Jump to content

பிரபஞ்ச நூல் - ஷோபாசக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பிரபஞ்ச நூல் - ஷோபாசக்தி

இந்தக் கதையைத் தனது இரகசியக் குரலைக் கலையவிடாது, தகரத்தில் மெல்லிய ஆணி முனையால் கிறுக்குவது போன்ற கூசிய தொனியில் ஏற்ற இறக்கங்களின்றி சித்திரைலிங்கம் என்முன்னே சொல்லத் தொடங்கினான். நடுநடுவே கதையை நிறுத்தி அதே இரகசியக் குரலில் என்னிடம் சந்தேகங்களும் கேட்டான்.

நான் 2012-ல் சித்திரைலிங்கத்தை சென்னை புத்தகச் சந்தையில் கடைசியாகப் பார்த்தது. மனைவி பிள்ளைகளுடன் ‘க்ரியா புத்தகக் கடை’க்குள் நின்றுகொண்டிருந்தான். கையில் ‘கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ வைத்திருந்தான். என்னைக் கண்டதும் முதல் வார்த்தையாக “மச்சான் நீ இந்த அகராதியில் ஏதோ பிழை இருக்கிறது என்று எழுதியிருந்தாய். அதுதான் வாங்கிச் சரி பார்க்கப் போகிறேன்” என்றான். அன்றிரவே அவுஸ்ரேலியா திரும்பும் அவசரத்திலிருந்தான்.

க்ரியாவில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்து ஏழு வருடங்கள் கழித்து, 2019 புதுவருடம் பிறந்த நள்ளிரவில் சிட்னியின் புறநகர்ப் பகுதியான செவன் ஹில்ஸிலுள்ள சித்திரைலிங்கத்தின் வீட்டில் நாங்கள் மறுபடியும் சந்தித்துக்கொண்டோம். ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக நான் பிரான்ஸிலிருந்து கிளம்பிப்போய் அப்போது சில மாதங்கள் சிட்னியில் தங்கியிருந்தேன்.

நள்ளிரவில் புது வருடம் பிறந்து ஆளுக்காள் வாழ்த்துச் சொல்லிக் கொண்டாடியதும் சித்திரைலிங்கத்தின் மனைவி வானதியும் குழந்தைகளும் படுக்கைக்குப் போய்விட, நானும் சித்திரைலிங்கமும் வீட்டின் பின்புறம் ரசனையுடன் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தில் தனியாக நாற்காலிகளில் அமர்ந்தோம். ஜனவரி மாத இரவில் கூட சிட்னியில் வெப்பக் காற்றடிக்கிறது. வானம் முப்பரிமாண ஓவியமொன்றுபோல நட்சத்திரங்களை நெருக்கிமாக அடுக்கி வைத்திருக்கிறது. இந்தக் காலத்தில் பிரான்ஸில் வானம் பனிப் பாளமாகத் தரைக்கு இறங்கிவரும்.

சித்திரைலிங்கத்திற்கு மது அருந்தும் பழக்கமில்லை. எனக்காக மதுவும் சிகரெட்டுகளும் வாங்கி வைத்திருந்தான். சித்திரைலிங்கத்தின் வீட்டை மூன்றடுக்கு மாளிகை என்றுதான் சொல்ல வேண்டும். அவன் வைத்திருக்கும் காரும் அப்படியானதுதான். நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு நிர்வாகத்தின் கணினித் துறையில் உயர்ந்த பதவியிலிருந்தான். ஆனால் அய்ம்பது வயதான அவன் எழுபது வயதுத் தோற்றத்திலிருந்தான். ஆள் முப்பது கிலோதான் தேறுவான். ஆடை அணியும் முறைகூடக் கிழவர்களைப் போலயிருந்தது. தலையில் ஒரு மயிர் கிடையாது. முன்வாய்ப் பற்கள் நான்கு விழுந்து பொய்ப்பற்கள் கட்டியிருப்பதாகச் சொன்னான். எனது நீண்ட தலைமுடியைத் தனது கைகளால் தடவிப்பார்த்து ஆராய்ந்து, உண்மையான முடியா இல்லை நாடகத்திற்காக வைத்த டோப்பாவா எனக் கேட்டான். பகடி விட்டாலும் சரி மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி பயந்தாலும் சரி முகத்தை ஒரே மாதிரியாகத்தான் சீரியஸாகச் சித்திரைலிங்கம் வைத்திருப்பான்.

இந்தக் கதையைச் சொல்வதற்கு முன்பு எப்படிக் கதையை ஆரம்பிப்பது எனத் தெரியாமல் சித்திரைலிங்கம் தட்டுத் தடுமாறித் தேவையில்லாதது எல்லாம் பேசிக்கொண்டிருந்தான். பின்பு, தனது கைத்தொலைபேசியை அணைத்து வைத்துவிட்டு, தோட்டத்திற்குள் நுழையும் வீட்டின் பின்புறக் கதவுகளை வெளிப்பக்கமாகத் தாழிட்டுவிட்டு, நாற்காலியை நகர்த்தி எனக்கருகே போட்டுக்கொண்டு இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தான். கதை ஒரு புத்தகத்தைப் பற்றியது.

2

சித்திரையில் பிறந்ததால்தான் எனக்கு சித்திரைலிங்கம் என்று அழகான பெயர். நாஞ்சில் நாடனின் ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவலில் பூலிங்கம் என்றொரு பெயர் உண்டு. அது இன்னும் திறமான பெயர். இங்கே என்னுடய அலுவலகத்தில் வெள்ளைக்காரர்கள் என்னை ‘சித்’ என்று அவர்களின் வசதிக்குச் சுருக்கிக் கூப்பிடுவதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. இதனாலேயே அலுவலகத்தில் நாலைந்து பிரச்சினைகள் வந்திருக்கின்றன. வில்லியம் ஷேக்ஸ்பியர் என்றும் கப்ரியல் கார்ஸியா மார்குவெஸ் என்றும் நாங்கள் உச்சரிக்கிறோம்தானே. இவர்களின் நாக்குகளிற்கு மட்டும் சித்திரைலிங்கம் என உச்சரிப்பதில் என்ன பிரச்சினை!

1985-ம் ஆண்டு சித்திரைமாதம் எனக்குப் பதினாறு வயது முடிந்திருந்தது. என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக என்னுடைய கிராமத்திலிருந்து நான்கு நண்பர்களை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாண நகரத்துக்குப் போனேன். எங்கள் அய்வரில் மூத்தவனுக்குப் பத்தொன்பது வயது. இளையவனுக்குப் பதினைந்து வயது.

எங்களில் யாருக்கும் குடிக்கும் பழக்கம் இல்லை . மூத்தவன் மட்டும் இரகசியமாகச் சிகரெட் குடிப்பான். மத்தியானம் பரடைஸ் ஹோட்டலில் புரியாணி சாப்பிட்டுவிட்டு, அதற்கும் மேலாக லிங்கம் கூல் ஃபாரில் சர்பத் குடித்துவிட்டு, வின்ஸர் தியேட்டரில் மதியக் காட்சிப் படத்துக்குப் போனோம். சிவாஜியும் அம்பிகாவும் நடித்தது…’காலம் மாறலாம் நம் காதல் மாறுமா’ என்றொரு பாட்டு இருக்கிறது..என்ன படம் அது?

“வாழ்க்கை..”

அதேதான்..படம் முடிந்தவுடன் நடந்து பண்ணைப் பாலத்துக்கு வந்தோம். ஊர் திரும்ப பஸ்சுக்கு காசு இருந்ததுதான். என்றாலும் மண் அள்ளவரும் ட்ராக்டர்களில் தொற்றிக்கொண்டு ஊர் திரும்புவதில்தான் எங்களுக்கு மகிழ்ச்சி.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நாளைக்கு அய்ம்பது ட்ராக்டர்களாவது எங்கள் கிராமத்திற்கு மண் அள்ள வரும். அந்த ட்ராக்டர் சாரதிகளும் எங்களிற்குப் பழக்கமானவர்களாகவே இருப்பார்கள். அந்தச் சாரதிகளில் மோட்டாண்டி எங்களுக்கு நெருங்கிய பழக்கம். எங்களைக் கண்டால் தானாகவே ட்ராக்டரின் வேகத்தைச் சற்றே குறைப்பார் . ஓடும் ட்ராக்டரில் நாங்கள் தொற்றி ஏறிப் பெட்டிக்குள் குதிப்போம். அன்றும் அதுதான் நடந்தது.

பண்ணைப் பாலத்தால் மோட்டாண்டியின் ட்ராக்டர் எங்களை ஏற்றிக்கொண்டு கிராமத்தை நோக்கிப் பறக்கலாயிற்று. நாங்கள் சினிமா நடிகர்களிற்கு மட்டுமல்லாமல் ட்ராக்டர் சாரதிகளிற்கும் தீவிர ரசிகர்களாயிருந்த பருவமது. மோட்டாண்டி சிவந்த மேனியும் சுருட்டைத் தலையும் கொண்ட கவர்ச்சிகரமான மனிதர். அவர் எப்போதும் கட்டும் பற்றிக் சாரத்தை முழங்கால்வரை வழித்துவிட்டுக்கொண்டு வாயில் ‘த்ரிரோஸ்’ சிகரெட்டையும் வைத்துக்கொண்டு அசுர வேகத்தில் அவர் ட்ராக்டர் ஓட்டுவது தொங்கலாயிருக்கும். அவர் ட்ராக்டரைத் தாறுமாறாக ஓட்டும் வேகத்தால்தான் அவருக்கு மோட்டாண்டி என்ற பெயர் கிடைத்திருக்கவேண்டும்.

