Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகேந்திரனின் செல்லுலாய்டு பெண்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகேந்திரனின் செல்லுலாய்டு பெண்கள்!

23.jpg

முகேஷ் சுப்ரமணியம்

உலகின் வேகத்துக்குப் படைப்பைக் கொடுப்பவன் நல்ல கலைஞன் அல்ல. தன்னுடைய படைப்பின் வேகத்துக்கு, அதன் நேரம் மற்றும் வெளிக்குள் பார்வையாளனை நடமாட விட வேண்டும் (எந்த வழிகாட்டலுமின்றி). அபூர்வமாய் சிலருக்கு மட்டுமே கைகூடும். இந்த தேர்ச்சியும், அதன் வழியே பனிக்குள் மெளனித்திருக்கும் இயற்கை போன்ற உலகப் பார்வையும் தான் ஒரு படைப்பாளனை மாஸ்டர் என்ற இடத்தில் வைத்து கொண்டாட வைக்கிறது.

உண்மையில் மகேந்திரனின் மறைவு, மற்ற ஆளுமைகளின் மறைவைப் போல அதிர்ச்சியாகவோ படக்கென உதிரும் கண்ணீராகவோ அல்லாமல் அவரது திரைப்படங்களின் இறுதி காட்சிகள் போல வாழ்வின் ஓர் அங்கமாக, நீண்ட பெருமூச்சுடனும் அமைதியுடனுமே மனதை ஆட்கொள்கிறது. உதிரிப்பூக்களில் விஜயன் சாவுக்கு முன் பார்க்கும் ஓடும் ஆற்றைப் போல.

மகேந்திரன் காட்டிய பெண்களின் பன்முகத்தன்மை தமிழுக்குப் புதிது. அவர் தீவிரமாய் இயங்கிய காலத்தில், தமிழில் வந்த படங்களில் பெண்களுக்கான இடம் எவ்வளவு என்பதை சற்று நோக்கினாலே தெரியும்.

நகரத்துக்குச் சென்று வந்த அல்லது நகரத்திலிருக்கும் ஹீரோயின் - பார்ட்டி, ஸ்டார் ஹோட்டல்களில் நடனமென வாழ்ந்துகொண்டிருக்க, கதாநாயகன் அவளுக்குப் பெண் என்பவள் யாரென உணர்த்துவார். திருமணத்துக்குப் பின் தடாலடியாய், மீரா சீயக்காய்தூள் விளம்பரத்தில் வருவது போல உடனே மாறிவிடுவார்கள். அதே சமயம், சீரியஸான இயக்குநர்கள் தங்கள் படங்களில் இந்த மசாலா சினிமாக்களிலிருந்து விலகி பெண்களைப் பொம்மை போல் அல்லாமல் முதன்மை பாத்திரங்களிலும் அர்த்தமுள்ள தொனியிலும் மேம்படுத்தினார்கள்.

மகேந்திரனின் சமகாலத்தவர்களாகிய பாலசந்தர், பாலு மகேந்திரா, பாரதிராஜா, பாக்யராஜ் போன்றோர் பெண்களுக்கான சினிமாவில் முக்கியமாகப் பேச வேண்டியவர்கள். பாலசந்தர் மற்றும் பாரதிராஜாவின் பெண்கள் அப்படியே இயக்குநர்களின் பெண் வடிவமாகவே அவர்களது ஆளுமையிலிருந்து வந்திருப்பார்கள். பாலு மகேந்திரா, அவரது தனிப்பட்ட வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய பெண்களின் பாதிப்பிலிருந்து உருவாக்கியிருப்பார். அவரது ஐரோப்பிய தாக்கங்கள் மீதான விமர்சனங்கள் ஓரளவுக்கு ஏற்கும்படி இருப்பினும், அவற்றைக் கடந்து பார்த்தால் அழியாத கோலங்கள், மறுபடியும் முக்கியமான படைப்புகள். பாக்யராஜ் படங்களில் கலவையான தன்மைகள் இருப்பினும், ஓரளவுக்கு மேல் முதன்மைக் கதாபாத்திரங்களை விட அவரது துணைக் கதாபத்திரங்களின் வழியே சாத்தியப்படுத்தி இருப்பார். குறிப்பாக அவரது கிராமத்து சினிமாக்களில்...

