Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

``ஈழ அகதிகளை இரண்டு விதமான அணுகுமுறைகளில் கையாளுகிறார்கள்!” அகதிகள் ஆய்வாளர் இரவிபாகினி

Featured Replies

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் தற்போதைய நிலை, சர்வதேச நாடுகள் ஈழத் தமிழ் அகதிகளைக் கையாளும் விதம், சி.ஏ.ஏ விவகாரம், முகாம்வாழ் ஈழத் தமிழ் மக்களின் நிலை என அகதிகள் ஆய்வாளர் இரவிபாகினியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

vikatan%2F2020-03%2Ffcd19784-4888-415c-9365-62f3ced2bf05%2F2b8ba9a4_db49_4105_852b_20eeb8deb01c.jpg?rect=0%2C102%2C750%2C422&w=480&auto=format%2Ccompress

இரவிபாகினி ஜெயநாதன்.

இலண்டனில் வசித்துவரும் இரவிபாகினி ஜெயநாதன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இனப்படுகொலை நடந்த காலகட்டத்தில் தமிழகத்துக்குத் தஞ்சம் கோரி வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் இரவிபாகினியின் குடும்பமும் ஒன்று. தன் பள்ளிப்படிப்பையும் இளங்கலை பட்டப்படிப்பையும் தமிழகத்தில் முடித்தவர், முதுகலைப் படிப்பை லண்டனில் முடித்திருக்கிறார். ``2009 போரின் முடிவுக்குப் பின்னான ஈழத்தமிழர்களின் தஞ்சக்கோரிக்கைகள் மேலை நாடுகளில் எப்படி அணுகப்படுகிறது'' என்பது குறித்து ஆய்வையும் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமுக்குச் சென்ற தன்னால் ஆன உதவிகளைச் செய்துவருகிறார். பொதுவுடைமை இயக்கம் எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

அவரிடம், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நிலை, சர்வதேச நாடுகள் ஈழத் தமிழ் அகதிகளைக் கையாளும் விதம், சி.ஏ.ஏ விவகாரம், முகாம்வாழ் ஈழத் தமிழ் மக்களின் நிலை எனச் சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த விரிவான பதில்கள் பின்வருமாறு.

``முதலில் சர்வதேசத்திலிருந்தே தொடங்குவோம்... தஞ்சம் கோரி, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் ஈழ அகதிகளை அந்த நாடுகள் எப்படிக் கையாளுகின்றன?"

``இரண்டு விதமான அணுகுமுறைகளைக் கையாளுகிறார்கள். அதை நாம் 2009-க்கு முன் 2009-க்குப் பின் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். போர் நடந்த காலகட்டத்தில் யாராவது தஞ்சம் கோரிச் சென்றால் அவர்களுக்கு எளிதாக அனுமதி கிடைத்தது. ஆனால், 2009-க்குப் பிறகு போர்தான் முடிந்துவிட்டதே பிறகு ஏன் வரவேண்டும் என்கிற எண்ணம் அவர்களின் மத்தியில் உருவாகிவிட்டது. ஈழத்தமிழர்கள் என்றில்லை, உலகம் முழுவதும் அகதிகள் பற்றிய பார்வையும் சமீப காலமாக மாறிவருகிறது. தங்கள் நாடுகளுக்கு அகதிகளாக யார் வந்தாலும் அவர்கள் தங்கள் நாட்டின் வேலைகளைச் சுரண்ட வருகிறார்கள்; வளங்களைச் சுரண்ட வருகிறார்கள், கலாசாரத்தைச் சிதைக்க வருகிறார்கள் என்கிற போக்கை அங்குள்ள அரசியல்வாதிகள் திட்டமிட்டு மக்களிடத்தில் உருவாக்கிவிட்டார்கள். தஞ்சம் கோரி வரும், அகதிகளை மனிதாபிமான முறையில் அணுகுவதை விட்டு, இன, மொழி, மத ரீதியாக அவர்களைப் பிரித்துப் பார்க்கும்போக்கும் அதிகரித்துவிட்டது. அது இத்தனை ஆண்டுகளாக தஞ்சக் கோரிக்கையுடன் வரும் மக்களுக்காக அவர்கள் கடைபிடித்த கொள்கைகளை மாற்றும் அளவுக்குச் சென்றுவிட்டது. இது மிகவும் ஆபத்தான போக்கு. சர்வதேச நாடுகள் தங்களின் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும்."