ட்ராக்டரின் வெற்றுப் பெட்டி பண்ணைப் பாலத்தில் துாக்கித் துாக்கிப் போடும். அந்தப் பெட்டிக்குள் ‘பலன்ஸ்’ பண்ணி நிற்பது எங்களின் சாகசமாக இருக்கும். யாழ்ப்பாணத்திலிருந்து பண்ணை பிரதான வீதியின் வழியாக மூன்று கட்டைகள் துாரம் ஓடினால் எங்கள் கிராமம் வந்துவிடும். வீதியிலிருந்து ஒரு கட்டைத் துாரத்தில்தான் தெற்குப் புறமாகக் குடிமனைகள் இருந்தன. பிரதான வீதியருகில் குடிமனைகள் கிடையாது. வெறும் தரவை நிலத்திற்குள்ளால் அந்த வீதி செல்லும். வீதியில் குட்டி வழிப் பிள்ளையார் கோயிலும் அதற்குச் சற்றுத் தள்ளி, ஒருமாதம் முன்பாகப் புதிதாக முளைத்த ஒரு தேநீர் கடையுமிருந்ததன. அந்தக் கடையை நல்லூர் பக்கத்திலிருந்து வந்த ஒரு நடுத்தர வயதுத் தம்பதிகள் நடத்தி வந்தனர். அந்தக் கடைக்காரரின் சரியான பெயர் என்னவென்று தெரியவில்லை. அந்தக் கடைக்கு ‘பப்பன் கடை’ என்று கிராமத்தவர்கள் பெயரிட்டிருந்தார்கள். கடைகாரரை ‘பப்பன்’ என்றுதான் கூப்பிடுவோம்.

அப்போதெல்லாம் எனது கிராமத்து மக்கள் தேநீர் கடைகளுக்குப் போவதில்லை. யாழ்ப்பாணச் சந்தைக்குப் போனால் கூட கடைகண்ணியில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்காமல் வீட்டுக்குத் திரும்பிவந்துதான் தொண்டையை நனைப்பார்கள். பப்பன் கடை வரும்வரை எங்கள் கிராமத்தில் தேநீர் கடையே இருக்கவில்லை. எங்களை மாதிரி நட்டாமுட்டி பொடியன்கள் மட்டுமே பப்பன் கடைக்கு போய் கல்லுப் போன்ற வாய்ப்பன் சாப்பிட்டுத் தேநீர் குடிப்போம். மற்றப்படிக்கு அந்த வழியால் போகும் லொறி, ட்ராக்டர் சாரதிகள் அங்கே சிலவேளைகளில் தேநீர் குடிப்பார்கள். 

பப்பன் கடையில் ஒரு சுடுதண்ணீர்ப் பானையும் நாலைந்து கிளாசுகளும் இருக்கும். ஒரு தட்டில் சுட்ட வாய்ப்பன்கள். மற்றபடிக்கு நாலைந்து யானைச் சோடாக்கள், பீடி சிகரெட் இவ்வளவும்தான் அந்தக் கடை. நான்கு பக்கங்களிலும் கிடுகுகளால் மறைக்கப்பட்டு பனையோலையால் கூரை வேயப்பட்ட அந்தக் கடை இருந்த இடம் அரசாங்கக் காணிதான். பிரதான வீதியோரமாக இருந்த உவர்நில அரசாங்கக் காணிகளை அப்போது யார் வேண்டுமானாலும் பிடித்துக் குடிசை போட்டுக்கொள்ளலாம். இப்போது அந்த இடத்தில் இந்தியாக்காரர்கள் வந்து அதிகாரிகளுக்குக் காசுகொடுத்து உறுதி முடித்து ஓர் ‘இன்டர்நஷனல் ஸ்கூல்’ கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அய்ம்பது பரப்பில் சுற்றிவர மதில் எழுப்பிவிட்டார்கள். ஊருக்குச் சென்றபோது பார்த்தேன்.

பப்பன், தனது கடையை மாலை ஆறுமணிக்கு அடைத்துவிடுவார். கடையில் பெயருக்குத்தான் தேநீர் வியாபாரம் நடப்பதாகவும் இரவுகளில் அந்தக் கடைக்குள் விபச்சாரத் தொழில் நடப்பதாகவும் ஊருக்குள் சிலர் பேசிக்கொண்டார்கள். பொழுதுபட்ட பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து அந்தக் கடைக்கு ஒரு மஞ்சள் நிறப் பெண் வருவதாகவும் அவள் வந்த பின்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்ஸிலோ மோட்டார் சைக்கிளிலோ வாடிக்கையாளர்கள் வந்து இறங்குவதாகவும் பேச்சிருந்தது. 

எங்கள் கிராமத்தில் இந்த விபச்சாரப் பிரச்சினை கனகாலமாக இருந்து வந்தது. அப்போது யாழ்ப்பாண பஸ்நிலையத்தில் நிற்கும் விபச்சாரிகளை வாடிக்கையாளர்கள் அழைத்துக்கொண்டு போக யாழ்ப்பாண நகரத்தில் லொட்ஜ்கள் கிடைப்பது லேசான விசயமில்லை. முழு யாழ்ப்பாண நகரத்திலுமே இரண்டோ மூன்றோ லொட்ஜ்கள்தான் இருந்தன. அதனால் வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு விபச்சாரிகள் பஸ் பிடித்து எங்கள் ஊர் பிரதான வீதியில் இறங்கிவிடுவார்கள். பிரதான வீதியின் வடக்குப்புறமாகப் பரவைக்கு கடலையொட்டி கன்னாவும் நொச்சியும் பற்றைகளாக வளர்ந்துகிடக்கும். அந்தப் பற்றைகளிற்குள் புகுத்து அவர்கள் மறைந்துகொள்வார்கள். எங்களிலும் மூத்த எங்களது கிராமத்து இளைஞர்களின் கண்களில் அவர்கள் எப்போதாவது சிக்கினால், இளைஞர்கள் அவர்களை நன்றாக அடித்து உதைத்துத் துரத்திவிடுவார்கள். இதையொரு சமூகசேவையாக அந்த இளைஞர்கள் ஊருக்குள் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள். இதெல்லாம் அன்றுவரை நான் கேள்விப்பட்டிருந்த விசயங்கள்தானே தவிர, என் வாழ்வில் நான் ஒரேயொரு விபச்சாரியைக் கூட அதுவரை நேரில் பார்த்திருக்கவில்லை. 

ஆனால் ஒரு விபச்சாரி எப்படியிருப்பாள் என்று எனக்கொரு கணக்கிருந்தது. நான் வாசித்த கதைகளிலிருந்து அந்தச் சித்திரத்தை நான் கலவையாக உருவாக்கி வைத்திருந்தேன். அழகான பெண் ஒருத்தி விபச்சாரத்திற்கு வா என ஒரு அய்யரை ஆசைகாட்டிக் கூப்பிட்டு நளினமாகப் பேசிக் காசையும் வாங்கிக்கொண்டு, கும்பிட்டுவிட்டு வருகிறேன் என வேதக் கோயிலிற்குள் நுழைந்து மறைந்துவிடுவாளே, கதைக்கு தட்சணை எனப் பெயர்.. யார் அந்தக் கதையை எழுதியது?

“அலெக்ஸ் பாரதி..”

ஆம்! என்னவொரு எழுத்தாளர் அவர்!! பெரிதாகக் கவனம் பெறாமலேயே போய்விட்டார். நீங்கள் இரண்டுபேரும் வேதக்காரர்கள் என்பதாலோ என்னவோ உங்களுடைய கதை எழுதும் முறையில் ஓர் ஒற்றுமையிருக்கிறது. நாங்கள் வந்த ட்ராக்டர் பப்பனின் தேநீர் கடையை நெருங்கியபோது எங்களிற்கு எதிரே, தேநீர்க் கடைக்குச் சற்றுத் துாரத்தில் நின்றிருந்த யாழ்ப்பாண நகரத்திலிருந்து வந்த பஸ்ஸிலிருந்து இறங்கி, தலையில் சேலையால் முக்காடிட்டுத் தலையைக் குனிந்தவாறு ஒரு பெண் பப்பன் கடையை நோக்கி விறுவிறுவென நடந்தார். பஸ் உறுமிக்கொண்டு மீண்டும் புறப்பட்டபோது அந்தப் பெண் சற்றே திரும்பிப் பார்த்து தன்னுடைய கையால் காதொன்றைப் பொத்திக்கொண்டார். அவரது தோளில் ஒரு கறுப்புநிறக் கைப்பை தொங்கியது. அலெக்ஸ் பாரதியின் கதையில் வரும் விபச்சாரியின் தோளிலும் ஒரு கறுப்புநிறக் கைப்பை தொங்கும்.

அவர் எங்கள் ட்ராக்டரைக் கடந்துபோனதும் ட்ராக்டர் சாரதி மோட்டாண்டி சிரித்துக்கொண்டே தலையைத் திருப்பி எங்களைப் பார்த்துச் சொன்னார்:

“தம்பியவை..சோடாமூடி போகிறது.”

கதையை இடைநிறுத்திய சித்திரைலிங்கம் என்னிடம், “அந்தக் காலத்தில் யாழ்ப்பாண இளைஞர்களிடையே எந்தச் சொல் அதிகமும் பிரபலம் சொல் பார்ப்ப்போம்?” என்று கேட்டான்.

இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது! எனவே நான் உடனேயே, “தமிழீழம் என்ற சொல்தான்” என்றேன்.
சித்திரைலிங்கம் எப்போதும்போலவே தனது முகத்தைச் சீரியஸாக வைத்துக்கொண்டு இல்லை என்பதுபோல தலையாட்டி என்னை மறுத்துவிட்டுக் கதையைத் தொடர்ந்தான்:

‘தமிழீழம்’ என்ற சொல்லைக் காட்டிலும் ‘சோடாமூடி’ என்ற சொல்தான் அப்போது யாழ்ப்பாண இளைஞர்களிடையே அதிகமும் பிரபலம். தமிழீழம் என்ற சொல்லைக் கேள்விப்படாதவன் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கலாம். ஆனால் சோடாமூடி என்ற சொல்லைத் தெரிந்திராதவன் எவனுமில்லை.

