Jump to content

வசந்தத்தின் இடிமுழக்கம். - ஒக்ரோபர் 21 எழுச்சியின் நாற்பதாவது வருட நினைவுகளும் பாடங்களும் - ஷோபாசக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வசந்தத்தின் இடிமுழக்கம்.

வசந்தத்தின் இடிமுழக்கம்

ஒக்ரோபர் 21 எழுச்சியின் நாற்பதாவது வருட நினைவுகளும் பாடங்களும்

-ஷோபாசக்தி

ஊர்களில் திரிகின்ற நாய்களும் தடையின்றி
உள்வந்து போகுதையே – கோவிலின்
உள்வந்து போகுதையே – நாங்கள்
உங்களைப் போலுள்ள மனிதர்களாச்சே
உள்வந்தால் என்சொல்லையே – கோவிலின்
உள்வந்தால் என்சொல்லையே

சுவாமி செம்மலை அண்ணலார்

1. து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாறாம் வருடம்! ஒக்ரோபர் இருபத்தோராம் நாள்! பத்து நூற்றாண்டுகளாக எல்லா வகையான கீழைத்தேய மேலைத்தேய விடுதலைத் தத்துவங்களையும் தன் முன்னே மண்டியிட வைத்துத் தின்று செரித்துக் கழித்த கொடூர யாழ்ப்பாணத்துச் சாதியச் சமூகத்தை அசைப்பதற்காகச் சுன்னாகம் சந்தை மைதானத்தில் ஆயிரக்கணக்கான சாதியொழிப்புப் போராளிகள் அணிவகுத்து நின்றார்கள். அவர்கள் ‘சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்!’ ‘குறள் கண்ட தமிழனுக்குக் கறள் கொண்ட பேணி!’ ‘ஆலயங்களைத் திறந்து விடு!’ ‘இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!’ என்ற முழக்கங்களை எழுப்பியவாறே ஊர்வலமாக யாழ் நகரத்தை நோக்கி நகர்ந்தார்கள். போராட்டத்தை இலங்கைப் பொதுவுடமைக் கட்சி(சீனச் சார்பு) வடிவமைத்திருந்தது. இரண்டாயிரம் பேர்கள் வரையான தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் பொதுவுடமைக் கட்சியின் வாலிபர் இயக்கமும் போராட்டத்தில் இணைந்திருந்தது. கே.டானியல், கே.ஏ.சுப்பிரமணியம், வீ.ஏ.கந்தசாமி, சு.வே.சீனிவாசகம், டி.டி.பெரேரா, சி.கா. செந்திவேல், சூடாமணி போன்ற பொதுவுடமைக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்கள் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கி முன்னணியிற் சென்றார்கள்.

2. அப்போதைய டட்லி சேனநாயக்கவின் அய்க்கிய தேசியக் கட்சி அரசில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழரசுக் கட்சியும் இணைந்திருந்தது. தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மு.திருச்செல்வம் இலங்கை அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். ஊர்வலத்திற்கு முறைப்படி காவற்துறையிடம் அனுமதி பெற்றிருந்த போதும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் அழுத்தத்திற்குப் பணிந்து இறுதி நேரத்தில் காவற்துறை ஊர்வலத்திற்குத் தடை விதித்தது. எனினும் அரச அடக்குமுறைகளுக்குப் பணியாத ஊர்வலத்தினர் தடையை மீறி யாழ்நகரத்தை நோக்கி முன்னேறியபோது காவற்துறை தனது காட்டுமிராண்டித்தனத்தை ஊர்வலத்தில் கட்டவிழ்த்துவிட்டது. முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோதும் பொலிசாரின் தடியடிப் பிரயோகத்தால் வீதியிற் குருதியோடியபோதும் சாதியொழிப்புப் போராளிகள் கலைந்தோடவில்லை. அவர்கள் கட்டுப்பாட்டோடும் போர்க்குணத்துடனும் காவற்துறையின் ஆயுத அரண்களைத் தகர்த்துக்கொண்டு தொடர்ந்து யாழ் நகரின் முற்றவெளியை நோக்கி முன்னேறினார்கள்.

3. அன்றைய எழுச்சியைத் தொடர்ந்து பற்றிய தீயிற் தலித் மக்கள் அரசியற் களத்திற் புத்தெழுச்சிகளைப் பெற்றார்கள். திறக்கப்படாத ஆலயங்களின் முன்னாலும் தேனீர்க் கடைகளின் முன்னாலும் பட்டினிப் போராட்டங்களும் மறியல்களும் ஒருபுறம் நிகழத் தொடர்ச்சியாகத் தலித் போராளிகள் அடித்த அடியில் வீசிய எறிகுண்டுகளில் மெல்ல மெல்ல யாழ்ப்பாண வெள்ளாளர்களின் கோயிற் கதவுகளும் தேனீர்க் கடைக் கதவுகளும் பாடசாலைப் படலைகளும் திறக்கத் தொடங்கின. சங்கானைப் பகுதிகளில் ஆயுதங்களைத் தாங்கித் தலித் இளைஞர்கள் சாதி வெறியர்களிற்கெதிராகக் கிளர்ந்தெழுந்தபோது யாழ்ப்பாணத்து ஆதிக்க சாதிகளின் அரசியற் பிரதிநிதிகளான தமிழரசுக் கட்சியும் தமிழ்க் கொங்கிரசும் ‘சங்கானை ஷங்காயாக மாறிவிட்டது அங்கே கொம்யூனிஸ்டுகள் மக்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டிவிடுகிறார்களென’ ஓலமிட்டனர். ஆற்றாத கட்டத்தில் தந்திரத்துடன் குழைந்தவாறே தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு இறங்கி வந்தார்கள். இறுகிய சாதிக் கோட்டையை அசைத்துக் குறிப்பிடத் தகுந்த சில உரிமைகளைத் தலித் மக்கள் வெற்றிகொள்வதற்குத் துவக்கமாய் அமைந்த ஒக்ரோபர் எழுச்சியின் நாற்பதாவது நினைவு வருடமிது.

4. ஒக்ரோபர் எழுச்சியை ஒட்டி உருவான சாதியத்திற்கு எதிரான போராட்டங்களை வழி நடத்திய சிந்தனையாளர்களில் முக்கியமானவரான தங்கவடிவேல் மாஸ்ரர் 2003ம் வருடம் ஈழத்திலிருந்து பிரான்ஸிற்கு வந்திருந்தபோது அவரை மய்யப்படுத்தித் தோழர்களால் ஒரு சிறிய கருத்தரங்கு பாரிஸில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கருத்தரங்கில் உரையாற்றிய அவர் ஈழத்துச் சாதியப் படிமுறைகள், வழமைகள், ஒடுக்குமுறைகள், சாதியத்தை எதிர்த்துத் தோன்றிய அமைப்புகள், போராட்டங்களென்று விரிந்த தளத்தில் காத்திரமானதோர் உரையை நிகழ்த்தினார். எனினும் அவரின் உரை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகள் வரையான வரலாற்றுடனேயே நின்று விட்டது. பின் தொடர்ந்த கலந்துரையாடலின்போது தங்கவடிவேல் மாஸ்ரரிடம் ஒரு தோழர் “நீங்கள் எழுபதுகளுக்குப் பிந்திய தலித் மக்களின் போராட்டங்கள் குறித்தோ சாதிய ஒடுக்குமுறைகள் குறித்தோ ஏன் பேசவில்லை? முப்பது வருடங்களாகத் தொடரும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பின்பாக ஈழத்தில் சாதியம் எப்படியிருக்கிறது?” என்ற கேள்விகளை எழுப்பினார். அந்த இரு முக்கியமான கேள்விகளுக்கும் சேர்த்துத் தங்கவடிவேல் மாஸ்ரரும் ஒரு அதிமுக்கியமான பதிலை இவ்வாறு சொன்னார்: “எனக்கு இப்போது எழுபத்தியிரண்டு வயதாகிறது, என்றாலும் கூட எனக்கு இன்னமும் உயிர் மேல் ஆசையிருக்கிறது, நான் இந்தக் கருத்தரங்கத்தை முடித்துக்கொண்டு மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத்தான் செல்லவேண்டியிருக்கிறது.”

5. தங்கவடிவேல் மாஸ்ரரின் பதிலை விளங்கிக்கொள்வதில் அறிவு நாணயம் உள்ளவர்களுக்குச் சிரமமேதும் இருக்காது. இன்றைக்கு ஈழத்தில் குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தலித் அரசியலைப் பற்றி மட்டுமல்ல வேறெந்த அரசியலைப் பற்றியும் யாரும் எதுவும் பேசிவிட முடியாது. மக்களின் கருத்துச் சுதந்திரமும் அரசியற் சுதந்திரமும் புலிகளால் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. முசுலீம்களுக்கான அரசியல் இயக்கம், தலித்துக்களுக்கான அரசியல் இயக்கம், தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள் என்று ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலைப் பேசும் எவருக்கும் ஈழத்துப் பரப்பில் கடந்த இருபது வருடங்களாகவே இடமில்லை. முசுலீம்கள் வடக்கிலிருந்து முற்றாகத் துரத்தப்பட்டுக் கிழக்கில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள். அனைத்துத் தொழிற்சங்கங்களும் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டுத் தொழிற்சங்கத் தலைவர்களான எஸ்.விஜயானந்தனும் வி.அண்ணாமலையும் படுகொலை செய்யப்பட்டார்கள். மனித உரிமைகளுக்கான வெகுசன இயக்கத்தின் தலைவர் ரி. இராஜசுந்தரமும் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். பொதுவுடமைக் கட்சியின்(மா.லெ) முன்னணிச் செயற்பாட்டாளரான சி.துரைசிங்கம் சங்கானையில் வெட்டிக் கொல்லப்பட்டார். ஒக்ரோபர் எழுச்சியின் தலைவர்களில் ஒருவரும் மூத்த இடதுசாரியுமான கே.ஏ. சுப்பிரமணியம் மீதும் கொலை முயற்சி நிகழ்த்தப்பட்டது. எல்லாவித சமூக ஒடுக்குமுறைகளையும் தமிழ்த் தேசியத்தின் பேரால் சகித்துக்கொள்ளுமாறும் பொறுத்துப் போகுமாறும் தமிழ்த் தேசியவாதம் ஒடுக்கப்பட்ட மக்களிற்கு ஆயுதமுனைகளில் எச்சரிக்கை செய்கிறது.

6. ஈழத் தமிழ்ச் சமுகத்தின் மூன்றிலொரு பங்கினரான தலித் மக்களைத் தமிழ்த் தேசியத்தை நோக்கி இழுப்பதற்காக எண்பதுகளின் முற்கூறுகளில் தமிழ்த் தேசிய இயக்கங்கள் ‘சாதியொழிப்பு தமிழ்த் தேசிய விடுதலையிலேயே சாத்தியமாகும்’ என்ற பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. தலித் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இயக்கிக்கொண்டிருந்த திருவள்ளுவர் மகாசபை போன்ற ஓரிரு சிறு தலித் அமைப்புகளும் இயக்கங்களால் மௌனமாக்கப்பட்டன. எண்பதுகளில் அடித்த தேசியவாத அலையும் இயக்கங்களின் கைகளிலிருந்த ஆயுதங்களும் இவற்றைச் சாதித்தன. புதிய நிலமைகளை மதிப்பீடு செய்த கே. டானியல் “குறைந்தபட்சம் முதலில் வட பிரதேசத்தில் மட்டும் தனி இராச்சியம் அமைப்பதெனினும் தனியாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உள்ள 7,92,246 தமிழர்களில் மூன்று இலட்சம் அளவுள்ள ஒடுக்கப்பட்டவர்களின் ஒப்புதலைக்கூடப் பெற்றுவிட முடியாது” என்றார் (டானியல் கடிதங்கள் பக்: 107). ஆனால் டானியலின் மதிப்பீடு அப்போதைக்குப் பொய்த்துப்போனது. தலித் அரசியல் என்ற தனித்துவமான அரசியல் நிலைப்பாடு ஏதும் ஈழத்தில் அறியப்பட்டிருக்காத அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோர்களின் அமைப்பான சிறுபான்மைத் தமிழர் மகாசபை செயலற்றுப் போயிருந்ததாலும் தலித் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருந்த இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி ( ருஷ்ய சார்பு), லங்கா சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் சிங்கள இனவாதப் போக்குகளாலும் எழுபதுகளில் சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் உள் முரண்பாடுகளால் சிதறிப்போயிருந்ததாலும் கொதிப்பும் சலிப்புமடைந்திருந்த அரசியல் உணர்மை பெற்றிருந்த ஆயிரக்கணக்கான தலித் இளைஞர்கள் தம்மை விடுதலை இயக்கங்களில் இணைத்துக்கொண்டார்கள். ஆண்டாண்டு காலச் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு சோசலிஸத்தையும் சமூக சமத்துவத்தையும் உச்சரித்துக்கொண்டிருந்த இந்த விடுதலை இயக்கங்கள் தீர்வு காணுமென அவர்கள் அப்பாவித்தனமாக நம்பினார்கள்.

7. ஆனால் எந்த விடுதலை இயக்கத்திடமும் சாதியம் குறித்த, சாதிய ஒடுக்குமுறைமைகள் குறித்த, சாதிய விடுதலை குறித்த எளிமையான வேலைத்திட்டங்கள் கூடவிருக்கவில்லை. ஓரளவு சாதிய ஒடுக்குமுறைகள் குறித்துக் கவனம் செலுத்திய ‘ஈ.பி.ஆர்.எல்.எவ்’, ‘ஈரோஸ்’ போன்ற இயக்கங்கள் கூட கே. டானியல் சொல்வது போல் “எசமானையும் அடிமைகளையும் இனப்பிரச்சினை சுலோகத்தின் கீழ் ஒன்றிணைத்து இறுதியில் தமிழருக்கென மட்டுமே ஒரு தமிழ்ச் சோசலிஸ ஈழத்தை உருவாக்கி விடலாமென்றே முடிவு கட்டினர்கள்”. தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் காலகட்டத்தோடு நின்று போய்விட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களைத் தொடர்ந்தும் உறுதியோடு முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்த் தேசிய இயக்கங்கள் எதுவித அக்கறைகளையும் காட்டவில்லை. உண்மையில் அவர்கள் சாதியத்திற்கு எதிரான போரை முன்னெடுத்தால் ஈழத்தின் பெரும்பான்மையரான ஆதிக்க சாதிகளிடமிருந்து தாங்கள் அந்நியப்பட்டுவிடலாம் என அஞ்சிச் சந்தர்ப்பவாதங்களில் வீழ்ந்தார்கள். ஏலவே சாதியத்திற்கு எதிரான குறிப்பான போராட்டங்களை முன்னெடுத்திருந்த பொதுவுடமைக் கட்சி ஆதிக்க சாதியினரால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டிருந்த வரலாற்றையும் இந்தச் சந்தர்ப்பவாதிகள் அறிந்திருந்தார்கள்.

