Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 1

 
 
முதலில் சில வார்த்தைகள்.
சில வாரங்களுக்கு முன்பு, ‘நான்கு யோக முறைகள்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய விடுதியில் மூன்று நாட்கள் ஒரு பயிலரங்கம் நடந்தது.  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை விடுதியிலேயே நடந்தது. விடுதியில் தங்கும் வசதி இருந்தது இடைவேளை உணவுக்குப் பிறகு, ஓய்வின் போது அந்த விடுதியின் வரவேற்பு கூடத்தில் இருந்த நாலைந்து ஷெல்ஃப்களில்  நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்தேன். அதனருகில் வசதியான சோபாக்கள் இருந்தனப் அந்த புத்தகங்களில் பல புதையல்களைக் கண்டுபிடித்தேன். எல்லாவற்றிற்கும் சிகரமாக எனக்குக் கிடைத்தது, சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு புத்தகம். அதில் பல அற்புதமான கட்டுரைகள் இருந்தன. பத்து தலைப்பில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இருந்தன. மகிழ்ச்சி, நம்பிக்கை, துணிவு, மனோதிடம், சுய ஒழுங்கு, மன அமைதி, பாசம், மனநிறைவு, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை என்று வகுக்கப்பட்டிருந்தன. எல்லாம் தத்துவ தலைப்புகள் என்று  உதட்டைப் பிதுக்கி அலட்சியப்படுத்தாதீர்கள். மனதைத் தொடும் நிகழ்வுகள், பல புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரைகளின் பகுதிகள், உணர்ச்சிகரமான   சம்பவங்கள், வாழ்க்கை வரலாறுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள், பொன்மொழிகள் என்று பிரமாதமாகத் தொகுக்கப்பட்ட கட்டுரைகள்! ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்னுரையாக புத்தகத்தைத் தொகுத்தவர் விளக்கங்களை மிக மிக சுவைபட எழுதி மேலும் சிறப்பு சேர்த்திருந்தார்!.

 
 
Ligth%2BlAMPS.JPGவிடுதியில் தங்கியிருந்த மூன்று நாட்களுக்குள் மொத்த புத்தகத்தையும் படிக்க முடியவில்லை. ஆகவே வலை போட்டுத் தேடி, புத்தகத்தை வாங்கினேன். அந்த புத்தகத்தில் இருக்கும் எல்லா கட்டுரை களையும் தமிழ்ப் படுத்திப் போட மனம் விழைகிறது. பதிப்புரிமை, போன்ற பிரச்சினைகள் வரக் கூடும் என்பதால் ஒரு கட்டுரையைத் தழுவி, என் சொந்த சரக்கையும் சேர்த்து  ‘படித்தேன், ரசித்தேன்’ என்கிற மாதிரி ஒரு கட்டுரை எழுதி உள்ளேன். இது சற்று நீண்ட பதிவாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் போடுகிறேன். பதிவுகளுக்கு இடையே அதிக இடைவெளி இருக்காது.
 
  “அது சரி, புத்தகத்தின் தலைப்பு போன்ற விவரங்களைச் சொல்லுங்கள்” என்று நீங்கள் கேட்பதற்கு முன், நானே தந்து விடுகிறேன்: LIGHT FROM MANY LAMPS. Edited with commentaries by LILLIAN EICHLER WATSON..
 
 இனி புத்தகத்திற்குப் போகலாம்.
******

  மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!  ENJOY YOURSELF. IT IS LATER THAN YOU THINK!”
 
  ஆம் இதுதான் இந்தப் பதிவின் துணைத் தலைப்பு. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண அறிவுரை மாதிரி தோன்றும். வாழ்க்கையில்     எத்தனையோ மகிழ்ச்சிகரமான விஷயங்களை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றும், ஓய்வு பெற்றபிறகு அனுபவிக்கலாம் என்று எண்ணி, பொத்திப் பொத்திப் பத்திரப்படுத்தி வைத்து விடுகிறோம்.
 
