Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி

On Apr 1, 2020

லெப்.கேணல் பரிபாலினி

சந்திரசேகரன் சுரனுலதா நல்லூர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:06.07.1973

வீரச்சாவு:01.04.2000

நிகழ்வு:கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு


களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி

%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0அன்றைய நாள், நாம் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறான களநிலைமை அது. எதிரி உசாரடைந்து, எமது நகர்வுகளையே அவதானித்துக்கொண்டிருக்க வேண்டும். நாலா புறமும் கவச வாகனங்களையும், கனரக ஆயுதங்களையும் நிலைப்படுத்திக் காத்துக் கிடந்தவரின் குகைக்குள் புகுந்த எமதணிகளை நோக்கி வாய் பிளந்தன இரும்புக் குழல்கள். எங்கும் நெருப்பு மழை, அந்த அக்கினிக் குழம்புகளுக்கு மத்தியில் இருந்து ஒலித்த அந்தக் குரல் தொலைத் தொடர்புக் கருவியூடாக எல்லோர் செவிகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. நீண்ட நெடுநேரம், அந்தத் தன்னம்பிக்கையான, உறுதியான, தெளிவான குரலை ஒலிபரப்பிக் கொண்டிருந்த தொலைத் தொடர்புச் சாதனம் அமைதியானது.

“பரி… பரி… பரி…”

“பரி… பரி…”

என அனைத்துக் கருவிகளும் அலற அந்தப் பெயருக்குரியவள், அந்தக் குரலுக்குரியவள் அடங்கிப் போனாள்.

1990 காலப்பகுதியில் பயிற்சிப் பாசறைகள் நோக்கி படையெடுத்த பெண்களில் இவளும் ஒருத்தி. எப்போதுமே அமைதியாகக் காணப்படும் இவள் எல்லோராலும் ‘நல்லூர் நோனா’ என அழைக்கப்பட்டவள். மணியடித்தால் சாப்பாட்டிற்கு முன்னின்று, வகுப்புக்குப் பின்நின்று, பயிற்சிக்கு முன்னின்று லெப். கேணல் மாதவியால் புடம் போடப்பட்டு, பரிபாலினியாக வெளிவந்த இவள்; 1992 முற்பகுதி வரை பலாலி, பத்தமேனி, தட்டுவன்கொட்டி என பல முன்னணிக் காவலரண்களிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆகாய கடல்வெளிச் சமர், மின்னல் எனவும் பல சிறு சிறு சண்டைகளிலும் ஒரு போராளியாகவே தடம் பதித்தவள்.

1992 ஆரம்பகாலம், எமது இதயபூமியான மணலாற்றை எதிரியின் ஆக்கிரமிப்புக்களிலிருந்து பாதுகாக்கும் பணியில் பெண் போராளிகளையும் ஈடுபடுத்துவதற்கென புதிய அணியொன்று உருவாக்கப்படுகின்றது. பத்தே பத்துப் போராளிகளுடனும், இருநூற்றைம்பது பயிற்சி எடுக்காத புதிய போராளிகளுடனும் மணலாறு சென்ற அந்த அணி, அவர்களைப் பயிற்றுவித்தே தமது பணியைத் தொடங்க வேண்டும். பொறுப்பாகச் சென்றவருக்கு தன்னுடன் வந்த பத்துப் போராளிகளும் என்ன நிலையில் இருக்கின்றனர் என்பதே தெரியாது. அவர்களில் பரிபாலினியும் ஒருவர்.

இவள் அங்கே பயிற்சிக்கான துணை ஆசிரியராக நியமிக்கப்படுகின்றாள். பயிற்சிக்கான ஒழுங்குகள் செய்து, பயிற்சியும் ஆரம்பமாகி ஆறே ஆறு நாட்கள்.

