Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக கோயில்: கையகப்படுத்த முயலும் தொல்லியல் துறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்
 
இந்தியத் தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் தலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவிருப்பதாகவும் அதன்படி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 7,000 கோயில்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாகவும் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. 

பிப்ரவரி பத்தாம் தேதியன்று மக்களவையில் பேசிய பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங், இந்தியத் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.

தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் 3,691 நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 745 இடங்கள் இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ளன. இந்த நிலையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கிய நினைவுச் சின்னங்களை இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) கீழ் கொண்டுவரக் கருதியிருப்பதாகவும் தற்போது ஏஎஸ்ஐயின் கீழ் உள்ள சில நினைவுச் சின்னங்களை மாநிலங்களுக்கு அளித்துவிட முடிவெடுத்திருப்பதாகவும் இது தொடர்பாக மாநிலங்களின் கலாச்சாரத் துறை அமைச்சர்களுடன் கூட்டங்கள் நடத்தப்படவிருப்பதாகவும் பிரஹலாத் சிங் தெரிவித்தார்.

இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையை பத்தாயிரமாக உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் 7,000க்கும் மேற்பட்ட கோவில்கள் நூறாண்டுகளுக்கு மேல் பழமையானவை என்றும் பிரஹலாத் தெரிவித்தார்.

தமிழகக் கோவில்களை கையகப்படுத்துகிறதா இந்திய தொல்லியல் துறை?

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இது தொடர்பாக கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். 

"தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து - பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை எடுக்க முயன்று  தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக - அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டது. ஏன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கூட கைப்பற்ற முயன்று - அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிட்டது.  தமிழைப் புறக்கணித்து - இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும், நினைவுச் சின்னங்களிலும் "தாலாட்டு"பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து - இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட விரும்புகிறது" என மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். 

சித்தரிப்புக்காக Image caption சித்தரிப்புக்காக

"தமிழகத்தில் 100 வருடங்களுக்கு மேல் தொன்மைவாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன"என்று மத்திய அமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் சுட்டிக்காட்டியிருப்பது - தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக் கொண்டு - தமிழகத்திற்கே உரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம். தமிழ்நாட்டின் "பரம்பரை எதிரிகள்" தமிழகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோயில்களைப் பறித்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்" எனவும் தெரிவித்திருக்கும் ஸ்டாலின்,  தமிழக மக்களின் உணர்வை மீறி மத்திய அரசு செயல்பட்டால், அதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்துமென்றும் கூறியிருக்கிறார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தொல்லியல் துறையின் இந்தச் செயல், கோயில்களை மூடுவதற்கு ஒப்பானது எனக் கூறியிருக்கிறார். 

தமிழகக் கோவில்களை கையகப்படுத்துகிறதா இந்திய தொல்லியல் துறை?படத்தின் காப்புரிமை Pmk

"வழிபாட்டில் உள்ள கோயில்களை மத்திய தொல்லியல்துறையிடம் ஒப்படைப்பதென்பது அக்கோயிலை  மூடுவதற்கு ஒப்பானதாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்   பொதுமக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சென்று வழிபாடு நடத்த முடியும்; கோயில்களில் திருப்பணி செய்வது என்றாலும், பக்தர்களின் வசதிக்காக ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றாலும் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக செய்ய முடியும். ஆனால், கோயில் நிர்வாகம் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டது என்றால், தில்லி வரை சென்று அனுமதி வாங்கித்தான் செய்ய முடியும்" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியத் தொல்லியல் துறை தனது 1958 ஆண்டு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தினால், அதில் எதிர்ப்புத் தெரிவிக்க ஏதுமில்லை என்கிறார் அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் வருகைதரு பேராசிரியரான சு. ராஜவேலு. 

"ஏஎஸ்ஐயின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள் சிறப்பாக பராமரிக்கப்படும். மேலும், கட்டுமானங்களை மாற்ற முடியாது. சிதைக்க முடியாது. 100 மீட்டருக்குள் எந்தக் கட்டடத்தையும் கட்ட முடியாது. தஞ்சாவூர் பெரிய கோவில் தொல்லியல் துறையின் கீழ்தான் உள்ளது. ஆனால், வழிபாடு, கணக்கு வழக்குகளை இந்து சமய அறநிலையத் துறைதான் பார்த்துக்கொள்கிறது. வழிபாட்டில் பிரச்சனை வரவில்லையே?" என்கிறார் அவர்.

