Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்! – பிரிகேடியர் விதுசா..

 

பிரிகேடியர் விதுசா வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத ஆளுமையின் வடிவம். பார்த்தவுடனே தளபதி என்கின்ற மரியாதை பார்ப்பவர் அனைவருக்குமே வந்துவிடும். உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கும் அளவுக்குப் பெண்புலிகளை வழிநடத்தி, வான்முட்டும் வெற்றிகளை, மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதங்களைப் படைக்க வைத்த இரண்டாம் லெப். மாலதி படையணியின் சிறப்புத்தளபதி. ஓப்பரேசன் லிபரேசனில் தொடங்கிய அவரது களமுனைப் பயணம் விடுதலைப்புலிகளின் இறுதி முற்றுகைச் சமராக இருந்த ஆனந்தபுரத்தில் தனது இறுதி மூச்சைத் தமிழீழ மண்ணுக்காய் அர்ப்பணிக்கும் வரை ஓய்வு என்பதையே அறியாத உழைப்பாளி.
 
 
 
0003-35-scaled.jpgஎப்போதும் அவரது பேச்சும் மூச்சும் தலைவனின் எண்ணங்களைத் தாங்கியதாகவே இருந்தது. போராளிகளோடு உரையாடும்போதுகூட ‘அண்ணை எதை நினைக்கின்றாரோ அதை நாங்கள் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும்” என்ற உறுதி மட்டுமே இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் மகளிர் படையணி பங்கேற்ற பெரும்பான்மைக் களங்களில் எல்லாம் கட்டளைத் தளபதியாய் நின்று போர் அரங்குகளை வழிப்படுத்துவார். தொலைத் தொடர்புக் கருவி தாங்கிவரும் அவர்  குரல் தனித்து நின்றுகூட போராளிகளைச் சாதிக்க வைக்கும் துணிச்சலை அள்ளித்தரும். அந்தக் கட்டளைகளில் இருக்கும் நேர்த்தியும் தெளிவும் புதிய போராளிகளைக் கூட களமுனையின் சாதனைப் புலிகளாய் உருவாக்கிய சம்பவங்களோ ஏராளம்.
 
அவ்வளவு போரியல் நுட்பமும் போரியல் தெளிவும் மிக்க போராளி. எல்லோருமே தமது கடைக்குட்டி சகோதரர்களோடு அதிக அன்பு வைப்பது வழமை.  விதுசா அக்காவுக்கும் தனது தம்பி மீது அளவுகடந்த பாசம். அவனும் காலஓட்டத்தில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்திருந்தான். ஜெயசிக்குறு களமுனை. எதிரியின் உடைப்புச் சமரொன்று. அதனை முறியடிப்புச் செய்யும் களத்தில் கட்டளைகளைப் பிறப்பித்தபடி  விதுசா அக்கா நிற்கின்றார். அதே களமுனையில் அவரது தம்பியும் நிற்கின்றான். தொலைத்தொடர்பில் செய்தி வருகின்றது. அவரது சகோதரன் வீரச்சாவடைந்து விட்டதாக, பின்னரங்குக்கு வந்தால் வித்துடலை அனுப்ப முதல் பார்க்கலாம் என,  விதுசா  அக்காவிடம் செய்தியைச் சொன்னபோது ‘சண்டை முடியாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன். தன்னைப் பார்க்க வேண்டாம் வித்துடலை அனுப்புங்கள்” என்று கூறிவிட்டு, அவர்  தனது அன்புத் தம்பியின் வீரச்சாவைத் தெரிந்த பின்னரும் உறுதி தளராது மிகத்தெளிவாகக் கட்டளைகளைப் பிறப்பித்து அந்தச் சமரை வெற்றிகரமாக வழிநடத்தினார். இதுதான்  விதுசா அக்கா. போர்க்களத்திலே தனது பெரும் பகுதி வாழ்க்கையைக் கழித்த பெண்புலிகளின் பெருந்தளபதி ஆனந்தபுரத்தில் விடுதலைக்கு விதையாகிப் போனார்.
 
“தாரகம் இணையத்திற்க்காக”
 
அபிராமி

 
0003-45-scaled.jpg
 
விடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. இந்த முகவுரை விதுசா பற்றிய நினைவுப் பகிர்வை அறிமுகஞ் செய்யப் போதுமானது.
 
குருக்கள் கந்தையா, ஞானாம்பிகை இணையருக்கு ஞானபூரணி என்ற இயற்பெயர் பூண்ட விதுசா மூத்த மகளாக 1969 செப்ரம்பர் 29ம் நாள் கரவெட்டி கப்புதூவில் பிறந்தார்.
 
