Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதர் வீ. பரந்தாமன் ( முன்னாள் ஹாட்லிக் கல்லூரித் தமிழாசிரியர்) அவர்களால் எழுதப்பட்ட நூலில் இருந்து சில பகுதிகள்.. முழுவதையும் படிக்க..

http://www.noolaham.net/library/books/02/155/155.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனே கடவுளை ஏற்படுத்தினான்

மனிதன், கால்கள் இரண்டோடு கைகள் இரண்டையும் ஊன்றி விலங்குகளைப் போல் தவழ்ந்து பச்சை இறைச்சியை உண்டும். பிறந்த உடலோடு குகைகளிலும் மரங்களிலும் வாழ்ந்தும், மொழி எதுவும் தெரியாமல் தனித்து இருந்தும் வந்த காலம் ஒன்றுண்டு அந்தக் காலத்தில் அவனுக்குக் கடவுளைப் பற்றிய எண்ணம் இருந்திருக்குமா?

“அனைத்தையும் கடந்ததாய், எல்லாம் வல்லதாய், எல்லாம் நிறைந்ததாய், எங்கும் உறைவதாய், ஒரு கடவுள் இருக்கிறார். அவர், உயிர்களைப் படைத்தார். அவ்வுயிர்கள், தம் ஆணவக்கட்டினின்றும் நீங்கிக் கடவுள் அடியை அடைவதே அவற்றின் பேரின்பம்! அதற்காக ஆன்மாக்கள் கடவுட்குக் கோயில் எழுப்பவும் மலர் பால் பழம் கொண்டு வணங்கவும் வேண்டும்” என்ற கோட்பாட்டில் நூறாயிரத்தில் ஒரு பங்கையாவது நான், முற் குறிப்பிட்ட காலத்து மனிதன் எண்ணியிருப்பானா?

தனக்குப் பால் பழத்தை அறியாதவன்; தனக்கு ஆடை ஒன்றை ஏற்படுத்தாதவன்; தனக்கு ஒரு சிறு குடிசை யாவுதல் காணாதவன்; தனக்கென்று ஒருமொழி இல்லாதவன். மேற்கண்டவாறு எண்ணியிருப்பானா? ஒரு போதும் அவன், கடவுளையோ கோயிலையோ பூசையையோ ஆன்ம ஈடேற்றத்தைப் பற்றியோ எண்ணியிருக்க முடியாது! இது தான் உண்மை.

கடவுள் எண்ணம் இல்லாத ஒரு காலத்திலே மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதிலிருந்து, கடவுள் என்ற எண்ணம் மனிதன் தோன்றிய காலத்திலேயே தோன்றிய தன்று என்றும் இடைக் காலத்திலே அவன், சிறுகச் சிறுக வளர்ந்து கொண்டிருந்த காலத்திலே தான் அவ்வெண்ணம் தோன்றிய தென்றும் தெரிந்து கொள்ளலாம். இதிலிருந்து நாம், அறியக் கூடிய தொன்று உண்டு. அதாவது: கடவுளும் அதன் கோட்பாடுகளும் மனிதனால் ஆக்கப்பட்டனவே!

கடவுள், மனிதனால் ஆக்கப்பட்டது என்று கொள்ளாவிட்டால், நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வெவ்வேறு உருவமுடைய கடவுளும் வேறு வேறான சடங்குகளும் கொள்கைகளும் உண்டாமாறு இல்லை என்க.

அச்சமே கடவுள் கொள்கையின் அடிப்படை!

மனிதன் கடவுளை ஏன் ஏற்படுத்தினான்? காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதன், கொடிய விலங்குகளோடு போரிட்டுக் கொண்டிருந்த காலம். தொலைவிலே சிறு ஒலி, அசைவு ஏற்பட்டாலும் குகையிலும் மரங்களிலும் அஞ்சி நடுங்கிக் கொண்டு ஒளித்திருந்த காலம். இயற்கையின் பல கொடுமைகளையும் தாங்க வேண்டியிருந்த அறிவு வளராத காலம். அக்காலத்தில் மரஞ்செடி கொடி மலை எல்லாவற்றையும் வேரோடு புரட்டி எறியும் பெருங்காற்றை, காய்ந்த மரங்கள் ஒன்றோடொன்று உரோஞ்சுவதனால் ஏற்பட்டுப் பற்றிக் கொண்ட காட்டுத் தீயை, கலங்க வைக்கும் இடியோடும் கண்ணைப் பறிக்கும் மின்னலோடும் சேர்ந்து பெய்யும் விடா மழையை அவன் கண்டான். அவை, அவன் வாழ்க்கையைப் பெரிதும் தாக்கின. எனவே, அஞ்சினான். அவையெல்லாம் தங்களிலும் வலிமை மிக்க மனிதர்கள் (கடவுள்கள்) மறைந்து நின்று செய்யும் கடிய செயல்கள் என நம்பினான். கையெடுத்து வணங்கினான். இனாமாக ஏதும் தருவதாக வாக்களித்தான். அவற்றைப் போற்றினான், புகழ்ந்தான். இப்படியே இக் கொள்கை, அச்சம் காரணமாகவும் அறியாமை காரணமாகவும் வளரலாயிற்று.

