Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீழடி ஆய்வும் தமிழின் தொன்மையும்

Featured Replies

கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ?
**
1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.

2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன.

3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம். கடைச்சங்கத்தின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கே பலர் பல்வேறு குறுக்கு வழக்குகளோடு வருவர். சான்றெங்கே, ஆதாரம் எங்கே என்று நிற்பர். இப்போது கிமு ஆறாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் தெளிந்த சான்றுகளாகிவிட்டன.

5. ஆதன், சாத்தன் ஆகிய பெயர்கள் நம் இலக்கண உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன. ஆதனின் தந்தை ஆந்தை எனப்படுவார். சாத்தனின் தந்தை சாத்தந்தை எனப்படுவார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தையே பிசிர் ஆந்தையார் எனப்பட்டார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் யாராயினும் ஆதன் என்ற பெயர் வைக்கும் பழக்கம் தொல் தமிழரிடையே பரந்திருந்தது என்பது வெள்ளிடைமலை. ஆதன் என்பதற்கு உயிர் என்று பொருள். உயிரன்.

6. ஒடிய மாநிலம் புவனேசுவரம் உதயகிரிக் குகைகளின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ள காரவேலனின் கல்வெட்டு பதின்மூன்று நூற்றாண்டுகளாய் நிலவிய சேர சோழ பாண்டியர்களின் கூட்டாட்சி வலிமையைக் கூறுகிறது. “தமிர தேக சங்காத்தம்” என்பது அக்கல்வெட்டினில் உள்ள தொடர். ஒடிய மன்னன் காரவேலன் அசோகருக்குப் பிறகு அப்பகுதியினை ஆண்டவன். கிமு இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். “அக்கல்வெட்டினில் இருப்பது பதின்மூன்று நூற்றாண்டுகள் இல்லை, வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கவேண்டும்” என்ற வழக்கும் ஓடியது. கீழடியில் பெருந்தமிழர் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கும் நிலைமையைக் காண்கையில் காரவேலன் கல்வெட்டு கூறுவது பதின்மூன்று நூற்றாண்டுகளாகவே இருக்க வேண்டும்.

7. வைகை ஆறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பேராறாக நிறைந்து ஓடியிருக்க வேண்டும். அதன் கரைவெளி எங்கும் பாண்டியப் பேரரசில் பெருவாழ்வு வாழ்ந்த குடிகளின் தடயங்களைக் கண்டெடுத்திருக்கிறோம்.

8. எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமுறை நிலவியிருக்க வேண்டும். மொழித்தோற்றத்தின் இளமைக் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும். அனைத்தையும் கொண்டு கூட்டிப் பார்க்கையில் தமிழ் மொழியின் தொன்மையைப் பகரும் சான்றுகள் பல பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியவை என்பது தெளிவாக நம் கண்ணுக்கே தெரிகிறது.

9. கீழடியில் தங்க அணிகள் கிடைத்திருக்கின்றன. தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட மணிகள் கிடைத்திருக்கின்றன. மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்தல் என்னும் தொழில்நுட்பம் சிறப்படைந்திருக்கிறது. இருப்புப் பொருள்களும் பல்வேறு மாழைப் பொருள்களும் (உலோகம்) பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. தனிப்பான்மையான குடிவாழ்வின் தன்னிகரற்ற வரலாற்று வளர்ச்சி நிலைகள் இவை.

10. இன்றைய நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றினைப் பார்ப்பது தவறு. மதங்கள், சாதிகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் என இன்று நாம் பற்றிப் பழகியிருக்கும் சிறுகண்களைக்கொண்டு பழைமையில் தேடுவது நன்றன்று. ஒற்றை நிலையில் ஒரு நிலத்தின் வரலாறும் அமையாது. காலப்போக்கில் அது பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நம் வரலாறெங்கும் அவ்வாறே நிகழ்ந்தது. எது எப்படியாயினும் அன்றைக்கும் இன்றைக்கும் இக்குடிவாழ்வின் பற்றுதலாக இருப்பது ஒன்றேயொன்று. அதுதான் முன்னைப் பழையதும் பின்னைப் புதியதுமான தமிழ்மொழி !

