Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாம்பும் ஏணியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பும் ஏணியும்

கே.எஸ்.சுதாகர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2018 இல்  முதற் பரிசு பெற்ற சிறுகதை கே.எஸ்.சுதாகரின் 'பாம்பும் ஏணியும்'. நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது. - பதிவுகள் -

 

 


சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கடை. ஜனகன் பெரும்பாலான நாட்களில் தனக்குத் தேவையான உணவை அங்குதான் எடுத்துச் செல்வான். 

’பிறின்சஸ்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு யாரும் வேலை செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வயது முதிர்ந்தவர் திருநீற்றுப்பூச்சுடன் பக்திப்பாடல்களை முணுமுணுத்தபடி கல்லாவில் இருப்பார். அவரின் மனைவியும், கூடமாட எடுபிடி வேலை செய்யும் ஒரு பையனும் அங்கே இருப்பார்கள். சமையல் அறைக்குள் யார் யாரெல்லாம் இருப்பார்கள்? 

சமீப நாட்களாக குசினிக்குள் வேலை செய்யும் ஒருவர், மறைவாக ஒழித்து நின்று ஜனகனைப் பார்க்கின்றார். ஜனகனும் அதை அறிவான். கண்களைப் பார்த்தால் பெண்போல இருக்கின்றாள். ஒருபோதும் நேரில் கண்டதில்லை.

ஜனகன் கம்பீரமான உயர்ந்த இளைஞன். கூரிய மூக்கு. அளவாக வெட்டப்பட்ட மீசை. ஸ்ரைல் கண்ணாடி. பார்த்த மாத்திரத்தில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோற்றம்.
எப்போதும் அயன் செய்யப்பட்டு மடிப்புக் குலையாத ஆடை. சமயத்தில் தருணத்திற்கேற்றபடி நகைச்சுவையை அள்ளி வீசுவான். கல்லாவில் இருக்கும் முதியவருடன் அடிக்கடி பேச்சுக் கொடுப்பான்.கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா.

இன்று காலை கடையில் அலுவலை முடித்துக் கொண்டு வெளியேறுகையில் அவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது.
கசக்கி எறியப்பட்ட கடதாசித் துண்டு ஒன்று அவன் கால் முன்னே வந்து விழுந்தது.

குப்பைக்கூடைக்குள் அதை எறியப்போனவன், ஏதோ ஒரு யோசனை வந்ததில் அதை பிரித்துப் பார்த்தான்.

“நீங்கள் தனியாகவா இருக்கின்றீர்கள்?” என அதில் எழுதி இருந்தது.

ஜனகனின் மனம் குழம்பியது. குரங்கு போலக் கும்மியடித்தது. அன்று அவனால் ஒழுங்காக வேலை செய்யமுடியவில்லை. வீட்டிற்கு வந்தால் உறங்க முடியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது? பெண்ணை நேரில் பார்க்காமல் எப்படி?

அது எப்படி ஒருநாளும் சந்திக்காமல் கதைக்காமல் “நீங்கள் தனியாகவா இருக்கின்றீர்கள்?” என்று கேட்க முடியும். ஜனகனின் மனம் புழுவாய்க் குடைந்தது. ஒருவேளை முதலாளியுடன் கதைப்பதை வைத்துக் கொண்டு தன்னை நல்ல ஆண்மகன் என அவள் முடிவெடுத்திருக்கலாம்.

இருப்பினும் அடுத்தநாள் காலை கடை திறப்பதற்கு முன் காத்திருந்து அந்தப் பெண்ணைப் பார்த்துவிடலாம் என முடிவு செய்தான் ஜனகன். எதிர்ப்புறக் கடையில் ஒளித்திருந்தான்.

கடை முதலாளி காரை கடை முகப்பில் நிறுத்துகின்றார். முதலாளி அம்மாவும் ஒரு பெண்ணும் காரில் இருந்து இறங்குகின்றனர். ஏதோ சில பொருட்களை இறக்குகின்றனர். முதலாளி அவர்களுடன் ஏதோ கத்திக் கதைத்துவிட்டு காரைப் பின்புறமுள்ள தரிப்பிடம் நோக்கிச் செலுத்துகின்றார்.