கொக்குத்தொடுவாய் இராணுவ முகாமிலிருந்து நாயாறு வரை மும்முனைகளில் முன்னேறி கரையோரப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதன் மூலம், தமிழர் தாயகத்தை துண்டாடுவதுடன், வடக்கிலிருந்து கிழக்கிற்கான எமது விநியோகப் பாதையைத் துண்டிப்பதற்காகவும், மூவாயிரம் சிங்களப் படைகள் ‘கஜபார’ கட்டம் ஆறு (ஒப்பரேசன் சிக்கர் கஜபார) என்ற பெயருடன் பெரும் எடுப்பிலான நகர்வை மேற்கொண்ட போது, வழிமறித்து நடந்த சண்டைக்குக் காவும் குழுவாகச் செல்லத் தயாராகின்றனர். எல்லோருக்குமே காடு புதிது, புதிய போராளிகள் வேறு. எவருக்குமே ‘கொம்பாஸ்’ தெரியாது. மூன்று நாட்களில் ‘கொம்பாஸ்’ பயின்று, பரிபாலினியுடன், இன்னுமொரு போராளியுடனும் புதிய போராளிகள் களம் இறங்கினர்.

ஆறு நாட்களே பயிற்சி எடுத்த போராளிகள், காட்டு அனுபவங்களும், சண்டை அனுபவங்களும் குறைந்தவர்கள். சீனத்தயாரிப்பு டாங்கிகளும், கவச வாகனங்களும், பீரங்கிகளும், விமானங்களும், உலங்கவானூர்திகளும், கடல் பீரங்கிப்படகுகளும் குண்டு மழை பொழிய, அந்த அடர்ந்த காடுகளுக்கூடாகவும், திறமையாகத் தனது பணிகளைச் செய்து, ஆண்டாள் என்ற ஒரு புதிய போராளியை இழந்து, அவர்களின் பணிக்கு பரிசாகக் கிடைத்த ஐந்து ஏ.கே.யுடன் ஒரு ஏ.கே.எல்.எம்.ஜீ உடனும் முகாம் திரும்பியது அந்த அணி. பரிபாலினியின் சந்தோசத்திற்கு அளவேயில்லை.

‘பாத்தீங்களா, நாங்கள் சண்டைக்குப் போகாமல் சப்பிளைக்குப் போயே அஞ்சு ஏ.கே.யும்இ ஒரு எல்.எம்.ஜீ.யும் எடுத்திட்டம்’ என்று சொல்லிச் சொல்லி துள்ளித் திரிந்தாள். அன்று ஆறு நாட்களே பயிற்சி எடுத்த அந்தப் போராளிகளின் முதுகெலும்பாக நின்று செயற்பட்டவளே இவள்தான்.

எந்தவொரு இக்கட்டான நிலையிலும் சற்றேனும் பதட்டம் இருக்காது இவளிடம். அன்றிலிருந்து இன்றுவரை இது அவளிடம் ஒன்றிவிட்ட ஒன்று. இந்தப் பழக்கம்தான் பொறுப்பாளர்களிடம் பரிபாலினியை இனங்காட்டியது.

இரண்டரை மாதப் பயிற்சிக்காலங்களில் துணைப் பயிற்சியாசிரியராக இருந்தது மட்டுமல்லாமல், முதல் பயிற்சியிலேயே எதிரியை எப்படிக் குறிபார்த்துச் சுடுவது என்பதைப் பயிற்றுவித்து, இடையிடையே நடக்கும் பதுங்கித் தாக்குதல்களுக்கு அவர்களுடன் சென்று மீண்டு, மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்து… ஐந்து இராணுவத்தைத் தாக்குவது என்றாலும் அதற்கும் இவர்கள் சென்று… எண்ணிக்கையில் அடங்காத பதுங்கித்தாக்குதல்கள்.

“தலைவர் அடிக்கடி சொல்லுவார், ‘ஆயிரம் முயல்களை ஒரு சிங்கம் வழி நடத்தலாம். ஆயிரம் சிங்கத்தை ஒரு முயல் வழிநடந்த ஏலாது’ என்று. அதேமாதிரி புதிய போராளிகளைக் கொண்டு செய்யிறது என்பது, அதுவும் காட்டுச் சண்டை, சண்டைச் சூழலே பிள்ளைகளுக்குத் தெரியாது. பரிபாலினியில் இருந்த நம்பிக்கையில்தான் முழுப் பிள்ளையளையும் விடுறம்” என்றார்; மணலாற்றின் ஆரம்பகால மகளிர் பொறுப்பாளர் சீத்தா அவர்கள்.