- கவிஞர் மகுடேசுவரன்

மூலம் முக நூல்

 

#######################₹₹₹######₹₹

 

 

கீழடி: 

சிறு வயது முதல் தமிழ் தமிழ் என வெறியாக சுற்றும் பலரை பார்த்திருக்கிறேன். ஏன் இவ்ளோ உணர்வெழுச்சி இவர்களிடமென வியந்திருக்கிறேன். தமிழ் தமிழ் என எதாவது செய்யுள் மேற்கோள் காட்டுவார்கள்.அதைக் குறித்து பெருமை பேசுவார்கள். பின்னர் காரணமே இல்லாமல் யாரையாவது திட்டுவார்கள், குழம்புவார்கள், இன்னும் கலங்கி ஆற்றாமையால் பொருமுவார்கள், கோபப்படுவார்கள். அதையும் இதையும் சம்பந்தப்படுத்தி தமிழ் தமிழ் என்பார்கள்.  ஏன் இவ்வளவு மெலோ டிராமா இவர்களிடம் என யோசிப்பது உண்டு.
இந்த மெலோ டிராமாவில் நாம் எக்காரணம் கொண்டு சிக்கிவிடக் கூடாது என்பது எனது தீர்க்கமான முடிவுகளில் ஒன்று. 
   
       ஆதி தமிழ்ச் சமூகம் , குடியும் கொண்டாட்டமாகவும், சிரிப்பும் ஓலமுமாகவும் வாழ்ந்த ஒரு பழங்குடிக் கூட்டம் ( tribal group ) என்றே நம்பியிருந்தேன்.  இந்த tribal spirit ல் எனக்கு அதீத பெருமையும், பிடித்தமும் உண்டு என்பதால் அப்படியே நானும் எனக்குள் ஒரு முடிவு எழுதி வைத்திருந்தேன். 
    
'பெரிய civilizationலாம் இருந்திருக்காது, சும்மா ஆங்காங்கே குடியிருந்து வாழ்ந்திருப்பாங்க. மண்ணுக்கும்,  பொன்னுக்கும், பெண்ணுக்கும் சண்டை போட்டுக் கொண்டு, கள்ளுக்கும் கறிக்கும் வெட்டிக் கொண்டு, கோழிக்கு கூடி  ஆட்டுக்கு சண்டையிட்ட  கூட்டம்யா நாங்க' என்கிற பெருமையே எப்பொழுதும்  என்னிடம் இருந்தது. இந்த கூட்டத்தில் இருந்து தப்பினவன் கொஞ்ச பேர் எழுதி வச்சதில் மிச்சம் தான் சங்க இலக்கியங்கள் என்பதே என் புரிதலாக இருந்தது. இதை மாற்றியது கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள். 
        
முதல் பத்தியில் நான் சொன்ன மெலோ டிராமாவின் காரணம் கூட 'எங்களால், எங்களைப் பற்றி, இந்த உலகுக்கு, இந்த உலகம் புரிந்து கொள்ளும் முறையில் சொல்ல முடியவில்லையே' என்கிற தொடர் தோல்வியின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. 
தான் வாசிக்கும் இலக்கிய செழுமைக்கு ஆதாரம் தெரியாமல் புலம்புவது தமிழர்களின் குணமாகக் கூட ஆகிவிட்டதெனலாம். இலக்கியத்தில் மட்டுமே இருக்கும் பெருமையும், வரலாற்றை எப்படியாவது இந்த உலகுக்கு அறிவித்துவிட வேண்டும் என்கிற முயற்சியை துரிதமாக செய்ய நினைத்ததுதான்  விடுதலைப்புலிகள் எனக் கூட தோன்றுகிறது. 
இன்னும் சாதி, குலம், குடி போன்ற பெருமை பீற்றல்கள் கூட தன் வரலாற்றிலிருந்து  அறுந்து போன கூட்டத்தின் கதறல்களின் வடிவமே. 
           
உலகத்திடம் சொல்வதற்கென ஒரு மொழி வடிவம் இருக்கிறது. அதற்கென வடிவம் இருக்கிறது... அதன் பெயர் “அறிவியல் பூர்வமான தரவுகள்" - ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை எப்படி, எந்த வடிவில் சொல்லப்படுகிறதோ அந்த வடிவு தான் அது.
     
