Jump to content

கிறிஸ்துமஸ் லைட்ஸ்


Recommended Posts

பதியப்பட்டது

கிறிஸ்துமஸ் லைட்ஸ் – தன்ராஜ் மணி

சோபாவில் உட்கார்ந்திருந்த தேவதாஸ் ஐபேடில் இருந்து தலையைத் தூக்கி அவனைப் பார்த்துச் சிரித்தார்.

“இங்க வா,” என்றார் ஐபேடை சைட் டேபிளில் வைத்தபடி. ஓடி வந்து, வந்த வேகத்தில் தாவி, கால் முட்டியைத் தன் அப்பாவின் மடியில் அழுத்தி, முகத்தை அவர் மார்பில் பதித்து, கட்டிக் கொண்டான்.

வலியில், “ஐயோ,” என்று கத்தி விட்டார் தேவதாஸ்.

“எத்தன வாட்டி சொல்றது உனக்கு. இயர் த்ரி போய்ட்ட, இப்படி வந்து எம் மேல குதிச்சியனா எப்படி தாங்கறது,” என்றான்.

“லைட் எப்போ போடுறனு சொல்லு,” என்று விட்டு அவர் தோளைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தான்.

“இப்படி பண்ணியனா க்றிஸ்மஸ் ட்ரீ கூட கெடையாது இந்த வருஷம். டோண்ட் பீ நாட்டி,” என்றார்.

உதடுகளைக் குவித்து, கண்களை குறுக்கி, தலையைச் சற்று குனிந்து, அவரைப் பார்த்து, “ம்ம்ம்,” என்றான். அவர் மெலிதாக புன்னகைப்பதைப் பார்த்து அவர் மார்பில் பொய்யடிகள் போட்டு, “யூ ஆர் நாட்டி,” என்றான்.

“திரும்பப் பாரு,” என்று விட்டு முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டார்.

அமைதியானான்.

சற்று நேரம் அவனை உற்றுப் பார்த்து விட்டு, “எதுக்கு அவ்ளோ லைட்ஸ் உனக்கு?” என்றார்.

“நெறய்ய்ய்ய லைட்ஸ் போட்டாதா வீடு கோல்டா மாறும்,” என்றான் விழிவிரிய.

“கோல்ட் கலர் கேர்ல்ஸ்க்கு தான் பிடிக்கும்,” என்றார் தேவதாஸ்.

“பிங்க் தான் கேர்ல்ஸ், கோல்டன்  யெல்லோ எல்லோருக்கும் பிடிக்கும்,” என்றான் டெரி தீர்மானமாக.

“சரி வீட்ட கோல்டா மாத்தி என்ன பண்ண போற?” என்றார்.

கண்களை அகல விரித்துப் பார்த்து விட்டு மீண்டும் சிணுங்க ஆரம்பித்தான். “எனக்கு வேணும்ம்ம்”.

“சரிடா, இப்போ புட்பால் போக வேண்டாமா, கெளம்பு,” என்றார் தேவதாஸ்.

“இஸ் இட் டைம் நெள?“ என்று சுவர்க் கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்து விட்டு அப்பா மடியில் இருந்து இறங்கி மாடிக்கு ஓடினான்.

நிம்மி சமையலறையில் இருந்து இரண்டு கோப்பைகளில் காபியோடு வந்தார்.

“உம்புள்ளைக்கி வீடு தகதகன்னு ஜொலிக்கணுமாம். இந்த கிறிஸ்மஸிக்கு,” என்றார் தேவதாஸ், நிம்மி கொடுத்த காபியை கையில் வாங்கியபடி.

“ஆமா கேக்கறானு உடனே ஆன்லைன்ல லைட்ட ஆர்டர் பண்ணி வெக்காதிங்க. போனவாட்டி வாங்குன அந்த கேண்டலாப்ரா இருக்கு, அது போதும். வேற வேல இல்ல இவனுக்கு,” என்றார் நிம்மி அருகில் இருந்த சோபாவில் உட்கார்ந்தபடி.

“ரெண்டு வருசமா கேக்குறான், ஜன்னல சுத்தி ஒரு சீரியல் லைட்டாவது போடலாம், ஒத்த லைட்ட வெச்சு நாலு கிறிஸ்மஸ் ஓட்டிறாலான்னு பாக்குற,” என்றார் தேவதாஸ் புன்னகையுடன்.

