Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்கப்பட்டுவரும் மாகாண சபைத் தேர்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறக்கப்பட்டுவரும் மாகாண சபைத் தேர்தல்

அரசியல் நெருக்கடி உச்சமடைந்து வருகின்ற நிலையில் அரசியல் பரபரப்புகளுக்கும் நாட்டில் பஞ்சமில்லாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து வலுவடைந்துகொண்டிருக்கின்றன. நாடு அரசியல் ரீதியில் ஒரு ஸ்தம்பித நிலைமையில் இருப்பதாகவே அரசியல் ஆய்வாளர்களினால் பார்க்கப்படுகின்றது. அரசியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை எதிர்வுகூற முடியாத சூழல் தோன்றியிருக்கின்றது. இதற்கு மத்தியில் அனைத்துத் தரப்பினரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்படுத்தலிலும் அதற்கான நகர்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தல் ஒன்று விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு  கட்சிகள் மத்தியில் காணப்படுகின்ற சூழலில் அதற்கான ஆயத்தத்திலும் நகர்வுகளிலும் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. 

ஜனாதிபதித் தேர்தலானது இவ்வருடம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்குள் நடைபெற்றாகவேண்டும். எனினும் அதற்கு முன்னர் எந்த நேரத்திலும் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கான அழைப்பை விடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் காணப்படுகின்றது. எனினும் தற்போதைய அரசியல் நிலைமைகளை நோக்கும்போது முன்கூட்டிய திகதிகளில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது என்றும் டிசம்பர் மாதமே அதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிகிறது. 

பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் அரசியலமைப்பின் படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தேர்தல் நடைபெறவேண்டும்.  ஆனால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அப்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு கிடைக்கும். அத்துடன் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 150 பேர் பிரேரணையொன்றில் கைச்சாத்திட்டால் பாராளுமன்றத் தேர்தல் உடனடியாக நடைபெறவேண்டும். எனினும் தற்போதைய சூழலில் அதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. அதனால் பாராளுமன்றத் தேர்தலானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னரே நடைபெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. 

எப்படியிருப்பினும் தற்போதைய அரசியல் சூழலில் தேசிய தேர்தல் ஒன்றுக்கான தயார்படுத்தலிலும் காய் நகர்த்தலிலும் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தயார் நிலைமைகளே மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. 

ஜனாதிபதி தேர்தலுக்கான நகர்வுகள் 

பிரதான அரசியல் கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டதுடன் தம்மை வேட்பாளர்கள் என கருதுகின்றவர்களும் அதற்கான காய்நகர்த்தல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியைப் பொறுத்தவரையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளர் களத்தில் பிரபலமாக பேசப்படுகின்றன. அதேபோன்று இவர்கள் மூவரும் இதற்கான அரசியல் ரீதியான காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுவருவதை காண முடிகின்றது. 

அதேபோன்று மஹிந்த ராஜபக் ஷ தரப்பை பார்க்கும்போது அங்கும் பலரின் பெயர்கள் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் விடயத்தில் பேசப்படுகின்றன. கோத்தபாய ராஜபக் ஷ, பஷில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ, உள்ளிட்டவர்களின் பெயர்கள் மிகவும் வலுவாகப் பேசப்படுகின்றன. அதேபோன்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. ஆனால் அவர்   இன்னும் அது தொடர்பில்  பதில் தெரிவிக்கவில்லை. எனினும் சுதந்திரக் கட்சியும் அதன் ஆதரவாளர்களும்  கௌரவம் அடையும் வகையிலான   தீர்மானம் ஒன்றை  எதிர்வரும் ஜனாதிபதி   தேர்தலில் எடுப்பேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

மறக்கப்படுகின்றதா? 

இவ்வாறு அனைத்துத் தரப்பினரும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிந்தித்துக்கொண்டிருக்கின்ற சூழலில் அரசியல் கட்சிகளால் மற்றொரு முக்கியமான தேர்தல் மறக்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது

என்றே கூறவேண்டும். நாட்டில் எட்டு மாகாணசபைகள் பதவிக்காலம் முடிவடைந்து ஆளுநர் வசம் காணப்படுகின்றன. ஊவா மாகாணசபை விரைவில் கலையப்படவேண்டும். 

