(நா.தனுஜா)

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதென்பது ஜனநாயகத்திற்கான இடைவெளியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானதாகும்.

அதனை இல்லாமல் செய்து மீண்டுமொரு ஏகாதிபத்திய யுகத்திற்குள் உள்நுழைந்து, அனைத்து அதிகாரங்களையும் தனியொரு குடும்பம் தம்வசமாக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அறைகூவல் விடுத்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கம் பௌத்த தேரர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலரை முன்நிறுத்தி, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சியமைத்துக் கொண்டது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தேர்தலின் போது ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று இலவசமாக உரம் வழங்குவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் இன்றளவில் உரத்தை இலவசமாக மாத்திரமல்ல, பணத்திற்குக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தம்புள்ளையில் விவசாயிகள் அவர்களது அடையாள அட்டைகளைக் காண்பித்தால் உரம் வழங்கப்படும் நிலையொன்று உருவாகியிருக்கிறது.

அதேபோன்று மரக்கறிகளின் விலைகள் இதுவரை காலமும் இல்லாதளவிற்கு அதிகரித்திருக்கிறது. அரிசி உள்ளிட்ட தானியங்களின் விலைகளும் கூடியிருக்கிறது. இதுகுறித்து மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

அரிசியின் விலையைக் குறைப்பதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை என்று லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அண்மையில் கூறியிருந்தார். மக்கள் தமது பிரச்சினைகளிலிருந்து நிவாரணத்தை எதிர்பார்த்து ஆளுந்தரப்பிற்கு வாக்களிக்கவில்லை எனில், வேறு எதற்காக வாக்களித்தார்கள் என்று கேள்வியெழுப்ப விரும்புகின்றோம்.

ஆனால் அதுவும் ஒருவகையில் உண்மையே. தேர்தலில் போது தற்போதைய ஆளுந்தரப்பு நாடு, இனம், மதம் ஆகியவற்றை முன்நிறுத்தி ஒரு மாயையைத் தோற்றுவித்தது. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பாதிப்பிருப்பது போன்றும் இல்லாதவொரு விடயத்தை உருவாக்கினார்கள்.

எனவே அதனூடாக ஆட்சிபீடமேறிய அரசாங்கம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிடினும் பரவாயில்லை என்றே கருதுகின்றார்கள். பெரும்பான்மையான வாக்குகளுடன் ஆட்சியமைத்த இந்த அரசாங்கம், மக்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வை எதிர்பார்த்து வாக்களிக்கவில்லை என்று கூறுகின்றதெனின், அதுவே மக்களுக்கு இழைக்கப்படுகின்ற பாரிய அநீதி என்று நாங்கள் கருதுகின்றோம்.

நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தோம். ஆனால் அதனை நீக்கி, 18 ஆவது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தின் தேவைப்பாடாக இருக்கின்றது. அதனூடாக முழு நாட்டினதும் ஆட்சியதிகாரத்தை தனியொரு குடும்பத்தின் வசமாக்கிக் கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதென்பது ஜனநாயகத்திற்கான இடைவெளியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானதாகும் என்பதை அனைவரும் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/72818