Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்!

522865.jpg

மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்தியங்கத் தொடங்கின. அதேநாளில், தமிழகமும் தனி மாநிலமானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் கன்னியாகுமரி என்ற மாவட்டமாகத் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்கள் இந்நாளை விசேஷமாகக் கொண்டாடிவரும் நிலையில், தமிழ்நாடு அரசும் இந்த ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது.

சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்களில் தனி மாநில அந்தஸ்தைப் பெற்றதற்காகக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. அன்றைய சென்னை மாநிலம், தமிழ் பேசும் சில பகுதிகளைப் பக்கத்து மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்ததால், அது தமிழகத்தில் வருத்தத்தையே ஏற்படுத்தியிருந்தது. பழைய எல்லைப் பிரச்சினைகள் தற்போது விவாதிப்பதற்கு இல்லை என்பதோடு, தமிழகம் தனி மாநிலமானதும் கொண்டாடப்படுவதற்குரிய நிகழ்வு என்பதைத் தமிழ்நாடு அரசு வெளிப்படுத்துகிறது.

மொழிவாரி மாநிலங்கள்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. ஹைதராபாத் நீங்கலான ஆந்திரம், மைசூர் நீங்கலான கன்னடம், கேரளத்தின் மலபார் பகுதிகள் ஆகியவையும் சென்னை மாகாணத்துடனேயே இணைக்கப்பட்டிருந்தன. இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நோக்கி நகர ஆரம்பித்த காலத்திலேயே மொழிவாரி மாநிலங்களுக்கான குரல்களும் எழத் தொடங்கிவிட்டன. தென்னிந்தியாவில் விசால ஆந்திரம், சம்யுக்த கன்னடம், ஐக்கிய கேரளம் ஆகியவற்றுக்குத் தனித்தனி இயக்கங்கள் தொடங்கப்பட்டன.

1937-ல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர, கர்நாடக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது. 1938-ல், வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம், விடுதலைக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் என்று உறுதியளித்தது. அதே ஆண்டில், பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தைத் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, சி.பா.ஆதித்தனார், கி.ஆ.பெ.விசுவநாதம், ம.பொ.சிவஞானம் ஆகியோர் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தினர். விடுதலைக்கு முன்பு மொழிவாரி மாநிலக் கொள்கையை வலியுறுத்திய காங்கிரஸ் கட்சி, விடுதலைக்குப் பின்பு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. மொழிவாரி மாநிலங்கள் நாட்டின் ஒற்றுமையைக் குலைத்துவிடுமோ என்ற அச்சம்தான் அதற்கான முக்கியக் காரணம்.

சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை ஆந்திரத்தைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசமைப்பு நிர்ணய அவையின் ஆலோசகரான பி.என்.ராவ், எஸ்.ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, டி.பிரகாசம் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.

மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பது குறித்து 1948-ல் அரசமைப்பு நிர்ணய அவையால் நியமிக்கப்பட்ட என்.கே.தார் ஆணையம், அம்முடிவு நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கக்கூடும் என்று கருத்துத் தெரிவித்தது. தார் ஆணையத்தின் முடிவுக்குக் கடும் அதிருப்தி நிலவிய நிலையில் ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோரைக் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்தது. மூன்று தலைவர்களைக் கொண்ட அந்தக் குழுவும் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படக் கூடாது என்றே பரிந்துரைத்தது. ஆனாலும், ஆந்திர மாநிலத்தை மட்டும் உடனடியாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியது.

திராவிட நாடு கேட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த போதும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் விவகாரத்தில் அதற்கு ஆதரவாகத் தீவிர குரல் கொடுத்தது அண்ணாவின் திமுக. மொழிவாரி மாநிலங்கள் அமைப்பு, தமிழ் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல் இந்த இரண்டு விஷயங்களுக்காகவும் அது தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. ஆந்திரப் பிரிவினைக்கான குரல்கள் தீவிரமடைந்த நிலையில் நேரு, படேல், பட்டாபி குழுவின் பரிந்துரையின்படி, சென்னை மாநிலத்திலிருந்து ஆந்திரத்தைப் பிரிப்பது குறித்து இறுதி முடிவெடுப்பதற்காக சென்னை மாநில அரசால் பி.எஸ்.குமாரசாமி ராஜா தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது.

குழு உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் எழுந்த நிலையில், தனி மாநிலம் வேண்டி ஆந்திரத்தில் போராட்டங்கள் தீவிரமானது. சென்னையைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் வேண்டும் என்று 1952-ல் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் தொடங்கினார். அவருடைய மரணம், ஆந்திரத்தில் நடந்துவந்த போராட்டங்கள் மேலும் தீவிரமானதையடுத்து, ஆந்திர மாநிலக் கோரிக்கையைப் பிரதமர் நேரு உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

சென்னை யாருக்கு?

ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அம்மாநிலத்தின் தலைநகர் எது என்று அறிவிக்கவில்லை. அதையே வாய்ப்பாகக் கொண்டு ‘மதராஸ் மனதே’ என்ற முழக்கத்தை வைத்தார்கள் ஆந்திரத் தலைவர்கள். சென்னை இரு மாநிலங்களுக்கும் தற்காலிகத் தலைநகராக இருக்க வேண்டும், மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்ட தனிப் பிரதேசமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு விதமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

சென்னை தமிழகத்தின் தலைநகரமாகவே தொடர வேண்டும் என்பதை விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே வலியுறுத்திவந்தார் தமிழரசுக் கழகத் தலைவரான ம.பொ.சிவஞானம். ஆந்திரத் தலைவர்களின் கோரிக்கையை அடுத்து, சென்னையைக் காக்கும் தீவிரப் போராட்டத்தில் இறங்கினார் அவர். 1953-ல் சென்னை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தில் சென்னை தமிழகத்துக்கே உரியது என்ற தீர்மானத்தை முன்மொழிந்து, அதை ஒருமனதாக நிறைவேற்றச் செய்தார்.

அப்போதைய சென்னை மாகாண முதல்வராகப் பதவி வகித்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் சென்னை தமிழகத்துக்கே உரியது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதைத் தெரிவித்தார். பிரதமர் நேருவைச் சந்தித்த ராஜாஜி, சென்னையை ஆந்திரத்தின் தற்காலிகமான தலைநகராகச் செயல்பட மத்திய அரசு அனுமதித்தால், முதல்வர் பதவியிலிருந்து தான் விலக நேரும் என்று அறிவித்தார். சென்னையை ஆந்திரத்தின் தற்காலிகத் தலைநகராக அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கில் தந்திகள் அனுப்பப்பட்டன. தமிழகத்தின் எதிர்ப்பை அடுத்து மத்திய அரசு தன் முடிவை மாற்றிக்கொண்டது. 1953 அக்டோபர் 1-ல் உருவான ஆந்திர மாநிலத்தின் தலைநகராக கர்நூல் அறிவிக்கப்பட்டது.

அதற்கடுத்து, சென்னையின் வளர்ச்சியில் ஆந்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதால், தமிழகம் ஆந்திரத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மத்திய அரசு நியமித்த வாஞ்சு கமிட்டி இழப்பீடாக இரண்டு கோடி முப்பது லட்சம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதை எதிர்த்து சென்னை சட்டமன்ற மேலவையில் கடுமையாக விவாதித்தார் ம.பொ.சிவஞானம். இதற்கு முன்பு அசாம், ஒரிசா, பஞ்சாப் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இழப்பீடு அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். அவருடைய வாதத்தை முதல்வர் ராஜாஜியும் ஏற்றுக்கொண்டார்.

சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் பிரிந்து சென்ற நிலையில், தென்கன்னடமும் மலபாரும் தொடர்ந்திருந்தன. அதேநேரத்தில், தென்திருவிதாங் கூரைச் சேர்ந்த தமிழர்களிடத்தில் மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்துடன் இணைய வேண்டும் என்ற குரலும் எழுந்தது. தமிழர்களின் தொடர் போராட்டங்கள், உயிரிழப்புகளுக்குப் பிறகு தமிழர்கள் அதிகளவில் வசித்துவந்த தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய சில பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தன. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பசல் அலி ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த இணைப்புகள் நடந்தேறின.

ஆனால், தமிழர்கள் வசித்த மற்ற பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை வனப்பகுதி மற்றும் நெய்யாற்றின் கரை ஆகியவை தமிழகத்தோடு இணைக்கப்படவே இல்லை. தொல்தமிழகத்தின் வட எல்லையாகவும், வடஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்துவந்த வேங்கடத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்கும் முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது. தமிழ்நாட்டின் பகுதிகளை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டத்தை ஆந்திரத்துடன் இணைத்ததை எதிர்த்து, தமிழரசுக் கழகமும் திமுகவும் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போராட்டத்தின் விளைவாக, 1960-ல் ஆந்திரத்திடமிருந்து திருத்தணி மீட்கப்பட்டது.

தமிழ்நாடு பெயர் மாற்றம்

தமிழுக்கென்று தனி மாநிலம் அமைந்தாலும், அதற்கு சென்னை மாநிலம் என்ற பெயரே தொடர்ந்தது. 1956-ம் ஆண்டிலேயே சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழறிஞர்களும் தொடர்ந்து இந்தப் பெயர் மாற்றத்தை வலியுறுத்தினர் என்றாலும், சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பெயர் மாற்றத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.