பயிற்சிகள் முடித்து இரு அணிகளாகப் பிரிக்கப்பட்ட படையணியில் ஒரு அணி பரிபாலினியின் தலைமையில் களம் இறங்குகின்றது. நூறு பேர் கொண்ட ஒரு அணிக்குப் பொறுப்பாளராகவும், அதே நேரம் இருநூறு பேரைக் கொண்ட முழு அணிக்கும் துணைப்பொறுப்பாளராகவும், நியமிக்கப்பட்ட பரியின் நிலை தர்மசங்கடமாகிப் போனது. தான் சண்டைக்கு முதலில் போகமுடியாதே என யோசித்தவள், ஐம்பது பேர் கொண்ட அணியைப் பொறுப்பெடுத்து முதலில் நகர்ந்து விட்டாள்.

‘ஒப்பரேசன் செவன்பவர்’ (ஏழு சக்திகள்) முல்லைத்தீவு இராணுவ முகாமிலிருந்து முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியூடாகச் செம்மலைஇ குமுழமுனை ஆகிய பகுதிகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினருக்கு உதவியாக செம்மலைஇ அளம்பில் கடல் பிரதேசங்க@டாக தரையிறக்க முனைந்த இராணுவத்தினரை, கரையோரம் நின்ற பரிபாலினியின் அணி எதிர்கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று கடல்கலங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியவாறு கரையை நோக்கி வருவதும்இ இவர்களின் துப்பாக்கிகள் சடசடக்க பின்வாங்குவதும் பின் வருவதும் போவதும், வருவதும் போவதுமாகத் திணறிய கலங்கள் இறுதியில் ஓடியேவிட்டன.

மணலாற்றின் வரலாற்றுச்சமர்களில் பெரும் எதிர்ச்சமரான இந்தச் சமரில்இ எதிரியின் கடல்வழி விநியோகத்தைத் தடுத்து நிறுத்திய பெரும் பணியில் எமது இன்றைய தளபதியான இவளின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே இருந்தது.

அன்றொருநாள் சண்டை முடிந்து அனைத்து அணிகளும் திரும்பிக்கொண்டிருந்தது. பரியைக் காணவில்லை. ‘எமது எதிர்காலத் தளபதியை இழந்து விட்டோமா’ என எல்லோர் மனங்களும் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது. ‘பரிபாலினி வீரச்சாவாம்’ என்ற செய்தியும் வந்துவிட்டது. ஆனால் மனங்கள் மட்டும் ஏற்க மறுத்தது. காயமடைந்தும், வீரச்சாவடைந்தும் வரும் ஒவ்வொருவரையும் ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம். மனமும் சோர்ந்து போய்க் கொண்டிருந்த அந்தக் கணத்தில் நான்கு பேர்களின் தோள்களில் ஒரு

‘ஸ்ரெச்சர்’ ஒரு நப்பாசையுடன் ஓடிப்போய்ப் பார்த்தால் பரிபாலினி. சீராக மூச்சு வந்து கொண்டிருந்தது, உயிர் பிரியவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டோம். கால்கள், வயிறு, ஒருபக்கத் தாடை எனப்பிய்ந்து தொங்கக் கட்டுப்போட்டபடி…… பல மைல்களுக்கப்பால் உள்ள கொக்குத்தொடுவாய் இராணுவ முகாமை நோக்கி நடையாய் நடந்து, பல இராணுவ அரண்களை தாக்கியழித்த அந்தச் சமரில் இவள் படுகாயமடைய, சிலர், ‘வீரச்சாவு’ எனக்கூற, சிலர் ‘இல்லை’யென, ‘இவ்வளவு தூரம் கொண்டு போகிறதுக்கிடையில் ஆள் முடிஞ்சிடும்’ என்று இன்னொருவர் சொல்ல, அவள் வளர்ந்த குஞ்சுகளின் தோள்களில் மூச்சுப்பேச்சற்ற நிலையில் எதுவுமே அறியாதவளாய் வந்து சேர்ந்தாள்.

