Jump to content

செல்வன்


Recommended Posts

பதியப்பட்டது

அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம்!

"போர் உலா" என்ற நூலை எழுதிய மாவீரன் கப்டன் மலரவனுக்கு(லியோ) (காசிலிங்கம் விஜிந்தன், யாழ்ப்பாணம்) இந்த செல்வன் தொடர்கதையை கண்ணீர்க் காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன்.

கதையில் ஏதாவது குற்றங்கள், குறைகள், இலக்கணம் மற்றும் எழுத்துப்பிழைகள், மற்றும் வேறு ஏதாவது தவறுகள் இருந்தால் அடியேனை பொறுத்து அருளும்படி மாண்புமிகு வாசகர் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி!

அன்புடன்,

கலைஞன்

குறிப்பு 01: இங்கு வரும் பல பாத்திரங்களிற்கு யாழ்கள உறவுகளின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெயரிலும் ஒரு பாத்திரம் இங்கு உருவாக்கப்படுவதை நீங்கள் விரும்பினால் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி அங்கு உங்கள் விருப்பத்தை எழுதிவிடுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19091&hl=

குறிப்பு 02: நீங்கள் செல்வன் தொடர்கதையைப்பற்றி ஏதாவது சொல்லவிரும்பினால் அல்லது விமர்சனம் செய்யவிரும்பினால் அல்லது பதில் கருத்துக்கள் எழுதவிரும்பினால் அவற்றை இங்கே எழுதாது கீழ்வரும் இணைப்பை சொடுக்கி அங்கு உங்கள் கருத்துக்களையிடவும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19335

கதை ஆரம்பிக்கின்றது....

Posted

செல்வன்

இன்று இரவு யாழ்ப்பாணத்தில் சூறாவளி அடிக்கும் என்று வானொலியில் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இப்போது மாரி காலமாகையால் மழை அளவுக்குமிஞ்சி பெய்து ஊரெல்லாம் ஏற்கனவே வெள்ளக்காடாக காட்சி தந்தது. வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட செய்தியின் காரணமாக எல்லோரும் முன்னெச்சரிக்கையாக தத்தம் வீடுகளுக்கு அருகில் இருந்த பெரிய மரங்களின் கொப்புக்களை மாலையில் தறித்துவிட்டு சுழல் காற்றை இரவு எதிர்பார்த்து காத்திருந்தார்கள். காற்று ஊஊ... உஸ் உஸ்.. என பலவிதமான ராகங்களுடன் அடித்து வெவ்வேறு ஓசைகளை எழுப்பிக்கொண்டு இருந்தது. விது வீட்டு பின்கோடியில் இருந்த தகரக்கொட்டிலில் காற்று முட்டிமோதி டமார் டமார் டொம் டொம் என இரைச்சல் வந்துகொண்டிருந்தது. அதைக்கேட்பதற்கு யாரோ பழக்கமில்லாதவர்கள் டிரம் வாத்தியத்தை கண்டபடி அடித்து வாசிப்பது போல் இருந்தது. இதுபோதாதென்று வித்தியாசமான சத்தங்களை கேட்டு பதற்றமடைந்த நாய் சீபா குரைக்கத் தொடங்கிவிட்டது. அலுமாரியின் மீது ஏறி இருந்து படித்துக்கொண்டிருந்த விது பொறுமையிழந்து கீழே இறங்கி வெளியில் என்ன நடக்கின்றது என பார்ப்பதற்காக அறையினுள் இருந்து வந்தான். அவனுக்கு படிப்பதற்கு வீட்டில் மேசை இருந்தாலும், வீட்டில் இருந்த பழைய கறுப்பு அலுமாரியின் மேலே ஏறி இருந்து படிப்பதை மிகவும் விரும்பி இருந்தான். சிலவேளைகளில் அலுமாரியின் மேலேயே அவன் படுத்தும் விடுவான். "இவன் என்ன செய்தாலும் பரவாயில்லை நமக்கு தொல்லை தராமல் இருந்தால் போதும்" இவ்வாறு நினைத்த விதுவின் பெற்றோர் அவன் பாட்டுக்கு அவனை விட்டுவிட்டனர்.

அவசரமாக வெளியேவந்த விது அறைவாசலோரம் படுத்திருந்த பூனையை கவனிக்கவில்லை. தவறுதலாக அதன் வாலை அவன் உலக்கிவிட மருண்டு எழுந்த பூனை மாஆஆஆவ்வ்வ்வ் என்று பயங்கரமாக சத்தம் போட்டபடி அவனது காலை தனது கூரிய நகத்தால் விராண்டி விட்டது. "ஐயோ அம்மா!" என அலறியவன் கோபத்தில் பூனையை தனது காலால் உதைபந்தை அடிப்பதுபோல் உதைந்துவிட்டான். பூனைகீறியதால் அவனது காலில் இருந்து இரத்தம் சொட்டத் தொடங்கியது. இவனது அலறல் கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் இவனுக்கு என்ன நடந்தது என்று பார்க்க ஓடிவந்து விட்டனர். விதுவின் குதிக்காலின் மேற்புறத்தில் தடித்த நீண்ட சிவப்பு வரி காணப்பட்டது. காயத்தைசுற்றிய பகுதியில் தோல் உரிந்து வெள்ளையாகக் காணப்பட்டது. "பிடிச்சு அடிச்சுத் துரத்தடி இந்தச் சனியனை!" பூனையில் கோபங்கொண்ட விதுவின் அம்மா விதுவின் சின்னக்காவிடம் இவ்வாறு கூறினாள். ஆனால் சின்னக்கா ரசிகையோ தம்பிக்கு காயம் என்று தெரிந்ததும் குசினிக்குள் ஓடிப்போய் சுடுதண்ணீரை தம்ளர் ஒன்றினுள் ஊற்றி அதனுள் உப்புத்துண்டுகள் சிலவற்றை போட்டு கலக்கிவிட்டு அவனது காயத்தை கழுவிவிடுவதற்காக விரைவாக கொண்டுவந்தாள். பாடசாலையில் அவள் முதலுதவி படித்திருந்ததால் இப்படி யாருக்காவது ஏதாவது நடந்துவிட்டால் ரசிகை பதற்றப்படாது பாதிக்கப்பட்டவருக்கு செய்யவேண்டிய செயல்களில் உடனடியாக இறங்கிவிடுவாள். "பூனை விராண்டினால் விஷம், நாளைக்கு அப்பன டொக்டரிட்ட கூட்டிக்கொண்டு போங்கோ அப்பா!" விதுவின் அம்மா அவனது தந்தையார் " சின்னப்புவிற்கு சொன்னாள்.

Posted

சிறிது நேரமாக தணிந்திருந்த மழை மீண்டும் அடித்துக் கொட்டத் தொடங்கியது. வீட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கூரையில் இருந்து விழும் ஒழுக்கு நீரைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் மழைநீரினால் நிறைந்து வழிந்ததனாலும், நீர் உயரத்தில் இருந்துவந்து பாத்திரத்தினுள் விழுந்து தெறித்ததனாலும் வீட்டில் நிலம் முழுவதும் தண்ணீராக காணப்பட்டது. இங்குள்ள வீடுகளில் இயல்பாகவே மழைகாலங்களில் நிலம் கசியும் தன்மை இருந்தது. இவ்வாறு நிலம் ஈரமாக காணப்படும் நேரங்களில் விது சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுவது வழமை. பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபடும்போது கிடைக்கும் இன்பம் இவனுக்கு இதில் கிடைத்தது. ஈர நிலத்தில் கால்களை மடித்து, குந்திஇருந்து கைகளால் தள்ளி சறுக்கி மகிழும் போது சிலவேளைகளில் நிலத்தில் மண் இருந்தால் அல்லது தண்ணீர்த்தன்மை குறைவாக இருந்தால் அது அவனது முழங்காலில் தேயல் காயத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் விளையாட்டினால் வரும் காயங்களைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. விது சிறுவயதிலிருந்தே விளையாட்டுப் பிள்ளையாக இருந்ததனால் அவன் உடம்பு முழுவதும் விளையாட்டினால் வந்த பல வீர வடுக்கள் இருந்தன. ஒருமுறை இவன் படுத்து இருந்து கனவு காணும்போது தான் கிரிக்கட்டு மட்சில் பந்துவீசுவதாக நினைத்து சுவரின் மீது வேகமாக கையை சுழற்றிக் கொண்டுபோய் அடித்து கையை உடைத்திருந்தான். இரவு கனவில் "ஹொ இஸ் தட்" என்று சத்தமாக தன்பாட்டில் உளறி கையை உடைத்தபின்பே இவனுக்கு தான் கனவுகண்ட விடயம் தெரிந்தது. இவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததை அறிந்த இவனது பாடசாலை நண்பர்கள் விதுவை "ஹொ இஸ் தட்" என பட்டப் பெயர் சொல்லி கிண்டல் செய்தார்கள்.

விதுவின் சின்னக்கா ரசிகை காயத்திற்கு மருந்துபோட்டுவிட்டபின் தனக்கு பசிப்பதாகவும் தாயாரிடம் இரவு என்ன சாப்பாடு எனவும் விது கேட்டான். உயர்தரம் கணிதப்பிரிவில் படித்துக்கொண்டிருந்த விதுவின் அண்ணா ஆதி நீண்ட நேரமாக மண்டையைப் போட்டுக் குழப்பி பெளதிகவியலில் பயிற்சி வினாக்கள் சிலவற்றை செய்துமுடித்துவிட்டு இப்பொழுதுதான் சாப்பிடுவதற்காக உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த தனது அறைக்கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான். ஆதிக்கு படிக்கும்போது யாராவது சத்தம் போட்டால் பிடிக்காது, சரியான கோபம்வரும். இதனால் சின்னப்பு இவனுக்கென்று உயர்தரம் முடியும்வரை வீட்டில் ஒரு தனி அறையை ஒதுக்கிக் கொடுத்து இருந்தார். தம்பி காலில் காயத்துடன் காணப்படுவதை கண்ட ஆதி தம்பியாரைப் பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பை விட்டான். இதன் உள் அர்த்ததை புரிந்துகொண்ட விதுவின் மூத்த அக்கா முகி ஆதியின் தலையில் செல்லமாகக் குட்டி விட்டாள். சின்னப்புவிற்கு நான்கு பிள்ளைகள். மூத்தவள் முகியிற்கு இருபத்திரண்டு வயது, மருத்துவபீடத்தில் படித்துக்கொண்டிருந்தாள். இரண்டாவது பிள்ளை ஆதியிற்கு பதினெட்டு வயது, மூன்றாவது பிள்ளை ரசிகையிற்கு பதினேழுவயது, சாதாரணதர பரீட்சையில் அனைத்துப் பாடங்களிற்கும் அதிவிசேட சித்திகளைப் பெற்றபின் அக்காளைப் போல் மருத்துவபீடம் செல்வதற்காக உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் படித்துக் கொண்டிருந்தாள். கடைக்குட்டி விதுவுக்கு பதின்மூன்று வயது. அப்பா, அம்மா, பிள்ளைகள் என அனைவரும் ஊரில் இருந்த அந்தப் பெரிய கலவன் பாடசாலையிலேயே படித்திருந்தனர், படித்துக்கொண்டிருந்தனர். சின்னப்பு மனைவி தேவகியை பாடசாலையில் படித்தகாலத்தில் விரும்பி, பல இடையூறுகளினை சந்தித்து இருபத்துநான்கு வருடங்களின் முன் திருமணம் செய்திருந்தார்.

Posted

"ரொட்டியும், சம்பலும் தான் இண்டைக்கு சாப்பாடு. குசினி சிம்னிக்காலயும் தண்ணி ஒழுகுது. விறகெல்லாம் வேற ஈரமா இருக்கு. இன்றயப் பாட்டுக்கு இதச் சாப்பிடுங்கோ பிள்ளைகள்.." இவ்வாறு சொல்லியபடி ஆளுக்கு இரண்டு ரொட்டிகளையும், தேங்காய்ச் சம்பலையும் அவர்களது சாப்பாட்டு தட்டுக்களில் போட்டு தேவகி கொடுத்தாள். வீட்டில் சாப்பிடுவதற்கு நான்கு பிள்ளைகளிற்கும் வெவ்வேறான சாப்பாடுத் தட்டுக்கள் இருந்தது. இந்த சாப்பாட்டுத் தட்டுக்கள் மாறுவதால் வீட்டில் பல பிரச்சனைகள் வந்து இருந்தது. ஒருவருக்கு மற்றையவர் தனது சாப்பாட்டுத் தட்டில் சாப்பிடுவது பிடிக்காது. விருந்தினர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இங்கு ஆதி சற்று சந்தேக புத்தி கூடியவன். அவன் தனது வெள்ளித்தட்டின் அடிப்பகுதியில் கத்தியைப் பாவித்து "ஆதி" என்று எழுதி மார்க் போட்டு வைத்திருந்தான். தனது தம்பியார் சாப்பிடும்போது அடிக்கடி அவனது தட்டைக் காட்டச்சொல்லி கேட்டு அதன் கீழ்ப்பகுதியை பரிசோதித்து பார்த்து தட்டு தன்னுடையது அல்ல என்பதை ஆதி உறுதிசெய்து கொள்வான். ஆதிக்கு மற்றையவர்கள் தனது பொருட்களை கேட்காமல் தொடுவதும் பிடிக்காது. பிள்ளைகளிடையே இந்த சாப்பாட்டுத் தட்டுப் பிரச்சனையினால் முன்புவந்த அமளிதுமளிகளால் வெறுப்படைந்த தேவகி பொறுமையிழந்து, கடைசியாக நடந்த நல்லூர் தீர்த்தத்திருவிழாவின் போது வெவ்வேறு வகையான வடிவமைப்புக்களில் வெள்ளிக் கோப்பைகளை பிள்ளைகளிற்கு உண்பதற்காக வாங்கிக் கொடுத்து இருந்தாள். ஆக வெள்ளிக் கோப்பைக்கு மாத்திரமே இந்தப் பிரச்சனை. மேலும், சைவ உணவுகளை மட்டுமே வெள்ளிக் கோப்பையில் உண்பார்கள். அசைவ உணவை அனைவரும் பீங்கான் கோப்பையிலேயே உண்ணவேண்டும் என்பது வீட்டில் அனைவருக்கும் பொதுவான விதி. ஆனால், ஏராளமான வண்ணங்களில், வடிவமைப்புக்களில் பீங்கான் கோப்பைகள் இருந்ததனால் இதற்கு வீட்டில் சண்டை வருவதில்லை. எனினும் வேறுவிதமான பிரச்சனை வரும். முகி படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாலும் சரியான முன் கோபக்காரியாக இருந்தாள். அவளுக்கு அசைவம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது யாராவது சீண்டிவிளையாடினால் பீங்கான் கோப்பையை நிலத்தில்போட்டு உடைத்துவிடுவாள். வீட்டில் முகியை எதிர்ப்பதற்கு ஒருவருக்கும் துணிவு இருக்கவில்லை. அவள் இன்னும் சில வருடங்களில் மருத்துவராக வர இருந்ததால் அவளை என்ன பிழைசெய்தாலும் எல்லோரும் ஆகா ஓகோ என்று தலையில் வைத்துப் புகழ்ந்து கொண்டாடினார்கள். வீட்டில் தவறுதலாக விழுத்தி பீங்கான் கோப்பைகளை உடைப்பதில் விதுவினை விஞ்ச ஒருவரும் இருக்கவில்லை. இறைச்சிக் கறியும் சோறும் சாப்பிட்டபோது நேற்றும் ஒரு கோப்பையை அவன் கைநடுக்கத்தில் உடைத்து இருந்தான்.

சுவாமிஅறை யன்னலை மெல்லமாகத் திறந்து சின்னப்பு ஓடையில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் என்ன செய்கின்றன எனக் கவனித்தார். அவை குளிர் காரணமாக சுவருடன் ஒட்டித் தேய்த்தபடி படுத்து இருந்தன. சின்ன கிடாய்க் குட்டி தாயின் கால்களின்மீது தனது தலையை நீட்டி வைத்தபடி படுத்து இருந்தது. சற்றுமுன்னர் ஆட்டில் இருந்து பால் ஏற்கனவே கறக்கப்பட்டு இருந்ததால் தாயும் சேயும் சில மணித்தியாலங்களிற்கு ஒன்றாக இருக்க அனுமதிக்கப்பட்டு இருந்தன. எல்லாமாக மூன்று ஆடுகள் இருந்தன. மற்றைய மறி ஆடும் விரைவில் குட்டிபோடும் நிலையில் இருந்தது. ஒரு சோடி பசுக்கள், மற்றும் இரண்டு கன்றுக்குட்டிகளும் விதுவின் வீட்டில் நின்றன. வீட்டில் ஆடுகளிற்கு உணவு போடும் பொறுப்பு விதுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. மாடுகளைக் கவனிக்கும் பொறுப்பை சின்னப்புவும், ஆதியும் பகிர்ந்து கொண்டனர். இங்கு ஒரு பசுவுக்கு நீண்ட கொம்புகள் இருந்ததோடு சிறுபிள்ளைகளைக் கண்டால் இடிக்கவும் செய்தது. இதனாலேயே விது மாடுகளின் பக்கம் போவதில்லை. ஆனால் அவனை மாடு வெருட்டும் சமயங்களில் மாட்டின் பின்பக்கமாகப்போய் அதன் வாலை பிடித்து முறுக்கி இழுத்து அந்த முரட்டு மாட்டின்மீதுள்ள தனது கோபத்தை தீர்த்துக்கொள்வான். மாட்டுக் கொட்டில் சற்றுத் தள்ளி இருந்தது. சாணம், சிறுநீர் மணங்கள், மற்றும் இலையான்கள் காரணமாகவே இது வீட்டில் இருந்து சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. "கன நேரமா யன்னைலத் திறந்து என்ன பாத்துக்கொண்டு இருக்கிறீங்கள்? "வீட்டுக்க இலையான்கள் வரப்போகுது உடன யன்னல மூடுங்கோ" என்று சுவாமி அறையினுள் வந்த தேவகி நச்சரிக்க சின்னப்பு யன்னலை மூடினார். யன்னலை மூடும்போது கண்ணைப் பறிக்கும் பிரகாசமான ஒளியொன்று தோன்றியதும் "டடட் டட் டட் டொம்.. " உலகம் இடிந்து விழுவது போன்ற சத்ததுடன் பெரிய இடியோசை கேட்டது. காற்றுடன் சேர்ந்து "உயிங்.. " என ஒரு உரசல் சத்தம் கேட்ட கையோடு திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு வீடு இருள்மயமானது.

Posted

"சாமி விளக்கும் நூந்து கிடக்கு, மெழுகுதிரி ஒன்றை பாத்து கொளுத்துமப்பா!" சொல்லிக்கொண்டு ரெண்டு அடி எடுத்து வைக்குமுன் தேவகியுடன் சின்னப்பு தட்டுப்பட்டுவிட்டார். "ஆ... இந்த மனுசன் கண்மண் தெரியாம மிருகம் மாதிரி வந்து என்ர கால உலக்கிப்போட்டுது.." தேவகி கத்த இந்த ஆரவாரங்களிற்கிடையில் முகி டீ.வி மேசையில் இருந்த மெழுகுதிரி ஒன்றை ஒரு மாதிரி கண்டுபிடித்து கொளுத்திவிட்டாள். விது மேசை ஒன்றுக்குக் கீழ் காதைப் பொத்திக்கொண்டு வெருண்டுபோய் நின்றான். அவனுக்கு வெடி ஓசைகள், இடிமுழக்கம் என்றால் சரியான பயம். இவன் வயதுச் சிறுவர்கள் கையில் வைத்து பெரிய பெரிய கட்டுவெடிகளை கொண்டாட்டங்களின் போது கொளுத்தும் போது விதுமட்டும் புஸ்வானம் வாங்கிப் பிடித்துக்கொண்டு இருப்பான். இவனுக்கு வெடிக்கு சரியான பயம் என அறிந்த இவனது நண்பர்கள் பொங்கல், வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற தினங்களில் மைதானத்தில் விளையாட வரும் விதுவின் காலினுள் சீன வெடியைக் கொளுத்திப் போட்டுவிடுவார்கள். விது அலறியடித்துக்கொண்டு வீட்டுக்கு விளையாடாமல் திரும்பிஓடி வந்துவிடுவான். அண்ணா ஆதி விதுவுக்கு வெடிமீது இருந்த பயத்தைப் போக்க பல்வேறு முயற்சிகள் செய்து பார்த்தான். ஒன்றும் கைகூடவில்லை, மாறாக விதுவுக்கு வெடிமீது இருந்த பயம் இன்னும் அதிகரித்தது.

சிறிது நேரத்தில் மழைகுறைந்து காற்றின்வேகம் அதிகரித்தது. வீட்டைச் சுற்றி இருந்த தென்னைமரங்கள் பேயாட்டம் ஆடின. அது பார்ப்பதற்கு பத்திரகாளி அம்மன் கோயிலில் நேர்த்தி எடுக்கும் பெண்கள் தீக்க்குளிப்பு திருவிழாவன்று தலைவிரிகோலமாக உருவாடுவது போல் படுபயங்கரமாக இருந்தது. டொம் டொம் என்று பழுத்த தேங்காய்கள் தென்னைமரத்தில் இருந்து விழுந்தது. காயந்த ஓலைகளும் சிர்ர்ர்ர்ர்ர் எனும் சத்ததுடன் விழுந்தது. காற்றின் வேகம் காரணமாக வீட்டில் மூடியிருந்த யன்னல்கள் கடகட என அடித்துக்கொண்டது. இவ்வளவு நேரமும் பொறுமையாக இருந்த சீபா திரும்பவும் அடாவடித்தனம் செய்யத் தொடங்கியது. விது ஓடிப்போய் நாயின் வாயை அமத்திப் பிடித்தபடி அதன் தலையில் குட்டினான். வாய்மூடுப்பட்டிருந்த சீபா ஊக் ஊக் என்று உள்வயிற்றால் அழுது தொடர்ந்து சத்தம் போட்டது. வீட்டில் நின்ற நாய், பூனை இரண்டுக்கும் தலைவனாக விதுவே இருந்தான். அவற்றுக்கு சாப்பாடு கொடுப்பது, மேலும் அவை தவறுகள் செய்தால் தண்டனை கொடுப்பது எல்லாமே விதுதான். சிலவேளைகளில் விது அவற்றுக்கு வித்தியாசமான தண்டனைகள் கொடுப்பான். ஒருமுறை குசினுக்குள் போன பூனை களவாக சாப்பாட்டுச் சட்டினினுள் வாய்வைத்துவிட்டது என்பதற்காக பூனையைப் பிடித்து பின்இரண்டு கால்களையும் ஒன்றாகச் சேர்த்துக்கட்டி கயிற்றில் அரைமணித்தியாலம் தலைகீழாகக் கட்டித்தூக்கிவிட்டான். பூனை சத்தம்போடாமலிருக்க அதன் வாயையும் துணியால் கட்டிவிட்டான். இந்த சித்திரவதை காரணமாக பூனை தண்டனை முடிந்ததும் வீட்டைவிட்டு ஓடிவிட்டது. நான்கு, ஐந்து நாட்களிற்கு விதுவின் வீட்டுப்பக்கமே வரவில்லை. பின் ரசிகை ஒருமாதிரி ஒளிந்துதிரிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பூனையைச் சமாதானப்படுத்தி வீட்டுக்குள் கூட்டிவந்துவிட்டாள். இன்றும் பூனை தவறு செய்துவிட்டது. ஆனால் விது சூறாவளி எப்படி அடிக்கிறது என்பதைப் பார்ப்பதில் அக்கறையாக இருந்ததால் பூனைக்கு தண்டனை கொடுப்பதை மறந்துவிட்டான். முகியிற்கு பூனையை கண்ணில் காட்டக்கூடாது. பூனையில் பல கிருமிகள் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்து வளர்க்கவேண்டாம் எனவும் விதுவுக்கு நீண்டகாலமாகக் கூறிவந்தாள். விது அவள் சொன்னதை கேட்கவில்லை. "பாத்தியே உனக்கு நான் எத்தன நாளாச் சொன்னனான், இந்தப் பூனைய வளக்காத என்று, இண்டைக்கு அது தன்ர குணத்த உன்னில காட்டிப்போட்டுது. நாளைக்கு நீ பூனைவிசர் வராமலிருக்க டொக்டரிட்ட போய் ஊசி போடவேணும், இல்லாட்டி மியாவ் மியாவ் என்று கத்திக்கொண்டு பூனைமாதிரியே மாறீடுவாய்!" முகி வம்புக்கு தன் தம்பியை பயமுறுத்த "உண்மையாவே அக்கா? நாயுக்கு விசர் வார மாதிரி பூனையுக்கும் வாரதே? அப்ப நான் நாளைக்கு கட்டாயம் ஏர்ப்பூசி போடவேணுமே?" பயத்துடன் கேட்டான். சின்னப்பு பற்றரிகளைப் போட்டு வானொலியில் சூறாவளியைப் பற்றி என்ன செய்தி கூறப்படுகின்றது என்பதை கேட்டுக்கொண்டு இருந்தார். வீட்டில் ஒவ்வொரு அறையினுள்ளும் விளக்குகள் ஒளிரத் தொடங்கிவிட்டன.

