Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர் பண்பாட்டடையாளம்

Featured Replies

யாழ்ப்பாணம் தெல்லி்ப்பழை மகாஜனா கல்லூரியில் அதன் பழைய மாணவரான, பேராசிரியர் பொ.இரகுபதியால் 24.06.2005ல் ஆற்றப்பட்ட 'பாவலர் தெ.அ.துரையப்பாபி்ள்ளை நினைவுப் பேருரை - 9' நன்றியுடன் இங்கு மீள்பிரசுரமாகின்றது.)

Ponnampalam Ragupathy M.A., Ph.D

Former Professor of South Asian Studies and Head of thePostgraduate Departments, Utkal University of Culture, Orissa.

Visting Professor, Facullty of arts, University of Jaffna.

'Cultural Identity of the Tamils of Sri Lanka'

Pavalar Thuraippapillai Memorial Lecture - 9

Published by: P.Suntharalingam, Principal Mahajana College, Tellippalai, Sri Lanka.

Printed at: Bharathi Pathippakam, 430, K.K.SRoad, Jaffna. 24.06.2005

முதன்மை விருந்தினர், சிறப்பு விருந்தினர், கெளரவ விருந்தினர், மகாஜனாவின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், மற்றுமுள்ள அவையோருக்கு வந்தனங்கள். இவ்வுரையை நிகழ்த்த முன்னர் இந்த மகாஜனாக் கல்லூரியையும் இங்கு எனக்கு கற்பித்த ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் மனதிலிருத்தி வணங்கிக் கொள்கிறேன்.

இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 1983ம் ஆண்டு, இதே நினைவுப் பேருரையின் ஐந்தாவது தொடரை நிகழ்த்தும் பேறு எனக்குக் கிடைத்தது. யாழ்ப்பாணத்து ஆதிக்குடியிருப்புகள் பற்றி, 1980ஆம் ஆண்டு தொடங்கிய எனது கலாநிதிப்பட்ட ஆய்வினை முடித்திருந்த வேளை அது. அந்த ஆய்வின் முக்கிய முடிவுகள் தமிழில், மகாஜனாவில், முதன்முதல் வெளியிடப்படவேண்டும் என்று எனது ஆசிரியரும் மகாஜனாவின் அன்றைய அதிபருமான பேரறிஞர் த.சண்முகசுந்தரம் ஆசைப்பட்டார். அதன் விளைவு, 'பெருங்கற்கால யாழ்ப்பாணம்' என்ற அந்த நினைவுப் பேருரை.

இந்தக் கால் நூற்றாண்டுக் காலத்தில் உலக அரங்கிலும் உள்நாட்டிலும் பாரிய மாற்றங்கள் நடந்தேறிவிட்டன. தேசியம் பற்றிய கேள்விகளுக்கும், இனம் பற்றிய கேள்விகளுக்கும் விடை காண்பதே அன்று வரலாறு - தொல்லியல் துறைகளிடம் இருந்து எதிர்ப்பாக்கப்பட்டது. அவற்றைக் கவனித்துக் கொண்ட அதேவேளையில், அவற்றிற்கப்பால், எனதாய்வின் அடிநாதமாகவிருந்த, சூழலுக்கும் மனிதனுக்குமிடையிலான இடைத்தாக்கமென்ற பண்பாட்டுத்தளத்தை எவரும் பெரிதாகக் கருத்திற் கொண்டதாக தெரியவில்லை. சமூகம், அந்த ஆய்வில், தனக்கு முக்கியமென்று கண்டதற்கே மதிப்பளித்தது. ஈழத்தில் தமிழர் தொன்மையை நிறுவுவதும் அதற்கூடாக சிங்கள - பெளத்த தேசியவாதச் சவாலை எதிர்கொண்டு ஈழத்தமிழர் தேசியத்தின் பரிமாணங்களுக்கு வலுக்கூட்டுவதுமே சமூக வரவேற்புக்கு உரியனவாயிருந்தன.

போராட்டந் தொடர்ந்தாலும் தளங்கள் மாறிவிட்டிருப்பதையும் மாறிக்கொண்டிருப்பதையும் அனைவருமறிவர். ஈழத்தில் தமிழர் இன்றொரு கேள்வி அல்ல. தொன்மையை காட்டித்தான் தேசியத்தை நிறுவவேண்டும் என்ற நிலையும் இன்றில்லை. வரலாற்றிலும் தொல்லியலிலும் சிங்கள - பெளத்த தேசியவாதம் இன்றும் குந்தியிருக்கும் அதே மரக்கிளையில்தான் நாமும் இருக்கவேண்டுமென்றும் இல்லை. வரலாற்றையோ தொல்லியலையோ இன்று எவரும் கருத்திலெடுத்துப் படிப்பதாகவும் தெரியவில்லை. அண்மையில் காலமான டெரிடாவின் தகர்ப்புவாத (Deconstruction) சிந்தனைகளுக்குப் பின்வந்த புதிய வரலாற்றியல் (Neo Historiography) இலங்கைக்கு இன்னும் புதியதாகவே இருக்கின்றது. மாற்றங்களைக் கணக்கிலெடுக்காமல் ஆய்வுகள் போனபோக்கில் இந்தத் துறைகளை இழுத்து மூடிவிடலாம் என்பது பரவலான கருத்து. வாழ்வின் இருப்பிற்கு உதவும் வகையில் இந்தக் கற்கை நெறிகள் நெறிப்படுத்தப்படவில்லை என்பதே காரணம்.