8. தொண்ணூறுகளிற்குப் பின்பு ஈழத்தில் தமது தனி ஆதிக்கத்தை நிறுவிய விடுதலைப் புலிகள் இயக்கம் சாதியத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பதையும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். தங்களின் தொடக்க காலத்தில் புலிகளும் சாதி, வர்க்க ஒடுக்குமுறையற்ற சோஸலிசத் தமிழீழம் என்றுதான் வாயடித்தார்கள். புலிகள் பேசிய சோசலிஸத்தின் பின்னாலிருந்த சூட்சுமத்தை அடேல் பாலசிங்கம் யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பைக் குறித்து எழுதும்போது இவ்வாறு விளக்குகிறார்: “உயர்சாதி வேளாளர் என அழைக்கப்படும் நடுத்தர வர்க்கமே அங்கு மேலோங்கி நிற்கின்றது. மேலும் யாழ்ப்பாணத் தமிழரைப் பொறுத்தவரையில் அவர்களுக்கென்று நம்பிக்கை முறைகளும் அரசியல் உள்ளுணர்வுகளுமுண்டு. எவ்வளவுதான் தத்துவப் பகுப்பாய்வுகளை முன்வைத்தாலும் அல்லது வலியுறுத்திக் கூறினாலும் அவர்களடைய சிந்தனைப் போக்கை அவை இலகுவில் மாற்றப்போவதில்லை. ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் என்பதை நியாயப்படுத்துவதற்காகவே விடுதலைப் புலிகள் தங்களது ஆரம்பகால வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மார்க்ஸிய – லெனினியத் தத்துவங்களைப் பயன்படுத்தினார்கள்” (சுதந்திர வேட்கை, பக்: 58). இதன் சுருக்கம் புலிகள் யாழ்பாணச் சமூகக் கட்டமைப்பைப் புரட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணச் சமூகத்தின் நாடி பிடித்து ஓடினார்கள் என்பதாகும். யாழப்பாணச் சமூகத்தின் நம்பிக்கை முறைகளுக்கு ஊறுசெய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்கள் என்பதாகும். இங்கு யாழ்ப்பாணச் சமூகத்தின் நம்பிக்கைகள் என்று அடேல் குறிப்பிடுவது சாதிய நம்பிக்கைளைத் தவிர வேறெதுவாகயிருக்க முடியும்? சாதியத்தைத் தவிர்த்து யாழ்ப்பாணச் சமூகத்திற்கு வேறெதும் தனித்துவமான நம்பிக்கைகளோ அரசியல் உணர்வுகளோ கிடையவே கிடையாது. விடுதலைப் புலிகள் தாங்கள் யாழ்ப்பாண மரபுகளைப் பேணுவதாகச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைபவர்கள். புலிகளின் தலைவரே வைதீக முறையிற்தான் திருப்போரூர் கோயிலில் தனது துணைவியாருக்குத் தாலியைக் கட்டினார். புலிகள் உலகத்தின் பல பாகங்களிலும் சனாதன இந்துக் கோயில்களை நிறுவி நடத்தி வருகிறார்கள். விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத் திட்டங்களிலும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்த எந்தக் கவனமும் காணப்படுவதில்லை. அவர்களின் மாவீரர் நினைவுதின உரைகளிலோ அரசியல் அறிக்கைகளிலோ தீர்வுத் திட்டங்களிலோ கலை இலக்கிய வெளிப்பாடுகளிலோ அவர்கள் சாதியக் கொடுமைகளைக் குறித்து எதுவும் பேசுவதில்லை. மறுதலையாக அவர்கள் அங்கெல்லாம் பண்டைய காலத் தமிழர்களின் வீரங்களையும் பெருமைகளையும் கொண்டாடி மீட்புவாதம் பேசுகிறார்கள். பண்டையத் தமிழர்களின் வாழ்வு என்பது தாழ்த்தப்பட்ட சாதிகளை மிதித்தெழுந்த வரலாறுதான், பண்டைய தமிழர் மாண்பென்பது சாதிய மாண்புதான், தமிழரின் வரலாறு என்பதே சாதியத்தின் கறைபடிந்த வரலாறுதான் என்பது போன்ற உண்மைகள் புலிகளுக்கு உறைப்பதேயில்லை.

9. விடுதலைப் புலிகள் அறிவித்துக்கொண்ட அதி வலதுசாரிகள், அறியப்பட்ட பாஸிஸ்டுகள். சாதிய, வர்க்க, பால், பிரதேச முரண்களை அவர்கள் சுத்த வலதுசாரிக் கண்ணோட்டத்திலும் யாழ் மரபுகளின்படியும் தேசவழமைச் சட்டங்களாலுமே அணுகுகிறார்கள். இந்தச் சமூக ஒடுக்குமுறைகளிற்கான நியாயமான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அவர்களின் அரசியல் நிகழ்வு நிரலில் என்றுமே இடமிருந்ததில்லை. இவை குறித்த கேள்விகள் எழும்போதெல்லாம் ‘தமிழீழ விடுதலையோடு இவையெல்லாம் சாத்தியமாகுமென’ மூஞ்சியை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு மந்திரத்தால் மாங்காயடிக்கும் உபாயத்தை அவர்கள் பிதற்றுகிறார்கள். முதலில் ஆதிக்கசாதித் தமிழனிடமிருந்து தாழ்த்தப்பட்ட தமிழனுக்கு விடுதலையைப் பெறவேண்டுமென எவராவது மறுத்துக் கதைத்தால் அந்த மறுத்தோடி கண நேரத்தில் தேசத்துரோகியாகி விடுகிறார். முதலில் அந்த மறுத்தோடி துரோகியென ‘நிதர்சனத்தில்’ செய்திவரும். பின்பு எல்லாளன் படையிலிருந்து ஓலைவரும், தொடர்ந்து உந்துருளியில் சாவும் வரும். தமது இயக்கத்திற்கான அரசியற் பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்து விடுதலைப் புலிகளிடம் தமிழ் மக்கள் நலன்கள் சார்ந்த வேறெந்த வேலைத்திட்டமும் கிடையாது. கடந்த இருபது வருட காலங்களாகத் தொடரும் புலிகளின் உச்சமான பாஸிஸச் செயற்பாடுகளால் ஒரு மக்கள் விடுதலை இயக்கத்துக்குரிய, சமூகப் புரட்சி அமைப்புக்குரிய, சனநாயக அமைப்புக்குரிய எல்லாவித அறங்களையும் தகுதிகளையும் இழந்திருக்கும் புலிகள் சாதிய ஒடுக்குமுறைகளிற்கான தீர்வைத் தருவார்கள் எனச் சொல்வது பிராந்திய வல்லரசான இந்தியா ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டிவிடும் எனச் சொல்லும் அறியாமைக்கு அல்லது அயோக்கியத்தனத்திற்கு ஒப்பானது. அண்மைக் காலங்களில் ஈழத்தில் நிகழ்ந்த எடுத்துக்காட்டான ஓரிரு சாதியப் பிரச்சனைப்பாடுகளில் புலிகள் எவ்வாறான எவருக்குச் சார்பான நிலைப்பாடுகளை எடுத்தார்களென்பதைக் கீழே தொகுத்துக்கொள்வோம்.

10. யாழ் பொதுநூலகத் திறப்பு விழாவும் சாதி வெறியர்களும்:

அய்க்கிய தேசியக் கட்சியின் அப்போதைய அமைச்சர்களான காமினி திஸநாயக்க, சிறில் மத்தேயு, பெஸ்டஸ் பெரேரா ஆகியோரின் ஆணையின்பேரில் 1981ல் யாழ்பொது நூலகம் முற்றாக எரியூட்டப்பட்டது. 1994ல் சமாதானத்தின் பெயரால் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய சந்திரிகா பண்டாரநாயக்க ‘சமாதானத்திற்கான யுத்தத்தை’ நடாத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினார். சமாதானத்திற்குப் பதிலாக அடக்குமுறைச் சட்டங்கள், சிறைகள், செம்மணிப் புதைகுழிகளெனத் தமிழ் மக்களுக்கு வழங்கிய சந்திரிகா யாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு, மின்சாரமெனச் சில கவர்ச்சிகரமான திட்டங்களையும் வழங்கினார். அவற்றில் முக்கியமானது யாழ் பொதுநூலகப் புனரமைப்புத் திட்டம். சனாதிபதியின் சிறப்பு நிதி ஒதுக்கீடும் புனர்வாழ்வு அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடுமாக மொத்தம் 120 மில்லியன் ரூபாய் யாழ் பொது நூலகத்தைப் புனரமைக்க ஒதுக்கப்பட்டது.

11. 1944ல் உரும்பிராயில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த செல்லன் கந்தையன் தனது பதினாறாவது வயதில் யாழ் நகரசபையில் ஓர் அடிமட்டத் தொழிலாளியாக வேலையிற் சேர்ந்தார். அவர் அங்கே முப்பத்தெட்டு வருடங்கள் வேலை செய்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட செல்லன் கந்தையன் 1997ல் தேர்தலில் வெற்றிபெற்று மாநகரசபை உறுப்பினராகி 2001ல் யாழ் மாநகர சபையின் துணை மேயரானார். பின்பு 16 ஜனவரி 2002ல் அவர் யாழ் நகரபிதாவாகப் பதவியேற்றார். யாழ்ப்பாணத்தின் மேயர்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய கொலை இலக்காகவே எப்போதுமிருக்கின்றார்கள். அல்பிரட் துரையப்பா, சிவபாலன், சரோஜினி யோகேஸ்வரன் ஆகிய மேயர்கள் புலிகளால் கொல்லப்பட்டிருந்த உயிர்ப் பாதுகாப்பற்ற கொலைச் சூழலிற் தான் செல்லன் கந்தையன் மேயர் பொறுப்பை ஏற்றிருந்தார்.

12. பெப்ரவரி 2003ல் செல்லன் கந்தையன் தலைமையில் இயங்கிய மாநகர சபை ஒதுக்கப்பட்ட 120 மில்லியன் ரூபாய்களிற்குமான நூலகப் புனரமைப்பு வேலைகளை நிறைவேற்றியது. தொண்ணூற்றொன்பது சதவீதமான வேலைகள் நிறைவு பெற்றுவிட்டன எனத் தலைமைக் கட்டட நிர்மாணப் பொறியியலாளர் மாநகர சபையில் அறிக்கை சமர்ப்பித்தார். திட்டமிடப்பட்டிருந்த பணிகளில் நூலகக் கட்டடத்திற்கு மின்தூக்கி பொருத்துவது, சிற்றுண்டிச்சாலை அமைப்பது, குளிரூட்டிச் சாதனம் பொருத்துவது போன்ற வேலைகளே எஞ்சியிருந்தன. எனினும் ஒதுக்கிய நிதி முடிந்திருந்தது. எது எப்படியிருப்பினும் இந்த மின்தூக்கி, குளிரூட்டி வசதிகளின்மை நூலக வாசிப்பைக் குறிப்பாகப் பாதித்திருக்கப் போவதில்லை. ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த சின்னஞ்சிறிய தற்காலிக நூலகத்திற்குள் இருபத்தியிரண்டு வருடங்களாக அல்லலுற்றுக்கொண்டிருந்த மாணவர்களிற்கும் அறிவுத் துறையினருக்கும் பொதுமக்களிற்கும் யாழ் பொது நூலகம் மீண்டும் இயங்கத் தொடங்குவது உற்சாகமான செய்தியாகவேயிருந்தது.

13. ஒன்பது தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களையும் ஆறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களையும் ஆறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்களையும் இரண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினர்களையும் கொண்ட மாநகரசபை புனரமைக்கப்பட்ட நூலகத்தை 14.02.2003ல் திறப்பதெனவும் திறப்புவிழா நிகழ்விற்கு மேயர் செல்லன் கந்தையன் தலைமை வகிப்பதெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நூலகத்தைத் திறந்து வைப்பதெனவும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

14. அவ்வளவுதான்! யாழ்ப்பாணத்தின் ஆதிக்க சக்திகள் ஒன்றுகூடி ‘லிப்ட் இல்லை, கன்டீன் இல்லை, ஏ.சி இல்லை எப்படி நூலகத்தைத் திறக்க முடியும், அங்கே எப்படிப் படிக்க முடியும்?’ எனக் கண்டனங்களைத் தெரிவித்தனர். பலபத்துக் கண்டனத் துண்டறிக்கைகளையும் நகரம் முழுவதும் விநியோகித்தனர். சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றம், யாழ் ஆசிரியர்கள் சங்கம், சர்வதேச மாணவர் பேரவை போன்ற பல அமைப்புகள் நூலகத்தைத் திறக்கக் கூடாது என்று அறிக்கைகளை வெளியிட்டன. உச்சக்கட்டமாக வெகுஜன ஒன்றியத்தினர் யாழ் பொது நூலகத்தைத் திறப்பதைக் கண்டித்து திறப்புவிழா நாளன்று யாழ்ப்பாணம் முழுவதும் பூரண கடையடைப்பும் கரிநாளும் நடாத்துவோமெனக் கொக்கரித்தனர். புலிகள் தொடர்ச்சியாக யாழ் மேயர் செல்லன் கந்தையனை மிரட்ட ஆரம்பித்தார்கள். சதிமேற் சதி பின்னப்பட்டது. சூழ்ச்சி வியூகங்கள் வகுக்கப்பட்டன. நூலகத்தைத் திறக்க விடாமற் செய்வதற்கு அத்தனை ஆதிக்க சக்திகளும் கரம் கோர்த்துக் களத்துக்கு வந்தன. தேசிய நாளிதளான ‘தினக்குரல்’ தனது 16.02.2003 பதிப்பில் செல்லன் கந்தையனைச் சாதி அடையாளங்களுடன் வரைந்த சாதிவெறிக் கேலிச் சித்திரம் ஒன்றையும் வெளியிட்டது. மிகக் கவனமாக இந்தக் கேலிச் சித்திரம் தினக்குரலின் யாழ் பதிப்பில் மட்டுமே வெளியாகியது.

15. செல்லன் கந்தையனுக்கு எதிராகக் கமுக்கமாகப் விரிக்கப்பட்ட சாதிவெறி வலையின் முக்கிய கண்ணிகளைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்:

05.02.2003: பதினான்காம் திகதி திறந்து வைக்கப்படவிருக்கும் நூலகத்தைத் திறந்து வைப்பதில் அவசரம் காட்ட வேண்டாமென யாழ் மாவட்டப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி கூட்டமைப்பினரிடம் பேசினார்.

10.02.2003: யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட இரு இளைஞர்கள் மாலை 6.30 மணியளவில் செல்லன் கந்தையனை அவர் அலுவலகத்திற் சந்தித்துப் பதினான்காம் தேதி திட்டமிட்டபடி நூலகம் திறக்கப்பட்டால் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ந்தது போன்றதொரு இரத்தக்களரியைச் சந்திக்க நேரிடுமென்று மேயரை மிரட்டினர்.

12.02.2003: வன்னியிலிருந்து வந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் சொலமன், இன்னொரு புலி உறுப்பினர் சிறில் மற்றும் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புலிகளின் முன்னணி அமைப்பான சர்வதேச மாணவர் பேரவையின் அன்றைய தலைவருமான கஜேந்திரன் ஆகியோர் மாநகர சபை அலுவலகத்திற்குள் நுழைந்து நூலகத்தைத் திறக்கக் கூடாதென செல்லன் கந்தையனை எச்சரித்தனர். அன்றிரவு பதினொரு மணியளவில் புலிகள் யாழ் பொதுநூலக வளாகக் காவலாளியைத் துப்பாக்கி முனைகளில் அச்சுறுத்தி அவரிடமிருந்து பிரதான வாயிற் சாவி, நூலக மற்றும் அலுவலகச் சாவிகளை அபகரித்துச் சென்றனர்.

13.02.2003: காலையில் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி மாநகரசபை அலுவலகம் சென்று, மேயர் செல்லன் கந்தையனிடமும் சபை உறுப்பினர் முகுந்தனிடமும் பூட்டிய அறையினுள் விவாதித்தார். பின் இளம்பரிதி செய்தியாளர்களிடம் பேசுகையில் “திறப்புவிழா நடைபெறுவதை மக்கள் விரும்பவில்லை. எனவே திறப்புவிழாவை ஒத்திவைக்க வேண்டும். இன்றைய சமாதானச் சூழ்நிலையில் ஏன் ஓர் இரத்தக்களரியை உருவாக்க வேண்டும்? எனவே நூலகத் திறப்புவிழாவை நிறுத்தி வைக்குமாறு மேயரைக் கேட்டுள்ளேன்” என்றார். பின் மேயர் செல்லன் கந்தையன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “திறப்புவிழாவை நிறுத்துமாறு இளம்பரிதி கேட்டார். நான் மற்றைய சபை உறுப்பினர்களிடம் பேசி முடிவெடுப்பதாக அவருக்குச் சொல்லியுள்ளேன்” என்றார். “நானும் குடும்பஸ்தன்” என்று செய்தியாளர்களிடையே தெரிவிக்கவும் செல்லன் கந்தையன் தவறவில்லை. அன்று மாலையே செல்லன் கந்தையன் தனது மேயர் பதவியை இராஜினாமாச் செய்தார்.

16. நூலகத் திறப்புவிழா புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதைக் குறித்து வீ.ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு சொன்னார்: “யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த மாநகர சபையின் ஆயுட்காலம் முடியும் வேளையில் உலகமே மதிக்கத்தக்க ஒரு செயலைப் பூர்த்தி செய்து, அதன் பெருமையைப் பெறும் சந்தர்ப்பத்தைப் பறிப்பது மனச்சாட்சி உள்ள எந்தவொரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். யாழ் மாநகர சபையின் வளர்ச்சிக்கு செல்லன் கந்தையன் செய்த சேவைகளை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இந்தப் பெருமையைப் பெறவிடாது செல்லன் கந்தையன் அவர்களைத் தடுக்கும் வரலாற்றுத் தவறை என்றாவது ஒருநாள் இவர்கள் உணர்ந்துதான் ஆகவேண்டும்”.

17. யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் செல்லன் கந்தையன் 01.03.2003ல் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலிருந்து ஒரு பகுதி: “இந்த நூலகம் திறக்கப்படுவதால் புலிகளுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. அவர்கள் நூலகம் திறப்பதைத் தடுத்ததிற்குப் பின்னால் வேறோரு காரணமுள்ளது என்றே நான் கருதுகிறேன். நான் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்துள் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் பொதுநூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின் பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம் புலிகள் முற்று முழுதாகச் சாதிய அடிப்படையிலேயே இப் பிரச்சினைகளை அணுகினார்கள் என்றே நான் நினைக்கிறேன்”.