அந்தப் பெண் பதட்டமடைந்தவளாக திரும்பி சுற்றுமுற்றும் பார்த்தாள். தரிசனம் கிடைத்தது. ஜனகன் எதிர்பார்த்ததைவிட அழகாக இருந்தாள். மெல்லிய அந்தப் பெண் அவர்களின் மகளாக இருக்கலாம். அவளே பிறின்சஸ் என்று ஜனகனின் மனம் அடித்துச் சொன்னது.
ஜனகன் வீட்டிற்கு அரக்கப்பரக்க ஓடினான். மேல் ஆடையைக் கழற்றிவிட்டு ரி சேட் ஒன்றை மாட்டினான். அதன் முன்னும் பின்னும் கொட்டை எழுத்தில் ‘Yes’ என்று எழுதி இருந்தது.

அந்த ரி சேட்டிற்கு பலன் கிட்டியது. அன்று விழுந்த பேப்பரில்:

‘நான் ஆபத்தில் சிக்கியுள்ளேன். இவர்கள் என்னைத் தினமும் சித்திரவதை செய்கின்றார்கள், துன்புறுத்துகின்றார்கள். உங்களால் எனக்குப் பாதுகாப்புத் தர முடியுமா? பதிலை கடை வாசலில் உள்ள பூச்சாடியின் கீழ் வைக்கவும்’

நான்கு நாட்களின் பின்பு இந்த விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்தது.

ஒருநாள் காலை முதலாளியின் கார் வரும் திசைக்கு எதிராக ஜனகன் தனது காரை நிறுத்தி வைத்திருந்தான். அந்தப்பெண் காரை விட்டு இறங்கியதும், குறுக்காக ஓடி தயாராக நின்ற ஜனகனின் காருக்குள் ஏறிக் கொண்டாள். கார் விர் எனக்கிழம்பி ஓடத் தொடங்கியது.


காரின் பின் கதவைத் திறந்து ஏற முற்பட்ட அவளை, ஜனகன் முன்னால் வந்து ஏறும்படி கத்தினான். கார் மெதுவாக நகரும்போதே அவள் முன் கதவைத் இழுத்துத் திறந்து தாவி ஏறினாள்.

“உங்கள் பெயர்?” முதன் முதலாக ஜனகன் அவளின் பெயரைக் கேட்கின்றான்.

“சிவானி…. நீங்கள்?”

“நான் ஜனகன்.”

“நாங்கள் இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?” ஓடிவந்த களைப்பில் சிவானிக்கு மூச்சு இரைந்தது.

“உமக்கு முதல்ல நாலு நாட்கள் ஹோட்டல் எடுத்து வைச்சிருக்கிறன். அதுக்குப் பிறகு றென்றுக்கு வீடு ஒண்டு பாக்கலாமெண்டிருக்கிறன். தூரமா எடுத்தா உமக்கு நல்லாய் இருக்கும்” சொல்லியபடி ஸ்ரியரிங் வீலில் இருந்த தனது இடது கையை எடுத்து அவளின் வலதுபுற மணிக்கட்டில் வைத்து அழுத்தினான். சிவானி அதற்கு ஒன்றும் சொல்லாமல் ஜனகனை நிமிர்ந்து பார்த்தாள். கார் ஒரு தடவை ஆட்டம் கண்டு பின்னர் நெடுஞ்சாலையில் வேகமெடுத்து ஓடியது. ஹோட்டல் போய்ச் சேரும் வரைக்கும் அவர்கள் இருவரும் அதன்பின்னர் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.

ஹோட்டலின் கீழ் உணவருந்திவிட்டு, திறப்பை எடுத்துக் கொண்டு அறைக்குப் போனார்கள். இவ்வளவு காலமும் புளிச்ச தோசையும் இட்டலியும் சாப்பிட்ட சிவானிக்கு ஹோட்டல் உணவு வினோதம் காட்டியது.

“இனி உங்கள் கதையைச் சொல்லுங்கள்” என்றான் ஜனகன். அவள் மெல்ல அழத் தொடங்கினாள். அழுது அழுது தன் கதை சொன்னாள்.

|என்னுடைய அப்பாவும் அண்ணாவும் 2009 இலை நடந்த யுத்தத்திலை காணாமல் போச்சினம். அப்ப நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில இறுதியாண்டு படிச்சுக் கொண்டிருந்தனான்.

