Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இன்றிலும் மோசமான நாளையிலிருந்து, எம்மைக் காத்துக் கொள்ளல்..."

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

candidates.jpg

இலைஜா ஹூல் -
 
ஜனவரி 9, 2015 காலையில் மனதில் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்வு. ஒரு வித அமைதி. சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் ஒரேயிரவோடு விலகியது போன்ற தோற்றம். மூன்றாம் முறையும் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்று போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டிருந்தார். இரவு பூராகவும் நான் வானொலிப் பெட்டியில் தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பாரிய சுமையொன்றை இறக்கி வைத்ததைப் போன்ற நிம்மதியை நான் அன்றை காலை உணர்ந்தேன்.
 
ஒரு நாடாக நாம் கொடியதோர் தசாப்தத்தைத் தாண்டி விட்டதாக நான் நம்பினேன். சமத்துவமும், சமாதானமும், நியாயயும் நிறைந்த சமூகமொன்றை நாம் கட்டியெழுப்புவோம். கடந்த ஆட்சியில் பொதுமக்கள், ஊடகவியலாளர், முரண் சிந்தனை கொண்டோருக்கு எதிராகக் குற்றமிழைத்தவர்கள் கூண்டில் நிறுத்தப்படுவார்கள். ஊழலும், மோசடியும் முடிவுறும் என்றெல்லாம் நம்பினேன். ஆசைப்பட்டேன். சிறுபான்மையினரின் உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவோம் என்றும் உறுதி கொண்டிருந்தேன். 
 
ஐந்தாண்டுகள் கடந்தோடியாயிற்று. மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலை நாம் சந்திக்கின்றோம். நாம் சாதிக்க நினைத்த பலவற்றை நாம் சாதிக்கவில்லை. அதிலும் கொடுமை, நாம் ஜனநாயகத்திற்கென்றும், சிறுபான்மை உரிமைக்கென்றும் வென்றெடுத்தவற்றையும், எமக்குக் கடைசி ஐந்தாண்டுகளாக இருந்த ஜனநாயக இடைவெளியையும் ஒன்றாகத் தொலைத்து விடக் கூடிய பாரிய ஆபத்தொன்றின் விளிம்பில் நாம் நிற்கின்றோம். இதனால் எமக்கிடையே இந்த நல்லாட்சி அரசின் மீது கடுமையான எதிர் விமர்சனங்கள் தோன்றியிருக்கின்றன.
 
இச் சலிப்பும், விசனமும் அரசியலைக் குறித்த எம் நம்பிக்கையில் இருந்து பிறக்கிறது. அரசியலை நாம் முடிவின்றிய சமூக மேம்பாட்டிற்கான   கருவியாகப் பார்ப்பதுண்டு. சரியான அரசியலின் கீழ் இன்றைப் பார்க்கிலும் மேம்பட்ட நாளையை உருவாக்கிவிட முடியும் என்பது எம் நம்பிக்கை. 
கடந்த ஐந்து வருடங்களில் நான் கற்ற பாடம் அரசியலைக் குறித்த எம் இந்த விளக்கம் பிழையானது என்பதே. 
 
உதாரணமாக, சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் உலகளாவிய ரீதியில் ஜனநாயக நாடுகளைத் தோற்றுவிப்பதற்கும், திறந்த பொருளாதார முறையை பரவலாக்குவதற்கும் தீவிர முயற்சி எடுக்கப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்பு இன்று தீவிர இனவாத வலதுசாரிப் போக்குடைய, மூடிய பொருளாதாரக் கொள்கையைக் கொண்ட, சர்வாதிகார ஆட்சிகள் உலகெங்கும் தலை தூக்கத் தொடங்கியிருக்கிறன. 1970-களில் தமிழ பேசும் மக்களாகிய நாம் எமது இருப்பும், உரிமைகளும் மீறப்படுகிறது என்ற அறச் சீற்றத்தின் விளைவாக, அன்றிருந்த நிலையிலும் பார்க்க மேம்பட்ட எதிர்காலமொன்றை எமக்கென உருவாக்கிக் கொள்ள, ஆயுதம் ஏந்திப் போராடினோம். ஆனால், கவலைக்கிடமாக 2006-2009 வரையான காலப் பகுதியில் நாம் எப்போதும் சந்திக்காத இன்னல்களைச் சந்தித்தோம். கொத்துக் கொத்தாய் உயிர்களை இழந்தோம். நாம் முன்னிருந்த நிலையிலும் மோசமான நிலையில் இருப்பதாக நாம் இப்போது எமக்குள்ளே சொல்லிக் கொள்வதுண்டு. சிங்களவர்கள் எல்லோரும் 2009 ஆம் ஆண்டோடு இலங்கை மண்ணில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாய் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் 300 உயிர்களைக் காவு கொண்டார்கள். 
 