18. வீ. ஆனந்தசங்கரியின் அறிக்கை குறித்தோ செல்லன் கந்தையனின் செவ்வி குறித்தோ இன்றுவரைக்கும் புலிகளோ அவர்களது ஆதரவாளர்களோ எதுவும் பேசாமல் கள்ள மௌனம் காத்துக்கொண்டிருக்கிறார்கள். செல்லன் கந்தையன் பதவி விலகிய சில மாதங்களிலேயே யாழ் பொதுநூலகம் எதுவித பிரச்சினையுமில்லாமல் திறந்து வைக்கப்பட்டதும் இங்கே கவனிக்கத்தக்கது. செல்லன் கந்தையன் சாதியத்தின் பெயரால் வஞ்சிக்கப்பட்டது இதுவல்ல முதற்தடவை. அவர் துணை மேயராகப் பதவி வகித்தபோது அப்போதைய மேயரும் பிற்காலத்தில் புலிகளின் மும்மொழிப் பிரச்சாரப் பீரங்கியுமாகத் திகழ்ந்த என். ரவிராஜால் பூட்டிய அறைக்குள் வைத்துச் சாதி சொல்லித் தாக்கப்பட்டிருந்தார்.

19. சாதியும் சதியும்:

விமல் குழந்தைவேல் எழுதிய ‘வெள்ளாவி’ நாவல் கிழக்கிலுள்ள தீவுக்காலை என்ற கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்ட சலவைத் தொழிலாளர்கள் சமூகத்தைப் பற்றிப் பேசும் நாவல். அந்த நாவல் தமது சமூகத்தைக் கேவலப்படுத்துவதாக விமர்சனங்களை வைத்த தீவுக்காலை தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அந்த நாவலைத் தடை செய்யும்வரை ஆதிக்க சாதியினரின் கல்யாணம், இழவு போன்ற சடங்கு வீடுகளுக்குச் சென்று தொண்டூழியம் செய்யமாட்டோம் எனச் சொல்லிவிட்டார்கள். இத் தொண்டூழிய மறுப்பால் தீவக்காலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இறந்த ஆதிக்க சாதியினர்களின் பிரேதங்கள் நாட்கணக்கில் கிடந்து நாறத் தொடங்கின. ‘நாறினாலும் பரவாயில்லை, வண்ணார் வந்து சாதிக் கடமைகளை ஆற்றாமல் சவங்களை எடுக்கமாட்டோம்’ என்றனர் ஆதிக்க சாதியினர். இந்தக் கட்டத்திற்தான் பிரச்சினையில் அப் பகுதியின் புலிகளின் பொறுப்பாளர் குயிலின்பன் தலையிட்டார். உடனடியாக ‘வெள்ளாவி’ நாவல் புலிகளால் தடைசெய்யப்பட்டது. நாறின பிணங்களும் சாதியச் சடங்குகள் ஆற்றப்பட்டுத் தூக்கப்பட்டன. இங்கு புலிகளின் கவலையெல்லாம் சாதியச் சடங்குகளிலும் முறைமைகளிலும் எதுவித ஊறும் நேர்ந்திடக்கூடாது என்பதிலேயே இருக்கிறது என்றுதான் நம்மால் கருத முடிகிறது. ஏனெனில் பிணம் நாறினால் நாறட்டும் என்று புலிகள் சும்மாயிருந்திருக்க வேண்டும். அது சுற்றுச் சூழலுக்குக் கேடாகலாம் என்ற கோணத்தில் அவர்கள் யோசித்திருந்தால் வீடுகளில் பிணங்களை வைத்திருந்தவர்களுக்கு ‘நாலு அடியைப் போட்டு’ப் பிணங்களை அகற்றச் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து ‘வெள்ளாவி’ நாவலைத் தடைசெய்து மறுபடியும் சாதியத் தொண்டூழியங்களையாற்ற ஆதிக்க சாதியினரிடம் தாழ்த்தப்பட்டவர்களை அனுப்பிவைத்த புலிகளின் சமூக அக்கறையை என்னவென்று சொல்ல? வடக்கை விடக் கிழக்கில் வரலாற்றுரீதியாகவே சாதிய ஓடுக்குமுறைகள் ஒப்பீடளவில் சற்றுக் குறைவெனினும் இன்றுவரையிலும் அங்கு சேவினை என்ற பெயரில் தலித்துகள் ஆதிக்க சாதியனருக்குத் தொண்டூழியம் செய்ய நிர்ப்பந்திக்கபட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். கோயில்களிலும் இழவு வீடுகளிலும் பறை அடிப்பதிலிருந்து தம்மை விடுவிக்குமாறு தலித்துகள் ஆதிக்க சாதியினருக்கும் கோயில் தர்மகர்த்தாக்களுக்கும் ‘உருக்கமான வேண்டுகோள்கள்’ என்ற தலைப்புகளில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துக்கொண்டேயிருக்கிறார்கள். இரண்டொரு வருடங்களிற்கு முன்பு களுதாவளை நான்காம் குறிச்சியில், தலித்துக்கள் கோயிலிலும் மரணவீடுகளிலும் பறையடிக்க மறுப்புத் தெரிவித்தபோது கோயில் தர்மகர்த்தாக்களையும் முந்தியடித்துக்கொண்டு அறிவுத்துறையினரான ‘முன்றாவது கண்’ இதழின் ஆசிரியர் குழுவினர் தலித்துகளின் மறுப்புக்கே மறுப்புத் தெரிவித்த கேவலத்தை ‘மற்றது’ இதழ் -01ல் தோழர்கள் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்;

20. இந்தவிடத்தில் ‘வெள்ளாவி’ நாவலைப் பற்றியும் சொல்ல வேண்டும். நானும் எழுதுகிறேன் தலித் இலக்கியம் என்று புறப்பட்ட கும்பலில் ஒருவர்தான் விமல் குழந்தைவேல். இதில் நாவலின் முன்னுரையில் “அதை எழுத அதாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது” என்ற புளிப்பு வேறு. மட்டக்களப்பு வட்டார மொழி கையாளப்பட்டிருக்கிறது என்பதற்கு அப்பால் அந்த நாவலில் சிறப்புகள் ஏதுமில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதாரமான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல், சாதியச் சமூகத்தின் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ளாமல் போடியார், பாலியல் பலாத்காரம், பழிவாங்கல் என்று மோசமான தமிழ்ச் சினிமாப் பாணியில் எழுதப்பட்ட படுமோசமான நாவலது. ‘பூனைக்கு விளையாட்டு எலிக்குச் சீவன் போகுது’ என்பார்கள். விமல் குழந்தைவேலின் இலக்கியச் சல்லாபங்களிற்குத் தீவுக்காலைத் தலித் மக்களா சம்பல்? அதே வேளையில் வெள்ளாவி நாவலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதற்காகப் புலிகள் நாவலை தடைசெய்யவில்லை. அவர்கள் சாதிய வழமைகளுக்கு ஊறுகளேதும் நிகழந்துவிடக் கூடாது என்பதற்காகவே நாவலைத் தடை செய்திருக்கிறார்கள் என்று மேலே சொல்லியிருக்கிறேன். இதை மீறியும் இல்லை, சாதியை ஒழிப்பதற்காகத்தான் புலிகள் வெள்ளாவியைத் தடை செய்திருக்கிறார்கள் என்று யாராவது மட்டையடி நியாயம் பேசினால் அவர்கள் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். வெள்ளாவி நாவல் அதிகபட்சம் இருநூறு பிரதிகள் ஈழத்தில் விற்பனையாகியிருக்கும். அதையே சாதியொழிப்புக் காரணமாகத் தடை செய்யும் புலிகள் வாரத்திற்கு இலட்சணக்கான பிரதிகள் விற்பனையாகும் வீரகேசரி, தினக்குரல், உதயன் போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் அப்பட்டமான சாதிவெறித் திருமண விளம்பரங்களை ஆகக் குறைந்தது தங்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களிலாவது ஏன் தடைசெய்யவில்லை? இந்தக் கேள்விகளைப் பல தடவைகள் கேட்டாகிவிட்டது. பல ‘பெட்டிசங்களும்’ போட்டாகிவிட்டது. கையெழுத்து இயக்கமும் நடாத்தியாகிவிட்டது. யாரிடமிருந்தும் எதுவித பதிலுமில்லை. புலிகளுக்கும் அவர்களின் ஆதரவுப் படைகளுக்கும் கள்ள மௌனம் சாதிக்கச் சொல்லியா தரவேண்டும்!

21. அதிபர் கணபதி இராசதுரை கொலை:

கணபதி இராசதுரை மந்துவில் எனும் தலித் கிராமத்தில் 1947ல் பிறந்தவர். மந்துவில் கிராமத்து மக்கள் சாதியொழிப்புப் போராட்டத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள். தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் முன்னெடுத்த சாதியொழிப்புப் போராட்டங்களின் முன்னணியில் நின்று போரிட்டவர்கள் மந்துவில் மக்கள். அப்போராட்டங்களில் இக்கிராம மக்களிற் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. இளம் இராசதுரை இந்தப் போராட்டச் சூழலுக்குள் உருவானவர். அவர் தனது மரணம் வரையில் தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர். இராசதுரை தனது ஆசிரியப் பணியின் தொடக்க காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் கிராமங்களிலும் குறிச்சிகளிலும் எம்.சி.சுப்பிரமணியம் போன்ற தலித் தலைவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்ட பாடசாலைகளில் கடுமையான உழைப்பைச் செலுத்தித் தலித் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். தலித் மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட சாதியச் சூழலிலிருந்து தனது உறுதியாலும் போராட்டத்தாலும் கல்விமானாக உருவெடுத்தவர் இராசதுரை. தலித் மக்களைச் சூழப் பின்னப்பட்டிருந்த இரும்பு வலைகளைக் கண்ணி கண்ணியாக அறுத்தெறிந்துகொண்டே அவர் முன்னே வந்தார். அவர் வடமாகாண பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேரவையின் உறுப்பினர், இலங்கை கல்வி அமைச்சின் நிர்வாக ஆலோசனைக்குழு உறுப்பினர், அரிமா சங்கத்தின் யாழ் வலயத் தலைவரெனப் பல பொறுப்பான பதவிகளை வகித்தார். இந்தக் காலம் முழுவதும் சாதி ஒரு பிசாசைப் போல, ஒரு தேர்ந்த உளவாளியைப் போல அவரைப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

22. இராசதுரை 1996ல் யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான கல்லூரியான மத்திய கல்லூரியின் அதிபரானார். அவர் அந்தப் புகழ் வாய்ந்த கல்லூரியின் முதலாவது தலித் அதிபராவார். துப்பாக்கியின் நிழலில் நீறுபூத்த நெருப்பாய்க் கிடப்பதாகச் சொல்லப்பட்ட சாதியம் அன்று இன்னொருமுறை கனலத் தொடங்கியது. யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் பொறுப்பிலிருந்து இராசதுரையை நீக்குவதற்கு ஆதிக்க சாதி வெறியர்கள் பல வழிகளிலும் முழு வீச்சோடு கிரியைகளைத் தொடங்கினர். பதவியிலிருந்து விலகுமாறு அதிபருக்குத் தொலைபேசியில் மிரட்டல்கள் வந்தவாறேயிருந்தன.ஆதிக்க சாதியினருக்கே உரித்தான சாதியத் தந்திரங்களோடு சாதி வெறியர்களால் போடப்பட்ட அழுத்தங்களை தனது உறுதியாலும் தலித் சமூகத்தின் ஆதரவாலும் இராசதுரை எதிர்கொண்டார். யாழ்ப்பாணச் சாதியத்தின் கொடூர முகத்தோடு அவர் நேருக்கு நேராகப் பொருதினார். இராசதுரை மத்திய கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட போது கல்லூரியின் முழுக் கட்டடத் தொகுதிகளும் யுத்த அனர்த்தங்களால் முற்று முழுதாகச் சேதமுற்றிருந்தன. குண்டு வீச்சுக்களால் உருவாக்கப்பட்டிருந்த கற்குவியல்களின் மத்தியிலிருந்து அதிபர் தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அப்போது கல்லூரியின் விளையாட்டு மைதானம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இராசதுரை அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒரே மாதத்தில் சிறிலங்காப் படையினர் கல்லூரி மைதானத்திலிருந்து அகற்றப்பட்டனர்.

23. அதிபரின் கடினமான உழைப்பாலும் சீரிய நிர்வாகத் திறனாலும் கல்லூரி குறுகிய காலத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. யாழ் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு காலக் கதவுகள் தலித் மாணவர்களிற்காக அகலத் திறந்து வைக்கப்பட்டன. முன்னைய காலங்களை விடப் பன்மடங்குகள் தொகையில் தலித் மாணவர்களிற்குக் கல்லூரியில் அனுமதி வழங்கப்பட்டது. சாதிய மதிப்பீடுகள் அதிபரால் கல்லூரிக்கு வெளியே துரத்தியடிக்கப்பட்டன. அதிபர் இராசதுரையின் காலத்தில் அங்கு கல்விகற்ற ஒரு மாணவனின் பதிவைக் கவனியுங்கள்: “உயர் தரத்தில் எனது பாடத்தேர்வு சார்ந்த காரணங்களால் யாழ்.மத்திய கல்லூரிக்கு மாறவேண்டி வந்தது. ஏகப்பட்ட பஞ்சமர்கள் கற்கும் (வெள்ளாளப் பாஷையில் ‘காவாலிப் பள்ளிக்கூடம்’), ஒரு பஞ்சமரே அதிபராய் இருக்கும் பாடசாலை என்பதில் அம்மாவுக்கு படு எரிச்சல் இருந்தது. அம்மாவுக்கு எனது பாடங்களை வழங்கக் கூடிய யாழ் இந்துக் கல்லூரி விருப்பமான ஒன்றாக இருந்த போதும் அதன் ‘டொனேஷன்’ தொகை அப்பக்கமும் தலை வைக்க விடவில்லை. நான் சேர்ந்த வருடத்தில் அதிபராய் இருந்து பின்னர் கொலையுண்ட அதிபர் இராசதுரை ஒரு பஞ்சமர். பல முற்போக்கான நடவடிக்கைகள் அவரால் பாடசாலையினுள் செய்யப் பட்டிருந்தன. முஸ்லிம் மாணவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே படித்த போதும் காலைப் பிரார்த்தனையில் அவர்களது பிரார்த்தனையும் இடம்பெறும். இஸ்லாமியப் பிரார்த்தனை, ஒளிவிழா, நவராத்திரி என சகல மதங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது” (muranveliemag.blogspot.com). 2005ம் வருடத்தின் முற்பகுதியில் வன்னியிலிருந்து அதிபருக்கு ஓலை வந்தது. அதைத் தொடர்ந்து எல்லாளன் படை அதிபருக்கு விடுத்த கொலை மிரட்டலைப் புலிகளின் கூலி இணையத்தளமான நிதர்சனம் வெளியிட்டது. இறுதியில் 12.10.2005 அன்று கலாசார நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது அதிபர் கணபதி இராசதுரை புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

24. தங்கள் அதிபர் கொலையுண்ட செய்தியை அறிந்ததுதான் தாமதம் யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களோடு வேறு சில கல்லூரிகளின் மாணவ மாணவியரும் இணைந்து கொண்டனர். யாழ் நகரத்தின் வீதிகள் வெறிச்சோடின. வீதித் தடைகளை ஏற்படுத்தியும் வீதிகளில் டயர்களை எரித்தும் அதிபரின் கொலைக்கு மாணவர்கள் நியாயம் கேட்டு நின்றனர். ஓக்ரோபர் பத்தாம் திகதிவரை மாணவர்கள் வகுப்புக்களுக்குச் செல்ல மறுத்துப் போராடினார்கள். மாணவர்களின் போராட்டங்களைத் தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகள் பல்வேறு வழிகளில் முயன்றனர். மாணவர்களின் எதிர்ப்பைக் கைவிட வலியுறுத்திப் புலிகளின் பாதாளப் படைகளான எல்லாளன்படை, சங்கிலியன்படை, வன்னியன்படை என இன்னோரன்ன படைகளின் பெயரால் துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால் புலிகளின் உத்தியோகபூர்வ ஊடகங்கள் இராசதுரையின் கொலையைக் குறித்துப் பெரும் மௌனத்தில் ஆழ்ந்தன. அதிபர் கொல்லப்பட்ட செய்தியைக் கூட அவை சொல்லாமல் எழுதாமல் இருட்டடிப்புச் செய்தன. பல்வேறு சனநாயக சக்திகளும் அதிபரின் கொலைக்குப் புலிகள்தான் காரணமென்று பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டியபோதும் புலிகள் வாயையும் திறக்கவில்லை, மறுப்பும் சொல்லவில்லை. அந்த வஞ்சக மௌனம் இன்றுவரை நீடித்துக் கொண்டுதானிருக்கிறது.

