Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஆட்சிமாற்றம்: மீளுமா, மூழ்குமா மீன் பிடித்தொழில்?

Featured Replies

2019-12-01@ 15:22:26
Tamil_News_2019_Nov29__384258449077607.jpg

*10 லட்சம் மீனவர்களை பாதுகாக்குமா அரசுகள்?
*5 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும்

ராமேஸ்வரம்: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே, பிரதமராக அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளனர். இதனால், தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலில் எத்தகைய மாற்றங்கள், விளைவுகள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மட்டுமல்லாது, தமிழக மக்களிடையேயும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும், 10 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை அரசுகள் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

இந்தியா - இலங்கை நாடுகளின் 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு பகுதியான கச்சத்தீவு, இலங்கைக்கு சொந்தமானது. இதன் பின் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை கேள்விக்குறியானது. 1980ல் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில், இருநாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை வரையரை செய்யப்பட்டது. அன்று முதல் தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போதெல்லாம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

சட்டத்தால் சிக்கல்: இலங்கை உள்நாட்டு போரின்போது கடலில் மீனவர்கள் உயிர்ப்பலி, கைது, சிறைவைப்பு, துப்பாக்கிச்சூடு, தாக்குதலுக்குள்ளாவதும், படகுகள் கடலில் மூழ்கடிப்பு, மீன்பிடி வலை அறுப்பு போன்ற சம்பவங்கள் நடந்தது. இலங்கை கடற்படையின் அத்துமீறல்களால் தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையில் கடந்த ஆட்சியின்போது அரசால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தினால் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவானது.

வாழ்வாதாரம் பாதிக்கும்: கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய கடல் தொழில் சட்டத்தினால் மீனவர்கள் தங்களது படகுகளை இழப்பதுடன், ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இலங்கை அரசிடம் தாரை வார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் ஒட்டுமொத்த மீன்பிடித்தொழில் கேள்விக்குறியாகி நிற்கும் நிலையில்தான், தற்போது கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராகவும், மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளனர். இம்மாற்றத்தினால் எதிர்காலத்தில் மீன்பிடித்தொழிலில் எத்தகைய மாற்றங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டிவருமோ என்ற எதிர்பார்ப்பும், அச்சமும் தமிழக மீனவர்களிடையே உருவாகியுள்ளது.

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்குமான உள்நாட்டு சண்டை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 2005ல் மகிந்த ராஜபக்சே இலங்கை அதிபராக பொறுப்பேற்றார். இவர் தமிழீழப்போரை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தார். இதற்காக தனது சகோதரரும், ராணுவ அதிகாரியுமான கோத்தபய ராஜபக்சேவை இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அரசு செயலாளராக நியமித்தார். ஈழப்போராளிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியா அதிக எதிர்ப்பு காட்டாமல் இருக்க, தமிழக மீனவர்கள் பிரச்னையில் சில சமரசங்களையும் ராஜபக்சே அரசு செய்து கொண்டது.

இலங்கையிலும் எதிர்ப்பு: இதனடிப்படையில் படகுடன் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களும், மீன்பிடி படகுகளும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் விடுவிக்கப்படும் நடவடிக்கையை ராஜபக்சே அரசு மேற்கொண்டது. 2009ல் ஈழப்போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, இரண்டாம் முறையும் ராஜபக்சே அதிபராக பொறுப்பேற்ற நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னை குறித்து முடிவெடுக்க இருநாட்டு மீனவர்கள் நேரில் சந்தித்து பேசுவதற்குரிய நடவடிக்கை இருநாட்டு அரசுகளாலும் மேற்கொள்ளப்பட்டது.

தீர்வு தராத பேச்சு: 2015ம் ஆண்டு துவக்கத்தில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்ரிபால சிறிசேனா அதிபராக பொறுப்பேற்ற பின் இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் கைது, படகுகள் கைப்பற்றும் சம்பவங்கள் அதிகரித்தன. இதனால் நூற்றுக்கணக்கான படகுகள் பல ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் கடலில் நிறுத்தப்பட்டதால் சேதமடைந்து கடலில் மூழ்கின. பல நூறு கோடி நஷ்டம்: படகுகளை இழந்ததன் மூலம் மீனவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