விபச்சாரம் செய்யும் பெண்களை அப்போது யாழ்ப்பாணத்தில் ‘சோடாமூடி’ எனச் சொல்வார்கள். இந்தப் பெயருக்கான காரணம் யாருக்கும் சரிவரத் தெரியவில்லை. ஒரு முறை திறந்தால் மறுபடியும் மூட முடியாது என்பதால் சோடாமூடியென்று பெயர் எனச் சிலர் சொன்னார்கள். ஒருவன் இருட்டுக்குள் ஒரு விபச்சாரியோடு உறவு கொண்டுவிட்டுச் சில்லறை நாணயங்கள் எனச் சொல்லிச் சில சோடாமூடிகளைக் கொடுத்து ஏமாற்றிவிட்டுச் சென்றதால் அந்தப் பெயர் வந்தது எனச் சிலர் சொன்னார்கள். யாழ்ப்பாண பஸ்நிலையத்தில் ஆதியில் நின்ற விபச்சாரிக்கு சோடாமூடியென்ற பட்டம் என்பதால் அதுவே எல்லா யாழ்ப்பாண விபச்சாரிகளிற்கும் அடையாளப் பெயராகத் தொடர்ந்தது என்றும் சிலர் சொன்னார்கள்.

ட்ராக்டர் ஓடிக்கொண்டிருக்கும்போதே நாங்கள் அய்வரும் ஆளுக்கொரு பக்கமாக பெட்டியிலிருந்து குதித்து வீதியோர மணற் திட்டுகளில் விழுந்தோம். 

எங்களில் மூத்தவன்தான் கதையை ஆரம்பித்தான்.

“கேள் சித்திரைலிங்கம்! ஊருக்குள் வந்து வேசையாடிவிட்டுப் போவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.”

அதுவொரு தெந்தெட்டான காலம் என்றுதான் சொல்லவேண்டும். இராணுவத்தை இயக்கங்கள் முகாம்களிற்குள் முடக்கிவிட்டிருந்தார்கள். பொலிஸ் நிலையங்களை இயக்கக்காரர்கள் தாக்கி அழிக்கத் தொடங்கிய பின்பு பொலிஸ் நிர்வாகம் ஊருக்குள் கிடையாது. பதிலுக்குப் பல இயக்கங்களும் இருந்து பொலிஸ் வேலையைச் செய்தாலும் எங்களுடைய சின்னஞ் சிறிய கிராமத்திற்குள் இயக்கங்களின் நடமாட்டம் அதிகமிருப்பதில்லை. இதனால் எங்களது கிராமத்தில் நாங்கள் நான்கு பேர்கள் சேர்ந்தால் எதையும் செய்யக்கூடிய ஒரு நிலையிருந்தது. கல்லுாரிகளில் படிக்கின்ற பொடியன்கள் என்று கிராமத்திற்குள் எங்களுக்குக் கொஞ்சம் மரியாதையுமிருந்தது. எங்களிலும் மூத்த இளைஞர்களில் சிலர் இந்தியாவிற்கு இயக்கப் பயிற்சிக்குப் போனதாலும் மற்றவர்கள் சவூதிக்கும் ஜெர்மனிக்கும் புறப்பட்டுப் போய்விட்டதாலும் விடலைகளான எங்களுடைய கைகளில்தான் கிராமமிருந்தது. நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் நாங்கள்தான் முன்னே நின்றோம்.

அராலிச் சந்தியையும் யாழ்ப்பாண நகரத்தையும் இணைக்கும் பிரதான வீதிதான் எங்கள் கிராமத்திற்குள்ளால் நீள்கிறது. அந்த வீதியால் போகும் வாகனங்கள், வீதியைக் கடக்கும் ஓர் ஆட்டை மாட்டைத் தப்பித் தவறி மோதிவிட்டால் நாங்கள்தான் பஞ்சாயத்து செய்வோம். எங்களுக்கு இயக்கத் தொடர்புகள் இருப்பது போன்றவொரு தோற்றத்தையும் ஊருக்குள் உருவாக்கி வைத்திருந்தோம். எப்போதாவது ஊருக்குள் இயக்கங்கள் வந்தால் நாங்கள்தான் முன்னின்று கூடமாட உதவிகள் செய்வோம். அப்போதெல்லாம் என்ன பெரிய உதவி..கூட்டங்கள் வைக்க இடம் தேடிக்கொடுப்பது, உணவுப் பார்சல்கள் பெற்றுக்கொடுப்பது அவ்வளவுதான்.

சில முன் இரவுகளில் பிரதான வீதியோரத்தில் பனை மரங்களிற்குப் பின்னால் மறைந்து நிற்போம். பனைமட்டை அல்லது தடியை உரப் பையால் சுற்றி வைத்திருந்து துவக்குப் போல பாவனை செய்வோம். வீதியால் தனியாக ஏதாவது வாகனம் வரும்போது பனைமர மறைவிலிருந்து திடீரென ஆளுக்கொரு திசையில் வீதியில் குதிப்போம். வாகனங்களை நிறுத்தச் சொல்லி ‘செக்’ செய்வோம். பின்பு பனங்காட்டிற்குள் மறைந்துபோவோம் . இயக்கம் போல பாவனை செய்வது எங்களுக்கொரு ‘த்ரில்’ விளையாட்டு. வாகனத்தில் வருபவர்கள் எங்களை இயக்கம் என நினைத்து வியப்பும் மிரட்சியும் பணிவுமாக எங்களைப் பார்ப்பதில் எங்களுக்கொரு போதை. நான் விபச்சாரி ஒருத்தியை அதுவரை பார்த்திருக்காதது போலவே வாகனக்காரர்களிலும் பலர் இயக்கப் பொடியன்களை அதுவரை கண்டிருக்கமாட்டார்கள்.

சில சமயங்களில் வீதியில் தனியாக வரும் மோட்டார் சைக்கிள்களைக் கடத்தி அரை மணிநேரம் காத்திருக்குமாறு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் சொல்லிவிட்டு ஏதோ தாக்குதலுக்குப் போகின்றவர்கள் போன்ற தோரணையில் எங்களில் மூவர் மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறக்க, மிச்சப் பேர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவரை பனைங்கூடலிற்குள் அழைத்துச் சென்று தடுத்து வைத்து ஏதாவது ‘அட்டாக்’ கதை சொல்லித் தாக்காட்டிக்கொண்டிருப்பார்கள். சொன்னமாதிரியே அரைமணி நேரத்தில் திரும்பவும் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்துவிடுவோம். மோட்டார் சைக்கிள் ஓட்ட அந்த வயதில் யாருக்குத்தான் ஆசையிருக்காது! 

இப்போது, பப்பன் கடைக்குள் நடக்கும் விபச்சாரத்தை ஒழிப்பதென நாங்கள் தீர்மானித்தோம். பப்பன் கடைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, அந்த மஞ்சள் நிற விபச்சாரியை அங்கிருந்து துரத்திவிடுவதாக முடிவு செய்தோம். வழமைபோலவே அன்றைக்கான புனைபெயர்களை நாங்கள் எங்களுக்குச் சூடிக்கொண்டோம். இயக்கப் பாணியில் தாக்குதலொன்றுக்குச் செல்லும்போது எங்களிற்குள் ஆளையாள் சொந்தப் பெயரில் அழைத்துக்கொள்வது எங்களது வழக்கமில்லை. 

எங்களில் மூத்தவன் எப்போதும் தனக்கு முஸ்லீம் பெயர்களைத்தான் வைத்துக்கொள்வான். அரபுப் பெயர்களில் அவனுக்கு ஒரு மோகமிருந்தது. பப்பன் கடைத் தாக்குதலுக்காக அவன் தனக்கு வைத்துக்கொண்ட பெயர் அலாவுதீன். நான் என் பெயரைச் சற்றே மாற்றி வைத்தியலிங்கம் என வைத்துக்கொண்டேன். எனக்கு அப்படியான பெயர்களில் ஓர் ஈர்ப்பு. மற்ற மூவரும் பிரசாத், ரோம், எஸ்ஸெல்லார் எனப் பெயர்களை வைத்துக்கொண்டார்கள்.

நேரம் அப்போது மாலை ஆறு மணியிருக்கும். நாங்கள் அய்வரும் சட்டைக் கைகளை மடித்துவிட்டுக்கொண்டு ஒருவர் பின் ஒருவராகப் பப்பன் கடையை நோக்கி வேகமாக நடந்தோம். இந்த நேரத்திலெல்லாம் இந்தப் பிரதான வீதிப் பகுதி பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாமற்தான் கிடக்கும். கிராம மக்கள் பஸ் ஏறுவதற்கு மட்டும்தான் பிரதான வீதிக்கு வருவார்கள். மாலை ஆறுமணிக்குப் பிறகு யாரும் கிராமத்திலிருந்து வெளியே கிளம்பமாட்டார்கள். எப்போதாவது வரும் பஸ்ஸிலிருந்து நகரத்தில் வேலை முடிந்துவரும் ஓரிருவர் பிரதான வீதியில் இறங்கிக் குடிமனைக்குள் போனால்தானுண்டு. 

நாங்கள் பப்பன் கடையைச் சுற்றிவளைத்து உள்ளே பாய்ந்தபோது, பப்பனின் கடை அடைக்கப்பட்டு ஓர் ஆள் குனிந்து நுழையுமளவிற்கு வாசற் தட்டி திறந்திருந்தது. முதலில் அந்தத் தட்டியைத்தான் பிடுங்கி எறிந்தோம். கடைக்கு உள்ளே பப்பன் அடுப்பில் வேலையாக இருந்தார். தரையில் சாயவோலைப் பாயில் அமர்ந்து பப்பனின் மனைவியும் சற்று முன்னே பஸ்ஸிலிருந்து இறங்கிவந்த பெண்ணும் வெற்றிலை சப்பிக்கொண்டிருந்தார்கள். முன்னால் போன அலாவுதீன் தடாலடியாக அந்தப் பெண்ணுக்கு கன்னத்தில் அறைந்த அறையின் வேகத்தில் அந்தப் பெண்ணின் வாயிலிருந்த வெற்றிலைச் சாறு அலாவுதீனின் டிஸ்கோ சேர்ட் முழுவதும் தெறித்தது. அந்தப் பெண் திகைத்துப்போய் தனது கன்னங்களை இரண்டு கைகளாலும் பொத்திக்கொண்டு எழுந்து நின்றார். கடைசியாக நான் ஒரு விபச்சாரியை என் கண்களால் கண்டுவிட்டேன். 

