Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்தச் செலவில் சூனியம் செய்யலாமா?

Featured Replies

‘கோவிட் 19’ கொரோனா வைரஸின் அச்சம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரட்சி என்பன தற்போது மக்களை சோதனைக்குள் தள்ளியிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், எட்டாவது பாராளுமன்றம் கடந்த 2ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட்டு 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

இதன் பிரகாரம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தவுள்ளன. 9ஆவது பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்யவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

பதிவு செய்யப்பட்டுள்ள 70 அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக புதிதாகப் பல அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைந்துள்ளன. இந்நிலையில், தென்னிலங்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அவற்றுடன் 10க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு உருவாகியுள்ளது. இந்தக் கூட்டமைப்பு தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்படுகிறது.

ddd.jpg

இந்தச் சந்தர்ப்பத்தில், ஸ்ரீலங்கா பொது ஜன சுதந்திரப் பெரமுனவுக்குச் சவாலாக, கட்சி உட்பூசலுக்கு மத்தியிலும் 10 கட்சிகள், 18 தொழிற்சங்கங்கள், 20 அமைப்புக்களுடன் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த பாராளுமன்றத்தில் பலமிக்க எதிர்க்கட்சியாக விளங்குவதற்கான வியூகத்தின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி தேசிய சக்தி என்ற அமைப்பாக தேர்தலில் வேட்பாளர்களைக் களமிறக்கவுள்ளன. தென்னிலங்கையில் உருவாகியுள்ள கூட்டமைப்புக்களில் சிறுபான்மைக் கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.

இவ்வாறு தென்னிலங்கை அரசியல் கள நிலவரம் காணப்படுகின்றவேளை, மக்களின் விருப்பு வெறுப்புக்களைக் கருத்திற்கொள்ளாது மலையகம் உட்பட வடக்கு–கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் இணைந்து பல கூட்டமைப்புக்களை உருவாக்கி தேர்தலில் களமிறங்கவுள்ள சூழலில், பதிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தும் பேணிய நிலையை காண்பித்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள நிலையில், தேசிய காங்கிரஸ் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்புடன் இணைந்துள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

இருப்பினும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுமா அல்லது தனி வழியில் தேர்தலில் களமிறங்கி பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்புடன் இணைந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

ஏனெனில், நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பது பொதுஜன பெரமுனவின் ஒட்டுமொத்த வாக்கு விகிதாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமென அக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டதான செய்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியிருப்பதே இந்தச் சந்தேகங்களுக்குக் காரணமென சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான், எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து களமிறங்குவதன் மூலம் அதிகப்படியான ஆசனங்களைப் பெற முடியும் என்ற கருத்தையும், அதற்கான அழைப்புக்களையும், முயற்சிகளையும் முஸ்லிம் அரசியல் பரப்பில் அவதானிக்க முடிகிறது. தனித்து களமிறங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஒன்றிணைந்து ஓரணியாகப் போட்டியிட வேண்டும் என்ற அழைப்பை அனைத்து முஸ்லிம் அரசியல கட்சித் தலைமைகளுக்கும் விடுத்துள்ளதாக அறிவித்துள்ளதையும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நிலையில், தேசிய அரசியல் பரப்பில் முஸ்லிம் சமூகத்தின் மத, கலை, கலாசார விடயங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வருகின்ற பிரசாரங்கள் முஸ்லிம்களின் இருப்பு மீதான சந்தேகத்தை அதிகரிப்பதாகவே அமைகிறது. இதனால், முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அரசியலில் பலம் பெற வேண்டும். அரசியலில் பலம் பெறுவதற்கு தேர்தலில் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதில் அக்கறை கொள்வது அவசியமெனக் கூறப்படுகிறது.