Posted

ஒவ்வொரு அறையினுள்ளும் ஒவ்வொரு விதமான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. ஆதியிற்கு மண்ணெண்ணெய் மணம் ஒத்துக்கொள்ளாது. இதனால் அவன் தனது அறையில் படிக்கும் மேசையில் இருமருங்கும் இரண்டு குத்துவிளக்குகளை கொளுத்திவைத்து அதன் ஒளியில் திரும்பவும் இரவுச் சாப்பாடு சாப்பிட்டபின் படிக்கத் தொடங்கிவிட்டான். முகி தனது கண்களைப் பாதுகாப்பதில் சற்றுக் கவனமாக இருப்பவள், இதனால் வீட்டில் மின்சாரம் தடைப்பட்டதனால் இப்போது சாப்பிட்டபின் தூங்குவதற்கு ஆயத்தமானாள். அவளுக்கு இன்றுதிரும்பவும் மின்சாரம் வரும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. கரண்ட் கம்பிவயர்கள் காற்றில் அறுந்துவிட்டதனாலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என நினைத்தாள். படுக்கைவிரிப்புக்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்தவள் திடீரென எச்சரிக்கை அடைந்தவளாய் "அப்பா நாளைக்கு விடிஞ்சதும் வழமையா போற மாதிரி காணிகள பாக்க வெளியில போகாதிங்கோ. கரண்ட் வயருகள் ரோட்டில அறுந்துகிடக்கும், சொல்லிறது காதில கேட்கிது தானே?" திரும்பவும், திரும்பவும் மூன்று முறை அவள் தகப்பனைப் பார்த்துச்சொல்ல வானொலி கேட்பதில் லயித்துப்போய் இருந்த சின்னப்பு ஓம் என இறுதியில் தலையை ஆட்டினார். முகி இந்த எச்சரிக்கையை வீட்டில் ஒவ்வொருவருக்கும் கூறிவிட்டு இறுதியாக அறையைப்பூட்டி உள்ளே படித்துக்கொண்டிருந்த ஆதியிடமும் சொல்வதற்கு போனாள். முகி இவ்வாறு எச்சரிக்கை அடைந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. சுமார் இரண்டு வருடங்களின் முன் அவளது சின்னம்மா இப்படியான ஒரு இயற்கை அனர்த்தத்தின்போது விடிகாலையில் கோயில் திருவெம்பாவை பூசைபார்க்க சென்றசமயத்தில் வீதியில் அறுந்துகிடந்த மின்சார வயரைமிதித்து உடல் கருகி மரணமானாள்.

"டேய் கதவத் திறவடா.." இது முகி. "என்ன விசயம்? வெளியில நிண்டு சொல்லு நான் பிசியா படிச்சுக்கொண்டு இருக்கிறன், எனக்கு நல்லா காது கேட்கிது" ஆதி பதிலளிக்க, முகியிற்கு கோபம் வந்தது. "நீ நாளைக்கு சாகப்போறாய், அதத்தான் சொல்லிப்போட்டு போக வந்தனான்!". இதைக்கேட்ட ஆதி படிப்பு குழம்பியபடி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். முகி தான்சொல்ல வந்தவிடயத்தை ஆதியிற்கு கூறும் நேரத்தில் "யாராம் நாளைக்கு சாகப்போறீனம்?" என்று கேட்டபடி ரசிகை வர, அவள் பின்னால் வால்பிடித்தபடி விதுவும் வந்தான். இருவரும் தனது அறைக்கு வருவதைக் கண்ட ஆதி ஓடிப்போய் திரும்பவும் அறைக்கதவைச்சாத்தி உள்தாழ்ப்பாள் போட்டான். சிறிதுநேரத்தில் "இஞ்சபார் முகியக்கா! இப்பநான் உனக்கு கதவத் திறந்ததால என்ர அறையுக்க நிறைய ஈசலுகள் வந்திட்டுது. இனி நான் இந்தப்பூச்சிகள் முன்னுக்கும் பின்னுக்கும் பறக்கேக்க எப்பிடி படிக்கிறது?" என அறையினுள் இருந்து கோபத்துடன் கேட்டான். மழைகாலங்களில் புற்றீசல்கள் மாணவர்களிற்கு பெருந்தொல்லை கொடுத்துவந்தன. ஒன்று, ரெண்டு எனத்தோன்றிய ஈசல்கள் சில நிமிடங்களில் பத்து, இருபது என எண்ணிக்கையில் கூடி விதுவின் வீடு முழுவதும் சுதந்திரமாக நடமாடின. சில எரிகின்ற விளக்குகளினுள் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டன. ஆதி குத்துவிளக்கில் இருந்து படித்ததால் அதற்கு மற்றைய விளக்குகளில் இருப்பதுபோல் கண்ணாடி தடுப்பு இல்லாத நிலையில் பல ஈசல்கள் குத்துவிளக்கின் சுவாலயை நோக்கிப்பறந்து கடைசியில் தீயுடன் சங்கமாகி தமது உயிரைமாய்த்துக் கொண்டன. அங்குமிங்கும் பறந்த புற்றீசல்களினால் வெறுப்படைந்த ஆதி குத்துவிளக்குகளை அணைத்துவிட்டு தானும் படுப்பதற்காக சென்றான்.

படுக்கையறையில் இரண்டு கட்டில்கள் இருந்தது. ஒரு கட்டிலில் ஆதி தனியாகப் படுக்க மற்றைய பெரிய கட்டிலில் விது நடுவிலும், அவனது இருபுறமும் ரசிகையும், முகியும் படுத்தனர். ஆதியிற்கு விது தன்னுடன் படுப்பதில் விருப்பமில்லை. விது படுக்கும்போது நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு கோணங்களில் திரும்புவான். பெரும்பாலும் படுக்கும்போது தலையணைப் பகுதியில் இருக்கும் அவனது தலைக்குப் பதிலாக காலையில் கால்களே காணப்படும். இதைவிட அருகில் படுத்து இருப்பவர்களின் உடம்பின்மேல் வஞ்சகமின்றி கைகளையும் கால்களையும் போடுவான். சிலவேளைகளில் கட்டிலில் இருந்து உருண்டு நிலத்திலும் விழுந்துவிடுவான். இதனாலேயே அவனுக்கு பாதுகாப்பிற்காக இருபுறமும் அக்காமார் படுத்தனர். வீட்டில் விது செல்லப்பிள்ளையாக இருந்ததனால் படுக்கும்போது தரும் தொல்லைகளைப் பற்றி அவனது அக்காமார் முறைப்பாடு செய்வதில்லை. மற்றைய அறையில் தேவகி படுக்குமுன் தேவாரங்கள் பாடி சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்தாள். சின்னப்பு வானொலியில் நாதசுவரக் கச்சேரி கேட்டுக்கொண்டு இருந்தார். "அப்பா! பிள்ளைகளும் படுத்திட்டுதுகள், நீங்கள் ஏன் இந்த ரேடியோவை இன்னும் நொய்ங், நொய்ங் என்று போடுறீங்கள். பேசாம உதநூத்திட்டு படுங்கோ. எனக்கு காலம்பற நிறைய வேலைகள் இருக்கு!" தேவகியின் தொல்லை தாங்கமுடியாத சின்னப்பு "என்னப்பெத்த தாயே! அம்மையே! அப்பனே!" என்று பெருமூச்சுடன் சொல்லி இறுதியில் ஏதோ தேவாரம் ஒன்றை முணுமுணுத்தபின் தூங்கிவிட்டார். "இந்த மனுசன் வீட்டுக் கதவுகள ஒழுங்காப் பூட்டிச்சுதோ தெரியாது!" என தனக்குள் சொல்லியபடி தேவகி ஒவ்வொரு கதவாகச் சென்று தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கிறதா எனப் பரிசோதித்தாள். முன்கதவுடன் விரிக்கபட்டிருந்த மண்ணிறச் சாக்கில் சீபா படுத்திருந்தது. வழமையாக சீபா வீட்டினுள் படுப்பதற்கு அனுமதிக்கபடுவதில்லை. ஆனால், இன்று குளிராகவும், மழையாகவும் இருந்ததனால் நாய்ப்பிள்ளையார் வீட்டினுள் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், பூனை எங்கே படுக்கின்றது என ஒருவரும் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அதற்கு விதுவின் வீட்டினுள் அத்துமீறி நுழைவதற்குரிய சகல கள்ளவழிகளும் தெரிந்திருந்தது. தனக்கு விருப்பமான நேரம் வீட்டினுள் வந்தது. விருப்பமான நேரம் வெளியில் போனது. அதற்கு சீபாவைப் போல் திறந்தகதவினூடாக வீட்டினுள் நுழைய வேண்டும் என்றதேவை ஒருபோதும் இருக்கவில்லை.

Posted

எல்லாக் கதவுகளும் ஒழுங்காக மூடியிருப்பதைக் கண்டு மனத்திருப்தியுடன் படுப்பதற்கு வந்த தேவகி நிலம் முழுவதும் நீர் பரவியிருப்பதைப் பார்த்துவிட்டு பழைய அலுமாரி ஒன்றைத் திறந்து நீரைத் துடைப்பதற்காக பழந்துணிகள் சிலவற்றை எடுத்தாள். ஆனால், அலுமாரிக் கதவைத் திறந்தபோது அதனுள் ஏராளம் பொருட்கள் அளவுக்குமிஞ்சி திணிக்கப்பட்டு இருந்ததால் உள்ளேயிருந்த சில அண்டா குண்டாக்கள் நிலத்தில் விழுந்து உருண்டோடின. பாத்திரங்கள் விழும் சத்தத்தைக் கேட்ட முகி குசினிக்குள் பூனை ஏதோ திருவிளையாடல் செய்கின்றது என நினைத்து அதை அடித்துக் கலைப்பதற்காக சினத்துடன் படுக்கையைவிட்டு எழுந்து வந்தாள். இதற்குள் தேவகி பாத்திரங்களை திரும்பவும் திணித்து அலுமாரியை ஒருமாதிரி மூடிவிட்டாள். முகியைக் கண்ட தேவகி அவளையும் தன்னுடன் சேர்ந்து பழந்துணியினால் நிலத்தைத் துடைத்து ஈரத்தை அகற்றுமாறு கேட்டாள். தாயும் மகளுமாகச் சேர்ந்து பத்துநிமிடங்களில் நீரை ஒதுக்கிவிட்டனர்.

"பிள்ள நாளைக்கு எத்தின மணிக்கு கம்பசுக்கு போறாய்? " தேவகி கேட்க, "உங்களுக்கென்ன விசரே? இந்த மழ வெள்ளத்துக்க யார் கம்பசுக்கு போறது? பேசாமல் வீட்டில இருந்து படிக்கவேண்டியதுதான்!" முகி பதிலளிக்க "ஏதோ கவனமாப் படிச்சு டொக்டரா வந்திடு பிள்ள, எங்கட குடும்பத்தில இப்ப உனக்கு ஒருத்திக்குத்தான் டொக்டரா வாரதுக்கு அதிஸ்டம் அடிச்சிருக்கிது" அக்கறையுடனும் பெருமையுடனும் தேவகி கூறினாள். தேவகியின் அப்பா ஊரில் சிறந்த ஒரு ஆயுர்வேத மருத்துவராக இருந்தார். அவரை அனைவரும் குருவி வைத்தியர் என்று அழைப்பார்கள். தேவகியும் ஊரில் குருவியின் பெடிச்சி என்றே அழைக்கப்பட்டாள். பணம் சேர்ப்பதற்காக தேவகியின் தந்தை பல லேகியங்களை தானாக கண்டுபிடித்து ஊரில் உலவவிட்டிருந்தார். இதனாலேயே அவருக்கு குருவி வைத்தியர் என்ற பெயர் ஏற்பட்டது. சிலர் அவர் குருவி லேகியம் செய்ததாகக் கூறினார்கள். தேவகி தனது தந்தையை மிகவும் உயர்வாக மதித்தாள். சென்ற வருடமே அவர் மோசம் போயிருந்தார். மருமகன் சின்னப்புவிற்கும் மாமா குருவியென்றால் மிகவும் இஸ்டம். ஆரம்பத்தில் சின்னப்பு தேவகியைக் காதலித்தபோது குருவி பல இடையூறுகளைக் கொடுத்த போதிலும், மருமகன் பாடசாலையில் மிகச்சிறப்பாகப் படிப்பிலும், விளையாட்டிலும் சாதனைகள் பல செய்ததைக் கண்டு மனம் மாறிவிட்டார். சின்னப்பு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தலில் முதலாவதாக வந்து தனது கல்லூரிக்கு பெருமை சேர்த்திருந்தார். இவர் பல வருடங்களிற்கு முன் பாடசாலையில் உயரம் பாய்தலில் வைத்த சாதனை இன்னும்கூட முறியடிக்கபடாமல் இருந்தது. விது அடிக்கடி தான் பெரிய ஆளாய் வளர்ந்து அப்பாவின் சாதனையை முறியடிப்பேன் என்று கூறிக்கொண்டு இருந்தான்.

Posted

வீட்டில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு சுவாமி அறையில் மட்டும் ஒரு விளக்கு மங்கிய ஒளியுடன் எரிந்தது. தேவகி கண்ணைமூடியதுதான் தாமதம், சீபா மிகச்சத்தமாக குரைக்கத் தொடங்கியது. வீட்டின் சுவர்கள் உயரமாகவும், தடிப்பாகவும் இருந்தமையால் நாயின் ஒலி வீடெங்கும் அகோரமாக எதிரொலித்துக் கேட்டது. சீபா விடாது தொடர்ந்து குரைப்பதைக் கேட்ட முகி சலிப்படைந்து, திரும்பவும் தூக்கம் கலைந்து, நாயைக் கதவைத் திறந்து வீட்டிற்குவெளியே துரத்திவிட கோபத்துடன் சென்றாள். அறையைவிட்டு வெளியே வந்தபின்னரே "ஆதி அண்ணா, ஆதி அண்ணா" என முன்வீட்டில் இருந்த வந்த தூயா கூப்பிடுவது முகியிற்கு கேட்டது. அவள் உடனடியாகவே மெழுகுதிரி ஒன்றைக் கொளுத்தி ஒளிரவிட்டபின் வெளிக்கதவை ஒடிப்போய் திறக்கச் சென்றாள். கதவு திறப்பின் மூலம் பூட்டப்பட்டிருந்ததோடு, உள்பக்கமாக பார் - குறுக்குத் தடியும் மேலதிக பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்தது. குளிர் காலமாக இருந்தமையால் கதவைமூடிப் போடப்பட்டிருந்த குறுக்குத் தடி கழற்றுவதற்கு சற்றுக் கடினமாக இருந்தது. இறுதியில், தூக்கம் கலைந்துவந்த ஆதி குறுக்குத்தடியை தனது முழுப்பலத்தையும் பாவித்து அகற்றிவிட்டான். வெளியே தூயாவும், தம்பி தூயவனும் ஒரு நீளமான பெரிய கறுப்புக் குடை ஒன்றின்கீழ் பதற்றத்துடன் காணப்பட்டனர். தூயாவுக்கும் ரசிகையிற்கும் ஓரே வயது. இதேபோல் தூயவனுக்கும் விதுவிற்கும் ஒரே வயது. எல்லோரும் ஒரே பாடசாலையில் படித்தனர். "என்ன இந்த நேரத்தில? என்னவும் பிரச்சினையே?" முகி ஆச்சரியத்துடன் கேட்க, பின்னேரம் தனியார் ரியூசன் வகுப்பிற்கு பாடம் சொல்லிக்கொடுக்கப் போன தந்தையார் ஈழப்பிரியன் இன்னும் வீடுதிரும்பவில்லை என தூயா கவலையுடன் சொன்னாள். ஈழப்பிரியன் ஊரில் தனது பிள்ளைகள் படிக்கும் அதே பாடசாலையிலேயே முழுநேர பெளதிகவியல் ஆசிரியராக இருந்தாலும், மேலதிக வருமானம் கிடைத்ததால் யாழ்ப்பாண நகரத்தில் இருந்த ஒரு பிரபலமான தனியார் கல்வி நிறுவனத்திலும் பெளதிகவியல் வகுப்புக்கள் கொடுத்து வந்தார். ஈழப்பிரியன் மிகத்திறமையாக பெளதிகவியல் கற்பித்தமையால் அவரிடம் கல்விகற்ற ஏராளமான மாணவர்கள் வடமாராட்சி மற்றும் தென்மாராட்சி பிரதேசங்களிலிருந்தும் வந்தனர். ஈழப்பிரியன் கல்வி கற்பிக்கும் பாடசாலைக்கும் பல மாணவர்கள் திரண்டனர். முகி மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கு ஈழப்பிரியனே முக்கிய காரணமாக இருந்தார். அவரே முகி கல்விப் பொதுத்தராதரம் சாதாரண பரீட்சை எடுத்த கையோடு இப்படி, இப்படிப் படிக்கலாம் என அவளுக்கு ஆலோசனைகள் பல கூறி முகி மிகச்சிறந்த சித்திகளை உயர்தரப் பரீட்சையில் பெறுவதற்கு காரணமாக இருந்தார். முகி இவரிடமே பெளதிகவியல் படித்திருந்தாள். இதனால் ஈழப்பிரியன் குடும்பத்திற்கு சின்னப்பு வீட்டில் ஒரு தனி மரியாதை இருந்தது.

தூயாவையும், தூயவனையும் உள்ளே வருமாறு தேவகி அழைத்தாள். சின்னப்புவும் நித்திரையால் எழும்பிவந்துவிட்டார். ஈழப்பிரியனை இரவு பன்னிரண்டு மணியாகியும் காணவில்லை என அறிந்த அனைவரும் மிகவும் கவலைப்பட்டனர். அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தனர். சின்னப்பு ஈழப்பிரியன் யாழ்நகரத்தில் எங்காவது ஒரு உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்கி இருக்கக்கூடும் என ஊகம் தெரிவித்தார். தேவகியோ இந்த அசாதாரண வேளையில் யாழ்நகரிற்கு ரியூசனுக்கு சென்றதற்காக ஈழப்பிரியனை ஏசினாள். தந்தையைக் காணாமையால் தூயாவின் இரு கண்களும் கலங்கி இருந்தன. தூயவன் எல்லோரையும் பார்த்து முளுசிக்கொண்டு இருந்தான். உயிர் நண்பன் விதுவுடனும் அவன் ஒன்றும் கதைக்கவில்லை. சற்று நேரத்தில் தூயாவின் தாயார் கறுப்பியும் இன்னொரு குடையைப் பிடித்தபடி சின்னப்பு வீட்டிற்கு வந்துவிட்டார். கறுப்பியும், தேவகியும் சிறுவயதிலிருந்தே தோழிகள். சின்னப்புவைப்போல் ஈழப்பிரியனும் கறுப்பியைக் காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனால் சின்னப்புவிற்கு ஈழப்பிரியனை விட இரண்டு வயதுகள் அதிகம். கறுப்பியும் பிள்ளைகள் படிக்கும் அதே பாடசாலையில் முழுநேர சங்கீத ஆசிரியையாக இருந்தாள். தமது குல தெய்வத்தின் நினைவாகவே கறுப்பியின் பெற்றோர் உண்மையில் வெள்ளையாக இருந்த அவளுக்கு கறுப்பி என பெயர் வைத்தனர். இதனால் அவளது பெயரை முதல்தடவையாக கூப்பிடும்போது பலர் குழப்பமடைந்தனர். ஏனெனில், பெயருக்கும் ஆளுக்கும் எதுவித சம்மந்தமும் இருக்கவில்லை.

காற்று, மழை என்பன நன்றாகத் தணிந்துவிட்டது. எல்லோருமாகச் சேர்ந்து வீட்டினுள் இருந்து கதைத்துக்கொண்டிருந்தபோது தூயாவின் வீட்டில் கட்டப்பட்டிருந்த பசுமாடு "மா.. மா.." என உரத்துக் கத்தியது. உடனடியாகவே அனைவரினதும் முகத்திலும் சிறிது மாற்றம் தெரியத் தொடங்கியது. ஈழப்பிரியன் தனது வீட்டுப் பசுமாட்டை மிகவும் அன்புடன் பராமரித்து வந்தார். பசுவும் அவரில் மிகவும் அன்பாக இருந்தது. இந்த வாயில்லா ஜீவனுக்கு ஈழப்பிரியன் மோட்டார் சைக்கிளில் வருவதை ஏதோ ஒரு சக்தியைப் பாவித்து தூரத்தில் வரும்போதே இனங்காணும் அற்புத ஆற்றல் இருந்தது. பசு கத்த, சிறிது நேரத்திலேயே ஈழப்பிரியனின் மோட்டார்சைக்கிளின் ஓசை அனைவருக்கும் கேட்டது. விது படலைக்கு ஓடிச்சென்று ஈழப்பிரியன் வருவதை உறுதி செய்துகொண்டான். விதுவின் பின்னால் தூயவனும் ஓடினான். கறுப்பி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். பிள்ளைகள் தந்தையார் வருவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். "சரி அப்ப நாங்கள் போட்டு வாறம்!" கறுப்பி சொல்ல "வழுக்கும், கவனமாகப் பாத்துப் போங்கோ!" தேவகி சொன்னாள். தூயாவும், தூயவனும் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றனர். "இங்க பாருங்கோ அம்மா எத்தனை தேங்காய்கள் விழுந்து இருக்கிது என்டு.." காற்றின் காரணமாக விழுந்த பல செத்தல் தேங்காய்களைப் பார்த்து விது தாயிடம் இவ்வாறு சொன்னான்.

Posted

தாயும் பிள்ளைகளும் அவசர அவசரமாக ஈழப்பிரியனைக் காண வீட்டிற்கு விரைதோடிச் சென்றார்கள். இப்படி நடப்பது முதல் தடவை அல்ல, முன்பும் பல தடவைகள் ஈழப்பிரியன் வீட்டுக்கு நடுஇராத்திரி நேரத்தில் மிகத்தாமதமாகத் திரும்பியுள்ளார். ஒரு தடவை மோட்டார் சைக்கிள் நடுவழியில் பழுதடைந்து விட்டதால் அவர் அதை உருட்டிக்கொண்டு வீட்டைவந்தடைய இரண்டு மணித்தியாலங்கள் நடக்கவேண்டி இருந்தது. மற்றவர்களிடம் உதவிகேட்டு கடமைப்படுவது ஈழப்பிரியனுக்கு பிடிக்காது. இதனால் இயலுமானவரை ஆபத்தான வேளைகளிலும்கூட முன்பின் அறியாதவர்களிடன் உதவிகேட்பதை அவர் தவிர்த்து வந்தார். "அத்தான் ஏன் இவ்வளவு நேரம்?" வாசலில் நின்று வரவேற்ற கறுப்பியின் தம்பி யமுனா கேட்க அவனிற்கு பதில்கூறாது அவனை அசட்டை செய்தபடி ஈழப்பிரியன் வீட்டினுள் சென்றார். கறுப்பியின் பெற்றோர் பக்கத்து ஊரில் இருந்தார்கள். யமுனா அக்காவின் வீட்டில்தங்கி படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கும் தூயாவிற்கும் ஒரே வயது. ஆனாலும், தூயா அவனை 'மாமா' என்றே கூப்பிட்டாள். கறுப்பியின் பெற்றோர் மிக இளம்வயதிலேயே திருமணம் செய்ததே இவ்வாறான ஒரு நிலை ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது. தன்னுடன் ஒரே வகுப்பில் படித்த யமுனாவை தூயா 'மாமா' எனக் கூப்பிடுவது ஆரம்பத்தில் பலருக்கு குழப்பத்தையும் பின்னர் சிரிப்பையும் ஏற்படுத்தியது. எனினும், பாடசாலையில் பெரும்பாலானோருக்கு இந்தவிடயம் தெரிந்திருந்தது. தாயும், தந்தையும் ஒரே பாடசாலையில் கற்பித்தமையால் தூயாவையும், தூயவனையும் பாடசாலையில் அனைவரும் அறிந்திருந்தனர். இதன்மூலம் இவர்கள் பாடசாலையில் பல சலுகைகளையும் பெறக்கூடியதாக இருந்தது. மற்றைய மாணவர்களிற்கு விதிக்கப்பட்ட பலவிதிகளில் சில இவர்களிற்கு உத்தியோகப்பற்றற்ற வகையில் தளர்த்தப்பட்டிருந்தது. எனினும், ஈழப்பிரியன் தனது பிள்ளைகள் என்று பார்க்காது அவர்களுடன் மிகக்கடுமையாக இருக்கும்படி சக ஆசிரியர்களிடம் கூறிருந்தார். இதனால் ஈழப்பிரியனுக்கும், கறுப்பிக்குமிடையே வீட்டில் அடிக்கடி சண்டை வந்தது.

தான் கேட்ட கேள்விக்கு ஈழப்பிரியன் பதில் சொல்லாதது யமுனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நேற்றுமுன்தினம் தூயவனுடன் கிரிக்கட் விளையாடும்போது யன்னல் கண்ணாடி ஒன்றை யமுனா உடைத்திருந்தான். ஈழப்பிரியன் பலதடவைகள் இங்கு விளையாடாதே யன்னல் உடைந்துவிடும் என யமுனாவுக்கு எச்சரித்து இருந்தார். ஆனால், நேற்று உண்மையிலேயே புதிய யன்னல் கண்ணாடி பந்தடிபட்டு உடைந்துவிட்டது. இதனாலேயே யமுனா மீது ஈழப்பிரியனுக்கு கோபம் வந்திருந்தது. பதினாறு வயதுவரை அக்கா, அத்தான் இருவரிடமும் யமுனா தாராளமாக அடிவாங்கி இருந்தான். ஆனால் இப்போது அவனுக்கு பதினேழு வயதாகிவிட்டதால் அடிவிழுவதில்லை. தூயா அப்பாவின் செல்லப்பிள்ளை, அவள் அம்மாவிடம் இருந்து மட்டும் அடிக்கடி அடிவாங்கிக் கொண்டாள். தூயவன் அம்மாவின் செல்லப்பிள்ளை, அவன் அப்பாவிடம் இருந்து மட்டும் அடிக்கடி அடிவாங்கிக்கொண்டான். யமுனாவும் சில வேளைகளில் தூயவனுக்கு அடித்துவிடுவான். தூயாவிற்கு தம்பிக்கு அடிக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவள் தம்பியை வேறுசில தேவைகளிற்கு பயன்படுத்தியதால் அவன் அட்டகாசங்கள் செய்தாலும் கண்டிக்காது அமைதியாக இருந்தாள். இதைவிட அக்கா தனக்கு அடித்தால் அவளது இரகசியங்களை அப்பா, அம்மாவிடம் சொல்வேன் எனச் சொல்லி தூயவன் தூயாவை வெருட்டி வைத்திருந்தான். யமுனாவுக்கு தூயாவின் எல்லா அந்தரங்க விடயங்களும் தெரிந்திருந்தாலும் அதை அவன் மற்றவர்களிற்கு சொல்லமாட்டான். இதனால் தூயாவிற்கு யமுனாவை மிகவும் பிடிக்கும். தனது பிரச்சனைகளையும் தூயா யமுனாவிடம் பயமின்றி மனந்திறந்து பேசி வந்தாள். சிறிதுகாலமாக தூயாவின் மனதை பிரிவுத்துயர் ஒன்று அரித்துவந்தது. யமுனாவே அவளிற்கு ஒரு தூணாக நின்று ஆறுதல் சொல்லி வந்தான்.

