Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தகுதியும் முக்கியமானவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தகுதியும் முக்கியமானவை

 

மொஹமட் பாதுஷா  

நாம் கொள்வனவு  செய்கின்ற பாவனைப் பொருள்களும் உணவு வகைகளும் தரமாக இருக்க வேண்டும் என்பதில், எப்போதும் அக்கறை செலுத்துவோம். பத்து ரூபாய் தின்பண்டங்கள் தொடக்கம், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் தொட்டு, மருத்துவம், கல்விச் சேவைகள் வரை, அனைத்தும் தராதரமாக இருக்கின்றதா என்று பார்த்தே பெற்றுக் கொள்வதுண்டு. ஆனால், நாம், குறிப்பாக முஸ்லிம் சமூகம், தமது அரசியல் பிரதிநிதித்துவங்கள் விடயத்தில், இந்த அக்கறையை வெளிக்காட்டுவதை நீண்டகாலமாகக் காணக் கிடைக்கவில்லை. 

மறைமுகமாக, அரசியலே நமது மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றது. இந்த நாட்டில், சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பையும் கௌரவத்தையும் பாதுகாத்துக் கொள்கின்ற அதேநேரத்தில், முஸ்லிம் சமூகத்தின் ‘பதச்சோறு’களாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் இருக்க வேண்டும். 

முஸ்லிம்கள் எப்படிப்பட்ட பண்பியல்புகளைக் கொண்டவர்கள் என்பதை, வெளியுலகுக்குப் பிரதிவிம்பப்படுத்தும் நபர்களாக, மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும். 

ஆனால், முஸ்லிம் சமூகம் தெரிவு செய்து அனுப்புகின்ற நாடாளுமன்றம், மாகாண சபை உறுப்பினர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர், மக்களுக்கான அரசியலுக்கு உகந்தவர்களாக இல்லை என்பதை, முஸ்லிம்கள் பட்டறிந்துள்ளனர். 

ஒரு சமூகத்தின் உரிமைக்காக, அபிலாசைக்காகக் குரல் கொடுப்பதற்கு, சமூகம் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு, இலாயக்கற்றவர்களாகவே பல மக்கள் பிரநிதிகளை வகைப்படுத்த வேண்டியிருக்கின்றது. 

இது எப்படி இருக்கின்றது என்றால், பெரும் விலை கொடுத்து வாங்கிய காருக்கு, அசல் ஜப்பானிய உதிரிப்பாகத்தைப் பொருத்தாமல், இரண்டாம் தரமான அல்லது மீள்புதுப்பிக்கப்பட்ட    (ரீ-கண்டிசன்) உதிரிப்பாகங்களைப் பொருத்திவிட்டு, அது நீண்டகாலம் சிறப்பாகப் பாவிக்கும் என்று எதிர்பார்ப்பதைப் போலிருக்கின்றது. 

image_2c2b4ca77e.jpg

இந்த விடயத்தில், முஸ்லிம் மக்கள் மீள்வாசிப்பு ஒன்றை மேற்கொண்டு, தமது செயற்பாடுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். 

இலங்கையின் நாடாளுமன்றத்தில், எல்லா வகையான மக்கள் பிரதிநிதிகளும் இருக்கின்றனர். துறைசார் கலாநிதிகள், வல்லுநர்கள், பட்டப்படிப்புப் படித்தவர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், முன்னாள் அரச உத்தியோகத்தர்கள், வியாபாரிகள், மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், கீழ்நிலை சமூகத்திலிருந்து வந்தவர்கள் எனப் பல இரகமானவர்கள் இருப்பதாக நாம், பெருமைப்பட்டுக் கொள்ளலாம். 

கல்விமான்கள் இருக்கின்ற இந்த நாடாளுமன்றத்தில் க.பொ.த (சா/த),  (உ/த) சித்திபெறாதவர்களும் கணிசமான அளவில் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.    