அந்தப் பெண், கிராமத்தவர்கள் பறைந்த மாதிரி மஞ்சள் நிறப் பெண்ணல்ல. பொதுநிறமான பெண்தான். ஆனால் முகத்தில் மஞ்சளை அப்பிப் பூசிக் கழுவியது பளீரெனத் தெரிந்தது. எங்களது கிராமத்தில் அப்போது முகத்துக்கு மஞ்சள் பூசும் பழக்கமே இருந்ததில்லை. அந்தப் பெண்ணின் அகன்ற நெற்றியில் விபூதித் தீற்றலும் அதன் கீழே கறுப்பு நிறத்தில் திலகமுமிருந்தன. அந்தப் பெண்ணின் உயரம் சாதாரணமாக இலங்கையில் காணமுடியாத உயரம். கிட்டத்தட்ட ஆறடி இருப்பார். சற்றே மெலிந்த தோற்றம். பரட்டையான சுருள் முடி , நாடியில் எம்.ஜி.ஆருக்கு இருப்பது போலவொரு வெட்டு. அவர் கட்டியிருந்த ஊதா நிறச் சேலை அவரது கால்களை முழுவதுமாக மறைக்க இயலாமல் பாதங்களிற்கு ஓரடி மேலே நின்றது. வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள் இருக்கலாம். ஒரு பக்கக் காதுத் துவாரத்திற்குள் பஞ்சு வைத்திருந்தார். கறுப்பு நிறம் ஊறிய அந்தப் பஞ்சு அருவருப்பாயிருந்தது. ஆனால் வெற்றிலைச் சாறால் கனிந்திருந்த அவரது மெல்லிய உதடுகளின் வசீகரத்தை என் வாழ்க்கை முழுவதும் என்னால் மறக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். அதை மறப்பதானால் சத்திமுத்தப் பாணரின் ‘பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்’ என்ற வார்த்தைகள் ஒருபோதும் என் நினைவில் வராமலிருக்க வேண்டும்.

நாங்கள் பப்பன் கடையை நாசம் செய்தோம். தேநீர் பானையைத் துாக்கி வீதியில் வீசினோம். மூன்றே நிமிடங்களில் நாங்கள் அய்வரும் சேர்ந்து பப்பன் கடையைச் செத்தை வேறு கூரை வேறாகப் பிரித்துப் போட்டுவிட்டோம். பப்பனுக்கும் கன்னத்தில் சில அறைகளும் புட்டத்தில் காலால் சில உதைகளும் விழுந்தன.

“இது என்ன வேசையாடுவதற்கான ஊரென்று நினைத்தாயா?”

“அய்யோ தம்பிமார் நான் அப்படிச் செய்வேனா..இது என்னுடைய தங்கச்சி, என்னைப் பார்த்துவிட்டுப் போக வந்திருக்கிறாள்.”

பிரசாத் சொன்னான், “நாங்கள் இவளை விசாரிக்க வேண்டும்!”

அப்போதுதான் பப்பனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நாங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருக்க வேண்டும். யார் இயக்கம் யார் இயக்கமில்லை எனக் கண்டுபிடிக்க முடியாத காலமல்லவா அது. பப்பன் நடுங்கத் தொடங்கினார். பப்பனின் மனைவி எங்களின் கால்களில் விழுந்து மன்றாடத் தொடங்கினார். அந்தப் மஞ்சள் நிறப் பெண்ணோ இப்போது திகைப்பிலிருந்து நீங்கி எங்களைச் சாதாரணமாகப் பார்த்தார். எங்களை இயக்கம் என அவர் நம்பியதால் ஒருவேளை அவர் பாதுகாப்பாக உணர்ந்திருக்கலாம்.

நாங்கள் பப்பன் கடைக்குள் நுழையும்வரை, அந்தப் பெண்ணை அடித்து மறுபடியும் யாழ்ப்பாணத்திற்குத் துரத்திவிடுவதே எங்களது திட்டமாயிருந்தது. ஆனால் இப்போது பிரசாத் அந்தப் பெண்ணை விசாரிக்க வேண்டும் எனச் சொன்னவுடன் அதையும் செய்துவிடலாம் என எங்களிற்குத் தோன்றியது.

நாங்கள் அந்தப் பெண்ணை எங்களுடன் வரச் சொன்னோம். அந்தப் பெண் கொஞ்சம் தயங்கியபோது எஸ்ஸெல்லார் காலைத் துாக்கி அந்தப் பெண்ணின் வயிற்றில் எத்தினான். அந்தப் பெண் ‘அம்மோய்’ என முனகிக்கொண்டு வயிற்றைக் கைகளால் பொத்திக்கொண்டு தரையில் உட்கார்ந்தார். பின்புறமிருந்து அவரது முதுகில் ஒரு மிதி விழுந்தது. அந்தப் பெண் எதுவும் பேசாமல் எழுந்து தனது கறுப்பு நிறக் கைப்பையையும் எடுத்துக்கொண்டு எங்களுடன் வரத் தயாரானார்.

நாங்கள் மஞ்சள் நிறப் பெண்ணை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த பனங்காட்டிற்குள் நுழைந்தோம். எங்களில் சின்னவனான ரோம் என்று பெயர் வைத்துக்கொண்டவனை, யாராவது வருகிறார்களா என எல்லாப் பக்கமும் சுற்றிப் பார் என ‘சென்ரி’யாகப் போட்டுவிட்டு, அந்தப் பெண்மீதான புலன் விசாரணையைத் தொடங்கினோம். அந்தப் பெண் எந்த ஒளிவு மறைவுமின்றி, தனது பிள்ளைகளிற்குச் சாப்பாடு கொடுப்பதற்காக விபச்சாரம் செய்வதாகச் சொன்னார். கதைப் புத்தகங்களில் வரும் எல்லா விபச்சாரிகளும் இதைத்தானே சொல்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். ‘பொன்னகரம்’ கதை ஞாபகம் வருகிறதல்லவா உனக்கு..எங்களது விசாரணை தொடரலாயிற்று.

“அடையாள அட்டையை காட்டு..”
“இல்லை..தொலைந்து போய்விட்டது.”
“எந்த ஊர்?”
“கோணாந்தோட்டம்..”
“ஒரு ஆளுக்கு எவ்வளவு வாங்குவாய்?”
“இருபத்தைந்து ரூபாய்..சில நேரம் முப்பது ரூபாய்..”
“புருஷன் இல்லையா?”
“மன்னாரில் கருவாடு காயப்போடும் வேலைக்கு போனவர் காணாமற் போய்விட்டார்.”
“பிள்ளைகள் ?”
“மூன்று பிள்ளைகள். மூத்தவனிற்கு அய்ந்து வயது, கடைசிக்கு இரண்டு வயது”

மற்றைய மூன்றுபேரும் கடகடவென மாறி மாறிக் கேள்விகள் கேட்டு விசாரணை நடத்த நான் மட்டும் சும்மா நிற்பது எனக்குக் கூச்சமாயிருந்தது. நான் மஞ்சள் நிறப் பெண்ணின் கன்னத்தில் ஓர் அறை கொடுத்துவிட்டு அவரது கைப்பையைப் பறித்துக்கொண்டேன். நான் இழுத்த வேகத்தில் கைப்பையின் பட்டை கிழிந்து பை கையோடு வந்துவிட்டது.

அந்தக் கைப்பையைத் திறந்து பார்த்தேன். உள்ளே ஒரு கைக்குட்டை, சில சில்லறை நாணயங்கள், ஒரு பொட்டலத்தில் மஞ்சள் கிழங்குத் துண்டுகள், சீப்பு, பழுப்பேறிய ஒரு வெள்ளைத் துணித்துண்டு இவற்றுடன் ஒரு புத்தகமும் இருந்தது. நான் அந்தத் துணியைத் தொட்டுவிட்டாமல் கவனமாகப் புத்தகத்தை விரல்களால் துாக்கியெடுத்துப் பிரித்துப் பார்த்தேன். அந்தப் புத்தகம் பிரபஞ்சன் எழுதிய ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு.

எனக்கு அப்போது கதைப் புத்தகங்கள் படிப்பதில் ஒரு வெறியேயிருந்தது. ஊரில் நல்ல புத்தகங்கள் கிடைப்பது குறைவு. எங்களது கிராமசபை நுாலகத்திலிருந்த இருநுாறு புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டிருந்தேன். தமிழ்வாணன், சுஜாதா, ஜெகசிற்பியன், ஜி.நேசன், செங்கை ஆழியான் எனப் படித்திருந்தேன். புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதைத் தொகுப்புக் கூட அப்போதே படித்திருந்தேன். ஆனால் பிரபஞ்சன் என்ற பெயரை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். நான் அந்தப் புத்தகத்தை என்னிடமே வைத்துக்கொண்டு கைப்பையை அந்தப் பெண் முன்னால் துாக்கி வீசினேன்.

அந்தப் பெண் குனிந்து கைப்பையை எடுத்துக்கொண்டு என் கையிலிருந்த புத்தகத்தையே பார்த்துக்கொண்டு நின்றார். அவரது மெல்லிய உதடுகள் குவிந்திருந்தன. 

“வேசையாடுவதற்கு எதற்குப் புத்தகம்?” எனக் குரலை உயர்த்தி உறுக்கிக் கேட்டேன். 

“அரைவாசிப் புஸ்தகம்தான் படித்திருக்கிறேன்…” என்று அந்தப் பெண் சொன்னார். அப்போது அவர் புன்னகைப்பது போலத்தான் எனக்குத் தோன்றியது. அந்தப் புத்தகத்தாலேயே நான் அந்தப் பெண்ணின் கன்னத்தில் அடித்தேன். அந்தப் புத்தகத்தை அந்தப் பெண்ணிடமிருந்து எடுத்துக்கொள்வதென நான் புத்தகத்தைப் பார்த்தபோதே முடிவு செய்திருந்தேன்.

