Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரி.எம். கிருஷ்ணா: கர்நாடக இசையின் கலகக்குரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரி.எம். கிருஷ்ணா: கர்நாடக இசையின் கலகக்குரல்

 

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ  

 

 

image_8b7cf2e5ee.jpgஉலகளாவிய ரீதியில் சிந்தனைகளை மாற்றி, மாற்றங்களைக் கொண்டு வந்த அனைத்துக்கும்  கலகக்குரல்களே காரணம் ஆகும்.   

அச்சமூட்டுவனவாயும் சங்கடத்தை ஏற்படுத்துவனவாயும் உள்ள குரல்களே, காலப்போக்கில் மாபெரும் மாற்றங்களின் அச்சாணியாகி உள்ளன.   

அவ்வகையில் கலகக்குரல்கள் வரவேற்கப்பட வேண்டியவை. அவை மாற்றத்துக்கான குரல்கள்; அடக்கப்பட்டவர்களின் குரல்கள்; கவனத்தை வேண்டிநிற்போரின் குரல்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக, நியாயத்துக்கான குரல்கள் என ஓங்கி ஒலிக்கின்றன.  

இக்குரல்கள் அனைத்துத் தரப்பிலிருந்தும் வருகின்றன. அவை பெரும்பான்மையின் வலிமையால் ஒடுக்கப்படுகின்றன. அதையும் மீறி எழும் குரல்களே, மாற்றங்களை வேண்டி ஓங்கி ஒலிக்கின்றன.   

தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நன்கறியப்பட்ட கர்நாடக இசைக்கலைஞர் ரி.எம். கிருஷ்ணா ஆவார். இவர், கர்நாடக இசைப் பாடகராக மட்டுமன்றி, எழுத்தாளராகவும் செயற்பாட்டாளராகவும் நன்கறியப்பட்டவர். இவரது சேவைக்காக 2016ஆம் ஆண்டு, ‘ராமோன் மக்சேசே’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அண்மையில் வெளிவந்த இவரது புத்தகம், இத்தகைய கலகக் குரலாகி உள்ளது.   

இந்தப் புத்தகத்தின் மீதான முதலாவது கல், அதன் வெளியீடு தொடர்பிலேயே எறியப்பட்டது. இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, பெப்ரவரி இரண்டாம் திகதி திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா மய்யத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.   

வரலாற்று ஆய்வாளரும் காந்தியின் பேரனுமாகிய ராஜ்மோகன் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு வைப்பதாக அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டன. நிகழ்வுக்கு சில தினங்கள் முன்பு, கலாஷேத்ரா மய்யம் நூல் வெளியீட்டுக்கான அனுமதியை இரத்து செய்தது.   

இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘கலாஷேத்ரா அரச நிறுவனமாக இருப்பதால் அரசியல், கலாசாரம், சமூக ரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே அனுமதிக்க முடியாது. இன்றைய செய்தித் தாள்களில் வெளிவந்த புத்தக மதிப்புரைகளில், சில பகுதிகளைப் பார்க்கும்போது, இந்தப் புத்தகம் சர்ச்சைக்குரிய விடயங்களைத் தொட்டுச் செல்வது தெரிகிறது. மேலும், நிறைய அரசியல் கருத்துகளும் உள்ளன. புத்தக வெளியீட்டு விழாவுக்காக அரங்கத்தை அளிக்க ஒப்புக்கொண்டபோது, இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது. ஆகையால், புத்தக வெளியீட்டு விழாவுக்காக எங்கள் அரங்கத்தைப் பயன்படுத்திக்கொள்ள அளிக்கப்பட்ட அனுமதியை இரத்துசெய்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இதைத் தொடர்ந்து, மாற்று இடத்தில் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. ஒரு புத்தக வெளியீட்டை கண்டு, கலாஷேத்ரா ஏன் அஞ்சுகிறது? வழங்கப்பட்ட அனுமதி ஏன் மறுக்கப்பட்டது போன்ற கேள்விகள், இயல்பாக எழுந்தன. இதனுடன் சேர்த்து, இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது என்ற வினாவும் சேர்ந்தே எழுந்தது.   