அம்மா ஸ்கூல் ரீச்சர் எண்டபடியாலை கஸ்ரப்பட்டு உழைச்சு என்னைப் படிப்பிச்சா. அப்பாவும் அண்ணாவும் போராளிகளாக இருந்தபடியாலை ஆமி அடிக்கடி வந்து அம்மாவைத் தொந்தரவு செய்தார்கள். அம்மா ஒருநாள் தற்கொலை செய்திட்டா.

அம்மாவின்ரை மூத்த அண்ணா கணேசலிங்கம் மாமா தான் ’பிறின்சஸ் றெஸ்ரோரன்’ ஓனர். அவர் தான் கடையிலை நிக்கிறவர். அம்மா செத்தாப்பிறகு அவர்தான் எனக்கு ஸ்பொன்சர் செய்து இஞ்சை கூப்பிட்டவர்.|
சிவானியின் கதையைக் கேட்ட ஜனகனுக்கு கவலை வந்தது. காட்டிக் கொள்ளவில்லை.

அதன் பின்னர் இருவரும் சொப்பிங் சென்ரர் சென்று, சிவானிக்குத் தேவையான உடுப்பு முதல் சகலதும் வாங்கிக் கொண்டார்கள்.

மீண்டும் ஹோட்டல் சென்று சிவானியை இறக்கிவிட்டு ஜனகன் புறப்படும்போது,

”அப்ப நீங்கள் இங்கே தங்கமாட்டீர்களா?” என்று ஏக்கமாகக் கேட்டாள் சிவானி.

“பாதுகாப்புத் தர முடியுமா என்றுதானே கேட்டீர்கள். தந்துவிட்டேன். அவுஸ்திரேலியாவில் சகல மனிதரும் பாதுகாப்பாக வாழ முடியும். 

அடிக்கடி உங்களை வந்து பார்க்கின்றேன்.

நீங்கள் சிறிது காலம் மறைந்து வாழ்ந்தால் நல்லது என நினைக்கின்றேன்.

நீங்கள் முதலில் உங்கள் உறவினருக்கு ஒரு கடிதம் எழுதித் தாருங்கள். நான் போகும்போது போஸ்ற் பண்ணி விடுகின்றேன்.”

சிவானி பேனைய எடுத்ததும் அவள் கைகள் நடுங்கின. அந்த நடுக்கத்தில் எழுத்துகள் கோணல் மாணலாக கடிதத்தில் விழுந்தன.

”நீங்கள் இதுவரை எனக்குச் செலவழித்த பணம் அத்தனையையும் கூடிய விரைவில் தந்துவிடுவேன். என்னை இங்கு அவுஸ்திரேலியாவிற்குக் கூப்பிட்டு விட்டதற்கு மிகமிக நன்றி. என்னைத் தேட வேண்டாம். நான் எனக்குரிய வழியில் செல்கின்றேன்.” கடிதத்தைப் புரிந்துகொள்ள ஜனகன் திண்டாடினான்.

ஜனகன் போகும்போது புதிதாக வாங்கிய ஒரு ’சம்சுங்’ போனை சிவானியின் கைகளிற்குள் பொத்தித் திணித்தான்.

“ஏதாவது தேவை என்றால் இந்த நம்பருக்கு அடியுங்கோ” தனது நம்பர் எழுதிய துண்டொன்றையும் சிவானியிடம் கொடுத்தான்.

சிவானி அந்தத் துண்டை வாங்கும்போது அவனது கையைப் பிடித்து, “நான் உங்களை விரும்புகின்றேன்” என்றாள்.

“அதெப்படி ஒரே நாளில் இப்படி ஒரு முடிவெடுத்தீர்கள்?” கேட்டான் ஜனகன்.

“ஒரு நாளல்ல. ஆறுமாசமா நான் உங்களை கடைக்குள்ளிருந்து மறைவாகப் பார்த்து வந்திருக்கின்றேன்.”

“ஓ…. அப்பிடியா? ஆனால் இன்றுதானே உங்களை நான் நேரில் பார்க்கின்றேன். போகப் போக எனக்கும் உங்களைப் பிடிக்கும்.