ஆக, இன்றிலும் பார்க்க மோசமான நாளையொன்று உருவாகலாம். இதுவே நிதர்சனம். அரசியல் என்பது முடிவின்றிய, நேர்கோட்டுச் சமூக மாற்றத்திற்கான கருவியல்ல. மாறாக, அரசியல் மீண்டும் மீண்டும், மீள் சுழற்சி முறையில் அரங்கேறும் கொடூரங்களையும், தீயனவையும் எதிர்க்கும் ஆயுதமாகும். 
 
அரசியலை நாம் இந்த விளக்கத்தின் அடிப்படையில் நின்று நோக்கும் போது, அது நாம் அடைந்திருக்கும் முற்போக்கான மாற்றங்களை தீவிரமாகக் கண் விழித்துக் காக்கவென முன்னெச்சரிக்கிறது. நாம் அசட்டையாகத் தூங்கிவிட்டால் இன்றிருக்கும் எம் சிறு சுதந்திரங்கள், சந்தோஷங்கள் கூட எம்மிடமிருந்து பிடுங்கியெடுக்கப்படலாம். மேலும், அரசியலை நாம் மேற்சொன்னவாறு நோக்கும் போது, இத் தேர்தலில் ‘தீயது குறைந்த பிசாசுகளில்’ ஒன்றைத் தெரிய வேண்டிய இக் கட்டான நிலையைக் குறித்து நாம் அதிகம் விசனப்பட்டுக் கொள்ள மாட்டோம்.  இப்படிப்பட்ட தெரிவுகள் எம்முன் இருப்பதில் அதிசயம் எதுவுமில்லை. 
 
இருந்தாலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தவர்களில் பலருக்கு இந்த அரசின் மீது கடும் விசனமிருப்பது விளங்கிக்கொள்ளக் கூடியதே. முஸ்லிம் மக்களில் பலருக்கு அம்பாறை, திகன, மினுவாங்கொடை போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகத் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளை இந்த அரசாங்கம் சரியாகத் தடுக்கவில்லை என்ற தீவிர ஆதங்கம் இருக்கிறது. தமிழரிடம், இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அரசியல் கைதிகள் விடுவிப்புப் போன்ற விடயங்களில் காட்டிய அசமந்தப்போக்கின் மேல் குறையிருக்கின்றது. இதனால், இம் முறை எம்மில் சிலர் ஜேவிபியின் அனுரகுமாரவிற்கும், ஹிஸ்புல்லாவிற்கும், சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிப்பதாகவும்; சிலர் வாக்களிக்காமல் புறக்கணிப்புச் செய்து மைத்திரி-ரணில் அரசிற்கு எதிர்ப்பைக் காட்டி விட வேண்டும் என்றும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறோம். 
 
இம் மாதிரியான முடிவுகள் சிறுபான்மைகள் செய்து கொள்ளும் கூட்டுத் தற்கொலையாகவே முடியும். 
 
