலட்சியவாதத்தால் உந்தப்பட்ட வீர-தீரங்களும் தியாகங்களும் பலியிடலுமான கதையாடல்கள் நிறைந்திருந்த இலட்சியவாதக் களம். தங்கையின் போராட்டக்களமோ வீழ்ச்சியையும் மட்டற்ற கசப்பையும் நிர்க்கதியையும் வலிந்து திணித்த சாவின் களம். இரு முரண்களங்களின் போதும் இருந்த முன்களத்தின் பெருந்திளைப்பும், பின்-களத்தின் தத்தளிப்புகளும், கையறு நிலையையும் உரையாடாத புனிதமாகப்பட்ட ஒரு பக்க வரலாறை, பிரேம் ஒட்டுமொத்தத் தமிழினத்துக்குமான காவிய சோகமாகவும், துன்பியலாகவும் வாசிக்க முயல்கிறார்.

பிரேம் முன்வைக்கும் ஈழம் குறித்த கருத்துகளின் போதாமை இது. அவர் புலிகளின் போராட்டத்தை ஒட்டுமொத்தத் தமிழ்மக்களுக்குமான போராட்டமாக உரையாட விழைகிறார், அழிவை முழு ஈழத்தமிழர்களுக்குமான மரணத்தின் துன்பியலாகச் சட்டகங்கள் இடுகிறார். இலங்கைத் தமிழர்களினுள் இழையோடியிருந்த பன்மையான போராட்டச் சாத்தியங்களைக் கவனமாக விலக்கிவிட்டு புலிகளின் போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் துன்பியலாக உரையாட விழைவதே அடிப்படையில் கோளாறானது. போராட்டம் ஓர் இனத்தின் விடுதலைக்கானதாக ஆரம்பித்திருந்தாலும் அது வெகுவிரைவிலேயே தன் எல்லைகளைக் குறுக்கிக் கொண்டு விட்டது. முடிவில் எவ்வளவு உயிர்களைப் பலியிட்டும் பிரபாகரனை மட்டும் காப்பாற்றினால் போதும் என்று தன் கழுத்தில் சுருக்கிட்டு, ஒரு அமைப்பின் அதிகாரத்திற்கான போராட்டமாகச் சிறுத்துப் போனதை பிரேம் அறியாதவர் இல்லை.

பிரேம் மறைக்கப்பட்ட பின்பாதியுடன் கூடிய தன்வரலாற்றை மொத்தத் தமிழர்களின் விடுதலைக்கான சர்வரோக நிவாரணியாக உரையாட விழைந்தால் அவரிற்கு ஹினெர்சலீம்-ன் ‘அப்பாவின் துப்பாக்கி’ (தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்) என்ற தன்வரலாற்றைப் பரிந்துரைக்க முடியும். தோற்றுப்போன, ஒரே இரவில் தன் குடும்பத்தில் ஏழு பேரை இழந்த குர்திஸ்தான் அகதி ஹினெர்சலீமின் கதை. ஹினெர்சலீமிற்கு தளபதி பர்ஸானின் அந்தரங்கத் தொடர்பாளராக இருந்த அவனுடைய அப்பாவின், விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய பழைய புருனே துப்பாக்கி பெருமையின் குறியீடோ, துன்பியலின் சட்டகமோ அல்ல. அவன் தன்னை மீட்டுக் கொள்வதற்கும், தொகுத்துக் கொள்வதற்குமான ஏற்பாடு மட்டுமே. அகதியாக வெளியேறும் நாளில், தான் நேசித்த குர்திஸ்தான் பக்கமாகத் திரும்பி நின்று உரக்கச் சொல்கிறான். ‘ஆசத் ஆகிய நான் இன்னமும் சின்னப் பையன் இல்லை’. ஆனால் ப்ரேமும் தீபச்செல்வனும் ஈழப் போர்க்களத்தில் சின்னப் பையன்களாகத் தான் இருக்க விழைகிறார்கள்.

நடுகல் நாவல், அதன் அரசியல் உள்ளடக்கம் தவிர்த்து ஓர் இலக்கியப் பிரதியாக பயணப்பட வேண்டிய ஆழம் இன்னும் அதிகம். அதற்கு நாவல் குறித்த ஓர்மையும், நாவல் நெடுங்கதை இல்லை என்ற தெளிவும் வேண்டும். நாவலின் சாரத்தைத் தோரயமாகத் தொகுத்தாலும் அது படைப்பாளியின் விமர்சனப் பார்வையூடாகக் திரளும் முரண்களினூடே நகர்ந்து செல்கிறது. போர்க்களத்தில் முயங்கிக் கிடந்த ஊடும்பாவுமான கதைவெளியும், பல குரல்களிற்கான களமும், விவாதித்துச் செல்ல முடியுமான மொழியும் இல்லாத நெடுங்கதை போன்ற ஈழப்போர்க்கால நாவல்களின் யதார்த்தவாதச் சொல்முறை, ஒரு கட்டத்தின் பின்னர் நம்பகமான புனைவின் சாத்தியத்தை இழந்து போராட்டத்தின் குறைசாட்சியங்களாக இருந்தால் மட்டும் போதும் என்று அடம்பிடிக்க முனைகின்றன. நமக்குத் தேவை குறைசாட்சியங்கள் அல்ல, சாட்சியங்களில் இருந்து உருவாகும் நல்ல புனைவுகள். புனைவுகளில் செய்ய வேண்டியது நல்ல படைப்பூக்கமான தேய்வழக்குகளை விலக்கிய மொழிதல்களை, வாசிப்பவரின் நிகர் வாழ்வாக மடைமாற்றி விடக்கூடிய படைப்புகளை.