இந்த இடத்தில், பேராசிரியர் இநதிரபாலா அண்மையில் வெளியிட்டுள்ள ' The Evolution of an Ethnic Inentity' என்ற நூலின் சமர்ப்பண வரியை குறிப்பிடவேண்டும். எனது மனதை தொட்ட வாக்கியம் அது. 'To the innocents who lost their lives as a direct consequence of misinterpretations of history'. (வரலாற்று திரிபுகளின் நேரடி விளைவாக உயிரிழந்த அப்பாவிகளக்குச் சமர்ப்பணம்.)

தேசியவாதம் உச்சத்திலிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஐரோப்பியத தேசியங்களால் அவற்றிற்கு முட்டுக்கொடுப்பதற்காக உருவான சமூகவிஞ்ஞானக் கற்கைநெறிகள் இன்று முற்றாக மறக்கப்படவேண்டியவை, மாற்றியமைக்கபட வேண்டியவை (Unthinking Social Sciences) என்பது உலகப் பொதுக் கல்விக் கருத்து.

மாறிவரும் உலகச்சூழல், கல்விக்கருத்துக்கள், சிந்தனைகள் இவற்றின் பின்னணியில் ஈழத்தமிழர் இருப்பை இயையப்பண்ணி வளம்படுத்தக்கூடிய அடையாளம் எது என்பது பற்றிய சிந்தனையையும் ஆய்வுகளையும விவாதத்தையும் தூண்டுவதே இவ்வுரையின் நோக்கம். உலக அரங்கில் கடந்த காலங்களில் அடையாளங்கள் எவ்வகையில் மாறியுள்ளன என்று கவனித்தல் இங்கு அவசியம்.

பொதுவான மொழி, மதம், வரலாறு, பொருளாதாரம் என்பனவற்றின் அடிப்படையில் தேசங்கள் கட்டுப்பட்டத் தேசிய அடையாளங்கள் (National Identity) வலுப்பெற்றிருந்த காலத்தில், அவற்றுக்குள் அடக்கிவிடமுடியாத சிக்கல்கள் எழுந்தன. பொதுவுடமை தேசங்கடந்த சித்தாந்தமாக இருப்பினும் பொதுவுடமையை பிரகடனஞ் செய்த நாடுகளும் தேசியச் சிக்கலிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. தேசியங்களை மீறிய இச்சிக்கல்களை இன அடையாளங்களால் (Ethnic Inentity) வந்த சிக்கல்கள் என்று அழைத்தார்கள். இன அடையாளம் என்பதும், இனப்பிரச்சனை என்பதும் உலகின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறு விதமாக விளங்கிக் கொள்ளப்பட்டது, கையாளப்பட்டது.

பொதுவுடைமையின் வீழ்ச்சி, தேசங்களைத் தோற்றுவித்த ஐரோப்பாவிலேயே தேசியம் 'கண்டவடிவெடுத்து' ஐரோப்பிய கூட்டமைப்பானது. தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள், தேசங்களால் கட்டுப்படுத்த முடியாத தொடர்புசாதனப் புரட்சி இவையெல்லாம் சேர்ந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏறத்தாழ தேசம் இறந்து போய்விட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களுக்கு ஒரே நேரத்தில் குடியுரிமை பெறலாமென்பது இதன் எதிரொலி. இன்று எந்த தேசத்திற்கும் உண்மையில் இறைமை இருப்பதாகத் தெரியவில்லை. 'கற்பனையில் உருவான சமூகங்கள்' ( Imagined Communities) என்பது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தேசத்தின் வீழ்ச்சியை வருமுன் காட்டிய பிரபலமான நூல்.

உடைந்தது தேசம் மட்டுமன்று, குடும்பம் என்ற நிறுவனம், மத நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இப்படிப்பல, தம் பாரம்பரிய வடிவங்களை இழந்துவிட்டன. தேசமும் இனமும் கடந்த, அவற்றுக்குள் அடக்கிவிடமுடியாத, வாழ்வியற் சிக்கல்கள் இன்றைய உலகில் வியாபித்திருக்கின்றன. வாழ்வியல் அடிப்படையில் மக்கள் அணிதிரளும் போக்கும் காணப்படுகின்றது. இதனால் இனம், மொழி, மதம் போன்ற பழைய அடையாளங்களுடன் புதிதாக எழுந்துள்ள வாழ்க்கை முறை அடையாளங்களையும் உள்ளடக்கக் கூடியதாக பண்பாட்டு அடையாளம் (Cultural Identity) என்ற கருத்தும் சொற்பிரயோகமும் இன்று பரவலாகி வருகின்றன.

பண்பாடு என்பது நாம் வழமையாக விளங்கிக்கொள்ளும் பொருளில் இன்று நோக்கப்படவில்லை. வாழ்க்கை முறை என்ற பொருளிலேயே இச்சொல் உபயோகிக்கப்படுகின்றது. வாழ்க்கை முறைகள் என்று பன்மையில் விளங்கிக் கொள்வது மேலும் சிறப்புடையது என்ற கருத்தும் உண்டு. உண்மை ஒன்றாக இருக்க வேண்டியதில்லை, பலவாகவும் இருக்கலாம். பன்மையாக இருப்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், பண்பாட்டுப் பக்குவம். இது பண்பாட்டு பன்மைத்துவம் (Cultural Pluralism) என்ற பெயரில் அரசமைப்பியல் விழுமியங்களுள் ஒன்றாக என்று முன்வைக்கப்படுகின்றது.

தாராண்மை ஜனநாயகம் எனப்படும் மேற்கத்தைய ஜனநாயகங்கள் இதுவரை சர்வசன வாக்குரிமை, பிரதிநித்துவ அரசு, பலகட்சி முறை, சொத்துரிமைச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்கள் இவற்றையே ஜனநாயகத்தின் அளவுகோலாக வைத்திருந்தார்கள். இப்பொழுது பண்பாட்டு பன்மைத்துவம், தனிமனித பண்பாட்டு உரிமை, வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆகியவற்றையும் முக்கிய அளவுகோல்களாக இணைத்துள்ளார்கள்.