தமிழக தொல்லியல் துறை "keeladi- An Urban Settlement of Sangam Age On The Banks Of River Vaigai" என்கிற புத்தகத்தை, அதே தரவுகளை முன் வைத்து எழுதி, மிக அருமையாக கொண்டு வந்துள்ளனர். இதில் எதை குறிப்பிட வேண்டுமோ அதை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் பன்றி , மான் போன்ற விலங்கினங்களின் எலும்புகளில் இருந்த கத்தி வெட்டுத் தடங்கள் - இவைகளை வெட்டி சமைத்திருக்கலாம் என சொல்லிருப்பதெல்லாம் பாராட்டப்பட வேண்டியவை. பிராமி என்கிற எழுத்து வடிவை குறிக்கும் பொழுது கூட தமிழி என சொல்லிருக்கிறார்கள். வழிப்பாட்டுத் தடயங்கள் கிடைக்கவில்லை என சொல்லிருக்கிறார்கள் - என்னை பொருத்தவரை வழிபாடு இல்லாது ஹோமோசேப்பியன் சமூகம் என்கிறதை உருவாக்கிவிட முடியவே முடியாது. These are all  putting historical records straight . நல்லவேளை தென்னிந்தியா, திராவிடம்ன்னு போட்டு குழப்பாது தமிழ் என்றே குறிப்பிட்டுள்ளனர். முதல் வரியே “ உலக அரங்கில் தமிழர்களின் தொண்மையை உறுதிப்படுத்த.....:” என்றுதான் ஆரம்பிக்கிறது. உதயசங்கர் ஐ.ஏ.எஸ் க்கு உண்மையிலே பாராட்டுக்கள். 
       
நான் எஸ்தோனிய நாட்டு வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன். 1000 வருடங்கள் அடிமைத்தனம் முடிந்து முதல் தலைமுறை பட்டதாரிகள் செய்த முதல் காரியம் - தங்களுக்கான வரலாற்றை தாங்களே எழுதியதுதான்.. அதன் பின் நடந்தெல்லாம் அதிசயமும் ஆச்சரியமுமான the most digitalized modern country called  Estonia . உதயசங்கர் அப்படியான ஒரு அறிக்கையை அறிஞர்கள் குழுவோடு செய்திருக்கிறார். 

கண்டிப்பாக தேம்பலும், எரிச்சலும், கோபமுமாய் குழப்பமுமாய் திரியும் தமிழ் சமூகத்திற்கு கீழடி விஷயம் ஆறுதல் அளிக்கும். இதுவே முடிவும் அல்ல... உலகின் மூத்த குடி எங்கள் குடி, உலகத்தின் மாண்பிற்கு அறிவை கொடுத்த மொழி எம் மொழி என்பதை இந்த உலகமே சொல்லி கேட்கும் வரை ஓயாது இந்த முணுமுணுப்பு, என்றாலும், கீழடியின் நகர நாகரீக பண்பாட்டுப் புரிதலும், அதை உலகத்தினர் ஏற்றுக் கொள்வதும், 
இந்த “ தமிழ் “   முணுமுணுப்பு குறைந்து, அதன் உள்ளார்ந்த பெருமைமிகு சிந்தனைகளையும், செயல்பாடுகளையும்
இன்னும் செறிவோடும், ஆளுமையோடும், தீர்க்கத்தோடும் செயல்படும் வருங்காலத் தமிழ் சமூகத்தை கட்டமைக்க  வழிவகுக்கும் என நம்புகிறேன். 

கீழடி ஒரு அற்புதம் . இதை நாம் ஆரிய எதிர்ப்புக்கும், திராவிட எதிர்ப்புக்கும் பயன்படுத்த போகிறோமா அல்லது  நம்மை ஒருங்கிணைக்கவும்  இன்னும் மெருகூட்டவும் பயன்படுத்த போகிறோமா என்பது நம் கைகளில்தான் இருக்கிறது. ஏனெனில் வரலாற்றை வைத்து நாம் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம். மதமோ, மொழியோ, குழுவோ, இனமோ, வரலாறோ... அதை வைத்து என்ன செய்தீர்கள் என்று தான் இந்த உலகம் கேட்கும். அதை வைத்து பெருமை பட்டோம், சண்டை போட்டோம் என்றால் காரி துப்பும்...

மிரிநோ நிர்மல் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.