காயங்கள் ஆறி, மீண்டும் கானகம் வந்தவளை எல்லோருமே கிண்டலடிப்பார்கள்; அவளின் ஆறு பற்களையும் இழந்த வாயைப்பார்த்து. இவளுக்கும் சிரிப்பு வரும். ஆனால் சிரிக்க முடியாதவளாக கைகளால் மூடி சிரமப்பட்டுச் சிரிப்பாள்.

தொடர்ந்தும் கானகம் அவளைக் களம் நோக்கி அழைத்தது. கடும் பயிற்சி, கோட்டைக்கேணிக்கும் கொக்குத்தொடுவாய்க்கும் இடையில் ரோந்துவரும் இராணுவத்தினரை மறைந்திருந்து தாக்க வேண்டும். அந்த முகாமிலிருந்து இந்த முகாமுக்குக் கையசைத்தால் தெரியும். இரண்டு முகாம்களுக்கிடையில் உள்ள வெட்டை வெளியில் புல்லோடு புல்லாக இவர்கள். 8.30 மணிக்கு அவ்வழியால் வரும் இராணுவம் வரவில்லை. இவர்கள் திரும்பவும் வழியில்லை. இருட்டிய பின்னர்தான் அசையலாம். அதிகாலை 4.00 மணிக்கு நிலையெடுத்தவர்கள் ‘குளுக்கோஸ்’ பக்கற்றும், தண்ணீர் பக்கற்றும்தான் ஆளுக்கொன்று கொண்டு சென்றார்கள். அதுதான் அன்றைய சாப்பாடு. மாலை 5.00 மணி அவர்கள் காத்துக்கிடந்த இரைகள் கிடைத்தன. நல்ல சண்டை, கைப்பற்றிய ஆயுதங்களுடன் திரும்பினர்.

“மணலாற்றிலிருந்து வந்த இவ்வளவு வருடங்களாகியும், இன்றும் சகபோராளிகளிடம் பரிபாலினியின் செயற்பாடுகளை குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றால், அதற்குக் காரணம் அவரின் திறமையான செயற்பாடுகள்தான்” என்றார் முன்னாள் மணலாறு மாவட்டத் துணைத் தளபதி பாண்டியன் அவர்கள்.

அடிக்கடி பதுங்கித் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என விரிந்த களம் இதயபூமி – 01 உடன் அவளுக்கு முற்றுப்பெற்றது.

‘பரி அக்கா உங்களை பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கட்டாம்’ என்றால் அந்த ஏரியாவுக்குள்ளேயே பரிபாலினியைக் காணமுடியாது. படிப்பதென்றால் பச்சைக்கள்ளி. அப்படிப்பட்டவள் கல்விப்பிரிவுக்கென அனுப்பப்படுகிறாள். அந்தக் காலப்பகுதியில்தான் மணலாறு மாவட்டச் சிறப்புத் தளபதி லெப். கேணல் அன்பு வீரச்சாவடைய பரிபாலினி அழுத அழுகை. அன்றுதான் அவள் அழுததை எல்லோரும் பார்த்திருக்கின்றோம். அவரின் வித்துடலுக்குக்கூட அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இன்றுவரை அவளுக்கு அது அழியாத கவலை.

இவளுக்கு ஒரு அறை, ஒரு மேசை, கதிரை, அறை எப்பொழுதுமே பளிச்சென்று இருக்கும். மேசையில் ஒழுங்காக உறைகள் இட்டு அடுக்கப்பட்ட கொப்பிகள், நேரே சுவரில் நாளிதழில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட அன்பண்ணையின் படம் ஒவ்வொரு நாளும் முற்றத்தில் இருந்த மல்லிகையில் பூக்கொய்து படத்துக்கு வைத்து அஞ்சலி செய்து, அவளை போரியலில் வளர்த்த ஆசான் அல்லவா லெப். கேணல் அன்பு.