"புதுக்கோட்டையில் 90 சதவீத கோவில்கள் ஏஎஸ்ஐயின் கீழ்தான் உள்ளன. சமஸ்தானத்திடம் பராமரிக்க நிதி இல்லாததால் ஏஎஸ்ஐயிடம் கொடுத்துவிட்டார்கள். மத்திய தொல்லியல் துறையிடம் கொடுப்பது ஒருவகையில் நல்லது என்றுதான் சொல்வேன். காரணம், கோயில்களின் பழமை பாதுகாக்கப்படும்" என்கிறார் அறநிலையத் துறையின் முன்னாள் அதிகாரியான முத்துபழனி உடையவன்.

திருப்பணியின்போது, நாகப்பட்டனம் திருவிடைவாய் கோவிலில் இருந்த ஞானசம்பந்தரின் பாடல்கள் இடம்பெற்றிருந்த கல்வெட்டுகள் முழுமையாக சிதைக்கப்பட்டதை உதாரணமாக அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், இந்திய தொல்லியல் துறை தமிழகம் தொடர்பான விஷயங்களில் காட்டம் சுணக்கத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். 

"தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் 70 சதவீத கல்வெட்டுகளை இந்தியத் தொல்லியல் துறை படியெடுத்துவிட்டது. ஆனால், அவை இன்னும் பதிப்பிக்கப்படவில்லை. இதுபோல பிரச்சனைகள் இருக்கின்றன" என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ்  38,652 திருக்கோயில்கள் உள்ளன. இதில் 7,000 திருக்கோயில்கள் நல்ல வருவாய் உள்ள, பாடல் பெற்ற கோயில்கள்.  மீதமுள்ள கோயில்கள் சிறிய கோயில்கள். இந்த சிறிய கோயில்கள், பிற கோயில்களில் இருந்து கிடைக்கும் வருவாயிலிருந்தும் அரசின் உதவியுடனும் பராமரிக்கப்பட்டுவருகின்றன. 

இந்த நிலையில், 7,000 பழைய கோவில்களை ஏஎஸ்ஐயின் கீழ் கொண்டுவர நினைப்பதை அறநிலையத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையாக பார்க்கின்றனர். 

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களை சிறப்பாகவே புதுப்பித்து பாதுகாத்து வருவதாகச் சொல்லும் அவர்கள்,  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் ஆகியவற்றின் சிறப்பான பராமரிப்பிற்காக மத்திய அரசு, யுனெஸ்கோ விருதுகளைப் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்தியத் தொல்லியல் துறை கையகப்படுத்திவிட்டாலே, சிறப்பான பராமரிப்பு கிடைக்கும் என்பதில்லை என்கிறார்கள் அவர்கள். உதாரணமாக, மதுரை திருப்பரங்குன்றம் செல்பவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முருகன் கோயிலையும் அருகிலேயே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் சமண கோயிலையும் பார்த்தாலே வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் அவர்கள். 

தவிர, கோவில்களின் பராமரிப்புப் பணியில் வட மாநிலத்தினரே ஈடுபடுத்தப்பட்டு, அவர்களுக்கே வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற அச்சமும் இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியத் தொல்லியல் துறை பாராமுகத்துடனேயே நடந்துவருவதாகவும் அதற்கு உதாரணமாக, சென்னையைத் தவிர வேறு எங்குமே இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் இல்லாததையும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கைகளை முறையாக வெளியிடாததையும் சுட்டிக்காட்டுகின்றனர். 

இது தவிர, மத்திய அமைச்சரின் பதிலில் சில பகுதிகள் தெளிவில்லாமல் உள்ளன. ஏற்கனவே இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 3,700 இடங்கள் உள்ள நிலையில், அந்த எண்ணிக்கை 10,000ஆக உயர்த்தப்படும்போது இந்தியா முழுவதிலும் நினைவுச் சின்னங்கள் தேர்வுசெய்யப்பட்டு, ஏஎஸ்ஐயின் கீழ் கொண்டுவரப்படலாம். ஒட்டுமொத்தமாக ஒரு மாநிலத்திலிருந்தே 7,000 நினைவுச் சின்னங்களை கையகப்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வியும் இருக்கிறது.

இது தவிர, ஏஎஸ்ஐயின் கீழ் இந்தக் கோயில்கள் செல்லும்போது பராமரிப்பை மட்டுமல்லாது, கோவிலின் நிர்வாகத்தையும் மத்திய அரசு கையகப்படுத்த முயற்சிக்கலாமோ என்ற அச்சமும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் உள்ளது.

இது தொடர்பாக ஆட்சித் தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரத் துறை, தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜனிடம் கேட்டபோது, "எங்கள் வசம் பராமரிப்பில்லாத, வழிபாடுகள் இல்லாத கோவில்கள்தான் உள்ளன. 7,000 கோவில்கள் எனும்போது அது குறித்து அறநிலையத் துறை அமைச்சர்தான் கூற வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக, அறநிலையத் துறை அமைச்சரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. 

https://www.bbc.com/tamil/india-51732035

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.