***

பின்னிணைப்பு – தீபச்செல்வன் கவிதை

அபிராஜூன் தங்கை லூர்த்தம்மாவின் கண்கள்

01

லூர்த்தம்மாவின் கண்கள் பின்னிரவுகளில்
அலைந்து கொண்டிருந்தன.
அந்தத் துவக்கு மிகப்பாரமாக இருந்தது
என்கிறாள்
அபிராஜின் தங்கை லூர்த்தம்மா.
அவள் இழுத்துச் செல்லப்பட்ட போது
அபிராஜ் புதர் ஒன்றுக்குள் ஒளிந்திருந்தான்.
மீளவும் அவள் ஓடி வந்து
சருகுகளிற்குள் ஒளிந்து கொண்டாள்.
அப்பொழுது அவள் பார்த்துக் கொண்டிருக்க
அபிராஜ் இழுத்துச் செல்லப்பட்டான்.
கனவு ஒழுகி சருகுகள் ஈரமாக
லூர்தம்மா அழுது கொண்டேயிருந்தாள்.
அபிராஜ் துவக்கின் சூட்டில்
வாடி விட
லூர்த்தம்மாவை தேடிக் கொண்டிருந்தான்.
களங்கள் எங்கும் குருதி வடிந்து கொண்டிருந்தது.

இனந்தெரியாத கால்களில் மோதுகிற போது
அபிராஜை லூர்த்தம்மா கண்டாள்.
குழந்தைகள் சரணடைந்து துவக்குகளை கையளித்தனர்.

02

அவள் ஒதுங்கும் இடங்களில்
துவக்குகள் விழித்துக் கொண்டிருக்கின்றன.
லூர்த்தம்மாவுடன்
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுமிகளின் கைகளில் பாரமான இலக்கங்கள்
கட்டப்பட்டிருக்கின்றன.

மீள மீள அவள்
சரணடைந்து கொண்டிருக்கிறாள்.
அபிராஜிடம் துப்பாக்கி கொடுக்கப்பட்டு
பரிசோதிக்கப்படுகிறது.
வந்திறங்கும் சிறுவர்களுக்காக
தயாரிக்கப்படும் இலக்கங்களை
அபிராஜ் எண்ணுகிறான்.
அபிராஜின் கால்கள் மடங்கிப் போகின்றன.

இப்போது லூர்த்தம்மாவின் கண்களை
இந்தத் துவக்குகள் காவலிட்டுக் கொண்டிருக்கின்றன.
பொம்மைக் கடைகளில்
துவக்குகள் தொங்கிக் கொண்டிருக்கிறதாய் வருகிற
கனவுகள் இருவரையும் இரவுகளில் அலைத்தன.

அபிராஜ் மீள மீள பரிசோதிக்கப்பட்டான்.
லூர்த்தம்மாவின் கண்களில்
சமரிரவுகளின் துப்பாக்கிகள் குத்திக் கொண்டிருந்தன.
துவக்குகள் லூர்த்தம்மாவையும்
அபிராஜையும் துரத்திக் கொண்டேயிருக்கின்றன.

லூர்த்தம்மாவின் குருதி கசிந்து வாடுகின்ற கண்கள்
அபிராஜின் முன் அலைந்து கொண்டிருக்கின்றன.

********

நடுகல் (நாவல்) – தீபச்செல்வன்

டிஸ்கவரி புக் பேலஸ்

விலை: ரூ.180

 

 

http://tamizhini.co.in/2019/02/17/நடுகல்-இனவாதக்-காட்டாற்/

 

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/rmPPBz124WM

https://www.youtube.com/watch?v=rmPPBz124WM&fbclid=IwAR2UTV3n2LfKVX6KTk8dbV0kKLu_Dnz9b23STDdphKWaUnxZm2zO9dsZtrE

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடுகல் நாவலுக்கு பாரிஸில் இடம்பெற்ற அறிமுக விழா!

March 12, 2019

IMG_5623.jpg?resize=800%2C533

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அறிமுக விழா நேற்றுமுன்தினம் (10.03.2019) சிறப்பான முறையில் இடம்பெற்றது. கடந்த 2019 சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியான நடுகல் நாவலுக்கு சென்னையில் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

அத்துடன் அண்மையில் கிளிநொச்சியிலும் இந்த நாவலுக்கான அறிமுக விழா இடம்பெற்றது. இந்த நிலையில் பாரிஸ் நகரில் இடம்பெற்ற அறிமுக விழாவினை தடம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இளைய தலைமுறையைசேர்ந்த இலக்கிய ஆர்வலர் யாழ்நிலா நாவலை வெளியிட்டு வைக்க செயற்பாட்டாளர் நாயகன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கவிஞர் வாசுதேவன், இலக்கிய விமர்சகர் மணி நாகேஸ், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் சுதன் ராஜ் மற்றும் யாழ்நிலா ஆகியோர் நாவல் குறித்த உரைகளை ஆற்றியுள்ளனர். நிகழ்வின் நிறைவில், நாவல் குறித்த வாசகர்களின் உரையாடல்களும் இடம்பெற்றது.