நான் அகதியாக இந்த நாட்டுக்கு வந்தனான். எனக்கு நிறையப் பொறுப்புகள் இருக்கின்றன. நான் இப்ப மூண்டு இடங்களிலை இரவு பகலா வேலை செய்யிறன். அப்படி வேலை செய்யிறதாலைதான் என்னாலை சமாளிக்க முடியுது. என்னைப் போல நாலைஞ்சு பேர் சேர்ந்து வீடு ஒண்டு வாடகைக்கு எடுத்து இருக்கிறம்.” ஜனகன் தன் கதை சொல்ல, சிவானி வாய் பிளந்து அவன் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்னதான் இருந்தாலும் சிவானியின் கடிதமும், கள்ளம் கபடமில்லாச் சிரிப்பும் ஜனகனை அன்று முழுவதும் விரட்டியடித்தபடி இருந்தது. அவனது பாழும் மனதை உலுப்பியது. அன்று மாலை ஆறுமணியாவதற்குள் சிவானியின் றூமிற்கு முன்னால் நின்று அவளுக்கு ரெலிபோன் செய்தான்.

“சிவானி… இன்று இரவு நான் உன்னுடன் தங்குகின்றேன்.”

அறைக்குள் சிவானி பதட்டத்தில் ரெலிபோனைப் போட்டடிக்கும் சத்தம் வெளியே நின்ற ஜனகனின் காதிற்குள் விழுந்தது. சற்று நேரத்தில் கதவு திறந்தது.


சிவானி தன் வாழ்நாளில் ஹோட்டலில் ஒருபோதும் இருந்ததில்லை. அவளுக்கு எல்லாமே வியப்பாக இருந்தது. நறுமணம் கமழும் படுக்கை விரிப்புகள், நேரத்திற்கு சாப்பாடு, ரெலிவிஷன் என எத்தனை வசதிகள். 

இன்று ஜனகன் வர முடியாது என்று ஏற்கனவே சொல்லியிருந்தான்.

ஹோட்டலின் ஜன்னலைத் திறந்து வெளியே பார்க்கின்றாள். இரவு எங்குமே மின்குமிழ்கள் வர்ண ஜாலத்தில் வெளிச்சமிடுகின்றன. இயந்திரமாகிப்போன மனிதர்கள் தங்கள் பாட்டில் பரபரப்பாக நடமாடுகின்றார்கள். நகரம் கோலாகலமாக விழாக்கோலம் பூண்டது போல் இருக்கின்றது. என்னதான் இருந்தாலும் தனியாக இருப்பதற்கு சிவானிக்குப் பயமாக இருந்தது.

ஜன்னலை மூடிவிட்டு தொப்பென்று கட்டிலில் விழுந்தாள். மேலே ஃபான் சுழன்றடித்துக் குளிர்காற்றை வாரி இறைக்கின்றது. அதிலே நாக்குத் தொங்கியபடி ஒரு உருவம் சுற்றுவது போன்ற பிரம்மை. அம்மா! விக்கித்துப் போனாள். மின்விசிறியையும் லைற்றையும் அணைத்துவிட்டுப் போர்வைக்குள் ஒதுங்கினாள். எல்லாச் சம்பவங்களும் ஒவ்வொன்றாக வந்து அவளைத் துன்புறுத்தின.

சொந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்ததன் பின்னர்தான் அப்பா இயக்கத்திற்குப் போனார். அதன்பின்னரும் சிவானி அங்குள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அண்ணா படிப்பைக் குழப்பிவிட்டான். ஆனாலும் தங்கைக்குப் பாதுகாப்பாக பின்னுக்கும் முன்னுக்கும் சுழன்றடித்துக் கொண்டு திரிந்தான். பள்ளிக்கு சைக்கிளில் சிட்டாகப் பறந்து போகும்போது பின்னாலே நின்று பார்த்துக்கொண்டு நிற்பான். சிலவேளைகளில் தானும் பின்னால் சைக்கிளில் வந்து சிவானியை வழியனுப்பி வைப்பான்.  அம்மாவும் அவனைப் படி என்று வற்புறுத்தவில்லை. 

”நாளைக்கு கலியாணம் செய்து புருஷனோடை போகேக்கை, நீயும் பின்னாலே அங்கை போய் குந்தியிருந்து அவளைக் கவனிக்கப் போறியா?” என்று அம்மா கிண்டல் செய்வார்.

அவர்கள் அங்கிருந்தும் இடம்பெயரவேண்டி வந்தது. அந்த இடம்பெயர்வின்போது அண்ணாவும் அவர்களைவிட்டுப் பிரிந்துவிட்டான்.