இப்போது எங்களில் மூத்தவனான அலாவுதீன், அந்தப் பெண்ணுக்கு அறிவுரைகள் சொல்லத் தொடங்கினான்.
ஒழுக்கமாக வாழ்ந்து கூலி வேலை செய்தாவது பிள்ளைகளைக் காப்பாற்றச் சொன்னான். அதன் பின்பு அந்தப் பெண்ணிற்கு, விபச்சாரம் செய்ததற்காகத் தண்டனை வழங்கலானோம். 

எங்களில் ஒருவன் கையில் காய்ந்த பனைமட்டையுடன் தயாரானான். அவன் “சேலையைத் துாக்கிப் பிடி” எனச் சொல்ல, அந்தப் பெண் “அடிக்காதீர்கள்” என முனகியவாறே தனது சேலையை உள்பாவாடையோடு சேர்த்து முழங்கால்கள்வரை துாக்கினார். “இன்னும் தூக்கு” என்று சொல்லி அந்தப் பெண்ணின் பிடரியில் ஒரு தட்டுத் தட்டினான் அலாவுதீன். இப்போது மஞ்சள் நிறப்பெண் இடுப்புவரை தூக்கினார். அந்தப் பெண் உள்ளாடை எதுவும் அணிந்திருக்கவில்லை. அவரது இடுப்பில் இருந்த கறுப்புக் கயிறு அரைஞாண்கொடி மஞ்சள் படிந்து அழுக்கு மஞ்சள் கயிறாயிருந்தது. அதன் கீழே காய்ந்து வற்றிப்போயிருந்த அவரது புட்டங்களில் அடர்த்தியாகத் தேமல் படர்ந்திருந்தது. அந்தத் தேமல் மீது நான்கு பனைமட்டை அடிகள் விழுந்தன. ஒவ்வொரு அடிக்கும் முனகிக்கொண்டே அந்தப் பெண் கால் விரல்களில் எழுந்து நின்றார். அவரது கைகள் ஒவ்வொரு அடிக்குப் பின்பாகவும் பின் பகுதியைத் தேய்த்துவிட்டுக்கொண்டன. அவர் வாயில் ‘ஸ்ஸ்ஸ்…’ என்ற மெல்லிய ஊளை வலியோடு எழுந்தது. 

தண்டனை முடிந்ததும், இனிமேலும் ஊருக்குள் இருக்காமல் பஸ்ஸைப் பிடித்து உடனடியாக யாழ்ப்பாணம் போகுமாறு அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பினோம். அந்தப் பெண் என்னைப் பார்த்து ‘புஸ்தகம்’ என்றார். ‘ஓடு’ எனச் சொல்லி இன்னுமொரு உதை கிடைத்தது மஞ்சள் நிறப் பெண்ணுக்கு.

நான் வீட்டுக்கு வந்ததும் எனது அறைக்குள் போய் கட்டிலில் படுத்துக்கொண்டு பிரபஞ்சனின் புத்தகத்தை விரித்துப் படிக்கத் தொடங்கினேன். புத்தகத்தில் மனம் செல்வதாக இல்லை. புத்தகத்தின் பக்கங்களில் அந்தப் பெண்ணின் இடுப்பிலிருந்த மஞ்சள் அரைஞாண்கொடி நாடாப்புழுப்போல நெளியலாயிற்று. நான் என் வாழ்க்கையில் முதன் முதலாகப் பார்த்த வயது வந்த பெண்ணின் நிர்வாணம் அதுதான். கட்டிலில் எழுந்து உட்கார்ந்து அந்தப் புத்தகத்தில் துாமைத் துணியின் வீச்சம் வருகிறதா என மறுபடியும் மறுபடியும் முகர்ந்து பார்த்தேன்.

இரவுணவைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பிரபஞ்சனின் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மெதுமெதுவாகப் புத்தகம் என்னைத் தன்னுள் உள்வாங்கத் தொடங்கியது. மூன்றாவது கதையைப் படித்து முடிக்கும் தறுவாயில் என் அறையின் ஜன்னலில் ரோம் தோன்றினான்.

வெளியே வந்தபோது ஒழுங்கைக்குள் அலாவுதீன் நின்றான். ‘அந்த விபச்சாரி ஊரைவிட்டுப் போய்விட்டாளா எனப் பார்க்கப் போகிறோம் வருகிறாயா?’ என்றார்கள். வீட்டுக்குள் அப்பா சாய்மனைக் கட்டிலில் இருந்து பிபிஸி தமிழ் செய்தியறிக்கை கேட்டுக்கொண்டிருந்தார். அம்மாவிடம், நாடகம் பழகப் போகிறோம் எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். ‘நாளைக்குக் கல்லூரி இருக்கிறதல்லவா..சீக்கிரமாக வந்துவிடு’ என்றார் அம்மா. மற்றைய இருவரின் வீடுகளிற்கும் போய் அவர்களையும் கூட்டிக்கொண்டு போனோம். அவர்களின் வீட்டிலும் அதே நாடகம் பழகும் பொய்தான். இந்தப் பொய் எப்போதும் செல்லுபடியாகக் கூடிய பொய். ஏனென்றால் நாங்கள் உண்மையிலேயே வருடத்திற்கு இரண்டு நாடகங்களாவது கிராமக் கோயில் திருவிழாக்களில் அரகேற்றிவிடுவோம். பிரசாத் நாடகத்தை எழுதுவான். அலாவுதீனுக்கு எல்லா நாடகத்திலும் கதாநாயகன் வேடம். கதாநாயகி பாத்திரம் எப்போதும் எனக்குத்தான். உனக்குத் தெரியுமா? நான் அவுஸ்ரேலியா வந்த புதிதில் தமிழ்ச் சங்க விழாவில் சந்திரமதிக்கு நடித்திருக்கிறேன்.

அப்போது நேரம் இரவு பத்துக்குக் கிட்டமுட்டயிருக்கும். நாங்கள் ஊர்மனையைத் தாண்டி, வயல்வெளிகளையும் பனங்கூடல்களையும் கடந்து பிரதான வீதியில் ஏறினோம். வீதி அமைதியாகக் கிடந்தது. அப்போது இரவு நேரங்களில் பண்ணை வீதியால் வரும் வாகனங்களின் மீது கோட்டையிலிருந்த இராணுவத்தினர் இடைக்கிடை சுடுவதுண்டு. அதனால் பத்து மணிக்குப் பிறகு அந்த ரோட்டில் போக்குவரத்தே இருக்காது.
நாங்கள் பப்பனின் கடையைப் பதுங்கிப் பதுங்கி நெருங்கியபோது உள்ளே பேச்சுக் குரல்கள் கேட்டன. அது எனக்கு மகிழச்சியைக் கொடுத்தது உண்மை. 

நாங்கள் பிய்த்துப் போட்டுவிட்ட வந்த பப்பன் கடையின் செத்தைகள் இப்போது மறுபடியும் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்தன. வெளியிலிருந்து செத்தைத் துவாரம் வழியாகப் பார்த்தபோது கூரையில்லாத அந்த அடைப்புக்குள் குப்பி விளக்கு வெளிச்சத்தில் பப்பனும் அவரது மனைவியும் தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகே சாயவோலைப் பாயில் அந்த மஞ்சள் நிறப் பெண் படுத்திருந்தார்.
நாங்கள் இருளில் நின்றுகொண்டு “அந்தப் பட்ட வேசையை வெளியே அனுப்பு” எனக் குரல் கொடுத்தோம். பப்பன் விளக்கைக் கையிலெடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.

“அதுதானே அவளைத் தாறுமாறாக அடித்துவிட்டீர்கள் இனியென்ன தம்பிமார்?”
இப்போதும் பப்பனின் குரலில் பணிவு இருந்தாலும் அந்தக் குரலில் ஓர் எரிச்சலும் இழையோடுவது போலிருந்தது.

“அவளை ஏன் இன்னும் இங்கே வைத்திருக்கிறாய்?”

“அனுப்பத்தான் பார்த்தேன்..ஆனால் பஸ் ஒன்றும் வரவில்லை. காலையில் முதல் பஸ்ஸில் அவள் போய்விடுவாள் தம்பி.”

அந்த மஞ்சள் நிறப் பெண் சத்தம் கேட்டுத் துாக்கத்திலிருந்து எழுந்திருந்தார். குப்பி விளக்கின் ஒளியில் அவரது நிழல் செத்தையில் ஆடியது. அவரை நாங்கள் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றோம். இப்போது பப்பனுக்கு நாங்கள் இயக்கப்பொடியன்கள் இல்லை என்பது தெளிவாகவே தெரிந்திருக்கும். ஆனாலும் நாங்கள் ஊர்ப் பொடியன்கள். வந்தான் வரத்தானான அவர் எங்களை எதுவும் செய்துவிட முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். என்றாலும் அவர் அந்தப் பெண்ணை எங்களோடு இரவில் அனுப்ப முடியாதென்றும் எதுவானாலும் காலையில் வந்து பேசிக்கொள்ளலாம் என்றும் சொன்னார்.

நாங்கள் பப்பனை மண்ணில் தள்ளிக் கால்களால் உதைப்பதைப் பார்த்ததும் அந்த மஞ்சள் நிறப் பெண் எங்களோடு வரத் தயாரானார். இவ்வளவு பிரச்சினையிலும் பப்பனின் மனைவி வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் எங்களை எரித்துவிடுவதுபோல பார்த்துக்கொண்டிருந்தார். 

அந்த மஞ்சள் நிறப் பெண்ணோடு நிலா வெளிச்சத்தில் நாங்கள் பிரதான வீதியால் நடந்தோம். இப்போது எஸ்ஸெல்லார் ஒரு வில்லுக்கத்தி கொண்டுவந்திருந்தான். அதை அந்தப் பெண்ணினது கழுத்தில் வைத்து அவரை முன்னே நடத்தினான்.

கத்தியை உணர்ந்ததும் அந்தப் பெண் ”எனக்குத் தலையை மொட்டை வழிக்கத்தானே போகிறீர்கள்?” என்று கேட்டார்.