தூயாவின் நீண்டகால நண்பி அனிதா, அவளது அண்ணா சாணக்கியன். சாணைக்கியன் பெயருக்கேற்றபடி நல்ல அறிவாளி. அவன் உயர்தரம் கணிதப்பிரிவில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்திகள் பெற்று அண்மையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயில்வதற்கு தெரிவாகி இருந்தான். அனிதா வீட்டிற்கு அடிக்கடி தூயா போய்வருவாள். அப்போது சாணக்கியனும் வஞ்சகமில்லாமல் அவளுடன் பழகி வந்தான். இப்படியே வருடங்கள் பல கழிந்தது. ஆனால், அண்மையிலேயே எதிர்பாராத ஒரு பிரச்சனை வந்தது. தூயா சாணக்கியனுடன் நன்றாக சிரித்துக் கதைப்பதைக் கண்ணுற்ற சாணக்கியனின் நண்பர்கள் சாணக்கியனும், தூயாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக பள்ளியில் ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டார்கள். இது ஈழப்பிரியன், கறுப்பி காதுக்கும் எட்டிவிட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் தூயாவைக் கூப்பிட்டு அவளுக்கு நீண்ட அறிவுரை கூறினார்கள். காதலிப்பது தவறில்லை என்றும் ஆனால் உயர்தரம் பரீட்சை முடியும்வரை மனதை ஒருமுகப்படுத்தி படிக்கும்படியும் கூறினார்கள். இதைவிட, அனிதா வீட்டிற்கு தூயா இனிமேல் போகக்கூடாது என்றும் கட்டளையிட்டு விட்டார்கள். இந்தப் பிரச்சனைகள் நடந்து சுமார் ஒரு மாதம் ஆகியிருந்தது. இதேவேளை, சாணக்கியன் சென்ற கிழமை கல்வி கற்பதற்காக கொழும்பு சென்றுவிட்டான்.

Posted

அனிதாவின் அப்பா நோர்வேயில் வசித்துவந்தார். இதனால் அவரை ஊரில் எல்லோரும் நோர்வேஜியன் என்றே அறிந்திருந்தார்கள். அம்மா தமிழ்தங்கை தனது மூன்று பிள்ளைகளான சாணக்கியன், அனிதா, சுட்டியை கணவன் நோர்வேஜியன் அனுப்பும் காசையும், ஊரில் உள்ள சீதனக் காணிகளில் இருந்து கிடைக்கும் வரும்படிகளையும் பாவித்து நல்ல முறையில் வளர்த்து வந்தாள். சாணக்கியனுக்கு வயது இருபது, அனிதாவிற்கு வயது பதினேழு, சுட்டிக்கு விதுவின் வயது. இவர்கள் மூவரும் ஊரில் இருக்கும் பாடசாலையில் படிக்காது யாழ்நகரத்தில் இருக்கும் பிரபல ஆண்கள், பெண்கள் பாடசாலைகளில் படித்துவந்தார்கள். நோர்வேஜியனுக்கு உள்ளூர் பாடசாலையின் கல்வித்தரத்தில் நம்பிக்கை இல்லை. இதைவிட பிள்ளைகள் நன்றாக ஆங்கிலத்தை கற்றவேண்டும் எனவும் எதிர்பார்த்தார். இதனால் ஒவ்வொருவராக ஐந்தாம் தரம் உள்ளூரில் படித்து முடிந்ததும் யாழ்நகரில் உள்ள பிரபல பாடசாலைகளிற்கு மாற்றிவிட்டார். நோர்வேஜியன் விரைவில் குடும்பத்தை நோர்வேயிற்கு எடுக்கும் முயற்சியில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனால், சாணக்கியன் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் போய் கல்வியைத் தொடர்வது கூட தற்போது கேள்விக்குறியாகவே இருந்தது. நோர்வேயிற்கு புலம்பெயர்ந்து போவதற்கு அனிதாவைத் தவிர வீட்டில் எல்லோரும் மிக ஆவலாக இருந்தார்கள். அனிதாவிற்கு தான் தனது தோழிகளைவிட்டுப் பிரிந்துவிடுவேன் என்ற கவலையில் நோர்வேயிற்கு போவது பற்றி அக்கறை காட்டாது வந்தாள்.

சாணக்கியன் தூயாவிற்கு தாம் நோர்வே போனதும் அவளையும் அங்கு கூப்பிடுவதாகவும், இல்லையென்றால் தனக்கு வாழ்க்கை உப்புச்சப்பற்றுப் போய்விடும் எனவும் முன்பு சும்மா பகிடிக்கு கூறிவந்தான். ஆனால், பல எதிர்பாராத பிரச்சனைகள் நடந்துவிட்டதால் இப்போது எல்லோரும் குழம்பிப்போய் இருந்தனர். கொழும்பிற்கு படிப்பதற்கு சாணக்கியனை ஊரே திரண்டு வழியனுப்பிவைத்த போதும், தூயாவிற்கு அவன் போய் வருகின்றேன் என ஒரு வார்த்தை கூற முடியவில்லை. தூயாவாலும் அவனை வாழ்த்தி வழியனுப்பி வைக்க முடியவில்லை. குறிப்பாக, அனிதா இதனால் மிகவும் கவலைப்பட்டாள். தூயாவிற்கும், தனக்கும் உள்ள நட்புக்கு களங்கம் வந்துவிட்டதை எண்ணி அவள் கவலை கொண்டாள். இதைவிட சாணக்கியனும், தூயாவும் பிரிந்துவிட்டமையும் அவளுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்தது. அனிதா வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் தூயாவுடன் சாணக்கியன் நெருக்கமாகப் பழகுவது அவளுக்கு மிகப்பிடித்திருந்தது. தூயாவே தனது அண்ணாவிற்கு வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் எனவும் அவள் உள்ளூர விரும்பி ஏங்கியிருந்தாள். இதன்மூலம் தான் நோர்வே போகும்போது தன்னுடன் ஆகக்குறைந்தது ஒரு தோழியாவது மிஞ்சுவாள் என அனிதா எதிர்பார்த்ததே இதற்கான காரணம். இதைவிட தூயா படிப்பில், விளையாட்டில், கலைகளில் மிகவும் கெட்டிக்காரி. எனவே, இவளைப் போன்ற ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையை சாணக்கியன் பெறமுடியாது என்பதையும் அனிதா தன்மனதினுள் கணக்குப்போட்டு வைத்திருந்தாள்.

சாணக்கியன் ஏற்கனவே பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்துவிட்டதால் அனிதாவும், சுட்டியும் தற்போது சில சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது. அனிதாவும் தூயாவைப் போல் கெட்டிக்காரி, அழகும் மிகுந்தவள். இதனால் ஊரில் உள்ள பல பாடசாலை மாணவர்கள் இவளில் ஒரு கண் வைத்து இருந்தனர். பேருந்திலேயே அனிதா, தம்பி சுட்டியுடன் தினமும் யாழ் நகரில் இருக்கும் பாடசாலைக்கு போய் வந்தாள். இதனால் இதே பேருந்தில் வரும் வேறு பல கல்லூரி மாணவர்களும் அனிதாவின் பின்னால் அலையத் தொடங்கினார்கள். சாணக்கியன் இப்போது இவளுடன் துணைக்கு கூடவராதது பலருக்கு புதுத்தென்பை அளித்தது. சற்று உணர்ச்சி மிகுந்த குறும்புக்கார மாணவர்கள் பேருந்தில் அனிதாவிற்கு பல குரங்குச் சேட்டைகளும் செய்யத்தொடங்கிவிட்டனர். சிலர் காதல் கடிதங்களை கொடுத்தனர். சிலர் பேருந்தினுள் அனிதாவுடன் முட்டி மோதினர். சிலர் அவள் அருகில் நிற்கும்போது தமது இருக்கையைவிட்டு எழுந்து அவளுக்கு இருப்பதற்கு இடம் கொடுத்தனர். சிலர் அவளது தம்பி சுட்டியை சினேகிதம் பிடித்து அனிதாவுடன் அன்னியோன்யமாக முயற்சித்தனர். இவ்வாறு ஆளாளுக்கு தமக்கு தெரிந்த வழிகளில் அனிதாவை அடைவதற்கு முயற்சித்தனர். அனிதாவின் பாடசாலைப் பேருந்து நடத்துனர் தமிழ்தங்கையின் தூரத்து உறவினன். சிறிது நாட்களிலேயே அவன் பேருந்தினுள் அனிதாவிற்கு மாணவர்களினால் கொடுக்கப்படும் தொல்லைகளை அறிந்து அவற்றை அனிதாவின் தாயிடம் வந்து கூறிவிட்டான். இதைக்கேட்ட தமிழ்தங்கை சீற்றம் அடைந்தாள். உடனடியாகவே நோர்வேஜியனுடன் தொலைபேசியில் இதைப்பற்றிக் கதைத்தாள். அனிதாவிற்கும் இன்னொரு புதிய தலைவலி வந்துவிட்டதால் சோர்ந்துபோய் விட்டாள். பேசாமல் பாடசாலைக்கு முழுக்கு போட்டுவிட்டு அப்பா நோர்வேஜியனிடம் நோர்வேயிற்கு விரைவில் போய்ச்சேர்ந்தால் நல்லது போல் அவளுக்கு இருந்தது. அண்ணா சாணக்கியனையும் விரைவில் கொழும்பு சென்று காணவேண்டும் போல அவளுக்கு இருந்தது. ஒருகாலமும் அனிதா தனது அண்ணா சாணக்கியனை பிரிந்து இருந்ததில்லை. அவளை பிரிவுத்துயர் வாட்டி எடுத்தது. நீண்டநேரம் யோசித்துபார்த்தபின் அனிதா கொழும்புக்கு போகவேண்டும் என்ற தனது விருப்பத்தை தாயிடம் சொன்னாள்.

Posted

இவ்வாறு அனிதா குடும்பத்தில் பிரச்சனைகள் பல தோன்றி, அவர்கள் இழுபறிப்பட்டுக் கொண்டு இருந்தபோது, சிலவாரங்கள் கழிந்தபின் கொழும்பிலிருந்து சாணக்கியன் வீட்டிற்கு எழுதிய முதலாவது கடிதம் வந்துசேர்ந்தது. தமிழ்த்தங்கை கடிதத்தை வாசித்துவிட்டு அதிர்ச்சியடைந்து, உள்ளத்தால் அழுதபின் அதை அனிதாவிற்கு காட்டாமல் சுவாமி அறையில் இருந்த பிள்ளையார் படத்திற்குபின்னால் ஒளித்துவைத்துவிட்டாள். இரவு புட்டுடன் குழைத்து சாப்பிடுவதற்கு சுவாமிக்கு நைவேத்தியமாக வைக்கப்பட்டிருந்த வாழைப்பழத்தை எடுக்கப்போன சுட்டி, படத்திற்கு பின்னால் சிறிதளவில் வெளியாக தள்ளிக்கொண்டு இருந்த கடதாசி ஒன்றை தற்செயலாகக் கண்டு, அதைப்பிரித்து பார்த்தபின், விசயம் விளங்காததால் அனிதாவிடம் கொடுத்துவிட்டான். கடிதத்தை பார்த்த அனிதாவிற்கு தாய் தனக்கு காட்டாமல் கடிதத்தை ஒளித்துவைத்து விடயம் தெரிந்தமையால் கடுமையான கோபம் வந்தது. தாயின்மீது சீறி விழுந்தாள். இதேவேளை அண்ணா சாணக்கியனுக்காக கண்ணீர் வடித்தாள். கடிதம் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

சாணக்கியன்,

வெள்ளவத்தை,

ஜனவரி 20, 1990

அன்புள்ள அம்மா, அனி, சுட்டி,

நான் நலம், நீங்களும் நலமாக இருக்க ஆண்டவனை வேண்டுகின்றேன். நீங்கள் போட்ட நான்கு கடிதங்களும், பார்சலும் கிடைத்தது. நன்றி!

குமாரசாமி பெரியப்பா நேற்று எனது ரூமுக்கு வந்து பார்த்துவிட்டுப் போனார். தனது வீட்டில் நான் தங்கியிருந்து படிப்பதற்கு வசதியில்லை என்று சொல்லிவிட்டார். நான் என்னுடன் யாழ்ப்பாணத்தில் படித்த ஒரு சினேகிதப் பெடியனுடன் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து இருக்கின்றேன். மாதம் மூவாயிரம் ரூபா ரெண்ட் காசு, இதைவிட எனது மற்றைய செலவுகளிற்கு இன்னும் ஒரு மூவாயிரம் ரூபா வேண்டும். அப்பா அனுப்பிய காசு போனகிழமை கிடைத்திருந்தது. நேற்றும் இங்கு எனக்கு டெலிபோன் எடுத்திருந்தார். பொலிஸ் பிரச்சனைகள் வரும் தனியாக இருக்கவேண்டாம், சொந்தக்காரருடன் போய் இருக்குமாறு சொன்னார். நோர்வேயிற்கு நாங்கள் போவதற்கு இன்னும் ஏழு, எட்டு மாதங்கள் பிடிக்கும் என்றும் சொன்னார்.

அனியிற்கு நடந்த பிரச்சனைகளை கடிதத்தில் வாசித்தேன். அப்பாவும் இதைப்பற்றி கதைத்திருந்தார். கேட்க சரியான விசராவும், கோபமாவும் இருக்கு. பள்ளிக்கூட பஸ்ஸில் வந்த எனக்கு தெரிந்த சினேகிதப் பெடியன்களுக்கு இதைப்பற்றி அறிவித்து தங்கச்சியுடன் சொரிபவங்களிகு ரெண்டு சாத்து, சாத்துமாறு சொல்லியிருக்கின்றேன். அனியிற்கு விருப்பமில்லையென்றால் அவளை ஸ்கூலுக்கு போகுமாறு கரைச்சல்படுத்த வேண்டாம். நீங்கள் எல்லாரும் இஞ்ச கொழும்புக்கு வாங்கோ. அப்பாவும் அப்படித்தான் சொல்லச் சொன்னார்.

எனக்கு சீனியர் பெடியங்களால சரியான கரைச்சலா இருக்கு. என்னப்போட்டு சரியாக் கஸ்டப்படுத்துறாங்கள். எனக்கு தெரிஞ்ச இன்னொரு பெடியன் மூலம் வீட்டு அட்ரச கண்டுபிடித்து வீட்டுக்கும் வந்திட்டாங்கள். ஒவ்வொரு நாளும் ஒரே சித்திரவதையா இருக்கு. காலம்பற எட்டு மணிக்கே தங்கட இடத்துக்கு வரவேண்டும் என்று சொல்லிப் போடுவாங்கள். பிறகு இரவு பத்துமணி மட்டும் என்னப் போட்டு பந்தாடுவாங்கள். ரெண்டு, மூன்று நாளா ராக்கிங் கூடீட்டு. இப்ப அவங்கட ரூமுக்கு போனா தங்களுக்கு முன்னால உடுப்பக் கழட்டிப் போட்டு உறிஞ்சு போட்டு நிற்கவைக்கிறாங்கள். எனக்கு மொட்டை அடித்துப் போட்டாங்கள். றோட்டில ஆட்களுக்கு முன்னாலயும் என்னை கொண்டுபோய் வச்சு அவமானப்படுத்துறாங்கள். நான் எனது காசில அவங்களுக்கு பின்னேரத்தில ஹொட்டேல்ல சாப்பாடு வாங்கிக் கொடுக்கவேணும். அப்பா வெளிநாடு என்று தெரிஞ்சாப்பிறகு இன்னும் கரைச்சல் தாராங்கள். அவங்களோட சண்டைபிடிக்கவும் முடியவில்லை. தாங்கள் சொல்லுறமாதிரி செய்யாவிட்டால் யூனிவர்சிட்டிக்கு படிக்கவர விடமாட்டாங்களாம். கொலைதான் நடக்குமாம் எண்டு சொல்லி வெருட்டுறாங்கள். இதால எனக்கு பயமாய் இருக்கு. மற்ற சினேகிதப் பெடியன்கள் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும் இன்னும் ஒரு ஆறுமாதத்தால் எல்லாம் முடிஞ்சுவிடும், அதுமட்டும் சீனியர் பெடியன்களோட சண்டை பிடிக்காது பொறுமையாய் இருக்கும்படி சொன்னாங்கள். ஒரே வேதனையா இருக்கு. இந்தக்கதையை வெளியில் ஒருவருக்கும் சொல்லவேண்டாம்.

உங்களை விட்டுப்பிரிஞ்சு என்னால் இருக்க முடியவில்லை. நித்திரைகொள்ள கண்ணை மூடினால் ஒரே வீட்டு நினைவாய் இருக்கு. வீட்ட நினைக்க, நினைக்க அழுகையா வருது. படிப்ப விட்டிட்டு உங்கு திரும்பி வரவேணும் போல இருக்கு. மேலும், தூயா சுகமா இருக்கிறாவா? வீட்ட இப்ப வாரவவா? அனி தூயா வீட்டுக்கு போறவவா? தூயாவை கேட்டதாய் சொல்லுங்கோ. சுட்டி சுகமாய் இருக்கிறானா? அம்மா உடம்பைக் கவனமா பார்த்துக்கொள்ளுங்கோ. ஏதாவது உதவி தேவையென்றால் வேலை செய்யுறதுக்கு காசுக்கு ஆட்களை ஒழுங்குபடுத்துங்கோ. அனி ஏதாவது பிரச்சனை என்றால் எனக்கு டெலிபோன் எடு.

இஞ்ச திருப்பி பொலிஸ் பிரச்சனைகளும் தொடங்கீட்டிது. வேறு என்ன? இத்துடன் முடிக்கின்றேன், உங்கள் பதில் கண்டு தொடரும்...

அன்புடன்,

சாணக்கியன்

Posted

சாணக்கியனின் கடிதம் கிடைத்த மறுநாளே தமிழ்தங்கையும், அனிதாவும், சுட்டியும் எழுதிய பதில் கடிதத்தை வியாபார அலுவல் சம்மந்தமாக கொழும்புக்கு போகும் தமிழ்தங்கையின் தம்பி லிசானிடம் கொடுத்துவிட்டனர். லிசானுக்கு இப்போது இருபத்தாறு வயது. யாழ்நகரில் புத்தகநிலையம் ஒன்றை சுயமாக நடத்திவந்தான். இதனால் அடிக்கடி கொழும்புக்கும், இந்தியாவுக்கும் பிரயாணம் செய்தான். லிசான் கலைகள் மீது பேரார்வம் உடையவன். ஊரில் நாடகக் கோஸ்டி ஒன்றையும் நடத்திவந்தான். லிசான் என்ற இந்த புனைபெயர் நாடகம் ஒன்று நடிக்கும்போது ஏற்று நடித்த பாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்ததன் காரணமாக வந்தது. லிசான் பாட்டு, கவிதை, நடனம், நாடகம், இன்னும் தமிழ் இலக்கியம் கதை, கட்டுரை என பல துறைகளில் கால்பதித்து சகலகலா வல்லவனாக திகழ்ந்தான். இதனால் இவனிற்கு ஏராளமான பெண்ரசிகர்கள் இருந்தனர். இதில் குறிப்பிட்டு சொல்லத்தக்கவள் முகியுடன் யாழ் மருத்துவபீடத்தில் படிக்கும் மாணவி பிரியசகி. சில காலமாக லிசானும், பிரியசகியும் மிகவும் அன்னியோன்யமாகப் பழகத் தொடங்கியிருந்தனர்.

பிரியசகி நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவள். அம்மா இனியவள், அப்பா வன்னிமைந்தன் மற்றும் மூன்று தம்பிகள் ஈழவன், சஜீவன், வானவில். அம்மா இனியவளின் பிறந்த இடம் கொழும்பு, புகுந்த இடம் வன்னி, இப்போது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாள். அப்பா வன்னிமைந்தன் ஒரு கவிஞர். தொழில் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு குடிபெயர்ந்து இருந்தார். வன்னிமைந்தன் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் சிரேஷ்ட பொறியியலாளராக இருந்தார். தம்பிகள் ஈழவனும், சஜீவனும் விடுதலைப்புலி போராளிகளாக இருந்தனர். ஈழவனுக்கு வயது இருபத்தியிரண்டு, சஜீவனுக்கு வயது இருபது. ஈழவன் இயக்கத்தில் சேர்ந்து சுமார் ஒரு வருடத்தின்பின் சஜீவனும் சேர்ந்துவிட்டான். தம்பி வானவில்லுக்கு பதினாறு வயது. போனமாதம் ஓ.எல் பரீட்சை எடுத்திருந்தான். தனக்கு எல்லாப் பாடத்திலும் அதிவிசேட சித்திகள் கிடைக்கவேண்டும் எனவும், இதன் பின்னர் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் படித்து அக்கா பிரியசகிபோல் மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்படவேண்டும் எனவும் எதிர்பார்ப்புக்களில் இருந்தான்.

ஈழவன் ஓ.எல் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதியுயர் சித்திபெற்றிருந்தான். அவனது உயர்தரம் படிப்பு இந்திய இராணுவ கெடுபிடிகள் காரணமாக குழம்பிவிட்டது. ஈழவனின் நண்பர்கள் சிலர் இந்திய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப் பட்டிருந்தனர். இதைவிட கூலிக்குழுக்களாலும் ஈழவனின் வாழ்க்கை நரகமாக்கப்பட்டிருந்தது. இதனால் வந்த வெறுப்பே ஈழவன் போராட்டத்தில் இணைவதற்கு காரணமாக அமைந்தது. ஈழவன் இயக்கத்தில் இருப்பதை அறிந்த இந்திய இராணுவமும், கூலிக்குழுக்களும் தினமும் வன்னிமைந்தன் வீட்டிற்கு வந்து துன்பம் கொடுத்துவந்தனர். விசாரணை என்ற பெயரில் சஜீவனை தமது முகாமிற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்தனர். இதன் காரணமாக சஜீவனும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்துவிட்டான். ஈழவன் புலனாய்வுப் பிரிவிலும், சஜீவன் அதிரடி தாக்குதல் அணியிலும் பணியாற்றி வந்தனர். சஜீவன் விளையாட்டுக்களில் மிகுந்த திறமையுடையவன். படிக்கும் காலத்தில் பாடசாலையில் உதைபந்து அணியின் தலைவனாக இருந்தான். 13, 15, 17 வயதிற்கு கீழ்ப்பட்டோருக்கான தடகள விளையாட்டுப் போட்டியில் பாடசாலையில் சம்பியனாக வந்திருந்தான். மாவட்ட மட்டத்திலும் பல சாதனைகள் செய்திருந்தான். இவனது இந்த ஆற்றல்கள் இப்போது விடுதலைப் போராட்டத்திற்கு உரமாகப் பயன்பட்டுக் கொண்டிருந்தது.

Posted

வழமைபோல் விது, தூயவன், யமுனா, சுட்டி, வானவில், மற்றைய நண்பர்களான அருவி, நிதர்சனுடன் கிரிக்கட்டு விளையாடுவதற்காக சனிக்கிழமை பின்னேரம் மூன்று மணியளவில் பாடசாலை மைதானத்திற்கு வந்திருந்தார்கள். அருவி, நிதர்சன், சுட்டி யாழ் நகர பாடசாலைகளில் படித்தாலும், தூயவனின் பெற்றோர் படிப்பிக்கும் பாடசாலையில் படித்த தூயவனுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக அவர்கள் இங்கு விளையாடுவதற்கு அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். நண்பர்களிடையே சம்பாசனை தொடங்கியது.

விது: "மச்சான் சரியான வெய்யிலா இருக்கு, கொஞ்ச நேரம் இப்பிடியே இந்த மரநிழலுக்க நிண்டுபோட்டு வெய்யில் குறைஞ்சாப்பிறகு விளையாடுவமே?"

தூயவன்: "ஓம், எனக்கும் கொஞ்சம் களைப்பா இருக்கு, அதுசரி சுட்டி ஏன் நீ போன சனிக்கிழமை விளையாட வரேல?"

வானவில்: "டேய்... வாயுக்க கொழுக்கட்டையே? அவன் ஏதோ கேட்கிறான், பதில் சொல்லாம முகத்த தொங்கப்போட்டுக் கொண்டு இருக்கிறாய்?"

அருவி: "சுட்டிக்கு ஏதோ பிரச்சனையாக்கும். அவனை ஏன்டா பேசுறாய்?"

சுட்டி: "வீட்டி.. " ஏதோ சொல்ல வெளிக்கிட்டவன் திடீரென வாயை மூடிவிட்டான்.

யமுனா: "சரி, உனக்கு விருப்பமில்லையெண்டா எங்களுக்கு சொல்ல வேண்டாம். இப்ப நீங்கள் விளையாடுறீங்களா இல்லாட்டி நான் வீட்ட திரும்பிப் போகவா? எனக்கு படிக்க நிறைய இருக்கு.."

நிதர்சன்: "தூயவன், விளையாடுறதுக்கு நீ மட்டும் வரவேண்டியதுதானே? ஏன் உன்ட வயசுபோன மாமாவையும் கூட்டிக்கொண்டு வாரா....? "

சொல்லி முடிக்குமுன் தூரத்தில் எதையோ கண்டு பதற்றமடைந்தான்.

வானவில்: "டேய் ஆமி வாராண்டா! இப்ப என்ன செய்யிறது?"

சுட்டி: "கடகட வெண்டு விக்கற்ற நட்டுப் போட்டு உடன விளையாடத் தொடங்குவம். சும்மா இப்பிடி இருந்தால்தான் ஏதாவது கேட்பாங்கள்..."