பண்பாட்டை அளவிடும் அளவுகோல்களும் இன்று வேறாகிவிட்டன். ஒரு சமூகத்தி் பழம்பெருமையோ பாரம்பரியமோ மதமோ மொழியோ கலைப்படைப்புகளோ இசையோ நடனமோ பண்பாட்டின் முக்கிய அளவுகோல்கள் அல்ல. மாறாக உணவு, சுகாதாரம், கல்வி, சமூக சமத்துவம், பாற்சமத்துவம், சுற்றுச் சூழலை சிதைக்காத இயைவான வாழ்வு, வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் போன்றவையே ஒரு சமூகம் பண்பாட்டு மேன்மை உடையதா இல்லாததா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல்களாகி உள்ளன.

எது பண்பாடு என்பதும் பண்பாடு பற்றிய விழிப்புணர்வும் அரசியலில் இருந்து தனிமனித வாழ்க்கைவரை அனைத்திற்கும் ஆதாரமாகிவிட்டன. அண்மையில் பிரிட்டிஷ் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் ஆமாத்தியா சென்னுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். அபிவிருத்திக்கும் பொருளாதாரத்தி்ற்கும் சம்பந்தமில்லை, அபிவிருத்தி பண்பாட்டுடன் தொடர்புடையது என்ற கருத்தை நிறுவியதற்காகவே அவருக்கு அப்பரிசு வழங்கப்பட்டது. பண்பாடும் அபிவிருத்தியும் (Culture and Development) என்பது இன்று மேற்குலகக் கல்வி நிறுவனங்கள் முன்வைக்கும் சுலோகமாகிவிட்டது.

சில தசாப்பதங்களுக்கு முன்னர், அறுபதுகளில் ஏறத்தாழ இதே கருத்தை சீனாவில் மாவோ முன்வைத்தார். அவரது அபிவிருத்திக்கான பெரும்பாய்ச்சல் (Great Leap Forward) வெற்றியளிக்காதபோது அதற்கான காரணம் மக்களது பண்பாட்டில் உள்ள குறைபாடு என இனங்கண்டு அவர் முன்னெடுத்த இயக்கமே பண்பாட்டு புரட்ச (Cultural Revolution) என அழைக்கப்பட்து. மேற்குலகு அவரது கருத்தை சிலமாற்றங்களுடன் தனதாக்கியுள்ளது.

அடையாளங்குறித்து தமிழருக்கு குறிப்பாக ஈழத்தமிழருக்குள்ள சில பண்புகளையும் இங்கு நோக்குவது அவசியமாககின்றது. தென்னாசியாவில் மொழியை முன்நிறுத்தி மக்களையும் தேசத்தையும் இனங்கண்டதில் தமிழுக்கும் தமிழருக்கும் தொல்பாரம்பரியமுண்டு. மற்றைய மொழிகளின் சொற்பிறப்பை நோக்கினால் இது புலனாகும். உதாரணமாக, மலையாளம் மலைநாட்டிலிருந்தும், கன்னடம் கருநாட்டிலிருந்தும், தெலுங்கு திரிலிங்க தேசத்திலிருந்தும், மராத்தி மகாராஷ்டிர தேசத்திலிருந்தும், குஜராத்தி கூர்ச்சர தேசத்திலிருந்தும், ஒரியா ஒட்டர தேசத்திலிருந்தும், வங்காளி வங்க தேசத்திலிருந்தும், சிங்களம் சிங்களதேசம் அல்லது இன மக்களிலிருந்தும் தத்தம் மொழிகளின் பெயாகளைப் பெற்றுக்கொண்டன.ஆனால் தமிழரும் தமிழ்நாடும் மொழியில் இருந்து தம் அடையாளங்களைப் பெற்றதை இலக்கியச் சான்றுகள் சுட்டுகின்றன.

'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகு' போன்ற தொடாகளும் பிறநாடுகளை 'மொழி பெயர் தேயம்' எனக் குறிப்பிட்ட மரபுகளும் சங்க இலங்கியங்களின் காலத்திலிருந்து, மொழியை முன்னிலைப்படுத்தி, மொழியால் ஒன்றுபட்ட பண்பினைத் தமிழர்கள் பெற்றிருந்ததை உணாத்துகின்றன. 'உலகில் தோன்றிய முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு' என்று சொன்னால்தான் நம்மவாக்கு திருப்தி என்றெழுதிய புதுமைப்பித்தனின் கிண்டலில் ஆழந்த பொருளுண்டு. மொழி குறித்த அடையாளம் தமிழரிடையே சற்றுப் பலமானது. மொழியின் தொடர்ச்சி பேணப்பட்டதோடு பல பண்பாடுகளுக்கும் ஊடகமாகத் தமிழ் இருந்திருக்கின்றது. சமணம், பெளத்தம், பிராமணீயம், சைவம், வைஷ்ணவம், சித்தர்மரபு, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பல சமயப்பண்பாட்டு மரபுகளுக்கு மாத்திரமல்ல நாஸ்திகவாதத்திற்கும் தமிழ் பொதுவான ஊடகமானது. அவற்றால் செழுமையடைந்தது. பண்பாட்டு பன்மைத்துவம் தமிழருக்குப் புதியதன்று.

