Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவம்

Featured Replies

  • தொடங்கியவர்

தேசிகர்: இனி, பகுத்தறிவுடைய மனிதன் நல்லது இது கெட்டது இது என்றும் இதைச் செய்யலாம் இதைச் செய்யக் கூடாது என்றும் அறிந்து செயலாற்றுபவன் என்று சொன்னோமல்லவா. எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி அறிவதில்லை. ஒருவன் உண்டு என்பதை இன்னொருவன் இல்லை என்பான். ஒருவன் நல்லது என்பதை இன்னொருவன் கெட்டது என்பான். ஒருவனுக்குப் பிடித்தது இன்னொருவனுக்குப் பிடிப்பதில்லை. ஒவ்வொருவனும் தன்னுடைய அறிவையே சரியானதாகவும் உயர்ந்த நிலையிலுள்ளதாகவும் நினைக்கிறான். ஆகவே தன்னுடைய எண்ணமும் முடிவுமே சிறந்தவை என்று எண்ணுகிறான். பலவேறு வகைப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் தாம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றும் தாம் நினைப்பதே சரி என்றும் செயல்பட முற்பட்டால் எவ்வாறு உண்மையைக் கடைப்பிடிப்பார்கள். ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதில் முனைந்துள்ள நூற்றுக்கணக்கான வேலை யாட்கள் தாம் தாம் நினைத்தபடி வேலை செய்தால் கட்டிடம் எப்படி உருவாகும். ஒரு சைன்யத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள் தாம் தாம் நினைத்தபடி முன்னேறிப் போர் செய்வது என்றால் அந்தப் போர் என்னவாகும். அந்தந்தக் காரியத்தை முடிக்க அதற்கு ஏற்படுத்தப்பட்ட தலைவர்கள் ஒரு திட்டம் வகுத்து அதன்படி செயலாற்றுவார்கள். அதில் ஈடுபட்ட மக்கள் அவன் ஆணையின்படி நடப்பார்கள் அவர்கள் எடுத்த காரியமும் உருப்படும்.

  • Replies 479
  • Views 68.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கடவுள் வழிபாடு

கருணாநிதியாகிய கடவுள், புறத்திலே திருக்கோயிலுள்ளிருக்கும் இலிங்கம் முதலிய திருமேனியும், தமது மெய்யடியாருடைய திருவேடமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்திலே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், இங்குள்ளவர் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம்.

கடவுள் அங்கிங்கெளாதபடி எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரம் தயிரில் நெய்போல விளங்கி நிற்பர். மற்றையிடங்களெல்லாவற்றினும் பாலில் நெய் போல விளங்காது நிற்பர்.

கடவுளுக்குச் செய்யும் வழிபாடுகளாவன, அவரை மனசினாலே தியானித்தலும், வாக்கினாலே துதித்தலும், கைகளினாலே பூசித்தலும், கால்களினாலே வலம் வருதலும், தலையினாலே வணங்குதலும், செவிகளினாலே அவருடைய புகழைக் கேட்டலும், கண்களினாலே அவருடைய திருமேனியைத் தரிசித்தலுமாம்.

அன்பில்லாத வழிபாடு உயிரில்லாத உடம்பு போலும். அன்பாவது தன்னால் விரும்பப்பட்டவரிடத்தே தோன்றும் உள்ளநெகிழ்ச்சி. கடவுலிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்களாவன, அவருடைய உண்மையை நினைக்குந் தோறும் கேட்குந்தோறும் காணுந்தோறும் தன்வசமழிதலும், மயிர்கால்தோறுந் திவலை உண்டாகப் புளகங்கொள்ளலும், ஆனந்தவருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரைதடுமாறலும், அவரால் விரும்பப்படுபவைகளைச் செய்தலும், வெறுக்கப்படுபவைகளைச் செய்யாதொழிதலும், அவருடைய மெய்யடியார்களைக் காணும் பொழுது கூசாது வணங்குதலும், பிறவுமாம்.

கடவுளால் விரும்பப் படுபவைகளாவன இரக்கம், வாய்மை, பொறை, அடக்கம், கொடை, தாய், தந்தை முதலிய பெரியோரை வழிபடுதல் முதலிய நன்மைகளாம். கடவுளால் வெறுக்கப்படுபவைகளாவன கொலை, புலால் உணல், களவு, கள்ளுணல், வியபிசாரம், பொய், செய்ந்நன்றி மறத்தல் முதலிய தீமைகளாம்.

ஆன்மாக்களாகிய நாம், பிறர்வயமுடையவர்களும், சிற்றறிவு சிறுதொழிலுடையவர்களுமாய், இருத்தலினாலே, நன்மை தீமைகளை உள்ளபடி அறியவும், தீமைகளை ஒழித்து நன்மைகளையே செய்யவும் வல்லே மல்லேம். ஆதலால், தம்வயமுடையவரும் முற்றறிவுமுற்றுத் தொழிலுடையவரும் ஆகிய கடவுளை வணங்கி, அவருடைய திருவருள் வசப்பட்டு ஒழுகுமேயானால், நாம் தீமைகளினின்று நீங்கி நன்மைகளைச் செய்து தம்மை வழிபட்டு உய்யும்படி அவர் நமக்கு அருள் செய்வார்.

  • தொடங்கியவர்

தேசிகர்: ஒரு தேசத்தையோ நாட்டையோ ஆளுபவர்களும், அந்நாட்டு மக்களை ஒழுங்கு படுத்துவதற்கு வேண்டிய சட்ட திட்டங்களை அமைத்துக் கொள்ளுவார்கள். சட்ட திட்டங்கள் இல்லாவிட்டால் அராஜகம் தோன்றிவிடும். ஒவ்வொருவரும் அவரவருக்குத் தோன்றியதை தத்தம் மனம் போன போக்கில் செய்யத் துணிவார்கள். ஆகவே உலகியலில் வைத்துப் பார்த்தால் ஒவ்வொரு துறையிலும் சிறந்த அறிவும் அனுபவமும் உள்ள அறிவாளிகள் சட்ட திட்டங்களை வகுத்து அந்த வரம்புக்குள் மக்கள் ஒழுகும்படி செய்து அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வார்கள். அதே போல் உலகத்திலுள்ள கோடானு கோடி சீவராசிகளைப் படைத்து அவையனைத்தும் மேன் மேலும் இன்பத்தையடைய வேண்டுமென்ற எண்ணங்கொண்ட இறைவன் அவற்றிற்குரிய சட்ட திட்டங்களை வகுத்திருக்க வேண்டுமல்லவா? அவை யாவை என்பதை ஆராய்வாம்.