  ஒரு சமயம், எனக்குத் தெரிந்த மருத்துவரைச் சந்திக்கச் சென்றேன். அவர் என் நண்பர். பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் வீட்டில் பெரிய டி.வி. செட் இருந்தது. அவரிடம்   டாக்டர் ‘மால்குடி டேய்ஸ்’ தொடரைப் பார்க்கிறீர்களா? அபாரமாக இருக்கிறது” என்றேன்
     அவர் உதட்டைப் பிதுக்கியபடி  “அதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லையே, சார். ஏகப்பட்ட விலை கொடுத்து இந்த டி.வி.-யை வாங்கினேன். தினந்தோறும் ஐந்து கிளினிக்குக்குப் போகிறேன். இரவு வீட்டுக்கு வந்ததும் இரண்டு வாய் அள்ளிப் போட்டுக் கொள்கிறேன். அடுத்த பத்தாவது நிமிஷம் குறட்டைதான். டி.வி. நிகழ்ச்சிகள் எல்லாம் எங்கேயும் போகாது. இந்த வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் ஹாய்யாகப் பார்த்துக் கொண்டால் போகிறது என்ன அவசரம்?” என்றார்.  ‘வாழ்க்கை வாழ்வதற்காக? சம்பாதிப்பதற்காக?’ என்ற கேள்வி அவர் மனதில் தோன்றியே இருக்காது என்பது நிச்சயம்.
 
  மற்றொரு உதாரணம் தருகிறேன். திரைப்பட இயக்குனர் ஒருவர் சொன்னதை நான் மறக்கவில்லை. அவர் ஏதோ ஒரு கிராமத்தில், மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். நகரத்திற்கு வந்தவர், தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, வெகு விரைவில் பிரபல டைரக்டர் ஆகிவிட்டார். அவர் படம் எடுத்தார் என்று சொல்வதை விட பணம் எடுத்தார் என்று சொல்வது சரியாக இருக்கும். எல்லாம் ஹிட் படங்கள்தான். ஓய்வு ஒழிவில்லாமல் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கூறியதை மறக்க முடியாது. அவர் சொன்னார்: “ஒரு காலத்தில், எந்த வசதியும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டி வந்தேன். கடவுள் அருளால் இப்போது என்னிடம் இல்லாத வசதிகள் எதுவும் இல்லை- ஒன்றைத் தவிர. அது, நேரம்! எதையும் அனுபவிக்க நேரமில்லை. பின்னால் அனுபவித்துக் கொண்டால் போகிறது என்று நான் நினைக்கிறேன்” என்றார். 

 
Loomis-Hope.png
  இப்போது டாக்டர் ஃப்ரெடெரிக் லூமிஸ் (1877-1949) என்ற மகப்பேறு மருத்துவரின் கதையைப் பார்ப்போம். இரவு, பகல் என்று பாராது, தன்னை நம்பி வந்தவர்களுக்கு மருத்துவ சேவையை  அளிப்பதை ஒரு கடமையாகக் கருதியவர். மெய் வருத்தம் பாராது, கண் துஞ்சாது, மருத்துவமனையே கதி என்று இருப்பவர்.
 