மீனவர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் இருநாட்டு நட்புறவு அடிப்படையில் கடந்த ஆண்டு இலங்கை அரசால் மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்பட்டன. ஆனால் மீட்க முடியாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்து இலங்கை கடலில் மூழ்கியதால் படகை இழந்து தவிக்கும் மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பறிபோயுள்ளது. இப்பிரச்னைகளுக்கு இடையேதான் கடந்த ஆண்டு இலங்கையில் புதிய கடல் தொழில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசால் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 26 விசைப்படகுகள் இலங்கை அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

சட்டம் ரத்தாகுமா: 8 படகுகளை அரசுடமையாக்கும் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இலங்கை அரசால் நிறைவேற்றப்பட்ட புதிய கடல்தொழில் சட்டம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், மீன்பிடித்தொழிலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் இச்சட்டம் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும், பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையில், இலங்கை தமிழரான டக்ளஸ் தேவானந்தா இலங்கை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதுடன், தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடித்தொழில் செய்யலாம் என்று இந்திய ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆனாலும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் முன்பு இருந்த நிலையே நீடிக்கிறது.

பலத்த கண்காணிப்பு: கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற நாள் முதல், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் கண்காணிப்பு முன்பை விட தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கப்பல்களும் அணிவகுத்து நிற்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆட்சியில் நடந்தது போல் மீனவர்கள் படகுடன் சிறைப்பிடிக்கும் சம்பவங்கள் இனிமேலும் தொடர்ந்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த மீன்பிடித்தொழிலும் நசிந்துவிடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிதாக பதவியேற்ற கோத்தபய அரசு, தமிழக மீனவர்கள் விசயத்தில் எந்தமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை கணிக்க முடியாத நிலையில், இலங்கை அதிபரிடம், தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேச வேண்டும். நின்றுபோன இருநாட்டு மீனவர்களின் பேசசுவார்த்தையை மீண்டும் தொடருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய சட்டம் ரத்து செய்யப்படுமா? கடற்படை தாக்குதல் இல்லாமல் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு இடையே ஏற்படும் மாற்றங்கள் விளைவுகள் குறித்தும் தமிழக மீனவர்கள், மக்களிடையே மிகப்பெரும் எதிபார்ப்பு உருவாகியுள்ளது.

*தமிழக மீனவர்களை அரசு புறக்கணிக்கிறது:
ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி என்.ஜே.போஸ் கூறியதாவது : மத்திய அரசு, இலங்கை கடற்படையால் கைப்பற்றப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மீனவர்கள் தாக்கப்படும்போது எச்சரிக்கையும் செய்யவில்லை. தமிழக மீனவர்களை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. இலங்கையின் தற்போதைய அரசு, முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய கடல்தொழில் சட்டத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க வேண்டும். இலங்கை மீனவர்களின் கோரிக்கையான தடை செய்யப்பட்ட மீன் பிடிப்பு, அதிக குதிரைசக்தி கொண்ட படகு போன்றவை தடை செய்யப்பட்டால்தான் மீனவர் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு கிடைக்கும்.

*பிரச்னையின்றி மீன் பிடிக்க அனுமதி:
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான புதிய அரசு, கடந்த அரசினால் கொண்டு வரப்பட்ட புதிய கடல்தொழில் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடற்படை தாக்குதல் நடவடிக்கையை கைவிட உத்தரவிட வேண்டும். கச்சத்தீவு கடல் பகுதியில் எவ்வித பிரச்னையும் இன்றி முன்பு போல் மீன்பிடிக்க அனுமதி அளித்து பாக்ஜலசந்தி கடலில் தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இணக்கமாக மீன்பிடி தொழில் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் தமிழக மீனவர்கள் தரப்பில் இலங்கை அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

*500 பேர் பலி:
இலங்கையில் கடந்த காலங்களில் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த சண்டையை காரனம் காட்டி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கை, கால், பார்வையை இழந்தனர்.

*இருநாட்டு அரசுகளும் தீர்வு காண வேண்டும்:
நாகை அக்கரைப்பேட்டை மீனவர் பிரதிநிதி வீரமுத்து கூறியதாவது : பாக்ஜலசந்தி கடலில் தற்போது மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சனை இல்லை. அன்றாடம் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியாது. இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துவர மறுக்கிறார்கள். அமைச்சர் சுஷ்மாசுவராஜ் தலைமையில் டெல்லியில் கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில்கூட தமிழக மீனவர்களுக்கு எதிராகத்தான் இலங்கை மீனவர்கள் பேசினர். தமிழக மீனவர்கள் நிலை குறித்து இருநாட்டு அரசுகளும் பேசி நல்ல தீர்வு கான வேண்டும்.

*வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவர்கள்:
மல்லிப்பட்டினம் பாரம்பரிய விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தாஜூதீன் கூறியதாவது : இலங்கையில் பிடிபடும் படகுகள் அரசுடமையாக்கப்படுவதால், தமிழக மீனவர்கள் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழக்கின்றனர். இது மனிதாபிமானமற்ற செயல். காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கை கடற்படையால் பிடிக்கப்படும் படகுகள் அவ்வப்போது விடுவிக்கப்பட்டு வந்தது. பாஜ ஆட்சி வந்தபின்பும் இரண்டு ஆண்டுகள் இந்த நிலை தொடர்ந்தது. அதன்பிறகு படகுகள் விடுவிப்பு என்பது குதிரைக்கொம்பாகி விட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மட்டும் இல்லை. இலங்கை கடற்படையினரால் நாட்டுப்படகுகளும் கைப்பற்றப்படுகிறது. தற்போது இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கிறோம்.

*பல கோடி ரூபாய் படகுகளுக்கு அபராதம்:
2018ம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டின் மீன்பிடித்துறை அமைச்சகம் புதிய கடல்தொழில் சட்டத்தை முன்வைத்தது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு கப்பல், மீன்பிடி படகுகளுக்கு ரூ.60 லட்சம் முதல் பல கோடி வரை அபராதம் விதிக்க, அத்துமீறி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வரைவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தினால் தமிழக மீனவர்கள் மட்டுமல்லாமல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்துமாக்கடலில் மீன்பிடிக்க செல்லும் கேரளா, கர்நாடகா, ஆந்திர மீனவர்களின் படகுகளும் இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல நேரிட்டால் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு உள்ளாகும்.

*நான்கு சுற்று பேச்சு நடந்தும் முன்னேற்றமில்லை:
தடை செய்யப்பட்ட மீன்பிடியால் இலங்கை மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் உருவாகியது. இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கூறிய இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று இருநாட்டு மீனவர்களுக்குள் இணக்கமான சூழ்நிலை உருவாக இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. நான்கு சுற்றுகள் பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. நடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

*கடற்படை முகாம் மூலம் கண்காணிப்பு:
இந்திய மீனவர்களை இலங்கை கடல் பகுதியிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த திட்டமிட்ட இலங்கை அரசு, கச்சத்தீவில் சிறிய அளவில் இலங்கை கடற்படை முகாமை அமைக்க 2008ல் முடிவு செய்தது. கச்சத்தீவின் வடமேற்கிலுள்ள சமவெளி பகுதியில் நவீன கண்காணிப்பு தொடர்பு கருவிகளுடன் கூடிய ஏரியா கடற்படை முகாம் ஓன்றை அமைத்ததுடன் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பு ரோந்துப்பணிகளையும் தீவிரப்படுத்தியது. இதனால் தமிழக மீனவர்கள் மத்தியில் நிரந்தரமான அச்ச உணர்வை இலங்கை அரசு ஏற்படுத்தியது.

1,076 கிமீ நீளம் கொண்ட தமிழக கடலோர பகுதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்களின் மீன் உணவு தேவை போக மீனவர்களால் பிடித்து வரப்படும் இறால், நண்டு போன்ற உயர்வகை மீன்களின் ஏற்றுமதியின் மூலம் ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் நம் நாட்டுக்கு அந்நிய செலவாணி கிடைத்து வருகிறது. கடலுக்கு சென்றால் உயிருடன் கரை திரும்புவது நிச்சயமற்ற நிலையில் வாழ்நாள் முழுவதும் கடல் நீரில் உழன்று மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்களில் 80 சதவீதத்தினர் இன்றும் அன்றாடங்காய்ச்சிகளாய் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=545245

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

*500 பேர் பலி:
இலங்கையில் கடந்த காலங்களில் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த சண்டையை காரனம் காட்டி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கை, கால், பார்வையை இழந்தனர்.

மோடியால் கூட இதற்கு ஒரு நீதியை பெற்றுத்தர (இன்னும்) முடியவில்லை. 

எடப்பாடி இல்லை யாராலும் கூட இவ்வாறான இழப்புக்களை தவிர்க்கும் தலைமை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வட கடலில் இந்திய மீனவர்களின் வருகையை புதிய அரசாங்கம் முற்றிலுமாக தடுக்கவேண்டும்.  இதனோடு தொடர்புபட்ட அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இலங்கைத் தமிழர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.