உடனடியாகவே நண்பர்கள் மைதானத்தில் இறங்கி விளையாடத் தொடங்கினர். யார் பந்துவீசுவது, யார் துடுப்பாடுவது என வழமைபோல் திட்டமிடாமல் அவரவர் கையிற்கு கிடைத்ததை வைத்துக்கொண்டு விரைவாக மைதானத்தில் ஒவ்வொரு நிலைகளை எடுத்துக் கொண்டனர். வானவில் துடுப்பாட்ட மட்டையுடன் நின்றான். விது பந்துவீசுவதற்கு தயாரானான். யமுனா விக்கெற் காப்பாளனாக நின்றான். மற்றையவர்கள் பந்து தடுப்பாளர்களாக நின்றார்கள். முதலாவது பந்தை வீச வீது ஆயத்தமாக முன்னரே இந்திய இராணுவத்தினர் மைதானத்தினுள் புகுந்துவிட்டனர். நண்பர்கள் பயத்தினால் நெஞ்சு படபடக்க என்ன நடக்கப்போகின்றதோ என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்திய இராணுவத்துடன் கூலிக்குழு உறுப்பினர்களும் தலைக்கு சிவப்பு பட்டி அணிந்தபடி வந்திருந்தனர். இவர்களில் முக்கியமானவன் ஊரில் பல அட்டகாசங்கள் செய்து பல அப்பாவி தமிழ்மக்களை சுட்டுத் தள்ளிய 'கருணா' என்ற பெயருடைய துரோகி. கருணாவும் இந்திய இராணுவத்துடன் வந்ததைக் கண்ட நண்பர்கள் இன்று ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றது என்பதை ஊகித்துவிட்டார்கள். மைதானத்தை சுற்றி இந்திய இராணுவத்தினர் ஓடிச்சென்று சுடுவதற்கு தயாராக சுற்று மதிலின் கீழ் படுத்து நிலை எடுக்க, கூலிக்குழுவைச் சேர்ந்த கருணாவும் மற்றையவர்களும் வானவில்லை நோக்கி ஓடினார்கள்.

கருணா: "அடேய் .... (பல தூசண வார்த்தைகள் தொடர்கின்றது...) வாடா மவனே இண்டைக்கு உனக்கு நான் கிரிக்கட் விளையாடச் சொல்லித் தாறன்.."

வானவில்லின் மீது துவக்குப் பிடியினால் கருணா தாக்கத் தொடங்கினான். மற்றைய கூலிப்படையினர் வானவில் ஓட முடியாதவாறு அவனை மடக்கிப் பிடித்துவைத்திருந்தனர். வேதனையின் காரணமாக வானவில் கதறி அழத் தொடங்கினான். நண்பர்கள் சிலைகளாக கை, கால் நடுங்கியபடி அந்தந்த இடங்களில் நின்று நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சில நிமிடங்கள் வானவில்லுக்கு அடித்தபின், அவனை கதறக் கதற கூலிப்படையினர் மைதானத்திலிருந்து தம்முடன் இழுத்துச் சென்றார்கள். வானவில்லின் உடம்பின் சில பாகங்களில் இருந்து இரத்தம் சொட்டத் தொடங்கியது. சில நிமிடங்களில் கூலிக்குழுவின் பிக் அப் வாகனம் ஒன்று சீறியபடி பாடசாலை பின் வாசலில் வந்துநின்றது. அதில் வானவில் பலாத்காரமாக ஏற்றப்பட்டு கூலிப்படையினரால் கடத்திச் செல்லப்பட்டான்.

கூலிப்படையினர் சென்ற சில நிமிடங்களில் இந்திய இராணுவ சிப்பாய்கள் சிலர் மைதானத்தில் நின்ற நண்பர்களிடம் சிரித்து ஏதோ கூறியபடி வந்தார்கள். வானவில் விட்டுச் சென்ற துடுப்பாட்ட மட்டையை தூக்கிய ஒருவன், விதுவைப் பார்த்து தனக்கு பந்துவீசுமாறு சொன்னான். விதுவும் பயத்தில் சிப்பாயிற்கு பந்துவீச சிப்பாய் "கூ கூ" என கத்தி ஆரவாரம் செய்து, விசில் அடித்து விளையாடிக் கொண்டிருந்தான். ஆறு பந்துகள் வீசப்பட்ட பின் தாம் நாளைக்கும் விளையாட வருவோம் என்று கூறிவிட்டு இந்திய இராணுவ சிப்பாய்கள் மைதானத்தைவிட்டு நகர்ந்து சென்றனர்.

மைதானத்தில், மற்றும் சுற்றுப்புற வீடுகளில் இருந்த பொதுமக்கள் இந்திய இராணுவம் சென்றதும் மைதானத்தில் நடந்த அசம்பாவிதத்தை அறிவதற்காக ஓடி வந்தார்கள். விதுவும், சுட்டியும் வானவில் கூலிப்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட செய்தியை அறிவிப்பதற்காக பிரியசகி வீட்டுக்கு சைக்கிளில் விரைந்து சென்றனர். யமுனாவும், தூயவனும் பாடசாலை அதிபரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுவந்து வானவில்லை உடனடியாக விடுவிப்பதற்காக அதிபரின் வீட்டிற்கு விரைந்து சென்றார்கள். அருவியும், நிதர்சனும் நடந்த அசம்பாவிதங்களை, மைதானத்தில் என்ன நடந்தது என்று விசாரிக்கவந்த பெரியவர்களிடம் விளக்கிக்கொண்டு இருந்தார்கள். செய்தி ஊரில் உடனடியாகப் பரவிவிட வன்னிமைந்தன், சின்னப்பு, ஈழப்பிரியன், மற்றும் அருவி, நிதர்சனின் பெற்றோரும் தமது பிள்ளைகளைத் தேடி பாடசாலை மைதானத்திற்கு வந்துவிட்டனர். வானவில் பிடித்துச் செல்லப்பட்ட செய்தியை அறிந்த இனியவள் தலைவிரி கோலமாக வீட்டில் அழுதுகொண்டிருந்தாள். விதுவின் வீட்டிற்கு முகியுடன் சேர்ந்து படிப்பதற்கு சென்றிருந்த பிரியசகி தம்பி பிடித்துச் செல்லப்பட்ட செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தாள். முகியும், ரசிகையும், தேவகியும் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருந்தனர்.

Posted

இந்த அசம்பாவிதம் நடைபெற்று சில தினங்களில் தமிழ்தங்கையும், அனிதாவும் யாழ்நகர் சென்று அங்கு சாணக்கியனுடன் கொழும்புக்கு தொலைபேசியில் கதைத்தார்கள்.

அனிதா: "மே ஐ இஸ்பீக் டு சாணக்கியன்..."

வீட்டு சொந்தக்காரர்: "ஹோல்ட் த லைன் பிளீஸ்"

சாணக்கியன்: "ஹலோ, கெளத கத்தாக்கரன்ன?"

அனிதா: "மே ஐ இஸ்பீக் டு சாணக்கியன்..."

சாணக்கியன்: "ஏஏஏய் அனி... நீயா டெலிபோன் எடுத்தனீ.. (ஆச்சரியம், சந்தோசம், சிரிப்பு..)"

அனிதா: "அண்ணா உங்கட குரல் மாறிப்போச்சு..." (சந்தோசம், சிரிப்பு....)

சாணக்கியன்: "ஓம், இவங்கள் என்ன ராக்கிங் எண்டு மழையில நனையவிட்டு எனக்கு சரியான தடிமன்.. எப்படி எல்லாரும் சுகமா இருக்கிறீங்களா? என்ன திடீரென்று போன் கோல் எல்லாம் எடுக்கிறீங்கள்?"

அனிதா: "ஓம் இருக்கிறம் அண்ணை... ஊரில கொஞ்ச பிரச்சனைகள்... அதான் உனக்கு அவசரமா கோல் எடுத்தனாங்கள்..."

சாணக்கியன்: "நானும் கேள்விப்பட்டனான். இப்ப சின்னப் பெடியன்கள ஈப்பி பாலாத்காரமா தங்களோட சேர்க்கிறாங்களாம். சுட்டி கவனமா இருக்கிறான் தானே?"

அனிதா: "அதுதான் அண்ணை இப்ப பிரச்சனை. சின்னப் பெடியன்களையெல்லாம் வலுக்கட்டாயமா பிடிக்கிறாங்கள். வானவில்லையும், ஆதி அண்ணாவையும், யமுனாவையும் ஈப்பி கடத்திக்கொண்டு போட்டாங்கள். ரசிகை வீட்டிலயும், தூயா வீட்டிலயும், பிரியசகி வீட்டிலயும் எல்லாரும் அழுது புலம்பி செத்தவீடு மாதிரி இருக்கிறீனம்.."

சாணக்கியன்: "ஐயோ கடவுளே!" (அதிர்ச்சி... சிறிது நேரம் இருவரும் மெளனம்...)

அனிதா: "வானவில்ல பள்ளிக்கூடத்தில விளையாடிக் கொண்டு இருக்கேக்க போய் பிடித்தவங்கள். பிறகு ஊர சுத்திவளைச்சு பிடிக்கேக்க, முதலில ரசிகை வீட்ட போனவங்கள், ரூமுக்க படிச்சுக்கொண்டு இருந்த ஆதி அண்ணாவைப் பிடிச்சவங்கள், பிறகு தூயா வீட்டுக்குபோய் அங்க படிச்சுக்கொண்டிருந்த யமுனாவையும் பலாத்காரமாய் தங்கட இயக்கத்தில் சேர்க்கிறதுக்கு கடத்திக்கொண்டு போட்டாங்கள்... விதுவும், தூயவனும் சின்னப் பிள்ளைகளா இருந்ததால அவங்கள் அழுது குளர விட்டிட்டாங்கள்..."

சாணக்கியன்: "எங்கட வீட்டையும் வந்தவங்களே?"

அனிதா: "ஓம் வந்தவங்கள், சுட்டிய தாங்கள் வாரவருசம் வந்து பிடிப்பம் எண்டு சொல்லிப்போட்டு போனவங்கள்.. இப்ப இவங்கள் பிள்ளைகள் பிடிக்கிறதால ரியூசன் வகுப்புக்கள், பள்ளிக்கூடத்திற்கெல்லாம் பிள்ளைகள் வாரது சரியான குறைவு.."

சாணக்கியன்: "சரி, நீ வெளியால போய் வாரதும் கவனம். தனியா ஒரு இடமும் போகாத, எங்க போறதெண்டாலும் அம்மாவ கூட்டுக்கொண்டு போ. தம்பி சுட்டிய வீட்டில தனியா விட்டுட்டு போகாத.. இப்ப சுட்டியும் பக்கத்தில நிக்கிறானே?"

அனிதா: "இல்லை அண்ணை, அவனை விது வீட்டில விட்டிட்டு வந்தனாங்கள். இஞ்ச இப்ப பிரச்சன சரியாக் கூடீட்டு, உங்களுக்கு ஓ.எல் இல சமூகக்கல்வி படிப்பிச்ச சுந்தரம் மாஸ்டர முந்தநாள் ஈப்பி சுட்டுப் போட்டாங்கள். பேக்கரிக்கடை நவம் அண்ணாவையும் சுட்டுப்போட்டாங்கள். இப்ப நாங்கள் பஸ்ஸில ஏறி வரேக்கையும் எங்கட வீட்டு சந்தியில் யாரையோ சுட்டுப் போட்டிருக்கிது. பொடி அப்படியே ரெத்த வெள்ளத்தில ரோட்டில கிடக்கிது. கொஞ்சம் பொறுங்கோ, அம்மா கதைக்கப் போறாவாம்.."

தமிழ்தங்கை: "அப்பன், சுகமாய் இருக்கிறியே.." (அழத்தொடங்குகின்றார்..) "உன்ர கடிதங்களப் பார்த்தனாங்கள். ஏனப்பு உன்ன அந்தப்பெடியன்கள் இப்பிடி கஸ்டப்படுத்துறாங்கள்? எந்த நேரமும் உன்ன நினைச்சுத்தான் கடவுளிட்ட மன்றாடிக்கொண்டு இருக்கிறன்."

சாணைக்கியன்: "கவலைப் படாதீங்கோ அம்மா, இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான், பிறகு என்ன ஒருவரும் ஒண்டும் செய்யேலாது..."

தமிழ்தங்கை: "உனக்கு சாப்பாடு ஒண்டும் கரைச்சல் இல்லையே? யார் ரூமில இருக்கிற சினேகிதப் பெடியன்? அவன் நல்லவனே?"

சாணக்கியன்: "ஓமம்மா அவன் பிரச்சினை இல்ல, நல்ல பெடியன். சாப்பாடு கடையிலதான். இங்க ரூமில சமைக்கிற வசதி இல்ல.. அப்ப நீங்கள் எப்ப கொழும்புக்கு வாறீங்கள்?"

தமிழ்தங்கை: "நாங்கள் இன்னும் ரெண்டு கிழமையில உங்க வரலாம் எண்டு இருக்கிறம் தம்பி. அப்பா அவசரப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இஞ்ச பிரச்சனை கூடமுன்னுக்கு எங்கள கொழும்புக்கு போகட்டுமாம்.."

சாணக்கியன்: "ஓமம்மா... அனியையும், சுட்டியையும் உங்கு வச்சு சமாளிக்கிறதும் உங்களுக்கு சரியான கஸ்டம். இத விட எங்களுக்கு நோர்வே போக எல்லா ஒழுங்குகளும் இன்னும் மூன்று, நாலு மாத்தில சரிவரும் எண்டு அப்பா சொல்லிறார்.."

தமிழ்தங்கை: "யாரும் சொந்தக்கார வீட்ட போனனியே? யாராவது உன்னை வந்து பார்த்தவையே?"

சாணக்கியன்: "இல்லையம்மா.. எல்லாரும் பெரிய லெவல் அடிச்சுக்கொண்டு திரியுறீனம். நானும் ஒருவரையும் போய்ப் பார்க்கேல.. இருந்திட்டு சிலநேரம் குமாரசாமி பெரியப்பா வந்திட்டுபோவார்.."

தமிழ்தங்கை: "மாமா என்னவாம்?"

சாணக்கியன்: "ஓ... லிசான் மாமா இந்தியாவுக்கு போட்டார். திரும்பி வரேக்க என்ன வந்து பார்க்கிறதாய் சொன்னார்.. ஊர் நிலமைகளைச் சொல்லி சரியாக் கவலைப்பட்டார்.."

தமிழ்தங்கை: "சரியப்பன் கவனமா இரு, உடம்ப கவனமாப் பார்த்துக் கொள்ளு, வெய்யில் எண்டா தலைக்கு தொப்பியபோடு, ஒவ்வொரு நாளும் தலையில் குளிக்காத. இந்தா தங்கச்சி கதைக்கப் போறாவாம்.."

அனிதா: "உங்க நாங்கள் வந்தா எங்க இருக்கிறது?"

சாணக்கியன்: "நாங்கள் எல்லாரும் இருக்கிறதுக்கு குமாரசாமி பெரியப்பா ஒரு வீடு ரெண்ட் பண்ணி தாரதெண்டு சொன்னவர்."

அனிதா: "சரியண்ணை, கனநேரமாக் கதைக்கிறம்... வேற என்ன?"

சாணக்கியன்: "இப்ப வானவில், ஆதி, யமுனா எங்க இருக்கிறீனம்? ஒருவரும் அவைய வெளியில கொண்டுவாரதுக்கு முயற்சி செய்யேலையே?"

அனிதா: "எல்லாரும் நிறைய முயற்சிகள் செய்தவேள், ஒன்றும் சரிவரேல. பிரியசகியின்ர அப்பா இனி பிள்ளைய தேடி தங்கட காம்புக்கு வந்த அவர தாங்கள் சுட்டுப்போடுவம் என்று ஈப்பி சொல்லி இருக்கிறாங்கள். சின்னப்பு அங்கிளும், ஈழப்பிரியன் அங்கிளும் பாடசாலை அதிபருக்கால இந்தியன் ஆமிய தொடர்பு கொண்டு பிள்ளைகள விடுவிக்க முயற்சி செய்து பார்த்துச்சீனம். இந்தியன் ஆமி தங்களுக்கு இதப்பற்றி ஒன்றும் தெரியாது எண்டு சொல்லிப்போட்டாங்கள். இப்ப வானவில், ஆதி அண்ணா, யமுனாவ டிரெயினிங் குடுக்கிறதுகாக ஈப்பியிண்ட வேலணை பயிற்சி முகாமில வச்சு இருக்கிறீனமாம். எல்லாருக்கும் மொட்டை அடிச்சு பார்க்கிறதுக்கு கிழவன்கள் மாதிரி படுகேவலமா இருக்காம் எண்டு யாரோ நேரில் கண்டாக்கள் சின்னப்பு அங்கிளுக்கு சொன்னவேளாம்."

சாணக்கியன்: "கேட்கவே சரியான கவலையா இருக்கு.."

அனிதா: "ஓமண்ணை... நாங்கள் எவ்வளவு சந்தோசமா இருந்தனாங்கள். வானவில், ஆதி அண்ணா, யமுனா எல்லாரும் எவ்வளவு சந்தோசமா இருந்தவேள், ஆனா இப்ப எல்லாம் தலைகீழா மாறி, படுபயங்கரமா என்னென்னமோ எல்லாம் நடந்துகொண்டு இருக்கிது.."

சாணக்கியன்: "ம்...(பெருமூச்சு.. சிறிது நேரத்தின் பின்..)உங்கட குரலிகள கனகாலத்திற்கு பிறகு கேட்டது எனக்கு சரியான சந்தோசம். பாவம் சுட்டியோடதான் கதைக்கேலாம போட்டிது. சரி நான் போன வைக்கிறன். வீட்ட கவனமாப் போய்ச் சேருங்கோ. சுட்டிய, தூயாவ எல்லாரையும் சுகம் கேட்டதா சொல்லுங்கோ. கண்டபடி வெளியில் வெளிக்கிட்டு திரியாதிங்கோ. ஓகே.. பாய் பாய்!"

அனிதா: "ஓமண்ணா சொல்லிறம், தூயாவும் உன்னை அடிக்கடி விசாரிக்கிறவ, இப்ப வீட்டையும் வாரவ. நானும் அவவீட்ட போய்வாரனான். சரியண்ணை போன வைக்கிறம்.." (இணைப்பு துண்டிக்கப்படுகின்றது...)

Posted

யமுனா இல்லாததால் கறுப்பியின் வீடு கலகலப்பின்றி மயான அமைதியாக இருந்தது. ஒருவருடன் ஒருவர் கதைப்பதும் நன்கு குறைந்துவிட்டது. பல மணிநேரங்களாக உறக்கமின்றி கட்டிலில் புரண்டுகொண்டிருந்த தூயா, இறுதியில் பொறுமையிழந்து யமுனாவின் அறைக்கு எழுந்து சென்றாள். மின்விளக்கை ஒளிரவிட்டபின் யமுனாவின் அறையை ஆராயத் தொடங்கினாள். வழமையாக யமுனா இருக்கும்போது அவன் தனது அறையினுள் ஒருவரையும் நுழைய விடமாட்டான். தன்னிடம் பல இரகசியங்கள் இருப்பதாக தூயாவிற்கு அவன் கூறிவந்தான். இதனால், முதலில் மனம் சற்று தடுமாறினாலும், பின் தனது மாமாவைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்திலும், மாமா இல்லாததன் கவலையாலும் தூயா பயமின்றி யமுனாவின் அறையினுள் தனது தேடலைத் தொடங்கினாள். பல கதைப்புத்தங்கள், கவிதை நூல்கள், பழைய ஆனந்தவிகடன், குமுதம், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் சஞ்சிகைகள்... இவை படிக்கும் மேசைமீது குவிக்கப்பட்டிருந்தது. பள்ளியில் படிக்கும் புத்தங்கள், கொப்பிகள் கட்டிலின்மீது அங்கொன்றும், இங்கொன்றுமாக வீசப்பட்டு கிடந்தது. இதைப் பார்க்க தூயாவுக்கு சிரிப்பு வந்தது. யமுனா படிப்பில் தூயாவை விட கெட்டிக்காரன். ஆனால், அவன் படிப்பதை ஒருபொழுதும் தூயா பார்த்தது இல்லை. யமுனா பாடசாலை நூலகத்திலேயே பரீட்சைக் காலத்தில் படித்துவந்தான். பாடசாலை வீட்டுவேலைகள் செய்வதும் அங்குதான். நூலகத்திற்கு தூயா செல்வது மிகக்குறைவாக இருந்ததால் இந்த விடயம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. தூயா சிதறி இருந்த புத்தகங்களை ஒழுங்குபடுத்தி வைத்து அறையையும் சிறிதளவு துப்பரவு செய்தாள். யமுனாவின் அறையில் இருந்து வெளிச்சம் வருவதைக் கண்ட கறுப்பி தூக்கத்தால் எழுந்துவந்து, உள்ளேவந்து பார்த்துவிட்டு, யமுனாவின் பொருட்களில் கையை வைக்கவேண்டாம் என்றும், பேசாமல் போய்ப் படுக்குமாறும் தூயாவிடம் சொல்லிவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டாள்.

கறுப்பி தூங்கியதும் தூயா திரும்பவும் தனது ஆராய்ச்சியைத் தொடங்கினாள். யமுனாவின் கட்டிலில் இருந்து யோசித்துக் கொண்டிருந்தவள் திடீரென மெத்தையைத் தூக்கிவிட்டு அதன்கீழ் ஏதாவது இருக்கின்றதா எனப்பரிசோதித்தாள். அவள் எதிர்பார்த்தபடியே கட்டிலின் நடுப்பகுதியில் சிறிய கடதாசிக்கட்டு ஒன்று மறைத்துவைக்கப்பட்டு இருந்தது. மெத்தை நன்றாக மடித்துத் தள்ளியபடி அந்த கடதாசிக் கட்டை தூயா இழுத்து எடுத்தாள். பின், கட்டிலிற்கு அருகாகப் போடப்பட்டிருந்த யமுனாவிற்கு பிடித்தமான சார்மணைக் கதிரையில் இருந்து அவற்றை பிரித்து படிக்கத் தொடங்கினாள். அதனுள் பல கடிதங்கள் இருந்தன. முதலாவது கடிதத்தைப் பார்த்தவுடனேயே அவள் திடுக்கிட்டுவிட்டாள். அருவி, நிதர்சனுடன் சேர்ந்து இயக்கத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து யமுனா ஈழவனுக்கு எழுதிய கடிதம் அதில் காணப்பட்டது. வானவில் கூலிப்படையினரால் பலாத்காரமாகக் கடத்திச் செல்லப்பட்ட மறுநாள் இந்தக்கடிதம் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் விளக்கமாக தாம் ஏன் சேரவிரும்புகிறோம் என்று எழுதப்பட்டிருந்தது. இதைவிட ஈழவனை தம்மிடம் விரைவாக வந்துகூட்டிச் செல்லுமாறும் எழுதி இருந்தது. முதலில் நன்றாகப் பயந்தவள் பின் சற்றுத் துணிந்து கறுப்பியை தூக்கத்திலிருந்து எழுப்பினாள்.

தூக்கம் கலைந்த கறுப்பி முதலில் தூயாவை திட்டினாள். யமுனாவின் பொருட்களை தான் சொன்னபின்பும் தொட்டதற்காக தூயாவை முதலில் கண்டிக்கவும் செய்தாள். தம்பியின் கடிதத்தை வாசித்த கறுப்பிக்கு கண்ணீர் வந்தது. அவனை கூலிக்குழு கடத்திச் சென்றநேரம் அவ்வாறு நடைபெறுமுன்பே இயக்கத்தில் இணைந்திருந்தால் யமுனா சந்தோசமாக இருந்திருப்பான் என நினைத்தாள். தூயாவிடம் இருந்த மற்றைய கடிதங்களையும் வாங்கிவிட்டு,

"நீ சின்னப் பிள்ளை, இவ்வளவும் பார்த்தது காணும், பேசாமல் போய் படு, இப்ப காலம்பற மூன்று மணியாகப் போகிது" எனக் கூறினாள்.

இதேவேளை, வேலணை முகாமில் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்த யமுனாவும், ஆதியும், வானவில்லும், மற்றும் சிலரும் தாம் விரைவில் கூலிக்குழுவின் பயிற்சி முகாமிலிருந்து தப்பியோடி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போய் இணைவதற்காக திட்டந்தீட்டி, அதற்காக சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். யமுனா, ஆதி, வானவில் கூலிக்குழுவின் முகாமிலிருந்து ஏற்கனவே கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உள்ளாகியிருந்த சில அப்பாவி மாணவர்கள் தப்பி ஓடுவதற்கு உதவி செய்திருந்தார்கள். சில நாட்களில் பலர் முகாமைவிட்டு தப்பியோட, கூலிக்குழுவின் முகாம் பொறுப்பதிகாரிக்கு இவர்கள் மூவர் மீதும் சந்தேகம் வரத்தொடங்கிவிட்டது. ஏனெனில், தப்பி ஓடுபவர்கள் இவர்கள் காவல் கடமைக்கு நின்ற காவல் அரணைக்கடந்தே தப்பி ஓடியிருந்தார்கள். எனவே, மூவரையும் ஒன்றாக சேரவிடாமல், தனித்தனியாக பிரித்து விட்டான். இப்போது ஆதி, வானவில், யமுனா இரவில் வெவ்வேறு காவல் அரண்களிற்கு காவல் கடமைக்கு சென்றார்கள். இதைவிட, மூவரையும் தனித்தனியாக உளவு பார்ப்பதற்கு தனக்கு விசுவாசமான ஆட்களையும் முகாம் பொறுப்பதிகாரி நியமித்தான்.

Posted

தம்பிகள் இல்லாத கவலையில் பிரியசகியும், முகியும், ரசிகையும் வாடிப்போயிருந்தனர். வானவில்லைப் பற்றி ஏதாவது செய்திகிடைத்ததா என முகிவீட்டுக்கு விசாரிக்கச் சென்ற பிரியசகி முகியுடனும், ரசிகையுடனும் உரையாடிக்கொண்டிருந்தாள். சின்னப்புவும், தேவகியும் தமக்கு தெரிந்தவர்கள் மூலம் கதைத்து ஆதியை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காக காலையிலே யாழ்நகரிற்கு சென்றுவிட்டனர். இப்போது மாலை ஐந்துமணியாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை. ஆதி கூலிக்குழுக்களினால் கடத்திச் செல்லப்பட்டபின் தினமும் இவ்வாறு காலையிலேயே ஆதியைத் தேடி தமக்கு தெரிந்த இடங்களிற்கு இருவரும் உதவிகேட்டுச் சென்றனர். முகியும், பிரியசகியும் கொஞ்ச நாட்களாக பல்கலைக்கழகம் செல்வதை நிறுத்தி தற்காலிகமாக வீட்டில் இருந்து படித்துக்கொண்டிருந்தார்கள். எல்லோர் வீடுகளிலும் சமையலும் ஒழுங்காக நடைபெறுவது இல்லை. தனித்தனியாக ஒவ்வொருவரும் மூலைகளில் குந்தியிருந்து யோசித்தபடி அழுதுகொண்டிருந்தனர். எல்லோரும் ஒழுங்காக உண்ணாததனால் கணிசமானளவு நிறையும் குறைந்திருந்தனர். தூயவனின் வீட்டிற்கு விளையாட வந்த விதுமூலம் பிரியசகி வந்திருப்பதை அறிந்த தூயா யமுனாவைப் பற்றிய செய்தி ஏதாவது கிடைத்ததா என அறிவதற்காக ரசிகை வீட்டுக்குச் சென்றாள். இதேவேளை சின்னப்பு வீட்டிற்கும், கறுப்பி வீட்டுக்கும் துக்கம் விசாரிக்க தமிழ்தங்கை, அனிதா, சுட்டி வந்திருந்தார்கள். சுட்டி தூயவன், விதுவுடன் சேர்ந்து கரம்போர்ட் விளையாடிக்கொண்டு இருந்தான். கூலிக்குழுக்கள் வானவில்லைப் பிடித்ததினத்தில் இருந்து ஊரில் ஒருவரும் வெளியில் விளையாடுவதில்லை. தினமும் கலகலப்பாக காணப்படும் பாடசாலை மைதானம் வெறிச்சோடிக் கிடந்தது. மாணவர்களின் கால்கள் படாமையால் மைதானத்தில் தாராளமாக புட்களும் களைகளும் முளைத்திருந்தது.