இதேவேளை இந்த நாவலுக்கான அறிமுக விழா இம மாதம் 23ஆம் திகதி கனடாவிலும், 30ஆம் திகதி லண்டனிலும் இடம்பெறவுள்ளதுடன் விரைவில் சுவிஸ்லாந்து நாட்டிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/115816/

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விரிவும் ஆழமும்-நடுகல் குறித்த பார்வை-உமையாழ்

 

z588-500x500.jpg?resize=300%2C300

அறிமுகம்

ஈழ இலக்கியம் முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கவிதைகளே எப்போதும் முன்நிலைப்பட்டிருந்த ஒரு மண்ணின் மைந்தர்கள் உரைநடை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ளனர். போரும் போருக்குப் பின்னரான எம்மவரின் அவலங்களும் முதிர்ந்த இலக்கியப் பதிவுகளின் அவசியத்தை உணர்த்தி இருக்கின்றன. படைப்புகளில் மொழியாழுமையும், பண்பு முதிர்ச்சியும் ஈழத்தவரிடம் சற்றே தூக்கலாக இருப்பது தெரிகிறது. அதற்கு எம்மவர்கள் கடந்துவந்த பாதை ஒரு காரணமாக இருக்கலாம். உலகில் எங்கெல்லாம் போர் நடந்ததோ, அங்கிருந்தெல்லாம் தரமான இலக்கியப் படைப்புகள் வெளிவந்திருக்கிறது. இது ஈழ இலக்கியத்துக்கான காலம். போருக்குப் பின்னர் ஈழத்தில் இருந்து வெளியான நாவல்களின் பட்டியல் நீண்டது. நீண்ட அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது தீபச் செல்வனின் நடுகல். போரும் போருக்குப் பிந்தையதான வாழ்வும் குறித்தான கதை என முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்டது.
பிரேம் ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டு இலக்கிய ஆர்வலர்கள் கொண்டாடுகின்றனர். வெளியான மாத்திரத்தில் முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்திருக்கிறது. எப்போதும் போல புலி ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். மறுதரப்பினர் இந்தப் படைப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். பல விமர்சனக்கூட்டங்கள் உலகளவில் நிகழ்த்தப்பட்டுவிட்டன. அது ஒட்டி எழுந்த இலக்கிய பூசல்களுக்கும் அளவில்லை. இது இப்படி எல்லாம் இருக்க, இதற்கு மேலும் இது குறித்து எழுத என்ன பாக்கி இருக்கிறது எண்ணுமளவில் பேசிமுடித்துவிட்டார்கள்! இருந்தாலும், நடு இணைய சிற்றிதழின் ஆசிரியர் கோமகன் கேட்டுக் கொண்டதால், இந்தப் படைப்பு குறித்தான எனது எண்ணங்களை சுருக்கமாக எழுதிவிடலாம் எனப் பார்க்கிறேன். வெறுமனே எண்ணங்களை எழுதிவிட்டால் போதுமா? அந்த எண்ணங்களின் தோற்றுவாய் குறித்து பதிவுசெய்ய வேண்டாமா? அதனால் எனது புரிதலில் நாவல் எனும் மகத்தான இலக்கியப் படைப்பின் அடிப்படைகள் குறித்தும் எழுதிவிடலாம் எனப் பார்க்கிறேன்.

நடுகல்லின் கதை

போருக்கூடே கிளிநொச்சியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. இளையவன் வினோதன் கதைசொல்லி. மூத்தவன், வெள்ளையன் என்கிற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி வீரச்சாவடைகிறான். அவனது ஒரு புகைப்படம் கூட கையில் இல்லாத நிலையில் அந்தக் குடும்பம் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் அலைந்து அல்லலுறுகிறது. வினோதன் எப்படியாவது அண்ணாவின் ஒரு புகைப்படத்தைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என அலைகிறான். இடையில் ஆனையிறவு , யாழ்ப்பாணம் என யுத்த விபரிப்புக்கள், முகாம் வாழ்க்கை, யுத்தத்திற்குப் பின்னரான கிளிநொச்சி என பதிவுகளாக நிறைந்து கிடக்கின்றன. உண்மையைச் சொல்வதென்றால், கனகச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் இந்தப் படைப்பின் முக்கியத்துவம், போரினூடே வாழ்ந்த ஒரு சமூகம் முகங்கொடுக்க நேர்ந்த அவலங்களின் தொகுப்பை ஒரு சிறுவனின் பார்வையில் கண்ணீருடன் பதிவு செய்தல் என்கிற அளவில் மிக முக்கியமானதொன்று. அது வரவேற்கப்பட வேண்டியதும் கூட. மாற்றுக் கருத்தில்லை.