25. அதிபர் இராசதுரை செய்த குற்றம்தான் என்ன? புலிகளின் கூலி ஊடகமான நிதர்சனம் அவர்மீது சுமத்திய ‘தேசத்துரோகி’ குற்றச்சாட்டு இன்னமும் எவராலும் நிரூபிக்கப்படாமலேயே இருக்கிறது. ஒரு தலித் சமூகப் போராளியையும் கல்விமானையும் கொன்றுவிட்டுப் புலிகள் சாதிக்கும் மௌனத்திற்கு அர்த்தம்தான் என்ன? ஈழத்தில் கருத்துச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் கொடிகட்டிப் பறக்கிறது என்று சொல்பவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? மறுபுறத்தில் ஆதிக்கசாதி சனநாயகவாதிகளுக்கு வேண்டுமானால் இதுவும் புலிகளின் பாஸிசச் செயற்பாடுகளில் ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் இராசதுரைக்கு பாஸிச எதிர்ப்பாளர், தலித் விடுதலைச் செயற்பாட்டாளர் என்று இரட்டைத் தன்னிலைகள் இருப்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே விடுதலை இயக்கங்கள் தலித் சமூகத்தின் சிந்தனையாளர்களையும் தலித் தொழிற்சங்கத் தலைவர்களையும் விளிம்புநிலை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டிருந்த தலித் இளைஞர்களையும் தேடித் தேடிக் கொன்றொழித்ததை ஒட்டுமொத்த தலித் சமூகத்திற்கும் எதிரான படுகொலைகளாகத்தான் தலித் சமூகம் கருதுகிறது. சங்கானை தெங்கு பனம்பொருள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நடேசு, ஊறாத்துறை சங்கத் தலைவர் மத்தியாஸ், யாழ்ப்பாணச் சங்கத்தைச் சேர்ந்த அப்பையா போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டதையும் சமூகவிரோதிகள் என்ற பேரில் மின்கம்பங்களில் அறையப்பட்டு, நூலன், அரசன், பீப்பாராசன், போயா, லீலாவதி போன்ற நூற்றுக்கணக்கான தலித் இளைஞர்களும் பெண்களும் கொல்லப்பட்டதையும் தலித் சமூகம் குறித்துத்தான் வைத்திருக்கிறது.

26. சாதியமும் புலிகளும் என்று பேசும்போது இங்கே நாம் காய்தல் உவத்தலின்றி இன்னொரு முக்கியமான விடயத்தையும் பேசவேண்டும். ஈழத்தமிழர்களுடைய வரலாற்றில் தோன்றிய அனைத்து மைய அரசியற் கட்சிகளிற்கும் இயக்கங்களிற்கும் இதுவரை ஈழத்தின் முதன்மை ஆதிக்கசாதியினரான வெள்ளாளர்களே தலைமை தாங்கியிருக்கிறார்கள். வரலாற்றிலேயே முதற் தடவையாக விடுதலைப் புலிகள் இந்த விதியை உடைத்தெறிந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் தலைமை வெள்ளாள நீக்கம் செய்யப்பட்டது. இடைநிலைச் சாதிகளால் பெருமளவு நிரப்பப்பட்டிருக்கும் புலிகளின் தலைமையில் ஒன்றிரண்டு தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுமுள்ளார்கள். என்றாலும் கூடப் புலிகள் சாதியொழிப்பில் அக்கறையற்றிருப்பதையும் சாதிய முரண்கள் முன்னுக்கு வரும்போதெல்லாம் புலிகள் ஆதிக்கசாதியினரின் பக்கமே நிலை எடுப்பதையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? இதைத் தலித் அரசியல் அறிக்கை (விடியல் பதிப்பகம் 1995) இவ்வாறு விளக்குகின்றது: “சாதியத்தின் ஒரு தனித்துவமான பண்பு ஒவ்வொருவனையும் ஒரு சாதியானாக உணர வைப்பதுதான். சாதியாக உணர்வதென்பது ஒரு சாதிக்குக் கீழாக உணர்வது மட்டுமல்ல இன்னொரு சாதிக்கு மேலாக உணருவதும்தான்”.

27. ஈழத்தின் ஊர்களிலே மட்டுமல்ல, கேவலம் ஈழத்தின் அகதி முகாம்களிலே கூட இன்னமும் தீண்டாமை தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களிற்குத் திறக்கப்படாத தேனீர்க் கடைகளும் முடிதிருத்தும் கடைகளும் இன்னமும் கிராமங்களிலே நீடிக்கின்றன. நூற்றுக்கணக்கான ஆலயங்கள் இன்னமும் தலித்துகளுக்கும் அனைத்துக் கோயில் கருவறைகளும் பார்ப்பனரல்லாதவர்களிற்கும் மூடித்தான் கிடக்கின்றன. வட்டுக்கோட்டை, சுழிபுரம், கொடிகாமம் என்று தாழ்த்தப்பட்டவர்கள்மீது ஆதிக்கசாதியினர் தாக்குதல்களை நடத்திக்கொண்டுதானிருக்கிறார்கள். சென்ற வருடம் வரணிப் பகுதியில் ஒரு கொலைகூட விழுந்தது. இன்னமும் ஈழத்தின் உற்பத்தி உறவுகள் சாதிய அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. ‘கள்ளிறக்கும் சாதி’தான் கள்ளிறக்குகிறது. ‘பறையடிக்கும் சாதி’தான் பறையடிக்கிறது. இத்தனை வருட யுத்தத்திற்குப் பின்பும் முப்பத்தேழு தேசிய விடுதலை இயக்கங்களின் நாட்டாமைகளுக்குப் பின்பும் ஏதிலிகளாக நாடுநாடாக ஓடிய போதும் அகமண முறையென்ற சாதிய இரும்புக் கோட்டையில் ஒரு பொத்தல்கூட விழவில்லையே! ஈழத்தில் சாதி ஒழிந்துவிட்டதென ‘ஜோக்’ அடிப்பவர்களால் ஈழத்தில், துணி வெளுக்கும், கள்ளிறக்கும் ஓர் வெள்ளாளனையோ அர்சகராயிருக்கும் ஒரு தலித்தையோ நமக்குக் காட்டித்தர முடியுமா? சரி வேண்டாம் விடுங்கள் புலம் பெயர் தேசங்களில் ஈழத்து வெள்ளாளர்களால் நிறுவப்பட்டிருக்கும் கோயில்களிலாவது பார்ப்பனரல்லாத ஓர் அர்ச்சகரை உங்களால் காட்டித்தர முடியுமா? புலம் பெயர்ந்த தமிழர்களிடையே அகமண முறைமை ஒரு சதவீதந் தன்னும் மீறப்படவில்லை என்பது உண்மையில்லையா?

28. இன்று புலம்பெயர்ந்த தமிழர்களிடையே சாதிய உளவியல் எப்படியிருக்கிறதெனப் பேராசிரியர் சி. சிவசேகரம் கூறுவதைக் கவனியுங்கள்: “நிலவுடைமைச் சமுதாயத்திலும் அரை நிலவுடைமைப் பண்புள்ள சமுதாயத்திலும் சாதியம் சுரண்டல் முறைக்கு அவசியமான ஓர் அம்சமாக இருந்தது. அகமணமுறை சமுதாய ஏற்றத்தாழ்வைப் பேண அவசியமாயிருந்தது. தீண்டாமை சமூக ஒடுக்குமுறையின் இன்னொரு அம்சமாக இருந்தது. அந்தச் சமூகச் சூழலிலிருந்து அந்தச் சாதி அடையாளங்களுக்கு எதுவிதமான பெறுமதியும் அற்ற ஒரு நகரத்துக்குப் பெயர்ந்த பின்பும் சாதி ஓர் அடையாளமாகத் தொடர்கிறது என்றால், அப்பெயர்வு நாட்டுக்கு வெளியே புலப்பெயர்ச்சியாகி அகதியாகப் புலம்பெயர்ந்தாலும் தொடரமாட்டாது என்று எதிர்பார்க்க நியாயமில்லை. இலங்கை மண்ணில், கொழும்பிலாயினும் யாழ்ப்பாணத்துக் கிராமத்திலாயினும் அகதி முகாமுக்குள் சாதியமும் தீண்டாமையும் பேணுகிற ஒரு மனிதநிலை அதுவே அகதி வாழ்வு ஆறாயிரம் மைலுக்கு அப்பால் நிகழும்போது செயற்படாமல் இருக்குமா? இன்றைவரைக்கும் தமிழ்த் தேசியவாதத்தால் முழுமையாக முகம்கொடுக்க இயலாத பிரச்சினையாகச் சாதியம் இருப்பதற்குக் காரணம், தமிழ்ச் சமூகத்துக்கு உள்ளே இருக்கிற ஒடுக்குமுறைகளை மழுப்பியே இதுவரை தமிழ்த் தேசியம் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளதே என்பேன். புலம்பெயர் சூழலில் சாதிக்கு அர்த்தமில்லை என்ற வாதம் தருக்கரீதியாக ஏற்கக்கூடியது. அப்படியானால் நாட்டைவிட்டு நிரந்தரமாகவே புலம்பெயர்ந்தோரிடையே தொடரும் தேசிய உணர்வும் அர்த்தமற்றதாகாதா? அடையாளம் பேணல் என்று வரும்போது நமது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் பேணுகிற அடையாளம் எத்தன்மையானது? இன்று சாதி எல்லைகளைக் கடந்து, உண்மையில் நம்முடையதல்லாத, எத்தனை பண்பாட்டு அடையாளங்கள் பேணப்படுகின்றன? இன்று நடக்கின்ற அரங்கேற்றங்கள் முதலாகத் திருமணச் சடங்குகள் வரை எந்தப் பண்பாட்டு அடையாளத்தை வலியுறுத்துகின்றன? (கே.டானியல் நினைவுமலர் பக்: 5)

29. புகலிடத்தில் சாதியம் குறித்து எழுதும் சி.புஸ்பராஜா “வீடு சென்று முடி வழித்தல், மரண வீடுகளில் தொழிலாகப் பாடும் வழக்கம் பிராமணர்களை வைத்துச் சடங்குகள் செய்யும் வழக்கம், மாலை, மணவறை, நட்டுவ மேளம், நாதஸ்வரம் எனச் சாதியின் அனைத்து வடிவங்களும் புகலிடங்களில் வந்துவிட்டன. இவைகள் எல்லாவற்றையும்விட ஆபத்தானவை இங்கு பெருகிவரும் இந்துக் கோயில்கள். இக்கோயில்கள் சாதி அமைப்பு மேலும் இங்கு கட்டமைக்கப்படப் பெரும் உதவியாய் இருக்கப்போகின்றன என்பதே உண்மை” என்பார் (கறுப்பு தொகுப்பு நூல் பக்: 52). புகலிடச் சாதியம் குறித்து எழுதும்போது “இந்த மண்ணின் பரம்பரைப் புத்தி இங்கு மட்டுமல்ல, கடல் கடந்து தேசம் கடந்து போய் வேரோடியுள்ள புலம்பெயர்ந்தவர்களிடையே கூடத் தனது நச்சு வேர்களைப் பரப்பி வருகின்றது என்பதுதான் இன்றைய சர்வதேசச் சோகம்! சர்வதேசக் கொடுமை! சர்வதேச அக்கிரமம்! கீழ் பிளாட்டில் இருப்பவர்கள் ஊரில் என்ன சாதியென மேல் பிளாட்டில் உள்ளவர்கள் தூண்டித் தூண்டி விசாரிப்பார்களாம். பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்குத் தங்கள் ஒரிஜினல் சாதி தெரிந்தவிடக் கூடாது என நினைத்துப் பயந்து பயந்து ஒடுங்குவார்கள். ‘அவர்கள் அந்தப் பகுதி நாங்கள் போக்குவரத்தெல்லாம் அவர்களுடன் வைத்துக் கொள்வதில்லை’ எனப் பெருமைப்பட ஜம்பமாகத் தமது உயர் குலத்துத் தூய்மையைப் பிரகடனப்படுத்துவார்களாம் இன்னொருசாரார். ஊரில் ‘அவர்களின் வீடுகளிற்கெல்லாம் போய் நாம் செம்புத்தண்ணி தூக்குவதில்லை’ – இது வேறோர் குழு. புலம் பெயர்ந்து அதனால் தமது இருப்பை இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்த நினைக்கும் எழுத்தாளர்களையும் இந்த உயர்குல வருணாச்சிரமத் தர்மப் பிரச்சினை விட்டு வைக்கவில்லை. பிரம்ம குலத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டனுக்குப் போயும் அகதிகளில் ஒருவராகத் தன்னைப் பதிந்து கொண்டிருந்த போதிலும் கூட ‘ஐயர்’ என்ற வாலை ஒட்டியபடியே பவனி வந்துகொண்டிருக்கிறார் என ஒரு இலக்கிய நண்பர் சமீபத்தில் எனக்குச் சொல்லி வருத்தப்பட்டார். புலம்பெயர்ந்து அகதிநிலை ஏற்பட்டபோதிலும் கூடப் பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்ர, பஞ்சம என்ற வர்ணாச்சிரமப் படிநிலை அய்ரோப்பாவில் இன்று நம்மவர்களால் கைக்கொள்ளப்படுகின்றது” என்பார் டொமினிக் ஜீவா,(எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் பக்: 112).

30. படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோவென்று போகும்! மாற்றுக் கருத்து, சனநாயகம், மனிதவுரிமைகள் என்றெல்லாம் வாயடிக்கும் புகலிட எழுத்தாளர்கள் கூட இந்த ஆதிக்கசாதி உளவியல்களிலிருந்து விடுபட்டார்களில்லை. கனடாவில் வாழ்பவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவரும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் கல்வி நிர்வாக சேவையின் முன்னாள் அதிபருமான கதிர் பாலசுந்தரம் ‘மறைவில் ஐந்து முகங்கள்’ என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். சாதிவெறியை அப்பட்டமாகக் கக்குவதில் ஆறுமுக நாவலரெல்லாம் அதிபரிடம் பிச்சை வாங்கவேண்டும். அய்ந்து தமிழ்த் தேசியவாத இயக்கங்களை மய்யப்படுத்தி எழுதப்பட்ட இந்த நாவலில் பாலசுந்தரம் இயக்கங்களின் கொடுமைகளுக்கெல்லாம் இயக்கங்களில் செயற்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்களே காரணம் என்ற அரிய கருத்தைக் கண்டடைகிறார். அது மட்டுமா? தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான தர்மலிங்கத்தையும் ஆலாலசுந்தரத்தையும் இராசலிங்கத்தையும் துரைரத்தினத்தையும் ஒரே இரவில் கடத்திச் சென்ற ‘ரெலோ’ இயக்கத்தினர் முன்னவர்கள் இருவரையும் கொன்றுவிட்டுப் பின்னவர்கள் இருவரையும் உயிரோடு விடுவித்ததற்குக் காரணம் பின்னவர்கள் இருவரும் வெள்ளாரல்லாதவர்களாய் இருந்ததுதான் என்கிறார் பாலசுந்தரம். எச்சரிக்கை! செய்வதையெல்லாம் செய்துவிட்டு, வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கும் தமிழ்த் தேசியத்தின் அத்தனை தோல்விகளுக்கும் அதன் பாஸிசப் பண்புகளுக்கும் இயக்கங்களிலிருந்த தாழ்த்தப்பட்ட / வெள்ளாளர்களல்லாத இளைஞர்களே காரணம் என வெள்ளாளர்கள் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தப் போவதற்கான முன்னறிவித்தலே கதிர் பாலசுந்தரத்தின் நாவல். பாலசுந்தரம் ஒன்றும் லப்பா – சிப்பா எழுத்தாளர் கிடையாது. இவர்தான் ‘அமிர்தலிங்கம் சகாப்தம்’ என்ற நூலையும் எழுதியவர். இந்நூலை இலண்டனில் இயங்கும் ‘அ.அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை’ வெளியிட்டிருந்தது. அந்நூலில் ‘அமிர்தலிங்கம் வெள்ளாள சாதியில் பிறந்தவர், அதுவும் முதலாம் செம்பு வெள்ளாளராகப் பிறந்தவர்’ என்றெல்லாம் அமிர்தலிங்கத்தின் சாதியப் பின்புலத்தைக் கொஞ்சங்கூடக் குற்றவுணர்வின்றி எழுதி இந்த அயோக்கிய சிகாமணி சாதிப்பாசம் கொண்டாடியிருந்தார். பாலசுந்தரத்தின் இத்தகைய மதிப்பீடுகள் குறித்துப் புலிடத்தில் சலனங்கள் ஏதுமில்லை. இதன் அர்த்தம், புகலிடத்தில் அறுதிப் பெரும்பான்மையாயிருக்கும், ஊடகங்களைத் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆதிக்கசாதியினர் பாலசுந்தரத்தின் ஆதிக்கசாதி மதிப்பீடுகளை மௌனமாக அங்கீகரிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன? வெள்ளாள நீக்கம் செய்யப்பட்ட புலிகளின் இன்றைய தலைமை வீழ்த்தப்படும் காலத்தில் (கவனிக்க: புலிகளல்ல, புலிகளின் தலைமை) இத்தகைய சாதிய மதிப்பீடுகள் முன்னிலைக்கு வரும். ஒருவிதத்தில் சவால் செய்யப்பட முடியாமலிருக்கும் புலிகளின் தலைமையை வீழ்த்துவதே இந்த மதிப்பீடுகளாகவுமிருக்கும். இதைச் செய்வதற்குப் புலிகளுக்கு வெளியிலிருந்துதான் ஆள் வரவேண்டும் என்றில்லை. புலிகளுக்குள்ளேயிருந்து கூட ஆள் வரலாம். ஏனெனில் நமது சாதியச் சமூகத்தில் விடுதலைத் தத்துவங்களையும் தேசியவாதத்தையும் ஆயுதங்களையும் விசுவாசத்தையும் விடப் பன்மடங்கு பலம் பொருந்தியது சாதியம்.