இதேவேளை, சண்டியர்களும் நாகரிகமும் ஒழுங்கும் தெரியாதவர்கள் பலரும், இந்த உயரிய சபையில் அங்கத்துவம் பெற்றிருப்பதை இலங்கை மக்கள் பல தடவை பார்த்து, முகம் சுழித்திருக்கின்றார்கள். 

அதுமட்டுமன்றி, ‘எத்தனோல்’ வியாபாரிகள், போதைப் பொருள் விற்பனையாளர், கேரளா கஞ்சா விற்பனைக்கு உதவுவோர், மதுக் கடைகளை நடத்துவோர், மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமையானவர்கள், பணத்துக்காக எதையும் செய்பவர்கள் எனத் தரங்கெட்ட பேர்வழிகளும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கிறார்கள். இது தொடர்பாக, ரஞ்சன் ராமநாயக்க கூட அண்மையில் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தி இருந்தார். 

ஒரு நாட்டின் நாடாளுமன்றம் என்பது, உயரிய சபையாகும். அதற்கென்று உலகளாவிய ரீதியில், ஒரு மேன்மையான மதிப்பு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப்படுவோர், மக்களாகிய நமது பிரதிநிதிகள்தான். 

நாடாளுமன்றத்துக்கு அடுத்தபடியான சபையாக, மாகாண சபையைக் குறிப்பிடலாம். எனவே, நாடாளுமன்றம், மாகாண சபை உறுப்பினர்கள் அந்தந்த ஆசனங்களுக்குப் பொருத்தமான தகுதி உடையவர்களாக, இருக்க வேண்டியது அவசியமாகும். 

இலங்கையில் முஸ்லிம் அரசியலைப் பொறுத்தமட்டில், முன்னைய காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள், பெருந்தேசியக் கட்சிகளில் இணைந்தே அரசியல் செய்தார்கள். பின்னர், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டனர். 

அக்காலங்களில், முஸ்லிம்களுக்கு இருந்த பிரச்சினை, இப்போதிருப்பது போன்று, சிக்கலானதாகக் காணப்படவில்லை. இருப்பினும், விரல்விட்டு எண்ணக் கூடிய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களையே முஸ்லிம்கள் பெற்றிருந்தாலும் கூட, கிடைக்க வேண்டியவை, ஓரளவுக்கேனும் கிடைத்துக் கொண்டே இருந்தன. 

பின்னர், தனித்துவ அடையாள அரசியல் என்ற நாமத்தோடு, முஸ்லிம் கட்சிகள் உருவாகியதுடன், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் முயற்சியால், மாவட்ட ரீதியான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவக் கணிப்பீட்டுக்கான வெட்டுப்புள்ளி 12.5 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இது, சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளின் அரசியலில் பெரும் திருப்பத்தைக் கொண்டு வந்தது. இவ்வாறு முஸ்லிம்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை அதிகரித்ததன் உண்மையான பலாபலனை, முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொண்டுள்ளதா என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளிக்க முடியாது. 

இதன் அர்த்தம், முஸ்லிம் எம்.பிக்கள் எதையுமே செய்யவில்லை என்பதல்ல! மாறாக, உண்மையில் ஒரு சமூகத்துக்கு அதன் அரசியல் பிரதிநிதிகளும் தலைவர்களும் எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யவில்லை என்பதாகும். எப்படிச் செயற்பட்டிருக்க வேண்டுமோ, அப்படிச் செயற்படவில்லை என்பதாகும். எதைச் சாதித்திருக்க வேண்டுமோ, அதைச் சாதிக்க முன்வரவில்லை என்ற கையறு நிலையாகும். 

அரசாங்கத்துக்காக நீதிமன்றம் சென்ற மக்கள் பிரதிநிதிகள், முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது, நீதிமன்றத்தை நாடுவதில்லை. நான்கைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, ஏனைய முஸ்லிம் எம்.பிக்கள் யாரும், நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதைக் காணக் கிடைப்பதில்லை. 