பண்டு: இயற்கை வணக்கம் ஏற்பட்டதற்கும் கடவுள்கள் பயங்கர உருவங்களில் படைக்கப்பட்டமைக்கும் முகில்களை ஊர்தி என்றும் இடியைக் கடவுள், கோபங் கொண்டு போருக்கழைக்கும் குரல் என்றும் மின்னலை வாள் வீச்சென்றும் இப்படிப்பட்ட கற்பனைப் புராணங்கள் எழுந்தமைக்கும் காரணம்: அச்சமே என அறிவுடையோர் தெரிந்து கொள்வர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் திருத்தப்பட்டார்

மனிதனுக்கு அறிவு வளர வளர நல்ல எண்ணங்கள் வளர நாகரிக வளர்ச்சிக் கேற்ப கடவுள்களும் வளர்ந்து வந்துள்ளன. மனிதன், பிறருக்குத் தீங்கு செய்யாத நல்லவனாக இருக்க ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணினானோ, அப்படியே கடவுளைத் திருத்தினான். கடவுள்களின் பயங்கர உருவங்களை மாற்றினான். தங்கள் நாகரிகத்துக் கேற்றவாறு கடவுள்களுக்கும் உடை அணிவித்தான். நல்ல அன்பு அருள் முதலியவற்றைக் கடவுளின் முதன்மைக் குணம் எனக் கூறினான். இப்படிக் கடவுளைத் திருத்தும் முயற்சியில் மனிதரில் ஓரளவு அறிவு பெற்றோர் ஈடுபட்டனர். அறிவிற் குறைந்தவர்கள் தாங்கள் படைத்த கடவுளுக்குத் தாங்களே அஞ்சினார்கள். பழைய காலப்படியே எல்லாம் நடக்க வேண்டும், ஆடு மாடு கோழி முதலிய உயிர்ப்பலிகளைக் கொடுக்க வேண்டும். இல்லாது விட்டால் கடவுள், கொடிய அம்மை நோயை, கடும் புயலை, பெருவெள்ளத்தை விட்டுத் தண்டிப்பார் எனக் கூறித் தங்கள் கொள்கையினின்றும் வழுவாதிருந்தனர். இருந்து வருகிறார்கள். இதுதான் கடவுட் கொள்கை வளர்ந்த வரலாற்றின் சுருக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகம் அல்லது பகுத்தறிவு

காற்றையும் மழையையும் தீயையும் கண்டு அஞ்சி அவற்றைக் கையெடுத்து வணங்கிய காலம் போலவே என்றும் மனிதன், இருந்திருந்தால், அவற்றைப் பயன்படுத்தவும் எதிர்த்து முன்னேறவும் வியக்கத்தக்க மாறுதல்கள் அடையவும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கவும் முடிந்திருக்குமா?

அம்பு வில்லு முதல் அதிரவைக்கும் பீரங்கி வரை ஏர் முதல் எந்திரக் கலப்பை வரை - கட்டுமரம் முதல் பெருங் கப்பல்கள் வரை - மாட்டுவண்டி முதல் விரைந்து செல்லும் றொக்கெட்டு வரை, எவ்வளவு மாறுதல்கள்! இப்பேர்ப்பட்ட மாறுதல்களை அடையக் காரணந்தான் என்ன? மனிதன், தனது பகுத்தறிவை அச்சமின்றி ஆராய்ச்சித் துறையில் எல்லாவற்றிலும் பயன்படுத்தியதுதான், இப்பெரும் வளர்ச்சிக்குக் காரணமாயிற்று!

பொருள்களின் உண்மையான இயல்பையும் அவற்றின் இயக்கங்களையும் கண்டறிய முற்பட்டதன் விளைவே, இன்று உலகெங்கும் நீக்கமறப் பிணைந்து நிற்கும் அறிவியல் (விஞ்ஞானம்) ஆகும்.