பனங்காட்டுக்கு நடுவே அந்தப் பெண்ணை உட்கார வைத்துவிட்டு நாங்கள் அய்வரும் சுற்றி உட்கார்ந்துகொண்டோம். ஜெயமோகன் எழுதும் மகாபாரதம் தொடர் படிக்கிறாயா என்ன? நீ படிக்கமாட்டாய்!
எங்களில் யார் அந்தப் பெண்ணை முதலில் தொட்டது என்பதை அந்த இருளுக்குள் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் எங்கள் எல்லோரது கைகளும் ஒரே நேரத்தில் அந்தப் பெண்ணின் உடலின் பாகங்களைப் பிசைந்துகொண்டிருந்தன.

இப்போது அந்தப் பெண்ணைத் தவிர நாங்கள் யாருமே பேசவில்லை. அந்தப் பெண் மட்டுமே பேசினார். ‘என்னை விட்டுவிடுவீர்கள் இல்லையா..’ எனத் திரும்பத் திரும்பக் கேட்டார். அந்தப் பெண்ணின் மார்பில் நான் முகத்தைத் தேய்த்தபோது அவர் என் தலையைத் தடவிக் கொடுத்தது போலத்தானிருந்தது. ‘உங்களுடைய பெயர் என்ன? என்று மஞ்சள் நிறப் பெண் என்னிடம் கேட்டார். நான் ‘வைத்தியலிங்கம்’ எனக் கிசுகிசுத்தபோது அந்தப் பெண்ணின் மார்பு ஒருமுறை குலுங்கியது.

அந்தப் பெண் மூத்திரம் பெய்து விட்டு வருகிறேன் என்றார். இங்கேயே பெய் என்றோம். 

இவ்வளவு ஆட்கள் இருந்தால் எனக்கு மூத்திரம் வராது என்றார் அந்தப் பெண். நால்வர் விலகிச் செல்ல ஒருவன் மட்டும் அந்தப் பெண்ணுடன் நின்றான். அய்ந்து நிமிடத்துக்குப் பிறகு அவன் அடுத்தவனைக் கூப்பிட்டான். இப்படியாகப் பத்துத் தடவைகள் நிகழ்ந்தன.

நான் அந்தப் பெண்ணின் மீது இயங்கியபோது அவரது மெல்லிய வசீகர உதடுகளில் முத்தமிட முயன்றேன். அந்தப் பெண் உதடுகளை உள்பக்கமாக மடித்து வாயை இறுக மூடிக்கொண்டிருப்பது தெரிந்தது. நான் அவரது வாயில் முத்தமிட முயன்றபோது அவர் முகத்தை அங்குமிங்குமாக அசைத்தவாறிருந்தார். நான் அவரின் வாய்க்குள் எனது ஆட்காட்டி விரலை வைத்து அவரது வாயைத் திறக்க முயன்றேன். வாயைத் திறந்து மஞ்சள் நிறப் பெண் மெல்லிய குரலில் கேட்டார்:

“நான் இன்னும் அந்தப் புஸ்தகத்தைப் படித்து முடிக்கவில்லை திருப்பித் தருகிறீர்களா தம்பி..”
காலையில் அப்பாவின் மோட்டார் சைக்கிளில் அவரோடு ஏறி கல்லுாரிக்குச் சென்றுவிட்டேன். பாடப் புத்தகங்களோடு பிரபஞ்சனின் நூலையும் எடுத்துப் போயிருந்தேன். ஆனால் அந்தப் புத்தகத்தின் ஒரு பந்தியைக் கூட என்னால் மனமூன்றிப் படிக்க முடியாமலிருந்தது. 

முழுவதுமாக, கடந்த இரவு நடந்தவை பற்றிய யோசனைதான் எனக்கு. நடந்த விசயம் ஊருக்குள் தெரியவருமா? பிரச்சினை இயக்கங்கள் வரை போகுமா? ஏதாவதொரு இயக்கம் எங்கள் அய்வரையும் வரிசையாக மின்கம்பங்களில் கட்டி, கழுத்தில் ‘பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள்’ என அட்டை எழுதிப்போட்டு நெற்றியில் சுடுமா என்றெல்லாம் மண்டை ஓடிவெளித்தது. நாங்கள் மஞ்சள் நிறப் பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை என்றுதான் என் மூளை சொல்லியது. அந்தப் பெண் எங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே. அந்தப் பெண்ணை அனுப்பும்போது அய்ந்துபேரும் கையிலிருந்த காசுகளைப் போட்டுக் கிட்டத்தட்ட நூறு ரூபாய்கள் அந்தப் பெண்ணிடம் கொடுத்திருந்தோம். நடந்தது காசுக்கு விபச்சாரம். விபச்சாரம் செய்தவர்கள் இயக்கத்திடம் போனால் முதலில் அவர்களுக்குத்தான் பிரச்சினை. எனவே அவர்கள் இயக்கத்திடம் போக வாய்ப்பில்லை. எங்களைப் பற்றி ஊருக்குள் பப்பன் சொன்னாலும், சனங்கள் நாங்கள் சொல்வதைத்தான் நம்புவார்கள். தவிரவும் பப்பன் தனது கடைக்குள் வைத்து விபச்சாரம் நடத்துவதாக ஏற்கனவே ஊருக்குள் பேச்சிருந்ததால் பப்பனின் பேச்சு ஊருக்குள் எடுபடாது. நாங்கள் செய்ததற்குச் சாட்சிகளும் கிடையாது. நாங்கள் அய்ந்துபேரும் எங்களது வாய்களை இறுக மூடிக்கொண்டிருந்தால் அதுவே போதுமானது.

அதற்குப் பின்பு சரியாக முப்பத்து நான்கு வருடங்கள் எங்களது வாய்கள் மூடியிருந்தன. இப்போதுதான் முதன்முதலாக உன் முன்னேதான் வாயைத் திறந்து நான் அது பற்றிப் பேசுகிறேன்.
அந்த இரவு நிகழ்ந்து ஆறுமாதத்திலெல்லாம் நாங்கள் குடும்பத்தோடு கொழும்புக்குப் போய் அங்கிருந்து அவுஸ்ரேலியா வந்துவிட்டோம். மற்றைய நான்கு பேரில் ஒருவன் கனடா போய்விட்டான். காலப்போக்கில் மற்றைய மூவரும் ஒருவர் பின் ஒருவராக அய்ரோப்பா போய்விட்டார்கள். உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் நண்பர்கள் அய்ந்துபேரிடமும் எப்போதும் தொடர்பும் உறவுமிருக்கிறது.
நாங்கள் அய்வரும் ஒருமுறை ஜெர்மனியில் குடும்பங்களோடு சந்தித்துக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது. ஆளையாள் தனியாகவும் சந்தித்திருக்கிறோம். சந்திக்கும்போதெல்லாம் பழைய கதைகளைப் பற்றி நாங்கள் பேசி மாளாது. ஊரில் நடந்த ஒவ்வொரு சிறு சம்பவத்தையும் மனதில் ஞாபகம் வைத்துப் பேசிச் சிரிப்போம். சிறுவயதில் நாங்கள் செய்த நன்மை தீமைகள் எல்லாவற்றையும் பற்றிப் பேசிக்கொள்வோம். ஆளையாள் கேலி செய்வோம் . ஆனால் ஒரேயொரு முறைகூட நாங்கள் அந்த இரவு குறித்தோ, அந்த மஞ்சள் நிறப் பெண் குறித்தோ சாடைமாடையாகக் கூட எங்களிற்குள் பேசிக்கொண்டதே கிடையாது. அன்றைய இரவில் நடந்த சம்பவம் என் மனதின் ஒரு மூலையில் அவ்வப்போது நெருடிக்கொண்டிருந்தாலும் அது என்னை எப்போதும் பெரிதாகத் தொந்தரவுபடுத்தியதில்லை என்றுதான் சொல்வேன். ஆனால் நான் பிரபஞ்சனைச் சந்தித்த இரவில் எல்லாம் மாறிப் போயிற்று.

இரண்டு வருடங்களிற்கு முன்பு, ஜனவரி விடுமுறையில் மனைவியையும் பிள்ளைகளையும் கூட்டிச்சென்று யாழ்ப்பாணத்தில் விட்டுவிட்டு நான் நான்குநாள் பயணமாகச் சென்னை புத்தகச் சந்தைக்குப் போனேன். கே.கே. நகரில்தான் தங்கியிருந்தேன். 

மூன்றாவது நாள் இரவில் கே.கே.நகரின் பொன்னம்பலம் சாலையிலுள்ள வீதியோரத் தேநீர்க் கடையொன்றில் தேநீர் சொல்லிவிட்டு நின்றுகொண்டிருந்தபோது, முப்பத்துநான்கு வருடங்களிற்கு முன்பு என் கையில் கிடைத்த புத்தகத்தின் பின்னட்டையிலிருந்த உருவம் என்னை நோக்கிச் சடுதியில் வருவதை உணர்ந்து உறைந்துபோய்விட்டேன். நீலநிறத்தில் ஜிப்பாவும் வெள்ளை நிறத்தில் காற்சட்டையும் அணிந்திருந்த பிரபஞ்சன் அங்குமிங்குமாகப் பராக்குப் பார்த்தவாறு நடந்து வருவதைக் கண்டேன். அவரிடம் போய்ப் பேசலாமா வேண்டாமா என்ற சிறு மனப் போராட்டத்தில் நான் இருந்தபோது, அவரது பார்வை என்னில் விழுவது போலிருந்தது. அந்தப் பார்வை என்னை அவரிடம் அழைத்துக்கொண்டது.

அவர் முன்னே போய் என் நெஞ்சில் கைவைத்துத் தலைசாய்த்து வணக்கம் சொன்னேன். முகம் மலர்ந்து சிரித்தார். 

“உங்களுடைய எல்லா நூல்களையும் படித்திருக்கிறேன்..ஒரு தேநீர் சாப்பிடலாமா?” என்றேன். “சாப்பிடலாமே” என்றார் பிரபஞ்சன் . 

அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை. மஞ்சள் நிறப் பெண் என் தலையை உலுக்கத் தொடங்கியிருந்தார். எச்சிலை விழுங்கியவாறு ‘வானம் வசப்படும்’ நாவலின் சிறப்புகளைச் சொல்லத் தொடங்கினேன். தேநீர் கோப்பையை வைத்திருந்த என் கை நடுங்கிக்கொண்டிருந்தது. பிரபஞ்சன் சட்டென என் கையைப் பிடித்தார். “உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..” என்று மறுபடியும் சிரித்தார். அவரில் கமழ்ந்த நறுமணம் என்னை மூழ்கடித்தது.

அதிக நேரம் நாங்கள் பேசவில்லை. அவர் ரசித்துத் தேநீரைப் பருகி, அதன் பின்பு ஒரு சிகரெட்டை அவர் மெதுமெதுவாகப் புகைத்து முடிக்கும்வரைதான் பேசினோம். அது முதற் சந்திப்பு என்ற மாதிரியில்லாமல் வெகுநாளைய நண்பன் ஒருவனோடு பேசுவதுபோல பிரபஞ்சன் பேசிக்கொண்டிருந்தார். என் முன்னே பிரபஞ்சன் வெளிச்சச் சொரூபம் போல ஒளிர்ந்துகொண்டிருந்தார். அவர் முன்னே என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிப்போய் “எனக்கும் உங்களுக்கும் ஒரு தொடர்புள்ளது, எனது பெயர் சித்திரைலிங்கம் உங்களது இயற்பெயர் வைத்தியலிங்கம்” என்றெல்லாம் உளறிக்கொட்டினேன். வைத்தியலிங்கம் என்று உச்சரிக்கும்போதே நான் மஞ்சள் நிறப் பெண்ணிடம் ‘என் பெயர் வைத்தியலிங்கம்’ எனச் சொல்லிவைத்தது என் மூளையில் தைக்க அங்கே துவாரம் ஏற்பட்டு அது பெரிதாகலாயிற்று.. 

பேச்சின் போக்கில் பிரபஞ்சன் “உண்மையிலேயே வாழ்க்கை என்பது எனக்கு எழுத்துத்தான் சித்திரைலிங்கம், ஆனால் அந்த வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளதா என்பதுதானே தவிர்க்க முடியாத நம்முடைய வாழ்நாள் கேள்வியாகவுமிருக்கிறது இல்லையா…” என்று சொல்லிப் பேசிக்கொண்டே போனார். ஆனால் என்னால் அவரது பேச்சைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை. என் மூளைத் துவாரத்தில் மஞ்சள் நிறப் பெண் புகுந்துகொண்டு என்னை வதைக்கத் தொடங்கினார்.

3

முப்பது கிலோ புத்தகப் பொதியுடன் விமானத்தில் கொழும்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது என் மனம் முழுவதும் மஞ்சள் நிறப் பெண்ணே நிறைந்திருந்தார். என் கண்களில் கண்ணீர் வருவதுபோல உணர்ந்து கண்களைத் தொட்டுப் பார்த்தேன். அங்கே கண்ணீர் இல்லை. கண்ணீரை வரவழைக்க முயன்றேன் என்றுதான் சொல்ல வேண்டும். கொழும்புவரை அது வரவேயில்லை.

யாழ்ப்பாணம் போனதும் மனதில் ஒரு யோசனை தோன்றியது. அந்த மஞ்சள் நிறப் பெண்ணுக்கு இப்போது மிஞ்சி மிஞ்சிப் போனாலும் எழுபது வயதுதானிருக்கும். அவரைத் தேடிக் கண்டுபிடித்தாலென்ன என்று யோசித்தேன். தேடிக் கண்டுபிடித்து என்ன செய்யப் போகிறேன்? பணம் கொடுக்கப் போகிறேனா? தெரியாது! ஆனால் அவரைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணமே என் மனம் முழுவதும் நிறைந்து என்னை அலைக்கழித்தது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று என் அறிவு சொல்லிற்று.

அந்த மஞ்சள் நிறப் பெண்ணின் பெயர்கூட எனக்குத் தெரியாது. அந்தப் பெண்ணிடம் அவரது பெயரை நாங்கள் கேட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. மற்றைய நான்கு பேருக்கும் போன் செய்து விசாரிக்கலாமா என்றுகூட எனக்குத் தோன்றியது. நிம்மதியாக இருக்கும் அவர்களையும் இந்த வதை வளையத்திற்குள் இழுத்து வரவேண்டாம் என நினைத்து அந்த யோசனையைக் கைவிட்டேன். அந்தப் பெண் சொல்லிய ஊரின் பெயர் ஞாபகமிருக்கிறது. மச்சானின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கோணாந்தோட்டத்துக்குப் புறப்பட்டேன்.

முப்பது வருடங்களிற்கு முன்பு கோணாந்தோட்டம் ஒரு சேரி போலதான் இருந்தது. இப்போது அது மாறி யாழ்ப்பாண டவுனின் ஒரு பகுதியாகிவிட்டது. இந்தச் சன நெரிசலுக்குள், பெயர் தெரியாத மஞ்சள் நிறப் பெண்ணை நான் எங்கே கண்டுபிடிப்பது? அவரை எதிரே பார்த்தால் கூட என்னால் அடையாளம் காணமுடியுமா என்ன! இன்று இரவு உன்னை அழைத்துவர நான் செவன் ஹில்ஸ் ரயில் நிலையத்திற்கு வந்தபோது நீ என்னையே அடையாளம் கண்டுபிடிக்கவில்லையே. ஏழு வருடங்களிற்குள் என்னில் இத்தனை தோற்ற மாற்றமென்றால், இத்தனை வருடங்களில் மஞ்சள் நிறப் பெண்ணின் தோற்றம் எவ்வளவு மாறியிருக்கும்!

நான் மோட்டார் சைக்கிளில் கோணாந்தோட்டத்தைச் சுற்றிவரும்போது ஓர் இடத்தில் ஒரு நினைவுக் கல்லைக் கண்டேன். 1993-ம் வருடம் அந்த இடத்தில் சந்தை இருந்ததாகவும் சந்தையின் மீது விமானத் தாக்குதல் நடந்து அய்ம்பத்தேழு பேர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்த நினைவுக் கல்லில் குறித்திருந்தது. மஞ்சள் நிறப் பெண்ணும் அந்தக் குண்டு வீச்சில் இறந்திருக்கக் கூடும் என நினைத்துக்கொண்டேன். உண்மையில் அப்போது எனது மனம் ஏனோ அமைதி அடையலாயிற்று. ஒருமுறை நினைவுக்கல்லை உற்றுப் பார்த்து மெதுவாகத் தலை சாய்த்துவிட்டுக் கிளம்பினேன். நான் அவுஸ்ரேலியா திரும்பியதன் பின்னாக மஞ்சள் நிறப் பெண் மெதுமெதுவாக என் மனதிலிருந்து விலகிப் போய்விட்டார்.

இப்போது, ஒரு மாதம் முன்பாக ஒரு வெள்ளிக்கிழமை மாலையில், இங்கே ‘மே ஹில்ஸி’ல் இருக்கும் முருகன் கோயிலுக்கு என் மனைவியை காரில் அழைத்துச் சென்று இறக்கிவிட்டு வீடு திரும்பினேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் முருகன் கோயிலுக்கு அவள் தவறாமல் போவாள். இரவு எட்டு மணிக்கு மறுபடியும் அவளை அழைத்துவர வேண்டும். அன்றைக்குத் திரும்பிவந்து கட்டிலில் படுத்துக்கிடந்து வாசிக்கத் தொடங்கியவன் அப்படியே கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன். எட்டுப் பதினைந்துக்கு மகள் தொலைபேசியோடு மேலே படியேறி வந்து என்னை எழுப்பினாள். மனைவிதான் அழைத்திருந்தாள்.

“கண்ணயர்ந்துவிட்டேன்..இதோ கிளம்பி வருகிறேன் அல்லது ஊபர் எடுத்து வா” என்றேன். “வேண்டாம், எனக்குத் தெரிந்தவர்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்கள் காரில் அழைத்துவந்து விடுவார்கள்” என்றாள். சரியென்று சொல்லிவிட்டுக் கீழே சென்று இரவுச் சமையலை ஆரம்பித்தேன்.

வாசல் கதவைத் திறந்துகொண்டு மனைவி வரும் ஓசை கேட்கவும் வரவேற்பறைக்குப் போனேன். மனைவியுடன் ஓர் இளைஞனும் ஒரு தடிமனான பெண்மணியும் உள்ளே வந்தார்கள். வந்தவர்களை உட்கார வைத்துவிட்டு அவர்களை எனக்கு என் மனைவி அறிமுகப்படுத்தலானாள்.

அந்தப் பெண்மணியின் பெயர் செல்வம் அன்ரியாம். முருகன் கோயிலுக்கு அவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வருவதால் என் மனைவிக்குச் சிநேகிதமாம். கூட வந்திருப்பது அவரின் இளைய மகனாம். ‘ரோயல் அவுஸ்ரேலியன் நேவி’யில் வேலையிலிருக்கிறானாம். என் மனைவி சொல்லாவிட்டால் கூட நான் அதைக் கண்டுபிடித்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். அந்த இளைஞன் நடக்கும் தோரணையிலும் உட்கார்ந்திருக்கும் கம்பீரத்திலும் அந்த மிடுக்கு இருந்தது. 

மனைவி, விருந்தாளிகளுக்குத் தேநீர் தயாரிக்கக் குசினிக்குள் போய்விட, நான் விருந்தாளிகள் முன் உட்கார்ந்து என்ன பேசுவதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். செல்வம் என்ற அந்தப் பெண்மணி என்னிடம் ஏதோ கேட்டபோதுதான் நான் அவரின் முகத்தைக் கவனித்தேன். அவரது நாடியில் எம்.ஜி.ஆருக்கு இருப்பதுபோல ஒரு வெட்டு இருந்தது. அது எனக்குத் தெரிந்த முகம் போல இருந்தது.