31. ‘தேனீ இணையத்தளம்’ விடுதலைப் புலிகளிளைக் குறித்துக் கற்பனையான நேர்காணல் ஒன்றை எழுதும்போது சுப.தமிழ்ச்செல்வனின் சாதியப் பின்னணியை ஞாபகப்படுத்தி அயோக்கியத்தனமான ஒரு கிண்டலைச் செய்தது. அதே தேனீ இணையத்தளம் அண்மையில் ‘உண்மையில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?’ என்ற கட்டுரையில் “புலிப்பொடியள் யாழ் குடாநாட்டுக்குள் வந்தவுடன் அங்கே வேலைவெட்டியில்லாமல் இருந்த கொஞ்சப்பேர், பள்ளிக்கூடப் பொடியள், ஒதுக்கப்பட்ட மக்கள், காடைகள், வறுமை வாழ்க்கைக்குக் கீழ் வாழ்ந்துகொண்டிருந்தவர்கள், வியாபாரிகள் இப்படி எல்லாவகையினரிலும் கொஞ்சப்பேர் சேர்ந்து புலிகளின் முகவர்களாகிவிட்டார்கள். முக்கிய குறிப்பு: நல்ல குடும்பத்தினரோ நல்ல வசதியுள்ளவர்களோ நல்ல படித்தவர்களோ தங்களையோ தங்களுடைய பிள்ளைகளையோ இவர்களுடன் இணைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை” என்றெழுதியது. தேனீ இணையத்தளத்தின் நம்பகத்தன்மையை ஒருவர் முழுவதுமாக ஏற்றுக்கொண்டாரெனில் அவர் இந்தச் செய்தியின் அடிப்படையில் உடனடியாக விடுதலைப் புலிகளை நிபந்தனையில்லாமல் ஆதரிப்பதே யோக்கியமான செயலாகும். ஏனெனில் ஒதுக்கப்பட்ட மக்கள், மாணவர்கள், வறுமைப்பட்டோர்களின் நலன்கள் புலிகளிளோடு இணைவதில்தான் தங்கியிருக்கிறது என்றால் நாம் புலிகளை ஆதரிக்கத்தானே வேண்டும். அதுவும் முக்கியமாக இந்தப்படை வசதியுள்ளவர்களுக்கும் ‘நல்ல’ குடும்பத்தினருக்கும் எதிரானதென்றால் நாம் இந்தப் படையை ஆதரிப்பதில் என்ன தவறிருக்க முடியும்? ஆனால் நல்லவேளையாக நமக்குத் தேனியின் ஊடக தர்மத்தில் துண்டற நம்பிக்கையில்லை. உண்மையில் தேனி குறிப்பிடும் இந்த விளிம்பு நிலையினரல்ல புலிகளின் ஆதரவுத்தளம். ஈழத்தில் கா.சிவத்தம்பி, சிதம்பரநாதன் போன்ற மய்ய அறிவுத்துறையினரும் வீரகேசரி, தினக்குரல் போன்ற தேசிய ஊடகங்களும் பெரும் தமிழ் முதலாளிகளும்தான் விடுதலைப் புலிகளின் அடிப்படையான ஆதரவுத்தளம். இவர்களின் வர்க்க நலன்களும் புலிகளின் வர்க்க நலன்களும்தான் ஒன்றானவையே தவிர, விளிம்புகளின் நலன்களுக்கும் புலிகளின் நலன்களுக்கும் எதுவிதத் தொடர்புகளுமில்லை. தேனீ குறிப்பிடும் ‘காடை’களைத்தான் எல்லாளன்படை அடித்தே கொல்கின்றது. தேனி குறிப்பிடும் வறிய பெண்களைத்தான் ‘விபச்சாரிகள்’ என்று குற்றம் சுமத்திப் புலிகள் துரத்தித் துரத்திச் சுடுகின்றார்கள். இவற்றையெல்லாம் தேனீயினர் அறியாதவர்களல்ல. ஆனால் அறிந்தும் என்ன செய்ய? விடுதலைப் புலிகள் நல்ல குடும்பத்தினருக்கும் வசதி படைத்தவர்களுக்கும் எதிரிகள் என்ற தலைகீழ் பிரச்சரத்தின் மூலம்தானே அவர்கள் தங்களைச் சூழவரவுள்ள புலி எதிர்ப்பாளர்களான ‘நல்ல’ குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் கோயில் காசில் வளமாக வாழ்பவர்களையும் திருப்தி செய்ய முடியும், அவர்களின் சாதிவெறி மனங்களைச் சாந்தி செய்ய முடியும்! அய்ரோப்பாவில் இருந்துகொண்டும் மானிட விழுமியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் ‘நல்ல குடும்பம்’ என்று ஏற்றிப் பேசுவதற்கும் ‘ஒதுக்கப்பட்ட மக்கள்’ என்று இழித்துப் பேசுவதற்கும் இந்தப் பன்னாடைகளுக்கு என்ன திமிரிருக்க வேண்டும்! இது குறித்தெல்லாம் தேனீக்குக் கண்டனங்களைத் தெரிவித்தபோதெல்லாம் தேனீ மறுப்பு, மன்னிப்பு எதுவும் தெரிவிக்காமல் தன்னை நியாயப்படுத்தியே வருகிறது. அவ்வளவுக்கு அவர்களுக்குத் தோல் தடித்திருக்கிறது. இதில் தேனீயை விமர்சிப்பது புலிகளைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடுவதால் அவர்களை விமர்சிக்கக்கூடாது என்று இலவச அறிவுரைகள் வேறு. சாதிய வக்கிரத்துடன் எழுதக்கூடாது என்று இவர்கள் முதலில் தேனீக்கு அறிவுரை சொல்லட்டும். ‘புலிகளுக்குள்ளும் புலிகளுக்கு மாற்றாகவும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது யார்? வெள்ளாளர்களா?’ இந்தக் கேள்வி குறித்துச் சுகன் ‘சத்தியக்கடதாசி’ யில் எழுதிய ‘மேடை’ என்ற கட்டுரையைத் தோழர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.

32. அடிமை முறையிலும் கொடூரமானது சாதிய முறைமை என்று நிறுவினார் அம்பேத்கர். நவீனத்துக்குப் பின்னைய நிலைகளும் அறிதல் முறைமைகளும் சமூக – மானுடவியலில் ஆய்வுமுறைகளில் புதிய ஒளிகளை வீசும் காலத்திற்குள் நாம் நுழைந்திருக்கிறோம். இனி இந்தச் சிந்தனைகளின் வெளிச்சத்திலும் அம்பேத்கரியத்தின் வழிகாட்டுதலிலும் சாதியப் பிரச்சினைகளில் ஈழத்து இடதுசாரிகளின் வகிபாகம் குறித்து நாம் மீள்மதிப்பீடுகளைச் செய்யவேண்டியிருக்கிறது. ஈழத்தில் சாதியொழிப்புப் போராட்டத்தை வடிவமைத்த இடதுசாரிகளும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தலைவர்களும் அவர்களது ‘அடிக்கட்டுமான’, ‘மேற்கட்டுமான’ வகைப்பாடுகளில் சாதியத்தை மேற்கட்டுமானம் என்றே விளக்கினார்கள். கொம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.ஏ. சுப்பிரமணியம் ‘ஈழச் சமூக அமைப்பில் சாதியம் முதன்மைப் பிரச்சினையாக இல்லை’யென்றார். உண்மையில் சாதிய முரண்கள் கூர்மை பெற்றிருந்த வடக்கில் தோன்றிய மார்க்ஸியத் தலைவர்களில் ஒருவர்கூட செவ்வியல் மார்க்ஸியத்தைக் கடந்து சிந்தித்தார்களில்லை. அவர்களிடையே தெற்கில் தோன்றிய கொல்வின் ஆர்.டி.சில்வா, லெஸ்லி குணவர்த்தன, கீர்த்தி பாலசூரியா போன்ற தத்துவத்துறையில் அறிவுபடைத்த மார்க்ஸியர்கள் தோன்றவில்லை. நமது கட்சிசார்ந்த தமிழ் மார்க்ஸியர்களில் ஒருவர்கூட மார்க்ஸிய அரசியற் கோட்பாடுகளை விவாதித்து ஒரு ஆய்வு நூலைக்கூட எழுதியதில்லை. சாதியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் போட்டுக் குழப்பிக்கொண்ட இவர்கள் சாதியத்தின் வரலாற்றுப் பின்புலங்களையும் அதன் தனித் தன்மைகளையும் கண்டறிந்ததில்லை. சாதியத்தை உருவாக்கி அதை நிறுவனப்படுத்தி அதனைக் காப்பாற்றிவரும் இந்துமதத்தை நமது இடதுசாரிகளோ தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத் தலைவர்களோ குறிவைத்துத் தாக்கியதுமில்லை. இந்து மதத்திற்கும் சாதியத்திற்குமுள்ள வரலாற்றுப் பிணைப்பை அவர்கள் கண்டுகொள்ள மறுத்தார்கள். இந்தத் தலைவர்களில் ஒருவர்கூடச் சாதியப் பிரச்சினைகளை மிகக் கூர்மையாக ஆய்வுசெய்த அம்பேத்கரின் பெயரை எங்காவது உச்சரித்ததாகத் தகவல்கள் ஏதுமில்லை. “நாம் இந்துகளல்ல” என்று இவர்கள் முழங்கியதுமில்லை.

33. அம்பேத்கர் கூறுவதைக் கவனியுங்கள்: “சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதமே தவறானது என்று நான் கருதுகிறேன். நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி. சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கலப்புமணம் செய்யாதவர்களையும் விமர்சிப்பதும் கேலி செய்வதும் அல்லது எப்போதாவது சில சமயங்களில் சமபந்தி விருந்தை நடத்துவதும் கலப்பு மணவிழாவைக் கொண்டாடுவதும் வீண் வேலையாகும். சாத்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை அழித்தொழிப்பதுதான் சாதியை ஒழிக்கும் உண்மையான வழிமுறை. மக்களுடைய கருத்துகளும் நம்பிக்கைகளும் இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்று வடிவமைக்கும் வேலையைச் சாத்திரங்கள் இடைவிடாமற் செய்துவருகின்றன. இதை இனியும் நீங்கள் அனுமதித்துக்கொண்டிருந்தால் சாதியை ஒழிப்பதில் நீங்கள் எவ்விதம் வெற்றிபெற முடியும்?” அம்பேத்கரின் இந்தக் கேள்வி ஈழத்து இடதுசாரிகளின் காதுகளிலும் சீர்திருத்தவாதிகளின் காதுகளிலும் அறிவுத்துறையினரின் காதுகளிலும் இன்னமும்தான் உறைக்கவில்லை.

34. யாழ்ப்பணச் சமூகத்தின் பொருள் உற்பத்தி உறவுகள் பருண்மையான வர்க்க உற்பத்தி உறவுகளாயில்லாமல் சாதிய உற்பத்தி உறவுகளாயிருக்கும் தன்மையையும் அவர்கள் கருத்தில் எடுத்தார்களில்லை. யாழ்பாணத்துச் சமூக அமைப்பை நிலப்பிரவுத்துவ சமூகம் என்று இதுவரை மார்க்ஸியவாதிகள் விளக்கியிருப்பதும் நுண்ணிய பார்வையாகத் தெரியவில்லை. அய்ரோப்பாவில் இருந்தது போலவோ இந்தியாவில் இருப்பது போலவோ யாழ்ப்பாணத்தில் பெரிய நிலவுடமை மானிய அமைப்புகள் இருந்ததில்லை. நூறு ஏக்கர்கள் சொந்தமாக வைத்திருந்த நிலக்கிழாரை நாம் யாழ்ப்பாணத்தில் காணமுடியாது. அவனவன் பத்துப் பரப்புக் காணியை மட்டும் வைத்துக்கொண்டு நிலவுடமையால் அல்லாமல் தனது ஆதிக்கசாதிப் பிறப்பாலேயே சமூகப் படிநிலையின் உச்சத்திலிருக்கிறான். எனவே யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பை மரபு மார்க்ஸிசம் விளக்கும் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு என்று ஏற்றுக்கொள்வதை விட யாழ்ப்பாணத்திற்கே உரித்தான தனிச் சாதியச் சமூக அமைப்பு என்று விளங்கிக் கொள்வதே பொருத்தமாயிருக்கும். சென்ற நூற்றாண்டில் யாழ் சமூக அமைப்பின் உச்சியிலிருந்தவர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் – மலாய ஓய்வூதியத்தில் கொழித்த, மற்றும் கொழும்பு ‘மணியோடர்’ பொருளாதாரத்தை நம்பியிருந்த வெள்ளாளர்கள்தான். யாழ்ப்பாணச் சாதியத்தின் தனித்துவமான பண்புகளை மதிப்பீடு செய்யாமல் ருஷிய நிலப்பிரபுக்களையும் சீனத்து நிலப்பிரபுக்களையும் யாழ்ப்பாணத்தில் உருவகித்துக்கொண்டு இடதுசாரிகள் இலக்குத் தவறி வாட்களைச் சுழற்றிக்கொண்டிருந்தார்கள்.

35. சாதியம் என்பதைச் சீதனமுறை, கல்வியின்மை, வறுமை போன்று ஒரு சமூகக் குறைபாடாகவே இடதுசாரிகள் விளக்கி வந்தார்கள். அதில் பகுதியளவு உண்மைகூடக் கிடையாது. சாதியம் இந்துமத சாத்திரங்களால் உறுதியாக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சமூக வாழ்வியல் முறைமை. நமது வரலாறு, பண்பாடு, இலக்கியம், மொழியென அனைத்துப் பரப்புகளும் சாதியைத் தாங்கியே நிற்கின்றன. இங்கு ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பண்பாடுகளும் சடங்குகளும் இலக்கியங்களும் வரலாறுகளும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தத் தமிழர்களிற்கென்று ஒரு பொதுப்பண்பாடு இங்கே கிடையாது. பண்பாடு, சாதியப் பண்பாடுகளாக இங்கே சிதறிக் கிடக்கிறது. பொதுக்களங்களில் தமிழ்ப் பண்பாடு, வரலாறு என்ற சொல்லாடல்கள் ஆதிக்கசாதியினரின் பண்பாட்டையே வரலாற்றையே குறிக்கின்றன. தமிழ்த் தேசிய மீட்புவாதத்தோடு இன்று முன்னணிக்கு வந்து பரப்புரை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழரின் வரலாறு, தொன்மங்கள், புராணங்கள் இவற்றிலெல்லாம் தலித்துகளுக்கு ஏதாவது இடமிருக்கிறதா? வரலாறு அறிந்த காலம் தொட்டு இந்த நிமிடம் வரைக்கும் சாதியச் சமூகங்களில் பாட்டாளிகள் சாதிய மதிப்பீடுகளைத் துறந்து வர்க்க உணர்வுகளுடன் அணிகுவிக்கப்பட்டதாக வரலாறு உள்ளதா? வர்க்கத்தையெல்லாம் கக்கத்துள் வைத்துக்கொண்டு சாதிய உணர்வுகளுடன் அவர்கள் அணிகுவிக்கப்படாத காலமென்று ஒன்று வரலாற்றில் உள்ளதா? இந்தக் கேள்விகளையெல்லாம் அண்மைக் காலங்களிலாவது நமது அயல் சாதியச் சமூமான இந்தியாவில் இடதுசாரிகளும் நக்ஸல்பாரிகளும் கவனத்தில் எடுக்கிறார்கள். இந்துமத எதிர்ப்புக்கு முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள். ஆனால் இன்றுவரைக்கும் ஈழத்து இடதுசாரிகள் இவற்றைக் கவனத்தில் எடுத்தார்களில்லை. போதாதற்கு கூட இருப்பதாகச் சொல்லிக்கொண்டு குழியையுமல்லவா அவர்கள் பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