“லைட் அவனுக்கா உங்களுக்கானு தெரியல இப்போ. தேவையில்லாம என்னத்துக்கு செலவு. அந்தக் காசை ஏதாவுது சாரிட்டிக்கு குடுத்தாவாவுது ரெண்டு கொழந்த வயிறாற சாப்புடும்”.

“அப்படியெல்லாம் பாத்தா ஒன்னுமே பண்ண முடியாது நிம்மி. கேக்கறான் பாவம், வாங்குவோம்,” என்றார் தேவதாஸ்.

“எப்படியோ போங்க, வாங்கிட்டு இத மாட்ட தெரியல அத மாட்ட தெரியலனு என்ன கூப்டிங்கன்னா மண்டையிலயே போடுவேன் நாலு நல்லா,” என்றாள் நிம்மி, முஷ்டியை மடக்கிக் குட்டுவது போல காட்டி.

தேவதாஸ் சிரித்து விட்டு எதுவும் சொல்லாமல் காபியை குடிக்க ஆரம்பித்தார்.

நிம்மி, “எதுக்கு சிரிக்கிற?”

தேவதாஸ், “ஒன்னுல்ல,” என்றார். சிரிப்பு பொங்கிக் கொண்டே இருந்தது. அதை காப்பியில் முக்கி அடக்க முயன்று கொண்டிருந்தார்.

நிம்மி, “இப்போ சொல்றியா இல்ல மூஞ்சில காப்பிய ஊத்தட்டுமா?” காப்பி கோப்பையை உயர்த்திக் கொண்டே கேட்டாள்.

“லூசு, கொட்டப் போவுது கீழ, ஒழுங்கா புடி. ப்ரேசியர் ஊக்க மாட்டவே உனக்கு ஒரு ஆளு வேணும், இதுல லைட்ட மாட்ட உன்ன கேப்பனு சொன்னியே, அத நினைச்சு சிரிப்ப அடக்க முடியல,” என்று விட்டு குலுங்க ஆரம்பித்தார்.

நிம்மி காபியை காபி டேபிளின் மேல் வைத்துவிட்டு, “உன்ன…” என்று சொல்லிக் கொண்டே தேவதாஸின் மேல் பாய்ந்தாள்.

தேவதாஸ் காபியை அவசரமாக சைட் டேபிளின் மேல் வைத்துவிட்டு அவள் இரு தோள்பட்டைகளிலும் தன் இரு கைகளால் முட்டுக் கொடுப்பது போல வைத்து அவள் தன் மேல் விழுவதைத் தடுத்தார். “ஏய், பேச்சு பேச்சாத் தான் இருக்கணும், ஒழுங்கா போயி உக்காரு,” என்றார் இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல்.

நிம்மி, “இன்னிக்கி நீ செத்தடா ராஜா,” என்று சொல்லிக் கொண்டே மேலுடலை இடப்புறமாக வளைத்து கைத்தடுப்பை நழுவச் செய்து விட்டு, கால்முட்டியை மடக்கி தேவதாஸின் தொடையில் வைத்து அழுத்தினாள். தேவதாஸ் சுதாரித்துக் கொண்டு அவள் மார்பில் கை வைத்துத் தள்ள, திமிறி அவர் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவர் புஜத்தைக் கடித்தாள். வலியில் தேவதாஸ் அய்யோவென கத்தி விட்டு, “ஏய், லூசு வலிக்குதுடி,” என்று அவள் முகத்தில் கை வைத்து உலுக்கினார். அப்பொழுதும் விடாமல் கடித்துக் கொண்டிருந்தாள்.

டெரி புட்பால் ஜெர்ஸி மாற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்தவன், ஓடி வந்து இருவரின் மேலும் விழுந்தான்.

“மை அப்பா, மை அப்பா,“ என்று சொல்லிக் கொண்டே நிம்மியின் தோள்களை வேகமாக பிடித்துத் தள்ளினான்.

கடிப்பதை நிறுத்தி விட்டு, “போடா, திஸ் இஸ் மை அப்பா,” என்று விட்டு கழுத்தை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

“நோ, மை அப்பா. உனக்கு ஹஸ்பண்ட். உடு, உடு, உடு,” என்று சொல்லிக் கொண்டே நிம்மியின் முதுகில் மாறி மாறி அடித்தான்.

