Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

உலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி?

103796323-statue-of-lady-justice-with-sc
பட மூலம், Groundviews

“காசநோய் பற்றி வைத்தியர்கள் கூறுவது இங்கே பொருந்துகின்றது. ஆரம்பத்திலேயே அந்த நோயினைக் குணப்படுத்துவது இலகுவானது. ஆனால், நோயினைக் கண்டுபிடிப்பதுதான் கடினமானது. காலம் செல்லச்செல்ல நோயினைக் கண்டுபிடிப்பது இலகுவானதாக மாறிவிடுகின்றது. ஆனால், ஆரம்பத்திலேயே நோயினைக் கண்டுபிடித்துச் சிகிச்சையளிக்காததால் நோயினைச் சுகப்படுத்துவதோ கடினமானதாக மாறிவிடுகின்றது.”

மக்கியாவெலி, The Prince புத்தகம்

2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் மிருசுவில் கிராமத்தில் ஐந்து வயது, பதின் மூன்று வயது மற்றும் பதினைந்து வயது சிறார்கள் உள்ளிட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த எட்டுத் தமிழ்க்குடிமக்களைப் படுகொலை செய்த இராணுவக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க, 2015ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். 2019 ஏப்ரல் மாதம் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட இக்கொலையாளிக்கு, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ 2020 மார்ச் 26ஆம் திகதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார் என்ற செய்தி வெளியிடப்பட்டது. பொதுமன்னிப்பு தொடர்பாகப் பல மாதங்களாக வதந்திகள் பரவிவந்த நிலையில் கொள்ளை நோய் ஒன்று நாட்டில் பரவுகின்ற நேரத்திலும் விதிவிலக்கான சூழ்நிலை நிலவுகின்ற நேரத்திலும் சாதாரண சட்டம் (குறைந்தது தற்போதாவது) நிலவுகின்ற நேரத்திலுமே இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னிப்பு வழங்குவதற்கான தீர்மானத்தினைப் பற்றிய கலந்துரையாடலுக்குள் செல்வதற்கு முன்னர் குற்றத்தீர்ப்பினை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற தீர்மானத்தின் சில மிக முக்கியமான கூறுகளை நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

மூன்று சிறார்கள் உள்ளிட்ட எட்டுப் பேரைப் படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட முறையினைப் பற்றி நீதிமன்றம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “கொல்லப்பட்ட ஒவ்வொருவரினதும் முன்கழுத்தில் 2 அங்குல ஆழத்திற்கு தனித்த ஒரு வெட்டுக்காயத்தினை வைத்தியர் அவதானித்துள்ளார். மேலும் மரணமானது கழுத்தில் ஏற்படுத்தப்பட்ட வெட்டுக்காயத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் உடலினுள் ஏற்பட்ட குருதிப்பெருக்கினாலும் ஏற்பட்டுள்ளது என்கின்ற அபிப்பிராயத்தினையும் வைத்தியர் வெளியிட்டுள்ளார்.”

படுகொலைகளை மேற்கொண்டவர்கள் தாம் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் எடுத்த கவனம் பற்றித் தன்னுடைய அவதானத்தினைச் செலுத்திய நீதிமன்றம் அதனைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது, “படுகொலைகளுக்குப் பொறுப்பு கூறவேண்டிய நபர் அல்லது நபர்கள் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பிரதேசத்தில் நிலவிய அமைதியற்ற சூழலினைக் கவனத்திற்கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்குத் தெரியவந்துவிடும் என்ற காரணத்தினால் வழமையான வெடிஆயுதங்களைப் பயன்படுத்தாது அமைதியான முறையில் சத்தமின்றிப் படுகொலை செய்யும் முறையினைத் தந்திரமாகக் கவனத்துடன் பயன்படுத்தியுள்ளனர். எனவே, கொலைக்குப் பொறுப்பானவர்கள் யுத்த சூழ்நிலையினைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர் என்பதனையும் எவ்விதமான சத்தத்தினையும் ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர் என்பதனையும் சுட்டிக்காட்டும் ஒரு காரணியே இது என்பதை விடயங்களை நன்கறிந்த பிரதி மன்றாடியார் நாயகம் சமர்ப்பித்திருக்கின்றார்.”

