தமிழில் தேசிய கீதம் இசைக்கும் விவகாரம் இப்போது, பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கின்ற நிலையில், அரசாங்கத் தலைமை தமக்குரிய பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது.

வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தில் சிங்களத்தில் மட்டும் தான், தேசிய கீதம் பாடப்படும், தமிழில் பாடப்படாது, இந்தியாவில் கூட ஹிந்தியில் மட்டும் தான் தேசிய கீதம் பாடப்படுகிறது என்று கூறி, இந்த சர்ச்சைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர்  அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்.

சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தான் அவர் வெளியிட்டிருந்தார்.ஆனால், இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் தேசிய கீதம் பாடப்படுகிறது என அவர் வெளியிட்டது தவறான தகவல். இந்திய தேசிய கீதம் பெங்காலி மொழியில் தான் பாடப்படுகிறது.

ddddddd.jpg

அதுபோலவே தான்,  சிங்களத்தில் மட்டும் தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என்ற தகவலும் பொய்யானதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.

இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்த பின்னர், - எதிர்ப்புகள் கிளம்பிய பின்னர், சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் இசைக்கும் முடிவு ஏதும் இதுவரை அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை என்று பொது நிர்வாக அமைச்சின் செயலர் கூறியிருந்தார். அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் கூட, இதுகுறித்து இன்னமும் இறுதியான முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என்றே குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தம்மிடம் உறுதியாகத் தெரிவித்தார் என, ஆளும்கட்சியின் தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவரும் தெரிவித்திருந்தார்.ஆனால், இதுவரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவோ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவோஅல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரோ அரசாங்கத்தின் முடிவை தெளிவாக அறிவிக்கவில்லை. அதனால், இரண்டு பக்கங்களில் இருந்தும் இந்த விவகாரம் தீவிரமாக பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழில் தேசிய கீதம் பாட வேண்டாம் என்று சொன்னால் சந்தோஷமாக பாடாமல் விட்டு விடுவோம், இதை  ஒரு பிரச்சினையாக தூக்கிக் கொண்டு போகமாட்டோம் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்து, அரச தரப்புக்கும், சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கும் கடுமையான எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.

இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவும், பௌத்த பிக்குகள் பலரும் வெளியிட்டிருக்கின்ற கருத்துக்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன.

“ பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என்ற  விவகாரத்தைக்  குறிப்பிட்டு இனங்களுக்கிடையில்  பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றார். தேசிய கீதத்தில் இந்த மொழியில்  பாட வேண்டும் இந்த மொழி புறக்கணிக்கப்பட   வேண்டுமென்று  அரசாங்கம் இதுவரையில் கூறவில்லை.

இனவாத கருத்துக்களைப் பேசி   இனக்கலவரத்தை தோற்றுவிக்க முயற்சிப்பவர்களுக்கு  எதிராக  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்   நடவடிக்கைகள்  எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்” என்று இராஜாங்க அமைச்சர் றோஹித அபேகுணவர்த்தன  கூறியிருக்கிறார். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது. சிங்களத்தில் மட்டும் தான் பாடப்படும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என அறிவித்தவர் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்.அவர், அதனை கூறிய பின்னர் தான், இந்த சர்ச்சையே உருவானது. இல்லாவிடின் யாரும் இதனைப் பிரச்சினையாக்கியிருக்கப் போவதில்லை.

உதாரணத்துக்கு, மாவீரர் நாள் விவகாரத்தைப் போலவே அமைதியாக நடந்து முடிந்திருக்கும்.

ஆனால், அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மூலம் குட்டையைக் குழப்பி விட்டு, இப்போது பிரச்சினை தீவிரமானதும் அந்தப் பழியை சுமந்திரன் போன்றவர்களின் மீது போட்டுத் தப்பிக்க முனைகிறது அரசாங்கம்.

ஜனக பண்டார தென்னக்கோன் இதுபற்றி கூறுவதற்கு முன்னதாக,  இந்த விவகாரத்தைப் பற்றி யாருமே சிந்தித்துப் பார்க்கக் கூட இல்லை. அவர் இதனைக் கூறிய பின்னர் தான், சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள், பௌத்த பிக்குகள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு விவகாரத்தை சிக்கலாக்கியிருக்கிறார்கள்.

தமிழ்மொழியில் தேசிய கீதம் பாடுவது அரசியலமைப்புக்கு எதிரானது என்று, ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் உதயகம்மன்பிலவும் கூறுகிறார்கள்.

சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே, சத்ததிஸ்ஸ தேரர் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக்கூடாது என்கிறார்.

15 மொழிகள் உள்ள இந்தியாவில் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடும் போது, இலங்கையில் அவ்வாறு பாடினால் என்ன என்று கேள்வி எழுப்புகிறார் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க.