மேலும், இந்தப் படைப்பை தீபச்செல்வன் ஒரு அடர்த்தியான முதிர்ந்த மொழியில் எழுதி இருக்கிறார். Maturity of language அதன் நேரடியான அர்த்தத்தில் உச்சங் கண்டிருக்கிறது. படிமங்களின் ஊடான காட்சி விவரணைகள் மனதில் நிற்கும் படியாக இருக்கிறது. யுத்தக் காட்சிகளை விவரிக்கிற இடங்களிலும் சரி, இயற்கையை விவரிக்கிற இடங்களிலும் சரி, தீபச்செல்வன் ஒரு தேர்ந்த கவிஞனுக்கான தூய்மையுடன் எழுதி இருக்கிறார். தீபச்செல்வனால் எழுதியே அழவைத்துவிட முடிகிறது. உணர்ச்சிப் பெருக்கில் உள்ளம் வடிக்கும் இந்தக் கண்ணீர்தான் இந்தப் படைப்பை தமிழ்நாட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க உதவி இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் ஒரு இலக்கியப் படைப்பையின் மேன்மையை நிர்ணயிக்கப் போதுமானதா என்கிற ஒரே வினா இந்த எல்லாக் கூச்சல்களையும், நீர், ஈசல்களை அள்ளிச் செல்வதைப் போல கழுவி விட்டிருக்கிறது.

படைப்பின் வடிவம்

ts-eliot-getty.jpg?resize=300%2C211

தீபச்செல்வனின் இந்தப் படைப்பு ஒரு ‘நாவல்’ என சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியாயின் அது நாவலுக்கான அடிப்படைகளுடன் தன்னைப் பிரதிபலிக்கிறதா என்பதைக் குறித்து முதலில் பார்க்க வேண்டும்.

இலக்கியத்தில் வடிவப் பிரக்ஞை குறித்த விவாதம் எப்போதும் இருப்பதுதான். ஆனால் நவீன இலக்கியத்தின் பிரதான மூன்று வடிவங்களான கவிதை, சிறுகதை, நாவல் என எதற்குமே இலக்கண அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரையறைகள் என்றைக்குமே இருந்ததில்லை. இது இலக்கியத்தின் ஒரு சுவாரஸ்யமான தன்மையும் கூட. ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மெருகேறி வந்த இலக்கிய ரசனை, இந்த மூன்று வடிவங்களுக்குமான வித்தியாசங்களை விமர்சகர்களும், வாசகர்களும் உணர்ந்து கொள்ள வழி செய்திருக்கிறது. அதில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவிலும், பின்னர் இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலும் ஐரோப்பாவில் வாழ்ந்த இலக்கிய விமர்சகர்கள், இலக்கிய வடிவங்களுக்கான பொதுத்தன்மைகள் குறித்து நிறையவே எழுதி இருக்கிறார்கள். அவற்றில் இருந்து I A Richard, TS Eliotபோன்ற விமர்சகர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட இலக்கியக் கோட்பாடுகளையே இந்தக் கட்டுரையில் மூலமாக பயன்படுத்த முயல்கிறேன். மேலும் தமிழில் எஸ்ரா, ஜெயமோகன் அ.ராமசாமி போன்றவர்களும் நாவல் குறித்து நிறையவே எழுதி இருக்கிறார்கள். அந்த விடயங்களையும் சேர்த்துக் கொள்கிறேன். இது ஒரு ஆய்வுக் கட்டுரை இல்லை என்பதால், கோட்பாடுகள் குறித்தான தகவல்களுக்கு அடிக்குறிப்புகளோ வேறு தரவுல்களோ தரப்படவில்லை.

காப்பிய மரபின் நீட்சிதான் நாவல் எனக்கொண்டால், நாவல்கள் வாழ்வின் முழுமையை எழுதும் ஒரு வடிவமாக இருக்க வேண்டும். இந்த ‘முழுமை’ என்பதை வரையறுப்பதுதான் விமர்சகர்களுக்கு உள்ள சவால். உதாரணமாக, தமிழ் மரபிலக்கியத்தில் கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் பிரதான பாத்திரமான ராமனுடைய வாழ்க்கை ஆறு காண்டங்களில் எழுதப்பட்ட விரிவை, முழுமை என்கிறார்கள் விமர்சகர்கள். நவீன தமிழ் இலக்கியத்திலும் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. நான் அண்மையில் வாசித்த வற்றில் இருந்து சொல்வதென்றால் எஸ்ரா வின் நெடுங்குருதி நாவலைச் சொல்ல முடியும். நாகு எனும் பாத்திரத்தை சுற்றிப் பின்னப்பட்ட கதை, தன்னை விரிவை நோக்கி எங்கனம் நகர்த்தியது என்பதுதான் அந்நாவலின் சாதனை.

அப்படி என்றால் ஒரு மனிதவாழ்வை நொடிக்கு நொடி எழுதிவிட்டால் இந்த ‘முழுமை’ கிடைத்துவிடுமா என்றால், அதுவும் இல்லை. அப்படி, மனித வாழ்வை நொடிக்கு நொடிக்கு எழுதினால் அது தட்டையான படைப்பாகதான் இருக்கும். ஏனெனில், யதார்த்தத்தில் மனிதவாழ்வு அசுவாரஸ்யங்களால் ஆனதுதான். அதில் சுவாரஸ்யமான கணங்கள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவானதே. ஆனால் இலக்கியம் அசுவாரஸ்யங்களை பதிவு செய்வதற்கான ஒரு ஊடகம் அல்ல. ஆக ‘அழுத்தம் பெறாத’, வாழ்வின் எந்தப் பகுதியும் இலக்கியமாக முடியாது. நிஜமும் புனைவும் சந்திக்கும் புள்ளியையும் மேற்சொன்ன விடயம் தான் தீர்மானிக்கிறது.
ஒரு நாவலாசிரியனின் பணி எழுத எடுத்துக்கொண்ட விடயத்தின் மொத்த சாரத்தின் முழுமையை கண்டடைவதும், அதை அழுத்தமான அனுபவங்களால் சாத்தியப்படுத்துவதும்தான்.