முதல் நூல்

உலகத்திலுள்ள உயிர்கள் பலதிறப்பட்டன. அவற்றின் அறிவும் பல திறப்பட்டது என்று சொன்னோமல்லவா. ஆகவே அவற்றிற்கேற்ப இறைவன் அருளிச் செய்த முதல் நூலும் பொதுத்தன்மையுடையது. அது வடமொழியிலுள்ள இருக்கு, யசர், சாம, அதர்வண வேதங்களாகும். இனி அவறால் அருளிச் செய்யப்பட்ட சிறப்பு நூல்கள் வடமொழியிலுள்ள காமிகம் முதல் வாதுளம்ஈறாக உள்ள சிவாகமங்கள். முன்னையவை பொதுவென்றும் பின்னையவை சிறப்பு என்றும் ஆன்றோரால் போற்றப்பட்டு வருகின்றன. வேதாகமங்களை உலகச் சிருட்டி காலத்திலேயே இறைவன் அருளிச் செய்தான். அவைகளையின்றி உலகத்துள்ள உயிர்கள் உய்வது எப்படி. அவையனைத்தும் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு இன்றியமையாத சட்டம் ஒன்று அவசியம் என்று சொன்னோமல்லவா. ஆகவே உயிர்களிடத்துள்ள பெருங்கருணையினால் அருளிச் செய்யப்பட்டவையே அவ்வேதாகமங்கள். வேதம் சூத்திரம் போலவும் சிவாகமங்கள் பாடியமும் போல்வன. இவற்றை 'ஆப்த' வாக்கியம் என்றும் ஆன்றோர் கூறுவர். மனிதன் தனக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்த காலத்து தனக்கு வேண்டியவர்கள் அல்லது நண்பர்களிடம் தன்னுடைய இன்னலைத் தெரிவித்து அவர் சொல்லும் உபாயத்தை அல்லது யோசனையைக் கேட்டு அதன்படி நடந்து தன் குறையைப் போக்கிக் கொள்ளுவானல்லவா. அது போல் உயிர்களனைத்தும் தங்கள் பிறவிப்பிணியாகிய பெரிய துன்பக் கடலைக் கடத்தற்கு உயிர்களின் ஒப்பற்ற நண்பனாகிய இறைவன் அவர்களைக் கடைத்தேற்றுவதற்கு பெருங்கருணையினால் அருளிச் செய்த நூல்களுக்கு 'ஆப்த வாக்கியம்' என்றும் பெயர். ஆப்தன் என்றால் நண்பன். இறைவனை விட உயிர்களுக்குச் சிறந்த நண்பன் வேறுண்டோ?

  • தொடங்கியவர்

ஈசுரத்துரோகம்

கடவுளை நிந்தித்தலும், கடவுளை வழிபடும் முறைமையைப் போதிக்குங் குருவை நிந்தித்தலும், கடவுளுடைய மெய்யடியாரை நிந்தித்தலும், கடவுள் அருளிச் செய்த வேதாகமங்களை நிந்தித்தலும், இந்நிந்தைகளைக் கேட்டுக் கொண்டிருத்தலும், தேவாலயத்துக்கும் மடாலயத்துக்கும் உரிய திரவியங்களை அபகரித்தலும், தேவாலயம் திருமடம் திருக்குளம் திருநந்தனவனம் முதலியவைகளுக்கு அழிவு செய்தலும், ஈசுரத்துரோகங்களாகிய அதி பாதகங்களாம். மடாலயமாவது கடவுளை வழிபடுதற்கும், கடவுளுடைய அன்பர்களுக்கு அன்னங் கொழுத்தற்கும் உரிய தானமாம்.

ஸ்நான முதலிய நியமங்களில்லாமல் திருக்கோயிலினுள்ளே புகுதலும், திருக்கோயிலிலும் திருக்குளத்திலும் திருநந்தவனத்திலும் திருக்கோயில் வீதியிலும் மலசலங் கழித்தலும், எச்சிலுமிழ்தலும், திருக்குளத்திலே செளசஞ் செய்தலும், தந்தசுத்தி செய்தலும், அசுசியொடு ஸ்நானஞ் செய்தலும் ஈசுரத்துரோகங்களாம்.

குடிகளுக்குச் செய்யும் தீமையிலும் மகாராசாவுக்குச் செய்யுந் தீமை மிகக் கொடியது; அதுபோலவே ஆன்மாக்களுக்குச் செய்யுந் துரோகத்தினும் கடவுளுக்குச் செய்யுந் துரோகம் மிகக் கொடியது. குடிகளுக்குச் செய்த தீமை இராசாவினாலே பொறுக்கப்படினும் பொறுக்கப்படும். இராசாவுக்குச் செய்த தீமையோ பொறுக்கப்படமாட்டாது. அதுபோலவே ஆன்மாக்களுக்குச் செய்த துரோகம் கடவுளாலே பொறுக்கப்படினும் பொறுக்கப்படும். கடவுளுக்குச் செய்த துரோகமோ பொறுக்கப் படமாட்டாது. எங்கும் வியாபகமாய் இருந்து எல்லாமறியும் இயற்கை இல்லாதவனாதலால், இராசாவுடைய தண்டத்துக்குத் தப்பினும் தப்பலாம்; எங்கும் வியாபகமாய் இருந்து எல்லாமறியும் இயற்கையை உடையவராதலால், கடவுளுடைய தண்டத்துக்கோ தப்ப முடியாது. ஈசுரத்துரோகம் எவ்வகைப்பட்ட பிராயச்சித்தத்தாலுந் தீராது.

ஈசுரத் துரோகிகளுக்கு, நரகத்திலே இயம தூதர்கள் இரத்தவெள்ளுஞ் சிந்தும்படி இருப்புமுளைகளை நெருப்பிலே காய்ச்சி, தலையிலும், கண்களிலும், செவிகளிலும், நாசிகளிலும், வாயிலும், மார்பிலும் அறைந்து, உடம்பு முழுதும் தாமிர முதலிய உலோகங்களை உருக்கிய நீரைச் சொரிவார்கள். மயிர்க்காறோறும் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளை அழுத்துவார்கள். அவயவங்கடோறும் இருப்பாப்புக்களை மாட்டுவார்கள். பின்பு நெய் நிறைந்த செப்புக் கடாரத்திலே விழுத்திக் காய்ச்சுவார்கள். ஈசுரத்துரோகிகள் அந்தச் செப்புக் கடார நெய்யிலே சந்திரசூரியர் உள்ளவரையும் குப்புறக் கிடந்து வருந்துவார்கள்.

இப்படி நரகத்துன்பத்தை அனுபவித்தபின், பூமியிலே மலத்திற்கிருமி முதலியவைகளாய்ப் பிறந்திறந்து உழன்று, பின்பு மனிதப்பிறப்பை எடுத்து, வலி, குட்டம், கபம், நீரிழிவு, பெருவியாதி, மூலவியாதி முதலிய மிகக் கொடிய நோய்களினாலும், பசியினாலும் வருந்துவார்கள்.

  • தொடங்கியவர்

மந்தரன்: சுவாமி வேதம் சூத்திரம் போன்றது என்றும் சிவாகமங்கள் பாஷ்யம் போன்றது என்றும் சொன்னீர்கள். அதன் பொருள் விளங்கவில்லையே. அதைச் சற்று விளக்க வேண்டுகிறேன்.