வாக்குப் பலமும்உரிமைகளின் பாதுகாப்பும் தேர்தல் நாட்கள் மக்களின் மனசாட்சியைப் பரிசோதிக்கும் பரீட்சைத்தளங்களாக அமைகிறது. ஒரு மனிதனின் மன சாட்சியே அவனுக்கு நீதிபதி. அத்தகைய மனசாட்சியின் அடிப்படையிலேயே நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் அவரவர் விரும்பும் வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், கடந்த ஓரிரு தசாப்பதங்களாக தேர்தல் காலங்களில் வாக்காளர்களின் வாக்குரிமை விலை பேசப்பட்டிருக்கிறது. அத்துடன், இனவாதத்திற்கும் பிரதேச வாதத்திற்கும் வாக்குரிமை துணைபோயிருக்கிறது. இந்நிலைமைகள் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள 9ஆவது பாராளுமன்றத் தோ்தலிலும் காணப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் அவதானிக்க முடியும்.

வாக்குரிமை குறித்து பல்வேறு வரை விலக்கணம் காணப்பட்டாலும் வாக்களிக்க தகைமை பெற்ற ஒவ்வொரு தேசப் பிரஜையும் தாம் விரும்பிய கட்சி அல்லது வேட்பாளரை பொது மற்றும் தேர்தல்களில் தெரிவு செய்வதற்கு கிடைக்கும் உரிமை வாக்குரிமையாகக் கருதப்படுகிறது. பொதுவாக வாக்குரிமை வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவதை ஒட்டியே வரையறுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட அரசியல் தீர்வுகளையும், முனைப்புக்களையும் முன்னிறுத்தி நடத்தப்படும் பொது வாக்கெடுப்புக்களுக்கும் பொருந்தும் எனவும் கூறப்படுகிறது. வாக்குரிமைக்கான தகைமைகளை அரசு அல்லது அரசியலமைப்பு வரையறை செய்கிறது என்பதும் கவனத்திற்கொள்ளக் கூடியதாகும்.

இச்சந்தர்ப்பத்தில், எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களில் இந்நாட்டில் ஏறக்குயை 30 வீதமாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர், மலாயர் என்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் வாக்குகள் பலம் பெறுமா? அல்லது சிதறடிக்கப்படுமா? அல்லது பாராளுமன்றப் பெரும்பான்மை பலத்தை ஏதாவதொரு கட்சிக்கு வழங்கும் சக்தியாக அமையுமா என்ற கேள்வியும் எழுகிறது. சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குப்பலம் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றபோதுதான் சிறுபான்மையின மக்களின் உரிமையையும் இருப்பையும் பாதுகாக்க முடியும்.

<strong>தேர்தலும் அதிகாரமும்<br /></strong>இலங்கையின் ஆட்சி, அதிகார சபைகளின் வரலாற்றை சற்றுப் பின்நோக்கிப் பார்ப்போமேயானால், 1833ஆம் ஆண்டுகளில் நிறைவேற்று சபை என்றும் 1931ஆம் ஆண்டு இலங்கை ஆட்சி மன்ற சபை என்றும் 1947இல் செனட்சபையாகவும் பின்னர் 1971ஆம் ஆண்டு காலத்தில் தேசிய ஆட்சிமன்ற அசம்பிளி எனவும் அழைக்கப்பட்டு வந்த மக்கள் மன்றமானது 1977ஆம் ஆண்டு கொண்டுவரபட்ட இலங்கை ஜனநாயக சோலிஷக் குடியரசின் அரசியலமைப்புக்கமைய பாராளுமன்ற மென மாற்றப்பட்டது.

தற்போது ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையின் தியவன்ன ஓயாவின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்றம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் வேண்டுகோளுக்கு இணங்க நிர்மாணிக்கப்பட்டு 1982ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் திறக்கப்பட்டது. புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்டுஅதன் முதலாவது அமர்வுக்கான பாராளுமன்றத் தேர்தல் 1989ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் 1994, 2000, 2001, 2004, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளிலும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளது

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் முதல் அதற்குப் பிற்பட்ட, இந்நாள் வரை மக்கள் பிரதிநிதிகளை மக்கள் மன்றுக்கு அனுப்புவதற்கான 3 தெரிவு முறைமை நமது நாட்டில் பேணப்பட்டிருக்கிறது. அதில் 1910ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டு வரை இனவாரிப் பிரதிநிதித்துவ முறைமையும், 1931ஆம் ஆண்டிலிருந்து 1978ஆம் ஆண்டு காலம் வரை பிரதேசவாரி தொகுதி ரீதியான பிரதிநிதித்துவ தெரிவு முறைமையும் 1978ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்காக விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுப் பின்னணியில் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற வுள்ள 9ஆவது பராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களைப் பெறும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் முஸ்லிம் அரசியல் கட்சிகள், சாணக்கியத்துடன் பாராளுமன்ற தேர்தலை கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் வாக்காளர்களும் சொந்தச் செலவில் சூனியம் செய்ததாக அமையாது தமது வாக்குகளை நிதனமாகவும் பலமிக்கதாக அமையக் கூடியவாறும், சரியானவர்களை முறையாகத் தெரிவு செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், இந்தப் பாராளுமன்றத் தேர்தல் அரசியல் பலத்துக்கான களமாக அமையப் போகிறது என்பது யதார்த்தமாகும்.

ஒரு ஜனநாயகத் தேசமொன்றின் முதுகெலும்பாக விளங்குவது நீதி மன்றம், சட்டவாக்கம் (பாராளுமன்றம்), நிர்வாகத்துறை மற்றும் ஊடகம் ஆகியவையாகும். இவ்வாறான ஜனநாயகக் கூறுகள் அர்த்தமாக்கப்படும் தேசமொன்றிலிருந்து ஒரு பிரக்ஞையடையும் நன்மைகளில் மிக முக்கியமானது மனித உரிமையாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெற வேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் மனித உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான விட்டுக்கொடுக்க முடியாத, மறுக்க இயலாத உரிமைகளாகக் கருதப்படுகின்ற உரிமைகளுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் அடிப்படை உரிமைகள் மனித சுதந்திரமாக, சுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை. நுகர்வுச் சுதந்தரம், பண்பாட்டு உரிமை, உணவு உரிமை, உடை உரிமை கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. பொதுவாக மனித உரிமை என்பது அடுத்தவர்களை எந்தவொரு வகையிலும் பாதிக்காத வகையில் தனது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்படும் அனுமதியே மனித உரிமையாகும். இந்த அனுமதியை சட்டமாக்கும் இடமே பாரளுமன்றம்.

ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான வாழும் காலத்தில் அவன் மேற்கொள்ளும் அத்தனை செயற்பாடுகளுக்கும் உரிமை உள்ள போதிலும் அவ்வுரிமைகள் மற்றவர்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருப்பதும் அவசியம். அவை உண்பவையாக இருந்தாலும்,குடிப்பவையாக இருந்தாலும், உடுப்பவையாக இருந்தாலும் சரியே.

ஆனால், இலங்கை வாழ் முஸ்லிம்கள் மேற்படி உரிமைகளுடன் வாழ்வியலை முன்கொண்டு செல்வதற்கான இடையூறுகளை அடிக்கடி அனுபவிக்க நேரிடுவதைக் காணமுடிகிறது. குறிப்பாக முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் இந்த இடையூறுகள் இடம்பெற்று வருகின்றன. அரசியல் யாப்பின் பிரகாரம் இந்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு இனமும் ஏனைய இனங்களின் உரிமைகளை மீறாத வகையில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை அனுபவிப்பதற்கான தடைகள் இல்லாமலில்லை. இத்தடைகளைக் கையாளுவதற்கு அரசியல் அதிகாரம் அவசிமாகிறது. இந்த அதிகாரத்தை பாராளுமன்றத்தினூடாக அடைய முடியும். அதனால்தான் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த ஒன்றிணைதல் என்பது பெரும்பான்மை தேசிய கட்சிகளுக்கோ அல்லது தற்போதைய அரசாங்கத்திற்கோ பாதகமான சூழலை ஏற்படுத்துவதாக உணராத வகையில் வடக்கு, கிழக்கிற்கு வெளியே இணக்க அரசியல் ஊடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கும், வடக்கு&ndash;கிழக்கில் தனித்து நின்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவதற்குமான சாணக்கியமும், நிதானமுமிக்க வியூகங்களாக அமையப்பெறுவது முஸ்லிம் அரசியல் பயணத்திற்கு ஆரோக்கியமாக அமையும் எனவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