2009 யுத்தத்தின்பின்னர் அப்பாவும் அண்ணாவும் என்ன ஆனார்கள் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. எட்டு வருடங்கள் கடந்துவிட்டன.

எல்லாம் முடிவடைந்து - ஒருநாள் மெல்பேர்ண் எயாப்போர்ட்டில் அதிகாலை நான்குமணியளவில் கால் பதித்தாள் சிவானி. கணேசலிங்கம் மாமாவும் மாமியும் வந்திருந்தார்கள். பிள்ளைகள் வரவில்லை. நேரடியாக தனது வீட்டிற்குள் கொண்டுவந்து அடைத்துவிட்டார். அதன்பின்னர் நான்கு சுவர்களுக்குள் குண்டுவெடிப்புகளின் சத்தம் இல்லாத உறக்கமும், நேரத்திற்குச் சாப்பாடும், றெஸ்ற்ரோறன்ரில் சட்டி பானைகளுடன் போராடும் வேலையும் கிடைத்தது. வீட்டையும் வேலை செய்யுமிடத்தையும் தவிர அவுஸ்திரேலியாவில் வேறொன்றையும் அறியாள்.

பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பு முடித்த அவளுக்கு, குசினிக்குள் ஒரு வேலை போட்டுக் கொடுத்து சிறைப்படுத்திவிட்டார் மாமா.

இலங்கையில் 2009 நடந்த யுத்தத்தின்போது பட்ட கஸ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஷெல் அடிக்கும் குண்டுத்தாக்குதலுக்கும் பயந்து உயிரைக் காப்பாற்ற, தினம் இரவு பகலாக ஊன் உறக்கமின்றி ஊர் ஊராக ஓடிய ஓட்டம். உறங்குவதற்குக் கூட அப்பொழுது நேரம் இருக்கவில்லை. இப்பொழுது நிம்மதியான வாழ்க்கை கிடைத்தபோது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் அதுவே நிரந்தரமானபோது பயம் தொற்றிக் கொண்டது.

ஹோட்டலில் தங்கியிருந்த நாலு நாட்களில், இரண்டு நாட்களை சிவானி ஜனகனுடன் பங்கிட்டுக் கொண்டாள். அதன்பின்னர் இரண்டு அறைகள் கொண்ட வீடு ஒன்றை ‘பலறாற்’ என்னும் இடத்தில் வாடகைக்கு எடுத்து சிவானிக்குக் கொடுத்தான் ஜனகன்.

வீடு மாறியபோது மீண்டும் சிவானியை சொப்பிங்சென்ரர் கூட்டிச் சென்றான் ஜனகன். றொலியைத் தள்ளியபடி வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஒவ்வொன்றாகத் தூக்கி றொலிக்குள் போட்டான் ஜனகன். சொப்பிங்சென்ரர் எங்கும் சுகந்தம் வீசியது. 

”ஊரில் என்றால் கருவாட்டு நாற்றமடிக்கும்” என்றாள் சிவானி.

ஜனகன் ஏதோ ஒன்றை எடுத்து, தான் தான் அதைக் கண்டுபிடித்தது போல, சிவானிக்குத் தூக்கிக் காட்டினான். பின் குனிந்து அவளின் காதிற்குள் கிசுகிசுத்துவிட்டுச் சிரித்தான். அவளும் தான் அதை வாழ்நாளில் காணாதது போல வெகுளிப்பெண்ணாகச் சிரித்தாள்.

”நீர் ஒரு வேலை எடுக்கும் மட்டும், நான் உமக்கு உதவி செய்யிறன்” என்று சொன்ன ஜனகனைப் பார்த்து,

“எப்போது என்னைத் திருமணம் செய்வீர்கள்?” என்று கேட்டாள்.

“காசு சேக்க வேணும். என்ரை குடும்பத்தையும் பாக்க வேணும். இந்த நாட்டுக்கு என்னைக் களவாக அனுப்பி வைத்த ஏஜெண்டிற்குக் காசு குடுக்க வேணும். காலம் வரட்டும்” இப்படிப் பல காரணங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கினான் ஜனகன்.

“எப்போது என்னைத் திருமணம் செய்வீர்கள்?” அவள் கேட்டுக் களைத்துப் போனாள்.