‘அத்தி பூத்தாற் போல்’ நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் முன்னுரிமையற்ற விவகாரங்களைப் பேசுகின்றார்களே தவிர, முஸ்லிம் சமூகத்துக்காகப் பேசவில்லை.

இதை உறுதிப்படுத்த, பொதுமக்கள் யாராவது விரும்பினால், தகவல் அறியும் சட்டத்தின் மூலம், நாடாளுமன்ற உரை பற்றிய ‘ஹன்சாட்’ தகவல்களைக் கோரிப் பெற்றுக் கொள்ள முடியும். 

யார் எதைச் சொன்னாலும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஆத்திரம் வந்தாலும் இதுதான் நிதர்சனம். இதற்கான அடிப்படைக் காரணம், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களும் மாகாண சபை உறுப்புரிமைகளும் அதிகரிக்க வேண்டும் என்று, முஸ்லிம் சமூகம் முயற்சி செய்த அளவுக்கு, அந்தப் பிரதிநிதிகள் தரமானவர்களாக, தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.  

முஸ்லிம் சமூகத்தின் மத்தியில், அண்மைக்காலமாக ஊருக்கொரு எம்.பி. வேண்டும் என்ற ஒரு மனோநிலை உருவாகி இருக்கின்றது. முன்னொரு காலத்தில், பிரதேச வேறுபாடுகளைக் கடந்து வாக்களித்து, ஓரளவுக்குத் தரமான உறுப்பினர்களைத் தெரிவு செய்த மக்களிடையே, ஒருவித பிரதேசவாத மய்ய அரசியல் கருத்துகள் திணிக்கப்பட்டுள்ளன. 

இந்தப் பின்னணியில் ஒவ்வோர் ஊரிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தமும் எங்கள் ஊருக்குப் பிரத்தியேகமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் எம்.பி கனவோடு இருக்கின்ற ‘உள்ளூர் அரசியல் காளான்’கள், இதற்குப் பின்னால் இருக்கின்றார்கள்.  

இது அயற் பிரதேச மக்களிடையே, அரசியல் முரண்பாட்டைத் தோற்றுவிப்பது மட்டுமன்றி, இதன் காரணமாக ஒவ்வோர் ஊரும் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோதாவில் தகுதி, தராதரம் அற்றவர்களும் போட்டியிடும் நிலை உருவாகின்றது. இந்நிலை,  உருப்படியானவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், உருப்படிகளை  மாத்திரம் அதிகரித்து விடுகிறது. இப்படியான பேர்வழிகள்தான், சமூகத்தை மறந்து, எம்.பி பதவிகளைச் சுய இலாப அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.   

இலங்கை அரசியல் சூழலில், சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைப்பதற்கு அரசாங்கங்கள், மிகச் சூட்சுமமாக முறையில் நகர்வுகளைச் செய்து வருகின்றன. தேர்தல் சட்டத் திருத்தம், தேர்தல் முறைமை மாற்றம், வெட்டுப்புள்ளியைத் திருத்துவதற்கான முஸ்தீபு, முஸ்லிம் வாக்குகளைச் சிதறடிப்பதற்கான வியூகங்கள் என எல்லாம், அடிப்படையில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைக் குறைப்பதற்கான காய்நகர்த்தல்களே ஆகும்.  

நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் சனத்தொகையின் அடிப்படையில் நோக்கினால், 20க்கு அதிகமான முஸ்லிம்கள், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும். அதுவே, நியாயமும் சமதர்மமும் ஆகும். 

வெட்டுப்புள்ளியைக் குறைப்பதன் ஊடாகவோ, தேர்தல் சட்டத்திருத்தம் போன்ற வேறு உபாயங்களின் மூலமாகவோ முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைப்பதற்கு, சதித்திட்டம் மேற்கொள்ளப்படுமாயின் அதைத் தடுக்க வேண்டியது, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் தார்மீகக் கடமையாகும். 