மந்தன்: சுவாமி வேதாகமங்கள் இறைவனாற் செய்யப்பட்டவை என்பதற்கு பிரமாணம் உண்டோ.

தீவிரன்: சுவாமி வேதாகமங்கள் உலக மக்களுக்காகச் செய்யப்பட்டவை என்றால் உலக மக்கள் பூராவும் அவற்றைப் பயில வேண்டுமல்லவா? உலகத்திலுள்ள எல்லாப் பிரதேசத்திலும் அவை பயின்று வரவேண்டுமல்லவா.

தீவிரதரன்: சுவாமி வேதாகமங்களைப் பயின்று அவற்றின்படி நடந்து உய்தி பெறுதற்கு மக்களுக்கு அறிவும் ஆற்றலும் வாழ்நாளும் போதுமா.

ஆத்மநாததேசிகர்: குழந்தைகளே நன்று கேட்டீர்கள் கூறுவோம் கேளுங்கள். சிறந்த நுண்ணிய பொருட்களை தன்னகத்தே வைத்து மிகச் சருங்கிய சொற்களால் உணர்த்துவது சூத்திரம் எனப்படும். நுண்ணறிவு இல்லாதவர்களும் நுண்ணறிவு இருந்தும் நல்ல ஆசிரியரிடத்தே பயிலாதவர்களும் சூத்திரங்களின் உண்மைப் பொருளை உணராது தத்தம் அறிவுற்கேற்ப மாறுபட்ட பொருளை உண்மையெனக் கருதவும் கூடும். எனவே வேதத்தைத் தங்களுக்குப் பிரமாண நூலாகக் கொண்டிருந்தும் பல சமயங்கள் இந்தப் பாரத தேசத்தில் நிலவி வருவதைக்காணலாம். அவை ஒன்றற்கொன்று கருத்தில் மாறுபட்டவை. அவை தங்கள் கருத்துக்கு வேதத்திலிருந்தே பிரமாணம் காட்டும். ஆகவே வேதங்களாகிய சூத்திரத்தை மட்டும் பயிலுபவர்கள் உண்மைப் பொருளை நிச்சயித்து அறியமாட்டார்கள்.

  • தொடங்கியவர்

அருள்

அருளாவது இவை தொடர்புடையவை என்றும் இவை தொடர்பில்லாதவை என்றும் நோக்காது இயல்பாகவே எல்லாவுயிர்கண் மேலுஞ் செல்வதாகிய கருணை, அருளெனினும், கருணையெனினும், இரக்கமெனினும் பொருந்தும். உலகவின்பத்துக்குக் காரணம் பொருளே யாதல்போலத் தருமத்துக்குக் காரணம் அருளேயாம். அருளென்னும் குணம் யாவரிடத்திருக்குமோ, அவரிடத்தே பழி பாவங்களெல்லாம் சிறிதும் அணுகாது நீங்கிவிடும். வாய்மையாகிய தகழியிலே பொறுமையாகிய திரியை இட்டு தவமாகிய நெய்யை நிறையப் பெய்து, அருளாகிய விளக்கை ஏற்றினால், அஞ்ஞானமாகிய பேரிருள் ஓட்டெடுப்ப, பதியாகிய மெய்ப்பொருள் வெளிப்படும். மரணபரியந்தம் தன்னுயிரை வருந்திப் பாதுகாத்தல் போலப் பிறவுயிர்களையும் வருந்திப் பாதுகாப்பவன் யாவன், அவனே உயிர்களுக்கெல்லாம் இதஞ்செய்பவனாகி, தான் எந்நாளும் இன்பமே வடிவமாக இருப்பன்.

உயிர்களெல்லாம் கடவுளுக்குத் திருமேனிகள்; அவ்வுயிர்களுக்கு நிலைக்களமாகிய உடம்புகளெல்லாம் கடவுளுக்கு ஆலயங்கள். ஆதலால் கடவுளிடத்து மெய்யன்புடையவர்கள் அக்கடவுளோடு உயிர்களுக்கு உளதாகிய தொடர்பு பற்றி அவ்வுயிர்களிடத்தும் அன்புடையவர்களேயாவர்கள். உயிர்களிடத்து அன்பில்லாத பொழுது கடவுளிடத்து அன்புடையவர்கள் போல் ஒழுகுதல் நாடகமாத்திரையேயன்றி உண்மையன்றென்பது தெள்ளிதிற்றுணியப்படும். பிறவுயிர்களிடத்து இரக்கமில்லாதவர் தம்முயிருக்கு உறுதி செய்து கொள்ளமாட்டார். ஆதலால், அவர் பிறவுயிர்களிடத்து மாத்திரமா தம்முயிரிடத்தும் இரக்கமில்லாதவரே யாவர். அவர் தமக்குத்தாமே வஞ்சகர்.

  • தொடங்கியவர்

shiv.jpg

  • தொடங்கியவர்

ஆத்மநாததேசிகர்:இனி சிவாகமங்கள் பாஷ்யம் என்று சொன்னோமல்லவா, வேதத்தைப் பயின்று அதினின்றும் பெற்ற அறிவைத் தெளிவுபடுத்தி பொருள் நிச்சயத்தை உணர்த்துவன சிவாகமங்கள். ஆகையால் சிவாகமங்கள் சித்தாந்தம் எனவும் வழங்கப்படும். சிவாகமங்கள் உணராதார் வேதத்துக்குப் பொருள்கொள்ளுதலும் உண்மைப் பொருளை அறிவதும் பிறவிக்குருடர்கள் கூடி யானை யைக்கண்ட கதை போல் தான். ஒவ்வொரு குருடனும் யானையின் ஒவ்வொரு பாகத்தைப் பார்த்து அதுவே யானை என்று உணர்தல் போலும். அவர்கள் அனைவரும் கூறிய அடையாளங்கள் எல்லாவற்றையும் உள்ளடகியதாய் அவற்றிற்கு அப்பாற்பட்டதாய் உள்ள யானையின் இலக்கணத்தைக்கண்ணுடையான் ஒருவனே சந்தேகமில்லாமலும் பூரணமாகவும் அறிய வல்லவன். அப்படிப்பட்ட ஐயந்திரிபற்ற காட்சியைக் கொடுக்க வல்லது ஆகம அறிவு. வேதத்தை மாத்திரம் பிரமாணமாகக் கொண்டு ஆகமங்களைப் பிரமாணமன்று என்று உதாசிப்பவன் உண்மைப் பொருளை நிச்சயித்து அறியமாட்டாதானென்பதாயிற்று. உண்மைப் பொருளை அறிய ஏதுவாயிருத்தலின் சிவாகமங்கள் பாடியம் அல்லது விரிவுரை அல்லது விளக்கவுரை போன்றவை.