இந்தக் காலங்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று இவர்களுக்குக் கட்டளை. முகாமில் ஒரே ‘கஸ்புஸ்’தான். அரைவாசித்தமிழ் அரைவாசி ஆங்கிலம்.

‘சிஸ்ரர் நவணி…… வோட்டர் டாங்…..’ நிரப்பும்படி சைகையில் முடிப்பாள் பரி.

பூச்செடிகளுக்கு தண்ணீர் உற்றும் போது யாரும் வந்து ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் பரி ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்து முழுசிவிட்டு, ‘பிளவர் றீ வோட்டர்’ மிகுதி சைகையில்.

கலை நிகழ்ச்சி என்றால் பரிக்கு சரியான விருப்பம். ஆனால் மேடையில் ஏறி எல்லோர் முன்னாலும் செய்வதென்றால் பயம், கூச்சம் இங்கேயோ செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம். என்ன செய்வது? அன்று மேடை ஏறிய பரி எல்லோரையுமே வாய்பிளக்க வைத்தாள். “அதிசயத்தின்மேல் அதிசயம். பரிபாலினியா இப்படி நடித்தாள்” என்று அனைவருமே ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் இந்தப் பரிக்குள் இப்படியொரு கலைத்திறன் இருக்குமென்று எவருமே நம்பவில்லை.

ஒருநாள் இவர்களின் தமிழ் ஆசிரியர் எல்லோரையும் தூய தமிழில் ஆக்கம் ஒன்று எழுதும்படி கூறினார். பரியின் பெரும் முயற்சியில் சிறுகதை ஒன்று உருப்பெற்றது.

அதை இன்னொருத்தியிடம் வாசிக்கும்படி கொடுத்தாள், அவளும் இலேசுப்பட்டவள் அல்ல நடிப்பதென்றால் அவளுக்குக் கைவந்த கலை. பரியின் சிறுகதையை ஏற்ற இறக்கங்களுடன் பெரிதாக வாசிக்கத் தொடங்கினாள்.

“அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து சிறுநீர் வழிந்தது”

எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். பரிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஏனப்பாஇ ஏனப்பா என்ன எல்லோரும் சிரிக்கிறீங்கள்’ என்றவளிடம் ‘சிறுநீர் என்றால் என்னப்பா?’ ‘சிறிய நீர்இ சொட்டு நீர்’ என விளக்கியவள் தன் பிழை விளங்கவும் எல்லோருடனும் சேர்ந்து தானும் சிரித்து…… சேர்ந்து படித்து…… போராளிகளுக்கு வகுப்பெடுத்து…… புதிய போராளிகளை இணைத்து……

வெளியில் சிறுபிள்ளைத் தனத்துடன் காணப்படும் இவளிடம் முழுமையான ஒரு ஆளுமைத்தன்மையும், தன்னம்பிக்கையும் இன்னும் இன்னும் நிறையவே செய்ய வேண்டுமென்ற வெறித்தனமும் நிறையவே இருந்தது.

இவளின் உருவத்திற்கும், செயல்பாடுகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை என்பது மாதிரியான ஒரு தோற்றம். இவளின் செயல்பாடுகளின் வெற்றிகளே இதற்கான சான்றுகள்.

மீண்டும் பரிபாலினியின் சண்டைக்களங்கள் விரியத்தொடங்கியது.

1996 இல் புதிதாகப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளிவந்த ஒரு அணிக்குப் பொறுப்பாளராக, அரசியல்துறை மகளிரணியாக…… அந்த அணி களம் இறங்குகின்றது. அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களோ எண்ணிலடங்காதவை. நீண்ட காலமாகச் சண்டைகளில் பங்குபற்றாது வெளி வேலைகளில் ஈடுபட்டிருந்த போராளிகள். இவர்களுடன் புதிய போராளிகள், இவர்கள் நல்லமுறையில் சண்டை பிடிப்பார்களா? என்ற கேள்வி ஏனைய தாக்குதல் அணிகளுக்கு எனினும் ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கைக்கு எதிராக நின்று போரிட்டது இவர்களின் அணியும்.