தேவதாஸ் அவன் கைகளைப் பற்றி நிறுத்தி, “அடிக்கக் கூடாது டெரி,” என்றார் கண்டிக்கும் குரலில்.

டெரி நிம்மியை சோகமாகப் பார்க்க, நிம்மி அவனுக்கு கண்களை உருட்டி, தலையை ஆட்டி, உதட்டை இடமும் வலுமுமாய்ச் சுழித்து பழிப்பு காட்டினாள்.

டெரி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான்.

தேவதாஸ், “அவன நோண்டி உடறதே உனக்கு வேலையா போச்சுடி,” என்று விட்டு டெரியை அணைத்துக் கொண்டார்.

“இதுக்கெல்லாம் அழுவாங்களா டெரி, வா நம்ம புட்பால் போலாம்,” என்றார்.

டெரி அழுகையை நிறுத்தாமல், “கெட் டெளன்,” என்றான் நிம்மியின் தோளைக் குலுக்கி.

“எந்திரியேண்டி, அழுவறான்ல,” என்றார் தேவதாஸ்.

“எனக்கப்புறம் தான்டா உனக்கு அப்பாலாம். விளையாடிட்டு வந்து பூரி வேணும்னு கேப்பல்ல, இன்னிக்கி வெறும் சப்பாத்தி தான் போ உனக்கு,” என மகனின் தொடையை நிமிண்டி விட்டு தேவதாஸின் மேலிருந்து எழுந்தாள்.

முகத்தில் இன்னும் அழுகைக் களை மிச்சமிருக்க, “கோ அவே,” என்று கத்தினான் டெரி, அம்மாவைப் பார்த்து.

“சரி, நீ வா,” அவனைத் தூக்கிக் கொண்டு தேவதாஸ் வாசலுக்கு நடந்தார்.

நிம்மி கார் சாவியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, டெரியின் புட்டத்தில் கிள்ளி விட்டு வீட்டுக்குள் ஓடினாள்.

கத்திக் கொண்டே அடிக்கப் பாய்ந்தவனை, அமுக்கிப் பிடித்து, “ஏய், சும்மாவே இருக்க மாட்டியாடி நீ, அறை வாங்கப் போற… நமக்கு லேட் ஆகுது டெரி. வந்து அம்மாவ பாத்துக்கலாம், வா,” அவனைத் தூக்கி காருக்குள் உட்கார வைத்தார்.

கருகருவென்ற லேண்ட் ரொவர் டிஸ்கவரியின் பரந்த முன் இருக்கையில், சிகப்பு கலரில் ஜெர்ஸி அணிந்து, சிவப்பால் மெல்லிய கோடு போட்டது போல் சிறிதாக அமர்ந்திருந்தான் டெரி.

இலையில்லாத மரங்கள் சாலையோரமெங்கும் விறைத்து நின்றிருந்தன.

கார் ரேடியோவில், “ஒன்ஸ் ஐயம் செவன் இயர்ஸ் ஓல்ட்,”அலறிக் கொண்டிருந்தது. அவனுக்குப் பிடித்த பாடல். சிறிது நேரம் சோகமாக அமர்ந்திருந்த டெரி பிறகு முடியாமல் அதனுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்தான்.

எல். ஈ. டி விளம்பர போர்டுகளாலான அலங்காரக் கொண்டையுடன் வெண்சதுர புட்பால் ஸ்டேடியம் கார் நகர நகர பெரிதாகிக் கொண்டே அருகே வந்தது. பஸ் கோச்சுகள் நிற்கும் பரந்து விரிந்த நிறுத்துமிடத்தைக் கடந்து கார் பார்க்கிற்குள் வண்டியைச் செலுத்தி, ஒரு பார்கிங் பேவில் நிறுத்தினார் தேவதாஸ். போட்டி நடக்கும் நாட்களில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கும் மேலான அந்த கோச் நிறுத்திமிடம் பார்வையாளர்களை சுமந்து வந்த பஸ்களால் நிரம்பி வழியும். ஸ்டேடியத்திற்கு எதிரில் பச்சை நிற கம்பிகளால் வேலியிடப்பட்ட சிறு ஆஸ்ட்ரோடர் பயிற்சி பிட்ச்களை நோக்கி தேவதாஸூம் டெரியும் நடந்தனர்.