அறிவியலுக்கு வழிகோலிய அன்றைய அறிஞர்கள்தாம், நாத்திகர்கள் என்றும் கடவுள் நிந்தனைக்காரர் என்றும் தூற்றப்பட்டார்கள். கல்லறையிலும் கடுஞ்சிறையிலும் அடைக்கப்பட்டார்கள். நாடு கடத்தப்பட்டார்கள். நஞ்சூட்டியும் சித்திரவதை செய்தும் கொல்லப்பட்டார்கள்.

மன்னர்கள் மதகுருமார் கைகளிலும் மதகுருமார், அறியாமையின் பிடியிலும் இருந்து அறிவுக் கருத்துக்களை வெளியிட்டவர்களை வதைத்தார்கள். கொன்றார்கள். அப்பப்பா! அறிஞர்கள் பட்ட தொல்லைகள் தாம் எத்தனை? ஆனால், பல இன்னல்களுக்கும் பழமொழிகளுக்கும் ஆளாகியும், தாம் கொண்ட கொள்கையினின்றும் பகுத்தறிவினின்றும் மாறினார்கள். இல்லை. அவர்கள் அழிக்கப்பட்டாலும் அவர்களின் அறிவின் முடிவான கருத்தை அழிக்க மதகுருமாரால் முடியவில்லை. உண்மை என்றும் அழியாது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டார்கள். பல ஆண்டுகள் கடந்த பின்! எனவே, மதகுருமார்கள் தங்கள் கடவுளையும் கொள்கையையும் காப்பாற்ற, தங்கள் கொள்கைகளிலே மாற்றஞ் செய்ய வேண்டியதாயிற்று. அதனால், தங்கள் கடவுளுகளுக்கும் செய்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் புதுப் புது விளக்கங்கள் அளிக்கலாயினர். பாவம்! முற்றாக ஒருநாள் அழிந்துவிடும் இம் மூடகொள்கையைக் கொண்டு இவர்கள் எத்தனை நாள்தான் பிழைக்கப் போகிறார்கள்?

அறிவின் முதிர்ச்சிதான், தூய தெளிந்த உண்மையான பகுத்தறிவின் கொள்கைதான் நாத்திகம். நாத்திகம், எதையும் ஏன்? எப்படி? என்று ஆராய்ந்து, மனம் ஏற்றுக்கொண்டதை ஏற்றுக்கொள் என்கிறது. “அறிவு, ஒரு எல்லைக்குள் அடங்குவதில்லை அது சுதந்திரமாக எங்கும் எதிலும் சென்று தனது ஆற்றலைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்” என்று நாத்திகம் கூறுகிறது.

கடவுளின் மேல் கோயிலின் மேல் அதன் கொள்கை மேல் மதகுருமாரின் மேல் ஆராய்ச்சிகூடாது. வேதப் புத்தகம் கூறுவதையும் மதகுருமார் சொல்வதையும் அப்படியே நம்பு என்று மதங்கள் போதிக்கின்றன. ஆராய்ச்சி கூடாதென்றால், மூளை இல்லாமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்? அல்லது உங்கள் கடவுள் ஆராயும் எண்ணத்தை யாவுதல் நாத்திகர்களின் மூளையிலிருந்து எடுத்திருக்க வேண்டும்!

நாம், ஆராய்ந்து பார்க்கக் கூடாத அளவு கொள்கையோடு ஒரு கடவுளும் வேதப் புத்தகமும் ஒளிந்து நின்று கொண்டு நம் மீது ஆதிக்கம், அடக்குமுறை செலுத்துவ தென்றால், அந்தக் கடவுளும் வேத நூலும் நமக்கு எதற்கு?

மதகுருமார் சிந்தக்கவும் முடிவு சொல்லவும் உரிமை உண்டு. நமக்கு மட்டும் சிந்திக்கவும் சிந்தித்ததின் விளைவால் மனதிலே பட்ட உண்மையான முடிவை வெளிப்படுத்தவும் உரிமை இல்லையா?

இவ்வாறு உரிமைப்போர் - அறிவுப்போர் தொடுத்து வருவது தான் நாத்திகம் அல்லது பகுத்தறிவு!

நாத்திகர்களின் கொள்கை

இயற்கை, மனிதனை ஆக்கிவிட்டது. இவ்வுலகில் பிறந்த நமக்கு இவ்வுலகின் தோற்றத்தைப் பற்றி எதுவும் தெரியாது. தெரிய வேண்டிய தேவையும் இல்லை! ஐந்து பருப்பொருட்களினால் (ஐம்பூதங்கள்) ஏற்பட்ட பொருள்களின் இயல்பையும் இயக்கங்களையும் உள்ளவாறு அறிந்து அவற்றைப் பயன்படுத்தி நாம், முன்னேறவும் இன்பம் அடையவும் தெரிந்து கொண்டால் போதும்!