அப்படி எனில் சிறுகதை என்றால் என்ன?

யதார்த்தமான படைப்புகள் எல்லாம் வாழ்க்கையில் இருந்துதான் எடுத்துக் கொள்ளப்படுவதாக இருந்தால், வாழ்வை கூறுகளாக்கி, அந்தக் கூறுகளில் சிலதை சுருங்கக் கூறல் (விரிவை அல்ல), அல்லது சில கணங்களை மாத்திரம் நிறுத்தி உணர்த்துவது தான் சிறுகதையாக இருக்க முடியும். கவிதைகளையும் இந்த சட்டகத்துக்குள் அடக்கி விட முடியும். இப்படியாக கணங்களை உறையவைக்கும் தன்மை நாவலுக்குரியதல்ல. மேற்சொன்னதைப் போல, ஒரு நாவல் விரிவை நோக்கி தன்னை நகர்த்திக் கொண்டே இருக்கும்.
ஒரு நாவலை ஒரு சிறுகதைக்குள் எழுதி விட முடியும் எனத் தோன்றினால் வாழ்பனுபவத்தின் மொத்த ‘முழுமை’ எனும் நிலை தவறவிடப்பட்டுவிடும். அப்படியான படைப்புக்கள் ஒரு ‘நாவலாக’ முடியாது.

நாவலுக்கான பண்புகள்

மரபிலக்கியத்தில் நல்படைப்புக்கான இலக்கணமாக அறம், பால், பொருள், இன்பம் என இந்த நான்கும் சொல்லப்பட்டன. ஒரு படைப்பாளி இந்த நான்கையும் கொண்டு ஒரு தரிசனத்தை கட்டமைத்து விட்டால் அது நல்படைப்பெனக் கொள்ளப்பட்டது. இத் தரிசனங்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட படிப்பினைகளாக இருந்தன. ஆனால் நவீன இலக்கியத்தில் தரிசனங்கள் ஓர் நிலைப்படுத்தப்பட்டதோ, அல்லது அறத்தினை போதிக்கும் படிப்பினைகள் மட்டுமோ அல்ல. மேலும், நவீன இலக்கியத்தில் படைப்பின் தரிசனம் வாசகர் ஈடுபாட்டுடன் தான் முழுமை பெறும். ஒரு படைப்பின் ஊடே கட்டமைக்கப்படும் இடைவெளிகளே பெரும்பாலும் அதைச் சாத்தியப்படுத்துகின்றன. கவிதைகளில் படிமங்களும், குறியீடுகளுமே அந்த இடைவெளிகளை உருவாக்கும். சிறுகதைகளில் அந்த இடைவெளிக்காக வாசகன் அதன் முடிவுவரை காத்திருக்க வேண்டும். அது கலவியில் உச்சமடைவதைப் போல நிகழ்ந்து முடிவது. ஆனால் நாவல்களைப் பொறுத்த வரை அது ஒரு பரந்தவெளி. அந்த வெளியில் நகர்கிற கதையின் ஊடே பக்கத்துக்குப் பக்கம் இடைவெளிகள் சாத்தியமாகிக் கொண்டே இருக்கும். அப்படியாக உருவாகும் அந்த வெளி, வாசக சஞ்சாரத்துக்குரியது. வாசகன் அந்த இடைவெளிகளில் உழன்று உழன்று இன்னொரு நாவலை எழுதுவான். அது இன்னுமொரு நாவலாக விரிவடையும். ஆக இந்த விரிவை ஒரு நாவலாசிரியர் தன் வாசகர்கள் உழல்வதற்கான களமாக சாத்தியமாக்குகிறார். அப்படியான சாத்தியங்களும் அமைந்த நாவல்களை வாசிக்கும் வாசக மனநிலை, மலை ஏறி இறங்குவதைப் போல, உச்சத்திற்கும் பள்ளத்திற்கும் இடையே பரவசநிலையில் அலையும். அதை Eternal orgasm (முடிவற்ற பரவசநிலை) என்கிறார்கள். அதனால்தான் நாவல்களில் காலம் முடிவற்றது என்கிறோம். இந்த விரிவிலும் முன்னர் விவாதிக்கப்பட்ட ‘முழுமை’ சாத்தியமாகிறது. ஆகவே, வாழ்வின் முழுமையை எழுதுவதென்பது, நாவலில் எழுதப்பட்ட காலத்துடன் சம்மந்தப்பட்டதொன்றல்ல. அதாவது வாழ்க்கையை பிறப்பில் இருந்து இறப்பு வரை எழுதுவதென்பது மட்டுமல்ல. மாறாக கால விரிவின் சாத்தியங்களை எழுதுவதும்தான். இந்த வாதத்திற்கு உதாரணமாக மிலான் குந்தரேயின் ‘Unbearable lightness of being’ நாவலைச் சொல்ல முடியும். அதில் முழுமை காலத்தால் வரையறுக்கப்பட்டதொன்றல்ல. மாறாக விரிவும் வாசக இடைவெளிகளும்தாம் அவற்றை சாத்தியப்படுத்திற்று.