பிட்ச் அருகில் வந்தவுடன் அவன் நண்பனைக் கண்டுகொண்டு அவனிடம் ஓடினான் டெரி. ஆஸ்கர் டெரியுடன் ஒரே ஸ்கூலில் படிப்பவன்.

ஆஸ்கரின் தந்தை தேவதாஸைப் பார்த்து கைகாட்டி, “ஹய் டேவ்,” என்றார்.

தேவதாஸூம் “ஹய்ஸ் டூ,” என்று விட்டு கம்பி தடுப்புகளின் அருகில் சென்று நின்று கொண்டார். ஸ்டூவேர்ட் அருகில் வந்து நின்றார்.

அவர்கள் விளையாடி முடிக்கும் வரை,  ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒருமணி நேரம் கம்பிக் கூண்டுக்குள் விளையாடும் மகன்களை வெளியில் நின்றுகொண்டு பார்ப்பது இருவரின் வழக்கம்.

ஸ்டூவேர்ட்டிற்கு புட்பால் மீது அளவில்லாத காதல், பயிற்சி ஆட்டங்கள் தான் என்றாலும் உரக்கக் கத்தி, தன் மகனை உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பார். ஸ்டூவேர்டுக்கும் தேவதாஸிற்கும் இடையே ஒரு மெல்லிய நட்பு மலர்ந்திருந்தது.

ஸ்டூவேர்ட் ஆஸ்கரும், டெரியும் நேற்று விளையாடிய மேட்சை பற்றி பேச ஆரம்பித்தார். தேவதாஸும் நிம்மியும் வேலைக்குப் போவதால் ஸ்கூல் நேரத்தில் நடக்கும் மேட்ச்களை பார்ப்பதற்குப் போக முடியாது. ஸ்டுவேர்ட் வேலைக்கு எதுவும் போவதில்லை. அவர் கட்டிடத் தொழிலாளி. முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினையால் பல வருடமாக வேலைக்குச் செல்வதில்லை. அரசாங்கம் வழங்கும் உதவித்தொகை தான் அவருடைய வருமானம் இப்பொழுது.

லிவர்பூலும், மான் உனைடடும் விளையாடிய மேட்சை வர்ணிப்பதைப் போல மூன்றாம் வகுப்பு பள்ளிச் சிறுவர்களின் விளையாட்டை வர்ணித்து விட்டு, தன் மகனின் ஆட்டத்திறனை கூராய்வு செய்ய ஆரம்பித்தார்.

உடற்பயிற்சிகள் முடிந்து பயிற்சிப் போட்டிகளில் சிறுவர்கள் பந்தைக் கூட்டமாக துரத்திக் கொண்டிருந்தனர், ஸ்டூவேர்ட் தேவதாஸுடன் பேசிக் கொண்டிருந்ததைச் சட்டென்று நிறுத்தி விட்டு, சத்தம் போட்டு, தன் மகனை உற்சாகப்படுத்த ஆரம்பித்தார்.

ஆஸ்கர் பந்தை டெரியைத் தவிர வேறு எவருக்கும் பாஸ் செய்யவில்லை. டெரியும் ஆஸ்கரைத் தவிர வேறு யாருக்கும் பாஸ் செய்யவில்லை. இவர்கள் இருவர் மட்டும் பந்தை வைத்திருக்க, எதிரணியினருடன் இவர்கள் அணியில் இருந்த சிறுவர்களும் இவர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருந்தனர்.

தேவதாஸுக்கு, “மத்தவங்களுக்கும் பாஸ் பண்றா டெரி,” என்று கத்த வேண்டும் போல இருந்தது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார். ஸ்டூவேர்ட் தன் மகன் காலில் பந்து வரும் போதெல்லாம் உச்சக்கட்ட உற்சாகத்தில் கத்திக் கொண்டிருந்தார். ஒவ்வொரு கோலுக்கும் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்.

ஆஸ்கர் தன்னுடைய நான்காவது கோலை போடுவதற்காக பந்தை, மற்ற கால்களில் இருந்து லாகவமாகக் காப்பாற்றி, எதிரணி கோல் போஸ்டுக்கு அருகில் வந்து முன்காலால் பந்தை எத்தினான். பந்தோடு சேர்ந்து அவன் பூட்டின் அடிப்பாகமும் கோலுக்குள் சென்று விழுந்தது.