என் இரத்தம் அப்போது தண்ணீராக மாறியது. அந்தப் பெண்மணியை மேலும் கீழுமாகப் பார்த்தேன். தளதளவென்று செழிப்பான தேகம். சற்றே வெளிறிய நிறம். முன்னந்தலையில் முடி செறிவில்லாமலிருக்க முக்கால் நெற்றி மறையுமாறு குங்குமம் வைத்திருந்தார் . முதுகைக் கூனிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். நீல நிறத்தில் வெள்ளிச் சரிகையிழைத்த சேலை அணிந்திருந்தார். பளீரிட்ட மூக்குத்திக்குக் கீழே அவரது உதடுகள் சுருங்கிப்போயிருந்தன. இவர்தானா அந்த மஞ்சள் நிறப் பெண்? 

அவர்கள் பதினைந்து நிமிடங்கள் என் வீட்டில் இருந்திருப்பார்கள். வேலை, கப்பலில் வந்த அகதிகள்,கோயில், விஜய் சேதுபதியின் நடிப்பு போன்ற வழமையான பேச்சுகள்தான் பேசிக்கொண்டோம். தேநீர் குடித்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். நான் சமையலை விட்டுவிட்டு என்னுடைய அறைக்குள் போய் இருந்துகொண்டேன். 

என்ன முட்டாள்தனமான எண்ணமிது? இந்தப் பெண்மணிதான் மஞ்சள் நிறப் பெண் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆனால் அந்த முகம் எனக்குத் தெரிந்த முகம்போல ஏன் தோன்றுகிறது? அந்தப் பெண்மணியைப் பற்றி மேலும் விபரங்கள் என் மனைவிக்குத் தெரிந்திருக்குமா? நான் மனநோய் பிடித்தவன் போலாகிவிட்டேன். என் ஒவ்வொரு ரோமக்கால்களிலும் வதை புகுந்துகொள்ளலாயிற்று.

அடுத்தநாள் பேச்சுவாக்கில் என் மனைவியிடம் “நேற்று வந்தாரே செல்வம் அன்ரி.. எங்கே இருக்கிறார், எப்போது அவுஸ்ரேலியாவுக்கு வந்தாராம்?” எனக் கேட்டேன். “அவர் வந்து கன காலமிருக்கும், பிள்ளைகள் இங்கேதான் படித்தவர்களாம்,’ரோஸ் பே’யில் அவர்களுடைய வீடிருக்கிறதாம்..” என்றாள் மனைவி. சிட்னியில் செல்வந்தர்கள் வசிக்கக் கூடிய கடற்கரையோரப் பகுதி ‘ரோஸ் பே’. 

அதற்குப் பின்பு நான் இரண்டு தடவைகள் ‘ரோஸ் பே’க்குப் போனேன் . ஏனென்று தெரியாது. அதுதான் சொன்னேனே மனநோய் பிடித்தவனாகிவிட்டேன் என்று. ‘ரோஸ் பே’ தெருக்களில் காரைச் சுற்றிச் சுற்றி ஓட்டிக்கொண்டிருந்தேன். அடுத்த வெள்ளிக்கிழமை மனைவியை அழைத்துக்கொண்டு முருகன் கோயிலுக்குப் போனபோது நானும் கோயிலுக்கு உள்ளே நுழைந்தேன். கூடியிருந்த முகங்களை ஒவ்வொன்றாகக் கவனித்துப் பார்த்தேன். அங்கே செல்வம் என்ற அந்தப் பெண்மணி இல்லை.

சென்ற டிசம்பர் 21-ம் தேதி ஒரு வெள்ளிக்கிழமை. அன்று மாலையில் எனக்குச் சாவு குறித்த தகவல் கிடைத்தது. சற்றே தணிந்திருந்த என் மனநோய் நெருப்புப் போல என்னில் பற்றிப் படரலாயிற்று. கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்ததும் மனநோய் மருத்துவரிடம் போயே ஆகவேண்டும் என மனதிற்குள் தீர்மானம் செய்துகொண்டேன். மனைவியை முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்கையில் கதையோடு கதையாக “செல்வம் அன்ரி இன்றைக்கு வருவாரா?” எனக் கேட்டேன். “அன்ரி மாடிப்படியில் காலிடறி விழுந்து நடக்க முடியாமல் இருக்கிறாராம்” என்றாள் மனைவி. பின்பு, அவள் எப்போதும் செய்வதுபோலவே தலையை மில்லி மீட்டரளவு இடமும் வலமுமாக அசைத்துக்கொண்டே நாவால் இரண்டுதரம் ‘ச் ச் ‘ என ஒலி எழுப்பிவிட்டு “அன்ரியைப் போய்ப் பாரக்க வேண்டும்” என்றாள். நான் அமைதியாகக் காரைச் செலுத்திக்கொண்டிருந்தேன். கோயிலில் அவளை இறக்கிவிடும்போது “கிறிஸ்துமஸ் நாளன்று அன்ரியைப் போய்ப் பார்க்கலாம்” என்றேன்.

கிறிஸ்துமஸ் அன்று காலையிலேயே நானும் மனைவியுமாகப் பலகாரங்கள் தயாரித்தோம். மாலையில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ‘ப்ளாக் டவுனி’லிருந்து என்னுடைய தங்கை வந்து சேர்ந்ததும், பலகாரங்களைப் ப்ளாஸ்டிக் பாத்திரங்களில் போட்டு எடுத்துக்கொண்டு மனைவி தயாரானாள். நான் முதல்நாள் இரவே என்னுடைய புத்தக அலுமாரியிலிருந்து பிரபஞ்சனின் நான்கு புத்தகங்களை எடுத்துப் பொதிசெய்து வண்ணத் தாளால் மூடி ஒட்டி வைத்திருந்தேன். நான் யார் வீட்டுக்குப் போனாலும் புத்தகங்களையே பரிசாகக் கொடுப்பதால் என் மனைவிக்கு எல்லாமே வழமைபோலத்தான் தோன்றியிருக்கும்.

‘ரோஸ் பே’யை நாங்கள் சென்றடையும் போது மாலை ஏழு மணியிருக்கும். ஒரு சிறிய குன்றில் அந்த அழகிய வீடு தனித்திருந்தது. வீட்டின் பின்புறமாகக் கடலில் விழுந்துகொண்டிருந்த சூரியனின் இறுதி வெளிச்சம் அந்த வீட்டையும் தோட்டத்தையும் பாதி இருளாயும் பாதி ஒளியாயும் துலங்கச் செய்த காட்சி அபோரிஜினல் பழங்குடிகள் வரைந்த சித்திரம் போலிருந்தது. 

எங்களை எதிர்பார்த்து செல்வம் அன்ரி வரவேற்பு அறையில் இருந்தார். இளைய மகனும் அவனுடைய வெள்ளைக்கார மனைவியும் இரண்டு குழந்தைகளும் அங்கிருந்தார்கள். நான் உள்ளே நுழைந்ததுமே அந்த வீட்டின் வரவேற்பறையைக் கவனமாகப் பார்த்தேன். ஒரு புத்தகத்தைக் கூட அங்கே காணவில்லை. தனியாகப் புத்தக அறை இருக்குமோ என்னவோ! அல்லது நான்தான் என் மனநோயின் பிரகாரம் புத்தகங்களைச் சுமந்து வந்திருக்கிறேனா?

செல்வம் அன்ரி வசதியான நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். சிவப்பு நிறத்தில் நீண்ட கவுன் அணிந்திருந்தார். அவர் அருகே ஊன்றுகோல் ஒன்று சுவரோடு சாத்திவைக்கப்பட்டிருந்தது. அவர் அங்கும் இங்கும் உடலைத் திருப்பும்போது அவரது முகம் கோணிக்கொண்டது. வலியால் அவதிப்படுகிறார். நான் அவரை நோக்கி நடந்துபோனேன். கையிலிருந்த புத்தகப் பொதி உண்மையிலே பிணக் கனம்தான் கனத்தது. “நத்தார் வாழ்த்துகள் அன்ரி” என்று சொல்லி அந்தப் பொதியை அவரின் கைகளில் கொடுத்துவிட்டு அவரின் அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டேன்.

அந்தப் பெண்மணி அந்தச் சிறிய பொதியைப் பிரிக்கவே சிரமப்படுவது தெரிந்தது. கீழுதட்டைப் பற்களால் கடித்தவாறு அந்தப் பொதியைப் பிரித்தார். உள்ளேயிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவரின் கண்கள் ஒரு கணம் அசையாமல் நின்றன. கண்கள் மீண்டும் அசைந்தபோது முகத்தில் சட்டெனத் தோன்றிய ஒரு வெட்கத்தோடு அவர், ஒரு புத்தகத்தின் பின்னட்டையில் செம்மஞ்சள் வண்ண ஜிப்பாவும் கறுப்புக் குளிர் கண்ணாடியும் அணிந்து அச்சாகியிருந்த பிரபஞ்சனை பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாயால் முத்தமிட்டார்.

நான்கு நாட்கள் தாமதமாக, இன்று பிரபஞ்சன் இறந்திருந்தால் அவரது வாழ்நாள் கேள்விக்கு விடை கண்டுபிடித்திருப்பார் என நான் அப்போது நினைத்துக்கொண்டேன்.

சித்திரைலிங்கம் கதையைச் சொல்லி முடித்துவிட்டுத் தனது கண்களைக் கைகளால் அழுந்தத் தேய்த்துவிட்டான். பின்பு, “இப்போதும் பார் என் கண்களில் நீரே வரவில்லை” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து “உனக்கு எப்போதாவது கண்ணீரோ அல்லது எனக்கு வந்ததுபோல மனவருத்தமோ, வதையோ வந்திருக்கிறதா?” எனக் கேட்டான்.

நான் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். சித்திரைலிங்கம் எப்போதும் போல சீரியஸாகத் தனது முகத்தை வைத்துக்கொண்டே என் கண்களைப் பார்த்துச் சொன்னான்:

“நீ பிரான்ஸை அவுஸ்ரேலியாவாக்கி, உன்னுடைய பெயரை சித்திரைலிங்கம் என்றாக்கி கதையொன்று எழுதி அதைத் தணித்துக்கொள்வாய்!”

(‘காலம்’ ஜூன் 2019 இதழில் கதை வெளியாகியது)

 

 

http://www.shobasakthi.com/shobasakthi/2019/07/16/பிரபஞ்ச-நூல்/

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.