அதேநேரத்தில், தெரிவு செய்யப்படுகின்ற முஸ்லிம் எம்.பிக்கள் மட்டுமன்றி, மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை அங்கத்தவர்கள் என அனைவருமே தகுதியான, ஒழுக்கமான, தரமான நபர்களாக இருக்க வேண்டும். 

‘ஒருவரிடம் பணம் இருக்கின்றது; செல்வாக்கு உள்ளது; நாம் வழக்கமாக அவருக்குத்தான் வாக்களிப்போம்’ என்ற மனோநிலையில், யாரையும் வேட்பாளராக நிறுத்த கூடாது. அப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை முஸ்லிம்கள் வாக்களிக்கவும் கூடாது. 

இங்கு தகுதி, தராதரம் என்பது, கல்வி அறிவு மட்டுமல்ல; பட்டதாரி முஸ்லிம்களே நாடாளுமன்றத்துக்குத்  தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில்லை. ஏனெனில், படித்தவர்கள், புத்திஜீவிகளில் கணிசமானோருக்கு, சமூக அக்கறை மிகவும் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. எனவே, புத்திஜீவிகளைத்தான் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால், அடிப்படைக் கல்வி அறிவு இருப்பது அவசியமாகும். 

சமூக சிந்தனையுள்ள ஓர் அறிவாளியை, படிக்காத மேதைகளை, முஸ்லிம் சமூக செயற்பாட்டாளரை, பரவாயில்லை என்னும் வகையறாவுக்குள் வரும் முன்னாள் எம்.பி ஒருவரைக்கூட முஸ்லிம்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம். அது, பிரச்சினையில்லை. 

முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியமானதுதான். ஆனால், எண்ணிக்கையா, தரமா என்று வரும்போது, தரத்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது. உப்புக்குச் சப்பாக 20 எம்.பிக்கள் இருந்து, நாடாளுமன்ற ஆசனங்களை வெறுமனே சூடாக்கிவிட்டு வருவதை விட, சமூகத்துக்காக மட்டும் குரல் கொடுக்கக் கூடிய, 10 பேர் இருந்தால் கூட பரவாயில்லை என்று தோன்றுகின்றது. 

எனவே, அடுத்த நாடாளுமன்றத்துக்கு முஸ்லிம்கள் சார்பில் யாரைத் தெரிவு செய்து அனுப்புவது என்றாலும், அவர் சமூக அக்கறையுள்ளவராக, பணத்தாசை இல்லாதவராக, சமூகத்துக்காகத் தைரியமாகக் குரல் கொடுப்பவராக, ஒழுக்கமானவராக, மக்களுக்கான அரசியலைச் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும். 

தகுதி அற்றவர்களைக் கொண்டு, எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பதால், பெரிதாக எதுவும் நல்லது நடந்து விடப் போவதில்லை. 

‘சித்தி அடையாத’ அரசியல்வாதிகள்

  உலக அனுபவத்தின்படி பார்த்தால், பல இரகமானவர்களுக்கு ஆட்சியும் அதிகாரமும் கிடைத்திருக்கின்றன. நினைத்துப் பார்க்கவே முடியாத பின்புலத்தைக் கொண்ட பலர், பிரதிநிதித்துவ அரசியலுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வேறுசிலர், வலிந்து போரிட்டு, அதிகாரங்களைக் கையகப்படுத்தியும் இருக்கின்றனர்.   

உலக வரலாற்றில் இனவாதிகள், கொடுங்கோல் ஆட்சியாளர்கள் நாடுகளை ஆண்டிருக்கின்றார்கள். இனம், மதம், நிறம் சார்ந்த வாதங்களை முன்வைத்து, அதிகாரங்களைப் பலர் கைப்பற்றி இருக்கின்றனர். வேறு சிலர், சதி,  இராணுவப் புரட்சிகளின் மூலம் அதிகாரத்துக்கு வந்திருக்கின்றார்கள். அரபுலகில், தலைமுறை தலைமுறையாக அரசாட்சி, இன்றும்  நடந்து கொண்டுதானிருக்கின்றது. 