இனி வேதாகமங்கள் இறைவனாற் செய்யயப்பட்டவை என்பதற்குப் பிராமணம் உண்டோ என்பதை விளக்குவாம். அவை இன்ன காலத்தில் இன்னாராற் செய்யப்பட்டவை என்று யாரும் அறிவிக்கக் கேட்டதில்லை. உலகத்திலேயுள்ள மிகமிகப் பழமையான நூல்களுக்கும் முன்னே தோன்றியவை எனப் பேசுகின்றனர். "வேத நூல் சைவ நூல் என்றிரண்டே நூல்கள்...ஆதி நூல நாதியமலன் தரு நூலிரண்டும்" என வரும் சிவஞான சித்தியார் திருவிருத்தத்தில் ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள் இவை இரண்டும் அனாதி அமலன் தரு நூல் என்று அருளிச் செய்திருக்கிறார்கள். ஸ்ரீ மாதவச்சிவஞான சுவாமிகளும் தமது சிவஞான பாஷ்யத்தில் இவ்வாறு அருளிச் செய்திருக்கிறார்கள். "மகாசங்கார முடிவின்கண் உலகங்களை மீளப் படைத்தற் பொருட்டு பரமான்மாவாகிய பரமசிவத்தினுடைய பராசக்தி குடிலையை நோக்கியவழி, வேதாகமங்கள் குடிலையினின்றும் நாத வடிவாயும், அதன் பின்விந்து வடிவாயும், அதன் பின் அக்கர வடிவாயும், முறையே தோன்றின. பின் அவற்றைச் சொற்றொடர்ப்படுத்துச் செய்யுளாக்கிப் பிறர்க்கு அருளிச் செய்தற் பொருட்டுப் பரமசிவன் ஈசானம் முதலிய பஞ்சப்பிரம மந்திரங்களாகிய சத்திகளே திருமுடி முதலிய அவயவங்களாகச் சகளநிட்களத்திருமேனி கொண்டருளிச் சதாசிவ மூர்த்தியாய் நின்று, தற்புருட முதலிய நான்கு திரு முகங்களால் வேதங்களைத் தோற்றுவித்து மேற்கண்ணதாகிய ஈசான முதலிய ஐந்து திருமுகங்களானும் காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களையுந் தோற்றுவித்து, வேதங்களை அநந்த தேவர் வழியானே பிரமனுக்கு அருளிச் செய்து, சிவாகமங்களை பிரதி சங்கிதை முறையானே பிரணவர் முதலிய பதின்மரும் மகாருத்திரர் முதலிய பதினெண்மருமாகிய இருபத்தெண்மருக்கும் சிவ பேதம் உருத்திர பேதம் எனப்பகுத்து ஒரோவொன்று ஒவ்வொருவருக்கு அருளிச் செய்து..." என்று அருளிச் செய்து கொண்டு போகிறார்கள்.

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

ஆத்மநாததேசிகர்: " இதன் விரிவெல்லாம் ஆகமங்களிற் கண்டு கொள்க" என்றும் ஆணை தருகிறார்கள். இன்றும் தமிழ் மறைகளிலே, "மூவா நான்மறை முதல்வா போற்றி", "ஆகமமாகி நின்றண்ணிப்பான் தாழ் வாழ்க", "மகேந்திர மதனிற் சொன்ன ஆகமம் தோற்று வித்தருளியும்", "சந்தோகசாமமோதும் வாயானை" "சாமவேதம் ஓதினீர்", "சாகை ஆயிரம் உடையார் சாமமும் ஓதுவதுடையார்", "தொகுத்தவன் அருமறை அங்கம் அங்கம்", "விரித்தவன் அருமறை", "தந்தம் சமயத்தகுதி நில்லாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி எத்தண்டமும் செயும்" "அஞ்சாரமேனி அரிவையோர்பாகத்தன் அஞ்சோடிருபத்து மூன்றுள ஆகமம்" "எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் உண்மையாவது பூசனை" "வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல். ஓதும் பொதுவும் சிறப்பு மென்றுன்னுக" என்பவையாகும். இன்னும் வேதசிவாகமங்கள் இறைவன் வாக்கென்று கூறும் பிரமாணங்கள் சைவத் திருமுறைகளில் எண்ணிறந்தவை உள்ளன. விரிக்கிற் பெருகும். நீங்கள் திருமுறைகளைப்படிக்கும்போது அவைகளை உய்த்துணர்ந்து கொள்ளவேண்டும். இதுகாறும் கூறியவற்றால் வேதாகமங்கள் உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை என்றும் அவற்றில் விதித்தவற்றைச் செய்தலும் விலக்கியவற்றை ஒழிதலும் தலையாய கடன் என்பதும் பெறப்பட்டது. உலகியலில் பிறசமயத்தார்களும் தங்கள் சமயக் கோட்பாடுகளைக் கூறும் நூல்களை வேதம் என்றே அழைக்கிறபடியால் வேதம் என்ற சொல்லுக்கு வைத்திருக்கும் பெருமை தெரியலாம். உதாரணமாக கிறிஸ்தவர் பைபிளை விவிலிய வேதம் என்றும் சமய பாடங்களை வேத பாடம் என்றும் கூறுவர்

ஆத்மநாததேசிகர்: இனி வேதாகமங்கள் உலகம் பூராவிலும் ஏன் பயிலப்படவில்லை என்பதை ஆராயலாம். வேதங்கள் உலக மக்கள் அனைவரும் உய்தி பெறுதற் பொருட்டு இறைவனால் அருளிச் செய்யப்படனவாயினும் நம் பாரத தேசத்தில் மட்டுமே அவை பயிலப்பட்டு வருகின்றன. பிற தேசங்களில் பயிலப்படவில்லை. அதற்குக் காரணம் பிற தேசத்து மக்கள் வேத நெறிக்கு விலக்கான புறப்புறச் சமயங்களின் நின்று ஒழுகுவதேயாம். அதன் காரணம் முற்பிறவிகளில் செய்த வினைப்பயனேயாம். நம் பாரத தேசத்திலும் எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வேத நெறிக்குப் புறம்பான சமயங்களை அனுசரித்து ஒழுகி வருகிறார்கள். எனினும் பிற தேசங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் நம் பாரத தேசத்தில்தான் வேதங்கள் பயிலப்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். பாரத தேசம் கர்மபூமி யென்று சொல்லப்படும் மூர்த்தி தீர்த்தம் தலம் என்னும் விசேடங்களையுடையது. பாரத தேசம் அதிலும் தென்னாடு மிகப் பெருமை வாய்ந்தது. ஆகவே மக்கள் தங்கள் வினைப்பயன்களை நுகர்ந்து கர்மங்களைத் தொலைத்து ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு இறைவனடி சேர்வதற்குச் சிறந்த பூமி பாரத தேசமே. அதில் பிறப்பதற்கே முற்பிறவிகளில் பிறப்போர்க்கு அப் புண்யம் இல்லாமையால் அங்கு வேதங்களும் பயிலப்படவில்லை யென்றும் பாரத தேசத்தில் பிறந்தவர்களுக்கு அப்புண்யம் இருப்பதால் இங்கு பயிலப்பட்டு வருகின்றன என்றும் உணர்க. பிற நாட்டவரிலும் சில புண்யம் மிகுந்த பெரியோர்கள் வேதங்களைப் பயின்றிருக்கிறார்கள். தங்கள் மொழிகளிலும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவற்றின் பெருமைகளை எடுத்துரைத்திருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

கொலை

கொலையாவது உயிர்களை அவைகளுக்கு இடமாகிய உடம்பினின்றும் பிரியச் செய்தல். உயிர்களுக்கு இதஞ் செய்தலே புண்ணியமும் அகிதஞ் செய்தலே பாவமுமாம். கொலையைப் பார்க்கினும் அகிதம் வேறில்லாமையால், கொலையே பாவங்களெல்லாவற்றிற்குந் தலையாயுள்ளது. கொல்லாமையைப் பார்க்கினும் இதம் வேறில்லாமையால், கொல்லாமையே புண்ணியங்களெலாவற்றிற்குந் தலையாயுள்ளது.