முகி: "அனி நீங்கள் எப்ப கொழும்புக்கு போறீங்கள்?"

அனிதா: "இன்னும் ரெண்டு கிழமையால போறம்"

தூயா: "அப்ப நீ போனா உன்னை நாங்கள் திரும்பக் காணேலாது என"

தமிழ்தங்கை: "ஓம் பிள்ளை, நாங்கள் நோர்வேக்கு போனால் எந்தக்காலத்தில இங்காள திரும்பிவருவமோ தெரியாது"

அனிதா: "நான் போய் உன்னையும் கூப்பிடுறன், நீயும் அங்க வாடி தூயா"

பிரியசகி: "என்ன இன்னும் சின்னப்பு அங்கிளையும், அன்ரியையும் இன்னும் காணேல?"

ரசிகை: "அவை வர ஏழு, எட்டு மணியாகும். இன்றைக்கு ஏலுமென்றால் தாங்கள் வேலணைக்கு போய் ஆதி அண்ணாவை பார்க்க்க முயற்சிப்பம் எண்டு சொல்லிக்கொண்டிருந்தீனம்.."

முகி: "ஆதி இந்தவருசம் ஏ.எல் சோதினை எடுக்கிறான். வீட்டில இருக்கேக்க புத்தகமும் கையுமா இருப்பான். இப்ப அவனிண்ட கையில ஈப்பி ஆயுதத்த கொடுத்துப் போட்டாங்கள்.." (கோபம் வருகின்றது..)

தமிழ்தங்கை: "ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ. கடவுள் கெதியில எல்லாருக்கும் நல்ல வழி காட்டுவார்"

பிரியசகி: "லிசான் எப்ப அன்ரி வாரார்?"

அனிதா: "மாமா இப்ப கொழும்பில நிற்கிறாராம். இப்ப கொஞ்சம் வயசான ஆட்களையும் ஈப்பி பிடிக்கிறதால யாழ்ப்பாணம் வாரதுக்கு பயப்பிடுறார்."

முகி: "ஓம், நானும் உதயன் பேப்பரில வாசிச்சனான். இப்ப வயது வேறுபாடு இல்லாமல் எல்லாரையும் ஈப்பி அள்ளுறாங்களாம்."

ரசிகை: "யமுனா இல்லாதது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. அவர் வகுப்பில் இருந்தால் ஏதாவது பகிடி விட்டுக்கொண்டு இருப்பார். இப்ப எனக்கு பள்ளிக்கூடம் போகவும் மனமில்லாம இருக்கு"

தூயா: "எனக்குந்தான், மாமா இல்லாம வீடு வெறுச்சோடி இருக்கு. மாமா நட்டு வளர்த்த பூமரங்கள், வீட்டுத்தோட்டம் எல்லாம் வாடிப்போச்சு."

பிரியசகி: "ஈழப்பிரியன் அங்கிள் யமுனாவ விடுவிக்க ஒன்றும் செய்யேலையே?"

தூயா: "அப்பாவும் ட்ரை பண்ணியபடி இருக்கிறார். முந்தி அவரிட்ட படிச்ச ஒரு பெடியன் இப்ப ஈப்பியில பெரிய ஆளா இருக்கிறானாம். அவன் மாமாவை நாங்கள் வேலணையில போய் பார்க்கிறதுக்கு ஒழுங்குகள் செய்து தாரன் எண்டு சொன்னவனாம். ஆனால் மாமவை எந்தக்காரணம் கொண்டும் விடேலாது எண்டு கடுமையா சொல்லிப்போட்டானாம்"

ரசிகை: "அங்க, அம்மாவும், அப்பாவும் வாறீனம்.." (சந்தோசம்...)

தேவகி: (அருகில் வந்ததும் பெரிய சத்தம்போட்டு அழத் தொடங்குகின்றார்..)

முகி: (பதற்றத்துடன்..) "என்னம்மா? ஏன் அழூறீங்கள்? என்ன நடந்தது?"

சின்னப்பு: (தழதழத்த குரலில்..) "நாங்கள் அவனை வெளியில எடுக்கலாம் எண்டு நம்பிக்கையோட போனனாங்கள். பெடியள் அவசரப்பட்டிட்டாங்கள்..."

அனிதா: "என்ன அங்கிள் சொல்லுறீங்கள்?"

தேவகி: (பெரிய குரலில் ஒப்பாரி வைத்து அழுதபடி சொல்கின்றார்..) தம்பியும், யமுனாவும், வானவில்லும், இன்னும் ரெண்டு பெடியளும் நேற்று இரவு காம்புக்கு காவலுக்கு நிண்ட ரெண்டு ஈப்பிய சுட்டுப்போட்டு வேலணைய விட்டு தப்பி ஓடீட்டாங்களாம்... (எல்லோரும் அதிர்ச்சி... சிறிது நேரத்தின் பின்)

சின்னப்பு: "அவங்கள் பாசயூர், குருநகர் பக்கமா ஓடியிருப்பாங்கள் எண்டு இந்தியன் ஆமியும், ஈப்பியும் இண்டைக்கு அந்த ஏரியாவ சுத்தி வளைச்சு தேடிக்கொண்டு இருக்கிறாங்களாம்.."

தேவகி: "நாங்கள் ஆதியின்ர பெற்றோர் எண்டு அறிஞ்சவங்கள் எங்களை ஆறு மணித்தியாலமா வேலணையில பிடிச்சுவச்சு விசாரிச்சவங்கள், எங்கள பிறகு வீட்டில வந்து கவனிக்கிறம் எண்டு சொல்லிப்போட்டு கடைசியில விட்டிட்டாங்கள்.. "

ரசிகை: "சூடுவாங்கின ஈப்பியள் செத்துப் போச்சுதுகளே?"

சின்னப்பு: "ஒருவன் அந்த இடத்திலேயே செத்துப் போனானாம். ஒருவனுக்கு கடுமையான காயம், யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில போட்டிருக்காம். ரெண்டு, மூன்று பேருக்கு சின்னக் காயங்களாம்"

பிரியசகி: "வானவில், ஆதி, யமுனாவுக்கு ஒன்றும் நடக்கேல தானே?"

சின்னப்பு: "ஓம், அவங்கள் சுட்டுப்போட்டு வள்ளம் ஓட்டுறவன் ஒருவனிண்ட உதவியோட கடலால தப்பி ஓடீட்டாங்கள்."

முகி: "ஓடி எங்க போயிரூப்பீனம்?"

சின்னப்பு: "இயக்கத்தில சேர்ந்திருப்பாங்கள் எண்டு நினைக்கிறன்.."

தேவகி: (திரும்பவும் அழத்தொடங்கின்றார்...)

தமிழ்தங்கை: "அழாதிங்கோ, இப்போதைக்கு அவங்கள் பாதுகாப்பா இருப்பாங்கள், இந்தியன் ஆமி திரும்பி நாட்டை விட்டு போகப்போகிது எண்டு கதைக்கிறீனம். அப்ப இவங்கள் திரும்பிவருவாங்கள்."

அனிதா: "ஓம் அன்ரி... அம்மா சொல்லிறதும் சரி.."

ரசிகை: "ஏதோ வாகனச் சத்தம் கேட்கிது..." (எல்லோரும் பதற்றம் அடைகின்றனர்...)

சின்னப்பு: (அடிக்குரலில் பயத்துடன்...)"எல்லாரும் வீட்டுக்க உள்ளுக்க போங்கோ, ஈப்பிதான் வருது போல இருக்கு..."

கருணா: (வீட்டு படலையை காலால் அடித்து திறந்தபடி.. உரத்த குரலில் சத்தமாக...) யாரடா அவங்கள் எல்.டீ.டீ இஞ்ச? (தூசண வார்த்தைகள் கொட்டப்படுகின்றது... சுமார் ஐம்பது பேர்கொண்ட ஈப்பி கூலிக்குழு சின்னப்பு வீட்டையும், ஈழப்பிரியன் வீட்டையும் சுற்றி வளைக்கின்றது.. )

"டப், டப், டப், டப் டுமீல், டுமீல்" என சில நிமிடங்களிற்கு பெரிய நேரடி மோதல்களின் போது கேட்பது போன்ற சூடுபாடுகள் கேட்கின்றன. உடனடியாக வீட்டிலுள்ள எல்லோரும் நிலத்தில் விழுந்து படுக்கின்றனர்...

Posted

மடத்தடி முருகன் கோயிலினுள் இரகசிய மறைவிடத்தில் ஒளிந்திருந்த ஈழவன் கோயில் பூசாரி சாத்திரி இரவுப்பூசையை முடித்து, கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றபின், சுமார் ஒன்பது மணியளவில் இரவு உணவு அருந்துவதற்காக கோயில் மடப்பள்ளியினுள் போனான். அங்கு சாத்திரி அவன் உண்பதற்காக கோயில் பிரசாதத்தை வைத்துவிட்டு சென்றிருந்தார். சாத்திரி ஒரு தமிழீழ ஆதரவாளர். தென்தமிழீழத்தில் இருந்த ஒரு கோயிலில் நீண்ட காலம் பூசை செய்துவிட்டு, கூலிக்குழுக்களின் தொல்லை காரணமாக சென்ற வருடம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். அங்கிருந்து புறப்படும்போது தான் வெளிநாடு ஒன்றுக்கு போவதாக ஊரவருக்கு கூறிவிட்டு வந்தார். இதனால், சாத்திரி யாழ்ப்பாணத்தில் இருக்கும் விடயம் கூலிக்குழுக்களிற்கு தெரியாது. மடத்தடி முருகன் கோயிலில் பூசைசெய்வதோடு மட்டுமல்லாது சாத்திரி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான பல இரகசிய வேலைத் திட்டங்களிலும் ஈடுபட்டுவந்தார். இந்த வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாகவே ஈழவனிற்கு புகலிடம் கொடுத்து, அவனை எதிரிகளின் கண்களில்படாது பாதுகாத்து வந்தார்.

தனியாக இருந்த ஈழவனுடன் இப்போது ஆதியும், யமுனாவும் இணைந்துவிட்டார்கள். ஏற்கனவே இயக்கத்தில் ஈழவனும், சஜீவனும் இருப்பதாலும், மற்றும் வயது குறைவாக இருந்ததாலும் பல இடையூறுகளின் மத்தியில் வானவில் கொழும்பிற்கு அனுப்பப்பட்டு விட்டான். இதேவேளை, உயிர் ஆபத்துக்கள் காரணமாக வன்னிமைந்தனும் மனைவி இனியவள், மகள் பிரியசகியை அழைத்துக்கொண்டு கொழும்பு சென்றுவிட்டார். வானவில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் தனது உயர்தர படிப்பை தொடர்ந்தான். பிரியசகி அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தனது படிப்பை தொடர்வதற்காக காத்திருந்தாள். யாழ் மருத்துவபீடத்திற்கு அவள் முழுக்குப்போட்டு விட்டாள். வன்னிமைந்தன் லிசானின் உதவியுடன் கொழும்பில் வியாபாரம் ஒன்றில் ஈடுபடத் தொடங்கினார்.

இன்றுகாலை ஈழவனும், ஆதியும், யமுனாவும் சேர்ந்து மூன்று இந்தியப் படையினரை சுட்டுக்கொன்றிருந்தனர். வழமைபோல் ஊரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு படிக்கவரும் மாணவிகளுடன் சில்மிசங்கள் செய்யச் சென்றபோது குறிப்பிட்ட படையினர் இடைவழியில் மறிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த இருகிழமைகளில் மூவருமாகச் சேர்ந்து ஒன்பது இந்தியப் படையினரையும், ஐந்து ஈப்பி கூலிக்குழுவினரையும் சுட்டுக்கொன்றிருந்தனர். பெருமளவு ஆயுதங்களையும் கைப்பற்றி மறைவிடம் ஒன்றில் ஒளித்து வைத்திருந்தனர். ஆதியும், யமுனாவும் இயக்கத்தில் இணைந்த விடயம் ஈப்பி கூலிக்குழுவிற்கு தெரியாது. வானவில்லைப் போல் அவர்கள் கொழும்பிற்கு ஓடிவிட்டதாய் ஈப்பி கூலிக்குழுவும், இந்திய இராணுவமும் நினைத்துக் கொண்டிருந்தது. இதனால், ஈழப்பிரியன் குடும்பத்திற்கோ அல்லது சின்னப்பு குடும்பத்திற்கோ எதுவித ஆபத்தும் வரவில்லை. தம்மீதும், கூலிக்குழு மீதும் நடாத்தப்பட்ட திடீர் அதிரடித் தாக்குதல்கள் காரணமாக இந்தியப் படையினர் மிகவும் குழம்பிப்போய் இருந்தனர். ரோந்து போகும்போது சிறிய குழுக்களாக போகாது பெரிய பட்டாளமாக அணிவகுத்துச் சென்றனர். ஊரினுள் தேவையில்லாமல் அலைந்து திரிவதையும் அதிரடித் தாக்குதல்களின் காரணமாக இந்தியப்படையினரும், கூலிக்குழுக்களும் முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.

யமுனா: "ஈழவன் அண்ணை, நாளைக்கு எங்கட வேலத்திட்டம் என்ன?"

ஈழவன்: "காலம்பற அஞ்சு மணிக்கே ஆமி எங்கள தேடிவரக்கூடும், இனி ரெண்டு நாளைக்கு நாங்கள் ஒருவிடமும் போகாம இப்பிடியே இஞ்ச இருக்கவேண்டியதுதான்"

ஆதி: "ஓம் அடிக்கடி வெளியில திரியிறது ஆபத்து.."

ஈழவன்: "யமுனா, அந்த வோக்கிய எடுத்து சஜீவனிட்ட இருந்து ஏதாவது சிக்னல் வருதா எண்டு பார்.."

ஆதி: "சஜீவனா? (ஆச்சரியம்..) அவர் வன்னியில இப்ப இல்லையா?"

ஈழவன்: "அங்கதான் இருந்தவன், ஆனா இப்ப வேற சில அலுவல்கள் செய்யிறதுக்காக மேலிடம் அவனை பக்கத்து ஊருக்கு அனுப்பி வச்சு இருக்கிறீனம்"

ஆதி: "அண்ணை, கோயில் வெளிக் கிணற்றடிப் பக்கமா ஏதோ சத்தம் கேட்கிது.." (அனைவரும் அலேர்ட் ஆகின்றனர்..)

ஈழவன்: "பொறுங்கோ நான் பார்க்கிறன்.." (துவாரம் ஒன்றின் ஊடாக எட்டிப் பார்க்கின்றான்.. சிறிது நேரத்தில் மெல்லிய சிரிப்பு...) "அது அவன் வடிவேல்.."

யமுனா: "அட விசர் வடிவேலு.."

ஈழவன்: "அவனுக்கு விசர் இல்ல, கனக்க படிச்சதால மூள குழம்பிப் போச்சு. அவன ஒருவரும் கவனிக்காததால இப்படி தன்ர இஸ்டப்படி அலையுறான். அப்பா, அம்மா, சொந்தமும் ஒண்டும் அவனுக்கு இல்ல பாவம்.. "

ஆதி: "ஓம் அவன் சரியான கெட்டிக்காரன், ஒருக்கால் எனக்கு ஏ.எல். பியோர், அப்பிளைட் மட்சில நிறைய புதுமையான கணக்குகள் எல்லாம் செய்து காட்டினவன்"

வடிவேல்: (தன்பாட்டில் மனதினுள் பேசுகின்றார்..) "உவன் ஈழவன் உதுக்க எங்கையோதான் ஒளிஞ்சு இருக்கவேணும். நல்ல பெடியன், கடவுள்தான் அவன காப்பாத்த வேணும்.. ஆனா அவனோட இப்ப வேறையும் யாரோ கூட இருக்கிற மாதிரி இருக்கு..." (கிணற்றில் நீரை அள்ளி வாளியினுள் நிரப்பியபின் கோயில் மடப்பக்கமாக தனது இருப்பிடத்திற்கு திரும்பிச் செல்கின்றார்.)

சிறிது நேரத்தில் மூவரும் உரையாடியபின், சாத்திரியின் புண்ணியத்தில் கிடைத்த இரவுச் சாப்பாடு முடிந்ததும் யமுனா காவலிற்கு விழித்து இருக்க, ஆதியும், ஈழவனும் தூங்குகின்றனர்..

Posted

"டிங் டொங் டிங்..." வீட்டுவாயிலில் இருந்த அழைப்புமணியடித்த சத்தம் கேட்டு, விருந்தினர் யார் வந்தது எனப்பார்க்க பிரியசகி சென்றாள். கதவில் பொருத்தப்பட்டிருந்த விருந்தினர் அவதானிப்பு கண்ணாயினூடாக கண்களைவைத்து வெளியில் யார் நிற்கின்றார்கள் என பார்த்தாள். அழகாக உடையுடுத்தி, டை, சூ அணிந்தபடி ஒரு இளம் வாலிபர் முகத்தைக் கடுமையாக வைத்தபடி கதவடியில் காத்திருந்தார். வெளியில் நிற்பவர் யார் என தெரியாததால் யாரோ புதியவர் வந்திருக்கின்றார் என அறிவிப்பதற்காக திரும்பவும் அறையினுள் சென்றாள். கொழும்பிற்கு வந்த புதிது என்பதால் யாரும் தெரியாதவர்கள் கதவைத் தட்டினால் உடனடியாகத் திறக்கக்கூடாது என லிசான் புத்திமதி கூறியிருந்தான். எதிர்பாராத விதமாக கொழும்பிற்கு வந்த வன்னிமைந்தன் குடும்பத்தினரும், நோர்வேஜியன் குடும்பத்தினரும் ஒரு பெரிய வீட்டை பம்பலப்பிட்டியில் வாடகைக்கு அமர்த்தி அங்கு குடியிருந்தனர். தமிழ்தங்கை, சாணக்கியன், அனிதா, சுட்டி, லிசான், வன்னிமைந்தன், இனியவள், பிரியசகி, வானவில் என மொத்தம் ஒன்பது பேர் இந்த வாடகை வீட்டில் இருந்தனர். வீட்டில் மொத்தம் நான்கு படுக்கையறைகள், இரண்டு மலசலகூடங்கள். எனவே இரு குடும்பங்களும் இருப்பதற்கு போதுமானளவு இடவசதி இருந்தது. குசினியில் சமையலை தமிழ்தங்கையும், இனியவளும் அனைவருக்கும் ஒன்றாக செய்தனர். அனிதா, பிரியசகி ஒரு அறையிலும், சாணக்கியன், தமிழ்தங்கை இன்னொரு அறையிலும், வன்னிமைந்தன், இனியவள் இன்னொரு அறையிலும், சுட்டி, வானவில் இன்னொரு அறையிலுமாக இருந்தனர். லிசான் ஹோலினுள் படுத்தான். வீட்டு வாடகையாக மாதம் எட்டாயிரத்து ஐநூறு ரூபா கொடுத்தனர். நோர்வேஜியன் வன்னிமைந்தனிடம் தான் வீட்டு வாடகைப் பணம் முழுவதையும் கொடுப்பதாகவும், வன்னிமைந்தன் குடும்பத்தினர் எவ்வளவுகாலமும் தம்முடன் அங்கு இருக்கமுடியும் எனவும், ஆனால் காசு எதுவும் தமக்கு தரக்கூடாது எனவும் மிகவும் கண்டிப்பாகக் கூறிவிட்டார். அனைவருக்குமான வீட்டு சமையல் செலவு தன்னுடைய பொறுப்பு என லிசானும் கண்டிப்பாக கூறிவிட்டான். வன்னிமைந்தன் தான் நோர்வேஜியனிடமும், லிசானிடமும் மிகவும் கடமைப்பட்டுவிட்டேன் என நினைத்து மனம்சஞ்சலப்பட்டார்.

பிரியசகி: "அன்ரி உங்களிட்டதான் யாரோ வந்திருக்கிறீனம் போல இருக்கு.."

தமிழ்தங்கை: "யாரெண்டு பார் பிள்ளை.."

அனிதா: (ஓடிச்சென்று கண்ணாடி ஓட்டையினூடாக பார்க்கின்றார்..) "யாரெண்டு தெரியேல.."

தமிழ்தங்கை: (கண்ணாடி ஓட்டையினூடாக பார்க்கின்றார்..)

குளகாடன்: (ஒவ்வொருத்தராக வந்து கதவினூடாக எட்டி, எட்டிப் பார்த்துவிட்டு திரும்பிச் செல்வதைக் கண்டு கோபம் வருகின்றது... பொறுமையிழந்து கதவடிக்கு சென்று உரக்கக் கதைக்கின்றார்) "ஹாய்.. திஸ் இஸ் குளா, ஐவ் கம் டு டீச் ஏ.எல் கெமிஸ்ரி டு வானவில்..."

வானவில்: "அக்கா என்ர கெமிஸ்ரி மாஸ்டர். கதவ உடன திறவுங்கோ.."

இனியவள்: "ஓம் நான்தான் உங்களுக்கு சொல்ல மறந்துபோனன். இண்டைக்கு வானவில்லுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க மாஸ்டர் ஒருவர் வருவார் எண்டு அப்பா வேலைக்கு போகேக்க சொல்லிப்போட்டு போனவர்.."

இனியவள்: (கதவு உள்சங்கிலியை கழற்றி, இரண்டு பூட்டுக்களையும் திறந்தபின் இறுதியில் கதவை திறக்கின்றது...) வாங்கோ மாஸ்டர்... சொறி... உங்களை கனநேரம் வெளியில நிற்கவச்சுப் போட்டம்..."

குளகாடன்: "இட்ஸ் ஓகே... ஐ ஆம் ஆல் ரைட்.. "(உள்ளே வந்து சப்பாத்தை கழற்றுகின்றார்..)

அனிதா: "பிளீஸ் கம் இன் சூஸ்.."

குளகாடன்: (மனதினுள் பேசிக்கொள்கின்றார்.. "அப்பாடா சனங்கள் ஆகளும் பட்டிக்காடென்று நினைச்சன், ஆனா ஆட்கள் சும்மா பரவாயில்ல போல இருக்கு..")

இனியவள்: "கூல் டிரிங்க்ஸ் என்னமும் சாப்பிடுறீங்களா?"

குளகாடன்: "நோ தாங்க்ஸ்.." (மனதினுள் பேசிக்கொள்கின்றார்.. "தாகமாத்தான் இருக்கு, வந்த உடனயே எப்பிடி குளிர்பானம் குடிக்கிறது? ... ஏதும் நினைக்க மாட்டீனமே... ரெண்டு இளம் பொம்பிளைகள் வேற நிற்கிதுகள்... பிறகு அதுகள் என்னப் பார்த்து சிரிக்காதுகளே..." )

இனியவள்: "மாஸ்டர் அதுதான் படிக்கிற மேசை.. "(கையை காட்டுகின்றார், வானவில் மேசையில் அமர்ந்து படிப்பதற்காக தயாராகின்றான். குளகாடன் ஹோலில் உள்ள அந்த மேசையை நோக்கி செல்கின்றார். பாடம் தொடங்குகின்றது... அனிதாவும், பிரியசகியும் தமது அறையினுள் செல்கின்றனர், தமிழ்தங்கையும், இனியவளும் குசினிக்குள் செல்கின்றனர்.. சுட்டி ஓடிச்சென்று பழையபடி கதவை சங்கிலி, மற்றும் இரண்டு பூட்டுக்கள் போட்டு மூடுவிட்டு ஹோலினுள் வானவில்லுக்கு பாடம் நடப்பதை இருந்து வேடிக்கை பார்க்கின்றான்)

அனிதா: (சிரிப்பு..) "பாவமக்கா அந்தாள்.. கனநேரமா கதவடியில வெயிட் பண்ணவச்சுப் போட்டம்.."

பிரியசகி: "சத்தமா சிரிக்காதையுங்கோ... வெளியில் அந்தாளுக்கு கேட்கப்போகிது.."

அனிதா: "இஞ்ச சூ, டை எல்லாம் போட்டுக்கொண்டே பாடம் சொல்லிக்குடுக்க வருவீனம்? (திரும்பவும் சிரிப்பு..)"

பிரியசகி: (மெதுவாக இரகசியமாக கதைக்கின்றாள்..)"நீங்கள் நினைக்கிற மாதிரி இல்ல.. இந்தாள் மாதம் ஒரு இருபதாயிரம் ரூவா எண்டாலும் ரியூசன் கொடுத்து உழைக்கும்.. ஊர் மாதிரி இங்க இல்ல... வானவில்லுக்கு ஒரு மணித்தியாலம் படிப்பிக்கிறதுக்கு நூற்று ஐம்பது ரூவா குடுக்க வேணும் எண்டு அப்பா கதைச்சவர்.."

அனிதா: "அப்ப நீங்களும் ரியூசன் சொல்லிக் குடுக்கலாமே?"

பிரியசகி: "அப்பாவும் அப்பிடித்தான் சொன்னவர்.. பொட்டனி, ஜோலோஜி பாடங்கள் சொல்லிக் குடுக்கலாம் எண்டு, ஆனா உங்கட லிசான் மாமாவுக்கு அது விருப்பமில்லை.."

அனிதா: "நீங்கள் காசு உழைக்கிறதால அவருக்கு என்ன பிரச்சனையாம்?"

பிரியசகி: "மரியாதை இல்லையாம்.. வீடுவீடா போய் தெருப்பிச்சை எடுக்கிறமாதிரி இருக்குமாம்..."