'தமிழ் கூறும் நல்லுலகு' என்ற அடையாளத்தினுள் ஈழத்தமிழர் உள்ளடங்கியிருந்தனரா என்பது ஆராயப்படவேண்டியது. இருப்பினும் இலங்கையின் முதல் எழுத்தாதாரங்களான பிராமிக் கல்வெட்டுக்களின் காலத்திலிருந்து மொழிசார்ந்த அடையாளத்தால் ஈழத்தமிழர் இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழர் பண்பாட்டின் தொன்மைபற்றி இங்கு நான் குறிப்பிடவேண்டியதில்லை. அது அறியப்பட்ட விடயம். ஆயினும் ஈழத்தமிழர் தம் அடையாளத்தை வெளிப்படுத்திய சந்தர்ப்பங்களில் அந்த அடையாளத்தின் மையக்கரு காலத்திற்கு காலம் மாறியிருப்பதைக் காணலாம்.

நாகதீவு, நாகநாடு போன்ற தொல்லின பிரதேச அடையாளங்களில் இருந்து யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் அடையாளத்தின் முனைப்பு சைவசயத்திற்கும் சாதிக்கும் மாறியதை ஈழத்து தமிழ் வரலாற்றியல் இலக்கியங்களால் அறிந்து கொள்ளலாம். கொலனித்துவ காலத்தில், கிறிஸ்தவத்திற்கெதிரான சைவம், அடையாளத்திற்குக் கருப்பொருளானது. அதுவரை சைவத்திற்கு முதலிடம் கொடுத்த நாவலரே தமிழை முன்னிறுத்தி ஈழத்தமிழர் அடையாளத்தை நிறுவவேண்டிய சந்தர்ப்பமும் பத்தொன்பதாம் நுற்றாண்டின் பிற்பாகத்தில் ஏற்பட்டது. நாவலர் இந்த அடையாளத்தை சிங்கள - பெளத்தருக்கு எதிராக முன்வைக்கவில்லை. தமிழ்நாட்டு தமிழருக்கு எதிராகவே முன்வைத்தார் என்பதை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும்.

தமிழ் நூற்பதி்ப்பு தொடர்பான முரண்பாடுகளின்போது வீராசாமி முதலியாருக்க நாவலர் எழுதிய கண்டனமொன்றிலேயே 'ஓஹோ! யாழ்ப்பாணம் ஒரு சிறு நூலையேனும் செய்திராத தேசம் என்றீரே' எனறு தொடங்கி, யாழ்பாணம் தனக்கெனச் தனிப் பாரம்பரியமுள்ள தமிழ்த் தேசம் என்ற கருத்தை நாவலர் எழுதவேண்டி வந்தது. சிங்கள - பெளத்தத்திற்கு எதிரான தமிழ் அடையாளம் இருபதாம் நுற்றாண்டு வரலாறு. ஈழத்தமிழரது தமிழ்த் தேசியமும் தமிழ் இன அடையாளமும் சிங்கள - பொளத்தத்திற்கு எதிராக தோன்றியமையும் வளர்ந்தமையும் பற்றிச் சில சிறந்த புத்தகங்கள் அண்மைக் காலங்களில் வெளிவந்துள்ளன. ஆனால் இதன் மறுபக்கம் - ஈழத்தமிழ் அடையாளம், தமிழ்நாட்டுத தமிழ் அடையாளத்திலிருந்து எபபடி வேறுபட்டதென்பது - இன்னும் சரிவர ஆராயப்படவில்லை.

புவியியற் பிரிவு, பிராமணிய மேலாதிக்மற்ற சமூகம், நிலவுடைமைக்குச் சமமான கடல்சார் வணிகப் பொருளாதார பாரம்பரியம், அது தொடர்பான சமூக, சாதி அமைப்பு, மொழிவழக்கு வேறுபாடு, ஐந்நுறு ஆண்டுகாலத் தொடாச்சியான பல்காலணித்துவப் பாரம்பரியம் இவற்றால் ஈழத்தமிழர் இந்தியத் தமிழரிலிருந்து வேறுபட்ட அடையாளமொன்றை உடையவாகள். பண்பாட்டு அடையாளம் என்ற கருத்தும் பதமும் இதை விளக்குவதற்கு வசதியானது. கடந்த சிலதசாப்த அரசியல் சூழலில் ஈழத்தமிழர் பண்பாட்டு அடையாளத்தின் இந்த தனித்துவம் மேலும் வலுவடைந்திருப்பதாகவே தோன்றுகின்றது.

ஈழத்தமிழ் பண்பாட்டு அடையாளம் இன்று எதிர்நோக்கும் பெருஞ்சவாலொன்று உண்டு. ஈழத்தமிழர் தம் தாயகம் விட்டு உலகளாவிப் பரந்திருக்கையில் எவ்விதமாக, எவ்வகையான, பண்பாட்டு அடையாளத்தைப் பேணப்போகின்றாகள் என்பதே அந்தக் கேள்வி. புலம்பெயர்ந்தோரை இழந்துதான் எமக்குப் பழக்கம். அந்தக்காலம் இலண்டனுக்குப் போனவர்களை மட்டுமல்ல கொழும்புக்கு போனவர்களையும் இழந்திருக்கிறோம். உலகப் பேரின் விளைவாக, ஒரு புறநடையாக, மலாயா, சிங்கப்பூர் போனவர்களில் ஒருபகுதி திரும்விவந்து இங்கு குறிப்பிடத்தக்க பல சமூக, பண்பாட்டு மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அங்கு தங்கி நின்றோரும் இந்தியத் தமிழருடன் இணைய விரும்பாது இலங்கையர் என்ற அடையாளத்தைப் பேணி வருவதையும் இங்க குறிப்பிட வேண்டும்.