 ஒரு சமயம், அவர்  பணிபுரியும் அந்தப் பெரிய மருத்துவமனைக்குப் பிரசவத்திற்கு  மார்க்கரெட்  லூமிஸ் என்பவர் வந்தார். மருத்துவமனையில் இருந்த வேறு ஒரு மருத்துவரின் கவனிப்பில் அந்த பெண்மணி இருந்தார். சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்மணிக்குக் குழந்தை பிறந்தது. துரதிர்ஷ்டவசமாக குழந்தை பிறந்த அன்றே இறந்து விட்டது. அந்த பெண்மணிக்கு மேலும் சில சிகிச்சைகள் அளிக்கவேண்டி இருந்ததால் அவர் மருத்துவமனையிலேயே வைத்திருந்தார்கள்..
 ஒரு நாள் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளின் பெயர்களை டாக்டர் லூமிஸ் பார்த்தபோது, தன்னுடைய லூமிஸ் பெயரிலேயே ஒரு பெண்மணி அட்மிட் ஆகி இருப்பதைப் பார்த்தார்.
 சக டாக்டர் அவரிடம்  “டாக்டர், மருத்துவ மனையில் உங்கள் பெயரிலேயே ஒரு பெண்மணி இருக்கிறார். அவருக்குக் குழந்தை பிறந்தது. ஆனால் அது பிறந்த அன்றே இறந்து விட்டது” என்றார்.
“அப்படியா? இப்போது அவர் எப்படி இருக்கிறார்? அவரை நான் பார்க்கலாமா?”  என்று கேட்டார்.
 “பார்க்கலாமே! அவர் உங்கள் தூரத்து உறவினராகக் கூட இருக்கலாம். அவரிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டுச் சொல்லுகிறேன்” என்றார்.
டாக்டர் லூமிஸை சந்திக்க அந்தப் பெண்மணி சம்மதம் தெரிவித்தார்.
 
அந்தப் பெண்மணியைப் போய்ப் பார்த்து, டாக்டர் லூமிஸ் ஆறுதல் வார்த்தைகள் கூறினார். பெண்மணியும் சில நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
 
தான் மருத்துவம் பார்த்த எத்தனையோ நோயாளிகளில் ஒருவராகத்தான் அந்தப் பெண்ணையும் லூமிஸ் கருதினார். அவளைக் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டார். ஆனால் சுமார் இரண்டு வருஷம் கழித்து அந்தப் பெண்மணியை அவர் நினைத்துக் கொள்ளும்படி அமைத்தது ஒரு கடிதம். ஆம், ஒரு கடிதம்! அந்தப் பெண்மணியை நினைவுபடுத்தியதுடன், அந்தக் கடிதம் அப்படியே டாக்டரையே மாற்றிப் போட்டு விட்டது!
                                                                                                                                               (தொடரும்)

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 2

 
டாக்டர் லூமிஸ் (1877–1949)  தனது இந்த அனுபவம் பற்றி ஒரு விவரமான கட்டுரையைப் பின்னால் எழுதினார். அதன் தலைப்பு “ஒரு சீன தோட்டத்தில்!” அதிலிருந்து சில வரிகளைப் பார்க்கலாம்.
 
Loomis-Lines.JPG
டாக்டர் லூமிஸின் கட்டுரை:
 “ஒரு கடிதத்தின் கதையைப் பல தடவை பலரிடம் நான் சொல்லி இருக்கிறேன். அந்த ஒரு கடிதம் நிகழ்த்திய மாற்றம் அளவிட முடியாதது. முதலில், கடிதத்தைத் தருகிறேன். அது சைனாவில் இருந்து வந்தது.
    அன்புள்ள டாக்டர்,
        இந்த கடிதத்தை பார்த்து வியப்படையாதீர்கள். என் முழுப் பெயரை இங்கு நான் எழுதவில்லை. என் பெயரும் உங்கள் பெயர் தான் என்பதை மட்டும் மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
       என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்காது. இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் மருத்துவமனையில் நான் இருந்தேன். வேறு ஒரு டாக்டர் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனக்குக் குழந்தை பிறந்தது; அன்றே அது இறந்து விட்டது.
               என்னை கவனித்து வந்த டாக்டர் ஒரு நாள் என்னிடம், ”உங்களுக்கு ஒரு சின்னத் தகவல். உங்கள் பெயரையே உடைய ஒரு டாக்டர் இங்கே இருக்கிறார். இங்கு அட்மிட் ஆனவர்களின் பெயர்கள் எழுதியுள்ள நோட்டீஸ் போர்டில் உங்கள் பெயரைப் பார்த்த அவர் உங்களைப் பற்றி என்னிடம் விசாரித்தார்; உங்களைப் பார்க்கவும் விரும்பினார்.... குழந்தையை இழந்த நீங்கள் யாரையும் சந்திக்க விரும்புவது சந்தேகம் என்று அவரிடம் சொன்னேன்” என்றார்.
      “அதனால் என்ன? அவரைப் பார்க்க எனக்குத் தயக்கம் இல்லை” என்று நான் கூறினேன்.
 