அனிதா: (சிரிக்கின்றாள்..) "அக்கா டெலிபோன் ரிங்க் பண்ணுது.. நீங்கள் போய் எடுக்கிறீங்களா அல்லது நான் எடுக்கவா?"

பிரியசகி: "நீங்கள் எடுங்கோ..."

அனிதா: "ஹலோ.. கெளத கத்தாக்கரன்ன.."

நோர்வேஜியன்: (சிரிப்பு..) "அனி உனக்கு இப்ப சிங்களமும் தெரியுமே..."

அனிதா: (சிரிப்பு, சந்தோசம்...) "அப்பா, எப்பிடி சுகமா இருக்கிறீங்களா? என்ன விசேஷம்?"

நோர்வேஜியன்: "எனக்கு அமெரிக்காவுக்கு நல்ல ஒரு வேலை கிடைச்சிருக்கிது... குடும்பமா நாங்கள் எல்லாரும் அங்க போறதுக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கிது.. அதான் சொல்ல எடுத்தனான். அம்மாவ உடன ஒருக்கா கூப்பிடு..."

(தமிழ்தங்கையும் நோர்வேஜியனும் உரையாடுகின்றனர்.. குளகாடன் வானவில்லுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபின் திரும்பிச் செல்கின்றார்..)

Posted

லல்லி லா லீ லலி லல்லி லா லீ

தில்லை நட ராஜனுக்கு லல்லி லா லீ...

டங்குட்டக்க டக் டக் டக் டங்குட்டக்க...

டங்குட்டக்க டக் டக் டக் டங்குட்டக்க...

லல்லி லா லீ லலி லல்லி லா லீ

தில்லை நட ராஜனுக்கு லல்லி லா லீ...

டங்குட்டக்க டக் டக் டக் டங்குட்டக்க...

டங்குட்டக்க டக் டக் டக் டங்குட்டக்க...

நாதஸ்வரமும், மேளமும் ஒலித்துக்கொண்டிருந்தது. வடலியடி பிள்ளையார் கோயில் அளங்காரத் திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தது. அழகாக அளங்கரிக்கப்பட்ட சுவாமி வசந்தமண்டபத்தில் சிலகாலம் தங்கியிருந்தபின் தனது பழைய இருப்பிடத்திற்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தது. சின்னப்புவும், ஈழப்பிரியனும், மற்றும் அவர்களது பழைய பாடசாலை நண்பர்களுமாக நான்குபேர் சேர்ந்து சுவாமியை தூக்கி காவினார்கள். "அரோகரா அரோகரா... " இப்போது சத்தம் உச்சஸ்தாயியை அடைந்துவிட்டது. பதினாறு நாட்களாக திருவிழா கொண்டாடிய சுவாமி இன்னும் ஒரு நிமிடத்தினுள் உள்ளே போய்விடுவார். சுவாமியை காவியவர்கள் உடலெங்கும் வியர்வை ஆறாகப் பாய்ந்து ஓடியது. எல்லோரும் வேட்டியை மடித்து இறுகக்கட்டியிருந்தார்கள். இவர்கள் சுவாமி தூக்கி, ஆட்டுவதை கண்டு இரசிப்பதற்கும் கோயிலில் ஒரு கூட்டம் இருந்தது. பக்தர்கள் எல்லோரும் சுவாமி நடனம் ஆடியதைக் கண்டு ஆரவாரம் செய்தார்கள்... ரோஜா, தாமரை, மல்லிகை, செம்பரத்தை, கொன்றல் என பல்வேறு வகையான பூக்கள் சுவாமிமீது தூவப்பட்டுக்கொண்டிருந்தன. இதைவிட பன்னீர் மழைபோல தெளிக்கப்பட்டது... சுவாமிக்கு தூவப்பட்ட பொருட்களில் முக்கால்வாசி சுவாமியை காவியவர்களின் மேல் விழுந்துகொண்டிருந்தது.... இறுதியில்...

டும்டும்டும்டும்டும்........

பீஈஈஈஈ.....

டும்டும்டும்டும்டும்......

மேளதாளங்கள் நிறைவுக்கு வந்து திருவிழாவின் இறுதிப் பகுதி நெருங்கிவிட்டது. விபூதி, சந்தனம், தீர்த்தம், பூக்கள், மற்றும் பிரசாதம் கொடுப்பதே கொண்டாட்டத்தில் இறுதியாக எஞ்சியிருந்தது. முதலில் கோயில் ஐயர் பக்தர்களிற்கு விபூதி கொடுக்க, விது சந்தனம், தூயவன் தீர்த்தம், மற்றும் இன்னொருவர் பூக்களை கொடுத்தனர். சின்னப்புவும், ஈழப்பிரியனும், வேறு சிலரும் பிரசாதம் கொடுத்தனர்.

"ஐயா... ஐயா... ஐயா... எனக்கு, எனக்கு, எனக்கு...."

கோயில் பிரசாதத்தை வாங்குவதற்காக பக்தர்கள் போட்டி போட்டனர். சிலர் முன்வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கிய பின் திரும்பவும் இன்னொருதடவை வாங்குவதற்கு ஓடிப்போய் பின்வரிசையில் நின்றனர்.

"எல்லாருக்கும் தரலாம், அமைதியாக இருங்கோ"

பொங்கல் கொடுத்துக்கொண்டிருந்த ஈழப்பிரியன் தொல்லை தாங்கமுடியாது சத்தமாக கத்தினார்.

"டேய் தம்பி, இப்பயில்லே உனக்கு தந்தனான்? திரும்பவும் இன்னொருக்கா பின்னுக்கு வந்து கைநீட்டிறாய்? மற்றாக்களுக்கு பிரசாதம் கொடுக்கிறேலையே? உனக்கு மாத்திரமே எல்லாத்தையும் தாரது?"

சுண்டல் கொடுத்துக்கொண்டிருந்த சின்னப்பு கோபம் கொண்டு ஒருவனை ஏசிக் கொண்டு இருந்தார். அந்தச் சிறுவன் வெட்கம் காரணமாக பின்னாக விலகிச் சென்று வெளியில் ஓடிவிட்டான். கோயிலுக்கு வருபவர்களில் பலர் பிரசாதம் வாங்கி உண்பதற்காகவே வந்தனர். இவர்களில் பலர் வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள். அவர்களது பெற்றோர் கூலித்தொழில் செய்தார்கள்.

அனிதா மற்றும் பிரியசகி குடும்பத்தை தவிர திருவிழாவிற்கு வழமைபோல் அனைவரும் வந்திருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் வீடுகளிற்கு சென்றபின் இறுதியாக சின்னப்பு குடும்பத்தினரும், ஈழப்பிரியன் குடும்பத்தினரும் கோயிலை சிறிதளவு சுத்தம் செய்த பின் தமது வீடுகளிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்..

தூயா: "அங்கிள் எல்லாம் நல்லமாதிரி ஒரு பிரச்சனையும் இல்லாம முடிஞ்சிட்டு என்ன.."

தேவகி: "ம்ம்.. அப்பாடா எண்டு இருக்கு. இந்தியன் ஆமி, ஈப்பி ஒண்டும் கரைச்சல் தரேல.. சந்தோசமா இருக்கு"

ரசிகை: "தூயா உன்ர சாரி வடிவா இருக்குதடி.."

கறுப்பி: "ஓ அது அம்மா குடுத்து அனுப்பியிருந்தவ.."

தூயா: "ஏன் உன்ர, முகி அக்காட, அன்ரியின்ர சாரிகளும்தான் வடிவா இருக்கு..."

சின்னப்பு: "ஏன் அங்கிளின்ர வேட்டிய பார்க்க வடிவா இல்லையே?" (அனைவரும் சிரிப்பு)

ஈழப்பிரியன்: "இனி நாளைக்கு வேளைக்கு எழும்பி ரியூசன் வகுப்புக்கு போகவேணும்.. பெடியளுக்கும் சோதன வரப்போகிது.."

தேவகி: "எங்கட தம்பியும் சோதின எடுக்க வேணும். எல்லாம் குழம்பிப்போச்சு..." (பெருமூச்சு... அனைவரும் சிறுதுநேரம் மெளனம், கவலை...)

தூயவன்: "வானவில்லும், சுட்டியும் எங்களுக்கு கொழும்பில இருந்து கடிதம் போட்டு இருந்தவங்கள்"

விது: "எங்களுக்கும்தான்.."

முகி: "ஓம் பிரியசகியும் எனக்கு கடிதம் போட்டிருந்தவள்"

தூயா: "எல்லாரும் அங்க ஒன்றா சந்தோசமா இருக்கிறீனமாம். அனிதாவேள் நோர்வேயிக்கு போகாமல் அமெரிக்காவுக்கு போகப்போறீனமாம்"

ரசிகை: "அமெரிக்காவில எந்த இடத்துக்காம் போறீனம்?"

தூயவன்: "பொஸ்டன் எண்டு ஒரு இடமாம்.."

ஈழப்பிரியன்: "ஓ... அமெரிக்கா போனால் பிள்ளைகள் படிக்கிறதுக்கும் வசதியா இருக்கும். இதவிட பிறகு விருப்பமென்றால் கனடாவுக்கும் போகலாம். எல்லாம் பக்கத்தில பக்கத்தில தானே இருக்கு"

சின்னப்பு: "உப்பிடி சனம் எல்லாரும் ஊர விட்டு வெளிக்கிட்டு போனா கடைசியா யார் இஞ்ச இருக்கிறது?"

விது: "ஆமிக்காரன் மட்டும் இருப்பான்.."

தூயவன்: "ஈப்பி ஆட்களும் இருப்பாங்கள்.."

கறுப்பி: "தங்கச்சி டொக்டரா வர இன்னும் எவ்வளவு காலம் இருக்கு?"

முகி: "இன்னும் எட்டு வருசம் இருக்குதன்ரி, ஆனா பிரச்சனை ஒண்டும் வராம இருக்கவேணும். இல்லாட்டி நானும் அரைவாசியில பிரியசகி மாதிரி படிப்ப குழப்பவேண்டி வருகுதோ தெரியாது.."

தேவகி: "ஏண்டி உப்பிடி அபசகுனமா கதைக்கிறாய்? நல்லத நின, நல்லது நடக்கும். கடவுள் கைவிட மாட்டான்.."

தூயவன்: "அங்க யாரோ தூரத்தில துவக்கோட வாரீனம்.." (ஆச்சரியம்.. பயம்.. அனைவரும் மெளனமாக யார் வருகின்றார்கள் என பார்க்கின்றார்கள்..)

விது: (ஆச்சரியம், சந்தோசம்..) "ஈழவன் அண்ணா சைக்கிளில வாரார்..."

(இவர்களைக் கண்ட ஈழவன் வேறுதிசையால் திரும்பிச் செல்கின்றான். அனைவரும் ஏமாற்றம்...)

சின்னப்பு: "பாவம்... அவனுக்கு என்ன பிரச்சனைகளோ... உயிரகையில வச்சுக்கொண்டு திரியுறாங்கள்... எங்கட தம்பியும், யமுனாவும் வன்னியில எப்பிடி இருக்கிறாங்களோ தெரியாது.. " (கவலை..)

ஈழப்பிரியன்: "அவங்கள் அங்க சந்தோசமா இருப்பாங்கள், இஞ்ச எங்களோட இருந்தால்தான் அவங்களுக்கு ஆபத்து..."

தேவகி: "நாங்கள் தம்பிய வன்னிக்கு போய் பார்க்கலாமே அப்பா?"

சின்னப்பு: "இந்தியன் ஆமி இன்னும் ரெண்டு மாதத்தில பெட்டி படுக்கைகள கட்டிக்கொண்டு தங்கட நாட்டுக்கு திரும்பிப் போகப்போறாங்களாம். அதுக்குபிறகு தம்பி எங்கள தேடி வீட்ட வருவான். கொஞ்ச காலம் பொறுமையா இருங்கோ.. "

கறுப்பி: "சரி, எங்கட வீடு வந்திட்டு, நாங்கள் போட்டுவாறம்.. பிறகு சந்திப்பம்.."

தேவகி: "ம்ம்.. சரி..."

தூயவன்: "டேய் விது நீ நாளைக்கு வீட்ட விளையாட வாரியா?"

விது: "ஓம் காலம்பற கட்டாயம் வருவன்."

Posted

காலை பத்துமணி வகுப்பிற்காக யாழ்நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு தூயாவும், ரசிகையும் பேருந்தில் சென்றுகொண்டிருந்தார்கள். காலையில் ஆறு மணிக்கு வகுப்பு இருந்ததால் ஈழப்பிரியன் தூயாவிற்கு முன்பே தனியாக மோட்டார் சைக்கிளில் ரியூசனிற்கு சென்றுவிட்டார். இதைவிட ரசிகைக்கு ஒரு துணை தேவைப்பட்டதால் தூயா தந்தையுடன் சேர்ந்து செல்லவில்லை. மேலும், அப்பாவுடன் சேர்ந்து மகள் மோட்டார் சைக்கிளில் வரும்போது சில மாணவர்கள் கிண்டல் அடிப்பதும் இதற்கு ஒரு காரணம்.

சுமார் ஆயிரத்து இருநூறு மாணவர்கள் கல்விகற்ககூடியவகையில் நான்கு பெரிய கொட்டகைகள் போடப்பட்டிருந்தன. ஒரு கொட்டகையினுள் சுமார் முன்னூறு பேர் ஒதுங்கிக் கொள்ள முடியும். இவை கிடுகு மூலம் வேயப்பட்டிருந்தன. ஆண்களுக்கு இடது புறமும், பெண்களிற்கு வலதுபுறமுமாக மேசைகளும், வாங்குகளும் போடப்பட்டிருந்தன. மாணவர்கள் வாங்கு, மேசைகளை உடைத்துவிடாது இருப்பதற்காக அவற்றின் கால்கள் நிலத்தில் சீமெந்துபூசி நடப்பட்டிருந்தன. கூலிக்குழுக்களின் கட்டாய ஆட்சேர்ப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருந்ததால் மாணவிகள் மாத்திரமே அதிகளவில் சமூகம் தந்திருந்தனர். அருகில் உள்ள வீடுகள், மற்றும் யாழ்நகரில் வாழும் ஒரு சில மாணவர்களும் வகுப்பிற்கு வந்திருந்தனர். ஒரு கொட்டகையில் ஈழப்பிரியன் 1990 ஏ.எல் மாணவர்களிற்கு பெளதிகவியல் கற்பித்துக் கொண்டிருந்தார். அருகாக இருந்த மற்றைய கொட்டகையில் முன்வாங்கில் அமர்ந்து 1991 ஏ.எல் உயிரியல் பிரிவைச் சேர்ந்த தூயாவும், ரசிகையும் விலங்கியல் கற்றுக்கொண்டிருந்தனர். இரண்டு மணித்தியாலங்கள் நடைபெறும் விலங்கியல் வகுப்பில் தற்போது இடைவேளை விடப்பட்டிருந்தது.

ரசிகை: "என்னடி, சரியான கஸ்டமாப் போகிது? ஆத்திரோப்போடாவாம் ,அனெலிடாவாம், மொலஸ்காவாம்.."

தூயா: "ஏன் நாங்கள் இதுகள ஓ.எல் இலையே படிச்சனாங்கள் தானே?"

ரசிகை: "ஓம், ஆனா இப்ப நூற்றுக்கணக்கான புழு, பூச்சிகளின்ற விலங்கியல் பெயர்களையும், உடலமைப்பையும் பற்றியல்லே படிக்க வேண்டி இருக்கு?"

தூயா: "அப்ப உனக்கு விருப்பமில்லையென்றால் மட்ஸ் படிச்சிருக்கலாமே?"

ரசிகை: "ஐயோ பிறகு நான் பெடியங்களோட தனிய இருந்தல்லோ படிக்கவேணும். ஈ பகல்ட்டி கிடைச்சு மொரட்டுவக்கு போனாலும் பெடியங்களோட தான் சகவாசம் வக்க வேண்டி வரும்..."

தூயா: "இல்லையே, இப்ப நிறைய கேர்ல்ஸ் என்ஜினியரிங் செய்யுறீனம் தானே? அத விட சாணக்கியனும் இருக்கிறார்.."

ரசிகை: "அவர் உன்ர ஆள், உனக்கு ஏதாவது உதவி செய்வார். எனக்கு உதவி செய்வாரே?" (சிரிப்பு..)

தூயா: (கோபம்) "சரி அப்ப பேசாம வாய மூடிக்கொண்டு பயோவப் படி..."

(இடையில் ஒருவர் குறுக்கே வந்து ஈழப்பிரியன் கொடுத்ததாக சொல்லி தூயாவிடம் ஒரு சிறிய பார்சலை கொடுத்துவிட்டு போகின்றார். தூயா திறந்து பார்க்கின்றாள்.. மாணவர்கள் எல்லோரும் தூயாவைப் பார்க்கின்றனர்..)

தூயா: (கோபம்) "இந்த அப்பாவுக்கு மண்டையுக்க ஒண்டும் இல்ல. இவ்வளவு ஆக்கள் பார்த்துகொண்டிருக்க எனக்கு வடையும், சம்பலும் சாப்பிடுறதுக்கு அனுப்பி இருக்கிறார். நான் எத்தனையோ தரம் அவருக்கு சொன்னனான், இப்பிடி செய்ய வேண்டாம் எண்டு. இண்டைக்கு வீட்ட வரட்டும் அவருக்கு குடுக்குறன் குடுவ"

ரசிகை: (சிரிப்பு..) "அங்கிள் நீ வயிறு காயிறது விருப்பமில்ல போல இருக்கு.."

தூயா: "அதுக்காக இப்பிடியே ஆக்களுக்கு முன்னால செய்யிறது? ஒரு நேரம் சாப்பிடாட்டி நான் கரைஞ்சே போய்விடுவன்?"

ரசிகை: "சரி, வாத்தி வரப்போகிது, எடடி ரெண்டு பேருமா சேர்ந்து அத அடிப்பம். எனக்கும் பசிக்கிது.." (சிரிப்பு)

(இருவரும் சிற்றுண்டி உண்கின்றனர்..)

வாத்தியார்: "சரி பிள்ளைகள் நாங்கள் இனி பாடத்தை தொடருவம்... கணம் அனெலிடாவப் பற்றி இப்ப பார்ப்பம்... உங்களுக்கு யாருக்காவது அனெலிடாவப் பற்றித் தெரியுமே? எங்க தூயா நீர் சொல்லும் பார்ப்பம் கணம் அனெலிடாவைச் சேர்ந்த ஒரு விலங்குக்கு உதாரணம் ஒண்டு..."

(மற்றைய கொட்டகையில் இருந்து கற்பிக்கும் ஈழப்பிரியனுக்கு இது கேட்க..)

ஈழப்பிரியன்: "என்ன பசியால பிள்ளைகளின்ற வயிறு புழுவாத் துடிக்கிதே?"

(இதைக்கேட்ட மற்றைய கொட்டகையில் பெரிய சிரிப்பொலி..)

வாத்தியார்: "பிறகென்ன அப்பாவே உமக்கு குளூ எல்லாம் சொல்லித்தாரார். மண்புழு எண்டு ஆன்ஸரச் சொல்லுமன். ஏன் வெட்கப்படுகிறீர்?"

(இதைகேட்ட இரண்டு கொட்டகைகளிலும் அனைத்து மாணவர்களும் மீண்டும் பெரிய சிரிப்பொலி...)

தூயா: (மனதினுள்..) "அப்பா இண்டைக்கு வீட்ட வரட்டும் அவருக்கு செய்யுறன் வேல. இந்த விசர் வாத்திதான் ஒவ்வொரு நாளும் என்னட்ட மட்டும் கேள்வி கேட்டு வம்பு செய்யுது எண்டு பார்த்தா இண்டைக்கு இவரும் சேர்ந்திட்டார்... பகிடி விடுறீனமாம். பகிடி.. வீட்ட வரட்டும் கவனிக்கிறன்..."

ரசிகை: (தூயாவின் காலை தனது காலால் தட்டி விட்டு சிரிப்பு)

தூயா: (கோபத்தில் ரசிகையின் காலை தனது காலால் உலக்கி விடுகின்றாள்..)

(இவற்றைக் கவனித்த வாத்தியார்..)

வாத்தியார்: "என்ன பிள்ளைகள் முன்வாங்கில இருந்துகொண்டு ரெண்டு பேரும் நுல்லுப்பிராண்டி, கிள்ளுப்பிராண்டி விளையாடிக் கொண்டு இருக்கிறீங்கள்.."

(திரும்பவும் கொட்டகையினுள் பெரிய சிரிப்பொலி...)

(ரசிகையும், தூயாவும் வெட்கத்தில் தலை குனிகின்றனர். ஒரு மணித்தியாலத்தில் வகுப்பு முடிந்து வெளியே வருகின்றனர்.. )

ஈழப்பிரியன்: (தூயாவைப் பார்த்து)"சரி அப்ப வீட்ட போறீங்களே?"

தூயா: (கோபம்.. ரசிகையைப் பார்த்து..) "சிறீதர் தியட்டருக்கு போய் கோமாளி படம் பார்க்கப் போறமாம் எண்டு சொல்லடி இந்த மனுசனுக்கு.."

ஈழப்பிரியன்: (சிரிப்பு..) "சரி. சரி... நேரகாலத்துக்கு வீட்ட வந்து சேருங்கோ.."

(தூயாவும், ரசிகையும் வீடு செல்வதற்காக யாழ் பேருந்து நிலையம் நோக்கி நடக்கின்றனர்.. )

Posted

இரண்டு, மூன்று போர்வைகளால் போர்த்தபடி லிசான் ஹோலினுள் பாயை விரித்து படுத்திருந்தான். அருகில் பனடோல் குளிகைகள், விக்ஸ் டப்பா இருந்தன. தமிழ்தங்கை கொடுத்த மல்லித்தண்ணீர் அரைவாசி குடிக்கப்பட்ட நிலையில் தம்ளர் ஒன்றினுள் இருந்தது. உடம்பு நெருப்பாய் கொதித்தது. தொண்டை கட்டியிருந்தது. ஆரம்பத்தில் சிறு தடிமனுடன் தோன்றிய காய்ச்சல் இப்போது நூற்று ஒன்று, இரண்டு, மூன்று டிகிரி பரனைட்டுக்களில் அடித்தது. படுக்கையில் லிசான் இன்றுடன் மூன்றாம் நாள். வேலை அலுவல்களையும் பார்க்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் கூலிக்குழுக்களின் பிரச்சனை காரணமாக தற்போது கொழும்பில் இருந்து வியாபாரத்தை கவனித்து வந்தான்.

தமிழ்தங்கை: "தம்பி மாமாவ இண்டைக்கு டெல்மன் ஹொஸ்பிட்டலுக்கு கட்டாயம் கூட்டிக்கொண்டு போகவேணும். சின்னக் காச்சல் எண்டு பார்த்தா இப்ப அது பெருசாகி உடம்பு சரியாச் சுடூது..."

சாணக்கியன்: "நான் மாமாவுக்கு முந்தநாளே சொன்னனான் டொக்டரிட்ட போய் காட்டச் சொல்லி. அவர்தான் பனடோலப் போட காச்சல் நிண்டிடும் எண்டு பஞ்சியில பேசாம இருந்திட்டார்.."

("ஆஆஆ.... அம்மா..." லிசான் வேதனையால் சத்தம் போடுகின்றார்..)

தமிழ்தங்கை: (லிசானிடம்..) "தம்பி என்னப்பன் செய்யுது? அக்கா இன்னொருக்கா மல்லித்தண்ணி தரட்டே?"

பிரியசகி: "முன்னுக்கு குடுத்ததே இன்னும் அரைவாசிப் பேணி குடிக்காம இருக்கு... அன்ரி, இந்த மல்லித்தண்ணிகள் சரிப்பட்டு வராது. உடன டொக்டரிட்ட கூட்டிக்கொண்டு போங்கோ.."

அனிதா: "அக்கா, நீங்களும் டொக்டருக்கு ரெண்டு வருசமா படிச்சனீங்கள் தானே? நீங்களே ஒருக்கா மாமவ பாருங்கோவன்.."

பிரியசகி: "ம் பார்க்கிறன்..." (லிசானின் கழுத்து, செஞ்சுப் பகுதிகளில் கைவைத்து பார்க்கின்றாள். நாடியும் பிடித்துப் பார்க்கின்றாள்) "பல்ஸ் வீக்கா இருக்கு, சரியான பலவீனமா இருக்கிறார், இது சாதாரண காச்சல் போல தெரியேல.."

சாணக்கியன்: "இப்ப கொழும்பில டெங்கு எண்டு ஒரு காச்சல் எல்லா இடமும் பரவுவதா வீரகேசரி பேப்பரில போட்டு இருக்கு"

இனியவள்: "காச்சல் இன்னும் முற்றுறதுக்கில லிசான உடன ஓட்டோ ஒன்றில ஏத்தி கொஸ்பிட்டலுக்கு கொண்டுபோங்கோ.."

தமிழ்தங்கை: "ஓம் இனியும் பொறுக்கேலாது.. அப்பிடியே செய்வம். டேய் தம்பி சுட்டி, வெளியில நிற்கிற ஓட்டோ ஒன்றப் பிடிச்சுக்கொண்டு வா, மாமாவ ஹொஸ்பிட்டலுக்கு கூட்டிக்கொண்டு போகவேணும்"

(ஓட்டோ பிடிக்க சுட்டி வெளியில் ஓடுகின்றான்.. "பார்த்து கவனம், ஓடி விழுந்துபோகாத, பிறகு உன்னையும் கொஸ்பிட்டலுக்கு கொண்டு போகவேண்டி வந்திடும்" தமிழ்தங்கை எச்சரிக்கை)

இதேவேளை வன்னிமைந்தனும் வீட்டுக்கு தொலைபேசி எடுத்து பிரியசகியுடன் உரையாடிவிட்டு, லிசானை உடனடியாக மருத்துவரிடம் கூட்டிச் செல்லுமாறு பணிக்கின்றார், ஓட்டோ வருகின்றது. லிசானுடான் தமிழ்தங்கையும், சாணக்கியனும் கூடச்செல்கின்றனர். இந்நேரத்தில் வானவில்லுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதற்காக குளகாடன் வருகின்றார்.

குளகாடன்: "எனி புரப்லம்?"