இன்றைய காலம் வேறு. சனத்தொகையில் பெரும்பான்மையை வெளியே அனுப்பிவிட்டுச் சிறுபான்மை உள்ளுரில் இருப்பத

முன்னெப்போதும் நடவாத விடயம். முன்போலல்லாது இன்று மாறியுள்ள உலகச் சூழலில் புலம் பெயர்ந்தாரை ஏற்றுக்கொண்ட பெரும்பாலான நாடுகள் அவர்களைத தம்முடன் கரைந்து போகும்படி சொல்லவில்லை. மாறாக பண்பாட்டு அடையாளங்களைப் பேணி, நிறுவிக்கொண்டு வாழும்படி சொல்கிறார்கள். அது அந்த நாடுகளுக்குப் பெருமை என நினைக்கும் மனப்பான்மை இன்று முன்வைக்கப்படுகின்றது. நாம் முன்னர் கூறிய பண்பாட்டுப் பன்மைத்துவம் என்பது தாராண்மை ஜனநாயகத்தின் முக்கிய அலகாக அமைந்ததன் வெளிப்பாடு இது.

அவுஸ்ரேலியாவில் இது வேடிக்கையானதொரு நிகழ்வாயிற்று. புலம்பெயர்ந்தோர் கணக்கெடுப்பின்போது வீட்டில் பேசும் மொழி என்னவென்று கேட்கப்பட்டது. மாறிய சிந்தனைகளை உணராத எம்மவர், ஆங்கிலம் பேசுகின்றோம் என்றனர். இதனால் தாம் அவுஸ்ரேலியத் தேசிய ஓட்டத்தில் இணைவது சுலபம் என்று நினைத்தார்கள். புலம்பெயர்ந்த சீனரும், வியட்நாமியரும், அராபியரும் தத்தம் மொழிகளையே வீட்டில் பேசுவதாகச் சொன்னார்கள். எம்மவரது எதர்பார்ப்புகளுக்கு மாறாக, அவுஸ்ரேலிய அரசு வீட்டில் சுயமொழி பேசும் புலம்பெயர்ந்தோருக்கு அதிக உதவி அளித்தது. அவரவர் மொழியையும் பண்பாட்டையும் பேணுவதற்கு. தாமதமாக விழித்தெழுந்த எம்மவர், அடுத்த கணக்கெடுப்பில் வீட்டில் தமிழ் பேசுவதாக ஒத்துக்கொண்டார்கள்.

புலம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்த இடங்களில் தங்கள் பண்பாட்டு அடையாளத்தை நிறுவவேண்டும், பேணவேண்டும் என்பது இன்று கட்டாயமாகிவிட்டது. பண்பாட்டு வேர்களைத் தேடி தாயகத்தை அண்ணாந்து பார்த்தால், தாயகம் அர்ச்சகர்களையும் மேளதாளத்தையும் புழுக்கொடியல் பனாட்டு போன்றவற்றையும் தவிர வேறெதையும் கொடுக்க வக்கில்லாத சமூகமாகிவிட்டது. அரசியலிலும் பண உதவியிலும் இருக்கும் பாலம் பண்பாட்டில் இல்லை. மூன்றாவது தலைமுறையை இழந்து விடுவோமோ என்ற அச்சம் எல்லோரிடமும் உள்ளது. பண்பாட்டு பாலம் இல்லாவிட்டால் எதுவும் நிலைக்காது. புலம்பெயர்ந்தோரை இழந்துவிடுவது எமக்கு கட்டுப்படியான காரியமல்ல.

பரஸ்பரம் புரிந்துகொகள்ள முடியாத, புலம்பெயர்ந்தோர் பிள்ளைகளையும் ஊரிலிருப்போரையும் பற்றி எவ்வளவோ எழுதியாகிவிட்டது. புலம்பெயர்ந்தோர் இங்கு முன்னர் சொன்ன பாண்பாடு தொடர்பான கருத்துமாற்றங்களுக்குப் பழக்கப்பட்டவாகள். கருத்துமாற்றங்களைப் பார்க்க கண் திறக்கவில்லையானால் பண்பாட்டு பாலம் அமையாது. பண்பாடு என்பத நாம் கொடுப்பது மாத்திரம் அல்ல, வாங்கியும் கொள்வது. பண்பாடு ஒருமைத்தன்மையுடையது. அது சாசுவதமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கைகளுக்குப் பழக்கப்பட்டு போனவர்களுக்கு பண்பாட்டின் பன்மைத்துவமும் மாறுந்தன்மையும் சிரமமாக இருந்தாலும் அது ஒன்றும் எங்களுக்கு புதியது அல்ல. தமிழ்மொழியின் பண்பாட்டுப் பன்மைத்துவத்தை ஏற்கனவே பார்த்தோம். எமது சாதியமைப்பே பண்பாட்டு பன்மைத்துவம்தான். சாதியமைப்பின் பெருஞ்சிக்கல் அதிலுள்ள ஏற்றத்தாழ்வு. சாதியையொட்டிய வாழ்வியல் விழுமியங்கள் சிக்கல் அல்ல. இன்று இந்தியாவில் இது பெருமைக்குரிய விடயமாக முன்வைக்கப்படுகின்றது.

மகாஜனாவின் புகழ்பெற்ற பழைய மாணவரான, மறைந்த எழுத்தாளர் அளவெட்டி செல்லக்கண்டு முருகானந்தத்தின் பெயரில் உள்ள செல்லக்கண்டு, அவரது தாயின் பெயர் என்பது சிலருக்கே தெரியும். அவர் சார்ந்த சமூகத்தின் பண்பாட்டு மரபு அது. இந்த மரபை நாம் இழந்துவிட்டோம், இகழ்ந்தும் இருக்கின்றோம். ஆனால் இன்று பிரான்சில் பாற்சமத்துவம் கோரிப் போராட்டம் நடததியவர்கள் தாயின் பெயரை பிள்ளையின் முன்பெயராக வைக்கும் உரிமையை வென்றெடுத்துள்ளார்கள். இது புதிய பண்பாட்டு அலையாக எங்களுக்கு வந்துசேரும் நாள் வெகுதொலைவில் இல்லை. இயல்பாக இருந்ததை இழந்துவிட்டு புதிதாக தேடிவேண்டியிருப்பது பண்பாட்டு அடிமைத்தனம்.