கொலையில்லாத ஞானமே ஞானம், கொலையில்லாத தவமே தவம், கொலையில்லாத தருமமே தருமம், கொலையில்லாத செல்வமே செல்வம். ஆதலினாலே, சோர்வினாலும் கொலைப்பாவம் சிறிதும் விளையாவண்ணம் எப்பொழுதும் அருளோடுகூடிச் சாவதானமாக இருத்தல் வேண்டும். கொலை செய்ய ஏவினவரும், கொலை செய்யக் கண்டும் அதனைத் தடுக்காதவரும், ஒருவன் செய்த கொலையை மறைத்து அவனை இராசாவுடைய தண்டத்துக்குத் தப்புவித்தவரும், கொலை செய்தவரோடு பழகினவரும் கொலைப் பாவிகளே யாவர்.

கொலைப் பாவிகள் எண்ணில்லாத காலம் நரகத் துன்பத்தை அனுபவித்து, பின்பு பூமியிலே பிறந்து, ஈளை, காசம், குட்டம், பெருவியாதி, நெருப்புச்சுரம், கைப்பிளவை முதலிய நோய்களினால் வருந்தி உழல்வார்கள்.

பிறவுயிரைக் கொல்லுதல் போலத் தன்னுயிரைக் கொல்லுதலும் பெருங்கொடும் பாவம். கடவுளை வழிபட்டு உயிர்க்கு உறுதி செய்துகொள்ளும் பொருட்டுக் கிடைத்த கருவி சரீரம். ஆதலால் எவ்வகைப்பட்ட வியாதிகளினாலே வருத்தமுற்றாலும், சரீரத்தைப் பாதுகாத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். கோபத்தினாலும் வியாதி முதலிய பீடைகளினாலும் தம்முயிரை வலிய விட்டவர் கும்பிபாகம் முதலிய நரகங்களிலே அறுபதினாயிரம் வருடங்கிடந்து வருந்தி, பின்பு சக்கிரவாளகிரிக்குப் புறத்தில் உள்ள இருட்பூமியிலே எண்ணில்லாத காலங் கிடப்பார்.

  • தொடங்கியவர்

தேசிகர்: சமீபத்தில் டில்லியில் நடந்த 26வது சர்வதேச பழங்கலாசார மகாநாட்டில் மேற்கு ஜெர்மனி தேசத்துப் பேராசிரியர் "பால்தீம்" என்பவர் சொல்லியிருப்பதைக் கேளுங்கள். 'வேதங்கள் இந்தியாவின் நாகரீகத்துக்கும் கருத்துக்களுக்கும் அடிப்படையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சரித்திர காலத்தையும் அதற்கு முன்னுள்ள காலத்தையும் இணைக்கும் ஒரு இணைப்பாகும். வேத வாக்கியமும் அதன் சமயமும் உயர்ந்தவை. அவை, இந்தியாவுக்கு மட்டுமல்ல மனித வர்க்கத்துக்கே பெருமை வாய்ந்ததும் மதிப்புள்ளதுமான, சிறந்த கிரந்தங்கள். ஏனெனில் மனிதன் உலக வாழ்க்கையிலிருந்து உய்தி பெறுவதற்கான முயற்சியை அவைகளில் காண்கிறான். வேதத்துக்கு வியாக்கியானம் செய்வது மிகக் கடினம் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஏனென்றால் அதில் பிரயோகம் செய்யப்பட்டிருக்கும் மொழி மிகப் பழமையான தாகையால் அதைப் பொருள் பண்ணும் முறையில் பண்டிதர்களுக்குள் உடன்பாடு இல்லை. இருந்த போதிலும் இந்தக் காரியத்தில் மிகுந்த வெற்றி கைகூடியிருக்கிறது. அது மேலும் முயற்சிகள் தேவை யென்பதையும் பயன்படக் கூடியது என்பதையும் குறிக்கிறது. "Prof: Paul Thieme (West Germany) said that the Vedas not only held the key to Indian culture and thought but were a link between pre-history and history. Prof: Thieme considered both vedic poetry and religion as great. The Vedas were noble documents of great value and pride not only to India but to the entire humanity as in them one saw man attempting to raise himself above earthly existency. It was conceded that interpreting Vedas was very difficult as the language employed was archaic and there was no agreement among scholars about the method of interpretation. Not with standing this considerable success has been achieved in this task, which indicated that further attempts were necessary and worth while". (The Indian Express Dated 7-1-1964)

  • தொடங்கியவர்

ஆத்மநாததேசிகர்: விண்ணுலகிலுள்ள தேவர்களும் மற்றவர்களும் பாரத தேசத்திலே பிறந்துதான் இறைவனை வழிபட்டு வீட்டின்பத்தை எய்த முடியும். இந்திரன் முதலிய தேவர்களும் முனிவர்களும் இப்பாரத தேசத்தில் இறைவனை வழிபட்ட வரலாறுகள் புராணங்களில் காணலாம். "முத்தேவராதி புலவோர்கள் விண்ணில் முழுதின்பகற்றி அருளின் பித்தேறி நின்ற முனைவன் பதங்கள் பெருகன்பினோடு பணியும் அத்தேயமான உயர் பாரதம்" என்ற ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பெருமானுடைய வாக்கு கவனிக்கத்தக்கது. திருமாலும் பிரமனும் பூமியிற்போய்ப் பிறவாமல் நம் வாழ் நாளை வீணாக்குகின்றோமே சிவன் நம்மை உய்விக்கின்ற கருணைத் திறம் இருந்தவாறு என்னே என்று ஆசைப்படுகிறார்களாம். இவ்வாறு மணிவாசகர் அருளிச் செய்கின்றார். "புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி, சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கித் திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம், அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்". எனவே, கர்மபூமியாகியாகிய பரதக் கண்டத்தில், மூர்த்தி, தீர்த்தம், தலம் என்னும் விசேடங்கள் நிரம்பிய நாட்டில் வேதங்கள் பயிலப்பட்டு வருதல் இயல்பென்றும் அந்த நாட்டில் பிறத்தல் முற்பிறவிகளில் செய்த புன்ணியத்தின் பயன் என்றும் புறச்சமயங்களை விட்டு வேத நெறி தழைத்தோங்கும் மார்க்கத்தில் சென்றடைதல் அதனினும் சிறந்த புண்ணியப் பயன் என்றும் பெறப்பட்டது. இக்கருத்தையே அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள் "நரர் பயில் தேயந்தன்னில் நான் மறைபயிலா நாட்டில் விரவுதல் ஒழிந்துதோன்றல் மிக்க புண்ணியத்தால் ஆகும்" என்று சிவஞான சித்தியாரில் அருளிச் செய்திருக்கின்றார்கள். திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில் "நெஞ்சே! நீ திருவலஞ்சுழிவாணனை வழிபடுவதற்கு என்ன புண்ணியம் செய்தாய்" என்று கேட்கிறார்கள் ("என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங் கடல் வையத்து" என்ற திருப்பதிகம்