ஆஸ்கர் கோல் போட்டவுடன் இரு கைகளையும் விரித்துப் பறப்பது போல சுற்றிச் சுற்றி ஓடுவான். இம்முறை ஓடாமல் கோலுக்குள் சென்று பூட்டின் அடிப்பாகத்தை எடுத்துக்கொண்டு வந்தான். பயிற்சியாளர் அவனருகில் வந்து பார்த்து விட்டு, பூட்டை கழட்டிவிட்டு கோலில் சென்று நிற்கும்படி சொல்லி, தட்டிக் கொடுத்து விட்டு பிட்சின் நடுப்புறத்திற்கு ஓடினார். தேவதாஸ், “புது பூட் வாங்கனும் போல இருக்கு,“ என்றார் ஸ்டூவேர்ட்டை பார்த்து. ஸ்டூவேர்ட், “நைக்கி ஹைப்பர்வெனம் பூட்டே தான் வேணும்னு சொல்றான், அடுத்த பெனிவிட்ஸ் பேமண்ட் வந்தப்பறம் தான் வாங்கனும், அதுவரைக்கும் போட டெஸ்கோல இருந்து வேற பூட் வாங்கித் தரேனு சொன்னா கேக்க மாட்டேங்கறான், நைக்கி வாங்கற வரைக்கும் இதயே ஒட்டிக்குடு, அந்த பூட்ல எல்லாம் வெளையாட மாட்டேனு சொல்றான், இப்படி ரெண்டாவது வாட்டி பிஞ்சி வந்திருச்சு,” என்றார்.

மேட்சை பார்ப்பதில் அவருக்கு இப்பொழுது பெரிய சுவாரசியமில்லை. ஸ்டூவேர்ட் குதித்து எம்பி பையனை ஊக்குவிப்பதைப் பார்க்கும் போது அவருக்கு உடல் நன்றாகவே இருப்பதாகப் பட்டது. ஸ்டூவின் உடல்நிலையைப் பற்றி விசாரித்தார், ஸ்டூ தலையை மட்டும் ஆட்டிவிட்டு பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. பெனிவிட்ஸில் இருப்பவர்கள் இதைப் பற்றியெல்லாம் பேசுவதை விரும்புவதில்லை. பயிற்சி முடியும் வரை தேவதாஸிடம் வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்.

காரில் வீட்டிற்குத் திரும்பும் போது டெரி தான் போட்ட கோல்களைப் பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டே வந்தான். “அப்பா, ஆஸ்கர் ஷீ நல்லா இருந்திருந்தா இன்னும் நிறைய கோல் போட்டிருப்போம். அவனுக்கு ஹைப்பர்வெனம் ஷீ கிறிஸ்மஸ் ப்ரெசெண்டா நாம வாங்கிக் குடுக்கலாமா?” என்றான்.

“டேய் அது ரொம்ப எக்ஸ்பன்ஸிவ்டா”

“சோ வாட், இட்ஸ் கிறிஸ்மஸ் அண்ட் ஹி இஸ் மை பெஸ்ட் ப்ரெண்ட்,” என்றான்.

“ஓ, அப்படியா, சரி, உனக்கு ஒன்னு, கிறிஸ்மஸ் லைட்ஸ் இல்லாட்டா உன் ப்ரெண்டுக்கு ஷீ, ரெண்டுல ஒண்ணு தான், நீயே ச்யூஸ் பண்ணு” என்றார் தேவதாஸ்.

“வொய். லைட்ஸ் எனக்கு, ஷீ ஆஸ்கருக்கு?” என்றான்.

“நோ. நீ கேக்கறது ரெண்டுமே எக்ஸ்பன்சிவ் டெரி, ஒரே மாசத்துல ரெண்டும் வாங்க முடியாது. நீயே டிசைட் பன்ணு.”

“லைட் வேணாம்னா வெறும் காண்டிலாப்ரா தான் வெப்பிங்களா?” என்றான்.

தேவதாஸ் புன்னகைத்து விட்டு. “சரி, ஒரு சின்ன கோல்ட் கலர் சீரியல் லைட்ஸ் விண்டோக்கு வாங்கித் தரேன், அவ்ளோ தான், நீ கேட்ட மாதிரி நிறைய லைட்ஸ் எல்லாம் கிடையாது.”