ஈழத்தமிழர், கண்களை அகலத்திறந்து, புலம்பெயர்ந்த நம்சோதரருடன் செம்மையான பண்பாடடு இடைத்தாக்மொன்றை நடத்தினால், பல பண்பாட்டு விழுமியங்களை நாம் உள்வாங்கிக் கொள்வதுடன் உலகளாவிய பண்பாட்டு அடையாளமொன்றையும் உருவாக்கலாம். இது அரிய சந்தர்ப்பம். எல்லோரது செழிப்பிற்கும் அவசியம். இதில் பத்திரிகை போன்ற ஊடகங்கள் செய்யக்கூடியது நிறைய உண்டு. ஈழத்தமிழர், குறிப்பாக யாழ்ப்பாணத்த தமிழர் பண்பாட்டின் பாதுகாவலர் நாமே என்னும் பெருமையை சற்று மறக்க வேண்டியிருக்கலாம். இலங்கையின் பிற சமூகக் கட்டுமானங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விழுமியங்கள் ஏராளம்.

இந்த உலகளாவிய போக்கும் எங்களக்கு புதியதல்ல. சற்று மறந்திருக்கிறோம். கிரேக்கரும், உரோமரும் வந்ததும், முஸ்லீம்களாக முன்னர் தொடங்கிய அரபுக்கள் வந்ததும், சீனரும் தென்கிழக்காசிய நாட்டவர்களும் வந்ததும், நாங்கள் அங்கெல்லாம் போனதும், தென்னாசியாவில் பலபாகங்களுடனும் தொடர்பு கொண்டிரு்ததும், கொலனித்துவ காலத்தில் உலக வர்த்தகத்துடன் நெருக்கமாக தொடர்புபட்டிருந்ததும், சர்வதேசக் கடற்பாதைகளின் கேந்திரத்தானத்தில் இருந்ததும், எங்களது வரலாறு - தொல்லியல் சான்றுகளை தட்டிப்பார்த்தால் தெரியும்.அந்த இடைத்தாக்கங்களின் ஊடாகத்தான் எங்கள் பண்பாட்டு அடையாளம் உருவானது. யாழ்ப்பாத்து அரசர் பாராசீக மொழியில் தன்னுடன் உரையாடினார் என்கிறார் இபின்பத்துதா. கிறிஸ்தவமும் இஸ்லாமும் அவை எழுந்த ஆரம்பகாலத்தில் இருந்தே எம்முடன் நெருங்கிய தொடர்புடையவையாய் இருந்தன. எங்களது வரலாற்றின் இந்த சர்வதேச பரிமாணங்கள் இன்னும் சரியாக வெளிக்கொணரப்படவில்லை. சிங்கள - பெளத்த தேசியத்துடன் போட்டி போட்டுக்கொண்ட தொன்மையை மாத்திரம் நிறுவுவதில் முனைப்பாக இருந்ததால் சொல்லாத சேதிகள் இவை. கடந்த காலங்களில் கிடைத்த தொல்லயியற் சான்றுகளில் கவனிக்காமல் விட்டவற்றை திருப்பி ஒருக்கால் பார்த்தாலே புதிதாக பலவற்றைக் கூறலாம்.

புலம்பெயர்ந்தோர் செய்யவேண்டிய பண்பாட்டு கடமையொன்று உண்டு. கலியாணம், சாமத்தியச் சடங்கு, பிறந்தாநாள் கொண்டாட்டம், கோயில் திருவிழா - இனிப்போதும் அல்லது பிறகு பார்க்கலாம். தேவை: உணவு, சுகாதாரம், கல்வி, பாற்சமத்துவம், சூழற்பாதுகாப்பு, தொடர்பு சாதன வளர்ச்சி.

சரியான உணவு என்பது இருப்பின் அடிப்படை. உணவாலும் சுகாதாரத்தாலும் மனப்பான்மையாலும் ஒரு மக்கட் கூட்டத்தின் உடலமைப்பை ஒரு தலைமுறைக்குள்ளேயே மாற்றலாம் என்பதற்கு யப்பானியர் சிறந்த உதாரணம். உலகப்போருக்கு முன் குள்ளர்கள் எனப் பெயரெடுத்திருந்த யப்பானியர் இன்று ஐரோப்பியருடன் ஒப்பிடக்கூடிய உடலமைப்புடன் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்தோர் பிள்ளைகளின் வளர்ச்சியை உள்ளுரில் யுத்தகாலத்தில் அகப்பட்டோர், அகதிமுகாம்களில் இருப்போர் பிள்ளைகளுடன் ஒப்பிட்டால் உணவின் அருமை தெரியும். உணவாலம் மனஉந்துதலாலும் வளர்ந்த நாடுகளில் பூப்பெய்தும் வயது முன்சென்றதை அனைவரும் அவதானித்திருப்பர். சரியான உணவு கிடைக்காமைக்கு வறுமையும் உணவு தட்டுப்பாடு மாத்திரம் காரணமன்று. மனப்பான்மை என்பது இங்கு முக்கியமானது. உணவுக்காக செலவழிப்பதா அல்லது நகைநட்டு சேகரிப்பதா என்பதை தீர்மானிப்பது மனப்பான்மை. அது பண்பாட்டால் வருவது.