 
 
இவர் தனது பதின்ம வயதில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வர்த்தகப் பிரிவில் படிக்கும் போது புலிகள் இயக்கத் தொடர்பு ஏற்பட்டது.
 
இக்காலப் பகுதியில் அவர் விடுதலைப் புலிகளின் பகுதி நேரப் பணியாளராக இணைந்தார். 1986 மே மாதத்தில் விடுதலைப் புலி உறுப்பினராக இணைந்தார்.  அவர் வாழ்ந்த காலம் 40 வருடம். வீரச்சாவடைந்த நாள் 2009 ஏப்ரல் 04ம் நாள்.
 
2001-2009 காலத்தில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. அவருக்கு இலக்கிய தாகம், உலக நிகழ்வுகளை நகர்த்தும் அடிப்படைகள் பற்றிய ஆர்வம், இராணுவத் தொழில்நுட்பத் தகவல்கள் திரட்டும் வேட்கை என்பன மிகுதியாக இருந்தன. உயர் கல்வி கற்றுத் தேறவில்லை என்ற ஏக்கமும் இருந்தது.
 
இயக்கத்தில் இணைந்த சிறிது காலம் அவர் சுதந்திரப் பறவைகள் பிரிவில் இருந்தபடி கிராம ரீதியாகக் கருத்தூட்டல் பணிகளில் ஈடுபட்டார். உற்ற தோழிகளான லெப் நித்தியா பவானி, மேஜர் சஞ்சிகா கலை ஆகியோர் இந்தப் பிரிவின் சுகாதரப் பணிகள், எழுச்சிக் கருத்தரங்குகள் ஆகியவற்றை அவருடன் நடத்தினர்.
 
விடுதலைப்புலிகள் மகளீர் 2ம் அணியில் விதுசா ஆயுதப் பயிற்சி பெற்றார். 1987ல் சிங்கள இராணுவம் நடத்திய ஒப்பரேசன் லிபரேசன் என்ற வடமராட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் அவர் தனது போராட்ட வாழ்வைத் தொடங்கினார்.
 
 
0003-46-scaled.jpg
இந்தியப் படைகள் வந்தபோதும் அவற்றிற்கு எதிரான கோப்பாய்ச் சமரில் அவர் முக்கிய பங்கேற்றார். இதன் போது முதலாவது பெண் மாவீரர் மாலதி 10.10.1987ம் நாள் வீரச்சாவடைந்தார். அதன் பிறகு புலிகள் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கலில் வன்னி நிலத்திற்குச் சென்றார்.
 
எம் தலைவர் அவர்கள் வழிகாட்டலில் பெண் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கும் பணியில் வன்னியில் ஈடுபட்டார். பலவீனமான எமது இனத்தின் பலமான பாதுகாப்பு அரணாக அவர் பெண் போராளிகளை உருவாக்கினார்.
 
1988ம் ஆண்டுப் பிற்பகுதியில் யாழ் சென்ற மகளீர் அணியுடன் விதுசா சென்றார். யாழ் குடா முழுவதும் இந்திய இராணுவம் செறிவாக நின்ற காலமாயினும் அவரும் தோழிகளும் புதிய பெண் போராளிகளை இணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர்.
 
பொறுப்புக்களைச் சுமக்கும் தகுதி பெற்ற அவர் 3ம், 4ம் மகளீர் அணிகளை உருவாக்கி அவற்றை வன்னிக்கு வழிநடத்திச் சென்றார். அங்கு களமுக அடிப்படைப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். விடியல் பாசறையின் பொறுப்பாசிரியராக அவர் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.
 
 
 
2ம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பிறகு கொக்காவில் படை முகாம் தாக்குதலில் பங்கேற்ற விதுசா காலில் காயமடைந்தார். தேறியபின் ஆனையிறவு, யாழ் கோட்டை, பலாலி இராணுவ முகாம்களைச் சுற்றிக் காவல் பணி செய்தார். 1990 கார்த்திகையில் நடந்த தச்சன்காடு மினி முகாம் தாக்குதலில் நெடுநாட் தோழி மேஜர் சஞ்சிகா கலை வீரச்சாவடைந்தார்.
 
இந்தப் இழப்பு அவரைப் பலமாகத் தாக்கியது. அதை எண்ணும் போது என் இதயம் வெடித்துவிடும் போல் இருக்கும் என்று அவர் சொன்னார்.
 
1991ல் நடந்த ஆனையிறவுச் சமரில் மாதர் அணியின் ஒரு பகுதித் தளபதியாயகப் பதவி உயர்ந்தார். அவருடைய திறமைக்கு தலைவர் அவர்களின் பாராட்டுக்கள் கிடைத்தன. தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் வல்லவர் என்ற சிறப்பைப் பெற்றார்.
 