மகேந்திரன் எவ்வாறு வேறுபடுகிறார்?

23a.jpg

அனைத்துப் பிரச்சினைகளையும் பெண்களின் வழியாகவே பார்ப்பது, ஒரு பெண்ணின் முகம் எப்படி அதை ரியாக்‌ஷனாக வெளிப்படுத்துகிறது என்பதே மகேந்திரனின் திரைமொழியாக இருக்கிறது. நண்டு திரைப்படத்தில் வடக்கிலிருந்து வரும் கதாநாயகன் தான் தங்கியிருக்கும் மேன்ஷனிலுள்ள பெண்ணின் பிறந்த நாளுக்காகப் பாடும் ‘கைஹ்ச கஹூன் குச் கஹ்னா சஹூன்’ என்ற பாடலின் காட்சியமைப்பை உதாரணமாகச் சொல்லலாம். அப்பாடலின் தொடக்க நிமிடங்களில், அங்கிருக்கும் பெண்கள் அப்பாடலை எப்படி உள்வாங்குகிறார்கள் என்பதை மட்டுமே படம் பிடித்திருப்பார். ஒரு கலை தேர்ந்த ரசிகனால் மட்டுமே நிஜத்தில் மட்டுமே நிகழும் அந்த அபூர்வ தரிசனங்களை சினிமா எனும் மறு உருவாக்கத்தில் சாத்தியப்படுத்த முடியும்.

எப்போதும் கனவுகளைக் கண்களுக்குள் ஒளித்துவைத்துக் கொண்டு குடும்ப அமைப்புக்குள் தங்களை பலியாக்கிக் கொண்டவர்கள் மகேந்திரனின் பெண்கள். இந்தக் குடும்ப அமைப்புக்குள்ளிருக்கும் பந்த வன்முறை, ஜமீன்தார் மனநிலையிலிருக்கும் ஆண்கள், எப்போது வேண்டுமானாலும் பெண்களுக்குப் பறிபோகும் குடும்ப ஸ்தானம் என அன்றாட வாழ்வியலையும் அதனூடே பிரச்சாரமின்றி வெளிப்படும் அரசியலும் பிரமிக்க வைப்பவை. அந்த குடும்ப / சமூக ஏமாற்றத்தை துளிகூட வெளிப்படுத்தாமல் ஒரு ஜென் கழுதை போல அடுத்த நாளை சுமந்து செல்கிறார்கள் மகேந்திரனின் பெண்கள்.

இவரது சினிமாக்களின் வழியாக தொடந்து நம் அம்மாக்களையும், அத்தைகளையும், பக்கத்து வீடுகளில் நாம் சிறு வயதில் பேசத் தயங்கிய ஏங்கிய ‘வாழாவெட்டி’ எனப் பட்டம் சூட்டப்பட்ட அக்காக்களையும் மறுபார்வை பார்க்கலாம். எப்போதாவது சிரித்து விட மாட்டார்களா என நாம் பேராசைப்பட்டு கால்களைச் சுற்றிக்கொண்டிருக்கும்போது எதிர்பாரா நேரத்தில் உதிருமே ஒரு புன்னகை... (சிற்பங்களிலுள்ள அம்பாள் போல்) அந்த அபூர்வ கணங்களை செல்லுலாய்டில் பதிவு செய்த நுட்பமான கலைஞன். சமயங்களில் அந்த சிரிப்பு உங்களின் வாழ்வு மீதான பார்வையை கூட மாற்றலாம்.

