Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் வரலாறுகள்

Featured Replies

லெப்டினன் கேணல் சுபன்

supan.jpg

மன்னார் மாவட்டத்தின் விசேடதளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார், இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபனும், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான, சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தது போதும். என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்.

1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். இராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாகப் பறித்தன. தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால் பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

'சுபன்' தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டு, ஆடி மாதம், 21ம் திகதி பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார். கள்ளியடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி, பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய், விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.

1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில், ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் விசேட கொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடு தோள் நின்று போராடினார். சமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னர் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்

nantri-Erimalai-2001

நன்றி- மாவீரர்கள் புளக் ஸ்பொட்

ponnamman.gif

தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா....

என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

ponnamman1.jpg

ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.

எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.

வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.

ponnamman3.jpg

தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.

பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள்.

பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.

14-2-87 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.

முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.

கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்... மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை.

பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.

முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. "அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ" என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.

http://www.eelatamil.net/index.php?option=...8&Itemid=39

  • தொடங்கியவர்

raatha.gif

யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச அதிகாரியைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு விதமான பார்வையைக் கொடுக்கவில்லை.

சாந்தமும் வசீகரமும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் நிர்வாக ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன.

யாழ் இந்துக்கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் அதிபரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள்.

கல்வி, விளையாட்டு, நிர்வாகம் என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக்கொண்டு கொழும்பில் வங்கியொன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார்.

அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வித்தியாசமான வீரனை, நடமாடும் பல்கலைக்கழகத்தினை இனங் கண்டுகொண்ட தேசியத்;தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக்கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை?

பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய இராணுவ அதிகாரி ஒருவனை அங்கே காணமுடிந்தது.

"Scout Attention" என்ற அதிகார அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான இராணுவ நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, அசுர வேகம் அதுதான் ராதா.

ராதா அசைக்கமுடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே னுரஅடி ரவன்ஸ் எனப்படும் போலிக்குண்டுகளைப் பாவித்து போர்க்கள நிலைமையைப் போன்ற பிரமையை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பாவிக்க விரும்பவில்லை, நிஜமான குண்டுகளை பாவிக்கப்போவதாக ராதா தலைவரிடம் அனுமதி வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு அனுமதி கொடுத்தார்.

"Down Position" இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். நிஜமான குண்டுகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றனர். அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் "அது தான் ராதா". அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பாலான அடிப்பாகங்களைக் கொண்ட சப்பாத்துக்களை கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த 'அத்காரி ராதாவைக்" காணவில்லை. ஒரு நல்ல நண்பனை, தோழனை அங்கே காணமுடிந்தது. என்ன I say கஸ்டமா இருக்கா, துன்பந்தான். இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை.

பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப்பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி "இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடலை மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வித்தியாசமானவர்.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மேசையில் புத்தகங்களும் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு.

அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் வாக்கிடோக்கியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென "னுழறn Pழளவைழைn" என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம்; அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அது வரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய பட்டாளம் ஒன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து பறந்து சென்றது.

தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். " காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் Command கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்"என்று ராதா கூறி முடித்தார்.

ராதாவைத் தொடர்ந்த பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து " இண்றைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் யுடநசவ வந்தால் எப்படி positionP எடுக்கிறது ஒன்று . order வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நிண்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்" என்று சொல்லிச் சிரித்தார்.

இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற விசேட கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம்.

விக்டர் இறந்த பின் மன்னார்ப் பிரதேசத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட "பவலோ" கவச வாகனத்தைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார்.

கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ் பிராந்தியத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி இராணுவமுகாம், மயிலியதனை இராணுவமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ இராணுவமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்..... இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. "சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ ளுயல எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say" இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வாசகம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது பசிய நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும்.

http://www.eelatamil.net/index.php?option=...0&Itemid=39

  • தொடங்கியவர்

lt_col_johny.gif

lt_col_johny.jpg

ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி?

விடுதலைப் புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் திரு. யோகி

இந்தியாவிலிருந்து சமாதான தூதுவராக அழைத்து வரப்பட்டு திரும்பிச் செல்லுகையில் நயவஞ்சகமாக, மூத்த தளபதி லெப். கேணல் ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்கியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (16.03.06) லெப்.கேணல் ஜொனியின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி "புலிகளின் குரல்" வானொலியில் அவர் ஆற்றிய நினைவுரை:

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.

10.4.85 யாழ்ப்பாணம் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 ஆம் ஆண்டு தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி மைதானத்தையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.

காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.

இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.

அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்- தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்- அருகாமையில் சென்றுவிட்டோம்- நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் கோபத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது சமாதானத்தை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டுவை ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.

இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் சமாதானத்தைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, சாமதானம் ஏற்பட சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும்- தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, "தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்- சொல்வீர்களா என்று தெரியவில்லை- இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொன்னேன்.

நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய சப்தத்திற்கு கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். கதிரை, மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்ல ஆயத்தமாக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், "என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்.."எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார். "என்ன முடிவு?" என்று கேட்டேன்.

தலைவர் கூறினார், "இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்" என்றார். "நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்" என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.

இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே என்றார் யோகி.

நன்றி-ஈழத்தமிழ்

maj_kedills.gif

majorkedills.jpg

போராட்டத்தின் நிழலில்

பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கண்டாவளையில் மகாலிங்கம் தம்பதியரின் புதல்வனாக அவதரித்த கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலை நாட்களில் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் பிரகாசித்தார். தடைகள விளையாட்டுகளில் பல சாதனைகளைப் படைத்தார். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி பயின்ற கேடில்ஸ் சிறீலங்கா இராணுவத்தின் கொடூரத்தனங்கள் கண்டு உள்ளங் கொதித்து, தாயக விடுதலையை இலட்சியமாக வரித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

1980களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட கேடில்சின் எதையும் இலகுவில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும், நிர்வாகத்திறனையும், ஆளுமையையும் இனங்கண்ட மூத்த தளபதி கேணல் கிட்டண்ணா, அவரைத் தென்மராட்சிப் பிரதேசத்திற்கான பொறுப்பாளராக நியமித்தார். நாவற்குழியிலிருந்தும் ஆனையிறவிலிருந்தும் சிறீலங்கா இராணுவம் புறப்படுகின்ற வேளைகளிலெல்லாம் எண்ணிச் சில தோழரோடு எண்ணற்ற சிங்களப்படையை எளிதாய் விரட்டியடிப்பார். தென்மராட்சிப் பிராந்தியத்தில் மாத்திரமன்றி சிங்கள இராணுவம் யாழ். குடநாட்டில் எப்பகுதியில் முன்னேறினாலும் அங்கு கிட்டண்ணாவோடு இந்த இளைய பொறுப்பாளனும் தனது குழுவினரோடு நிற்பார். களமுனைகளில் தேர்ந்த தாக்குதல் தலைவனாக விளங்கினார்.

அது மாத்திரமன்றி தென்மராட்சிப் பகுதியில் மக்கள் மத்தியில் இருந்து செவ்வனே அரசியல் கடமைகளை ஆற்றினார். தேர்ந்த போராளிகளை போராட்டத்திற்கு தென்மராட்சியிலிருந்து எடுத்துத் தந்தார். மக்களோடு மக்களாக நின்று மக்களின் பிள்ளையாகக் கடமையாற்றிய கேடில்ஸ் மக்களின் பிரச்சினைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று உழைத்தார்.

தென்மராட்சி வாழ் மக்களின் நல்வாழ்விற்காக தும்புத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தார். எமது தாயகம் தன்னிறைவுள்ள, பொருண்மிய மேம்பாடுள்ள நாடாக மலர வேண்டும் என்ற தலைவரின் கனவை நனவாக்க அல்லும் பகலும் பாடுபட்டார். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கடமை தவறாத நிதானம் பிசகாது தாயகப்பணியாற்றியவர் கேடில்ஸ். இன்றும் இவர் பெயரோடு விளங்கும் கேடில்ஸ் தும்புத் தொழில் நிறுவனம் தமிழீழ கயிற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று செயற்படுகிறது.

தாயகத்தின் விடுதலையை நேசித்த இந்த இளைய பொறுப்பாளன் எதிர்காலத்தில் தேர்ந்த பொறுப்பாளனாக சிறந்த தளபதியாக வருவானென விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகள் இவனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த நேரத்தில் நாவற்குழி முகாம் தகர்ப்பிற்குத் திட்டமிடப்பட்டது. தனது பிரதேசத்தில் வருகின்ற முகாமாகையால் கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது முகாம் தகர்ப்பிற்கான ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு ஆகியோரோடு இணைந்து இராணுவத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பவுசரைப் பயன்படுத்தி இராணுவத்தைத் தகர்ப்பதில் முன்னின்று கப்டன் வாசு, லெப். சித்தார்த்தன் உட்பட ஏழு போராளிகளோடு காற்றோடு காற்றாகிப் போனார்.

தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய ஏழு மாவீரர்களினதும் 14ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம்.

நன்றி-ஈழத்தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.