`ஆனால், இன்னமும் ஈழத்திலிருந்தும் தமிழகத்தில் இருந்தும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்வதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றனவே… அவர்களின் நிலைமை?"

``ஆஸ்திரேலிய, ஐரோப்பிய நாடுகளில் இப்போது என்ன சூழல் நிலவுகிறது என்பது தெரியாமல்தான் புரோக்கர்கள் மூலமாக கப்பலில், விமானத்தில் மற்ற நாடுகளுக்குப் போகிறார்கள். வழியிலேயே சிலர் மாட்டிக்கொள்கிறார்கள். சிலர் அந்த நாடுகளுக்குச் சென்று, தங்கள் தஞ்சம் கோரிக்கையை முன்வைப்பதற்கும் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் ஆளாகுகிறார்கள். முன்பெல்லாம், ஒரு நாட்டுக்குச் சென்று என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என அந்த நாட்டு ஹோம் ஆபீஸில் ஒருவர் சொன்னால், அவரை வெளியே போ எனச் சொல்ல முடியாது. ஆவணங்கள் இல்லாத நிலையிலும் (பாஸ்போர்ட், விசா) ஒருவரின் தஞ்சக்கோரிக்கையை அரசுகளால் அவ்வளவு எளிதாக நிராகரித்துவிட முடியாது. அகதிக்கோரிக்கைகள் கையாளப்படவேண்டிய வரைமுறைகள், செயல்வடிவங்கள், தஞ்சக்கோரிக்கையின் நியாயமான காரணங்கள்; கோரிக்கை வைப்போரின் நாட்டின் இன்றைய மனித உரிமை நிலைகள் என்று பல்வேறு காரணிகளைக் கணக்கில் எடுத்தே ஒருவரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். இவற்றுக்கு அடித்தளம் தஞ்சக் கோரிக்கை வைக்கப்படும் நாடுகள் அகதிகளுக்கான ஐ.நா-வின் சரத்தில் (1951 UNHCR resolution) கையொப்பமிட்டதிலிருந்தே வருகிறது. அதன்படி, அவர்கள் உண்மையிலே அகதியாகத்தான் வந்திருக்கிறார்களா என்கிற சோதனை செய்வார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும். அகதிதான் என உறுதி செய்யப்பட்டால் ஐந்தாண்டுகள் தங்கிக்கொள்வதற்கான விசா கிடைக்கும். அதற்குப் பிறகு குடியுரிமை கோரலாம். படிப்பதற்காக தொழில் ரீதியாகச் சட்டப்படி அங்கு வசித்தவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தரக் குடியுரிமை கோரலாம். ஆனால் அது அகதி கோரிக்கையோடு ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டது. அதேபோல, அகதியாகப் போய், அங்கு குழந்தைகள் பிறந்து, அவர்கள் ஏழு ஆண்டுகள் அங்கு வாழ்ந்துவிட்டால் பெற்றோரும் குடியுரிமை கோர முடியும்.

இப்படியாக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடியும். ஆனால், இப்போதெல்லாம், தஞ்சக் கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்பாகவே அதாவது நாட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். கப்பலிலேயே அடித்துத் துரத்துவது, நாட்டுக்குள் வர முடியாத அளவுக்கு சுவர் எழுப்புவது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள். தவிர கப்பலில் போவது எல்லாம் மிகவும் ஆபத்து. என்ன நடக்கும் என்பதே யாருக்கும் தெரியாது. பல குடும்பங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஆனால், பலர் இன்னும் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். பலர் திருப்பி சொந்த நாட்டுக்கே அனுப்பப்படுகிறார்கள்


``போர் ஓய்ந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதே இன்னும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறதா?"