உதிரிப் பூக்களில் தாயிழந்த பிள்ளைகள் இரவில் நடந்து சென்று சித்தி வீட்டின் கதவைத் தட்டுகின்றன. இந்த நேரத்தில் வரும் தன் அக்கா பிள்ளைகளை பார்த்து சித்தி என்னவென்று கேட்க, ‘தங்கச்சிக்குப் பசிக்குதாம்’ என்கிறான் சிரித்தபடியே அண்ணன். தங்கை சிரிக்கின்றாள்.. அந்த சிரிப்பு ஏற்படுத்தும் சலனம் எத்தனை கண்ணீராலும் ஒரு பார்வையாளனை அடைந்திருக்காது.

மகேந்திரனின் ‘அம்மா’ என்ற படிமம்!

23b.jpg

தாயிழந்த பிள்ளைகளின் மேல் மகேந்திரன் காட்டும் கம்பேஸன் (compassion) அவ்வளவு மென்மையானது. அவரது முக்கிய படைப்புகளான ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப் பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’, ‘மெட்டி’ என இதில் வரும் பிரதான பாத்திரங்கள் அம்மாவை பாதியில் இழந்த (‘உதிரிப் பூக்கள்’, ‘மெட்டி’), ஆரம்பத்திலிருந்தே அம்மாவை இழந்து தாய்மைக்காக ஏங்கும் பாத்திரங்கள் (‘ஜானி’, ‘மெட்டி’) . நண்டு படத்தில் லக்னோவிலிருந்து குடும்பத்தைப் பிரிந்து சென்னை செல்லும் மகனை கடைசியாகப் பார்க்க ரயில் நிலையத்துக்கு ஓடி வரும் கதாநாயகனின் அம்மா என தாய் மீதான இவரது சித்திரம் மிக நெருக்கமானது. கொடுமைக்காரக் கணவர்களுக்கு வாக்கப்பட்டு காலமெல்லாம் கண்ணீர் வடிக்கும் அம்மாக்கள் மீது சிறுவயதிலிருந்தே மகேந்திரனுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். உதிரிப் பூக்கள் விஜயனைப் போல ஒரு கண்டிப்பான அப்பா வாழ்ந்த வீட்டு சூழலுக்குள் தான் வளர்ந்ததாக ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார். அந்த கெட்ட அப்பா, நல்ல மகன் என்ற இருண்மைக்குள் நம்மால் எளிதாகப் பொருத்திப்பார்க்க முடியும்.

ஜானி படத்தில் வரும் ரஜினியின் அம்மா வீணை வாசிக்க ரஜினி மெய்மறந்து கேட்பதையும், அதே போன்று தன் ஆதர்சமான ஸ்ரீதேவி பியானோ வாசிப்பதை ரசித்துக் கேட்பதையும் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்க தோன்றுகிறது. அந்த இசையின் வழியே தாய்மை மீட்டெடுக்கப்படுகிறது, அதன் நீட்சியே ஸ்ரீதேவியுடனான அன்பையும் வளர்க்கிறது. தாய்மையின் வழியே காதலைப் பார்ப்பது மகேந்திரனின் அகப்பார்வையே.

23c.jpg

அதே சமயம் தாய்மையற்ற பெண்ணின் அவஸ்தைகளைக் கூறும் ‘பூட்டாத பூட்டுகள்’, ‘சாசனம்’ என மற்றொரு தளத்திலிருந்தும் பேசியிருப்பார். அவர் வடித்த அம்மா கதாபாத்திரங்கள் கடைப்பிடிக்கும் அமைதி, நம் அமைதியைக் குலைக்கச் செய்யும்.

“மெளனம் என்பது

சும்மா இருப்பதல்ல

அது ஒரு ஸ்தாயி.

குறிப்பிட்ட ஸ்தாயியில்

கற்கள் கூட உடையும்.”

என்ற லா.ச.ராமாமிருதம் வார்த்தைகளிலும் இதைக் கூறலாம்.