மிருதங்கம் செய்வோரின் கதை   

இத்தனை நெருக்கடிகளைத் தாண்டி வந்திருக்கும் புத்தகம், ‘ செபாஸ்டியனும் மகன்களும்: மிருதங்கம் செய்வோரின் சுருக்கமான வரலாறு’ (Sebastian and Sons: A Brief History of Mrdangam Makers) என்பதாகும். 

இந்தப் புத்தகம், மிருதங்கத்தைச் செய்பவர்களின் கதையைப் பதிவு செய்கிறது; அவர்களின் வரலாற்றை, துயரத்தைச் சொல்கிறது. இது, கர்நாடக இசைக்கருவிகளில் ஒன்றான மிருதங்கத்தின் முரண்நகையைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்திருக்கிறது. மிருதங்கம் வாசிப்பவர்களில் 99 சதவீதம் பேர் பிராமணர்கள்; மிருதங்கம் செய்பவர்களில் 99 சதவீதம் பேர் தலித்துகள்.  

தலித்துகளால் செய்யப்பட்ட மிருதங்கங்களையே இந்தப் பிராமணர்கள் வாசிக்கிறார்கள். தலித்துகளைத் தொட்டால் தீட்டு, பாவம்; ஆனால், அவர்களால் உருவாக்கப்பட்ட மிருதங்கம் புனிதப் பொருள்.   

மிருதங்கத்தைச் செய்வது யார், அது எதனால் செய்யப்படுகிறது போன்ற அனைத்தையும் மிருதங்க வித்துவான்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனாலும், மிருதங்கத்தைச் சுற்றி ஒரு புனிதம் கட்டமைக்கப்படுகிறது. பலவழிகளில் கர்நாடக இசையும் அத்தோடு இணைந்த கருவிகளும் பிராமணர் அல்லாதோருக்கு, அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்படுகிறது. இதை, இந்தப் புத்தகத்தின் ஊடு, மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் ரி.எம். கிருஷ்ணா.  

இந்தப் புத்தகம், மிருதங்கம் எவ்வாறு உருவாகிறது, அதை உருவாக்குபவர்களின் பணியும் வாழ்க்கையும் எவ்வளவு கடினமானது? இதன் உருவாக்கத்தின் பின்னால் உள்ள அறிவியல் ஆகிய, அனைத்தையும் நான்கு ஆண்டுகள் கள ஆய்வு செய்து, இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார்.   

இந்தப் புத்தகம், பல கேள்விகளை எழுப்புகிறது. அதில் பிரதானமானவை, மிருதங்க வித்துவான்களுக்குக் கிடைக்கும் மரியாதை, அதை உருவாக்கும் கலைஞர்களுக்கு ஏன் கிடைப்பதில்லை? மிருதங்கங்களை உருவாக்குபவர்கள், ஏன் ஒளிந்துமறைத்து கிடக்கிறார்கள்.   

ரி.எம். கிருஷ்ணா, தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்:  ‘மிருதங்கம் செய்வதை, ஏதோ நாலைந்து பொருள்களை ஒன்றாகச் சேர்க்கிற ஒரு வேலை மட்டும்தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இசை என்பது, இசைக் கலைஞரிடம்தான் இருக்கிறது என்கிற கருத்து, நமது மூளையில் ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. அது, நம்முடைய அறிவு குறித்த எண்ணத்துக்கு சவால்விடுவதாக இருக்கிறது. இதை நாம் சிந்திப்பதில்லை. சில கேள்விகளை நாம் கேட்டாக வேண்டும். அறிவை உருவாக்கும் செயல்முறை என்பது என்ன? அச்செயன்முறை சமூகமயமற்ற அறிவுச்செயற்பாடா? எது அறிவு, எது அறிவு அல்ல என்பதை, இந்தச் சமூகம் தீர்மானிக்கிறதா? கலை என்றால் என்ன, கைவினைத்திறன் என்றால் என்ன? அதில் எந்த அளவுக்கு சமூகப்படி நிலைப்படி கட்டமைக்கப்பட்டு இருக்கிறது? இவைகள் பற்றி நாம் ஆழமாக யோசிக்க வேண்டியுள்ளது. மிருதங்கம் உருவாக்குவதை, சமூகம் எந்த அளவுக்குக் குறையாக மதிப்பிடுகிறது தெரியுமா? ஏனென்றால், அது எப்படித் தயாரிக்கப்படுகிறது, யார் அதைச் செய்கிறார்கள் போன்றவையே காரணமாகின்றன.’  