சிவானி, ஜனகனை தன்னுடன் வந்து இருக்கும்படி சொல்கின்றாள். ஆனால் ஜனகன் நண்பர்களை விட்டுப் பிரிய முடியாது எனவும்- இடைக்கிடை வந்து தங்கிச் செல்வதாகவும் சொன்னான்.


புதிய வீடு… புதிய கிராமம்… புது வாழ்க்கை.

தனிமை அவளை வாட்டியது. குண்டுச்சத்தங்கள் இல்லாமல் நிம்மதியாக உறங்க முடிந்தாலும் பழைய நினைவுகள் அவளைத் துரத்தின.

ஆரம்பத்தில் தேன் நிலவாகக் கழிந்த அவர்கள் இருவரினதும் காதல் வாழ்க்கை, நாளாக நாளாக இப்போது பிச்சுப் புடுங்கல்களாகத் தொடங்குகின்றது.

கலியாணம் என்றவுடன் பொறுமை காத்த ஜனகன், சினம் கொள்ளத் தொடங்கினான். அவர்களிடையே மெதுவாக விரிசல் விழத் தொடங்கியது.

அவுஸ்திரேலியா வந்ததன் பிற்பாடு முதன்முதலாக சிவானி கல்வி பயிலச் சென்றாள். ஆங்கில வகுப்பு, தாதி வேலை செய்வதற்கான ஆரம்பக்கல்வி என வகுப்புகளுக்கு போகத் தொடங்கினாள். தனக்கு அண்மையான சில இடங்களில் தற்காலிகமாக வேலை செய்து பணம் சேர்த்தாள். இவை எல்லாம் ஜனகனுக்குப் பிடிக்கவில்லை.

சிவானிக்கு கார் ஓடிப்பழக விருப்பம் இருந்தது. இந்தா ஒழுங்கு செய்கின்றேன், அந்தா ஒழுங்கு செய்துவிட்டேன் என புருடா விட்டான் ஜனகன். உண்மையில் சிவானிக்கு உலகத்தில் ஒன்றும் தெரிந்திருக்கக் கூடாது என்றே ஜனகன் விரும்பினான், மொக்குத்தனமாக தான் சொல்வதை எளிதில் நம்பும்படியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம்தான் ஜனகனிடம் இருந்தது.

அவுஸ்திரேலியா வந்ததும், கணேசலிங்கம் மாமா நேரடியாக கடைக்குள் கொண்டுவந்து சிவானியை குசினிக்குள் அடைத்துவிட்டார். ஜனகன் நல்லது செய்கின்றேன் என நடித்து இங்கே ஒரு வீட்டிற்குள் அடைத்துவிட்டான்.

சிவானிக்கு சிறிது சிறிதாக ஜனகன் மீது சந்தேகம் வரத் தொடங்கியது. தனது உடலின் மீது காட்டும் கரிசனை, வேறு எதனிலும் இல்லாதது கண்டு கவலை கொண்டாள். ஆரம்பத்தில் உணர்வு மேலீட்டால் எதற்கும் இடம் கொடுத்த சிவானி, பின்னர் தன் தவறை உணர்ந்து அதனின்றும் விடுபட நினைத்தாள். தன்னை ஒரு அடிமை போல நடத்துவதை வெகு சீக்கிரத்தில் புரிந்து கொண்டாள்.

“என்னைத் திருமணம் செய்யுங்கள். இல்லாவிடில் என்னைத் தனியாக வாழ விடுங்கள்” என்று ஒருநாள் சிவானி கெஞ்சியபோது, மிருகம் போல சீறிப் பாய்ந்து அவளின் முகத்தில் குத்துகள் விட்டான். 

குடித்துவிட்டு வெற்றுப் போத்தல்களை அவள் மீது உருட்டி விளையாடுவதும் உதைப்பதுமாக இருந்தான் ஜனகன். மூர்க்கம் கொண்ட மிருகமாக அவளைச் சில வேளைகளில் மேய்ந்தான்.
எல்லை மீறிப் போன ஒருநாள் அவள் பொலிசிற்குச் சொல்ல எத்தனித்தபோது, அவளின் மொபைல் போனைப் பிடுங்கி நிலத்தில் எறிந்து உடைத்தான். பச்சை மிளகாய் வெட்டி அவளின் உதட்டிற்குத் தேய்த்தான். அன்று முழுவதும் அவள் உதடுகள் இரண்டும் கொவ்வைப்பழம் போல் சிவந்து கிடந்தன. 
எதற்குமே அவனிடம் தங்கியிருந்ததால் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வீட்டை விட்டு வெளிக்கிடக் கூடாது என்று கட்டளை போட்டான்.