மெட்டி திரைப்படத்தில் இரண்டாம் தாரமான சி.ஆர்.ராஜகுமாரியை வயிற்றிலொரு பிள்ளையும் கையிலொரு பிள்ளையுமாக செந்தாமரை அடித்து துரத்த, வேறொரு ஊருக்குச் சென்று மகள்களை வளர்த்து வருகிறாள். ஆனாலும் ஊராரின் நாக்கு யாரை தான் வாழ வைத்திருக்கிறது? கல்யாண வயதான மகள்களின் எதிர்காலத்துக்காக தற்கொலை செய்கிறாள். அம்மாவின் இறப்புக்குப் பின் வடிவுக்கரசி, ஒளி குறைந்த ஓர் அறையின் வாயிலில் சுவரோரம் அமர்ந்து அழுதுகொண்டிருப்பார். Frame within a frameஇல் ஒளியும் இருளும் மாறி மாறி இருக்கும். நடைபாதையில் தங்கை ராதிகா நடந்துவந்து மற்றொரு தூணருகே எதிரில் அமர்வார்.

ராதிகா: வாக்கா சாப்பிடலாம்... அம்மாவ நெனைச்சு இன்னும் எத்தன நாளைக்கு தான் அழுதுக்கிட்டிருக்க முடியும்?

வடிவுக்கரசி: நான் அம்மாவ நெனைச்சு அழலை..

(அதிர்ச்சியில் ராதிகா வடிவுக்கரசியைப் பார்த்து!)

ராதிகா: அப்போ..

வடிவுக்கரசி: அம்மா வாழ்ந்த வாழ்க்கைய நெனச்சு அழறேன்..

இந்தக் காட்சியின் ஒளியமைப்பிலும் வசனத்திலும் அடங்கியுள்ள எளிமையும் உண்மையும்தான் மகேந்திரனின் யதார்த்த சினிமாவை கட்டமைக்கிறது.

23d.jpg

ஆனாலும், எனக்கு சில முரண்பாடுகளுண்டு. பெரும்பான்மையான பெண் கதாபாத்திரங்கள் தங்கள் விதியென தலையெழுத்தைச் சாடி மீண்டும் அதே ஆட்டத்தில் சேர்வதை இக்கால கட்டத்தோடு இணைத்துப் பார்க்கும்போது சிறு மனகசப்பு ஏற்படுகிறது.

மகேந்திரன் தன் சினிமாக்களின் வழியாக நம் குடும்ப அமைப்பை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். மிடில் கிளாஸ் அறத்தைத் தன்னளவில் தளர்த்த எத்தனிக்கிறார். அதன் வேர்களை முடிந்தளவு பெண் கதாபாத்திரங்களின் வழி அசைத்துப் பார்த்து ஒரு முயற்சி செய்கிறார். அது தோல்வியா, வெற்றியா என்ற மெட்டீரியலிஸ்ட் கேள்வி வகையறாவுக்குள் செல்லாமல் இருண்ட தண்ணீருக்குள் மகேந்திரன் வீசிய கல்லின் வீச்சை நாம் இனம் காண வேண்டும்.

80களின் இலக்கியத்தின் தீவிர பாதிப்புகளுக்கு ஆளான மகேந்திரன், இலக்கியத்தின் வழி தன் சினிமாக்களை வடிவமைக்க முயன்றிருக்கிறார். அவரது பெண்கள் மீதான பார்வையில் தமிழ் இலக்கியம் பெருமளவில் ஒளி வீசியிருக்கிறது.

இந்த சினிமாக்களின் வழி பெண்களைப் புரிந்துகொள்வதன் வாயிலாக ஒரு துளி நகர்வும், ஆண்மன கரைதலும் மன்றாடலும் ஏற்பட்டால் அதுவே ஆசானுக்குச் செய்யும் தொடக்க மரியாதை.