36. கா. சிவத்தம்பி பிதற்றுவதைக் கவனியுங்கள்: “தலித் பிரச்சினையை ஒரு அகண்ட வரலாற்றுப் பின்னணியில் வைத்து விளங்கிக்கொள்கிற போதுதான் அவர்களுடைய எழுச்சி, அவர்கள் பேசுகிற பாசையின் அசாதாரணத் தன்மைகளை விளங்கிக்கொள்ளலாம். ஆனால் அங்குள்ள (இந்தியாவில்) சாதி அமைப்புப் போன்று இங்கில்லை. இங்கு தொழிலை வைத்துக்கொண்டுதான் சாதியைப் பார்த்தார்கள். தொழிலை விட்டுவிட்டால் சாதியின் பெயர் இல்லை. வெளிப்படையான அடையாளத்தை மறைத்துவிட்டால் சரி. இங்கு போராட்டம் வித்தியாசம்; இங்கு தீண்டாமைப் போராட்டமென்பது கோயில் பிரவேசம். ஏனென்றால் கோயில் பிரவேசம் மட்டும்தான் இங்கு பிரச்சினையானது. மற்றபடி அவர்களின் சமூக முன்னேற்றத்தைத் தடுக்க முடியவில்லை” (கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் தொகுதி-1 , பக்:249). என்ன அயோக்கியத்தனம் இது! இங்கு தொழிலை வைத்துக்கொண்டுதான் சாதியைப் பார்த்தார்களாம். தொழிலை விட்டுவிட்டால் சாதியின் பெயர் இல்லையாம்! பேராசிரியர் இந்த நேர்காணலை ‘மூன்றாவது மனிதன்’ இதழுக்கு வழங்கியதற்கு முதல்வருடம்தான் யாழ் நகரபிதாவையே சாதிய அடையாளங்களுடன் தினக்குரல் பத்திரிகையில் கேலிச் சித்திரம் வரைந்திருந்தார்கள். ஈழத்தில் கோயில் பிரவேசத்தைத் தவிர வேறு சாதியப் பிரச்சினைகளே இல்லையாம், பேராசிரியேரே! உங்களின் சமகாலத்தவரும் உங்களின் தோழருமான கே. டானியல் சொல்வதைக் கவனியுங்கள்: “சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் ஆகியவற்றின் போராட்ட காலகட்டங்களில் மாத்திரம் சாதிய வெறியர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளில் மொத்தம் முப்பத்தொரு தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எரிக்கப்பட்ட வீடுகள் அறுபத்தைந்திற்கும் குறையாது. உயிர்ச்சேதமற்ற துப்பாக்கிச்சூடு, வாள்வெட்டு, கத்திக்குத்து, எலும்புமுறிவு, மானபங்கம் ஆகியவை என்று குறிப்பிடும்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் எத்தனை கிராமங்கள், சிறுநகரங்கள் இருக்கின்றன என்று கணக்கெடுத்து இரண்டையும் சேர்த்து எழுபத்தைந்தால் பெருக்கினால் வரும் எண்ணிக்கை எதுவோ அதுதான் உத்தேச ஆனால் சரியான கணக்காகும்” (கே. டானியல் நினைவுமலர், பக்:183). இந்த வரலாறுகளையெல்லாம் அறியாதவர் போல் பேராசிரியர் உதிர்க்கும் வாய்முத்துக்களுக்கு அர்த்தம்தான் என்ன? பேராசிரியரை அறிவுச் சோம்பேறி, ஆய்வுச் சோம்பேறி என்று சொன்னால் என் நாக்கு அழுகிவிடும். எனவே என்னால் மறுபடியும் வருத்தத்துடன் இதைத்தான் செல்ல முடிகிறது: “சாதியத்தின் ஒரு தனித்துவமான பண்பு ஒவ்வொருவனையும் ஒரு சாதியானாக உணர வைப்பதுதான். சாதியாக உணர்வதென்பது ஒரு சாதிக்குக் கீழாக உணர்வது மட்டுமல்ல இன்னொரு சாதிக்கு மேலாக உணருவதும்தான்.”

37. ஈழத்தின் இடதுசாரித் தலைவர்களில் பலருக்குச் சாதியம் குறித்த சமூக விஞ்ஞானபூர்வமான அறிதல் குறைபாடுகள் இருந்தனவேயொழிய நல்ல வேளையாக அவர்கள் சிவத்தம்பியைப்போல முழுப் பூசணிக்காயைச் சொதியில் மறைப்பவர்களாக இருக்கவில்லை. சாதியத்தை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் மேற்கட்டுமானப் பிச்சினையாக அவர்கள் எளிமைப்படுத்திப் புரிந்துகொண்டபோதிலும் -கே.டானியல், சி.கா. செந்திவேல் போன்று சாதியொழிப்பிற்குத் தம்மை முற்று முழுதாக அர்ப்பணித்த இடதுசாரிகளுக்குக் கூட இத்தகைய புரிதல்தான் இருந்தது, இருக்கிறது – அடிப்படை மானிட விழுமியங்களுக்கே எதிரான சாதியக் கொடூரங்களை ஒழிப்பதற்காக அவர்கள் வீதிகளில் இறங்கியும் நீதிமன்றங்களில் ஏறியும் விட்டுக்கொடுக்காத போராட்டத்தைச் செய்தார்கள். வெள்ளாள வெறியர்களைக் கண்ட இடத்தில் போட்டுத் தள்ளவேண்டும் என்ற மட்டத்திற்கு சண்முகதாசன் போன்ற இடதுசாரித் தலைவர்கள் சாதிவெறியர்களுக்கு எதிராகத் தீவிர நிலைப்பாடுகளை எடுத்தார்கள். மறுக்கப்பட்ட தமது உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காகச் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியல் போர்க்கோலம் தரித்து நின்ற தாழ்த்தப்பட்ட மக்களுடைய போராட்டங்களுக்கு இடதுசாரிகள் எவ்வாறு பலமாயிருந்தார்கள் எங்கே பலவீனமாய் அமைந்தார்கள் என்று மதிப்பிடுவதற்காகத் தலித் மக்களின் போராட்ட வரலாற்றின் முக்கியமான மைற்கற்களை நாம் இங்கே சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

38. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் தலித் மக்கள்மீது தீண்டாமைக் கொடுமைகள் எவ்வாறெல்லாம் ஆதிக்க சாதியினரால் திணிக்கப்பட்டிருந்தன? தமது ஆய்வுநூல்களில் யாழ்ப்பாணத் தமிழர்களின் வரலாற்றை எழுதிச்செல்லும் கல்வித்துறை சார்ந்த எவரும் இதுவரையில் தீண்டாமைக் கொடுமைகள் குறித்துத் தங்கள் கவனத்தைத் திருப்பியதில்லை. “வரலாற்றை உருவாக்குபவன் ஒடுக்குமுறையாளன்தான். அவன் எழுதுகின்ற வரலாறு அவனால் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவனது சொந்த வரலாறே! இதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறோரு வரலாறு உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்த வரலாற்றை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும்தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல” என்று ப்ரான்ஸ் பனொன் ‘மார்த்தினிக்’ குறித்துச் சொல்வார். இது நமக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது. தீண்டமையின் கொடூரங்களைக் குறித்து நமது டானியலும் டொமினிக் ஜீவாவும் என்.கே. ரகுநாதனும் இன்னும் பலரும் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அந்த எழுத்துக்களிலிருந்து ஒன்றிரண்டு துண்டுகளைப் படித்தாற்கூட அன்றைய தீண்டாமையின் நெட்டூர முகம் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது.

39. “தேங்காய் சுமந்து சென்றவன் தலையை நெரிடாமல் நலமுண்டுத் துண்டுக் குறிச்சால்வையை தலையில் வைத்துத்தான் சாக்கைச் சுமந்து சென்றிருக்கிறான். கயிலாயருக்கு வந்ததே கோபம்! அவனைத் தடுத்து நிறுத்தி தன்னை மதியாமல் சால்வையைத் தலையில் போட்டுச் சென்றதற்காக அவனை வேகும் வெயிலில் முழந்தாளில் இருத்தி அண்ணாந்து பார்க்கச் செய்து நெற்றியில் கால் சல்லிக் காசை ஒட்டி குறிப்பிட்ட நேரம் வெயிலில் இருக்க வைத்தார்” (அடிமைகள், பக்: 141).

“அவன் பஞ்சமருக்குச் சீலை வெளுக்கும் கட்டாடி குலத்தைச் சேர்ந்தவன். அவன் நயினார் வளவு எல்லைக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதவன். அதைவிட அவனின் சாதியினர் வீதிகளில் நடமாடும்போது தாங்கள் வருவதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் தோரணையில் காவோலைத்துண்டு ஒன்றினை நிலத்தில் அரையவிட்டு இழுத்துவர வேண்டும். அதுவும் குறிக்கப்பட்ட வீதிகளைவிட வேறு வீதிகளில் குடியிருப்பவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்” (அடிமைகள், பக்:81)

“நாலாம் நாள் காடாத்து என்று ஒன்று நடக்கும்….அன்று சாப்பிடு முன் ஒரு வைபவம் இருக்கும். பெண்டுகள் இறந்தவருக்குப் பிடித்தமான சோறு, கறிவகைகள் எல்லாம் காய்ச்சி ஒரு பெரிய சட்டியிலே போட்டுக் குழைப்பார்கள். அப்படிக் குழைத்ததை கைப்பிடி கொள்ளக்கூடிய உருண்டைகளாகத் திரட்டித் திரட்டி வைத்துக்கொண்டு வெளியே வர, செத்த வீட்டுக்குப் பறையடித்த சின்னான் அங்கே இருப்பான். இந்தப் பெண்டுகள் அந்த உருண்டைகளை எடுத்து சின்னான் முதுகின் மேல் எறிந்து அவனை விரட்டி விரட்டி அடிப்பார்கள். முதுகிலே விழ விழ அதை வழித்துச் சாப்பிட்டபடியே சின்னான் ஓடிக்கொண்டிருப்பான். இப்ப சிறுவர்களும் சேர்ந்து விடுவார்கள். கீழே விழுந்ததையெல்லாம் எடுத்துத் திருப்பித் திருப்பி அடிப்பார்கள். இதற்கிடையில் படலை வந்துவிடும். பெண்டுகள் சட்டியையும் சோற்றையும் சின்னானிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்கள் (அ.முத்துலிங்கம் கதைகள், பக்: 154).

40. “ஏன் கனதூரம் போவான்? வில்லூண்டியில இருந்து துவங்குவமே! அங்கை முதலி சின்னத்தம்பியின்ர உயிரை எடுத்தாங்கள். பச்சிலைப் பள்ளிக் கந்தையனை வைக்கல்பட்டடைக்க உயிரோட போட்டுக் கொழுத்தினாங்கள். தூக்கில செத்தவனுக்குக் குதியை வெட்டிறதுபோல நெல்லியடியில ஒரு பாவிக்கு நித்திரைக்கிடையில குதி நரம்புகள வெட்டினாங்கள். உரும்பிராய் மார்க்கண்டனை அடிச்சுக் கொண்டு போட்டு அவன்ர முகத்தைக் கருக்கி நீர்வேலிப் பத்தைக்க போட்டங்கள். உந்த அம்மன் கோயிலில கிடாய் வெட்டிறது போல ஐஞ்சாறு பேரை வெட்டித் தள்ளினாங்கள். சரசாலைக்க மூண்டு பேரைச் சுட்டுக் கொண்டாங்கள். பளையில பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தியச் சுட்டுச் சவமாய் விழுத்தினாங்கள். நயினாதீவில கட்டைக் கந்தையனை குத்திக் கொண்டாங்கள். கோயில் சந்தையடியில பெத்த மோன் நளத்தியோட போட்டானெண்டு சாப்பாட்டோட ‘பொலிடோல்’ வைச்சுச் சாக்கொண்டாங்கள். அல்வாயில செல்லத்தம்பியன சுட்டுக் கருக்கிப் போட்டு மதவுக்க போட்டாங்கள். கரையாம்பிட்டிச் சுடலைக்க கந்தையனை அடிச்சுத் தூக்கினாங்கள். ஏன் உப்ப கிட்டடியில சண்டிலிப்பாய் வைத்திக் கிழவனை உயிரோட ‘பெற்றோல்’ ஊத்திக் கொழுத்தினாங்கள். சந்தா தோட்டத்தில ஒருத்தன வேட்டைக்கெண்டு கூட்டிக்கொண்டு போய் நடுக்காட்டுக்க வைச்சுச் சுட்டுப்போட்டுக் காட்டுக்க எரிச்சுச் சாம்பலாக்கினாங்கள். கார்த்திகேசுவைச் சுட்டுத் தள்ளினாங்கள். இரத்தினத்தை கொத்தியும் வெட்டியும் அடிச்சுக் கொண்டாங்கள். ஏன் கற்கண்டனக் கந்தன்ர பூங்காவனத்தில வள்ளி தெய்வயானயோட இருக்கேக்க அடிச்சுக் கொல்லேல்லையே. இதெல்லாம் சாதி வெறியங்கள் செய்த காரியங்கள் (பஞ்சமர், பக்:174)

41. சென்ற நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிரான முதற்குரல் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசிலிருந்து(1920) எழுந்தது. இதைத் தொடர்ந்து ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்(1927) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புகள் காந்திய நெறிகளில் ஈடுபாடுடைய வெள்ளாளர்களாலேயே தலைமை தாங்கப்பட்டன. வாலிபர் காங்கிரஸிற்கு ஹண்டி பேரின்பநாயகமும் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கத்திற்கு நெவின் செல்லத்துரையும் தலைமை தாங்கினார்கள். எனினும் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர்களாக தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த யோவேல் போல், டி. ஜேம்ஸ் ஆகிய இருவரும் இயங்கினார்கள் என்பதும் கவனத்திற்குரியது. இந்த அமைப்புகள் 1927ல் காந்தியாரின் யாழ்ப்பாணத்து வருகையின்போது வரவேற்புமளித்தனர். காந்தியத்தின் அருட்டலில் விழித்துக்கொண்ட வெள்ளாளச் சீர்திருத்தவாதிகள் சமபோசனம், சமஆசனத்திற்கான உரிமைக் குரல்களுக்கு ஆதரவு தரவும் தலைப்பட்டார்கள். இவர்கள் மத்தியிலிருந்து ‘நீலகண்டன் ஒரு சாதி வேளாளன்’ (1925) ‘அழகவல்லி’ (1926) ‘காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமணி’ (1937) ‘சுந்தரவதனா அல்லது இன்பக் காதலர்’ (1938) ‘செல்வி சரோஜா அல்லது தீண்டாமைக்குச் சவுக்கடி’ (1938) போன்ற புதினங்கள் எழுதப்பட்டதைக் கே. டானியலின் ‘அடிமைகள்’ நாவலின் முன்னுரையில் குறிப்பிடும் கோ.கேசவன், “காலம் காலமாக இறுகிவந்துள்ள சாதியக் கொடுமைகளையும் வேறுபாடுகளையும் கண்டுணர்ந்து இந்தப் புதினங்கள் வெளிப்படுத்தின என்ற பெருமை இவற்றுக்குண்டு. எனினும் இவை சாதியப் பிரச்சனைகளின் வெளிப்பரிமாணத்தை மட்டுமே கண்டன. இத்தகைய முடிவினால், சாதிய வேறுபாடுகளை மனத்தளவில் நீக்குதல், கலப்புத் திருமணம் செய்தல், மனிதாபிமான அன்பு, முயற்சி, கல்வி கற்று வேறு தொழிலுக்குச் செல்லல், உயர் சாதியினர் காட்டும் தாராளவாதம் போன்றவற்றினால் சாதியக் கொடுமைகள் தீரும் என இவர்கள் நம்பினர்” என்பார். கோ. கேசவனின் இந்த மதிப்பீடு அந்த இலக்கிய ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ், ஒடுக்கப்பட்ட தமிழ் ஊழியர் சங்கம் ஆகியவற்றுக்கும் முற்றிலும் பொருந்தும்.

42. தலித்துகளின் தலைமையில் தலித்துகளுக்கு மட்டுமேயான அமைப்பாக, அனைத்துத் தலித் சமூகங்களையும் ஒன்றிணைத்துத் தீண்டாமை ஒழிப்பையும் தலித் மக்களின் சமூக முன்னேற்றங்களையும் அடிப்படை வேலைத்திட்டங்களாக வகுத்துக்கொண்டு 1942ல் ‘வடஇலங்கைத் சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ ஆரம்பிக்கப்பட்டது. சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் முதலாவது தலைவராக யோவேல் போல் தெரிவு செய்யப்பட்டார். மகாசபையின் முன்னணிச் செயல்வீரர்களாக எஸ்.ஆர்.ஜேக்கப் காந்தி, ஆ.ம.செல்லத்துரை, ஜீ.நல்லையா, டி.ஜேம்ஸ், வி.டி. கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம், எம்.ஏ.சி. பெஞ்சமின், எஸ்.நடேசு, வி.ரி.அரியகுட்டி, ஜி.எம். பொன்னுத்துரை, ஜோனா, ஜே.டி.ஆசிர்வாதம், எம்.வி.முருகேசு, விஜயரட்ணம், பேப்பர் செல்லையா, ஏ.பி. இராஜேந்திரா, க.முருகேசு, மு.செல்லையா போன்றவர்கள் இயங்கினார்கள். வடபுலத்தோடு மட்டும் நின்றுவிடாமல் மகாசபையினர் நாட்டின் கிழக்குப் பகுதிகளிலும் சாதிய விடுதலைக்கான பரப்புரைகளை மேற்கொண்டு தலித் மக்களை துரிதகதியில் ஒன்றிணைத்தனர். 1944ல் ‘வடஇலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ என்ற பெயர் ‘அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யென மாற்றப்பட்டது. இந்த இடத்தில் சிறுபான்மைத் தமிழர், பெரும்பான்மைத் தமிழர் என்ற சொல்லாடல்களை நாம் கவனிக்க வேண்டும். சிறுபான்மைத் தமிழர், பெரும்பான்மைத் தமிழர் என்ற எதிர்வுகள் இருக்கும் வரையில் இன்று பொதுக்களங்களில் பொத்தாம் பொதுவாக முழங்கப்படும் ஈழத் தமிழர் என்ற சொல்லாடலுக்கு எந்தத் தார்மீகப் பெறுமதியும் கிடையாதென்பதைத் தமிழ்த் தேசியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

43. 1945ல் மகாசபையின் மூன்றாவது மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில், 1. தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று விஷேட பிரதிநிதித்துவம்.