அனிதா: "மை அங்கிள் இஸ் சிக். தே ஆ கோயுங் டு டெல்மன் ஹொஸ்பிடல்.."

குளகாடன்: "ஓ ஐ சீ..."

(வானவில்லுக்கு பாடம் தொடங்குகின்றது. அனிதாவும், பிரியசகியும் அறையினுள் செல்கின்றனர்)

பிரியசகி: (சிரிப்பு..) "என்ன அவருக்கு தமிழ் தெரியாதா?"

அனிதா: "ம் தெரிஞ்சிருக்கும், ஆனா இஞ்ச எல்லாரும் இங்கிலிசிலதானே கதைக்கிறீனம்?"

பிரியசகி: "அதுக்காக நீங்களும் ஏன் அப்பிடி? அவர் என்னமும் கேட்டா இனி தமிழில பதில் சொல்லுங்கோ, அப்ப அவரும் தமிழில கதைப்பார்.."

அனிதா: "சரி, பார்ப்பம்.."

(இனியவள் அறையினுள் வருகின்றாள்..)

இனியவள்: "இண்டைக்கு கதிரேசன் கோயிலுக்கு போறதெண்டு கதைச்சுக்கொண்டு இருந்தீங்கள்.. என்னமாதிரி?"

அனிதா: "ஓம் அன்ரி, ஆனா மாமாவுக்கு சுகமில்ல, நாளைக்கு போகலாம் எண்டு அம்மா சொன்னா"

பிரியசகி: "நானும் ஒருக்கா அங்க போகவேணும். கொழும்புக்கு வந்ததுக்கு இன்னும் ஒரு கோயிலும் போய்ப்பார்க்கேல.."

இனியவள்: "கோயில் உதுல பக்கத்திலதானே இருக்கு, நானும் அன்ரியும் பிறகு போறம், நீங்கள் இப்ப வீட்டில சும்மாதானே இருக்கிறீங்கள்? கோயிலுக்கு போய் லிசானிர பெயரில ஒரு அர்ச்சனை செய்துபோட்டு வாங்கோவன்?"

அனிதா: "அன்ரி சொல்லுறதும் சரிதான் அக்கா, அம்மாவோட பிறகு போகலாம், வாங்கோ நானும், நீங்களும் பக்கத்தில கோயிலுக்கு போட்டு வருவம். எனக்கு வீட்டில இருந்து போர் அடிக்கிது.."

பிரியசகி: "எனக்கும் வீட்டில சும்மா இருந்து விசரா இருக்கு, சரி வாங்கோ கோயிலுக்கு போவம்"

(சிறிது நேரத்தில் இருவரும் கதிரேசன் கோயிலுக்கு செல்கின்றனர். இவ்வேளையில் குளகாடனும் வானவில்லுக்கு பாடம் முடிந்தபின் அடுத்த ரியூசன் வகுப்பிற்காக புறப்படுகின்றார்.)

சுட்டி: "அக்கா நானும் வரவே?"

அனிதா: "இல்ல நீ வீட்டில வானவில்லோட விளையாடிக்கொண்டிரு, அன்ரி தனிய.."

குளகாடன்: "ஆ யூ கோயிங் ஒளட் சைட்?"

பிரியசகி: "யா" (அனிதாவைப் பார்த்து ஒரு சிரிப்பு)

குளகாடன்: "ஓ கே, ஐ ஹாவ் டு கோ டு வெள்ளவத்த, ஐ காவ் எனத டியூசன் கிளாஸ்"

அனிதா: "சரி போட்டு வாங்கோ..."

(பேருந்து பிடிப்பதற்காக குளகாடன் விரைந்து செல்கின்றார்)

பிரியசகி: "நல்லா ஓடியோடி உழைக்கிறார் என?"

அனிதா: "வீட்டில கஸ்டமாக்கும்"

பிரியசகி: "நாங்கள் நாளைக்கு அந்த பீச்சுக்கு போவமே?"

அனிதா: "ஓம் எனக்கும் விருப்பமா இருக்கு.."

(திடீரென ஒருவர் குறுக்கிட்டு "ஹாஆஆய்! எங்க நீங்கள் இஞ்ச?" அனிதாவும், பிரியசகியும் திடுக்கிடுகின்றனர். பின் சந்தோசம், சிரிப்பு..)

அனிதா: "நீங்கள் இன்னும் கொழும்பிலையே இருக்கிறீங்கள்? கனடாக்கு இன்னும் போகேலையே?"

சினேகிதி: "அம்மாவுக்கு ஒரு மெடிக்கல் புரப்பிலம், போறதுக்கு இன்னும் கொஞ்ச காலம் எடுக்கும்"

அனிதா: "இஞ்ச எங்க இருக்கிறீங்கள்?"

சினேகிதி: (கையை காட்டுகின்றார்..) "அந்த பில்டிங்!"

அனிதா: "ஓ பிளட்ஸ்"

பிரியசகி: "நாங்கள் நினைச்சம் நீங்கள் இப்ப கனடாவிலயாக்கும் எண்டு"

சினேகிதி: "அதுசரி, நீங்கள் எங்க கொழும்புக்கு? ஜவ்னா கம்பசில மெடிசனில்லா செய்யுறீங்கள்?"

(பிரியசகி, அனிதா நடந்த பிரச்சனைகளையெல்லாம் சினேகிதிக்கு விளங்கப்படுத்துகின்றனர். தமது வீட்டு விலாசங்கள், தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக்கொள்கின்றனர்.)

சினேகிதி: "நான் உங்கள நாளைக்கு அம்மாவோட வீட்ட வந்து சந்திக்கிறன்"

அனிதா: "ஓ கட்டாயம் வாங்கோ, உங்கள பார்த்துக்கொண்டு இருப்பம்"

பிரியசகி: "அப்ப லன்ச் எங்கட வீட்ட எடுக்கிறீங்களே?"

சினேகிதி: "இல்ல, காலம்பற எனக்கு கொம்பியூட்டர் வகுப்பு இருக்கு, டினருக்கு வாறம்"

(பிரியசகி, அனிதா கோயிலுக்கு போகின்றனர், சினேகிதி வீட்டுக்கு செல்கின்றாள்)

Posted

வயற்புறத்தில் ஓர் பெரிய அரசமரத்தின் கீழ் பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. மரத்தின் அடிப்புறத்தில் உள்ள பெரிய துவாரத்தினுள் பிள்ளையார் விக்கிரகம் ஒன்று தான்தோன்றியாக உருவாகியிருந்தது. அருகில் குளம் இருந்தது. சுற்றிவர வயல்வெளி. வீடுகள் ஒன்றும் அருகில் இல்லை. வயல் சொந்தக்காரர்கள் இந்தக் கோயிலை பராமரித்து வந்தார்கள். தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு போன்ற ஏதாவது விசேட நாட்கள் தவிர வேறுநாட்களில் ஒருவரும் இந்தக் கோயில்பக்கம் வருவதில்லை. கோயில் அரசமரத்தில் பேய் இருப்பதாக பல வருடங்களாக கதை கட்டப்பட்டிருந்ததே இதற்கான காரணம். அரச மரத்தின் உச்சியில் ஏறி இருந்தால் சுற்றிவர உள்ள நான்கு ஊர்களை தெளிவாக அவதானிக்க முடியும். அரச மரக்கொப்புக்கள் பல தாழ்வாகப் பதிந்து குளத்தினுள் சென்றன. இதில் ஒரு கிளையில் சஜீவன் ஏறி இருந்து தனது கால்களை குளிர்ந்த தண்ணீரில் அடித்து விளையாடிக் கொண்டு இருந்தான். இன்னொரு கிளையில் இருந்த மருதங்கேணி இரண்டு கட்டாக்காலி மாடுகள் குளத்தில் தண்ணீர் குடிப்பதை இரசித்துக்கொண்டு இருந்தான். மரத்தின் உச்சியில் ஏறி இருந்த புத்தன் இந்திய இராணுவத்தின், மற்றும் கூலிக்குழுக்களின் நடமாட்டம் ஏதாவது தெரிகின்றதா என தொலைநோக்கியூடாக பார்த்துக்கொண்டு இருந்தான். சஜீவனிடம் ஏராளமான கைக்குண்டுகள் இருந்தன. இதைவிட ஒரு சிறிய கைத்துப்பாக்கியையும் வைத்திருந்தான். மருதங்கேணி சுமார் நான்கு அடி நீளமான பாரமான பெரிய துப்பாக்கி ஒன்றை மடியில் வைத்திருந்தான். புத்தனிடமும் மருதங்கேணி வைத்திருந்தது போன்ற ஒரு துப்பாக்கி இருந்தது. சஜீவன் கைக்குண்டை பொருத்தமான நேரங்களில், பொருத்தமான இடத்தில் துல்லியமாக இலக்குப் பார்த்து எறிந்து எதிரிகளிற்கு பேரழிவை ஏற்படுத்துவதில் வல்லவன். இதனால், துப்பாக்கியைவிட கைக்குண்டையே பிரதானமான ஆயுதமாக அவன் பாவித்து வந்தான்.

புத்தன்: (சத்தமாக..) "சஜீ... தூரத்தில எங்கட ஆக்கள் வாரீனம் போல இருக்கு..."

சஜீவன்: "அப்பிடியே, கொஞ்சம் பொறு நானும் வாறன்..." (மரக்கொப்பில் மேலே ஏறுகின்றான்...)

(இவ்வேளையில் ஈழவனும், யமுனாவும், ஆதியும் ஆயுதங்களுடன் இரண்டு சைக்கிள்களில் பிள்ளையார் கோயிலை அண்மித்துவிட்டனர்...)

புத்தன்: "அவங்கள் கிட்ட வந்திட்டாங்கள், நீ இறங்கிப் போய் கத, நான் ஆமி வருதா எண்டு பார்க்கிறன்"

(சஜீவன் கீழே இறங்கிச் செல்கின்றான்..)

ஈழவன்: "தம்பிமார் எப்பிடிச் சுகங்கள்?"

மருதங்கேணி: "இருக்கிறம் அண்ண"

(யமுனாவும், ஆதியும் சஜீவனை ஓடிச்சென்று அணைத்துக் கொள்கின்றனர்.)

யமுனா: "எப்பிடி சஜி அண்ண சுகமே? உங்களக் கண்டு எவ்வளவு காலமாச்சு..."

ஆதி: "நீங்கள் இயக்கத்துக்கு போனாப்பிறகு இண்டைக்குத்தான் திரும்பவும் காணுறம்"

சஜீவன்: "சுகமா இருக்கிறண்டாப்பா, நானும் உங்களக்கண்டு கனகாலம்.. உங்கட பிரச்சனைகளயெல்லாம் புத்தன் சொன்னான். எங்களுக்கெண்டு ஒரு நாடு இல்லாதவரை எங்கள கண்டவனும் ஏறி உலக்கி மிதிச்சுக்கொண்டு இருப்பாங்கள் இந்த இந்தியன் ஆமிமாதிரி... "

ஈழவன்: "சரி, நாங்கள் உடன கிளம்பவேணும்... பின்னேரம் ரெண்டே முக்கால் அளவில ஆமி ரோட்டில நிப்பாங்கள், பிறகு எங்கட இடத்துக்கு போறது கஸ்டம்.."

சஜீவன்: "புத்தன் அண்ண இறங்குங்கோ உடன போகவேணுமாம்.."

(புத்தன் கீழே இறங்கி வருகின்றான். பற்றைகள் உள்ள இரகசியப் பாதையூடாக நான்கு துவிச்சக்கர வண்டிகளில் அனைவரும் மடத்தடி முருகன் கோயில் மறைவிடத்திற்கு செல்கின்றனர்.)

யமுனா: "எனக்கு இந்த இடம் நல்ல பழக்கம் ஈழவன் அண்ண, ஆனா இப்பிடி ஒரு குறுக்குப் பாத இருக்கிறது இண்டைக்குத்தான் தெரியும்..."

ஈழவன்: "ஓம் ஊர் வயல்காரர் தவிர, ஆமியுக்கும் இந்தப்பாதைய பாவிச்சு பழக்கம் இல்ல.."

மருதங்கேணி: "கருணா ஒரே அட்டகாசமாம் அண்ண... எங்களுக்கு இஞ்ச சாப்பாடு தாற, வயலில வேல செய்யுற அக்கா சொன்னவ"

ஈழவன்: "ஓ அவனுக்கு பாட கட்டச்சொல்லி ஓடர் வந்திட்டுது. நல்ல சந்தர்ப்பத்துக்காக பாத்துக்கொண்டு இருக்கிறம்"

சஜீவன்: "அப்ப அந்த கடக்கணக்கு என்னமாதிரி.."

ஈழவன்: "கடக்கணக்கு நாளைக்கு செய்து முடிக்கலாம் எண்டு தீர்மானிச்சு இருக்கிறம். அதுக்காகத்தான் இப்ப எங்கட இடத்துக்கு எல்லாரும் போறம்"

(ஏதோ தாக்குதலில் தாம் நாளை ஈடுபடப்போகின்றோம் என்பதை புத்தனும், மருதங்கேணியும், யமுனாவும், ஆதியும் ஊகித்துக் கொள்கின்றனர்..)

யமுனா: "அண்ண நிப்பாட்டுங்கோ, அவசரமா வெளியால போகவேணும்..."

ஆதி: "என்ன மச்சான் நேரம் கெட்ட நேரத்தில் இப்பிடிக் கேக்கிறாய்..."

ஈழவன்: "வேண்டாம். அவன் காற்சட்டைய நாறப்பண்ணினா எல்லாம் குழம்பிப் போகும். கொஞ்சம் நில்லுங்கோ" (யமுனாவைப் பார்த்து) "ஒரு நிமிசத்தில அலுவல உடன முடிச்சுக்கொண்டு வா"

ஆதி: "பற்றையுக்க பாம்பு நிக்கும் கவனம்.. காஞ்சோண்டி மரமும் இருக்கு. பாத்துப்போ"

(யமுனா மலசலம் கழிப்பதற்காக பற்றையொன்றினுள் ஒதுங்கிக் கொள்கின்றான். மற்றவர்கள் ஆமி வருகின்றானா என நோட்டம் இடுகின்றனர்... தூரத்தில் இந்திய இராணுவத்தின் வாகன இரைச்சல் கேட்கின்றது)

ஈழவன்: "அது ஒண்டும் இல்ல, அவங்கள் எங்கையோ தூர இடத்துக்கு போறாங்கள். எங்களுக்கு பிரச்சனை இல்ல, சரி வாங்கோ நாங்கள் நடையக் கட்டுவம்.."

அனைவரும் மடத்தடி முருகன் கோயில் மறைவிடத்தை சென்றடைகின்றனர்.. இரவுப் பூசைக்கு வந்த சாத்திரி மடப்பள்ளியில் விட்டுச் சென்ற உணவை அனைவரும் உண்டுவிட்டு, சிறிதுநேரம் உரையாடியபின், இரவு எட்டுமணியளவில் தூங்குகின்றனர். புத்தனும், யமுனாவும் முதலில் காவலுக்கு நிற்கின்றனர். சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின் மருதங்கேணியும், ஆதியும் காவலுக்கு நிற்கின்றனர். பின் ஈழவனும், சஜீவனும் விழித்திருக்க மற்றவர்கள் தூங்குகின்றனர். அதிகாலையில் ஊரவர்கள் கோயில்பக்கம் வருமுன்னரே தமது காலைக் கடன்களை கழித்துவிட்டு, கோயிலில் இருந்து ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ள இன்னொரு மறைவிடத்துக்கு சென்று தாக்குதலிற்கு தேவையான ஆயுதங்களை ஒழுங்குபடுத்திக் கொள்கின்றனர். பின் அதிகாலை ஐந்துமணிக்கு திரும்பவும் மடத்தடி முருகன் கோயிலிற்கு திரும்பி மறைவிடத்தில் ஒளிந்து இருக்கின்றனர். காலைப் பூசையை சாத்திரி வந்து முடித்துவிட்டு, காலை சுமார் எட்டு மணியளவில் கோயிலைப் பூட்டிச் சென்றபின் ஈழவன் தாம் நடாத்தப்போகும் தாக்குதலைப் பற்றி மற்றவர்களிற்கு விளக்குகின்றான்.

ஈழவன்: "நாங்கள் இண்டைக்கு பள்ளிக்குடத்துக்கு பக்கத்தில இருக்கிற இந்தியன் ஆமிசென்ரிப் பொயிண்ட் ஒன்ற அடிக்கப்போறம். இண்டைக்கு பள்ளிக்கூடம் பூட்டு, லீவு நாள். ஆமியத் தவிர அதடியில இண்டைக்கு ஆக்கள் நடமாடுறது சரியான குறைவா இருக்கும். முதலில நானும், ஆதியும் கடைக்கு சாமான் வாங்க வாற ஆமிய சுட்டுப்போட்டு குறுக்கு வழியால ஓடி வயல்கர பிள்ளையார் கோயிலிக்கு போயிடுவம். நாங்கள் ஆமிய கடையில வச்சுச் சுட்டோன பள்ளிக்கூட சென்றிப் பொயிண்டில இருக்கிற ஆமியவேள் கடையில செத்துக்கிடக்கிற ஆமியப் பார்க்க ஓடி வருவீனம். இந்த நேரத்தில நீங்கள் எல்லாருமாச் சேர்ந்து சென்ரிப் பொயிண்ட அடிக்க வேணும். அடிச்சுப்போட்டு இப்ப நாங்கள் போறபாதையால திரும்பி வந்து, பிறகு நேற்று வந்த பாதையால பிள்ளையார் கோயிலிக்கு வந்து சேரவேணும். இதுக்குப்பிறகு ரெண்டு நாளைக்கு நாங்கள் அங்கதான் இருக்க வேணும். இஞ்ச இருக்க ஏலாது.. "

சஜீவன்: "மற்றது நாங்கள் இந்த தாக்குதல் செய்வதற்கான காரணம், பள்ளிக்கூட சென்ரிப்பொயின்ரில இருக்கிற இந்தியன் ஆமி படிக்கிற பிள்ளைகளுக்கு சரியான கரைச்சல் குடுக்கிறாங்கள். பொம்பிளைப் பிள்ளைகளோட சேட்டை விடுறாங்கள். படிக்கப்போற பெடியன்களப் பிடிச்சு வெருட்டுறாங்கள், அடிக்கிறாங்கள். போன மாதம் ஈப்பியோட சேர்ந்து பள்ளிக்கூடத்தில படிப்பிக்கிற ஒரு மாஸ்டரையும், ஒரு மாணவனையும் சாக்காட்டிப் போட்டாங்கள்..."

அனைவரும் சிறிது நேரத்தில் தாக்குதலிற்கு புறப்பட்டுச் செல்கின்றனர். காலை பதினொரு மணியளவில் முதலில் ஈழவனும், ஆதியும் சேர்ந்து பாடசாலைக்கு அருகில் உள்ள கடையிற்கு பொருட்கள் வாங்கவந்த இரண்டு இந்திய இராணுவச் சிப்பாய்களை கைத்துப்பாக்கியினால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்செல்கின்றனர். இந்தப் பதற்றத்தில் சென்ரிப் பொயின்ரில் இருந்து ஏற்கனவே எதிர்பார்த்தபடி இந்திய இராணுவச் சிப்பாய்கள் கடைப் பக்கம் ஓட இரு நிமிடங்களில் பாடசாலைக்கு அருகில் இருந்த சென்ரிப் பொயின்ட் தாக்கி அழிக்கப்படுகின்றது. மின்னலெனப் பாய்ந்து சஜீவன் துல்லியமாகப் பார்த்து அடுத்தடுத்து எறிந்த மூன்று கைக்குண்டுகள் சென்ரிப் பொயின்டுக்கு முடிவுகட்டுகின்றன. கடை வாசலில் இறந்த இரண்டு இராணுவச் சிப்பாய்களின் பிணங்கள் இரத்த வெள்ளத்தில் காணப்படுகின்றது. இந்திய இராணுவத்தின் காவலரணினுள் நான்கு இராணுவச் சிப்பாய்களின் பிணங்களும், தெருவில் இரண்டு இராணுவச் சிப்பாய்களின் பிணங்களும் காணப்படுகின்றன. தெருவில் இறந்த சிப்பாய்கள் நேரடித் துப்பாக்கிச் சமரின் போது சுட்டுக்கொல்லப்பட்டனர். கைப்பற்றிய ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு அனைவரும் வயல்கரை பிள்ளையார் கோயிலிற்கு வெற்றிக் களிப்புடன் போய்ச் சேருகின்றனர். பாடசாலை அருகில் இருந்த கடையின் சொந்தக்காரன் அவசரமாக தனது கடையை மூடிவிட்டு, பயத்தில் வாயில் ஏதேதோ புலம்பியபடி, தனது வீடு நோக்கி ஓடிச்செல்கின்றான். தெரு வெறிச்சோடிக்கிடக்கின்றது. பாடசாலைச் சூழலில் மயான அமைதி நிலவுகின்றது.

Posted

ஊரில் பிரச்சனை முற்றிவிட்டதன் காரணத்தாலும், சின்னப்பு, மற்றும் ஈழப்பிரியன் குடும்பத்தினருக்கு ஆதியும், யமுனாவும் ஊரிலேயே ஈழவனுடன் திரிகின்றார்கள் என்ற தகவல் தெரிந்துவிட்டதன் காரணத்தாலும் சின்னப்பு முகியையும், ரசிகையையும் யாழ்ப்பாண நகரில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு தற்காலிகமாக அவர்களை தங்கவைத்தார். விது மட்டும் தாய், தந்தையுடன் ஊரில் இருந்தான். யாழ் நகரில் இருந்தமையால் முகியிற்கு பல்கலைக்கழகம் சென்றுவருவது இலகுவாக இருந்தது. படிப்பதற்கு நிறைய நேரமும் கிடைத்தது. ரசிகை தற்காலிகமாக ஈழப்பிரியனின் உதவியுடன் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்தாள். இதனால் தூயா துணையின்றி தனித்துவிட்டாள். தன்னையும் இந்து மகளிர் கல்லூரிக்கு தற்காலிகமாக மாற்றிவிடுமாறு ஈழப்பிரியனை அவள் கேட்டிருந்தாள். ஆனால், ஈழப்பிரியனோ தூயாவையும், தூயவனையும் பிரச்சனைகள் முடியும்வரை தற்காலிகமாக கொழும்பிற்கு அனுப்பிவைக்கும் யோசனையில் இருந்தார். கறுப்பியும் இதையே விரும்பியிருந்தாள்.

இன்று போயா விடுமுறைநாள், காலையில் ஒன்றாக சேர்ந்து படிப்பதற்காக முகி மதனையும், மணிவாசகனையும் எதிர்பார்த்து காத்திருந்தாள். ரசிகை அருகில் இருந்த தெரிந்த ஒரு சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றுவிட்டாள். காலை பத்துமணியளவில் மதனும், மணிவாசகனும் ஒரு சைக்கிளில் முகியின் வீட்டுக்கு வந்துசேர்ந்தனர். தாம் கொண்டுவந்த பையினுள் படிக்க வேண்டிய பல பாடப்புத்தகங்களை அவர்கள் அள்ளிக்கொண்டு வந்தனர்.

முகி: "வாங்கோ, வாங்கோ, என்ன லேட்?"

மணிவாசகன்: "நானில்ல, இவன்... நித்திரையால எழுப்பி, முகம் கழுவ வச்சு கூட்டிக்கொண்டு வாறன்..." (சிரிப்பு)

மதன்: "நீங்கள் சோதினைக்கு ரெடியே?"

முகி: "நான் எவ ரெடி..."

மதன்: "சரி, படிக்க தொடங்குவமே..."

மணிவாசகன்: "இப்பதானே வந்தனாங்கள்? எனக்கு உன்ன வச்சு சைக்கிளில ஓடினது களைப்பா இருக்கு. முகி கொஞ்சம் தண்ணி கொண்டு வாறீங்களா?"

(முகி குளிர்பானம் எடுப்பதற்காக செல்கின்றாள்.. )

மணிவாசகன்: "பிரியசகி விசர் வேல பாத்திட்டா என?"

மதன்: "ஏன் அவள இஞ்ச இருந்து சாகச்சொல்லிறியே?"

மணிவாசகன்: "இல்ல, ஊரில தானே பிரச்சனை? கொஞ்சக்காலத்துக்கு முகிமாதிரி ஜவ்னா டெளனுக்க இருந்து படிச்சிருக்கலாம். இப்ப படிப்ப குழப்பிப்போட்டு கொழும்பில சும்மா போய் பீச் பாத்துகொண்டு இருக்கிறா.."

மதன்: "இல்ல, பிரியசகி அவுஸ்திரேலியாவுக்கு படிக்கப் போகப்போறாளாம்.."

(ரசிகை வீட்டுக்கு திரும்பி வருகின்றாள்.. )

முகி: "என்ன போனதும், வந்ததுமா உடன வந்திட்டாய்?"

ரசிகை: "அங்க யாரோ விசிட்டேர்ஸ் வந்திருக்கிறீனம்.."

மணிவாசகன்: "பரவாயில்ல, எங்களோட இருந்து படியுங்கோ, நீங்களும் அக்கா மாதிரி வாற வருசம் மெடிசன் எண்டர் பண்ணிவீங்கள் தானே?"

ரசிகை: "தெரியேல.."

முகி: "நாங்கள் படிக்கப்போறம், நீ வெளி ஹோலுக்க போய் இருந்து படி.."

(ரசிகை தனது புத்தகங்களை தூக்கிக்கொண்டு படிப்பதற்காக ஹோலிற்கு செல்கின்றாள்...)

சின்னப்பு வீட்டு வளவைக் கூட்டி துப்பரவு செய்துகொண்டிருந்தார். தேவகியும், விதுவும் தூயா வீட்டிற்கு சென்றனர். ஈழப்பிரியன் சின்னப்புவுடன் கதைகொடுப்பதற்காக சின்னப்பு வீட்டிற்கு செல்ல தயாரானார். தூயா படித்துகொண்டிருந்தாள். தூயவன் பூக்கன்றுகளிற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தான். கறுப்பி சமையல் அறையில் அலுவலாக இருந்தாள்.

ஈழப்பிரியன்: "நான் அங்க போறன். நீங்கள் இஞ்ச வாறீங்கள்! வீட்டில அண்ண நிற்கிறார் தானே?"

விது: "ஓமங்கிள்.."

தூயவன்: "நீயும் வாறியே ரெண்டு பேருமா தண்ணி விடுவம்.."