``பொருளாதார ரீதியாக மிகவும் சிக்கலான சூழலில்தான் இன்னும் ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு வேலைவாய்ப்புகள் மிகக்குறைவு. மீன்பிடித் தொழில், கட்டடத் தொழில் ஆகியவற்றுக்குத்தான் செல்ல முடியும். தமிழகத்தில் இருப்பது போல பல வகைப்பட்ட வேலைவாய்ப்புகள் அங்கு இல்லை. தவிர, நாற்பதாண்டு காலம் போரைச் சந்தித்த நிலம் அது. உள்நாட்டிலேயே இடப்பெயர்வுக்கு ஆட்பட்ட மக்கள் அதிகம். அவர்கள் கைகளில் நிலங்களும் இல்லை. இலங்கை இறக்குமதியை மற்றுமே நம்பி வாழ்கிற நாடு. இங்கு விற்பதை விட எல்லாமே இரண்டு மடங்கு விலை அதிகம். அதேநேரம் அதற்கேற்ப ஊதியம் அங்கு கிடைப்பதில்லை. அதனால்தான் வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. முன்பு, தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பிற நாடுகளுக்குச் சென்ற அம்மக்கள், தற்போது பொருளாதார தேவைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அது அவர்களின் ஆடம்பர வாழ்கைக்காகவா என்றால் அப்படிப் போகிறவர்கள் மிகவும் குறைவு. தங்களின் அடிப்படை வாழ்வுக்காகப் போகும் மக்கள்தான் அதிகம். அதற்குக் கூட இலங்கையில் வழியில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தவிர இந்தியாவில் முகாம்களில் தங்கியிருக்கும் பலருக்கும்கூட அந்த ஆசை இருக்கிறது. அவர்களிடம் படிப்பதற்காகச் செல்லுங்கள் என அறிவுறுத்தி வருகிறேன்."


``போருக்குப் பிறகு, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் வாழ்வாதாரத்துக்காக எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லையா?"

``ஒட்டுமொத்தமாக இல்லை என்று சொல்லமுடியாது. ஐந்து லட்சம் வீட்டுத் திட்டம், இரண்டு லட்சம் வீட்டுத் திட்டம், கோழி வளர்ப்புக்கு உதவி போன்ற சில புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகச் சந்தையாக, ஜியோ பாலிடிக்ஸில் இலங்கை முக்கியமான இடமாக இருப்பதால், அமெரிக்க, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய விரும்புகின்றன. அப்படி அந்த நாடுகள் உருவாக்கும் நிறுவனங்களைச் சுற்றி அப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் அனைத்துப் பிரதேசங்களுக்கும் அந்த உதவிகள் சரியாகக் கிடைப்பதில்லை. வடழக்கில் எடுத்துக்கொண்டால் முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகள் முழுவதுமாகப் புறக்கணிக்கப்படுகின்றன. கொழும்புக்கும் அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளிலேயே முதலீடுகள் அதிகமாகக் குவிகின்றன. தமிழர்கள் என்றில்லை சிங்கள மக்களும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில்தான் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை தமிழர் பகுதிகளில் குடியமர்த்தி மேலும் சிக்கலை உருவாக்குகிறார்கள். அதனால்தான் பலர் வெளிநாடுகளை நோக்கிப் போகிறார்கள். போருக்குப் பிறகு அந்த நாட்டின் வளர்ச்சியை எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்து அங்கே சரியான திட்டமிடல் இல்லை. இறக்குமதியை மட்டுமே அந்த நாடு நம்பியிருக்கிறது. தமிழர் – சிங்களவர் இனப்பிரச்னை தூண்டிவிட்டு அங்குள்ள அரசியல்வாதிகள் இது போன்ற பிரச்னைகளிலிருந்து தப்பித்து வருகிறார்கள். கொரோனா நடவடிக்கைகளில்கூட தமிழர்களிடம் இனப்பாகுபாடு காட்டி வருகிறார்கள்."

`இந்தியாவில் முகாம்களில் வாழும் ஈழத் தமிழ் மக்களின் நிலை எப்படி இருக்கிறது?"

``மற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகளைக் காட்டிலும், ஈழத் தமிழ் அகதிகளுக்கு கொஞ்சம் உரிமைகளைக் கொடுத்திருக்கிறது இந்திய அரசு. ஆனால், இந்தியா சர்வதேச அகதிகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடாததால், ஈழத் தமிழர்களை சட்டப்படி அகதிகளாக ஏற்கவில்லை. சட்டவிரோதக் குடியேறிகளாகத்தான் கருதுகிறது. இருநாடுகளுக்கிடையே போடப்பட்டுள்ள சில ஒப்பந்தங்களின் அடிப்படையில் சில உதவிகளைச் செய்கிறது. அதேவேளை திபெத்திய அகதிகளுக்கும் பாஸ்போர்ட் உரிமை எல்லாம் உண்டு. ஆனால், ஈழ அகதிகளுக்கு அந்த உரிமைகள் கிடையாது. இந்தியாவில் அகதிகள் குறித்து முழுமையான புரிதல் இல்லை. அரசியல்வாதிகளும் முகாம்களில் வாழும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

ஈழத்திலிருந்து சின்னஞ்சிறுமியாக, தமிழகத்துக்கு வந்தபோது முகாம் சூழல் எப்படி இருந்ததோ அதே நிலைதான் இப்போதும் இருக்கிறது. எந்தவிதமான முன்னேற்றமும் அடையவில்லை. சொல்லப்போனால் முன்பை விட இப்போது நிலைமை மோசமாகியிருக்கிறது.