<strong>நெருக்குவாரங்களும் நிதானமும் அதிக ஆசனங்ளைப் பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்நோக்க வேண்டும் என்ற அழைப்புக்கான பிரதான காரணமாக இருப்பது தனித்துவ இனமான முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் பயணம் சக்தி மிக்கதாக முன்நகர்த்திச் செல்லப்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளின் குரல்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஒன்றாக ஒலிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்தான்.

அரசியல், சமூக, பொருளாதார ரீதியிலான நெருக்குவாரங்களிலிருந்து முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டு இந்நாட்டில் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டும். அவ்வாறான வாழ்வுக்கான உரிமையை அரசியல் அதிகாரங்களினூடாக உரியவர்களிடமிருந்து பெற்றுக் கொடுப் பதை இலக்காகக் கொண்டே முஸ்லிம் சமூகம்சார் அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. இந்நாட்டில் இரண்டாம் நிலைச் சிறுபான்மைச் சமூகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வாழும் சமூகத்தின் மத்தியிலுள்ள பலருக்கு சமூகம் சார்ந்த விடயங்களில் இறந்த காலம் எதைக் கற்றுத் தந்தது, நிகழ்காலம் எதைக் கற்றுத்தந்து கொண்டிருக்கிறது, எதிர்காலம் எதைக் கற்றுத் தரப்போகிறது, என்பது குறித்தான மீள்வாசிப்பு அவசியமாகவுள்ளது. ஆனால், அந்த அவசியம் உணரப்படாமலேயே தொடர்வதைக் காண முடிகிறது.

இந்த நிலையில், சமகால இனவாதச் சூழல் தொடர்பில் சிந்திப்பதும் சாணக்கியமாகச் செயற்பட்டு இனவாதத்தின் பரப்புரைகளையும் செயற்பாடுகளையும் வெற்றி கொள்ளவதும் அவசியமாகவுள்ளது. ஏனெனில், இந்நாடு எல்லோருக்கும் சொந்தமானது. நாட்டின் அரசியலமைப்பானது இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களும், சமூகங்களும் தங்களுக்குரிய உரிமைகளோடு வாழ முடியும் என்றே கூறியிருக்கிறது. அதனால், சந்ததி சந்ததியாக இந்நாட்டில் வாழவிருக்கும் முஸ்லிம்கள் பொருளாதாரத்தை மாத்திரமின்றி அத்தனை சமூகக் கூறுகளையும் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் வாழ்வுப் பயணத்தில் தடங்களாகவுள்ள இனவாதச் சூழலை சாணக்கியத்துடன் வெற்றிகொள்வதாயின் முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புக்கள், உலமாப் பெருந்தகைகள், புத்திஜீவிகள் என அத்தனை தரப்புக்களும் ஒரே கோட்டில் பயணிப்பது காலத்தின் அவசியமாகும்.

கட்சி அரசியல் மற்றும் பதவிகளுக்காகவும், பிரதேச அதிகாரங்களுக்காகவும், கொள்கை கோட்பாடுகளுக்காகவும் பிரிந்து நின்று முஸ்லிம் சகோதரத்துவம் காட்டிக்கொடுக்கப்படுமாயின், பிளவுகள் தொடருமாயின் எதிர்கால சந்ததியினர் பாரியளவில் விலைகொடுக்க வேண்டி ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. பொருளாதார அழிவுகளை மாத்திரமின்றி பல நெருக்கடிகளை எதிர்கால சந்திகள் எதிர்நோக்க வேண்டியும் ஏற்படும். அந்த நெருக்கடிகளைத் தற்போது வெளி வருகின்ற கருத்துக்களும் அறிக்கைகளும், பிரேரணைகளும், முன்மொழிவுகளும் புடம் போடுகின்றன.