முதலாவதாக, எமக்கு முன்னிருக்கும் தெரிவின் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அது குறைபாடுள்ள ஜனநாயகத்திற்கும், கர்ணாககொடூரமான கொடுங்கோன்மைக்கும் இடையிலான தெரிவு. ஓரளவில் நடமுறையிலிருக்கும் பிரஜாவுரிமைக்கும், அடிமைத்தனத்துக்கும் இடையிலான தெரிவு. கோத்தாபாய ராஜபக்ச ஒழுக்கபூர்வமான சமூகத்தைக் கட்டியெழுப்பப் போவதாகச் சொல்கிறார். எந்தவொரு பொது விவாவத்திலும் ஈடுபட அவர் தயாராக இல்லை. சுயாதீனமான பத்திரிகையாளர்களை எதிர்கொள்வதை அவர் தவிர்த்திருக்கிறார். முற்றிலும் மோசமான வரலாற்றைக் கொண்ட இராணுவ அதிகாரிகளால் அவர் சூழப்பட்டிருக்கிறார். தேசிய பாதுகாப்பை முற்றாக மையப்படுத்தியே அவரது பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழரை முஸ்லிம்களிடமிருந்து காப்பதாகவும்; முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்கும் அவர்களை பட்சத்தில் சிங்களக் கும்பல்களிடமிருந்து காப்பதாகவும்; கிறிஸ்தவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து காப்பதாகவும் அவரும் அவருடன் சேர்ந்துள்ள தமிழ் முஸ்லிம் தீவிரவாத அரசியல்வாதிகளும் மாற்றிமாற்றிச் சொல்லிவருகின்றனர். சிங்களர் மத்தியிலோ அனைத்து சிறுபான்மை இனங்களது வால்களையும் ஒட்ட நறுக்கி, அவர்களுக்குரிய மூலையோரத்தில் இருத்தப்போவதாக கோத்தபாய நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரச்சாரம் செய்துவருகிறார். 
 
கிழக்கில் வியாழேந்திரன், பிள்ளையான், கருணா முதலானோர் தீவிர முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். இரண்டு நாளுக்கு முன்னர் நான் காத்தான்குடி நகரூடாகப் பயணித்தேன். கோத்தபாயவை ஆதரிக்கும் முஸ்லிம்கள் தமிழ்ப் புலிகளை அழித்த ராஜபக்சக்களே, தமிழரையும் அடக்க வல்லவர்கள் என்ற வண்ணமாக ஒலி வாங்கியில் அலறிக் கொண்டிருந்தார்கள். பொலன்னறுவையில் நேற்று நடந்த கோத்தபாயவின் பிரச்சாரக் கூட்டமொன்றிலோ இதே போக்கில் போனால் 2028 இல் இலங்கை முஸ்லிம் நாடாக மாறிவிடும், அதைத் தடுக்க கோத்தபாயவே நாடாள வேண்டுமென்ற கருத்தை ரொஷான் ரணசிங்க என்ற மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரது செயலாளர் முன்வைத்திருக்கிறார்.  
 
இவையெல்லாம் வரவிருக்கும் கலிகாலத்தைச் சுட்டும் தீர்க்கதரிசனங்கள். கோத்தாபாயவின் முந்தைய வரலாறு இக் கலிகாலம் மீது எமக்கிருக்கும் அனைத்து விதப் பயங்களையும் உறுதிப்படுத்துகிறது. மகிந்த ராஜபக்சவிற்காவது பொது மக்களுக்குள் தான் ஒரு ஹீரோவாகத் தெரிய வேண்டுமென்ற நப்பாசை இருந்தது. முன்பொரு காலத்தில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த வரலாறு இருக்கிறது. கோத்தபாயவிற்கு இப்படி எதுவுமில்லை. இராணுவச் சிந்தனையே அவரிடம் நிறைந்திருக்கிறது.
 
முன்னோடி அரசியல் ஆய்வாளர் திஸ்ஸராணி குணசேகர இப்படி எழுதுகிறார்:
 