எனினும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான எந்தவிதமான முயற்சிகளும் அரசாங்கத் தரப்பில் இடம்பெறுவதாக தெரியவில்லை. மாகாணசபைத் தேர்தலை மறந்துவிட்ட நிலைமையே தற்போது நாட்டில் காணப்படுகின்றது. மாகாணசபைகள் என்பது மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றும் நிறுவனங்களாக அரசியல் ரீதியில் காணப்படுகின்றன. மக்கள் தமக்கான பிரதிநிதிகளை மாகாணசபைகளுக்கு தெரிவுசெய்து அனுப்புவதன் ஊடாக   மாகாணசபைகள் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள மக்கள் முயற்சிக்கின்றனர். அதாவது மாகாணசபைகள் மக்களுடன் மிகவும் நெருங்கி செயற்படுவதால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பதைவிட ஒரு மாகாணசபை உறுப்பினரை மக்கள் சந்திப்பது ஒப்பீட்டு ரீதியில் இலகுவானதாக பார்க்கப்படுகின்றது. 

மக்களின் பிரதிநிதிகள் 

அந்தளவு தூரம் மாகாண சபைகள் மக்களுடன் நெருங்கிப் பணியாற்றுகின்றன.   அதிகமான பாடசாலைகள், மருத்துவமனைகள், மாகாண சபைகளின்   கீழ் வருகின்றன. எனவே இவற்றின் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நிர்வாகம் என்பது மிகவும் அவசியமாகும். இவ்வாறான மாகாண சபைகளில் தொடர்ச்சியான அதிகார நிர்வாகம் இருப்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிவிடும். எனவே மக்களின் இறைமையை உறுதிப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் தேர்தல்களின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்டு மாகாண சபைகள் இயங்கவேண்டும். 

அதற்கான அவகாசத்தை அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் உறுதிப்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதுடன் அந்த உரிமையை அரசியல் கட்சிகளும் பெற்றுக்கொள்ளவேண்டும். தேர்தல் என்பது ஜனநாயகத்தில் மிக முக்கியமானதொரு அம்சமாகும். தேர்தல்களின் ஊடாகவே மக்கள் தமக்குத் தேவையான பிரதிநிதிகளை மக்களின் இறைமையை பயன்படுத்தி தெரிவு செய்து சபைகளுக்கு அனுப்புகின்றனர். எனவே அந்த உரிமை எந்தவொரு காரணத்துக்காகவும் இல்லாமல் போய்விடக்கூடாது. எந்தவொரு சிக்கலான கட்டத்திலும் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடைபெறவேண்டும். அதனை உறுதிப்படுத்த வேண்டியது அரசியல் மற்றும் சிவில் சமூக தலைவர்களின் மிக முக்கிய கடமையாகும். ஆனால் தற்போது மாகாணசபைத் தேர்தல்கள் பாரிய தாமதத்தை அடைந்துள்ள போதிலும் அதனை அடைந்துகொள்வதில் அரசியல் கட்சிகள் மத்தியில் பாரிய அளவில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. காரணம் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் அடுத்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்களையே மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறு இரண்டு தேசிய தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் மாகாணசபைத் தேர்தல்களுக்கான அக்கறை கட்சிகள் மத்தியில் இல்லையோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றது. இது ஜனநாயகத்துக்கு ஒரு ஆரோக்கியமற்ற நிலைமையை ஏற்படுத்திவிடும். 

ஜனநாயகம் மீதான நம்பிக்கை  அவசியம் 

எனவே இந்த விடயம் குறித்து அதிகாரத்தில் இருக்கின்றவர்களும் அரசியல் கட்சிகளும் சிவில் சமூக தலைவர்களும் சிந்திக்கவேண்டும். இந்தத் தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறாது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடக்கூடாது. தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறும். நாம் எமது ஜனநாயக உரிமையை பிரயோகிப்போம் என்ற எண்ணமே எப்போதும் மக்கள் மத்தியில் இருக்கவேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. அவர்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்துகொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவேண்டும். அதனை எந்தவொரு தரப்பும் தட்டிப்பறிக்க முடியாது. 