                  சிறிது நேரம் கழித்து நீங்கள் என் அறைக்கு வந்தீர்கள். என் படுக்கைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டீர்கள். எனக்கு ஆறுதல் கூறினீர்கள். மற்றபடி என்னிடம் அதிகம் எதுவும் பேசவில்லை. உங்கள் முகபாவமும், குரலில் இருந்த கனிவும் என் கவனத்தை ஈர்த்தன. அது மட்டுமல்ல, உங்கள் நெற்றியில் கவலையின் அறிகுறியாக பல ஆழமான கோடுகள் இருந்ததையும் பார்த்தேன். உங்கள் பரிவான ஆறுதல் வார்த்தைகளாலோ என்னவோ வெகு விரைவிலேயே என் உடல் நலமடைந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன்.
       அதன் பிறகு உங்களை நான் சந்திக்கவில்லை. ஆனால் தாங்கள்  இரவு பகல் என்று பாராது மருத்துவ மனையிலேயே இருப்பதாகச் சொன்னார்கள்.
china%2Bpalque.jpg

.
       இன்று பகல் சைனாவில் பீஜிங் நகரில் ஒரு அழகான வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளேன். வீட்டின் தோட்டத்தைச் சுற்றி உயரமான மதில் சுவர்கள் இருந்தன. அதன் ஒரு பகுதியில், அழகிய சிவப்பு, வெள்ளை மலர்ச் செடிகள் காட்சியளித்தன. அங்கு சுவரில் சுமார்  இரண்டு அடி நீளமுள்ள ஒரு பித்தளைத் தகடு   பதிக்கப்பட்- டிருப்பதைப் பார்த்தேன். அதில் சீன மொழியில் ஏதோ பொறிக்கப் பட்டிருந்தது. அதைப் படித்து மொழிபெயர்த்துச் சொல்ல ஒருவரைக் கேட்டுக் கொண்டேன். அவர் படித்துச் சொன்னார்:
     “மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!” என்பதே அந்த வாசகம்.
 
அந்த வாசகத்தை பற்றி விடாது மனதில் அசை போட்டேன். எனக்கு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை. இறந்துபோன குழந்தையை எண்ணி இன்னும் வருந்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கணம் என் மனதில் ஒரு திடீர் முடிவு தோன்றியது.  ‘இனியும் நான் காலம் தாழ்த்தக் கூடாது. நான் ஏற்கனவே தாமதம் செய்து விட்டேன்’ என்று என் உள்ளுணர்வு எனக்குத் தெரிவித்தது. ‘இறந்துபோன குழந்தையைப் பற்றிய எண்ணி விசனத்திலேயே மூழ்கி இருக்கிறாயே’ என்று என் உள் மனது கேட்டது.
    குழந்தையை பற்றி எண்ணம் வந்ததும், மருத்துவமனையில் நீங்கள் என்னை வந்து பார்த்தது நினைவுக்கு வந்தது. அது மட்டுமல்ல, ஓய்ச்சலே இல்லாமல் உழைப்பதன் அடையாளமாக உங்கள் நெற்றியில் விழுந்திருந்த கோடுகளும் நினைவுக்கு வந்தன. எனக்குத் தேவைப்பட்ட அனுதாபத்தைக் கனிவுடன் நீங்கள் அளித்தீர்கள்.
     உங்களுக்கு என்ன வயது  என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை என் தந்தை ஸ்தானத்தில் நான் வைக்கக்கூடிய அளவு வயதானவர் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. எனக்காக நீங்கள் அன்று செலவழித்த சில நிமிடங்கள் உங்களைப் பொருத்தவரை ஒன்றும் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு குழந்தையை இழந்த, அதுவும் அது பிறந்த தினத்தன்றே பறிகொடுத்த ஒரு பெண்ணுக்கு அது மிக மிகப் பெரிய விஷயம்.
   பதிலுக்கு நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவ்வப்போது எண்ணுவது வழக்கம். அது அறிவீனம் என்று எனக்குத் தெரியும்.
   இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்த தினம், நீங்கள் தனியாக ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து, சீன தோட்டத்துப் பொன்மொழியை தீர்க்கமாகச் சிந்தியுங்கள்!
    மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!     
                                                                                  ---  மார்க்கெரட்
       