டெரி மலர்ந்து, “அப்போ ஓக்கே, ஆஸ்கருக்கு ஹப்பர்வெனம் ஆர்டர் பண்ணிறலாம்,” என்றான்.

வீட்டிற்கு வந்து நிம்மியிடம் சொன்னார் தேவதாஸ். டெரிக்கு பூரி பரிமாறி விட்டு, கண்ணால் கிச்சனைக் காட்டினாள் நிம்மி. தேவதாஸ் எழுந்து கிச்சனுக்குள் உள்ள ப்ரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தார்.

உள்ளே வந்து தாழ்வான குரலில், “லைட்சுக்கு எவ்ளோ செலவாகப் போகுது, அதையும் வாங்கிக் குடுத்தா என்ன உங்களுக்கு?” என்றாள்.

தேவதாஸ், “காலைல வேண்டாம்னு சொன்ன?” என்று விட்டு தண்ணீர் பாட்டிலோடு அடுப்பிற்கருகில் சென்றார். “செலவுக்கு இல்ல நிம்மி. அவன் கேக்கறதை எல்லாம் பண்ணா அப்புறம் காசோட அருமை அவனுக்குத் தெரியாம போயிடும், அதுக்குத் தான். ”

“அவனுக்கே இன்னும் ஒன்னு வேணும்னு கேட்டா பரவால்ல, அவன் ப்ரெண்டுக்குத் தானே கேக்குறான், எத்தன குழந்தைங்க அந்த மாதிரி கேக்குது,” என்றாள் நிம்மி.

“அது நல்ல விஷயம் தான், ஆனா அதுவும் காசு தானே. தன்னோட தேவைகள குறைச்சிகிட்டு மத்தவங்களுக்கு கொடுக்குறதுல ஒரு சந்தோஷம் இருக்குனு அவனுக்குத் தெரியும்ல?”

“எப்பா…, எப்ப பாரு தத்துவம் பேசிகிட்டு, இந்த கண்ட கண்ட புஸ்தகம் படிக்கறதெல்லாம் மொதல்ல நிறுத்துங்க. லைட் போடுற அன்னைக்கி அவன் அழுகாம இருந்தா சரி,” என்றாள் நிம்மி.

டெரி அழவில்லை. தேவதாஸ் புதிதாய் வாங்கி ஜன்னலைச் சுற்றி மாட்டி இருந்த சிறிய சீரியல் பல்புகள் அடர்மஞ்சள் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தன. “கோல்ட் லைட், கோல்ட் லைட்” என்று கத்திக் கொண்டு அதன் முன்னாலேயே ஒருமணி நேரம் குதித்துக் கொண்டிருந்தான். நிம்மி அதட்டி சாப்பிட வைத்து, தூங்க வைக்க வேண்டியிருந்தது. அந்த சிறு தங்க வெளிச்சம் அவனுக்குப் போதுமானதாய் இருந்தது.

கிறிஸ்மஸிக்கு முதல் நாள் இரவு ஆஸ்கருக்கு வாங்கிய ஹைப்பர்வெனம் பூட்சை பரிசுக் காகிதத்தில் அழகாகச் சுற்றி எடுத்துக்கொண்டு மூவரும் ஆஸ்கர் வீட்டை நோக்கி நடந்தார்கள். ஆஸ்கரின் குடும்பம் தங்கியிருந்த அரசாங்க வீடுகளின் தொகுதி நடக்கும் தூரத்தில் தான் இருந்தது. டிசம்பர் மாத இங்கிலாந்து இருட்டும், குளிரும், எலும்பைக் குத்தும் காற்றும் நிரம்பிய தெருக்கள் கொண்டது. பண்டிகைக் கால மகிழ்ச்சியும், அலங்கார விளக்குகளும் நிரம்பிய இல்லங்களையும் கொண்டது.

வழியில் இருக்கும் வீடுகளில் பலவிதமான கிறிஸ்மஸ் அலங்காரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றனர். சில வீட்டுக் கதவுகளில் வெறும் கிறிஸ்மஸ் ஹேர்த் மட்டும் இருந்தது, எந்த விதமான விளக்கலங்காரங்களும் இல்லை. சில வீடுகளில் முன்தோட்டம் முழுக்க பனி வண்டியை இழுத்துச் செல்லும் ரெய்ன்டியர்களும், உப்பிப் பெருத்த பலூன் சாண்டாவும், பல வண்ணக் காளான்களும் என ஒரே வெளிச்சக் காடாய் இருந்தது. சில வீடுகளில் மிதமாய் ஒளிரும் சில வண்ண எல்ஈடி விளக்குகள் மட்டும் ஜொலித்துக் கொண்டிருந்தன.