ஆதலால், முஸ்லிம்கள் தொடர்பில் பிற சமூகத்தினர் கொண்டுள்ள நம்பிக்கையீனம் கலையப்பட வேண்டும். அதற்காக அத்தனை சாதகமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். அத்துடன், செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, மாற்றுச் சமூகங்களினால் முன்வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுக்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் புரிகின்ற குற்றங்களுக்கு விளக்கில் விழும் வண்டுகளாக செயற்படாமல், சிந்தித்து நிதானமாகச் செயற்பட்டு சகவாழ்வுக்கான வழிகளைக் கூர்மைப்படுத்தி கடும்போக்குவாதிகள் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை இல்லாமல் செய்வதும் அவசியமாகும். அத்துடன், பரம்பரை பரம்பரையாக இந்நாட்டில் வாழப்போகும் எதிர்கால சந்ததியினரின் இருப்பும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. ஆதலால், இவற்றிற் கான முயற்சிகள் சாணக்கியமாக முன் நகர்த்தப்பட்டு சாதிக்கப்பட்டால் மாத் திரமே கடும்போக்குவாதச் சூழலிலிருந்து எதிர்கால சமூகம் நிம்மதி பெறும்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் ஏறக்குறைய 30 வீதமானவர்கள் சிறு பான்மைச் சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களுமாவர். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலும் அத்துடன் நாட்டின் ஏனைய பிராந்தியங்களிலும் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் பல்வேறு நீண்டகால, சமகால மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுடன் அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நாட்டை மாறிமாறி ஆண்ட அரசாங்கங்கள் சிறு பான்மைச் சமூகங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதியளித்தாலும் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. குறிப்பாக இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவில்லை. சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகள் மீதான ஆதிக்கம் குறையவில்லை.

இனப்பாகுபாடுகளைக் கடந்து இந்த நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களும் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் தங்களது சமூக சமய அரசியல், கல்வி, காலாசார தொழில், பொருளாதார, மொழிசார்ந்த உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்க வழிவிடப்பட வேண்டும். இந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் தற்கால மற்றும் எதிர்கால இருப்பு கேள் விக்குட்படுத்தப்படாமல் அதில் சுதந்திரம் பேணப்படுவதற்கும் அரசியல் அதிகாரம் பலமுள்ளதாக அமைவதற்கும் இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென வலி யுறுத்தப்படுவதைக் காண முடிகிறது.

இச்சந்தர்ப்பத்தில், முஸ்லிம் சமூகத்தின் ஏறக்குறைய 16 லட்சம் வாக்குகள் சிதறடிக்கப்படாது ஆளுமையுள்ள பிரதிநிதிகளைப் பராளுமன்றத்திற்குத் தெரிவு செய்வதற்குப் பயன்பட வேண்டும். மாறாக, ஊருக்கொரு எம்.பி.யைப் பெறுவதற்காகவும், தாம் ஆதரிக்கும் கட்சித் தலைமை இணைந்துள்ள கூட்டமைப்பினால் கிடைக்கப்பெறும் நலன்களுக்காகவும் வாக்குகளைச் சிதறடித்து, பிரிவினைக்கு வலுவூட்டி, ஆளுமையும் சமூகப்பற்றும் இல்லாதவர்களைத் தெரிவு செய்வதற்காக தமது சக்திமிக்க வாக்குகளை வாக்காளர்கள் பயன்படுத்துவார்களாயின் அது சொந்தப் பணத்தில் சூனியம் செய்த கதையாகவே அமையுமென்பதைக் காலம் நிச்சயம் கற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

 

 எம்.எம்..ஸமட் -

 

https://www.virakesari.lk/article/77408

Edited by ampanai
Editing Formatting

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.