                                                                      
   இந்தக் கடிதத்தைப் படித்ததும் என் மனம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விட்டது. சாதாரணமாக இரவில் அயர்ந்து தூங்கக் கூடிய நான் அன்றிரவு பத்துப் பன்னிரண்டு தடவை உறக்கம் கலைந்து, கலைந்து எழுந்துவிட்டேன்.. என் நினைவிலிருந்து முழுதுமாக மறந்து போன ஒரு பெண்மணியின் கடிதமும், அந்தச் சுவரில் பதிக்கப்பட்டத் தகட்டில் பொறிக்கப்பட்ட சீன மொழி அறிவுரையும் என்னை ஆக்கிரமித்து விட்டன.  ‘ஒருக்கால் நான் நினைப்பதை விட அதிக காலம் தாழ்ந்து போய்விட்டதா? இதைப்பற்றி ஏதாவது செய்ய வேண்டும்’ என்று எனக்குத் தோன்றியது. அப்படியே உறங்கிவிட்டேன்.
 
              *                   *                        *
   மறுநாள் காலை வழக்கம்போல்   டாக்டர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று “நான் மூன்று மாதம் விடுப்பில் செல்கிறேன்” என்று அறிவித்துவிட்டார்! ஒரு முக்கிய மருத்துவரான தான் விடுப்பில் போனால், மருத்துவமனை எப்படிச் சிறப்பாகச் செயல்படும் என்கிற மாதிரி எந்த எண்ணமும் அப்போது அவர் மனதில் தோன்றவில்லையாம். இதற்குப் பல வருடங்களுக்கு முன்பு ஒரு சமயம் நீண்ட விடுப்பில் அவர் சென்றிருக்கிறார்.  ‘நாம் இல்லாவிட்டால் மருத்துவமனை தத்தளித்து போகும்’ என்று அப்போது அவர் எண்ணியது உண்மை. அந்த லீவு முடிந்து மருத்துவமனைக்கு வந்தபோது, எல்லாம் ஒழுங்காக இருந்ததைப் பார்த்தார். பல நோயாளிகள் உடல் நலம் பெற்றுச் சென்று விட்டனர் என்பதையும் அறிந்தார். அவர் எதிர்பார்த்ததை விட சிலர் சீக்கிரமே தேறிவிட்டதையும் கவனித்தார். மருத்துவமனையில் இருந்த பலருக்கு, டாக்டர் லூமிஸ் லீவில் போய்விட்டார் என்பது கூட தெரிந்திருக்கவில்லை.  தனக்குப் பதிலாக வேறு ஒரு மருத்துவர் சிறப்பாகப் பணிபுரிந்து இருப்பதை பார்த்து, தான் லேசாக மட்டம் தட்டப்பட்டிருப்பதைப் போல் ஒரு கணம் உணர்ந்தார். ஆனால் டாக்டர் லூமிஸ் அதை ஒரு நல்ல பாடமாகவே எடுத்துக் கொண்டார்!   (தொடரும்)