மிருதங்கத்தில், மாட்டுத் தோல் பயன்படுத்தப்படுவது பற்றிய விரிவான குறிப்புகள், இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. இசைக் கலைஞர்கள் குறிப்பாக, மிருதங்கக் கலைஞர்கள் தொட விரும்பாத, பேச அஞ்சுகிற விடயத்தை இந்தப் புத்தகம் பேசுகிறது.   

‘மிருதங்கம் மூன்றுவிதமான தோல்களால் செய்யப்படுகிறது. பசுவின் தோல், எருமை மாட்டின் தோல், ஆட்டின் தோல். முதற்தர மிருதங்கத்துக்குப்  பசுவின் தோல் பயன்படுத்தப்படுகின்றது என்பது, மிருதங்கம் வாசிப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அவர்கள் மிருதங்கம் செய்யத் தோலை எடுப்பதற்காக, பசுவைக் கொல்வதில்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். இது தவறானது. மிருதங்கத்துக்குப் பொருத்தமான பசுவைக் கொன்றே, அதன் தோல் எடுக்கப்படுகிறது.’   

‘இன்றும் கொஞ்சப் பேர், மிருதங்கத்துக்கு இறந்து போன மாட்டின் தோலைத்தான் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். அது பொய். இறந்துபோன மாட்டின் தோலை வைத்து, மிருதங்கம் செய்ய முடியாது. அதேபோல, எல்லா மாட்டுத் தோலிலும் இதைச் செய்ய முடியாது. தோலைப் பார்த்துதான் தேர்ந்தெடுப்பார்கள். மாட்டுக்கு எவ்வளவு வயதாகி இருக்கிறது, இந்தத் தோலைப் பயன்படுத்தினால் நாதம் வருமா என்பதையெல்லாம் பார்த்துதான், தோலைத் தெரிவு செய்கிறார்கள்.’ இவ்வாறு ஏராளமான விடயங்களை விரிவாகவும் விளக்கமாகவும் இந்தப் புத்தகம் பேசுகிறது.   

குறிப்பாக, பசுவதைக்கு எதிரான போரை, இந்திய மத்திய அரசாங்கமும் இந்துத்துவா சக்திகளும் முழு மூச்சில் முன்னெடுத்துள்ள இக்கணத்தில், இந்தப் புத்தகம் நேரடியாகவே, அவர்களது செயல்களைக் கேள்விக்குட்படுத்துகிறது.   

இந்தப் புத்தகத்துக்கு, ‘செபஸ்டியனும் மகன்களும்’ என்ற பெயரை ஏன் வைத்தார் என்றும் ரி.எம். கிருஷ்ணா சொல்கிறார்: ‘நான் பார்த்தவரைக்கும் ஏறத்தாழ ஆறு, ஏழு தலைமுறையாக, இந்த மிருதங்கம் செய்யும் தொழிலில் இருப்பவர்கள், செபஸ்டியனுடைய குடும்பத்தினர். செபஸ்டினுடைய அப்பாவின் பெயர் ஆரோக்கியம் அல்லது அடைக்கலம். செபஸ்டியன்தான், முதன்முதலில் முழுமையாக மிருதங்கம் செய்யும் வேலையில் இறங்கியவர். எனக்குத் தெரிந்தவரை, இந்தத் தொழிலில் மிக மூத்தவர், செபஸ்டியனாகத்தான் இருக்க வேண்டும். செபஸ்டியனுக்குப் பிறகு, இந்தத் தொழிலில் இருப்பவர்கள் எல்லோருக்குமே தந்தையாக, அவரை நினைக்கிறேன். அதனாலேயே, அவரது பெயரை நூலின் பெயராக்கினேன்.’  

ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டக் கருவியாகக் கலை   
இந்தப் புத்தகத்தின் மூலம் எழுப்பப்படுகின்ற கேள்விகள் புதிதல்ல. ஆனால், புதிய தளத்தில் புதியவரால் இந்தக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக, பாரம்பரிய பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், புகழ்பெற்ற இசைக் கலைஞருமாகிய ரி.எம். கிருஷ்ணா, இக்கேள்விகளை எழுப்புவது முக்கியமானது. 

இது பலருக்கு அதிர்ச்சியையும் எரிச்சலையும் அளித்துள்ளது. ஏனெனில், இவ்வினாக்களை குற்றச்சாட்டுகள், வசைபாடல்கள், பிராமணர்கள் மீதான வன்மம் என்று புறந்தள்ள இயலாத நிலையை ரி.எம். கிருஷ்ணா உருவாக்கியிருக்கிறார்.   

கலைகளும் இலக்கியங்களும் என்றுமே சமுதாயம் சார்ந்துதான் உருவாகி விரிவடைந்துள்ளன. அதன் சமுதாய உள்ளடக்கமும் வர்க்கச் சார்பும் எப்போதும் வெளிவெளியாகத் தெரியாவிட்டாலும் அது உருவாகிய காலமும் உடனடியான சமூகத் தேவையும் அதன் சமூக அரசியல் தன்மையின் வெளிப்பாட்டை நிர்ணயிக்கின்றன.  

ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான போராட்டத்தின் இருதரப்புப் பாசறைகளிலும், கலை, இலக்கியங்கள் முக்கியமான ஆயுதங்களாகவே உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பான ஆயுதங்கள், எவ்வாறு பறிக்கப்படுகின்றன, சிதைக்கப்படுகின்றன, எதிரியால் தனதாக்கப்படுகின்றன என்பது பற்றிய ஒரு புரிதல் நமக்கு அவசியம். அவ்வகையில், கர்நாடக இசை சார்ந்தும் அதன் கருவிகள் சார்ந்தும் எழுப்பப்பட்டுள்ள புனிதங்களை இந்தப் புத்தகம் உடைக்கிறது.  

சமூகத்தை மட்டுமல்ல, கலை, இலக்கியங்களையும் ஜனநாயகப்படுத்த வேண்டிய தேவையை நாம் அறிவோம். அதன் அவசியத்தை முகத்தில் அறைந்தாற் போல் இந்தப் புத்தகம் சொல்லியிருக்கிறது. இவ்வாறான கலகக்குரல்களே, நல்ல மாற்றங்களை நோக்கிய நகர்வுக்கான பாதையை உருவாக்குகின்றன. எமது கண்களுக்குத் தெரியாத, நாம் கவனிக்க விடயங்களை, ‘இதையும் கொஞ்சம் பாருங்களேன்’ என்று எம் கவனத்தைக் கோரி நிற்கின்றன.   

முதலில் இசையுடனும் இசைக்கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள புனிதங்களை உடைப்போம். இசையும் கருவிகளும் மக்களுக்கானவை; அவை அனைத்து மக்களுக்கானவை. அதை வாசிப்பவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ, அதேயளவு முக்கியத்துவம் அதை உருவாக்குபவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். கலைகளும் கருவிகளும் அழிவது அது பரவலாகாமல் போவதாலும் அதை ஆக்குபவர்களுக்குரிய இடமும் மரியாதையும் வழங்கப்படாததாலும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.     

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரி-எம்-கிருஷ்ணா-கர்நாடக-இசையின்-கலகக்குரல்/91-246140

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.