பெயர் மாற்றத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட சங்கரலிங் கனார் 78-ம் நாளில் உயிர்விட்டார். எந்தக் கோரிக்கைக்காகத் தியாகி சங்கரலிங்கனார் தனது உயிரை விட்டாரோ அதை அண்ணா முதல்வராகப் பதவியேற்றபோது நிறைவேற்றிவைத்தார். 1967 ஜூலை 15 அன்று பெயர் மாற்றத் தீர்மானத்தை முன்மொழிந்தார் அண்ணா. 1968 ஜனவரி 15 அன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் தமிழ்நாடு தனது மொழி, இன உரிமைக்காகக் கட்சி பேதமின்றி பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. தியாகங்களையும் புரிந்திருக்கிறது. அதன் விளைவாகவே இன்றைய தமிழ்நாடு இந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்தான் அந்த தியாகங்களுக்கான சரியான மரியாதை.

வடக்கெல்லைப் போராட்டம்

விடுதலைப் போராட்ட வீரரும் தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம், சுதந்திர சோஷலிஸ தனிக் குடியரசு என்ற கொள்கையை முன்வைத்து 1946 நவம்பர் 21-ல் தமிழரசுக் கழகத்தைத் தொடங்கினார். ‘தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டும், சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டு’ என்பது தமிழரசுக் கழகத்தின் முக்கியக் கொள்கையாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, வடவேங்கடம் தென்குமரியே தமிழகத்தின் வடக்கு தெற்கு எல்லையாக இருக்க வேண்டும் என்று போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார் ம.பொ.சி. தனது ‘தமிழ் முரசு’ இதழில் திருவிதாங்கூரைத் தமிழகத்துடன் இணைத்து நில வரைபடம் ஒன்றை வெளியிட்டதோடு, அப்போராட்டத்தில் ஈடுபட்ட திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்துக்கும் உறுதுணையாக நின்றார்.

தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் திருத்தணியை மீட்டதில் ம.பொ.சி.யின் பங்கு மிக முக்கியமானது. ஆந்திரத்துடன் சித்தூரை இணைத்ததை எதிர்த்து, வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழுவுக்குத் தலைமையேற்றார் ம.பொ.சி. சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய ஊர்களில் அவர் முன்னின்று நடத்திய பொது வேலை நிறுத்தமும் கடையடைப்பும் மறியல்களும் மத்திய அரசுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தின. ம.பொ.சி.யின் மீது கடும் கோபத்துக்கு ஆளான பிரதமர் நேரு, வார்த்தைகளை அள்ளி வீச, ம.பொ.சி.க்கு ஆதரவாகத் தமிழகமே திரண்டெழுந்தது. நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில், முதல்வர் ராஜாஜியின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு தமிழக - ஆந்திர எல்லைச் சிக்கலைத் தீர்க்க பதாக்கர் ஆணையத்தை நியமித்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி தமிழகத்துடன் திருத்தணி இணைக்கப்பட்டது.

தெற்கெல்லைப் போராட்டம்

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர் 1920-ம் ஆண்டு வாக்கிலேயே காங்கிரஸ் கட்சி மொழிவழிப் பிரதேசங்களின் அடிப்படையில் செயல்பட ஆரம்பித்தது. 1945-ல் காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகளை ஐக்கிய கேரள மாகாணமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படத் தொடங்கியது. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் பகுதிகளை உள்ளடக்கியதாக இது இருந்தது.

கேரளப் பிரதேச காங்கிரஸ் கட்சியும், கொச்சி சமஸ்தானத்தைச் சேர்ந்த காங்கிரஸ் இயக்கமான பிரஜா மண்டலமும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த காங்கிரஸ் இயக்கமும் இக்கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தன. ஐக்கிய கேரளக் கோரிக்கையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் தென்திருவிதாங்கூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளும் இருந்தன.

எனவே, அக்கோரிக்கையை நாகர்கோவிலைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான பி.எஸ்.மணி கடுமையாக எதிர்த்தார். அவரது முன்முயற்சியால் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் தொடங்கப்பட்டது. பின்பு, அது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்று பெயர் மாறியது. மார்ஷல் நேசமணி, நதானியல், பி.சிதம்பரம் பிள்ளை, காந்திராமன் உட்பட பல தலைவர்கள் இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டனர்.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்துக்குக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், நாடகக் கலைஞர் ஔவை டி.கே.சண்முகமும் நிதியுதவிபுரிந்து ஆதரித்தனர். இதற்கிடையே தேவிகுளம் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தமிழர்கள் தாக்குதல்களுக்கு ஆளாகினர். தமிழர்களின் போராட்டங்கள் தீவிரமானது. துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் பலியானார்கள். கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன. பத்தாண்டு கால இடைவிடாத போராட்டத்தின் பலனாகத்தான் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதியளவேனும் தமிழகத்தோடு இணைந்தது.

தமிழ் இந்து

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.