கடவுள் என்ற எதுவும் இல்லை. அது மனிதனின் பொருளற்ற கற்பனை. அப்படி ஒன்று இருப்பதாக நிறுவச் சான்றுகளும் இல்லை.

மதம், குருமார்களின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்ட கொள்கை. மனிதன் இன்பமாய் வாழ்வதற்கு மதம் தேவையுமில்லை.

நாத்திகர்கள் இல்வாழ்க்கையிலும் இவ்வுலக இன்பங்களிலும் பெரிதும் நம்பிக்கை உடையவர்கள்.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது” - என்ற உயரிய நோக்கை உடையவர்கள். பொய், களவு, கள்ளுண்ணல், சூது, அறமில்லாக் காமம் முதலியவற்றை நீக்கி பிறருக்குத் தீங்கில்லாத வகையில் அன்பாகவும் பண்பாகவும் நடந்து உதவி செய்வதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் கூறுபவர்கள்.

எனவே, நாத்திகத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவை இல்லை. அதன் விரிவைத் தெரிந்து கொண்டு ஆராய்ந்து சரியென்று கண்டால் ஏற்றுக் கொண்டு நடப்பதே அறிவுடைமையாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளா?

மத வாதி: உலகம் யாரால் ஆக்கப்பட்டது?

பகுத்தறிவு வாதி: உலகம் ஆக்கப்பட்டது என்பதை நீ, முதலில் நீரூபிப்பாயா? நண்பா! உலகம் ஆக்கப்பட்டது என்று நிறுவிய பின் அல்லவோ, ‘யாரால் ஆக்கப்பட்டது’ என்ற வினாவை நீ எழுப்பலாம்!

ம : அப்போ, உலகம் ஆக்கப்படவில்லை என்கிறாயா?

ப : ஆக்கப்பட்டதோ இல்லையோ அது எனக்குந் தெரியாது உனக்குந் தெரியாது யாருக்குமே தெரியாது. எனவே, தெரியாத பொருள் பற்றி நாம் பேசிப் பயனில்லை.

ம : ஏன், யாருக்குந் தெரியா தென்று அவ்வளவு அறிதியிட்டுக் கூறுகின்றாய்?

ப : காரணத்தோடுதான் கூறுகிறேன், இந்த உலகத்தின் மேலே பிறந்த நமக்கு, இந்த உலகத்தின் தோற்றம் எப்படியப்பா தெரிந்திருக்க முடியும்? உலகம் முந்தியது நாம் பிந்தியவர்கள்.

ம : அது சரிதான். ஆனால் நாம் ஒரு கட்டடத்தைப் பார்க்கிறோம். அதைக் கொண்டு அக்கட்டடம் ஒருவரால் ஆக்கப்பட்டது என்று அனுமானிக்கிறோம் அல்லவா? அது போல், இந்த உலகத்தையும் ஒருவர் ஆக்கியிருக்கிறார் என்று ஏன் அனுமானிக்கக்கூடாது?

ப: நல்ல கேள்விதான்! இங்கே பார். வேறு கட்டடங்களை மனிதர்கள் கட்டுவதை நாம், கண்ணால் முன்னமே பார்த்திருக்கிறோம் அதைக் கொண்டு தான் இக்கட்டிடத்தையும் ஒருவர் கட்டியிருக்க வேண்டும் என்று

அனுமானிக்கிறோம். ஆனால், வேறு எந்த உலகத்தை யார் செய்ததைக் கண்டு இவ்வுலகமும் ஒருவரால் செய்யப்பட்டது என்று அனுமானிப்பது? வேறு உலகம் ஒருவரால் செய்யப்படுவதை நாம் கண்ணால் பார்க்க வில்லையே!

ம : உன் அறிவுத் தெளிவைக் கண்டு மெச்சுகிறேன். இன்னுமொரு ஐயம், கடவுள் தான் இவ்வுலகத்தை உண்டாக்கினார் என்று சொல்கிறார்களே, அதைத் தெளியவைக்க வேண்டுகிறேன்.

ப : நல்லது சொல்கிறேன் கேள், இவ்வுலகத்தைக் கடவுள் உண்டாக்கினார் என்றால், கடவுளை உண்டாக்கியவர் யார்?

ம : கடவுளை ஒருவரும் உண்டாக்கவில்லை. அவர், தொடக்க மின்றி - அனாதியாக இருக்கிறார் என்கிறார்கள்.