பண்பாட்டு நிறுவனங்களுக்குள் முதன்மையானது கல்வி நிறுவனங்கள். 'அன்னசத்திரம் ஆயிரம் கட்டலும்' என்ற பாரதி பாடல் எல்லோருக்கும் தெரியும். எழுத்தறிவித்தல் மாத்திரம் இன்று கல்வியல்ல. சர்வதேச சமூகத்துடன் போட்டிபோட வேண்டிய கல்வி எங்களுக்குத் தேவை. பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எங்கள் கல்வி நிறுவனங்கள் மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றன. எது கல்வி என்று தெரியாததால் வந்த வினை. கல்வி, இன்று அரசின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது ஆறுதல் தரும் விடயம். ஆனால் இந்த நிலையை வியாபார நிறுவனங்களே பயன்படுத்துகின்றன.

புலம்பெயர்ந்தோரது பண்பாடு சார்ந்த கல்விச் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய இயலாத நிலையில், பிறநாட்டு பல்கலைக்கழகங்கள் வணிக நோக்குடன் இறங்கி இருக்கின்றன. மகாஜனா போன்ற பள்ளிக்கூடங்களை கட்டியவர்களின் மனப்பான்மையுடன் எங்கள் பிள்ளைகளுக்கு இன்று தேவையான கல்வியை கொடுக்கும் நிறுவனங்கள் வரவேண்டும். இருக்கின்ற நிறுவனங்களையே புனரமைக்கலாம்.

ரியூட்டறிகளுக்கும் குறிப்புகளுக்கும் பழக்கப்பட்டுப்போன எங்கள் பிள்ளைகள பல்கலைக்கழகம் வந்தாலும் புத்தகத்தை தொட அஞ்சுகிறார்கள். ஆங்கிலத்திற்கு அஞ்சுகிறார்கள். கணிணிக்கும் இணையத்தி்ற்குமாவது அஞ்சாமல் இருக்கட்டும். பிறந்தநாள், சாமத்தியச் சடங்கு செலவுகளுக்கு பதிலாக கணணி வாங்கிக் கொடுங்கள். இணையத் தொடர்பை கொடுங்கள். ஆங்கிலம் மட்டுமல்ல இன்னுமுள்ள உலக மொழிகளெல்லாம் இங்கு கற்பிக்கப்படவேண்டும். அடுத்த தலைமுறையில், நெருங்கிய உறவினருடன் உரையாடுவதற்கே இந்த உலக மொழிகள் தேவைப்படும் நிலையில் இருக்கிறோம். ஒரு காலத்தில் வேறு நாடுகளிலிருந்து, ஆபிரிக்காவில் இருந்தும் கூட, மாணவர்கள் யாழ்ப்பாணம் வந்து கல்வி கற்றார்கள். சர்வதேச தரம் வாய்ந்த கல்வியால் எம்மவர் உலகெங்கும் சென்று தொழில் பார்த்தார்கள். அந்த நிலை வரவேண்டும். இன்று பண்பாட்டு காரணங்களுக்காக இந்தியாவின் சர்வதேச பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது போல புலம்பெயர்ந்த எமது பிள்ளைகள் இங்கு வந்து சர்வதேச கல்வி கற்கும் நாள் வரவேண்டும். இன்றைய போர்ச் சூழல் இதற்கு பொருத்தமற்றதாக இருக்கலாம். ஆனால் நாளை அந்நிலை வரக்கூடிய அடித்தளம் இப்பொழுதே இடப்பட வேண்டும்.

பள்ளிக்கூடங்களுக்கு ஊடாக வரவேண்டிய மற்றொரு முக்கிய பண்பாட்டு அடித்தளம் பாற்சமத்துவம். இது இல்லாத பண்பாட்டிற்கு இன்றைய உலகில் இடமில்லை. உலகளாவிய ஈழத்தமிழ் பண்பாட்டு அடையாளத்தைக் காட்டவும் முடியாது. பாற்சமத்துவம் என்பது சமவேலைவாய்ப்பு, கல்விவாய்ப்பு, சொத்து, பொருளாதார உரிமை போன்றவை மட்டுமன்று. இவை இன்று பெரிய சிக்கல்களும் அல்ல. பால் வேற்றுமை பாராட்டாத மனப்பான்மை உருவாவதே பாற்சமத்துவம். இது பண்பாட்டால் வருவது. பள்ளிக்கூடங்களில் இருந்து தொடங்கப்படவேண்டியது.

எங்கள் கல்வி நிறுவனங்களை ஆண் - பெண் கல்வி நிறுவனங்கள் என்று பாகுபடுத்தியது கொலனித்துவ மத நிறுவங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஆரம்பத்தில் பெண் கல்விக்கு வித்திடுவதற்கு அது தேவைபட்டிருந்தாலும் காலப்போக்கில், கல்வி நிறுவனங்களில் பால் பிரித்து படிப்பிபதுதான் எங்கள் பண்பாடு என்பது நாங்களே வரித்துக்கொண்ட ஒன்று. கிராமங்களில் சைவப்பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்ட பொழுது இப்பிரிப்பு இடம் பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும். பெண் கல்வி குறித்துத் திட்டவட்டமான கருத்துக்களைக் கொண்டிருந்த பாவலர் துரையப்பாபி்ள்ளை தாபித்த மகாஜனா இதற்கு சிறந்த உதாரணம். ஆனால் பட்டணத்து மிஷனறி பள்ளிக்கூடங்களுடன் போட்யிட விரும்பிய இராமநாதன் துரையும் பிற்காலத்தில் பிற்காலத்தில் இந்துக்கல்லூரியும் பிரித்தே கற்பித்தார்கள். பால் பேதம் பாராட்டாத மனப்பான்மைக்கும், பால்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும், உலகளாவ வேண்டியதொரு சமூகத்தின் தேவைகளுக்கும், கல்விக்கூடங்களிலிருக்கும் இந்தப் பாகுபாடு இன்று அவசியமற்றது, தடையாயிருப்பது. மகாஜனாவில் படித்தவர்களுக்குக் கூட்டுக்கல்வியின் அருமை தெரியும். மனம் இருந்தால் மாற்றம் இப்பொழுதே செய்யக்கூடியது. தேவை - பொதுசன அபிப்பிராயம்.