2. பொருளாதார மீள் நிர்மாணம், மாற்றுத் திட்டங்கள் இவைகளுக்கான தனிச் சிறப்பு ஆணைக்குழு.

3.சகல ஸ்தல ஸ்தாபனச் சபைகளிலும் நிர்வாக அலகுகளிலும் பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய வகையில் வட்டாரங்கள் தேர்தற் தொகுதிகள் பிரிக்கப்படவும் மறுசீரமைக்கப்படவும் வேண்டும்.

4. கல்விப் பிரச்சனையில் முஸ்லீம் மக்களுக்க அளித்த விசேட சலுகையை – உரிமையைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வழங்க வேண்டும்,
என்ற தீர்மானங்களை மகாசபை நிறைவேற்றியது. நாற்பதுகளின் நடுப்பகுதிகளில் வில்லூன்றிச் சுடலையில் சாதிய வெறியர்களால் முதலி சின்னத்தம்பி சுட்டுக்கொல்லப்பட்டது, பூநகரியில் மூன்று தலித்துகள் கொல்லப்பட்டது, அல்லைப்பிட்டி, நாரந்தனை, நீர்வேலி ஆகிய இடங்களில் தலித்துகளின் குடில்கள் தீக்கிரையாக்கப்பட்டது போன்ற சம்பவங்களில் தலித் மக்களுக்கு நியாயம் வேண்டிச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை எடுத்த நடவடிக்கைகளாலும் தொடுத்த வழக்குகளாலும் மகாசபை நாடெங்கும் அறியப்பட்ட இயக்கமாகவும் தலித் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அமைப்பாகவும் அய்ம்பதுகளில் ஒளிர்விட்டது. சிறுபான்மைத் தமிழர் மகாசபை உருவாக்கப்பட்டுச் சில வருடங்களிற்குப் பின்தான் வடபுலத்தில் பொதுவுடமைக் கட்சிகள் உருப்பெற்றன. முதலில் ட்ரொக்ஸியக் கட்சியான லங்கா சமாசமஜக் கட்சியும் அதைத் தொடர்ந்து இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியும் யாழ் மண்ணில் முளைவிட்டன. 1949ல் தமிழரசுக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது

44. மகாசபை தலித்துக்களுக்குக் கோயில்களைத் திறந்துவிடக் கேட்டுத் துண்டறிக்கைகள் பொதுக்கூட்டங்கள் மூலம் இடைவிடாத பிரச்சாரங்களை நிகழ்த்தி விட்டுக்கொடுக்காமல் போராடியதால் யாழ்ப்பாணத்து வரலாற்றிலேயே முதற் தடவையாக 09 யூலை 1957ல் நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணை வரதராஜப் பெருமாள் கோயில், வண்ணை சிவன் கோயில், ஆகிய மூன்று ஆலயங்களும் தலித் மக்களுக்குத் திறக்கப்பட்டன. தொடர்ந்து தேனீர்ச் சாலைகளிற்குள்ளும் உணவு விடுதிகளிற்குள்ளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமவுரிமை வழங்கப்படவேண்டும் என்றும் மறுத்தால் கடைகளுக்கு முன்னே மறியற் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் மகாசபை அறிவித்தது. மகாசபையின் இப்போராட்ட அறிவிப்பிற்கு யாழ் நகரத்தின் உணவுவிடுதிகளின் முதலாளிகள் பணிந்தனர். முதலில் கோவிந்தபிள்ளை தனது தேனீர்ச் சாலையை அனைத்துச் சாதியினருக்கும் திறந்துவிட்டர். அடுத்ததாக ‘சுபாஸ் கபே’யின் உரிமையாளர் சங்கரன் தனது ‘கபே’யைத் திறந்துவிட்டார். இவர்கள் இருவருமே யாழ்ப்பாணத்திற்குப் பிழைப்புத் தேடிவந்த மலையாளிகள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. தொடர்ந்து யாழ் நகரின் மற்றைய தேனீர்க் கடைகளும் அனைத்துச் சாதியினருக்கும் திறந்துவிடப்பட்டன.

45. மகாசபை சாதியொழிப்புப் போராட்டத்தில் கணிசமான வெற்றிகளைக் குவித்திருந்த நேரத்தில் 09.06.1957ல் மகாசபையின் 14வது மாநாட்டில் மகாசபை பிளவுபட்டது. மகாசபைக்குள் பொதுவுடமைக் கட்சியினர், தமிழரசுக் கட்சியினர் என இருகட்சிகளைச் சேர்ந்தவர்களுமே இடம் பெற்றிருந்தார்கள். அரசியல் கட்சி வேறுபாடுகளிற்கு அப்பால் தலித்துக்களை சாதிய விடுதலை என்ற முன்னோக்கில் மகாசபை இணைத்து வைத்திருந்தது. அதுவே அதன் தனிச் சிறப்புமாயிருந்தது. தமிழரசுக் கட்சி ‘தமிழின விடுதலை’ என்ற முழக்கத்தை எழுப்பி வந்தபோது அதற்குப் பதிலடியாக ‘எமது சமூக விடுதலைக்காகக் கோவில்கள் தேநீர் – சாப்பாட்டுக் கடைகள் முன்பாகச் சத்தியக்கிரகம் செய்வோம்’ என மகாசபையினர் குரல் எழுப்பினர். மகாசபையின் 14வது மாநாட்டிற்குப் பிரதிச் சமூகநல தொழிற்துறை அமைச்சராயிருந்த எம்.பி.டி. சொய்ஸா மகாசபையினரால் அழைக்கப்பட்டிருந்தார். யாழ் புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய அமைச்சரைத் தமிழரசுக் கட்சியினர் கறுப்புக் கொடிகளுடனும் பறைகளுடனும் எதிர்கொண்டனர். மகாசபையினர் அமைச்சரைப் பாதுகாப்பாக அழைத்துச்செல்ல முயன்றபோது அமைச்சரின் வாகனத்துக்குக் குறுக்கே விழுந்து படுத்து அ.அமிர்தலிங்கம் துடுக்குத்தனம் செய்தார். கடைசியில் அமைச்சர் இல்லாமலேயே மகாசபையின் மாநாடு நடந்து முடிந்தது. ஒரு சாதியொழிப்பு இயக்கத்தின் மாநாட்டுக்கு வந்த அமைச்சரைச் சமஷ்டிக் கோரிக்கையின் பெயரால் குறுக்கே விழுந்து மறித்த கூட்டணியினர் அடுத்த அய்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையிலே ஒரு அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட யோக்கியத்தை ஊரறியும். இந்தக் கறுப்புக்கொடி மறியல் இழவால் மகாசபைக்குள்ளிருந்த தமிழரசுக் கட்சியினருக்கும் மற்றவர்களுக்கும் மாநாட்டில் ஏற்பட்ட முரண்பாடு இறுதியில் பிளவில் முடிந்தது. தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் மகாசபையிலிருந்து வெளியேறினர். இப்போது மகாசபை மெல்ல மெல்ல இடதுசாரிகளின் செல்வாக்கின் கீழ் வரலாயிற்று. 14வது மாநாட்டில் மகாசபையின் தலைவராக வடபுலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவரான எம்.சி.சுப்பிரமணியம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

46. 1964ல் மீண்டுமொரு முறை மகாசபை உடைந்தது. 1957ல் தமிழரசுக்கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி மோதல்கள் மகாசபையை உடைத்ததென்றால் 1964ல் கொம்யூனிஸ்டுகளுக்கு மத்தியில் ஏற்பட்ட சீனச்சார்பு, ருஷ்யச்சார்பு மோதல்கள் மகாசபையை உடைத்தன. சீனச்சார்பு நிலையை எடுத்துநின்ற கே.டானியல், என்.கே.இரகுநாதன், தங்கவடிவேல் மாஸ்ரர் போன்ற முன்னணிப் போராளிகளோடு பல இளைஞர்களும் மகாசபையிலிருந்து வெளியேறினார்கள். இதற்குப் பின்பு சிறுபான்மைத் தமிழர் மகாசபை பலமிழந்து போயிற்று. வடபுலத்துச் சாதிய வரலாற்றிலே முதன்முதலில் சாதிய இரும்புக் கோட்டையை நெகிழ்த்தித் தள்ளித் தலித்துகளின் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்த அந்தப் பேரியக்கம் மொஸ்கோவில் பெய்த மழைக்குப் பிடித்த குடையால் முடங்கிப் போயிற்று. அதற்குப் பின் அந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றிகள் எதையுமே சாதிக்கவில்லை. யோவேல் போல், எஸ்.ஆர்.ஜேக்கப் காந்தி போன்ற தலித் முன்னோடிகளால் சாதிய விடுதலையை முதன்மைக் குறிக்கோளாக வரித்துக்கொண்டு துவக்கப்பட்ட மகாசபை உடைந்த இருதருணங்களிலுமே மகாசபைக்கு உள்ளே எழுந்த முரண்களால் அல்லாமல் வெளியேயிருந்து திணிக்கப்பட்ட முரண்களினால்தான் உடைக்கப்பட்டது. முதலாவது உடைவிற்குத் தமிழரசுக் கட்சி காரணமாகியது. இரண்டாவது உடைவிற்குக் கொம்யூனிஸ்ட் கட்சி காரணமாகிற்று.

47. வடபுலத்தில், யாழ் நகரத்தின் ஆலயங்களும் தேனீர் – உணவு விடுதிகளும் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திறந்து விடப்பட்டிருந்தாலும் ஏனைய சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் இவை தாழ்த்தப்பட்டவர்களுக்கு மூடப்பட்டேயிருந்தன. இந்நிலமையைக் கருத்திற்கொண்டு சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சி 1966 ஒக்ரோபர் 11 எழுச்சியை வடிவமைத்தது. அன்றைய தினம் தடையைமீறி வெற்றிகரமாக ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் நடத்திய கட்சி அடுத்துவந்த நாட்களில் வடபுலமெங்கும் தலித் மக்கள் வென்றெடுக்க வேண்டிய உரிமைகள் குறித்தும் போராட்ட வழிமுறைகள் குறித்தும் இரவுபகலாகப் பரப்புரைகளில் ஈடுபட்டது. கட்சியின் வழிகாட்டலில் சங்கானையில் தலித் போராளிகள் சமவுரிமைகளிற்கான போராட்டங்களைத் தொடங்கினார்கள். சங்கானை, நிச்சாமம் பகுதிகள் யுத்தகளமாயின. சாதிவெறியர்களின் துப்பாக்கிச் சூட்டில் சின்னர் கார்த்திகேசு முதற் களப்பலியானார். 1967ல் கட்சியால் ‘தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டது. இயக்கத்தின் தலைவராக எஸ்.ரி.என். நாகரத்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் வடபகுதி முழுவதும் பரவலாக ஆலய – தேனீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்களை முன்னெடுத்தது. மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில், மாவிட்டபுரம், அச்சுவேலி ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் நீண்ட இடர்களுக்கு மத்தியிலும் உறுதியோடு முன்னெடுக்கப்பட்டு வெற்றிகளைச் சாதித்தன. சங்கானை, மந்துவில் பகுதிகளில் பல உயிரிழப்புகளுக்கு மத்தியிலும் தலித் போராளிகள் உறுதியுடன் போராடித் தேநீர்க்கடைப் பிரவேசங்களை நிகழ்த்தினர். ஆதிக்க சாதியினரின் சனாதன எல்லைகளை எல்லாம் நூற்றாண்டு காலக் கோபம் நொருக்கத் தொடங்கியது. அடிக்கு அடி! என்ற பாதையில் சாதியொழிப்புப் போராளிகள் நடந்துகொண்டிருந்தனர். போராட்டத்திற்கு என்னென்ன வழிகளில் இடையூறு செய்ய முடியுமோ அத்தனை வழிகளையும் தமிழரசுக்கட்சியினர் முயன்றனர். விளைவாகப் போராட்டங்கள் உக்கிரமாய் நடந்த, தலித் மக்கள் செறிந்து வாழ்ந்த சங்கானை, நிச்சாமம், பொன்னாலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வட்டுக்கோட்டைத் தொகுதியில் ‘தளபதி’ அமிர்தலிங்கமும் கன்பொல்லை, கரவெட்டிப் பகுதிகளை உள்ளடக்கிய உடுப்பிட்டித் தொகுதியில் ‘உடுப்பிட்டிச் சிங்கம் மு.சிவசிதம்பரமும்’ 1970 பொதுத் தேர்தலில் மண் கெளவினார்கள்.

48. 1971ல் ஜே.வி.பியினரின் ஏப்ரல் கிளரச்சியைத் தொடர்ந்து சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் முன்னணித் தலைவர்களான கே.டானியல் போன்றவர்களும் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசால் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதுடனும் பல தலைவர்கள் தலைமறைவானதுடனும் சாதியொழிப்புப் போராட்டங்கள் ஒரு தேக்கநிலையை அடைந்தன. அரசின் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் கொம்யூனிஸ்டுகள் திணறினர். 1972ல் மு.கார்த்திகேசன், வி.ஏ. கந்தசாமி, ஓ.ஏ. இராமையா போன்ற கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கருத்து முரண்பாடுகளால் சண்முகதாசன் தலைமையிலான கட்சியிலிருந்து வெளியேறக் கட்சி இன்னொருமுறை பிளவுபட்டது. இத்தோடு சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியின் அத்தியாயம் வடபுலத்தில் துயரமான முறையில் முடித்து வைக்கப்பட்டது. 1978ல் சண்முகதாசன் தலைமையிலான கட்சியும் உடைந்தது. இம்முறை சாதியொழிப்புப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களாக விளங்கிய கே.ஏ.சுப்பிரமணியம் சி.கா.செந்திவேல் போன்றவர்கள் கட்சியிலிருந்து வெளியேறினார்கள். இத்துடன் வடபுலத்தில் சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியின் சுவடே அழிக்கப்பட்டது. சீனச்சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சி மூன்றாமுலக நாடுகள் பலவற்றில் காணப்படுவதுபோல ஒரு மரபான மாவோயிஸ இயக்கம்தான். அது பல்வேறு தத்துவார்த்த நடைமுறைக் குறைபாடுகளைக் கொண்டிருந்தது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் அது காலத்திற்குக் காலம் பல்வேறு தவறான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறது. தொழிற்சங்க நடவடிக்கைகளிற்கூட அது லங்கா சமசமாஜக் கட்சி அளவிற்கு வடபுலத்தில் உழைத்ததில்லை. ஆனால் தீண்டாமைக்கு எதிரான பெரும் போராட்டங்களை முன்னெடுத்ததாலும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தை வழிநடத்தித் தலித் மக்களின் கணிசமான அடிப்படை உரிமைகளை வென்றெடுத்ததாலும் சீனச்சார்புப் பொதுவுடமைக்கட்சி வடபுலத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவுகளில் நீடூழி வாழ்ந்திருக்கும்!