இந்நிலையில் தற்போது தாமதமடைந்து கொண்டிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை எவ்வாறு விரைவில் நடத்துவது என்பது குறித்து அனைவரும் கவனம் செலுத்தவேண்டும். இரண்டு பிரதான தேசிய தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன என்பதற்காக நடைபெறவேண்டிய மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்த முடியாது. அவற்றை அலட்சியப்படுத்த முடியாது. 

அதாவது ஏன் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறாமல் இருக்கின்றன என்பது குறித்தும் சிந்திக்கவேண்டும். மகாணசபை  தேர்தல்  முறைமையின்  விருப்பு வாக்கு முறைமை தொடர்பில் பல வருடங்களாகவே விமர்சனங்கள் இருந்து வருகின்றன. விருப்பு வாக்கு முறைமை இருக்கக்கூடாது என்பதே அனைவரதும் கோரிக்கையாக இருந்து வருகின்றது. காரணம் இதுவரை மாகாணசபைத் தேர்தலானது முழுமையாக விகிதாசார முறைமையிலேயே நடைபெற்றுள்ளன. இந்த நிலையிலேயே விருப்புவாக்கற்ற தேர்தல் முறைமையை தயாரிக்கும் நோக்கில் மாகாணசபைத் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கு 2017 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. 

 புதிய தேர்தல் முறைமையானது ஐம்பது சதவீத விகிதாசார முறைமையிலும் ஐம்பது வீதம் தொகுதி முறைமையிலும் அமையும் வகையில் புதிய தேர்தல் முறைமை 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. ஆரம்பத்தில் முழுவதும் தொகுதி முறைமையிலேயே இந்த தேர்தல் முறைமை அமையவேண்டும் என கோரப்பட்டு வந்தது. எனினும் சிறுபான்மை கட்சிகளின் வலியுறுத்தல்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவங்களை கருத்தில் கொண்டு இந்த மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இரண்டும் கலந்த கலப்புமுறையில் நடைபெறவேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 

 2017 ஆம் ஆண்டு புதிய மாகாண சபைத் தேர்தல் சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது. அந்த புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக புதிய எல்லை நிர்ணயங்களை மேற்கொள்வதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு நிர்ணயிக்கப்பட்டது. 

எல்லை நிர்ணய ஆணைக்குழுவானது புதிய எல்லை நிர்ணயங்களை தயாரித்து அறிக்கையை வெளியிட்ட போதிலும் அந்த அறிக்கையை பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகள் அந்த எல்லை நிர்ணய அறிக்கையை கடுமையாக எதிர்த்தன. அதனூடாக சிறுபான்மை. சமூகங்களின்  பிரதிநிதித்துவங்கள் அழிக்கப்படுவதாகவும் சிறுபான்மைக்கட்சிகள்  குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. 

  அனைத்து கட்சிகளும்  இந்த அறிக்கையை எதிர்த்ததன் காரணமாக  அந்த அறிக்கையானது பாராளுமன்றத்தில் ஏகமனதாக  அனைத்து கட்சிகளினாலும் நிராகரிக்கப்பட்டது. அதனையடுத்து பிரதமர் தலைமையில் மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டு குறைபாடுகளை ஆராய்ந்து  திருத்த யோசனைகளை  ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று  ஏற்பாடு காணப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி  புதிய  திருத்தங்கள் உள்ளடங்கிய    அறிக்கையை வர்த்தமானியில் வெ ளியிடவேண்டியிருந்தது. 