  • தொடங்கியவர்

kailshsunrise.jpg

திருக்கைலாயமலை

தேசிகர்: இனி எல்லோரும் எளிதில் வேதங்களைப் பயில முடியுமா என்பதைக் கவனிப்போம். இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும். யசுர் வேதம் நூற்றொரு சாகையும், சாம வேதம் ஆயிரஞ் சாகையும் அதர்வ வேதம் ஒன்பது சாகையும் உடையன. வேதங்கள் ஓதி உணர்வதற்கு வேதத்துக்கு அங்கமாகிய சிட்சை வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி என்பன ஆறையும் இன்றியமையாது பயில வேண்டும். வேதத்தின் உண்மைப் பொருளை நிச்சயித்து உணர்வதற்கு காமிகம் முதலிய இருபத்தெட்டு சிவாகமங்களையும் பயில வேண்டும். வேதத்தின் உண்மைப் பொருளை நிச்சயித்து உணர்வதற்கு காமிகம் முதலிய இருபத்தெட்டு சிவாகமங்களையும் பயில வேண்டும் என்று சொன்னோம். ஒவ்வொன்றும் ஒரு கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக் கோடி கிரந்தங்கள் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே வடமொழியிலுள்ள இந்த வேத சிவாகமங்களை ஓதி உணர்வதற்கு எல்லோராலும் இயலாது. அதற்குரிய வாய்ப்பும் கிடையாது. தவமுடையவர்களான சிலருக்குத்தான் இயலும். நம் தமிழ் நாடு செய்த தவப்பயனாக அவதரித்த சைவ சமயாசாரியர்களான ஸ்ரீ ஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் ஸ்ரீ நாவுக்காரசு சுவாமிகள், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் இவர்கள் தமிழில் அருளிச் செய்த தேவார திருவாசகங்கள். வேதக் கருத்துக்களை உள்ளடக்கியவை யென்றும், வேத சாரம் என்றும் ஆன்றோர்களால் போற்றப்பட்டு தமிழ் மறை என்றும் பேசப்பட்டு வருகின்றன. இத்தமிழ் மறைகளை சிரத்தையோடும் பயபக்தியோடும் ஓதி உய்த்துணரக்கடவீர்கள். தமிழ் மறைகளில் சொல்லப்படும் சாத்திரக் கருத்துக்களை உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்படி ஸ்ரீ மெய்கண்ட தேவர் முதலிய சந்தானாச்சாரியர்கள் சிவஞான போதம் முதலிய பதினான்கு சித்தாந்த சாத்திரங்களில் அருளிச் செய்திருக்கின்றார்கள். வேதத்தை ஒரு பசுவுக்கும், சிவாகமங்களை பசுவினின்றும் கிடைக்கும் பாலுக்கும், தேவார திருவாசகங்களை பாலின் சாரமாகிய நெய்க்கும், சாத்திரக் கருத்தைத் தெரிவிக்கும் சிவஞான போதத்தை நெய்யின் சுவைக்கும் ஒப்பிடலாம். இந்தக் கருத்தைத் தெரிவிக்கும் ஒரு பழம் பாடலைக் கேளுங்கள்.

  • தொடங்கியவர்

"வேதம்பசு அதன்பால் மெய்யாகமம் நால்வர்

ஓது தமிழ் அதனின் உள்ளுறும் நெய் - போதமிகு

நெய்யின் உறுசுவையாம் நீள் வெண்ணை மெய்கண்டான்

செய்த தமிழ் நூலின் திறம்"

post-89-1177588552_thumb.jpg

Edited by வலைஞன்

  • தொடங்கியவர்

கள்ளுண்ணல்

கள்ளு, அவின், கஞ்சா முதலியவை அறிவை மயக்கும் பொருள்கள். அவைகளை உண்பவர் அறிவையும் நல்லொழுக்கத்தையும் இழந்து, தீயொழுக்கத்தையே அடைவர். கள்ளுண்பவர் தமக்குச் சினேகர் செய்த நன்மையையும் தாங்கற்ற நூற் பொருளையுஞ் சிந்தியார். தம்மைத் தொடர்ந்த பழி பாவங்களையும் அவைகளாலே தமக்கு விளைந்த துன்பத்தையும் அறியார். இவ்வியல் புடையவர் தம்முயிர்க்கு உறுதி செய்துகொள்வது எப்படி! கள்ளுண்பவருக்குக் களிப்பும் மயக்கமுமே இயற்கையாதலால், அவரிடத்துச் சண்டையும், கொலையும், களவும், பொய்யும், வியபிசாரமுமே குடிபுகும்.

கள்ளுண்டவருக்கு மனமொழி மெய்கள் தம் வசப்படாமையால் நாணம் அழியும்; அழியவே, அறிவுடையோர் அவரைக் காணுதற்கும் அஞ்சித் தூரத்தே நீங்குவர். யாது செய்யினும் பொறுக்கும் மாதாவும், கள்ளுண்டு களித்தலைப் பொறுக்க மாட்டாள். ஆனபின், குற்றம் யாதும் பொறாத அறிவுடையோரெதிரே கள்ளுண்டு களித்தல் யாதாய் முடியும்? விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளினாலே அறிவு மயக்கத்தைக் கொள்ளுவோர் எவ்வளவு அறிவீனர்! கள்ளுண்டவர் அநேகர் தஞ்செல்வமெல்லாம் இழந்து, வறியவராகித் தெருத்தோறும் அலைந்து திரிந்து, பின்னரும் பொருள் யாசித்துக் கள்ளுண்டு மயங்கி விழுந்து கிடந்து, பலராலும் பழிக்கப்படுதலைக் கண்டுங் கண்டும், கள்ளுண்டல் எவ்வளவோரறியாமை!