"ரத்துபஸ்வலவில் 2013 இல் கோட்டா அரங்கேற்றிய மாபாதகச் செயல், நவம்பர் 16 இன் பின்னான நமது எதிர்காலத்திற்கு ஒரு முன்னோட்டமாகும். ஒரு தொழிற்சாலை சுற்றுச்சூழல் சட்டங்களை புறக்கணித்து நிலத்தடி நீரை விஷமாக்கியது. மக்கள் சுத்தமான குடிநீரைக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை. தண்ணீரே அவர்களின் கவலை; அரசியல் அல்ல. ஆனால், இந்தத் தொழிற்சாலை ராஜபக்‌ஷ அடிவருடிகளுக்குச் சொந்தமானது. இதனால், ராஜபக்‌ஷ சகோதரர்கள் இந்தப் போராட்டத்தை ஒரு அரசியல் அச்சுறுத்தலாகக் கருதினர். ஒரு பிரிகேடியர் தலைமையில் பேராயுதங்களை ஏந்திய இராணுவம் அனுப்பப்பட்டது. குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த மூன்று பேர் சுட்டுப்பொசுக்கப்பட்டனர். இன்னும் பலர் காயப்படுத்தப்பட்டனர்.”
 
சிங்களவருக்கே இந்த நிலையென்றால் சிறுபான்மையினர் எமக்கு?  
 
அண்மைக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளின் சூத்திரதாரிகள் பலரும் கோத்தாபாயவின் பக்கம் படையெடுத்து  நிற்கின்றார்கள். 
 
கடந்த வருடம் மகிந்த தரப்பால் நிகழ்த்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக் காலத்தில், நாமல் குமார என்பவர் சிறிசேனவையும், கோத்தபாயவையும் கொலை செய்வதற்கு சதி முயற்சி நடப்பதாக ஊடகங்களுக்கு சொல்லித்திரிந்தார். நாமல் குமார விரல் காட்டிய பொலிஸ் பெரியவரை சிறை வைத்தார்கள். குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் பெரியவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பிலான விசாரணைகளை பொறுப்பேற்று நடத்திவந்தவர். இவ் வருடம் உயிர்த்த ஞாயிறன்று குண்டுகள் வெடித்தன. குண்டு வெடிப்பின் மறுதினமே கோத்தபாய நாட்டைப் பாதுகாக்க தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். குண்டு வெடிப்பை தொடர்ந்து முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டு தாக்கப்பட்டார்கள். குருணாகல் பகுதியில் இந்த தாக்குதலில் தொடர்புபட்ட சிலரை பொலிஸ் கைது செய்திருந்த போது சுதந்திர கட்சி செயலாளர் தயாசிறி அவர்களை விடுவித்து தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போனார். தயாசிறியோடு இந்த நாமல் குமாரவும் அந்த கலவர களத்தில் இருந்தார்.” (முஜீப் இப்ராஹிமின் பத்தியிலிருந்து) நாமல் குமார தாற்காலிகமாகச் சிறையில் இருக்கிறார். தயாசிறி இப்போது யாரோடு இருக்கிறார்? சிந்திப்பவர்களுக்கு இங்கு பல உண்மைகள் புரியும். ஏன் குண்டை மாட்டிக்கொண்டு வெடித்துச் சிதறிய சகரான் கூட முன்பொரு காலத்தில்  பாதுகாப்பு அமைச்சின் கணக்கில் சம்பளம் பெற்றவர் தான். இதை மகிந்த ராஜபக்சவே ஒப்புக் கொண்டிருந்தார். 
 
திகண, மினுவாங்கொட பிரதேசங்களில் முஸ்லிம்களின் மேல் வன்முறை புரிந்த டான் பிரியசாத் என்ற நபர் மொட்டுக் கட்சியின் கொலன்னாவை அலுவலகத்தில் நிற்பதை பத்திரிகையாளர் பிரசாத் வெலிகும்பர நேற்றுப் படம் பிடித்து அம்பலப்படுத்தியிருந்தார். “சிங்களப்பகுதிகளில் 10 வீடுகளுக்கு ஒரு பொக்கற் மீட்டிங் நடக்கிறது. அதில் சஜித் ஆட்சிக்கு வந்தால் ‘தம்பிலா’ நம்மை ஆளவந்து விடுவான் என்ற பிரச்சாரமே முன்கொண்டு செல்லப்படுகிறது. மதுமாதவ அரவிந்த, டான் பிரசாத் போன்ற இனவெறுப்பு தீவிரவாதிகள் அதனை முன்கொண்டு செல்கின்றனர்.” (முஜீப் இப்ராஹிமின் பத்தியிலிருந்து)
 