தாமதம் 

ஆனால்  அந்த பிந்திய செயற்பாடு இன்னும் இடம்பெறவில்லை என்று கூறப்படுகின்றது. அதனால் தற்போது புதிய  முறையிலோ அல்லது  பழைய முறையிலோ   மாகாண சபைத் தேர்தலை  உடனடியாக நடத்த முடியாத சூழல் காணப்படுகின்றது.   இதற்கு தற்போது என்ன செய்வது என்பதே  அனைவரதும் கேள்வியாக உள்ளது. அதாவது    மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டுமாயின் சில நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியுள்ளது.  அதாவது  புதிய   முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயினும்   அதற்கு பாராளுமன்றத்தில் ஒரு யோசனையை  கொண்டுவரவேண்டும்.  மாறாக  பழைய முறையில்  மாகாண சபைத்  தேர்தலை நடத்துவதாயினும்  பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து  நிறைவேற்றவேண்டியது அவசியமாகும். 

ஆனால் இது தொடர்பில்  அரசியல் கட்சிகள்  அக்கறையின்றி செயற்படுவதாகவே தெரிகின்றது. அதாவது  தேசியமட்டத்தில்  விரைவில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அதற்கான  தயார்படுத்தல்களில் இருக்கும் கட்சிகள்    மாகாண சபை தேர்தலின் முக்கியத்துவத்தை  கவனத்திற்கொள்ளாமல் உள்ளனவா என்ற கேள்வி எழுகின்றது. 

மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த  தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படவேண்டும்.   இது தொடர்பில் அரசியல் கட்சிகள்  சிந்திப்பது அவசியமாகும்.   அண்மையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய   மாகாண சபைத் தேர்தலை பெறுவதற்கு   கட்சிகள்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 

அதாவது ஜனாதிபதித்  தேர்தல் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதனை தாமதிக்க முடியாது. எனவே தற்போது  தாமதமடைந்துகொண்டிருக்கும்   மாகாண சபைத்  தேர்தலைப்  பெறுவதே  முக்கியமானதாகும் என்று  தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய  கட்சிகளின் செயலாளர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தார். 

இந்நிலையில் தொடர்ந்து  இவ்வாறு மாகாண சபைத் தேர்தல்கள் தாமதமடைய  இடமளிக்கக்கூடாது.   மக்களின் இறைமையை பயன்படுத்துவதற்கான  சந்தர்ப்பம்   தேர்தல் வாக்களிப்பின் ஊடாகவே  கிடைக்கின்றது.  மக்களின் அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது.  எனவே மக்கள்  பிரதிநிதிகள்  இல்லாமல் இருக்கின்ற  மாகாண சபைகளுக்கு விரைவில் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு   அனுப்பப்படவேண்டும். அவ்வாறு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான உரிமை மக்களுக்கு வழங்கப்படுவது கட்டாயமாகும். 

தற்போதைய நிலைமையில் மாகாண சபைத்  தேர்தல் மறக்கடிக்கப்பட்டதாகவே காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.  தேசியமட்ட தேர்தல்கள்  தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அரசியல் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை மறந்துவிடக்கூடாது.   மாகாண சபைகள்  மக்களின் வாழ்க்கை முறையுடன் எந்தளவுக்கு பின்னிப் பிணைந்துள்ளன என்பதனை  எண்ணிப் பார்க்கவேண்டும்.   ஜனாதிபதி மற்றும்  பாராளுமன்றத்  தேர்தல்களுக்கு  தயாராகுவதில் எந்த சிக்கலும் இல்லை.  அவை ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய முக்கியத்துவமிக்க தேர்தல்கள்.  ஆனால் அதற்காக   மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் யாரும் அலட்சியமாக  இருந்துவிட முடியாது. மக்கள்  தமது  பிரதிநிதிகளைத்  தெரிவு செய்வதற்கான    சந்தர்ப்பத்தை  வழங்குவது அவசியமாகும்.  அந்த ஜனநாயக உரிமையைக் காலம் தாழ்த்தக்கூடாது என்பது   முக்கியமானது.  

ரொபட் அன்டனி

 

https://www.virakesari.lk/article/58838

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.