49. பொதுவுடமைக் கட்சியின் வீழ்ச்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களின் எழுச்சியும் எழுபதுகளின் இறுதியில் ஒருங்கே நிகழ்ந்துகொண்டிருந்தபோது தலித்துக்களின் சாதியொழிப்புப் போராட்டங்கள் ஒரு முடிவை எட்டின. வடபுலத்தில் பொதுவுடமைக் கட்சிகளின் வீழ்ச்சிக்கு அவர்களிடையே தோன்றிய சித்தாந்தப் பிளவுகள் முகவுரை எழுதியதெனில் அவர்களின் அணிகளிற்குள் தோன்றிய தேசியவாத அடிபணிவுகள் வடபுலத்தில் பொதுவுடமைக் கட்சிகளுக்கான முடிவுரையை எழுதிவைத்தன. வி.ஏ.கந்தசாமி ‘ஈ.பி.ஆர்.எல்.எவ்’ இயக்கத்தில் இணைந்தார். கௌரிகாந்தன் ‘புளொட்’ அமைப்பில் இணைந்தார். மூத்த தோழர்களான வி.பொன்னம்பலம் ‘ரெலோ’ இயக்கத்திற்கும் ‘கணேசலிங்கன்’ புளொட் இயக்கத்திற்கும் அரசியற் பாடங்கள் கற்பிக்கப் போய்விட்டார்கள். தலித்துக்களிற்கான விடுதலையைப் பேசிய மகாசபை போன்ற ஓர் பலமான சாதியொழிப்பு இயக்கத்தின் இன்மையைத் தமிழ்த் தேசியவாதிகள் தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். சாதிய விடுதலையை முன்னிறுத்தி தலித் இளைஞர்களை அணிதிரட்ட அமைப்புகள் ஏதுமற்ற சூழலில் தலித் இளைஞர்கள் தேசியவாத இயக்கங்களின் எடுப்பார்கை பிள்ளையானார்கள். எண்பதுகளில் ஈழத்தில் தோன்றிய முப்பதிற்கும் மேற்பட்ட இயக்கங்களில் எந்தவொரு இயக்கத்திலும் தலித்தொருவர் தலைமைப் பொறுப்புக்கு வரமுடியவில்லை என்பதையும் வரலாறு குறித்துத்தான் வைத்திருக்கிறது.

50. 1972ல் இலங்கையின் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினராயிருந்த எம்.சி.சுப்பிரமணியம் தலித் மக்களைத் தனித் தேசிய இனமாக அறிவிக்கவேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பினார். அந்த மட்டத்திற்கு தலித்துகளிற்கும் தலித் அல்லாதவர்களுக்குமான முரண்பாடு ஈழத்திலே முனைப்பாயிருந்தது. அந்தக் கோரிக்கை தோற்கடிக்கப்பட்டது. எனினும் ஈழத்தமிழர்கள் அனைவரும் தமிழ்த் தேசியத்திற்குள் அடக்கம் என்ற ஆதிக்கசாதியினரின் கற்பிதத்தை இந்தக் கோரிக்கை பகிரங்கமாகத் தோற்கடித்திருந்தது. ஈழத்துச் சாதியச் சமூகத்தில் அனைத்து மானிட விழுமியங்களும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் சூழலில் வைத்து நாம் எம்.சி.சுப்பிரமணியத்தின் கோரிக்கையை மதிப்பீடு செய்தால் அவரின் கோரிக்கையின் தார்மீகம் நமக்குப் புரியாமல் போய்விடாது. ஆனால் எம்.சி.சுப்பிரமணியத்தின் கோரிக்கையைச் சீனச்சார்புக் கொம்யூனிஸ்டுகள் ஆதரிக்கவில்லை. ஆலயப் பிரவேசம், தேனீர்க் கடைப் பிரவேசம் ஆகியவற்றில் அவர்கள் காட்டிவந்த உற்சாகத்தைச் சாதியச் சமூகத்தையே உலுக்கிப்போட வல்லமை பெற்ற தனித் தேசியக் கோரிக்கை, மதமாற்றம் போன்ற விடயங்களில் அவர்கள் காட்டவில்லை.

51. 1962ல் சாதியத்தை எதிர்கொள்வதற்காக ‘வடஇலங்கைப் பவுத்த சங்கம்’ தொடக்கப்பட்டது. சங்கத்தின் தலைவரான வைரமுத்துவின் முயற்சியால் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் பவுத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் கல்வி மறுக்கப்பட்டிருந்த தலித் மாணவர்களைத் திரட்டிக் கல்வி கற்பதற்காக அவர்களைத் தென்னிலங்கைக்கு வைரமுத்து அனுப்பி வைத்தார். அவர் தலித்துகளை மதமாற்றத்திற்குத் தூண்டிக்கொண்டேயிருந்தார். ஆனால் கொம்யூனிஸ்டுகள் மதமாற்றத்தைக் கடுமையாக விமர்சித்தார்கள். இது பவுத்தத்தைத் திணிக்கும் முயற்சியென கொம்யூனிஸ்டுகள் தமிழரசுக் கட்சியின் குரலிற் பேசினார்கள். பின்பு இது குறித்துப் பேசிய கே.டானியல் “இலங்கையில் 1966ம் ஆண்டுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் புத்தமதம் போனார்கள். இப்போது தென்னிந்தியாவில் நடப்பதைப்போல முஸ்லிம் மதத்திற்குப் போகலாமா என்ற மனநிலையில் வடபகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்து வருகிறார்கள். ஆனால் நான் உட்படத் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் இதைச் சரியான பாதையாக நினைக்கவில்லை. சாதிக் கொடுமைகளுக்காக மதம் மாறுவது என்பது உலையில் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக முடியும்” என்றார் (கே.டானியல் கடிதங்கள்). ஆனால் கொம்யூனிஸ்ட் கட்சியினதும் டானியலினதும் புரிதல்கள் ஆழமற்றவை என்பதை இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் மதமாற்றங்கள் நமக்கு நிரூபிக்கின்றன. அநேகமாக எல்லாத் தலித் இயக்கங்களுமே மதமாற்றத்தை அங்கே முன்னிறுத்துகின்றன. வடபகுதியில் முஸ்லீம் மதத்திற்கு மாறத் தயாராயிருந்த தலித்துகளை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் மதமாற்றத்திற்கு ஊக்குவித்திருந்தால் யாழ்ப்பாணச் சாதியத்தின் வரலாறு மட்டுமல்ல ஈழப்போராட்டத்தின் வரலாறும் கூட வேறுமாதிரி எழுதப்பட்டிருக்கும். அத்தனை பேரையுமா புத்தளத்திற்குத் துரத்தியிருக்க முடியும்!

52. அதேபோல 1945லேயே சிறுபான்மைத் தமிழர் மகாசபையால் வைக்கப்பட்ட நிர்வாக அலகுகளிலும் தேர்தல் தொகுதிகளிலும் கல்வியிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடுகள் பற்றிய கோரிக்கைகளைப் பற்றியும் கொம்யூனிஸ்ட் கட்சிகள் வாயே திறக்கவில்லை. தேனீர்க் கடைப் பிரவேசங்களிலும் விட, ஆலயப் பிவேசங்களிலும் விட ஆயிரமாயிரம் மடங்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோரிக்கைகளைக் கொம்யூனிஸ்டுகள் பாராளுமன்றத்திலும் வைக்கவில்லை, பொதுக் கருத்தாடல் தளங்களிலும் வைக்கவில்லை. தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் போராட்ட காலங்களிற் கூட இந்தக் கோரிக்கைகள் முன்னணிக்கு வரவேயில்லை. இடஒதுக்கீடுக் கோரிக்கைகளை முன்வைத்தால் அது கட்சியின் தலித்தல்லாத அற்பசொற்ப ஆதரவாளர்களிடையேயும் கூடக் கட்சிக்கு எதிர்ப்பைத் தேடித்தருமென்று அவர்கள் அஞ்சியிருக்க வேண்டும். அது அவர்களின் பாடு! அவர்களின் கட்சியின் பாடு! அதில் அடிபட்டுப் போனது தாழ்த்தப்பட்டவர்களின் அடிஆதாரமான உரிமைக் கோரிக்கைகள் அல்லவா. தீண்டாமை ஒழிப்பில் கொம்யூனிஸ்டுகளின் சாதனைகளைப் பேசும் வேளையில் அவர்களின் இத்தகைய அரசியற் சந்தர்ப்பவாத ஊசலாட்டங்களையும் சேர்த்துத்தான் நாம் பேசவேண்டியிருக்கிறது. ஆனால் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின்மீது இப்படியான ஓர் விமர்சனத்துக்கே இடமிருப்பதில்லை. தொகுத்துப் பார்க்கும்போது சாதிய விடுதலையை மையப்படுத்திய ஒரு தனித்துவமான தலித் அமைப்பின் தேவையை வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டேயிருக்கிறது.

53.ஈழத்து அரசியலில், தலித் விடுதலை அரசியலிற்கான இடம் இன்னும் வெற்றிடமாகத்தானிருக்கிறது. சாதியத்திற்கு எதிரான உணர்வுகள் நெஞ்சின் ஆழங்களில் கனன்று கொண்டிருந்தாலும் சாதியத்திற்கு எதிரான தனித்துவமான அரசியற் சக்திகள் எதுவும் களத்தில் இல்லாததால் அரசியல் உணர்வுள்ள தலித்துகளில் பொதுஅரசியல் வெளிகளிலிருந்து ஒதுங்கிக்கொண்டவர்கள் போக மற்றவர்கள் தங்களை மைய அரசியல் சக்திகளோடேயே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புலிகள், புலி எதிர்ப்பாளர்கள், கூட்டணியினர், பொதுவுடமை முகாம்கள் எனச் சகல பக்கங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். இந்த மைய அரசியல் கருத்தாக்கங்களிலிந்து தங்களை விடுவித்துக்கொண்டு தலித் அரசியலை முன்னிறுத்தி அரசியல்ரீதியாகத் தலித்துகள் இணைவதுதான் இன்னும் வென்றெடுக்கப்படாத உரிமைகளைத் தலித்துகள் வென்றெடுப்பதற்கான முன்நிபந்தனையாக அமையும். இதைத் தவிரக் கண்ணுக்குத் தெரியும் குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

54. விடுதலைப் புலிகளின் சில கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடுகளிற்குப் போய் முடிவெட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. சாதியைச் சொல்லி இழிவு செய்பவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுகூடப் புலிகளின் பொதுவிதியில்லை. அந்தத்தப் பகுதியின் புலிப் பொறுப்பாளர்களின் தனிப்பட்ட முனைப்புகளாகவே இந்த நடவடிக்கைகளைக் கருத முடியும். இவ்வாறான சின்னச் சின்னச் சீர்திருத்தங்ககளை வரலாற்றில் பல அமைப்புகள் பல்வேறு காரணங்களிற்காகச் செய்ததை நாம் அவதானிக்க முடியும். இலங்கை அரசு 1957ல் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிற்று. பொது இடங்களில் ஒருவர் தீண்டாமையைக் கடைப்பிடித்தால் அவருக்கு நூறு ரூபாவிற்கு மேற்படாத அபராதமும் ஆறுமாதங்களிற்குக் குறையாத சிறையும் விதிக்க இந்தச் சட்டம் வகைசெய்தது. தமிழரசுக் கட்சிகூட சமபோசனப் பந்திகளை நடத்தியிருக்கிறது. தாழ்த்ப்பட்டவர்களான ஜி. நல்லையாவைச் செனட்டராயும் ரி.இராசலிங்கத்தை பாராளுமன்ற உறுப்பினராயும் ஆக்கியிருக்கிறது. ஆகவே தமிழரசுக் கட்சி காலப்போக்கில் சாதியை அழித்திருக்கும் என்று நாம் சொல்ல முடியுமா? இந்தச் சீர்த்திருங்களை ஓர் எல்லைக்கு மேல் இவர்களால் கொண்டுசெல்ல முடியாது. எடுத்துக்காட்டாகப் புலிகள் இந்துமத ஒழிப்பில் இறங்குவதை நம்மால் மட்டுமல்லப் புலிகளாலேயே கூடக் கற்பனை செய்து பார்க்க முடியாது.

55. தலித் சமூகத்திற்குத் சாதியத் தடையற்ற கல்வி கிடைத்து இன்னும் முழுமையாக அரைநூற்றாண்டுகள் கூட ஆகவில்லை. இன்னமும் கூடக் கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களுக்குப் பாரபட்சங்கள் காட்டப்பட்டுகின்றன. நான் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வாசிகன் என்ற மாணவன் muranveliemag.blogspot.com என்ற இணையத்தில் எழுதியிருப்பதைப் பாருங்கள்: “பாடசாலைகளுக்கு புதுமுக மாணவர்களை உள்ளீர்க்கும் செயன்முறைகளின் போதே இந்துவேளாள வடிகட்டல் தொடங்கி விடுகிறது. தரம் ஐந்து புலமைப்பரிசிலும் நுழைவுத்தேர்வுகளும் அனுமதிக்கான முன்நிபந்தனைகள். புலமைப்பரிசிலில் பெரும்பான்மை புள்ளிகள் பெற்றுவருவது அதிகமும் டாக்குத்தர், இஞ்சினியர், லோயர் அன்ன பிறரின் பிள்ளைகளாகவே இருந்துவிடுவதால் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. ஆயினும் பொஸ்கோ போன்ற கத்தோலிக்க வெள்ளாள பாடசாலைகளூடு புலமைப்பரிசிலைத் தட்டிவிடும் கிறிஸ்தவர்களும் அபூர்வமாக சித்தியடைந்துவிடும் தலித்துகளும் புலம்பெயர் உறவுகளால் புதுப்பணக்காரர்களாகிய தலித்துகளும் தான் இந்துக் கல்லூரிகளுக்கு இருக்கும் முக்கிய சவால்கள். நேர்முகத் தேர்வின் போது மேற்குறித்தவகை மாணவர்கள் வேறுபாடசாலைகள் குறித்துச் சிந்திக்கும்படி தூண்டப்படுகிறார்கள். நன்கொடைத்தொகையைக் கூட்டிக் கேட்டல் போன்ற பொருத்தமான உத்திகள் மூலம் இது நடக்கிறது….யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி உள்ளிட அனைத்துப் பாடசாலைகளிலும் வெள்ளாள மேலாதிக்கப் போக்கு சமீபகாலங்களில் கேள்விக்குள்ளாகி வருவது வெறும் மேல்மட்டத் தோற்றப்பாடே தவிர உண்மையல்ல.”

56.தலித் சமூகத்திற்கு வேலையிலும் கல்வியிலும் இடஒதுக்கீடுகளை வழங்கவேண்டும். சகல பொது நிறுவனங்களிலும் தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் தேவை என்ற கோரிக்கைகளை உச்சரித்தாலே ஆதிக்கசாதியினர் ஒரு கசப்பான புன்னகையுடன் நம்மைக் கடந்து செல்கின்றார்கள். புகலிடத் தமிழ்ச் சமூகக் கூட்டு மனதில் உறைந்திருக்கும் சாதியத்திற்கு எதிராகவும் புகலிடத்திலும் தொடரும் ஆதிக்கசாதிப் பண்பாடுகளுக்கு எதிராகவும் ஒரு கலாச்சாரப் புரட்சியையே நடத்த வேண்டியிருக்கும் எனச் சொன்னால் நீங்கள் தமிழ்ச் சமூகத்திலிருந்து ஒதுங்கிவாழ்ந்தால் சாதியத்திலிருந்து தப்பிக்கலாமே என அவர்கள் அகராதி பேசுகிறார்கள். இந்துமதத்தை அழிக்காமல் சாதியத்தை ஒழிக்க முடியாது எனச் சொன்னால் இந்து மதத்துக்கும் சாதியத்திற்கும் என்ன தொடர்பு எனக் கண்கள் விரியக் கேட்டு அடிமுட்டாள்களுக்கு நடிக்கிறார்கள். இவையெல்லாம் வாய்க்குள் இருக்கும் சாதியத்தை மிண்டி வயிற்றுக்குள் விழுங்கும் தந்திரங்கள். சாதிய ஓடுக்குமுறை நேரடியாக நடைபெறுகிறதா, மறைமுகமாக நடைபெறுகிறதா, உள்ளங்களில் மட்டும் உறைந்திருக்கிறதா, துப்பாக்கி நிழலில் மறைந்திருக்கிறதா, என்பதெல்லாம் இரண்டாவது மூன்றாவது கேள்விகள். எந்த வடிவிலிருந்தாலும் சாதியம் ஒட்டுமொத்த மானிட விழுமியங்களுக்கே எதிரானது. தன்னைச் சாதியாய் உணரும் மனதால் அறம் சார்ந்து / விடுதலை சார்ந்து கனவுகூடக் காணமுடியாது. இனவாதத்தாலும் பாஸிசத்தாலும் இன்னும் பல்வேறு ஒடுக்குமுறைகளாலும் முற்றுகையிடப்பட்டிருக்கும் நமது சமூகம் பல்வேறு விடுதலைகளைச் சாதிக்கவேண்டியிருக்கும். ஆனால் நமது சமூகத்தில் சாதிய விடுதலை சாத்தியமில்லாமல் நமது சமூகத்திற்கு வேறெந்த விடுதலையும் சாத்தியப்படாது. இது இனவிடுதலை அரசியலுக்கு நேராகத் தலித் அரசியலை நிறுத்த வேண்டிய காலம்!

முதன்மைப் பயன்பெறு நூல்கள்:
1.சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்/ வெகுஜனன், இராவணா/ புதியபூமி
2.வாழ்வும் வடுவும்/ இலங்கையன்/ நான்காவது பரிமாணம்
3.இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்/ சி.கா.செந்திவேல்/ சவுத் ஏசியன் புக்ஸ்
4.டானியல் நினைவுமலர்/ கனடா

 

 

http://www.shobasakthi.com/shobasakthi/2007/02/23/81/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.