கள்ளுண்டவரும், கள்ளுண்ணாதவரைக் கள்ளுண்பித்தவரும், கள் விற்றவரும், கள்ளுண்டவரோடு பழகினவரும், அளவில்லாத காலம் நரகத்திலே கிடந்து வருந்துவர்கள். இமயதூதர்கள் அவர்களுடைய நாக்கை வாளினாலே சேதித்து, உலோகங்கள் உருக்கிய நீரை அவர்கள் வாயிலே வார்ப்பார்கள். அவர்கள் நரகத் துன்பத்தை அநுபவித்த பின்பு பூமியிலே மலப்புழுவாய்ப் பிறந்து மலத்தை உண்டு இறந்து, மனிதராய்ப் பிறந்து, சொத்தைப் பற்குத்து நோயினாலும், பைத்தியத்தினாலும், வயிற்று நோயினாலும் வருந்துவார்கள்.

அநேகர் வாம மதத்திலே புகுந்து, பிறரையும் தம் வசப்படுத்திக் கெடுத்து, அவரோடு கள்ளுண்டு களிக்கின்றார்கள். வாம மதத்தை அநுட்டித்தவர்கள் பிசாச பதத்தை அடைவார்கள் என்பது நூற்றுணிவு.

  • தொடங்கியவர்

ஆத்மநாததேசிகர்: ஆகவே வடமொழிப் பயிற்சியும் வேதாகமப்பயிற்சியும் குறைந்து வரும் இக்காலத்தில் தோத்திர நூல்களாகிய தேவார திருவாசகங்களையும், அவற்றோடு வைத்து எண்ணப்படும் திருமுறைகளையும், சிவஞான போத முதலிய பதினான்கு சித்தாந்த சாத்திர நூல்களையும் பயில வேண்டியது மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆனால் இவைகளே போதாவோ. வேதசிவாகமங்கள் எதற்கு என்று கேட்பாரும் உளர். நெய்யும் அதன் சுவையும் போதாதோ பசுவும் அதன் பாலும் எக்கேடு கெட்டுப் போனாலென்ன என்று கேட்பதைப் போலத்தான் இருக்கிறது இந்தக் கேள்வி. சமயசாரியர்களும் சந்தானாச்சாரியர்களும் வேத சிவாகமங்களைப் போற்றியிருப்பதை திருமுறைகளிலிருந்தும் சிவஞான சித்தியார் முதலிய நூல்களிலிருந்தும் பல வாக்கியங்கள் எடுத்துக் காட்டப்பட்டதின் மூலம் அறியலாம். இவற்றின் விரிவை ஸ்ரீ பாஷ்யத்தில் காணலாம். இதுகாறும் கூறியவாற்றால் வடமொழியிலுள்ள இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்றும் நான்கு வேதங்களும்; காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களும், இறைவனால் உயிர்கள் பொருட்டு அருளிச் செய்யப்பட்ட முதல் நூல்கள் என்றும். அவற்றின் கருத்துக்களை தோத்திர ரூபமாக சமயாச்சாரியர்கள் திருமுறைகளாகவும் சந்தானாச்சாரியர்கள் சாத்திர ரூபமாக சிவஞான போதம் முதலிய அருள் நூல்களாகவும் அருளிச் செய்தார்கள். இனி இச் சாத்திரங்களிற் சொல்லப்படும் சமய உண்மைகள் என்ன என்பதைக் கவனிப்போம்

  • தொடங்கியவர்

ஸ்நானம்

19.தந்த சுத்திக்குப்பின் யாது செய்யத்தக்கது?

ஸ்நானஞ் செய்யத்தக்கது.

20.ஸ்நானஞ் செய்யத்தக்க நீர் நிலைகள் யாவை?

ஆறு, ஓடை, குளம், கேணி, மடம் முதலியவையாம்.

21.ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?

கௌபீனத்தைக் கசக்கிப் பிழிந்து தரித்து, இரண்டு கைகளையும் கழுவி, வேட்டியைத் தோய்த்து அலம்பித் தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி, செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.

22.எவ்வளவினதாக ஆகிய சலத்தில் இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?

தொட்பூழ் அளவினதாகிய சலத்திலே இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.

23.எந்த திக்கு முகமாக நின்று ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?

நதியிலே ஆனால் அதற்கு எதிர்முகமாக நின்றும், குளம் முதலியவற்றிலே ஆனால் வடக்கு முகமாகவேனும் நின்றும் ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.

24.சலத்திலே எப்படி முழுகல் வேண்டும்?

ஆசமனஞ் செய்து, இரண்டு காதுகளையும் இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும் இரண்டு கட்டு விரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக் கொண்டு சிவபெருமானைச் சிந்தித்து முழுகல் வேண்டும்.

25.இப்படி முழுகின உடனே யாது செய்தல் வேண்டும்?

ஆசமனஞ் செய்து கொண்டு, கரையில் ஏறி, வேட்டியைப் பிழிந்து தலையில் ஈரத்தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பில் உள்ள ஈரத்தைத் துவட்டிக் குடுமியை முடித்து, ஈரக் கௌபீனத்தைக் களைந்து, உலர்ந்த கௌபீனத்தைத் தரித்து, இர்ண்டு கைகளையுங் கழுவி, உலர்ந்த வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, ஈர வஸ்திரத்தையும் கௌபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடவேண்டும்.

26.சிரஸ்நானஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?

கண்ட ஸ்நானமேனும், கடிஸ்நானமேனுஞ் செய்தல் வேண்டும்.

27.கண்ட ஸ்நானம் ஆவது யாது?

சலத்தினாலே கழுத்தின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம் படிம்படி துடைப்பது.

28.கடி ஸ்நானமாவது யாது?

சலத்தினாலே அரையின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம் படும்படி துடைப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சைவப் பணி சிறப்பாக உள்ளது

  • தொடங்கியவர்

நன்றி கறுப்பி அவர்களே

shiva_nataraja.jpg

amarnath1.jpg

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

அநுட்டானம்

29.ஸ்நானத்துக்குப்பின் யாது செய்தல் வேண்டும்?

சுத்த சலம் கொண்டு அநுட்டனம் பண்ணி பஞ்சாக்ஷர செபஞ் செய்து தோத்திரம் பண்ணல் வேண்டும்.

போசனம்

30.அநுட்டானத்திற்குப்பின் யாது செய்யத்தக்கது?

போசனஞ் செய்யத்தக்கது.

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

34.எவ்வகைப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்?

கோமயத்தினாலே மெழுகப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்.

35.போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?

வாழையிலை, பலாவிலை, புன்னையிலை, பாதிரியிலை, தாமரையிலை என்பனவாகும்

36. போசன பாத்திரங்களை யாது செய்தபின் போடல் வேண்டும்?

சலத்தினாலே நன்றாகக் கழுவியபின் போடல் வேண்டும்.

37.வாழையிலையை எப்படிப் போடல் வேண்டும்?

தண்டு உரியாமல் அதனுடைய அடி வலப்பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும்.

38. இலை போட்ட பின் யாது செய்ய வேண்டும்?

அதிலே சலத்தினாலே பரோஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவற்றைப் படைத்தல் வேண்டும்.

39. போசனம் பண்ணும் போது எப்படி இருத்தல் வேண்டும்?

வீண்வார்த்தை பேசாமலும், சிரியாமலும், தூங்காமலும், அசையாமலும், கால்களை மடக்கிக் கொண்டு செவ்வையாக இருத்தல் வேண்டும்.