சிறுகதைகளைப் போல ஒரு இடத்தில் தொடங்கி ஓர் இடத்தில் முடிவதல்ல நாவல். எங்கேயுமே தொடங்காமல் எங்கேயுமே முடியாமல் நீண்டு கிடப்பதுதான் நாவல். ஒரு நாவலாசிரியன் பொட்டலில் பாம்பூர்வதைப் போல கதையை விரிவை நோக்கி நகர்த்த வேண்டும். அதில் வாசகன் தனக்கான இடைவெளியில் அவனுக்கான தரிசனங்களை அவன் அடைந்துகொண்டே பயணிப்பான். வாசகர்களைப் பொறுத்து படைப்பின் தரிசனம் வேறுபடலாம். எனவேதான் ஒரு நாவலின் சாத்தியங்கள் எண்ணற்றவை என்கிறோம். அதனால்தான் நாவல்கள் இலக்கியத்தின் மகத்தான வடிவமாகக் கொள்ளப்படுகிறது.

மேலும் இந்தப் புரிதல்களைச் சிக்கலாக்க, தர்க்கமும் தத்துவமும் நாவல் கோட்பாடுகளை குறிக்கிடும் புள்ளி குறித்துப் பேசமுடியும். ஆனால் அது இந்தக் கட்டுரைக்கு அவசியமானதில்லை என்பதால், சமூக மதிப்பீடுகளையும், நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துவது குறித்து நோக்கலாம்.

காப்பிய மரபில் படைப்பாளி மைய நீரோட்டத்தில் தன்னை எப்போதும் இணைத்துக்கொண்டே முன்நகர முயல்வான். ஆனால் நவீன இலக்கியம், எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தவே நாடும். அதனால்தான் நவீன நாவல்களில் பக்கச் சார்பும், ஒருமறையான கொண்டாட்டங்களும் சாத்தியமே இல்லை. ஒன்றைப் புனிதப்படுத்துவதும், மற்றொன்றை இழிவுபடுத்துவதும் முறையான தர்க்க நியாயங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புனிதங்கள் கேள்விக்குற்படுத்தப்படாமல், மறுபக்கத்தின் குறைந்தபட்ச நியாயங்கள் கணக்கில் கொள்ளப்படாமல் நவீன இலக்கியத்தில் முழுமை சாத்தியமில்லை.

மேலும் எஸ்ரா பௌன்ட் சொல்வதைப் போல ஆழமான பார்வையும், மனவிரிவும் இல்லாதவன் நாவலாசிரியன் ஆக முடியாது. சொந்த அனுபவங்களை புனைவுகளாக முன்வைக்கும் போது புனைவும் அபுனைவும் புனையும் புள்ளி குறித்த தெளிவு ஒரு படைப்பாளனுக்கு அவசியமாகிறது. போலவே, லட்சியவாதம் புனைவில் எங்கனம் கையாளப்படுகிறது என்கிற புரிதலும் தேவையாக இருக்கிறது.
சரி, இந்த விடயங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எழுதப்படும் படைப்புகளுக்கு என்ன நடக்கும்?

portrait-of-michel-foucault.jpg?resize=6

வரலாற்றில் இருந்துதான் மனிதன் மானுடவியலை கற்றுக்கொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான தத்துவவியலாளர்கள் எல்லாம் வரலாற்றை மீள்பார்வை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக, MICHAEL FOUCALT போன்றவர்கள் வரலாற்றில் இருந்துதான் எதிர்காலத்துக்கான தத்துவயியல் வரையறுக்கப்பட முடியும் என்பதை செய்துகாட்டினார்கள். அந்த வகையில் மேலே உள்ள கேள்விக்கும் வரலாற்றில் இருந்தே ஒரு பதிலை சொல்லி விட முடியும். ஆனால் தமிழ் சூழலில் விமர்சன மரபின் அடியும் தெரியாமல் நுனியும் புரியாமல் ‘கோட்பாடு’ என்கிற ஒற்றைச் சொல்லின் ஒவ்வாமையை எல்லாவற்றின் மீதும் பொதுவான ஒவ்வாமையாக பார்க்கும் மனோபாவம் மூத்த எழுத்தாளர்களிடமும் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் கீழுள்ளவைகளையும் தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது.

நாவல் ஒன்று அடிப்படையில் கொண்டிருக்க வேண்டிய விடயங்கள் குறித்து நான் மேலே எழுதி இருக்கிறேன். அவைகள் ஒன்றும் இலக்கண விதிகள் அல்ல. மாறாக நூற்றாண்டாக மேருகேறிவந்த ரசனையின் அடிப்படைகள் என்பதை பதிவு செய்திருக்கிறேன். எப்படி எழுத வேண்டும் என்பதை ஒரு எழுத்தாளனுக்கு சொல்லிவிட முடியாதுதான். ஆனால் எப்படி எழுதக்கூடாது என்பதை கோடிட்டுக் காட்டலாம் என்பதுதான் தெளிவு. இதை, அடிப்படைகளை புரிந்துகொள்ள ஒரு முயற்சி எனபதாகவும் சொல்லலாம்.