இளைஞர்கள் பலர் குடிப்பழக்கத்தால், பாலியல் சிக்கல்களால் சீரழிந்து போய்க்கிடக்கிறார்கள். திருமண உறவுகளில் பல்வேறு சிக்கல்கள் உருவாகியிருக்கிறது. முகாம் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்ட சமூகமாக அவர்களை மாற்றி வைத்திருக்கிறது. காரணம், நன்றாகப் படித்தாலும் அவர்களால் அரசு வேலைக்கு, தனியார் வேலைக்குப் போக முடியாது. பெயின்ட் வேலைக்கோ, கட்டட வேலைக்கோதான் போகமுடியும். பெண்கள் பலர் பள்ளிப்படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். சாப்பாடு, வேலை, திருமணம் , குழந்தைகள் என அவர்களின் வாழ்க்கை மிகவும் சுருங்கிப் போய்விட்டது. அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியவில்லை. ஒரு சிலருக்குச் சட்டப்படியான ஆவணங்கள் இல்லாததால் திருமணங்கள் பதிவு செய்யமுடியாத சூழல்கள் இருக்கின்றன. தவிர சி.ஏ.ஏ போன்ற சட்டங்கள் வரும்போது, தங்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. பெண் சிக்கல்கள், குடியால் ஏற்படும் பிரச்னைகளை கியூ பிராஞ்ச் அதிகாரிகள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், ஒரு நூலகம் அமைத்தாலோ ஜிம் அமைத்தாலோ பல நெருக்கடிகளுக்கு ஆளாவார்கள். அவர்கள் எந்தவித அரசியல் தெளிவு பெற்றுவிடக்கூடாது என்பதில் முகாம்களைப் பார்த்துக்கொள்ளும் அதிகாரிகள் தெளிவாக இருக்கிறார்கள்."

 

``அரசு வேலைகளுக்குச் செல்ல முடியாது சரி… தனியார் நிறுவன வேலைகளுக்கும் போக முடியாதா?"

``முகாம்களில் வாழும் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இங்கே எந்த நிறுவனமும் தயாராக இல்லை. நானே நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இன்னும் அதே நிலைதான் நீடிக்கிறது. அதனால், இப்போதெல்லாம் பத்தாவது படித்தவுடனே பிள்ளைகள் பெயின்ட் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். `டிகிரி படித்தாலும் பெயின்ட் அடிக்கத்தான் போகப்போறோம் அத இப்பவே செய்றோம்' என்கிற மனப்போக்கு அங்குள்ள இளைய தலைமுறையிடம் உருவாகிவிட்டது. பள்ளிப்படிப்பைக் கைவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால், இது பற்றியெல்லாம் இந்த அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. ஈழம் பற்றிப் பேசும் அரசியல்வாதிகளும் பேசுவதில்லை. காரணம் முகாம் வாழ் மக்களுக்கு வாக்குகள் கிடையாது. ஒருவேளை வாக்குரிமை இருந்திருந்தால் கண்டு கொண்டிருப்பார்கள். நடிகர் சூர்யாவின் அகரம் அமைப்பு மட்டுமே கல்வி சார்ந்த சில உதவிகளைச் செய்துவருகிறது. அகரம் செய்வதைக் கூட இங்குள்ள அரசியல்வாதிகள் செய்யவில்லை என்பதே உண்மை.


``நாங்கள் முகாம் உள்ளே சென்றால் அங்குள்ள மக்களுக்கு கியூ பிரிவு போலீஸார் தேவையில்லாத நெருக்கடிகள் கொடுக்கிறார்கள். அதற்காகத்தான் செல்வதில்லை’’ என்று சீமான் போன்ற ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்களே?"

``இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இதையே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்கள். வண்ணாரப்பேட்டையில் போராடும் மக்களுக்கு ஆதரவாகச் சென்று பேசினால் கூட அம்மக்களுக்குக் காவல்துறையால் நெருக்கடி வரத்தான் செய்யும் அதற்காகப் போகாமல் இருக்கிறார்களா? ஒரு தடை இருந்தால் அதை ஜனநாயக ரீதியில் உடைப்பதற்கான முயற்சிகளைத்தான் செய்யவேண்டுமே தவிர அதையே காரணமாகச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டே வாழ வேண்டும். முகாம்களில் இருக்கின்ற மக்கள் சட்ட விரோதச் செயல்களில் ஒன்றும் ஈடுபட்டுவிடவில்லையே. அதற்கு ஆதரவாக ஒன்றும் அவர்களைப் பேசச்சொல்லவில்லையே. அவர்களுக்கு ஏதாவது நெருக்கடி வந்தால் கூட, முன்பைப் போல இப்போது இல்லை. பல தகவல் தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. உள்ளே என்ன நடந்தாலும் உடனடியாக வெளியே தகவல் சொல்லமுடியும். ஜனநாயக ரீதியாகப் போராட முடியும். தமிழக முகாம்களில் வாழும் மக்களைப் பற்றிப் பேசாமல் ஈழத்தைப் பற்றிப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. சீமான் மட்டுமல்ல, இதுவரை ஈழத் தமிழர்களுக்காகப் பேசிய தி.மு.க, ம.தி.மு.க, மே 17 உள்ளிட்ட கட்சிகளோ அமைப்புகளோ முகாம்களில் வாழும் மக்களுக்காகப் பேசியதில்லை."

 

``முகாமில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் இந்தியக் குடியுரிமையை விரும்புகிறார்களா…இல்லை இலங்கைக்குச் செல்ல விரும்புகிறார்களா?"

``முன்பு அவர்களுக்கு தாய்நாட்டுக்குச் செல்ல சிறிது விருப்பம் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது யாருக்கும் இல்லை. காரணம் ஈழத்தின் தற்போதையை நிலையை நான் மேலேயே சொல்லியிருக்கிறேன். ஈழத்தை ஒப்பிடும்போது இந்தியா பரவாயில்லை. அதேசமயம், குடியுரிமை அவசியம். இங்குள்ள குடிமக்களுக்குக் கிடைக்கும் அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கும் கிடைக்கவேண்டும். வெளிநாடுகளில் எல்லாம் ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் வாழ்ந்தாலே குடியுரிமை கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், இங்கு முப்பதாண்டுகளுக்கு மேலாக இருந்தும் அது மறுக்கப்படுகிறது. தவிர, பல பிள்ளைகள் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள், அவர்களும் அங்கு போய் வேறு ஒரு வாழ்க்கைச் சூழலில் அடாப்ட் ஆகச் சிரமப்படுவார்கள். முகாம்களில் உள்ள 99 சதவிகித மக்கள் இந்தியக் குடியுரிமையைத்தான் விரும்புகிறார்கள். நாட்டுக்குத் திரும்பிச் செல்ல யாரும் இப்போது விரும்பவில்லை என்பதே உண்மை. வெளியில் வந்து அதைச் சொல்வதற்கான தங்களின் குடியுரிமைக்காகப் போராடுவதற்காக வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. அந்த மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்று அறிய வேண்டும். அவர்களின் விருப்பத்தை தெரிவிக்கிற குறைந்தபட்ச ஜனநாயக உரிமையையாவது இந்த அரசுகள் வழங்க வேண்டும். அதன் படி தீர்வை முன்வைக்க வேண்டும்."


``ஆனால், அங்குள்ள அரசியல்வாதிகள் சூழல் சரியாகிவிட்டதாகச் சொல்கிறார்களே, நாட்டுக்குத் திரும்பி வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறார்களே?"

``சூழல் சரியாகி விட்டது என்பது சுத்தப் பொய். அவர்களே, தேர்தல் நேரத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். எனக் கூக்குரல் எழுப்புகிறார்கள் இப்போது இப்படி மாற்றிப் பேசுகிறார்கள். 120 முகாம்களில் வாழும் 60,000 மக்களுக்கு அங்கே என்ன வேலை வாய்ப்புத் திட்டத்தை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களின் அரசியலுக்காக ஏதாவது பேசிக்கொண்டிருக்கிறார்கள் தவிர மக்கள் நலன் குறித்து அக்கறை இல்லை. கண்டிப்பாக இந்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும். முகாம் எனும் கட்டமைப்பை மாற்ற வேண்டும்.

https://www.vikatan.com/government-and-politics/politics/ravi-bhagini-jayanathan-talks-about-current-state-of-sri-lankan-refugees-in-tamilnadu

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.