பரந்தன் – ஆனையிறவு மீதான தாக்குதல் ஒன்றுக்கு பல அணிகள் பயிற்சி எடுத்தது. யார் யார் எந்தப் பகுதிகளுக்கென அவ் அணிகள் பிரிக்கப்பட்டபோது, ஒரு அணிக்கு உதவி அணியாக இவர்கள் பிரிக்கப்பட்டனர். ஆனால் இவர்களின் அணியை அவர்கள் “தமக்கு வேண்டாம்” எனக்கூறிவிட்டனர். பரிபாலினி, மேஜர் நித்தியா, கப்டன் ஜெயஜோதி உட்பட அனைத்துப் போராளிகளும் இறுகிப் போயினர். “இவங்களுக்குச் செய்து காட்டுறம்” என்ற சாவாலோடு களமிறங்கியவர்கள் சண்டையிட்டனர். காலையிலேயே விழுப்புண்ணடைந்த பரிபாலினி மாலை வரை களத்திலிருந்து வெளியேற மறுத்துவிட்டாள். பின்னரும் கட்டாயப்படுத்தியே வெளியேற்றப்பட்டாள்.

தொடர்ந்து ‘ஜெயசிக்குறுய்’ களம், முன்னர் இவர்களை மறுத்தவர்கள், சளைக்காது போரிட்ட இவர்களைக் கேட்டுப் பெறும் அளவுக்கு வளர்ச்சிகண்டு…… ஓயாத உழைப்பும், கடுமையான பயிற்சியும்…… எல்லாவற்றிற்கும் அடிநாதமாய் பரிபாலினி……

ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு தாமே தடையுடைத்து, ஏனைய அணிகளுடன் தமது அணி ஒன்றுடன் பரிபாலினியும் உள்நுழைந்து, பல இராணுவக் காவலரண்களைத் தாக்கியழித்து மீண்டபோது, கப்டன் ஜெயஜோதியுடன் இன்னும் சில போராளிகள் திரும்பவில்லை. ஆனால் இவர்களைப் பாராட்டாத தளபதிகளே இல்லை. புளியங்குளத்தில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக நின்று புளியங்குளத்தை ‘புலிகள் புரட்சிக் குளமாக’ மாற்றியதில் இவளின் பெரும் உழைப்பும் உள்ளது என்றால் மிகையானது.

அந்தச் சமருக்குப் பொறுப்பாக நின்ற தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் கூறும்போது, “பரிபாலினியைப் பொறுத்த வரையில் குறிப்பாக நல்ல விசயங்களைப் பார்த்தனான், நல்ல ஒரு நிர்வாகி, துணிச்சலான சண்டைக்காரி மற்றது எல்லாத்திலேயும் ஒரு ஆர்வம் உள்ளவர் இந்த மூன்றையும் நான் அவளிடம் நேரடியாகப் பார்த்தனான்” என்றார்.

“ஜெயசிக்குறுய்” களமுனையில் இருந்து எடுக்கப்பட்ட அரசியல்துறை மகளிர் அணியின் போராளிகள் ஒவ்வொருவரும் அவரவரின் முன்னைய பணிகளைத் தொடரும்படி கூறிய தலைவர், பரிபாலினியை சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவுக்குத் தெரிவு செய்கின்றார்.

சண்டையில் நிற்கும் ஒவ்வொரு போராளிகளினதும் திறமைகளையும், செயல்பாடுகளையும், நிலமைகளுக்கேற்ப முடிவெடுக்கும் தன்மைகளையும், சண்டையின் வெற்றி தோல்விகளுக்கான காரணிகளையும், பகுப்பாய்வு செய்வதுமே இதன் நோக்கமாகும். ஆரம்பகாலத்தில் பரிபாலினியின் பொறுப்பில் பெண்போராளிகளே செயல்பட்டு வந்தனர். இந்தப் பணிகளில், எள் எனும் முன் எண்ணெய்யாக நிற்பாள் பரிபாலினி. கனவிலும் நினைவிலும் “அண்ணை எங்கள நம்பி விட்டிருக்கிறார். நாங்கள் திறமையாகச் செயற்பட வேண்டும்” என்பதே அவளின் தாரகமந்திரமாக இருந்தது.