  • தொடங்கியவர்

40. போசனம் எப்படிப் பண்ணல் வேண்டும்?

அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறகப் பிரித்துப் பருப்பு, நெய்யோடு பிசைந்து சிந்தாமல் புசித்தல் வேண்டும். அதன்பின் சிறிது முன்போல் பிரித்து, புளிக்கறியோடு ஆயினும் இரசத்தோடு ஆயினும், பிசைந்து, புசித்தல் வேண்டு. அதன்பின் மோரோடு பிசைந்து, புசித்தல் வேண்டும். கறிகளை இடயிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும். இலையிலும் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனும், தண்ணீரேனும் பானம் பருகல் வேண்டும்.

41. போசனம் பண்ணும் போது உமியத்தக்கதை எங்கே உமிழ்தல் வேண்டும்?

இலையின் முற்பக்கத்தை, மிதத்தி, அதன் கீழ் உமிழ்தல் வேண்டும்.

42. போசனம் பண்ணும் போது மனத்தை எதிலே இருத்துதல் வேண்டும்?

சிவபெருமானுடைய திருவடியிலே இருத்துதல் வேண்டும்.

43. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து வீட்டுக்குப் புறத்தே போய்க் கைகளைக் கழுவி, சலம் வாயிற் கொண்டு, பதினாறு தரம் இடப்புறத்திலே கொப்புளித்து, வாயையும் கைகளையும் கால்களையும் கழுவுதல் வேண்டும்.

44. உச்சிட்டத்தை எப்படி அகற்றல் வேண்டும்?

இலையை எடுத்து எறிந்துவிட்டு, கை கழுவிக்கொண்டு, உச்சிட்டத்தானத்தைக் கோமயஞ் சேர்ந்த சலந்தெளித்து மெழுகிப் புறத்தே போய்க் கழுவிவிட்டுப் பின்னும் அந்தத்தானத்தில் சலந்தெளித்து விடல் வேண்டும்.

45. உச்சிட்டத்தானத்தை எப்படி மெழுகுதல் வேண்டும்?

இடையிலே கையைஎடாமலும், முன்பு தீண்டிய இடத்தை பின்பு தீண்டாமலும், புள்ளி இல்லாமலும் மெழுகுதல் வேண்டும்.

  • தொடங்கியவர்

படித்தல்

46. போசனத்திற்குப் பின் யாது செய்யத்தக்கது?

உபாத்தியாயர் இடத்தே கல்வி கற்கத்தக்கது.

இரவிற் செய்யுங் கருமம்

47. சூரியன் அஸ்தமிக்கும் போது யாது செய்தல் வேண்டும்?

மலசல விமோசனஞ் செய்து, சௌசமும் ஆசமனமும் பண்ணி, விபூதி தரித்து, சிவபெருமானை வணங்கித் தோத்திரஞ் செய்து கொண்டு, விளக்கிலே பாடங்களைப் படித்தல் வேண்டும்.

48. அதன்பின் யாது செய்தல் வேண்டும்?

போசனஞ் செய்து, நூறு தரம் உலாவி, சிறிது நேரஞ் சென்றபின், சயனித்தல் வேண்டும்.

49. எப்படிச் சயனித்தல் வேண்டும்?

கிழகே ஆயினும், மேற்கே ஆயினும் தலைவைட்த், சிவபெருமானைச் சிந்த்தித்துக் கொண்டு வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும். வடகே தலை வைத்தல் ஆகாது.

50. எப்போது எழுந்து விடல் வேண்டும்?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே எழுந்துவிடல் வேண்டும்.

  • தொடங்கியவர்

6. சிவாலய தரிசன இயல்

madurai1.jpg

1. சிவபெருமானை வழிபடுதற்கு உரிய முக்கிய ஸ்தானம் யாது?

திருக்கோயில்.

2. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?

ஸ்தானஞ் செய்து தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து, விபூதி இட்டுக்கொண்டு, போதல் வேண்டும்.

3. திருக்கோயிலுக்குச் சமீபித்த உடனே யாது செய்தல் வேண்டும்?

தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்து, சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு, உள்ளே போதல் வேண்டும்.

4. திருக்கோயிலின் உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?

பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

5. கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும், மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நம்ஸ்காரம் பண்ணல் வேண்டும்?

வடக்கே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

6. தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

கிழக்கே தலை வைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

7. எந்த திக்குக்களிலே கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது?

கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது.

8. ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

9. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?

தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

10. பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?

பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

11. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?

தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

12. நமஸ்காரம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம், இருதரம் பண்ணுதல் குற்றம்.

13. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?

பிரதக்ஷணம்(வலம் வருதல்) பண்ணல் வேண்டும்.

14. எப்படி பிரதக்ஷணம் பன்னல் வேண்டும்?

இரண்டு கைகளையும் சிரசிலேனும் மார்பிலேனுங் குவித்து சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு, கால்களை மெல்ல வைத்துப் பிரதக்ஷணம் பண்ணல் வேண்டும்.

15. பிரதக்ஷணம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும்.

16. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?

முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி, தக்ஷ?ணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளைத் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

17. விக்னேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?

முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து, கும்பிடல் வேண்டும்.

18. சந்நிதானங்களிலே தரிசனம் பண்ணும் பொழுதெல்லாம் யாது செய்தல் வேண்டும்?

இரண்டு கைகளையுஞ் சிரசில் ஆயினும் மார்ப்பில் ஆயினும் குவித்துக்கொண்டு, மனங் கசித்துருகத் தோத்திரஞ் செய்தல் வேண்டும்.

  • தொடங்கியவர்

19. எந்தக் காலத்தில் சுவாமி தரிசனஞ் செய்யல் ஆகாது?

அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடக்கும் பொழுது தரிசனஞ் செய்யல் ஆகாது.

20. அபிஷேக காலத்தில் பிரதக்ஷ?ண நமஸ்காரங்களும் பண்ணல் ஆகாதா?

அப்பொழுது உட்பிரகாரத்திலே பண்ணல் ஆகாது.

21. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

சண்டேசுரர் சந்நிதியை அடைந்து கும்பிட்டு, மூன்று முறை கை கொட்டி, சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்தல் வேண்டும்.

22. சண்டேசுர தரிசனத்தின் பின் யாது செய்தல் வேண்டும்?

சிவசந்நிதானத்தை அடைந்து, நமஸ்காரம் பண்ணி, இருந்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச்செபித்துக் கொண்டு, எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.

23. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?

சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திர கிரகணம், சிவராத்திரி, நவராத்திரி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

24. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?

ஆசாரம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டு இருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை உண்டல், சிரசிலே வஸ்திரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே உத்திரீயம் இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் (பூசித்துக் கழித்த பொருள்) கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசல், சிரித்தல், சண்டை இடுதல் விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குங் குறுக்கே போதல் முதலியவைகளாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.