 

https://minnambalam.com/k/2019/04/12/23

 

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குநர் மகேந்திரனும் சினிமாவும்

 
big_Happy_birthday_Mahendran-135d16d0a7aa64c81ab8c4426316876f.jpg
 
 
திரைக் கலைஞர்கள் பற்றி இங்கு உரையாடும் அறிவுஜீவிக் கட்டுரைகளில் பொதுவாக மேற்குலக இயக்குநர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகளையும் மாத்திரமே மேற்கோள் காட்டுவது வழக்கம். மிஞ்சிப் போனால் சத்யஜித்ரே போன்ற இந்தியாவில் பரவலாக அறிமுகமாகியுள்ளவர்கள் வருவார்கள். தமிழ் சினிமாவில் சாதித்துள்ள படைப்பாளிகளைப் பற்றி உரையாடுவதில் நம்மிடமே தயக்கமும் தாழ்வுணர்வும் உள்ளது. சிறந்தது எதுவாயினும் அது மேற்கில் உற்பத்தியாகி வருவதுதான் என்கிற மனநிலை இதற்கு காரணமாக இருக்கலாம். மாறாக தமிழ் சினிமாவின் எல்லைக்குள் நின்று அணுகும்போது இங்குள்ள ரசனையற்ற சூழல்களின் இடையிலும் கூட குறிப்பிடத்தக்க சாத்தியமான அளவில் சாதனை புரிந்த படைப்பாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறான மிக சொற்பமான நபர்களுள் மிக முக்கியமானவர் இயக்குநர் மகேந்திரன். சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களாக மதிக்கப்படும் படைப்புகளின் சாயல்களோடு தன் திரைப்படங்களை உருவாக்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர். தமிழ் சினிமா எண்பதுகளில் தனது பொற்கால மறுமலர்ச்சியை உணர்ந்த சூழலுக்கு காரணகர்த்தாக்களில் ஒருவர்.

2004-ல் மகேந்திரன் எழுதிய 'சினிமாவும் நானும்' எனும் திரையுலகம் சார்ந்த அனுபவக் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் திருத்திய பதிப்பாக 2013-ல் வெளிவந்திருக்கிறது. இளம் இயக்குநர்களுக்கு மிக உபயோகமானதாக இருக்கக்கூடிய இந்த நூலில் மகேந்திரனின் திரைப்படங்கள் உருவான விதம், அவைகளை உருவாக்குவதில் இருந்த நடைமுறைச் சிக்கல்கள், வெற்றிகள், தோல்விகள், தமிழ் சினிமாவின் மாறாத அபத்த சூழல், தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள் குறி்த்தான பதிவுகள் உள்ளிட்ட பல சுவாரசியமான கட்டுரைகள் முன்னும் பின்னுமாக நான்-லீனியர் பாணியில் உள்ளன. மகேந்திரனுக்கு தமிழ் சினிமாவின் மீதுள்ள அக்கறையும் ஆதங்கமும் விமர்சனமும் ஆதாரமான கவலையும் அவரது பல கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. சினிமா மீது மாத்திரமல்ல, சினிமாவிற்குள் நுழையத் துடிக்கும் இளம் இயக்குநர்கள் மீதும் அவர் கவலையும் அக்கறையும் கொள்கிறார். எவ்வித திட்டமிடலும் உழைப்பும் இல்லாமல் வெறுங்கனவுகளுடன் வந்து இங்கு அவமானப்பட்டு அல்லறுறும் இளைஞர்கள் மீது அவருக்கு கரிசனம் இருக்கிறது. நூலின் முதல் கட்டுரையே 'சினி்மாக் கனவுகளுடன் அலைபவர்களுக்கு' என்றுதான் துவங்குகிறது.