ஜனகன் தினமும் அங்கு வந்து தங்காதது, சிவானிக்கு தப்பிச் செல்லும் எண்ணத்திற்கு வலுச் சேர்த்தது. இருப்பினும் அவன் என் நேரமும் வரக்கூடும் என்ற பயமும் அவளிடம் இருந்தது.
ஒருநாள் குடித்துவிட்டு ரெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜனகன். சிவானி நகங்களுக்கு  நெயில்பொலிஸ் போட்டுவிட்டு, தனது உடுப்புக்களுக்கு ஸ்திரிக்கை (அயன்) செய்து கொண்டிருந்தாள். போதையில் கிறங்கிக் கிடந்த ஜனகனின் கண்கள் சிவானியை மேய்ந்தன.

“எங்கே உந்த அலங்காரம்? எங்கே போகப் போகின்றாய்?”  ஜனகனின் கேள்விக்கு பதில் சொல்லாது தட்டிக் கழித்தாள் சிவானி. எதிர்பாராதவிதமாக பாய்ந்து எழுந்த ஜனகன் ஸ்திரிக்கைப் பெட்டியை அவளிடமிருந்து பறித்து – சிவானியின் கை, முதுகு என சூடு போட்டான். வலியினால் கத்தியபடி துவண்டாள் அவள். அவன் கதவை அடித்து மூடிச் சாத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

அன்று முழுவதும் அவளால் உறங்க முடியவில்லை. ரணத்தினால் துடித்தாள்.

காலையில் அயலில் உள்ள பொலிஸ் ஸ்ரேசனுக்குச் சென்றாள். நடந்த முழுவதையும் ஒன்றும் விடாமல் தனக்குத் தெரிந்த வகையில் சொல்லி முடித்தாள்.

அவர்கள் சிவானியிடமிருந்து ஜனகனின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நண்பர்களுடன் தங்கும் இடம் சிவானிக்குத் தெரிந்திருக்கவில்லை. விரைவில் தாங்கள் அவனைக் கைது செய்வதாகவும், அதுவரை பொறுத்திருக்கும்படியும் சிவானியைக் கேட்டுக் கொண்டார்கள்.

அவர்கள் சொன்ன மூன்றாம் நாள் இரவு பதினொரு மணியளவில் மூன்று பொலிஷார் சிவானியின் வீட்டிற்கு அண்மையாகப் பதுங்கி இருந்தார்கள். வேலை முடித்து வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும்போது ஜனகனை அமுக்கிப் பிடித்தார்கள். கையில் விலங்கிட்டு வாகனத்தினுள் ஏற்றினார்கள். வீட்டிற்குள் ஒருவன் வந்து சிவானியுடன் சில நிமிடங்கள் கதைத்தான்.

ஜனகன் திருமணமானவன். அவனுக்கு பதினெட்டு, பதினாறு வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவனின் மனைவி வயது முதிர்ந்தவர்களைப் பராமரிக்கும் ஒரு இடத்தில் வேலை செய்து வருகின்றாள்.

பொலிஸ் சொல்லச் சொல்ல சிவானியின் தலைக்குள் மின்னல்கள் ஒவ்வொன்றாக இறங்கின.

“நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீர்கள்” சொல்லிவிட்டு வேகமாகச் சென்றான். சிவானி கதவைப் பூட்டிவிட்டு இருக்கையில் அமர்ந்தாள். பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

’ஒரு பெண்ணுக்கு சொந்த நாட்டிலை மட்டுமில்லை, புலம்பெயர்ந்த நாட்டிலும்தான் பிரச்சினைகள் காத்துக் கிடக்கு’ நினைக்க நினைக்க அவள் தலை வலித்தது.

எத்தனை வீழ்ச்சிகள், எத்தனை ஏற்றங்கள். எத்தனை பாம்புகள், எத்தனை ஏணிகள். இன்று அவள் யாராலும் வீழ்த்திவிட முடியாதவாறு உயரத்தில் நின்று கொண்டிருக்கின்றாள்.

வெளியே பொலிஸ் வாகனம் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்கின்றது

 

http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5242:2019-07-20-02-06-19&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.