விது: "வாறன்..."

தேவகி: "எங்க அம்மாவக் காணேல.."

கறுப்பி: "வாங்கோ, குசினியுக்க கையில அலுவலா இருந்தனான்."

தூயா: "அன்ரி, ரசிகை, முகியக்கா சுகமாய் இருக்கிறீனமே?"

தேவகி: "ம் இருக்கிறீனம்.."

இந்த நேரத்தில் கன காலத்திற்கு பின் வடிவேல் ஈழப்பிரியன் வீட்டுக்கு வருகின்றான்.

தூயவன்: "அங்க யார் வாரெண்டு பாருங்கோ.." (ஆச்சரியம்)

தூயா: "இஞ்ச வடிவேல் அண்ணா வாரார்.." (சந்தோசம்)

தூயவனும், விதுவும் வடிவேலை வரவேற்பதற்காக வீட்டுப் படலையை நோக்கி ஓடிச்செல்கின்றனர்.

கறுப்பி: (மனதினுள்) "இவன் வழமையா வரமாட்டான். இண்டைக்கு கன காலத்துக்கு பிறகு வாறான். என்னமும் பிரச்சனையோ?"

தூயா: "என்னண்ன எப்பிடி சுகம்? என்ன திடீரெண்டு இந்தப்பக்கம்?"

வடிவேல் பதற்றத்துடன் தான் வந்த காரணத்தை கூறுகின்றான்.

வடிவேல்: "வாங்கோ, வீட்டுக்க போய் கதைப்பம்.."

கறுப்பி: "ம் சொல்லுங்கோ..."

வடிவேல்: "உங்களிட்ட சொல்லச் சொல்லி ஈழவன் சொன்னவன்..." (தயக்கம்...)

கறுப்பி: (பதற்றத்துடன்..)"ம் சொல்லு.."

வடிவேல்: "உங்கட தம்பி யமுனா எதிர்பாராத விதமா இந்தியன் ஆமீட்ட பிடிபட்டுப் போனானாம்.." (அனைவரும் அதிர்ச்சி... சிறிது நேரத்தின் பின்..)

தேவகி: "பிறகு..."

வடிவேல்: "எங்க கொண்டுபோய் வச்சு இருக்கிறாங்கள் எண்டு தெரியாது..."

கறுப்பியும், தூயாவும் அழத்தொடங்கின்றனர். ஈழப்பிரியனிடம் விசயத்தை சொல்ல விது தனது வீட்டுக்கு ஓடிச்செல்கின்றான். தூயவன் திகைத்துப் போய் நிற்கின்றான். தேவகி கறுப்பிக்கும், தூயாவுக்கும் ஆறுதல் வார்த்தை கூறுகின்றாள்.

வடிவேல்: (தேவகியைப் பார்த்து கூறுகின்றான்..)"மற்றது, ஆதி கவனமா தங்களோட இருக்கிறான் எண்டும் சொல்லச் சொன்னான். சின்னப்புக்கு ஈப்பியாலயும், இந்தியன் ஆமியாலையும் ஏதும் ஆபத்து வரலாம் எண்டும் கொஞ்ச நாளைக்கு பாதுகாப்புக்கா, ஊரவிட்டு உடனடியாக் கிளம்பி எங்கையாவது போகச்சொல்லியும் சொல்லச் சொன்னான். "

இப்போது தேவகியும் அதிர்ச்சி. செய்தியைக்கேட்ட சின்னப்புவும், ஈழப்பிரியனும் உடனடியாக வடிவேலைச் சந்திக்க வருகின்றனர். ஆனால், அவர்கள் வருமுன், வடிவேல் செய்தியைச் சொல்லிவிட்டு போய்விட்டான். உடனடியாகத் தாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சின்னப்பு குடும்பத்தினரும், ஈழப்பிரியன் குடும்பத்தினரும் நீண்ட நேரமாக கலந்து ஆலோசிக்கின்றனர்.

Posted

லிசான் மூன்று கிழமைகளாக டெல்மன் வைத்தியசாலையில் படுத்த படுக்கையாக இருந்தான். இன்று நோய் ஓரளவு குறைந்துவிட்டது. ஆனால் தொடர்ந்தும் மிகவும் பலவீனமாக இருந்தான். கையினூடாக சேலைன் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. நெற்றியில் கதிரேசன் கோயிலில் அர்ச்சனையின்போது பெற்ற விபூதி பூசப்பட்டிருந்தது. தினமும் இரவில் தமிழ்தங்கை லிசானுடன் தங்கினாள். காலையில் பிரியசகியும், அனிதாவும் துணைக்கு நின்றனர். முழிப்பாக உள்ள நேரங்களில் லிசானுக்கு பொழுதுபோவதற்காக வானொலிப் பெட்டி போடப்பட்டது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திகளில் ஊரில் நடைபெறும் சம்பவங்களும் வாசிக்கப்பட்டது. அண்மையில் ஈழவன், சஜீவன் மற்றும் குழுவினர் சேர்ந்து எட்டு இந்திய இராணுவத்தை கொன்ற சம்பவத்தை லிசான் செய்திகளில் கேட்டு அறிந்து மகிழ்ச்சியடைந்தான். எனினும், யமுனா இந்திய இராணுவத்திடம் பிடிபட்ட விடயம் இன்னும் தெரியவில்லை. லிசானின் கட்டிலிற்கு அருகில் ஒரு கதிரையைப் போட்டு அதில் பிரியசகி அமர்ந்திருந்தாள்.

பிரியசகி: (தலையைத் தடவிப் பார்த்துவிட்டு) "கொஞ்சம் ஹோர்லிக்ஸ் கரைச்சு தாறன் குடிக்கிறீங்களா?"

லிசான்: "வேணாம். வாயெல்லாம் கைக்கிது. பிறகு பாப்பம்"

பிரியசகி: "சாப்பாடும் இல்ல, தண்ணியும் இல்ல, இப்பிடி எத்தன நாட்களுக்கு இருக்கப் போறீங்கள்?"

லிசான்: "இன்னும் ரெண்டு நாளில வீட்ட போகலாம் எண்டு டொக்டர் சொன்னவர். அங்க போய் நல்லாச் சாப்பிடுவம்..."

(வன்னிமைந்தன் வானவில்லுடன் லிசானைப் பார்க்க வருகின்றார்...)

வன்னிமைந்தன்: "லிசான் இப்ப உடம்பு உங்களுக்கு எப்பிடி இருக்கு?"

லிசான்: "பரவாயில்ல அங்கிள்.."

வன்னிமைந்தன்: "ம்.. சரி, மற்றது விசயம் தெரியுமே?"

லிசான்: "என்ன நடந்தது?"

வானவில்: "யமுனா அண்ணைய இந்தியன் ஆமி பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம்"

வன்னிமைந்தன்: "அவன இப்ப காங்கேசந்துறை தடுப்பு முகாமில வச்சு இருக்காம். ஒருவரையும் பார்க்க விடேல, கடைசியில தாய், தகப்பன் யாரையோ கையக்காலப் பிடிச்சுப் போய்ப் பார்த்தவேளாம்..." (பின் சிறிது தயக்கம்...)

பிரியசகி: "என்ன நடந்தது. எப்பிடி இருக்கிறாராம்?"

வன்னிமைந்தன்: "தடுப்பு முகாமில அறிவு இல்லாம இருந்து இப்பதான் ஓரளவுக்கு நினைவு திரும்பி இருக்குதாம். ஆமி மண்வெட்டிப் பிடியால அடிச்சு யமுனாவின்ர மண்டைய உடைச்சுப் போட்டாங்களாம். மலசல வாயுக்க மரக்கட்டைய அடிச்சு ஏத்தி சித்திரவதை செய்தவங்களாம். இண்டைக்கு காலம்பற ஈழப்பிரியன் சாணக்கியனுக்கு டெலிபோன் எடுத்து சொன்னவராம்.. " (கவலை)

பிரியசகி: "ஈழப்பிரியன் அங்கிளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையாமே?"

வன்னிமைந்தன்: "ஓ அங்க இருக்கேலாதாம். தாங்களும் வாற கிழமை மட்டில கொழும்புக்கு வரப்போறீனமாம். சின்னப்பு அங்கிள் குடும்பத்தோட கொக்குவிலுக்கு வீடுமாறிப் போட்டாராம்."

லிசான்: "ம்..(பெருமூச்சு..) கொஞ்ச நாளைக்கிள எத்தின விசயங்கள் நடந்து இருக்கு..."

வானவில்: "அப்பா நான் அவசரமாப் போகவேணும்.. "

வன்னிமைந்தன்: "இந்தா நீ கேட்ட காசு.." (ஐநூறு ரூபாயைக் கொடுக்கின்றார்..)

பிரியசகி: "இவனுக்கேன் இவ்வளவு காசக் குடுக்கிறீங்கள்? படிக்கிறன் எண்டு சொல்லிப்போட்டு வெளியில போய் என்ன செய்யுறானோ தெரியாது. இப்ப ரெண்டு நாளா இவனுக்கு ஒரு பெட்ட அடிக்கடி டெலிபோன் எடுத்துக் கொண்டு இருக்கிறாள்..."

வானவில்: (கோபம்... அவமானம்..) "எனக்கு காசும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம். நான் போட்டு வாறன்.."

வன்னிமைந்தன்: "தம்பி கோவிக்காத அக்கா சும்மா பகிடிக்கு.."

லிசான்: "அது யாரடா பெட்டை? கொழும்புக்கு வந்து ரெண்டு கிழமையுக்க நல்லா முன்னேறீட்டாய் போல இருக்கு..." (சிரிப்பு..)

பிரியசகி: "எங்கையோ ரியூசனுக்கு போன இடத்தில சினேகிதமாம். ரெண்டு பேரும் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு போய் ஏதோ இங்கிலிஸ் கோர்ஸ் படிக்கப்போறீனமாம்.."

வானவில்: "எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கொண்டு பிறகு ஏன் என்னக் கேள்விகள் கேட்பான்..."

(காசை வாங்கிக்கொண்டு கோபத்துடன் வெளியேறுகின்றான். தனியார் ரியூசன் பேருந்து தரிப்பிடத்தில் இன்னிசை இவனுக்காக காத்திருக்கின்றாள்..)

இன்னிசை: "ஈவினிங் திரீயுக்கு வாரெண்டு சொல்லிப்போட்டு ஏன் லேட்?"

வானவில்: "ஓ சொறி, ஹொஸ்பிட்டலுக்கு ஒருவரப் பார்க்கப் போனதால நேரஞ்செண்டிட்டுது"

இன்னிசை: "சரி வாங்கோ வாற வானில ஏறுவம்.. "

வானவில்: "சனமா இருக்கு, பரவாயில்ல."

(இருவரும் வானில் ஏறுகின்றனர்...)

வானவில்: "பம்பலப்பிட்டிய தெக்கக்.." (காசை கண்டக்டரிடம் நீட்டுகின்றான்...)

கண்டக்டர்: (மிகுதிப் பணத்தை கொடுத்துவிட்டு) "மல்லி பிட்டிப் பஸ்ஸ எண்ட.."

இன்னிசை: "பின்னுக்கு போகட்டாம். இதவிட பின்னுக்கு எங்க போறது?"

வானவில்: "அவன் உம்ம எனக்கு பின்னால நிக்கச் சொல்லுறான்.." (சிரிப்பு)

இன்னிசை: "நான் நினைச்சன் உங்கள எனக்கு பின்னால நிக்கச் சொல்லுறானாக்கும் எண்டு" (சிரிப்பு)

வானவில்: "உமக்கு எங்க இறங்கிறதெண்டு தெரியும்தானே? பிறகு நடுத்தெருவில நிண்டு அட்ரஸ் தேடிக்கொண்டு இருக்கேலாது..."

இன்னிசை: "சீச்சீ... பயப்படாமா வாங்கோ, நான் கூட்டிக்கொண்டு போறன்..."

வானவில்: "பம்பலப்பிட்டி சந்தி வரூது..."

இன்னிசை: "ம் அடுத்த ஹோல்ட்டில இறங்குவம்"

(இருவரும் பிரிட்டிஷ் கவுன்சிலிற்கு செல்கின்றனர்...)

இதேவேளை, ஈழப்பிரியனின் தொலைபேசி அழைப்பைப் பெற்ற சாணக்கியனுக்கு மனதில் ஆச்சரியம் ஒருபுறம், சந்தோசம் மறுபுறம். தூயாவுடன் சாணக்கியனுக்கு காதல் என்ற கதை ஈழப்பிரியனின் காதுகளிற்கு எட்டியபின் சாணக்கியனை வழிதெருவில் காணும்போது அவர் நேராக அவனுடன் முகங்கொண்டு பார்ப்பதைக் கூட தவிர்த்து வந்தார். ஆனால், இப்போது சாணக்கியன் நல்லவன் என்ற முடிவுக்கு ஈழப்பிரியன் வந்துவிட்டார்.

சாணக்கியன்: "அம்மா, பம்பலப்பிட்டி பிளட்ஸில வீடு ஒண்டு பிரீயா இப்ப இருக்குதெண்டு யாரோ கதைச்சவேள் இல்லே?"

தமிழ்தங்கை: "அதுக்கு இப்ப என்ன?"

சாணக்கியன்: "ஈழப்பிரியன் அங்கிள் தங்களுக்கு வீடு ஏதாவது பார்க்கச் சொன்னவர்.."

அனிதா: "ஓ அது சினேகிதி சொன்னவ. தங்கட பில்டிங்கில ஒரு வீடு பிரீயா இருக்குதெண்டு.. அவவிட்ட கதைச்சுப் பார்க்கவே?"

சாணக்கியன்: "ஓம் எத்தின அறைகள் இருக்கு, எவ்வளவு வாடகை எண்டும் கேள்.. வீட்ட எப்ப பார்க்கலாம் எண்டும் கேள்.."

அனிதா: "கேக்கிறன். ஆனா ஈழப்பிரியன் அங்கிளவேலால நிறைய ரெண்ட் காசு குடுக்க கட்டுபடியாகுமே?"

சாணக்கியன்: "உனக்கேன் அந்தக் கவல?"

தமிழ்தங்கை: "அவேக்கு காசுப்பிரச்சனையெண்டா நாங்கள் ஏதாவது மாறிக்கொடுத்து உதவி செய்யலாம். வீடு நல்லதா இருந்தா எடுக்கிறது நல்லம். அவேள் எங்களுக்கு பக்கத்தில இருந்தா நல்லது தானே?"

அனிதா: "ஓமம்மா... நான் சினேகிதிக்கு கோல் பண்ணி எல்லா டீட்டெய்ல்ஸ்ம் எடுக்கிறன்"

(அனிதா சினேகிதியை தொலைபேசியில் அழைக்கின்றாள்..)

Posted

திடீர் திடீரென மாற்றங்கள் வந்ததால் முகியிற்கு பரீட்சைக்கு கற்பது கடினமாக இருந்தது. தற்போது யாழ் மருத்துவபீடத்திற்கு அருகில் சின்னப்பு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருந்தாலும், முகி ஏற்கனவே திட்டமிட்ட நேர ஒழுங்குகளின்படி காரியங்கள் நடைபெறவில்லை. புதிய வீட்டை எல்லோருமாகச் சேர்ந்து துப்பரவு செய்யவேண்டி இருந்தது. தூசு கட்டி, கட்டியாக வீடெங்கனும் நிறைந்திருந்தது. தூசு தட்டி வீட்டில் எல்லோருக்கும் தடிமன் வேறு. ஊரில் என்றால் தேங்காய், விறகு தொடக்கம், மரக்கறி வரை எல்லாமே வீட்டில் கிடைக்கும். ஆனால், இங்கு எல்லாவற்றையும் வெளியில் இருந்து எதிர்பார்க்கவேண்டி இருந்தது. சின்னப்பு தனது வீடு, தோட்டங்கள், காணிகளை தற்காலிகமாக உறவுக்காரர் ஒருவரிடம் பொறுப்புக்கொடுத்துவிட்டு வந்திருந்தார். சின்னப்பு குடும்பம் எங்கே போய்விட்டது என்ற செய்தி ஈழப்பிரியன் குடும்பத்தினரைவிட ஊரில் வேறு ஒருவருக்கும் தெரியாது. பாதுகாப்பு காரணங்களிற்காக சின்னப்பு "தாம் எங்கே போகின்றோம்" என ஒருவருக்கும் சொல்லவில்லை. முகி யாழ் மருத்துவபீடத்தில் படிக்கும் விடயம் ஊரில் எல்லோருக்கும் தெரியும். இதனால், அவள் பல்கலைக்கழகத்திற்கு தேவையில்லாமல் போவதையும், அறிமுகம் இல்லாத மாணவர்களுடன் பழகுவதையும் இயலுமானளவு தவிர்த்து வந்தாள். மதனிற்கும், மணிவாசகனிற்கும் மட்டுமே முகி எங்கே இருக்கின்றாள் என்ற விடயம் பல்கலைக்கழகத்தில் தெரிந்திருந்தது. அவர்கள் முகி சிரமன்றி கல்வி கற்பதற்கு தம்மாலான உதவிகளைச் செய்து வந்தனர்.

தம்மைத் தேடி இந்திய இராணுவத்தினரும், ஈப்பி கூலிக்குழுவினரும் எந்த நேரமும் வரக்கூடும் என்ற பயம் தற்பொழுதும் சின்னப்பு குடும்பத்தில் இருந்தது. ஆதியைத் தேடி நான்கு முறை இந்திய இராணுவத்தினர் சின்னப்பு வீட்டிற்கு வந்ததாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் சிலவற்றை சேதப்படுத்தியும், களவாடியும் சென்றதாகவும் ஈழப்பிரியன் மூலம் சின்னப்பு அறிந்திருந்தார். இதைவிட ஈழப்பிரியன் வீட்டிற்கு சென்ற ஈப்பி கூலிக்குழு அவருக்கு கொலைமிரட்டல் விடுத்திருந்தது. யமுனா இந்திய இராணுவத்திடம் அகப்பட்டதும் ஈழவன், சஜீவன் குழுவினர் உடனடியாகவே தமது மறைவிடங்களை மாற்றிவிட்டனர். இவர்களிற்கு பல்வேறு சித்திரவதைகள் செய்யப்பட்டபின்பும் யமுனா எதுவித உண்மைகளையும் இந்திய இராணுவத்திற்கு கூறாத விடயம் தெரியாது. சாத்திரியும் அச்சத்தின் காரணமாக மடத்தடி முருகன் கோயிலிற்கு பூசைக்கு வருவதை தவிர்த்திருந்தார். தற்காலிகமாக வேறு ஒரு பூசகர் கோயிலில் பூசை செய்தார். சாத்திரி தான் கொழும்பிற்கு ஒரு அவசர அலுவலாக செல்கின்றேன் எனக்கூறிவிட்டு, யாழ்ப்பாணத்தில் வேறு ஒரு ஒதுக்குப்புறமான ஊரிற்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்.

தேவகி: ""பிள்ள யாரோ வெளியில மணியடிக்கிறீனம்.. யாரெண்டு பார்"

ரசிகை: (யன்னல் திரைச்சீலையூடாக ஒளிந்திருந்து பார்க்கின்றாள்..) "இஞ்ச அக்கா! உங்கட ஆக்கள்தான் வந்திருக்கிறீனம்..."

முகி: "யார் மதன் ஆக்களே? உள்ள வரச்சொல்லு... நான் அற துப்பரவாக்கிக் கொண்டு இருக்கிறன்."

ரசிகை: (வாசல் கதவை சிறிது திறந்து, தலையைநீட்டி)"உள்ள வாங்கோ!"

(மதனும், மணிவாசகனும் துவிச்சக்கரவண்டியை மரம் ஒன்றில் சாத்திவிட்டு உள்ளே வருகின்றனர்.)

மதன்: "நிறைய பிலா மரங்கள் இருக்கு மச்சான். போகேக்க முகியிட்ட கேட்டு ரெண்டு பிலாப்பழம் வாங்கிக்கொண்டு போவமா?"

மணிவாசகன்: "ம் வந்ததும் வராததுமா சாப்பாடப் பற்றி கதைக்க துவங்கீட்டியே.."

முகி: "ஹாய், குட் ஈவினிங்... என்ன பிலாப்பழம் எண்டு ஏதோ சொன்னமாதிரி இருக்கு. ரெண்டு பேருக்கும் சாப்பிட கொண்டுவரட்டே? வெட்டின துண்டு குசினியுக்க இருக்கு"

மதன்: (வெட்கம்...) "சீ நாங்கள் சும்மா முஸ்பாத்திக்கு"

மணிவாகசன்: "என்ன மச்சான் வெக்கப்படுறாய்? சரி முகி கொண்டுவாங்கோ சாப்பிடுவம். சாப்பாட்டு விசயத்தில எனக்கு பொய் சொல்லுறது பிடிக்காது.."

முகி: "இது உங்கட வீடு மாதிரி, என்ன வேணுமெண்டாலும் கேக்கலாம்.. எடுக்கலாம்.."

(மதனும், மணிவாசகனும் பலாச் சுளைகளை கடித்தபடி..)

மதன்: "முகி நீங்கள் கம்பசில கொஞ்சம் கவனமா இருக்க வேணும்... ஈப்பி ஆக்கள் கொஞ்சப்பேரும் கம்பசிக்க இருக்கிறாங்கள்"

மணிவாசகன்: "லெக்சேர்ஸ் மிஸ் பண்ணினாலும் பரவாயில்ல, நாங்கள் வந்து சொல்லித்தருவம். டெஸ்ட்டுக்கு மட்டும் வாங்கோ. ரெண்டு, மூண்டு நாளா இந்தியன் ஆமி மெடிக்கல் பகல்ட்டியுக்க எல்லாம் ஈப்பியோட சேந்து கேட்டுக் கேள்வியில்லாம வந்து போறாங்கள்"

மதன்: "உங்களப்பற்றியும் யூனியர் பெடியன் ஒருவனிட்ட விசாரிச்சவங்களாம்"

முகி: (பயம்...) "என்ன சொல்லுறீங்கள்?"

மதன்: "பயப்பட ஒண்டும் இல்ல, கொஞ்சம் கூட எச்சரிக்கையா இருங்கோ. இப்ப கண்டபடி ஆக்களையும் சுடுறாங்கள்"

மணிவாசகன்: "இந்தக் கிழம ஜவ்னா ஸ்கூல்ஸ்ஸில படிக்கிற நான்கு ஸ்கூல் போய்ஸ்ஸ சுட்டுப் போட்டாங்கள்"

முகி: "ஓம் நானும் பேப்பரில பார்த்தனான். அம்மாவுக்கு இஞ்ச வாறது விருப்பம் இல்லை. கொழும்புக்கு போகலாம் எண்டு சொன்னா. ஆனா அப்பா விடமாட்டாராம். செத்தாலும் யாழ்ப்பாணத்த விட்டுப் போகமாட்டாராம்"

மதன்: "ஓம் இந்த வடக்கத்தையானுக்கு பயந்து நாங்கள் ஏன் ஓட வேணும்? உங்கட தம்பிய நினைக்க எனக்கு பெருமையா இருக்கு"

மணிவாசகன்: "எனக்கும்தான், அந்தமாதிரி இந்தியன் ஆமிக்கு கேம் குடுத்து எட்டுப்பேருக்கு விசாகுத்தி அனுப்பிப் போட்டாங்கள்"

மதன்: "உவங்கள் செய்யிற அக்கிரமங்களுக்கு இவயளுக்கு அடி இன்னும் காணாது"

(ரசிகை இருவருக்கும் தேனீர் கொண்டுவந்து கொடுக்கின்றாள்.)

மதன்: "பிலாப்பழம் நல்லா இருக்கு, கைய எங்க துடைக்கிறது? ஒட்டிப்பிடிக்கிது!"

மணிவாசகன்: "தலையிலதானே நிறைய நல்லெண்ண அப்பி இருக்கிறாய்? கையக்கொண்டுபோய் தலையில துட!" (சிரிப்பு)

(ரசிகை இருவருக்கும் கைகளை துடைப்பதற்கு சிறிது எண்ணையும், துணியும் கொடுக்கின்றாள்)

மணிவாசகன்: "ஒரு வருசத்தில சோதின வரப்போகிது, ரசிகைக்கு படிப்புகள் என்ன மாதிரி போகிது? அக்கா என்னவும் ஹெல்ப் செய்யுறவவா?"

முகி: "அவளுக்கு ரியூசனுக்கு போய் வரவே நேரம் காணாது, என்னட்ட எங்க கேட்டுப் படிக்கிறது?"

மணிவாசகன்: "சரி, உம்ம ஒருக்கா டெஸ்ட் பண்ணிப் பார்க்கப்போறன். மனித மூளையில நினைவுகளிற்கு பொறுப்பான பகுதி என்ன எண்டு சொல்லும் பாப்பம்?"

மதன்: "அடேய், அடேய், அடேய்... பாவம் உனக்கு தேத்தண்ணி தந்த பிள்ளைய இப்பிடியே கரைச்சல் குடுக்கிறது?" (சிரிப்பு)

மணிவாசகன்: "டேய், நீ சும்மா இரு, நான் ரசிகைய சோதினைக்கு பிரிபயார் பண்ணுறன்.."

(ரசிகை இவர்களைப் பார்த்து தானும் சிரித்துவிட்டு பதில் சொல்லாமல் உள்ளே சென்றுவிடுகிறாள்..)

மணிவாசகன்: "ஏன் உங்கட தங்கச்சி கதைக்க மாட்டாவா?"

முகி: "சீ, நல்லா கதைப்பாள், உங்களப் பார்த்து இப்ப வெக்கப்படுறாள்"

தேவகி: (குசினிக்குள் இருந்து..)"அவ கதைக்கமாட்டாவோ? வாயைத் திறந்தாள் என்றா பிறகு உங்களுக்குத்தான் கஸ்டம்"

(இதைக் கேட்ட அனைவரும் சிரிப்பு..)

மதன்: "மணி, நாங்கள் எங்களிண்ட படிப்பப்பற்றி இப்ப கதைப்பமே?"

(மதன், மணிவாசகன், முகி மூவரும் சேர்ந்து கல்வி கற்கின்றனர்.. ரசிகை படிக்கின்றாள். தேவகி குசினியை சுத்தம் செய்கின்றாள். சின்னப்புவும், விதுவும் பக்கத்துவீட்டுக்காரனுடன் வீட்டு வேலியினூடாக கதைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.