 

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 3

 
ஷார்ட்டியின் மனமாற்றம்

 
  அடுத்த மூன்று மாதத்தை எப்படி,எங்கு கழிப்பது என்பதை மேலெழுந்த வாரியாகத் திட்டமிட்டு விட்டு, தன் நண்பரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஷார்ட்டிக்கு டாக்டர்  லூமிஸ் போன் செய்தார்; தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரும் வந்தார்.
    அவரிடம் லூமிஸ் “வீட்டிற்குப் போய், துணிமணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு வா. நாம் தென் அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணமாகப் போகப் போகிறோம்” என்றார்.
 
    இதைக் கேட்ட ஷார்ட்டி சற்று தயங்கியபடி சொன்னார் “சுற்றுப்பயணம் வர எனக்கு ஆசைதான். ஆனால் ஒரு முக்கிய வேலையை முடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. ஒரு வாரம் கூட நான் இங்கு இல்லாமல் இருக்க முடியாது” என்றார்
Loomis-Hope.png
  அவரிடம் டாக்டர் லூமிஸ் தனக்கு வந்த கடிதத்தைப் படித்துக் காண்பித்தா.ர் அதை பொறுமையாகக் கேட்ட ஷார்ட்டி “என்னால் உங்களுடன் வருவதற்கு இயலாது. கடந்த சில வாரங்களாக ஒரு முக்கிய வியாபார ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முயன்று கொண்டிருக்கிறேன். வெண்ணை திரண்டு வந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஊரை விட்டு போக முடியாது. நான் இங்கு இருந்தாக வேண்டும். வேறு சமயம். நாம் இரண்டு பேரும் சுற்றுப்பயணம் போனால் போகிறது” என்றார். அதே மூச்சில், “ஆமாம், அந்த பெண்மணி என்ன எழுதினார்? திரும்பப் படியுங்கள்” என்றார். “மழ்ச்சியை அனுபவியுங்கள். நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்துவிட்டது.. அப்படியா?” என்று கேட்டார்.
   சில கணங்கள் அவர் அமைதியாக இருந்தார். டாக்டர் லூமிஸும் எதுவும் பேசவில்லை. ஷார்ட்டி அந்தப் பொன்மொழியை மனதில் அலசிக் கொண்டிருந்தார்.
    அவருக்கு ஏதோ ஒரு விழிப்பை அந்தப் பொன்மொழி ஏற்படுத்தி இருக்க வேண்டும். பிறகு ஷார்ட்டி சொன்னார்: “இவர்கள் முடிவு எடுப்பதற்காக நான் மூன்று மாதங்கள் காத்து இருந்தேன்; அவர்கள் இன்னும் முடிவெடுக்க வில்லை. இனிமேலும் காத்திருப்பதற்கு நான் என்ன பைத்தியக்காரனா? எனக்காக அவர்கள் காத்திருக்கட்டும். சரி, டாக்டர் எப்போது போகலாம் என்கிறீர்கள்?” என்று கேட்டார்!.
                                *                                 *                             *
உருகிப்போன  ஸ்டீல்!
      லூமிஸும் ஷார்ட்டியும் உல்லாசக் கப்பலில் தென் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்கள்  ஒவ்வொரு நாளும் அவர்கள் மனதில் இருந்த பல பிரச்சினைகளின் கனமும், அழுத்தமும் கடல் பயணத்தில் மெல்ல மெல்ல ஆவியாகிப் போனதாக இருவரும் உணர்ந்தார்கள்.