சாட்சியின் நம்பகத்தன்மையினைப் பொறுத்தளவில், “மேன்முறையீடு செய்த குற்றஞ்சாட்டப்பட்டவரை அல்லது ஏனைய குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தவறாக இக்கொலையில் சிக்கவைப்பதற்கு வழக்கின் சாட்சியாளரான மகேஸ்வரனுக்கு ஏதாவது ஒரு காரணம் இருந்தது என்பதற்கான ஒரு சாடைக் குறிப்புக் கூட இல்லை” என நீதிமன்றம் குறிப்பிடுகின்றது.

எவ்வழியின் மூலம் கொலைசெய்யப்பட்ட நபர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டனவோ அவ்வழியினை கண்டறிகையில், அதாவது உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்டியவர் ரத்னாயக்க ஆவார், நீதிமன்ற கூற்றின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட மேன்முறையீட்டாளர் (ரத்னாயக்க) வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தச் சாட்சி இராணுவப் பொலிஸ் அதிகாரிகளின் அணியுடன் சேர்ந்து சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடப்படும் பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட 1ஆவது மேன்முறையீட்டாளர் வழங்கிய அறிவுறுத்தல்களுடன் அந்த இடத்தினைச் சென்றடைந்தவுடன் அவர்கள் புதர்க்காடு ஒன்றின் வழியே நடந்திருக்கின்றனர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட மேன்முறையீட்டாளர் சம்பவ இடத்தினைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதற்கமைய காங்கேசன்துறைப் பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகர் தலைமையில் சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட மேன்முறையீட்டாளரினால் சுட்டிக்காட்டப்பட்ட இடத்தினைத் தோண்டுமாறு கட்டளையிட்ட நீதவானும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருக்கின்றார். தோண்டும்போது 8 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. குற்றப்பகர்வின் மீதான கொலைக் குற்றங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இறந்தவர்களின் சடலங்களே அவை என உறவினர்கள் சடலங்களை அடையாளம் காட்டியுள்ளனர். சாவகச்சேரி மாவட்ட நீதிபதியான திரு. பிரேமசங்கர் அவரது சாட்சியத்தில், “சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தினைக் குற்றஞ்சாட்டப்பட்ட மேன்முறையீட்டாளரான மேஜர் சொய்சாதான் சுட்டிக்காட்டினார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொலைக்குப் பொறுப்பான அனைவருமே வகைப்பொறுப்புக் கூறவைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது, “இச்செயல்கள் அனைத்தையும் தனியொரு நபர் இழைப்பது என்பது அதீத வாய்ப்பற்றது அல்லது அசாத்தியமானது. எனவே இச்செயல்கள் ஒன்றிற்கு மேற்பட்டவர்களினால் இழைக்கப்பட்டுள்ளன என ஊகிப்பது நியாயமானதாகும்.”

சிறப்புரிமையும் பக்கச்சார்பும்: மன்னிப்பு எவ்வாறு வழங்கப்படுகின்றது? 

நீதி ஒழுங்காக வழங்கப்படவில்லை அல்லது மன்னிப்பு வழங்கப்படுவதனைப் பொருத்தமானதாக ஆக்குகின்ற நியாயப்படுத்தப்படக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் காணப்படுகையில் மன்னிக்கப்படலாம். உதாரணமாக, சில குறிப்பிட்ட குற்றச்செயல்களும் தவறுகளும் பல்வேறு சமுகக் காரணிகளின் விளைவுகளினால் குற்றவாளியினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் மன்னிக்கலாம். அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக, மன்னிப்பினை வழங்குவதா எனும் தீர்மானத்தினை எடுப்பதற்கான பூரண தற்றுணிபினை ஜனாதிபதி கொண்டுள்ளார். மன்னிப்புக்கள் சகல தவறுகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் சிறைக்கைதிகளின் வகையினருக்கும் அளிக்கப்படலாம். அரசியலமைப்பின் உறுப்புரை 34(1) இற்கு அமைவாக குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவருக்கு விசேட ஏற்பாடுகளின் கீழ் மன்னிப்பு அளிக்கையில்:

  • அறிக்கை ஒன்றினை வழங்குமாறு விளக்க (தீர்ப்பு வழங்கிய) நீதிபதியிடம் ஜனாதிபதி கட்டாயம் வேண்டுகோள் விடுக்கவேண்டும். விளக்க நீதிபதியின் அறிக்கையுடன் சேர்த்து சட்டமா அதிபரின் ஆலோசனை நீதியமைச்சருக்கு வழங்கப்படவேண்டும் என்ற அறிவுறுத்தல்களுடன் அந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும்;
நீதியமைச்சர் அவரின் பரிந்துரைகளுடன் அறிக்கையினை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பார்.