மறுபக்கம் கோத்தாபாயவின் வழக்கறிஞர் அலி சப்ரி முஸ்லிம்கள் மொட்டுக்கு வாக்களிக்காவிடில் ‘அம்பாணைக்குக் கிடைக்கும்’ என்கிறார். கண்டியில் முஸ்லிம்கள் தமது 25 வீத வாக்கை கோத்தபாயவிற்கு வழங்கும் பட்சத்தில் சிங்களக் கும்ப்பல்களிடமிருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதாக மகிந்தானந்த அளுத்கமகே சத்தியம் செய்து கொடுக்கிறார். யார், யாரை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அலி சப்ரியை விட அழகாக யாரும் விளங்கப்படுத்த முடியாது. மொட்டுக்கு வாக்களிப்பதால் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று எண்ணும் பேடித் தமிழரும், முஸ்லிம்களும் எமக்குள் இல்லாமல் இல்லை. தமிழரிடமிருந்து முஸ்லிம்களை கோத்தாவை ஆதரித்துக் காக்க முயல்வோருக்கும்; முஸ்லிம்களிடமிருந்து தமிழரைக் காக்க கோத்தாவை ஆதரிக்குமாறு கூக்குரலிடுபவர்களுக்கும் ஒரே பதில் தான். இரண்டு கூட்டத்திற்கும் ‘அம்பாணைக்குக் கொடுக்க’ டான் பிரசாத்தும், மதுமாதவ அரவிந்தவும், நாமல் குமாரவும் காத்திருக்கிறார்கள், கோத்தபாய வென்றதும். 
 
ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் மேல் பல அதிருப்திகள் இருந்தாலும், அரச ஆதரவின் கீழ் சிறுபான்மையினரது நிலங்களை சிங்களவர்களை வைத்து ஆக்கிரமிக்கும் தீய செயல் நடக்கவில்லை.  ஆனால், கோத்தபாயவின் ஆட்சியில் சிறுபான்மை நிலங்களுக்குப் பாரிய ஆபத்து வருகிறது. 2012 இல் ராஜபக்ச அரசாங்கம் புனிதப் பிரதேசங்கள் சட்டத்தை இயற்றியது. இச் சட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பகுதி, நகர்ப்புற அபிவிருத்திப் பகுதி அல்லது எந்தவொரு பிரதான சாலை மேம்பாட்டுப் பகுதியிலும் உள்ள தனியார் நிலங்களில் வன வளக் காப்பு, இயற்கை வளக் காப்பு, அல்லது வரலாற்று பூர்வமான நிலம் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் அத்தனை நிலங்களையும் கையகப்படுத்திக் கொள்ளும் அதிகாரத்தை புத்த சாசன அமைச்சுக்குக் கொடுத்தது. மேலும், இச் சட்டத்தின் ஐந்தாம் சரத்தில் எந்தவொரு நிலத்தையும் புனிதப் பிரதேசமாக அடையாளப்படுத்திய பின் கையகப்படுத்திக் கொள்ளும் அதிகாரமும் இணைக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் உங்கள் நிலத்தையும், என் நிலத்தையும் ஏதோவொரு அடிப்படையில் புனித நிலம் என்று பொய் லேபல் குத்திவிட்டு புத்த சாசன அமைச்சு சுவீகரித்துக் கொள்ளலாம். இச் சட்டத்தை தடுத்து நிறுத்திய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு என்ன நடந்தது என்பதையும் நாம் அறிவோம்.
 