வடக்கில் உள்ளவர்கள் பிரபாகரனின் சித்தாந்தப்படியே சிந்திக்கிறார்கள். அவர்கள் தலைக்குள் அவ்வாறான நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

பௌத்த பீடங்களின் பீடாதிபதிகளும் சிங்களத்தில் தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று மல்லுக்கட்டுகிறார்கள்.

அமைச்சர்கள், பௌத்த சிங்கள அடிப்படைவாதிகள் எல்லோரும், தமிழில் தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு எதிராக கிளம்பியிருக்கிறார்கள்.

ஆனால் அரசாங்கமோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்திடம் இருந்து இந்தளவுக்கும் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று வெளியாகவில்லை. சில அமைச்சர்கள் நழுவலான கதைகளைக் கூறுகின்றனரே தவிர, உறுதியான முடிவை கூறவில்லை.

எந்தவொரு அமைச்சராவது முன்வந்து, தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும், அந்த முடிவு மாற்றப்படவில்லை என்று உறுதியாக கூறியிருக்கிறாரா? இல்லை.

ஏனென்றால், குட்டையைக் குழப்பி சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள் அதனால் தமிழ்மொழியில் பாடப்படக் கூடாது என்ற முடிவை எடுக்கவே அரசாங்கம் முற்படுவதாகத் தெரிகிறது.

பெரும்பான்மையான சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாது என்பது தான், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அரசாங்கத்தின் சித்தாந்தம்.

அந்த வழியைப் பின்பற்றுவதற்காகத் தான் அரசாங்கம் இவ்வாறான குட்டையைக் குழப்பும் வேலையில் இறங்கியதா என்ற சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.

அதேவேளை, இந்த விவகாரத்தினால் அரசாங்கத்துடன் இணைந்துள்ள இடதுசாரிகள் என்று சொல்லப்படும் வாசுதேவ நாணயக்கார, டி.யூ குணசேகர போன்றவர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் என்பது அவர்களின் கருத்துக்களில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடைஏதும் இல்லை என்று கூறியிருக்கிறார்  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.

அதேவேளை, இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது. அமைச்சர்களும், மதத் தலைவர்களும் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என அரசாங்கம் கூற வேண்டும் என்று கூறியிருக்கிறார் டி.யூ. குணசேகர.

இந்த விவகாரம் மீண்டும் இனங்களுக்கிடையிலான பகைமை உணர்வை தூண்டிவிடக் கூடியது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விட, அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் ஆபத்தில் சிக்கப் போகிறது என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

தமிழ்மொழியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று பிரபாகரன் போராடவில்லை இவர்கள் ஏன் அதற்காக வாதாடுகிறார்கள் என பௌத்த மதத் தலைவர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

இவர்களைப் போன்ற பௌத்த பிக்குகளும், அரசியல்வாதிகளும் இந்த விவகாரத்தை மோசமாக்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலும், அதிகாரம் படைத்த அரசியல் தலைவர்கள் மௌனமாகவே இருக்கிறார்கள்.

அதுபோலவே, தமிழ் மக்கள் ஒன்றும் இந்த விவகாரத்தினால் கொதிப்படையவில்லை. ஏனென்றால் அரசாங்கம் தமிழ்மொழியில் பாடக் கூடாது என்ற முடிவை எடுத்தால், அது தமிழர்களுக்கே சாதகமானதாக அமையும்.

இலங்கையின் தேசியகீதம் தமிழ் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த ஒன்று அல்ல. அதனை மறந்து போன தலைமுறைகளே உருவாகியிருந்தன. போருக்குப் பின்னர் தான், தேசியகீதத்துக்காக தலைவணங்கும் நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டது.

இப்போது கூட, தமிழில் தேசியகீதம் பாடக்கூடாது என்ற உத்தரவு வந்தால், தமிழர்கள் சிங்களத்தில் தேசிய கீதத்தை பாடி விடப் போவதில்லை. தேசிய கீதம் தான் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும். அதனைத் தான் சுமந்திரன் கூறியிருந்தார். அதனைக் கூறியதற்காகத் தான்,  இன கலவரத்தை தூண்டுகிறார் என்றும் அவ்வாறு செய்வோரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் றோகித அபேகுணவர்த்தன கொந்தளிக்கிறார்.

ஆக தேசியகீத விவகாரத்துக்காக, பயங்கரவாத தடைச்சட்டத்தை ஏவி விடுவதற்கும் கூட, அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தேசியகீதம் இசைக்கப்படும் விவகாரத்தில் அரசாங்கம் என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பது மிகப்பெரிய அரசியல் விவகாரமாக மாறி விட்டது.

ஒரு அமைச்சர் மிக நாசூக்காக வெளிப்படுத்திய விவகாரத்துக்குப் பின்னால் இத்தகையதொரு பெரிய அரசியல் இருக்கும் என்று, அப்போது யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் இவ்வாறு தான், அரங்கேற்றப்படுவது வழக்கம்.

- என். கண்ணன்

https://www.virakesari.lk/article/72636