     தென் அமெரிக்காவில் ஒரு பெரிய நகரை அடைந்தார்கள். அங்கு ஒரு பெரிய தொழிலதிபரின் விருந்தினராகத் தங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. பெரிய  - பெரிய என்பதை விட பிரமாண்டமான தொழிலதிபர் என்று சொல்வதே சரியாக இருக்கும். மிகப் பெரிய   ஸ்டீல் தொழிற்சாலையை நடத்தி வருபவர் அவர். அதுவும் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் தொழிற்சாலை அது!
trio.jpg
      டாக்டரும் ஷார்ட்டியும் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஷார்ட்டி அவரிடம்: “ நீங்கள் கால்ஃப் விளயாடுவீர்களா?” என்று தொழிலதிபரைக் கேட்டார் .அதற்கு அந்தத் தொழிலதிபர்  "ஏதோ கொஞ்சம்  விளயாடுவேன்….  என் மனைவியும் குழந்தைகளும் இப்போது அமெரிக்கா சென்றுள்ளனர். அவர்களுடன் இருக்க நான் விரும்புகிறேன்.. என்னிடம் மிக அழகான குதிரைகள் உள்ளன. அவற்றின் மீது சவாரி செய்ய ஆசை.  ஆனால் எதுவுமே என்னால் செய்ய முடியவில்லை. காரணம் தொழிற்சாலை வேலை! மூச்சு  விடக்கூட நேரமில்லை.....எனக்கு 55 வயது ஆகிறது. இன்னும் ஐந்து வருடங்கள்தான். அதன் பிறகு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஹாய்யாக இருப்பேன்... உம்... இப்படித்தான் ஐந்து வருடத்திற்கு முன் சொன்னேன். ஆனால் என் தொழிற்சாலை இப்படி வளர்ந்து போகும் என்று எனக்குத் தெரியாது.... என்றாவது ஒரு நாள் மாலை நேரம் கால்ஃப் விளையாட போவதும் இயலாததாகிவிட்டது. … என் ஆபீஸ் பையனுக்கு என்னைவிட அதிக ஓய்வு கிடைக்கிறது” என்று சொன்னார்.. அவர் குரலில் சிறிது ஏமாற்றம் இருந்தது.
          ஷார்ட்டி அவரிடம், “ சரி, நாங்கள் எதற்கு இங்கு வந்திருக்கிறோம் என்று தெரியுமா?” என்று கேட்டார்
 அதற்கு அந்தத் தொழிலதிபர்  “உங்களுக்கு அதிக வேலை நெருக்கடி இருக்காது. பணமும், நேரமும் நிறைய இருக்கக் கூடும்....” என்றார்
    டாக்டர் லூமிஸ் “இல்லை, சார். எனக்கு நேரமே கிடையாது. செலவழிக்கப் பணமும் கிடையாது” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணி எழுதிய ’சீன தோட்டத்துப் பொன்மொழி’யைப் பற்றி விவரமாகக் கூறினார்
   அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த தொழிலதிபர், அந்தப் பொன்மொழியை மறுபடியும் சொல்லச் சொன்னார்.
    “நீங்கள் நினைப்பதை விட காலம் கடந்து விட்டது”
 அதன் பிறகு அந்த தொழிலதிபர் எதுவும் பேசவில்லை. பிற்பகல் அலுவலக வேலையாகச் சென்றுவிட்டார். 
மறுநாள் காலை அவர் டாக்டர் லூமிஸை ஹோட்டல் வராந்தாவில் சந்தித்தார்.. தான் இரவு சரியாகத் தூங்கவில்லை என்றும், கடிதத்தின் விவரங்களும், பொன்மொழியும் தன் சிந்தனையிலேயே இருந்தது என்றும் சொன்னார். அது தன்னுடைய மனதையும் எண்ணங்களையும் புரட்டிப்போட்டு, எங்கேயோ எடுத்துச் சென்றுவிட்டது என்றும் சொன்னார்
      தொடர்ந்து அவர் சொன்னதுதான் ஆச்சரியத்தை விளைவிக்கக்கூடியது. “என் மனைவிக்கு நான் தந்தி கொடுத்து இருக்கிறேன். நான் அங்கு புறப்பட்டு வருவதாக” என்று தெரிவித்தார்.
     ஒரு கடிதத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வரி செய்த மாயாஜாலம் இது!
                 *                      *               *
 
      சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு டாக்டரும் ஷார்ட்டியும் ஊர் திரும்பினார்கள்.
 சிறிது காலம் கழிந்தது. மூப்பு கரணமாக  ஷார்ட்டியின் உடல் நலம் குன்றியது. அவரைப் பார்க்க டாக்டர் சென்றார்.  டாக்டரிடம்  ஷார்ட்டி, தாங்கள் இருவரும் தென்  அமெரிக்க பயணம் சென்றதை நினைவுபடுத்தி,  அந்தப் பொன் மொழியின் அறிவுரையின்படி காலம் தாழ்த்தாது சுற்றுலா போனதைக் குறிப்பிட்டார். அப்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி பளிச்சிட்டது!
                                           *                         *                                 *
          டாக்டர் லூமிஸ் பின்னால் இந்த அனுபவங்களை ’ஒரு சீன தோட்டத்தில்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையாக எழுதினார். அது பிரசுரமாயிற்று. அந்தக் கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்பு சொல்லி முடியாது. டாக்டரே எதிர்பார்க்காத அளவு வரவேற்பும் பாராட்டும் குவிந்தன. பல அமைப்புகளும் சங்கங்களும், தங்கள் சங்கத்தில் ”சீன தோட்டத்தில்’ என்ற தலைப்பில் பேசுவதற்கு அவரை அழைத்தன.
அவருக்கு வந்த ஏராளமான கடிதங்களில் பலர், அந்த கட்டுரையை படித்த பிறகு மன அழுத்தங்களையும் கவலைகளையும் எப்படி நீக்க முடிந்தது என்பதைத் தெரிவித்திருந்தார்கள். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் விடுப்பு எடுத்துச் சென்று அனுபவித்ததாகப் பலர் கூறியிருந்தார்கள். அந்த ஒற்றை வரி அறிவுரை தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நல்ல திருப்பத்தைத் தந்ததாக எழுதி இருந்தார்கள்.
.ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை, இவர் எழுதிய கட்டுரையைப் பிரசுரித்தது.
Bond%2Bbetween%2Bus.jpg
  டாக்டர் லூயிஸ் மாதிரி வேறு பலரும் இதே கருத்தைக் கூறி இருந்தாலும் இவருடைய கட்டுரை உண்டாக்கிய தாக்கத்திற்கு ஈடு எதுவும் இல்லை. ஒரு எளிய, மனிதாபிமான அனுபவக் கட்டுரை பலருடைய மனப்பாங்கையே மாற்றியதுடன், தங்கள் வாழ்க்கையை அவர்கள் ஒரு புதிய கோணத்தில் நோக்கச் செய்தது. அத்துடன், தங்கள் கவலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனுபவிக்க வேண்டியவற்றை அதிக காலம்  தள்ளிப் போடாமல் அனுபவிப்பதற்கும், மனப்பாரத்திற்கு விடைகொடுக்கவும் உதவியது.  
 
(டாக்டர் லூமிஸ் எழுதிய THE BOND BETWEEN US என்ற புத்தகத்தில் ‘IN THE CHINESE GARDEN’ கட்டுரை முழுதுமாக உள்ளது.)
 
பின் குறிப்பு:
 சரி, இந்தப் பதிவை படித்த உங்களில் பலருக்கும் இது உபயோகமான பதிவாகவும், உங்கள் பிரச்சினைகளுக்கு லேசான பரிகாரமாகவும், எல்லாவற்றையும் விட, “இப்போது என்ன அவசரம்? கொஞ்ச காலம் போகட்டும்” என்று பல விஷயங்களைத் தள்ளிப் போட நினைப்பதைத் தவிர்க்கவும் உதவும் என நம்புகிறேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.