சிதம்பரத்திற்குக் காணிகள் எழுதி மடங்கள் கட்டிவிட்ட எங்கள் சமூகத்திலிருந்து இனறு எவரும் சிதம்பரம் போவதாகத் தெரியவில்லை. தமிழ்முருகனிடம் போவதும் அருகிவிட்டது. சாயிபாபா, ஐயப்பனாவதற்கு இணங்கிவிட்ட ஐயனார், ஆஞ்சநேயர், துர்க்கை, சமயபுரம் மாரியம்மன், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி - இவை, சமயத்தின் புதிய போக்குகள். இந்தியாவிற்கு யாத்திரை வரும் புலம்பெயர்ந்தோரில் ஒரு பகுதி சாயிபாபாவிடமும் மற்றவர்கள் சமயபுரம், மேல்மருவத்தூர், சபரிமலைக்கும் போகிறார்கள். இவற்றுக்கூடாக புதிய வர்க்க பேதங்கள், புதிய ஆதர்சங்கள், பாரம்பரிய நிறுவனங்களில் நம்பிக்கையின்மை போன்றவை வெளிப்பட்டாலும் இந்தச் செல்நெறிகளை அமைப்பியல் (Structuralism) ரீதியாக ஆராய்ந்தவர்கள், இவற்றிற்கூடாகச் சமூகத்தில் புரையோடிப்போன பால்சார்ந்த சிக்கலொன்றும் வெளிப்படுவதாகச் சொல்கிறார்கள்.

தொடர்புசாதனப் புரட்சி யுகத்தில் நாம் வாழ்கிறோம். வலையும் பின்னலுமாக எதையும் எவரும் கட்டுப்படுத்திவிட முயாத கால் இது. பி்ள்ளைகள் எதைப்பார்க்கிறார்கள் என்று இங்கும் அஞ்சுகிறார்கள். அங்கும் அஞ்சுகிறார்கள். எதையும் எப்படிப் பார்ப்பது என்று பெற்றோரும் பள்ளிக்கூடங்களும் சொல்லிக்கொடுக்க முடிந்தால் பண்பாட்டைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை. நீலப்படம் பார்ப்பதென்பதைவிட நீலப்படம் பார்த்துத்தான் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இளைஞர்களையும் யுவதிகளையும் வைத்திருக்கும் பண்பாட்டுவக்கிரம் கூடிய சிக்கல் தரக்கூடியது.

மகாஜனா போன்ற பண்பாடடுப் பாரம்பரியம் உள்ள கல்வி நிறுவனங்கள் எம்மிடம் மிகக்குறைவு. மகாஜனாவின் புலம்பெயாந்த பழைய மாணவர்கள் நினைத்தால், இதை மீளவும் கட்டலாம். உலகளாவிய ஈழத்தமிழர் பண்பாட்டு அடையாளத்திற்கு அடித்தளமிடும் வகையில் கட்டலாம். கல்வி தனியார் மயப்பட்டு வருங்காலத்தில், அரசின் கற்கைநெறிகளுக்கு அப்பாலும் சிலவற்றைச் செய்யக்கூடிய சுதந்திரம் அரச கல்வி நிறுவனங்களுக்கும் இன்று உண்டு. இதைப் பயன்படுத்தி சில வசதிகளையும் இன்று யாழ்பாணத்தில் கிடைக்காத ஆனால் தேவையான கற்கை நெறிகளையும் அறிமுகப்படுத்தினால் மகாஜனா அந்தக் காலத்தைவிட சிறப்பாக வர வழியுண்டு.

ஈழத்தமிழரது பண்பாட்டு அடையாள்த்தின் விரிவான பரிமாணங்களைத் தருவது இவ்வுரையின் நோக்கமல்ல. அடிக்குறிப்புகளிட்ட ஆய்வுக்கட்டுரையாகவும் இதைத் தயாரிக்கவில்லை. பண்பாட்டு அடையாளம் பற்றிய விழிப்புணர்வை இது தருமானால் அது இவ்வுரையின் பயன். இன்று, தேசத்தை வைத்துக்கொண்டோ, அல்லது தேசங்கடந்தோ, பண்பாட்டு அடையாளத்தின் அடிப்படைடயில், உலகந்தழுவிய சமூகத்தை எந்த மக்கட்குழுவினரும் கட்டலாம். பொருத்தமான பண்பாட்டு அடிப்படைகளுக்கூடாக அதைச் செழிப்புள்ளதாகவும் ஆக்கலாம். புதிய உலகின் சிந்தாந்தச் சூழலும் தொடர்புசாதனப் புரட்சியும் இதற்கு வாய்பானவை. உண்மையில் தேவைப்படுவது ஒன்றுதான் - அது மனப்பான்மை மாற்றம்

ஆக்கம் பற்றிய உங்கள் கருத்து

http://appaal-tamil.com/index.php?option=c...mp;limitstart=2

நன்றி-அப்பால்தமிழ்.கொம்

என்ன ஈழவன் பெரிய பந்தியா இருக்கு..வாசிக்க கஸ்டமா இருக்கு :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.