படைப்பில் இருந்துதான் விமர்சனம் உருவாகிறது. விமர்சனங்களின் வழியே கோட்பாடுகள் கட்டமைக்கப்படுகின்றன. அவை, குறித்த படைப்பு வடிவத்தை பின்னோக்கி நகர்த்துவதைத் தடுத்து, முன்னோகிச் செல்வதற்கான வழியை படைப்பாளிகளுக்கு சமைத்துக் கொடுக்கிறது. அந்தக் கோட்பாடுகளை ஒட்டியோ, அல்லது அதை மீறியோ ஒரு படைப்பாளி முன்நகர்வான். கோட்பாடுகளை மீறுதல் என்பது, கோட்பாடுகளை மறுப்பது எனப் பொருள்படாது. அந்த மீறல் விமர்சனத்துக்குள்ளாகி, புதிய கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு, அவை மீறப்பட்டு வேறு கோட்பாடுகள் உருவாக்கி என அந்த சுழற்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். இது வெறுமனே இலக்கியத்துக்கானது மட்டும் அல்ல. மாறாக கட்டிடகலை, நாடகம், தர்க்கம், அரசியல் என சமூக விஞ்ஞானத்தின் எல்லா பரப்புக்கும் பொதுவானதுதான். ஆகவேதான் சொல்கிறோம், ஒரு படைப்பாளி எப்படி எழுத வேண்டும் என்பதை யாரும் சொல்லிவிட முடியாது. அப்படி ஒரு வரையறை இருந்தால் அது கோட்பாட்டு மீறலை சாத்தியப்படுத்தாது. ஆனால் எதை எல்லாம் எழுதக்கூடாது என்பதை வரையறுத்துவிட முடியும். அந்த வரையறையைத்தான் நாவல் கோட்பாடு என்கிறோம். இப்படியாக கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் நாவலொன்று ஆராயப்படுகிற போது அதை விமர்சனங்கள் என்கிறோம். ஆக, ஒரு இலக்கியப் படைப்பின் தரத்தை நிர்ணயிப்பது கோட்பாடுகளின் வழியே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தாம்.

இந்த நாவல் கோட்பாடுகளின் அடிப்படைகள் இல்லாது எழுதப்படும் படைப்புகள் வெளியாகும் நாளில், அவற்றுக்கு வெகுஜனங்களின் மத்தியில் கீழுள்ள இரண்டில் ஒன்று நிகழ முடியும்;

1) அந்தப் படைப்புகள் முற்றாக நிராகரிக்கப்படலாம். அந்தப் படைப்பு குறித்து யாரும் அக்கறை கொள்ளாது போகலாம். இப்படியான படைப்புகள் தான் தமிழ் பரப்பில் அதிகமாக வெளிவருகின்றன. இது ஒருவகை.

2) படைப்பு வெளியான காலத்தில் ஒருசாராரால் கொண்டாடப்பட்டு மறுசாராரால் குப்பை என கடாசி வீசப்படலாம்.
இது இரண்டும் இல்லாமல் மூன்றாவது வகை ஒன்றும் உள்ளது. அது ஜனரஞ்ஜகமான படைப்புகள் மீதான நீண்ட காலக் கவர்ச்சி. உதாரணமாக ரமணிச்சந்திரனின் நாவல்களை பதின்ம வயதினர் படிப்பதைச் சொல்லலாம்.

இதில் முதல் வகைபற்றிச் சொல்ல எதுவுமில்லை. அதனால் நாங்கள் இரண்டாவது வகை குறித்தே பார்க்க வேண்டி இருக்கிறது. அதற்கு முன்னர் பதிவுசெய்ய வேண்டிய இன்னொரு விடயமும் இருக்கிறது. அது ஒரு படைப்பின் ஆயுட்காலம் சம்பந்தமானது.
சேக்ஸ்பியர் எழுதிக்கொண்டிருந்த 16ம் நூற்றாண்டில் பல ஆங்கில படைப்பாளிகளும் நாடகங்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் எத்தனை பேரை வரலாறு ஞாபகத்தில் இருத்தி மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறது! இந்தக் கேள்வியை மையப்படுத்தியே TS Eliot தனது what is a classic என்கிற நீண்ட உரையை 1944யில் Virgil Societyயில் நிகழ்த்தினார். அது பின்னர் எழுத்திலும் பதிப்பிக்கப்பட்டது. அதில் படைப்பின் முதிர்ச்சி பற்றிப் பேசுகிற எலியட், படைப்பில் மொழியின் முதிர்ச்சி உடன், படைப்பின் பண்பு முதிர்ச்சி என்கிற ஒரு விடயத்தையும் வரையறுக்கிறார். அது வெறுமனே உடனடியான உணர்வுத் தூண்டல்களால் உந்தப்படும் படைப்புகள் கொண்டாடப்பட்டு பின்னர் வரலாற்றில் எப்படி காணாமல் போகும் என்பதை நிறுவப் போதுமாக இருக்கிறது. இந்த உடனடியான உணர்வுத் தூண்டல்தான் தற்கால ஈழ இலக்கியத்தின் மீது குவிக்கப்பட்ட ஒட்டுமொத்த தமிழ் இலக்கியப் பரப்பின் கவனத்திற்குக் காரணமாகவும் இருக்கிறது.