வெளிப்படைத்தன்மை பேணப்படவேண்டும் என்பதற்காக, ரத்னாயக்கவின் சம்பவத்தில் இந்தச் செயன்முறை பின்பற்றப்பட்டதா என்பதைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு பின்பற்றப்பட்டிருப்பின், அந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவேண்டும். உயர் நீதிமன்றம் ரத்னாயக்கவின் தண்டனையினை உறுதிப்படுத்தி ஒரு வருடம் செல்வதற்கு முன்னர் ரத்னாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இது குறிப்பாக முக்கியமானதாகும். ஏனெனில், இவ்வாறான ஒரு குறுகிய காலப்பகுதியில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவரின் எவ்வகையான புனர்வாழ்வும் சாத்தியமற்றதாகும்? மேலும், ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில் ரத்னாயக்கவின் மனைவி குறிப்பிடுகையில் மன்னிப்பானது ஜனாதிபதி ராஜபக்‌ஷவினால் வாக்குறுதியளிக்கப்பட்ட ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். (அவர் பிரதிக்ஞா என்ற சிங்களச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்).[ii] தனது நேர்காணலில் அவர், ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கும் செயன்முறையில் எவ்வித வகிபாத்திரத்தினையும் சட்டப்படி வகிக்காத அரச அதிகாரிகளுக்கும் மன்னிப்பினைப் பெற்றுத்தந்தமைக்காக நன்றி தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியாக நோக்குகையில், இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தினால் தன்னிச்சையான முறையிலும் வெளிப்படைத்தன்மையற்ற முறையிலும் விசேட மன்னிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயன்முறையில் எவ்விதமான புறவமயமான தராதரங்களும் பின்பற்றப்படவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது. எனவே, விசேட மன்னிப்பு தரப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் சிறையிலடைத்தலின் நோக்கம் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர், அதாவது புனர்வாழ்வு அடையப்பட்ட பின்னரே கைதிகள் விடுவிக்கப்படக்கூடிய முறைகளுள் ஒன்றாகவே மன்னிப்பு என்பது இருக்க முடியும்.

இது தொடர்பில் இந்தியாவிடம் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வது பயன்மிக்கதாகும். கருணை மனு எனக் குறிப்பிடப்படுகின்ற இவ்வாறான மன்னிப்புத் தொடர்பான தீர்மானங்களில், உச்ச நீதிமன்றம் நீதிமுறை மீளாய்வினைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தினைக் கொண்டுள்ளது. 1980ஆம் ஆண்டின் மாரு ராம் எதிர் இந்திய யூனியன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, தனஞ்சய் சட்டர்ஜி எதிர் மேற்கு வங்க அரசு வழக்கிலும், சுவரன் சிங் எதிர் உத்தரப் பிரதேச அரசு வழக்கிலும், கே.பி. நானாவதி எதிர் பம்பாய் அரசு வழக்கிலும் கடைப்பிடிக்கப்பட்டது. நிறைவேற்று அதிகாரத்தின் மன்னிக்கும் அதிகாரம் என்பது நிர்வாக ரீதியான மற்றும் கருணை அடிப்படையிலான செயலேயன்றி உரிமைக்குரிய விடயமாகக் கோரப்படலாகாது என இத்தீர்மானங்களில் இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்த அதிகாரத்தினை நிறைவேற்று அதிகாரம் தன்னிச்சையாகப் பயன்படுத்தியுள்ளதா என்பதை மீளாய்வு செய்வதற்கான அதிகாரத்தினையும் கடப்பாட்டினையும் நீதிமன்றம் கொண்டுள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்தத் தீர்மானங்கள் 2006ஆம் ஆண்டிலே எப்புரு சுதாகர் மற்றும் யுசெ எதிர் ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மற்றவர்கள் வழக்கில் உயர் நீதிமன்றத்தின் வரலாற்று ரீதியான தீர்மானத்திற்கு இட்டுச்சென்றன. இவை கருணை மனுவினை ஏற்றுக்கொள்வதில் அல்லது நிராகரிப்பதில் ஜனாதிபதியின் தீர்மானத்தினைப் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் சவாலுக்குட்படுத்துவதற்கான தளத்தினை உருவாக்கின:

  • பூரண அவதானம் செலுத்தப்படாமல் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டளையானது தவறான நோக்கத்துடன் வழங்கப்பட்டது. கட்டளையானது புறச்சார்பான அல்லது முற்றுமுழுவதும் சம்பந்தமற்ற கருதுகோள்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பரீசீலனைக்கு உட்படுத்தப்படவில்லை, அல்லது கட்டளையானது தன்னிச்சையானதாக உள்ளது.

மேலும், 2005ஆம் ஆண்டில், கருணை மனுக்களை மீளாய்வு செய்வதற்கான வழிகாட்டல்களை ஜனாதிபதி அப்துல் கலாம் தனது சுயமுன்னெடுப்பின் பேரில் நிர்ணயித்தார். இதன் மூலம் இந்திய அரசியலமைப்பினால் இந்திய யூனியனின் ஜனாதிபதி என்கின்ற ரீதியில் கருணை மனுக்கள் தொடர்பில் நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்துவதற்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தரப்படுத்தப்பட்டது.

ரத்னாயக்காவிற்கு மன்னிப்பினை வழங்குவதில் மேலே கலந்துரையாடப்பட்ட செயன்முறைக்கு மேலதிகமாக அல்லது அது இல்லாமலே, எழுகின்ற மிக முக்கியமான கேள்வி மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கத்தான் வேண்டுமா என்பதாகும். உச்ச நீதிமன்றத் தீர்மானங்கள் எடுத்துக்காட்டுவது போல இக்கொலைகள் மிகக் குரூரமானவையாகக் காணப்படுவதுடன் கொலைகள் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்கும் விதத்தில் நேரமும் கவனமும் எடுக்கப்பட்டிருக்கின்றமை இவை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலைகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர் எவ்விதமான கழிவிரக்கத்தினையும் காட்டவில்லை. குற்றவாளிக் கூண்டிலே அவர் வழங்கிய வாக்குமூலத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தினைச் சுட்டிக்காட்டியவரே அவர்தான் எனும் உண்மையினையும் தாண்டித் தனக்கும் கொலைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மறுத்துள்ளார். இவர் குற்றவாளிக் கூண்டில் வழங்கிய வாக்குமூலத்தினை நீதாய நீதிமன்றம் நிராகரித்ததை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டு ஆயுத மோதலின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மிக அரிதாகவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இந்தச் சூழமைவில் குற்றத்தினை இழைத்த ஒருவரை வகைப்பொறுப்புக் கூறவைத்த அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது. எனவே, நீதியின் நலன்களைக் காப்பதில் இந்த மன்னிப்பு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பதுடன் குறிப்பாக யுத்தத்துடன் தொடர்புடைய வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களை வகைப்பொறுப்புக் கூறவைப்பதிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தின் நிகழ்வுகளுக்குப் பரிகாரம் செய்து அரசுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் இடையிலான அல்லது சமுதாயங்களுக்கு இடையிலான நம்பிக்கையினை மீளக்கட்டியெழுப்புவதையும் இந்த மன்னிப்பு கீழறுத்துள்ளது.

அடையாளம் மற்றும் பாதிப்புறுநிலை 

எந்தவொரு சமூகத்திலும் குறிப்பிட்ட சமுதாயக் குழுமம் ஒன்று வரலாற்று ரீதியான பாகுபாட்டிற்கு அல்லது வரலாற்று ரீதியான பாகுபாட்டுடன் முறைமைவாய்ந்த மற்றும் கட்டமைப்பு ரீதியான பாகுபாட்டிற்கு முகங்கொடுப்பதும் தொடர்ந்து முகங்கொடுத்து வருவதும் இடம்பெற்று வருகின்ற காரணத்தினால் ஏனைய சமுதாயக் குழுமங்களை விட இக்குழுமம் அடக்குமுறைகளினாலும் வன்முறையினாலும் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்துக் காணப்படுகின்றது. இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் இவ்வகையான குழுமத்தினுள் உள்ளடங்குகின்றனர். இவர்களின் பாதிப்புறுநிலை என்பதன் அர்த்தம் இவர்களினால் தமது உரிமைகளை அனுபவிக்க முடியாது என்பதாகும். இதனால், இவர்கள் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள மேலதிக வன்முறைகளுக்கு உட்படும் ஆபத்தினைக் கொண்டுள்ளனர் என்பதுடன் தாம் அனுபவிக்கும் வன்முறைகளுக்கு எதிராக நீதியினைத் தேடுவதற்கான ஆற்றலையும் இழக்கின்றனர்.