தெருமுனையில் இருந்தே ஆஸ்கரின் வீடு பிரகாசமாய்த் தெரிந்தது. அவன் வீட்டு முன்னால் இருந்த மரம் முழுக்க சீரியல் லைட்டுகள் சுற்றப்பட்டிருந்தன, தங்க விருட்சமென அது தகதகத்துக் கொண்டிருந்தது.

டெரி உற்சாகமாய், “அப்பா, ஆஸ்கரோட ட்ரீ, கோல்டாயிருச்சு பாருங்க,” என்று கத்திக் கொண்டு முன்னால் ஓடினான். நிம்மியும், தேவதாஸூம் போய்ச் சேரும் போது, ஆஸ்கரும், டெரியும் அந்த தங்க மரத்தை கத்திப் பேசி சிரித்துக் கொண்டு சுற்றி வந்து கொண்டிருந்தனர். ஸ்டூவேர்ட் வாசலில் நின்று கொண்டிருந்தார்.

“வெல்கம் டேவ், வாட் எ சர்ப்ரைஸ்”, என்றார் தேவதாஸைப் பார்த்தவுடன். தேவதாஸ் புன்னகையுடன், “டெரி ஆஸ்கருக்கு கிறிஸ்மஸ் ப்ரெசண்ட் தரனும்னு சொன்னான், அதான் வந்தோம்,” என்றார். நிம்மி டெரியை அழைத்து, தன் கையில் இருந்த பெட்டியைக் கொடுத்தாள்.

“இதெல்லாம் எதுக்கு, யூ ஷுடிண்ட் ஹாவ்,” என்றார் ஸ்டூவேர்ட்.

டெடி அதை வாங்கி, “உடனே பிரி,” என்று சொல்லி விட்டு ஆஸ்கரிடம் நீட்டினான். ஆஸ்கர் பிரித்து, ஹைப்பர்வெனத்தை கையில் எடுத்துப் பார்த்து, நம்ப முடியாமல் கண்கள் விரிய டெரியைப் பார்த்தான், “டாட், ஹைப்பர்வெனம்,” என்றுவிட்டு, “தேங்க்யூ டெரி” என்று நண்பனைக் கட்டிக் கொண்டான்.

“இது ரொம்ப விலை ஆச்சே, யூ ரியலி ஷீடிண்ட் ஹாவ் டேவ்,” என்றார் ஸ்டூவேர்ட்.

“இட்ஸ் ஓக்கே ஸ்டூ, பாருங்க ஆஸ்கர் எவ்ளோ சந்தோஷமா இருக்கான். சரி அதை விடுங்க, வீட்ட பலமா டெக்கரேட் பண்ணி இருக்கிங்க, ரொம்ப நல்லா இருக்கு, வீடே தங்கமா ஜொலிக்குது,” என்றார் தேவதாஸ்.

ஸ்டூவேர்ட் உற்சாகமாக, “வருசா வருசம் இந்தத் தெருவிலேயே நாந்தான் அதிகமா எக்ஸ்மஸ் லைட்ஸ் போடுவேன், மத்தவங்கள மிஞ்ச விடக் கூடாதில்ல,“ என்று விட்டு பலமாகச்
சிரித்தார்.

தேவதாஸிற்கு சிரிப்பு வரவில்லை.

http://tamizhini.co.in/2019/12/26/கிறிஸ்துமஸ்-லைட்ஸ்-தர்ம/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, nunavilan said:

நிம்மி சமையலறையில் இருந்து இரண்டு கோப்பைகளில் காபியோடு வந்தார்.

‘வந்தார்’ என்று ஆரம்பத்தில் வந்த போது சற்றுக் குழப்பமாக இருந்தது. பின்னால ‘ர்’ ஐ ‘ள்’ என்று மாற்றியதன் பின்னர் தெளிவாயிற்று

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழந்தைகளின் உலகமே தனிதான், அவர்களின் சிந்தனைகளும் வித்தியாசமானவையே .....!  🤔

நல்ல கதை......!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.