தீபச்செல்வனின் நடுகல் நூலுக்கும் நிகழ்ந்தது இதுதான். இந்த நூல் வெளியான போது ஒருசாரார் அதைக் கொண்டாட, மறுசாரார் அதை நிராகரிக்கின்றனர். இந்த ஏற்பும் நிராகரிப்பும் எதனடிப்படையில் என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலும் தீபச்செல்வனின் அரசியல் நிலைப்பாடுதான் இவற்றைத் தீர்மானிப்பதாகத் தெரிகிறது. அதைத் தாண்டி தீபச்செல்வனின் இந்தப் படைப்பு மீது இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட நியாயமான இலக்கிய விமர்சனங்களை அவ்வளவாக காணக்கிடைக்கவில்லை.

நடுகல் மீதான விமர்சனம்

மேலே, நாவல் கோட்பாடுகளின் அடிப்படைகளைப் பட்டியலிட்டிருக்கிறேன். அவற்றின் அடிப்படையில் நடுகல் மீதான விமர்சனத்தை பின்வரும் நான்கின் அடிப்படையில் முன்வைக்கலாம்;

1)  விரிவும் ஆழமும்

நடுகல் ஆரம்பம் முதல் இறுதிவரை கனகச்சிதமாக எழுதப்பட்டிருப்பதால், அது விரிவை நோக்கி நகரவோ, வாசகர்களுக்கான இடைவெளியை உருவாக்கவோ இல்லை. கால விரிவு சாத்தியப்படவில்லை. அதனால் ‘முழுமை’ அடையவில்லை.
2)  பக்கச் சார்பும், உயர்ந்து கேட்கும் ஆசிரியர் குரலும் நடுகல் ஒற்றைப்படையான தன்மை உடனேயே தன்னை முன்நிறுத்துகிறது. படைப்பில் ஆசிரியரின் குரலே மேலோங்கிக் கேட்கிறது. விடுதலைப் புலிகள் புனிதர்களாகவும், அரச படையினர் சாத்தான்களாவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். குறைந்தபட்சம் சாத்தான்கள் ஏன் சாத்தான்களாக அலைகின்றன என்பதுகூட தர்கரீதியாக விவாதிக்கப்படவில்லை.

03)  பாத்திரங்களின் அகவளர்ச்சியும் பண்பு முதிர்ச்சியும்.

உதாரணமாக, இந்தப் படைப்பில் குழந்தை வினோதனுக்கும் வளர்ந்த வினோதனுக்குமான மனவளர்ச்சி, பதிவு செய்யப்படவில்லை. அது இந்தப் படைப்பை ஒரு தட்டையான படைப்பாக ஆக்கிவிடுகிறது. ‘சாத்தான்கள்’ மீதான தர்க்க வினவல்கள் அந்த மனவளர்ச்சியை சாத்தியப்படுத்தி இருக்கலாம். தர்க்க வினவல்கள் சாத்தான்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல. மாறாக சாத்தான்கள் ஏன் சாத்தான்களாக அலைகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்காகவே.

4)  பாத்திரங்கள் மீதான கரிசனை இன்மையும், பாத்திரங்களின் உணர்வுப் போராட்டம் குறித்து விரிவான பார்வையை முன்வைப்பதில் ஆசிரியருக்கு உள்ள புறத்தடைகள்.

உதாரணமாக, விநோதனின் அம்மாவின் உணர்வுகள் மீதான முழுமையான விபரிப்புகள் இந்தப் படைப்பில் இல்லை. ஒரு மகனை யுத்தத்தில் இழந்த தாயின் அக உலகம் காட்டப்படவே இல்லை.
5)  ஆசிரியரின் அரசியல் நிலைப்பாடு நேசராசா போன்றவர்களது பிரச்சினைகள்தான் என்ன என்பதையாவது பேசி இருக்கலாம். ஏன் நேசராக்கள் உருவாகிறார்கள்? என்கிற ஒற்றைக் கேள்வி அதை படைப்பிற்குள்ளேயே சாத்தியப்படுத்தி இருக்கும். ஆனால் ‘துரோகி’ எனும் ஒற்றைச் சொல்லுக்குள் அந்தப் பாத்திரம் புதைக்கப்பட்டு விட்டது. ஒருநாவலுக்கும் ஒரு சிறுகதைக்குமான வித்தியாசங்களை இந்தப் புள்ளியில் உணரலாம். நினைவுறுத்துவோம்; நாவல் விரிவை நோக்கி நகர்வது.

இப்படியாக நிறைய விடயங்களைப் பட்டியலிடலாம். அவை எல்லாம் இந்தப் படைப்பின் இலக்கியத் தரத்தை தீர்மானிக்கவே. ஆனால் அதை எல்லாம் தாண்டி, ஒரு காலகட்டத்தின் நிதர்சனங்களை பதிவு செய்த படைப்பு என்கிற அடிப்படையில் இதற்கு ஒரு முக்கியமான இடம் எப்போதும் இருக்கும். ஆயினும், இப்போதைக்கு எனது கவலை எல்லாம் இப்படியான படைப்புக்களின் இன்னும் எத்தனை நாட்களுக்கு இதே வீரியத்துடன் படிக்கப்படும் என்பதாகவே இருக்கிறது.

உமையாழ் -ஐக்கிய இராச்சியம்

 

http://www.naduweb.net/?p=9415

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.