இதேவேளை, படித்த முட்டாள்களும் படிக்காத மேதைகளும் உலகளவில் மக்கள் பிரதிநிதிகளாக, இருந்திருக்கின்றார்கள். 

மேற்கத்தேய நாடுகள் பலவற்றில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, அடிப்படைத் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெரிவு செய்யப்படுவோர் போதுமான கல்வியறிவும் ஒழுக்க விழுமியங்களும் கொண்டவர்களாக இருப்பதை உலகம் அவதானித்து வருகின்றது. 

மறுபுறத்தில், ஆபிரிக்கா, தெற்காசிய நாடுகள் வேறு சில தனிமைப்படுத்தப்பட்ட பிராந்தியங்களிலும் குறைந்த கல்வித் தகமைகள், மட்டமான ஒழுக்கநெறிகளைக் கொண்ட பலரும் எம்.பிக்களாகப் பதவி வகித்து வருகின்றனர்.  

இவ்வாறான பின்னணியில், உயர் எழுத்தறிவையும் பாரம்பரிய ஒழுக்க விழுமியங்களையும் கொண்ட நாடாக அடையாளப்படுத்தப்படுகின்ற இலங்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதி பற்றிய கேள்விகள், அடிக்கடி முன்வைக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. ஆனால், இங்கு தகுதி என்பது எழுத்தறிவு மட்டுமல்ல என்பதைக் கவனிக்கவும்.

நமது நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுள் 196 பேர் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார்கள். மீதமுள்ள 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் ஊடாக நியமனம் செய்யப்படுகின்றார்கள். 

ஆனால், இந்தப் பதவிக்குண்டான தகுதியுடன் எம்.பிக்கள் தெரிவு செய்யப்படுகின்றனரா என்பதும் தெரிவாகும் எல்லா எம்.பிகளும் அதன் தார்ப்பரியத்தை உணர்ந்து நடந்து கொள்கின்றனரா என்பதும் நம்முன்னுள்ள கேள்விகளாகும்.  

குறிப்பாக, கடந்த சில வருடங்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்விசார் தகுதிகள் பற்றிய பல்வேறு தரவுகள் வெளியிடப்பட்டு வருவதுடன், கணிசமானோர் குறைந்த மட்ட கல்வித் தரத்தைக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

நமது நாடாளுமன்றத்தில் உயரிய கல்வித் தகமைகைள் கொண்ட, சமூக சிந்தனையாளர்கள் எம்.பிக்களாக இருக்கின்றார்கள். குறிப்பாக, சுமார் 15 சட்டத்தரணிகள், மூன்றுக்கு மேற்பட்ட பொறியியலாளர்கள், வைத்தியர், கலாநிதிகள், நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளடங்கலாக அரச நிறுவனங்கள், தனியார் துறையில் உயர் பதவிகளை வகித்தவர்கள், கல்விமான்கள் எனப் பலர் உள்ளனர். 

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர், க.பொ.த. (உயர்தரம்) சித்தியடையாதவர்களாக உள்ளனர் என்ற தகவலை, ஒரு பேராசிரியரை மேற்கோள்காட்டி அரசாங்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. 

அதன்பின்னர், சுமார் 100 க்கு மேற்பட்ட எம்.பிக்கள் உயர்தரம் சித்தியடையாதவர்கள் என்ற செய்தி வெளியானது. ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கான அடிப்படைக் கல்வி வரையறைகள் அரசமைப்பில் இல்லை.

ஆனாலும், அரச துறையில் கீழ்மட்டத் தொழில் ஒன்றைப்  பெறுவதற்கே, அடிப்படைத் தகுதி  அவசியமாக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில், நமது பிரதிநிதிகளுக்கும்  நாட்டை ஆள்பவர்களுக்கும் அடிப்படைக் கல்வித் தகுதி உள்ளிட்ட தகமைகள் நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியமாகும். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்-நாடாளுமன்ற-உறுப்பினர்களின்-எண்ணிக்கையும்-தகுதியும்-முக்கியமானவை/91-244901

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.