 
 
தலைவர் அவர்களின் இலட்சியக் கனவான தமிழீழ உருவாக்கத்திற்கு அவர் அல்லும் பகலும் உழைத்தார். அவருக்கு சொந்த வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய சிந்தனை இருந்ததில்லை “அண்ணையின் கனவை நிறைவேற்றுவது” ஒன்று தான் அவருடைய வாழ்க்கைக் குறியாக இருந்தது.
 
மகளீர் அணியின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்ட விதுசா 1992 கார்த்திகையில் இடம் பெற்ற பலாலி 180 காவலரண் தாக்குதலில் காலிலும் தலையிலும் விழுப்புண் அடைந்தார். அறிவிழந்தாலும் கட்டளைகளைப் பிறப்பித்தபடி இருந்ததாக அவர் பிற்காலத்தில் சொன்னார்.
 
 
 
1993நவம்பர் 10-13ல் நடந்த பூநகரி ஒப்பரேசன் படை நடவடிக்கையில் அவர் பிற்களப் பணியில் ஈடுபட்டார். அதே வருடம் முதலாவது பெண் மாவீரர் மாலதியின் பெயரில் உருவாக்கப்பட்ட மாலதி படையணியின் கட்டளைத் தளபதியாக கேணல் என்ற பதவியோடு நியமிக்கப்பட்டார்.
 
சந்திரிக்கா அரசின் சமாதனத்திற்கான போர் அடுத்த வருடம் தொடங்கிய போது தலைமைப் பொறுப்பேற்று மாலதி படையணியை வழி நடத்தினார்.
 
அவருடைய களப் பயணம் 1993 தொடக்கம் வீரச்சாவடையும் 2009 வரை ஒரு போதும் ஓய்ந்ததில்லை. யாழிலும் சரி வன்னியிலும் சரி எண்ணற்ற சமர்களில் பங்காற்றினார். இதயபூமி, இடிமுளக்கம், இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ச்சமரை வழிநடத்தியதோடு புலிப்பாய்ச்சல் ஆகியவற்றில் திறம்படச் செயற்பட்டார்.
 
 
 
0003-47-scaled.jpgயாழ் தீபகற்பத்தை சிங்கள இராணுவம் கைப்பற்றுவதற்கு நடந்த சூரியக்கதிர் சமரில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. புலிகளின் போராட்ட வரலாற்றில் மிக நெடிய காலம் தொடர்ந்த ஜெயசிக்குறு எதிர்ச்சமரிலும் அவர் அரும்பணியாற்றினார்.
 
1998ல் ஓயாத அலை 2 படை நடவடிக்கையில் முக்கிய பங்கேற்ற அவர் கிளிநொச்சி புலிகள் வசம் வீழ்ந்த போது தேசியக் கொடியை களத்தில் அவரே ஏற்றினார். இது அவருடைய போராட்ட வாழ்வின் உச்சமாகக் கருதப்படுகிறது.
1999 செப்ரம்பர் 18ம் நாள் அவர் தனது இளைய சகோதரன் போராளி விதுசன் கேதீஸ்வரனைக் களத்தில் இழந்தார். ஓயாத அலை 3, தீச்சுவாலை முறியடிப்புச் சமர் ஆகிய வற்றில் அவருடைய வழி நடத்தல் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்தன.
 
 
 
0003-46-scaled.jpgசிங்கள இராணுவத்திற்கும் எமக்கும் இடையில் 2008 தொடக்கம் 2009 வரை நடந்த சமச்சீரற்ற போரில் தம்பனையில் இருந்து ஆனந்தபுரம் மந்துவில் வரை விதுசா ஓய்வின்றிக் களமாடினார். உணவின்றி உறக்கமின்றி எதிரியை விரட்டி அடிப்பதில் குறியாக இருந்தார்.
 
2009 சனவரி 26ம் நாள் அவரை சந்திக்க நேர்ந்தது. உடல் மெலிந்து கண்கள் குழிவிழுந்தாலும் உறுதி தளராமல் இருந்தார். எதிரிகளின் சூழ்ச்சியால் ஆனந்தபுரம் சமரில் வீரச்சாவடைந்தார். அவருக்கு பிரிகேடியர் பதவி வழங்கப்பட்டது. அவருடைய வித்துடலைப் பார்க்காமல் விதை குழியில் ஒரு பிடி மண் போடாமல் இருக்கும் எம் போன்றோர் அவருடைய நினைவுகளைச் சுமக்கின்றோம்.
 
 
 
 – விதுரன்-
 
  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

spacer.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.