ஏற்கனவே கோத்தாபாய ஆட்சியேறிய கையோடு இராணுவக் கைதிகள் பலரையும், தனக்கு நெருக்கமான கொடும் குற்றவாளிகளையும் விடுவிப்பதாக பல முறை வாக்குக் கொடுத்துவிட்டார். இதில் கோத்தபாய பாதுகாப்பு செயலராக இருந்த காலத்தில் 11 தமிழ் இளைஞரைக் கடத்தி வைத்துவிட்டு, அவர்களது பெற்றோரிடம் அதை வைத்துப் பணத்தைப் பிடுங்கி விட்டு, இறுதியில் அந்த இளைஞரைக் கொன்றும் போட்ட கடற்படை வீரர்களும் அடங்குவர். துமிந்த சில்வாவும் அடங்குவார். பிள்ளையானும் அடங்குவார். இவர்கள் எல்லாம் வெளியே வந்தால் பழையபடி ஆயுத ஒட்டுக் குழுக்களது வன்முறை தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் தலைவிரித்தாடும். நேற்றும் வாகரையில் சஜித் ஆதரவாளரது வீட்டின் மீது பிள்ளையான் குழுவைச் சார்ந்தவர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். வடக்கில் ஐந்து வருடமாக அடங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா தன் அடவாடித்தனங்களை மீண்டும் கட்டவிழ்க்கக் காத்திருக்கிறார். வெள்ளை வான், வாள் வீச்சு, கிறீஸ் பூதம் என நாடு வெகு சொற்ப காலத்தில் ரணகளம் கட்டும். 
 
இறுதியாக, கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் அடுத்த முறை நீதியான, வன்முறையின்றிய தேர்தலொன்று நிகழுமா என்பது பாரிய கேள்விக் குறியே. 2015 இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் தோற்பார் என்பதை அவரோ, குடும்பத்தினரோ எதிர்பார்க்கவில்லை. 18 ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, இரு தவணை ஜனாதிபதியாக இருந்தவர் மீண்டும் தேர்தலில் நிற்க முடியாதென்றிருந்த வரையறையை நீக்கியதன் காரணமே தாம் வாழ் நாள்பூராக ஆட்சி செலுத்துவதை நோக்காகக் கொண்டே. இப்போது அவர்களுக்கு ஓரளவுக்கு நீதியான தேர்தலொன்றில் தாம் தோற்கடிக்கப்பட முடியும் என்ற விளக்கமிருக்கிறது. இதனால் அவர்கள் மீண்டுமொருமுறை ‘ஓரளவிற்கு நீதியான தேர்தலை’ நடத்தும் தவறை ஒரு போதும்  செய்யப் போவதில்லை. 
 

இவை அனைத்தையும் வைத்து சிந்திக்கும் போது, இக் கலிகாலத்தைத் தடுப்பதே தற்போது எம் முன்னிருக்கும்  பிரதானமான பணியென்பது தெளிவு. வாக்களிக்காமல் இருப்பது, மூன்றாம் அணிக்கு வாக்களிப்பது எல்லாமே இந்தக் கலிகாலத்தை கரம் கூப்பி வரவேற்பதற்குச் சமன். எம்மிலிருக்கும் சில சுயநலவாதிகள் - ஹிஸ்புல்லா, சிவாஜிலிங்கம், பொன்னம்பலம் போன்றோர் - எம்மை விற்று வாழ்க்கை நடத்தப் பார்க்கிறார்கள். சாய்ந்தமருது போன்ற இடங்களில் ஒரு சிலர் அம் மக்களது உண்மையான பிரச்சினைகளை வைத்துக் கொண்டு கலிகாலத்திற்கு உயிர் கொடுக்க நினைக்கிறார்கள். சாய்ந்தமருது நண்பர்களே, பிரதேச சபை வந்தால் மட்டும் போதுமா? மற்றைய இடங்களில் முஸ்லிம்கள் பிரேதமாவது எமக்குப் பொருட்டில்லையா? குறுக்கு வழியில் பெறுவது எதுவும் நிலைக்காது. எப்படித் தருகிறார்களோ, அப்படியே பிடுங்குவார்கள். இதைக் கவனமாக நினைவில் கொள்வோம். 
 
தவறிழைத்தால் வரவிருக்கும் கலிகாலத்தைத் தடுக்க, கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிக்காது விட்டால் மாத்திரம் போதாது. நவம்பர் 16 அன்று நாம் அவருக்கு எதிராக, அவரைத் தோற்கடிக்கவென, அர்த்த பூர்வமாக, வாக்களிக்க வேண்டும். தமிழரும், முஸ்லிம்களும் சஜித் பிரேமதாசாவுடனும், முற்போக்கான சிங்களவரோடும் ஒன்றாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.