மகேந்திரனின் வாழ்க்கை மற்றும் திரை அனுபவங்களில் முக்கியமான திருப்பங்கள் அனைத்துமே மிக மிக தற்செயலாகத்தான் அமைந்திருக்கின்றன. நூல் முழுவதும் இதை அவர் விளக்கி வியந்து நம்மையும் வியப்புக்குள்ளாக்குகிறார். தமிழ் சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்கிற எவ்வித ஆசையும் நோக்கமும் இல்லாத இளைஞர் மகேந்திரன், தான் படித்த கல்லூரியில் நிகழ்ந்த விழா ஒன்றில் 'தமிழ் சினிமா என்பது யதார்த்தத்தில் இருந்து எத்தனை தூரம் விலகியிருக்கிறது' என்பது குறித்த உரையொன்றை மேடையில் ஆவேசமாக முழங்குகிறார். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் இந்த இளைஞரின் பேச்சில் கவரப்பட்டு வாழ்த்தியிருக்கிறார். இதுதான் மறைமுகமாக மகேந்திரனின் திரைப்பயணத்திற்கான மிக முக்கியமான துவக்கப்புள்ளி.

மகேந்திரனின் திரைப்படங்களிலுள்ள சிறப்புக்களை பார்க்கும் போது அவர் துவக்கத்திலிருந்தே சர்வதேச சினிமாக்களில் இருந்தும் இயக்குநர்களிடமிருந்தும் தமக்கான உத்வேகத்தையும் பாதிப்பையும் பெற்றிருப்பார் என்று நமக்கு ஒருவேளை நினைக்கத் தோன்றும். ஆனால் இந்த நூலின் மூலம் மிக சமீபமாகத்தான் அவர் உலக சினிமாக்களையும் இயக்குநர்களையும் நூல்களையும் அறிந்திருக்கிறார் என்பதும் இவைகளை முன்னமே அறிய நேர்ந்திருந்தால் தம்முடைய படைப்புகளை இன்னமும் சிறப்பாகவே உருவாக்கியிருக்க முடியும் என்கிற அவருடைய ஆதங்கத்தையும் அறிய முடிகிறது. ஆக.. உலக சினிமாக்கள் பற்றிய பரிச்சயம் அதிகமில்லாமலேயே..இது ஒரு காட்சி ஊடகம் என்கிற அடிப்படையான உண்மையை உணர்ந்து கொண்டு தம்முடைய நுண்ணுணர்வால் மிகச் சிறப்பாக திரைப்படங்களை தமிழில் தனித்தன்மையுடன் உருவாக்கியிருக்கும் மகேந்திரனைப் பற்றி அறிய மிகுந்த ஆச்சரியமே உண்டாகிறது.

நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களுக்காக சுயமாக எழுதிய கதை தவிர அவரது மற்ற திரைப்படங்கள் அனைத்துமே தமிழ் இலக்கிய படைப்புகளிலிருந்துதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்கிற தகவலும் இலக்கியத்தின் பால் அவர் கொண்டுள்ள ஆர்வத்தையும் மரியாதையையும் உணர்த்துகிறது. மாத்திரமல்ல, தாம் ரசித்த படைப்பிலிருந்து ஒரேயொரு துளியை எடுத்து கையாண்டாலும் அதை மறைக்காமல் அதற்கான உரிய அங்கீகாரத்தை தந்து விடும் அவரது நேர்மை குறித்தும் வியப்பு ஏற்படுகிறது. உமாசந்திரனின் மிக சுமாரான வணிக நாவலான 'முள்ளும் மலரும்' -ஐ பாதி வாசித்திருந்தாலும் அதை அப்படியே மூடி வைத்து விட்டு அதை தமக்கான திரைக்கதையாக மாற்றி ஒரு சிறந்த கலைஞனுக்கேயுரிய மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார். போலவே, எப்பவோ சிறு வயதில் வாசித்த, புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை'யின் குறுநாவலில் இருந்த இரண்டு இளம் பாத்திரங்களால் பாதிக்கப்பட்டு அதை நினைவில் கொண்டு பின்னாளில் 'உதிரிப்பூக்கள்' எனும் தமிழின் மிக முக்கியமான திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். குறுநாவலுக்கும் திரைப்படத்திற்கும் பெரிதும் தொடர்பேயில்லை என்றாலும் கூட தமக்கு பாதிப்பை ஏற்படுத்தின படைப்பிலிருந்து உருவான திரைக்கதை என்பதால் புதுமைப்பித்தனின் குடும்பத்தை தேடிப் போய் அதற்கான உரிய மரியாதையை செய்திருக்கிறார் என்பதை அறியும் போது மகேந்திரனின் மீதான பிரியம் மேலும் கூடுகிறது. அயல் சினிமாக்களின் டிவிடிகளிலிருந்து மொத்தமாகவோ துண்டு துண்டாகவோ கதையையும் காட்சிகளையும் உருவி விட்டு "ஆக்சுவலி பார்த்தீங்கன்னா.. இது ரொம்பவும் டிப்ரண்டான ஸ்கரிப்ட்" என்று அலட்டிக் கொள்ளும் அழுகுணி இயக்குநர்கள், மகேந்திரனின் இந்த அரிய பண்பிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் 'நீங்கள் நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது?' என்கிற கேள்வி நடிகர் ரஜினிகாந்த்திடம் கேட்கப்பட்ட போது அவர் தயக்கமேயின்றி சொன்ன பதில் 'முள்ளும் மலரும்'. அதைப் போலவே அதற்கு முன்னர் இன்னொரு சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.ஜி.ஆரும் 'முள்ளும் மலரும்' 'உதிரிப்பூக்கள்' ஆகிய இரண்டு திரைப்படங்களையும் பார்த்து விட்டு கண்கள் கலங்க 'தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து விட்டீர்கள். கல்லூரி விழாவில் தமிழ் சினிமாவின் மீது நீங்கள் சுமத்திய விமர்சனங்களுக்கு பதில் தரும் விதமாக நீங்களே அதற்கான உதாரண திரைப்படங்களையும் எடுத்துக் காட்டி விட்டீர்கள்' என்பது போல் உணர்ச்சிப் பெருக்குடன் மகேந்திரனை பாராட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வணிக அடையாளங்களாக அறியப்படும் இந்த நடிகர்களுக்கே எது சிறந்த திரைப்படம் என்பது உள்ளூற அறிந்திருக்கும் போதும் மீள முடியாத வணிகச் சிறைக்குள் சிக்கி தங்களின் வாழ்நாள் முழுவதும் பெரும்பாலும் வழக்கமான தமிழ் திரைப்படங்களாகவே தந்து கொண்டிருந்த மர்மம் என்னவென்பது விளங்கவில்லை. எல்லாவற்றின் சந்தையையும் போலவே சினிமாவின் சந்தையும் உயிர்ப்புடன் இருக்க வணிகச் செயலாக்கம் அதிகம் நிகழும் பொருட்களின் தேவை அவசியம்தான் என்றாலும் இடையிடையே சிறந்த திரைப்படங்களின் பங்களிப்புகளுக்காக இவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருந்திருக்கலாமே என்கிற ஆதங்கம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு சிறந்த திரைப்படம் உருவாவதின் பின்னணியை அதன் துவக்கப் புள்ளியிலிருந்து அறிந்து கொள்வது சுவாரசியமானது மட்டுமல்ல, இளம் இயக்குநர்களுக்கு உபயோகமானதும் கூட. சிவாஜி நடித்த பெரும் வெற்றிப்படமான 'தங்கப் பதக்கம்' தற்செயலாக உருவானதின் பின்னணி குறித்து மகேந்திரன் வாயிலாக அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது. துக்ளக் பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி மகேந்திரன் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அங்கு சோ வை சந்திக்க வந்திருந்து காத்திருக்கும் நேரத்தில் செந்தாமரையும் எஸ்.ஏ. கண்ணனும் மகேந்திரனை ஏதாவது ஒரு நாடகம் எழுதி தரச் சொல்லி வற்புறுத்துகின்றனர். இதற்கான தயாரான சூழலில் இல்லாதிருந்த மகேந்திரன் சற்று முன் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பார்த்திருந்த ஒரு கண்ணை இழந்திருக்கும் ஒரு காவல் அதிகாரியின் புகைப்படத்தை மாத்திரம் நினைவில் இருத்தி அதைத் தொடர்ந்து வேடிக்கையாக ஒரு கதையை உருவாக்கிக் கொண்டே போகிறார். அதுவே பின்னாளில் மூன்று இந்திய மொழிகளிலும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் கதைக்கருவாகிறது. மகேந்திரன் இதை தமக்கேயுரிய பணிவுடன் யதார்த்தமாக சொல்லிச் செல்கிறார். 'அல்லும் பகலும் கண் விழித்து மிகுந்த உழைப்பில் இதை உருவாக்கினேன்' என்றெல்லாம் நாடகம் போடவில்லை.