01.02.1998 இல் ஆனையிறவு பரந்தன் சண்டையில் ஆரம்பமாகி 1999 இல் ஆண் போராளிகளையும் இணைத்து பிரிகேடியர் சொர்ணம் தலைமையில், எந்த மூலை முடுக்குகளில் நடைபெறும் சிறு சிறு தாக்குதல்கள் என்றாலும் அங்கெல்லாம் பரியும் சென்று வந்தாள். போகும் போது பாதை மாறி எதிரியின் பிரதேசங்களுக்கு முன்னால் சென்று மீண்ட சம்பவங்கள் பல.

ஓயாத அலைகள் மூன்றின் ஆரம்ப நடவடிக்கையின் போது சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவினரைக் கொண்டு களமிறங்கி மீட்கப்பட்ட பிரதேசங்களைப் பாதுகாக்கும் பணியில் மணலாற்றில் ஈடுபட்டு, மீண்டும் பகுப்பாய்வு வேலைகள் செய்து…

தொடரும் ஓயாத அலைகளின் வீச்சால் எமது களமுனைகள் விரிவடைய, விரிவடைய தற்காலிகமாக சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவிலிருந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு படையணிகளுடன் இணையுமாறு பணிக்கப்பட, இவளின் பயணம் சோதியா படையணியை நோக்கித் தொடர்ந்தது.

“என்ர சண்டை அனுபவங்களைக் கொண்டு துர்க்காவுக்கு உதவியா நின்று, படையணியை நன்றாக வளர்த்து, அண்ணை பிள்ளையள எப்படியெல்லாம் வளர்க்க வேணும் என்று நினைக்கிறாரோ அதற்கெல்லாம் நாங்கள் செயலுருவம் கொடுக்க வேணும்” என்று கூறிச் சென்றவளை முதல் சமரிலேயே நாம் இழந்துவிட்டோம்.

01.04.2000 நள்ளிரவு கடந்த விடிகாலை இயக்கச்சி இராணுவத்தளம் புகுந்து திரும்பாத தோழிகளுள் பரிபாலினியும் ஒருத்தியாக…

பரிபாலினி மணலாற்றுக் காட்டின் மரவேர்களில் காவலிருந்து. காட்டுப் பறவைகளையும் விலங்குகளையும் நேசித்து, பொதிகள் பல சுமந்து, ஆழக்கிணறுகள் வெட்டி, பலம் மிக்க பாசறைகள் அமைத்து, உரமேறிய கைகளுடன் எதிரியுடன் பொருதி, பல துறைகளிலும் வளர்த்து தலைவனின் பெரும் கனவுகளுக்கேற்ப பிரகாசிக்கத் தொடங்கிய ஒரு இளம் தளபதி……

அடிக்கடி ரவைகளால் துளைக்கப்பட்டு, குண்டுச் சிதறல்களால் பிய்க்கப்பட்டு, இரத்தம் கொட்டி, வீரத் தழும்புகளால் நிறைந்த அவள் உடல்……

தனது சொத்தி வாயை நெளித்து, ‘இஞ்சேருமப்பா இஞ்சேருமப்பா…’ என்று எம்மைச் சுரண்டும் அந்த அழகான சின்ன உருவம்……

ஓ… அவள் ஓயவில்லை. இன்னும் எம்முன் நிழலுருவமாக உலாவிக் கொண்டிருக்கிறாள்.

நினைவுப்பகிர்வு: உலகமங்கை.

நன்றி – களத்தில் இதழ் (31.08.2000).

https://www.thaarakam.com/news/120583

  • கருத்துக்கள உறவுகள்

வீரமங்கை பரிபாலினிக்கு வீர வணக்கங்கள்.......!

இணைப்புக்கு நன்றி கிருபன்.....!

 

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.