ப: இவ்வுலகம் கண்ணுக்குத் தெரியாத ஒருவரால் - கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று அனுமானித்து பிறகு அக் கடவுளை ஒருவரும் உண்டாக்கவில்லை. என்று முடிவு கட்டுவதிலும் பார்க்க இவ்வுலகமே யாராலும் உண்டாக்கப்படவில்லை. இது தொடக்கமின்றி (அனாதியாக) இருக்கிறது என்று கூறுவது அறிவுடைமை யாகும் அல்லவா? இன்னுமொன்று, கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என நிரூபித்த பின்னல்லவோ கடவுள்தான் இவ்வுலகத்தை உண்டாக்கிறார் என்று கூற வேண்டும். கடவுள் இருக்கிறார்

என்று அவர்கள், முதலில் நிரூபிப்பார்களா?

ம : அப்போ, கடவுள் இல்லை என்பது தான் உங்கள் முடிந்த முடிவா?

ப : கடவுள் இருக்கிறார் என்றதற்கு ஆத்திகர்கள் இதுவரை சொன்ன எல்லாவற்றையும் பொய்யும் பிழையும் என நிரூபித்து விட்டோம். எங்கள் அறிவாலும் ஆராய்ந்து பார்த்தோம். அப்படி ஒரு கடவுள் இருக்கிறார் என்று சொல்ல எந்த வகையான நியாயமான சான்றும் கிடைக்கவில்லை. எனவே, மனதில் இல்லை என்று பட்டதை இல்லை என்கிறோம், இதில் தவறேனும் உண்டா?

ம : கடவுள் இல்லை என்பதை எப்படி நீங்கள் ஆராய்ந்தீர்கள்?

ப : இல்லாததை இல்லை என்று சொல்ல அப்படி ஒன்றும் அதிக ஆராய்ச்சி தேவை இல்லை நண்பா, என்றாலும் சொல்கிறேன் கேள்! நாம், ஒரு பொருளை இருக்கிறது என்று ஒப்புக் கொள்வதாய் இருந்தால், அந்தப் பொருள் எங்கள் ஐம்புலன்களில் ஒன்றிலாவது படவேண்டும் அதாவது அப்பொருள் எங்கள்

கண்ணில் தோன்ற வேண்டும், அல்லது காதில் ஒலிக்க வேண்டும், அல்லது மூக்கில் மணக்க வேண்டும், அல்லது நாவில் சுவைக்க வேண்டும். அல்லது உடம்பில் உறுத்த (பட) வேண்டும், இந்த ஐந்து வகையில் ஒன்றிலாவது புலனுணர்ச்சியைத் தராத ஒரு பொருள். இருப்பதாக நாம் நம்புகிறோமா? இல்லை! சிந்தித்துப்பார் எனவே தான் ஐம்புலனால் அறிய முடியாத கடவுள் என்றொன்று இல்லை என்கிறோம்.

ம : இந்த உலகத்தையும் பொருள்களையும் உயிர்களையும் பற்றி உங்கள் கருத்தைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுகிறேன்.

ப: ஐம்பெரும் பருப்பொருட்களின் (நிலம், நீர், தீ, காற்று, வான்) கூட்டினால் இவ்வுலகப் பொருட்களும் உயிர்களும் தோன்றுகின்றன. இயற்கையின் ஒரு ஒழுங்கின் படி செயல் படுகின்றன பின், ருப்பொருட்களின் பிரிவால் அழிகின்றன.

உடம்பின் இயக்கத்தில் இருந்து பிறக்கும் ஒரு ஆற்றலே உயிர். இவ்வுடம்பின் இயக்கம் நிற்க ஆற்றலும் நின்றுவிடும்.

மனிதன் பிறக்கிறான்! இறக்கிறான். இந்த இடைக் காலத்தில் அவன் இன்பமாய் வாழ வேண்டும். எனவே அவன் தன்னுடைய வாழ்க்கையைப் பிறருக்குத் தீங்கில்லாத படிக்குத் திட்டப்படுத்தி ஒழுங்காக அமைத்துக் கொண்டு தானும் இன்பத்தைப் பெற்று மற்றவரும் இன்பம் பெறுதற்கு வேண்டிய உதவியை அன்போடும் பண்போடும் செய்து வாழ வேண்டும்.

ம : நண்பா! நீ சொன்னவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். இன்று தொடக்கம் நானுமொரு நாத்திகனாய் மாறி விட்டேன். இனி கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாமல் உழைப்பதே என் வேலை. இன்னும் என் மனத்துள் ஐயங்கள் எழுந்தால் உன்னை நாடுகிறேன் போய் வருகிறேன் வணக்கம்.

ப : வணக்கம் நண்பா, சென்று வா! வென்று வா!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.