'ஓர் இயக்குநர் படப்பிடிப்புத் தளத்தினுள் நுழையும் போது அதற்கான சமரசங்களிலும் தாமாகவே நுழைகிறார்' என்கிற நடைமுறைச் சிக்கலை சொன்னவர் ஹிட்ச்காக். ஒரு திரைப்பட இயக்குநர் தம்முடைய கனவுகளையும் உழைப்பையும் கொட்டி ஒரு திரைக்கதையை தாளில் எழுதி விடுகிறார். ஆனால் அதை அப்படியே ஒரு துளி கூட குறையாமல் படமாக்க முடிந்தது என்று எந்தவொரு இயக்குநரும் சொல்லுமளவிற்கு அவருக்கு சுதந்திரம் தரப்படுகிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. சினிமா உருவாக்கம் என்பது மிகுந்த பொருட்செலவை கோரி நிற்கும் ஒரு கலை என்பதால் இயல்பாகவே  அது வணிகர்களின் கையில் இருக்கிறது. கலைஞர்களின் கையில் இல்லை. ஒரு கலைஞனும் இதற்கான வணிகத்தில் நுழையும் போது தன்னிச்சையாக பெரும்பாலும் அவனும் ஒரு வணிகனாக மாறிப் போய் விடுகிறான். இந்த சமரசங்களை பெரிதும் செய்து கொள்ளாதவர்கள் அங்கு ஜீவிக்க முடிவதில்லை. இவ்வாறான நடைமுறைச் சிக்கல்கள் ஒரு கலைஞனின் கனவுகளை எப்படியெல்லாம் சிதைத்து விடுகின்றன என்பதை மகேந்திரனின் 'பூட்டாத பூட்டுக்கள்' "சாசனம்" ஆகியவற்றின் பின்னணிகளில் இருந்த தடைகளையும் வலிகளையும் பற்றி விவரிக்கும் போது அறிய முடிகிறது.

இவை தவிர மகேந்திரனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கட்டுரைகளும் பேட்டிகளும் அவரது படத்திற்காக அப்போதைய நாளிதழ்களில் வெளியான விமர்சனங்களும் இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. மகேந்திரன் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந்தித்த சம்பவமும் அங்குள்ளவர்களுக்கு திரைப்படக் கலையை பயிற்றுவித்த சம்பவங்களையும் உள்ளடக்கிய கட்டுரை சுவாரசியமானது. தமிழ் சினிமாவில் நுழையத் துடிப்பவர்களும் இளம் இயக்குநர்களும் தங்களின் முன்னோர்களைப் பற்றியும் அவர்களின் செயலாக்கம் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமானது. அவ்வகையில் தமிழ் சினிமா குறித்து இது ஒரு முக்கியமான நூல்.

***
சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன்,
கற்பகம் புத்தகாலயம், தி.நகர், சென்னை-17.
திருத்திய பதிப்பு 2013 - 368 பக்கங்கள், ரூ.250/-
 
(காட்சிப் பிழை, செப்டெம்பர்  2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)      
 
suresh kannan
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.