இச்சம்பவத்தில் மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தமிழ் மக்களாவர். இவர்கள் உள்நாட்டு ஆயுத மோதலினால் இடம்பெயர்ந்த அப்பாவி மக்கள். இவர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் இடம்பெயர்ந்திருக்கலாம் என்பதுடன் இடப்பெயர்வின் காரணத்தினால் தங்களின் சொத்துக்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்து அதன் விளைவாகப் பொருளாதாரப் பாதுகாப்பினையும் இழந்திருக்கலாம். இவர்கள் நாளாந்தம் தமது வீடு வளவுகளுக்கு பிரவேசித்து அங்கிருந்து தம்மால் எடுத்துச்செல்லக்கூடிய உற்பத்திப் பொருட்களை எடுத்துக்கொண்டு மாலை 4 மணியளவில் திரும்பவும் சென்றுவிடுவார்கள். இந்த நிகழ்வே இவர்கள் பொருளாதாரப் பாதுகாப்பின்மையினால் மட்டும் பாதிக்கப்படவில்லை என்பதோடு, தமது உயிருக்கான பாதுகாப்பும் அற்றவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை நிரூபிக்கப் போதுமானதாகும். எனவே, இவர்களின் அடையாளம் தொடர்பாக மேலே குறிப்பிடப்பட்ட பல்வேறு காரணங்கள் இவர்கள் வன்முறைக்கு முகங்கொடுப்பதற்கான ஆபத்திற்கு இவர்களை ஆளாக்கியிருந்தது என்பதே உண்மையாகும். பாகுபாடு, விளிம்புநிலைக்குத் தள்ளப்படல் மற்றும் பாதிப்புறுநிலை ஆகியவற்றின் நீண்ட தொடர்ச்சியினை எடுத்துக்காட்டும் இக்காரணிகள், குற்றத்தினை இழைத்தோரை வகைப்பொறுப்புக் கூறவைத்து நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கான இக்குடும்பங்களின் ஆற்றலைத் தொடர்ந்தும் மோசமாகப் பாதித்துவருகின்றன. இந்தக் கட்டுரையின் முதல் வரியிலேயே பாதிக்கப்பட்டவர்களின் இனத்துவத்தினை அடையாளப்படுத்தியமை சில குறிப்பிட்ட அடையாளங்களினால் உருவாக்கப்படும் பல்வேறுவகையான பாதிப்புறுநிலையினை எடுத்துக்காட்டுவதற்கான பிரக்ஞைமிக்க தீர்மானமாகும்.

படுகொலைகள் நடந்து இரண்டு தசாப்தங்களின் பின்னரும்கூட, படுகொலைகளை நடத்திய குற்றவாளி கழிவிரக்கம் காட்டாமலும் புனர்வாழ்வு செய்யப்படாமலும் இருந்த நிலையில், பின்பற்றப்பட்டிருக்கவேண்டிய உரிய செயன்முறை எதுவும் பின்பற்றப்படாமல் நிறைவேற்று அதிகாரத்தினால் குற்றவாளி மன்னிக்கப்பட்டமை பொதுமக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் கோபத்தினை ஏற்படுத்தவில்லை. இவ்வாறு பொதுமக்கள் தங்கள் அதிருப்தியையோ அல்லது கோபத்தினையோ இந்த விடயத்தில் காத்திரமாகக் காட்டாமல் இருப்பது யாரின் இழப்பிற்காகத் துக்கம் அனுஷ்டிப்பது பெறுமதியானது எனும் கேள்வியினை எழுப்புகின்றது. ஜூடித் பட்லர் குறிப்பிடுவதுபோல, யாரின் உயிர் பெறுமதியானது எனக் கருதப்படுகின்றது, யாரின் உயிருக்காகத் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது, யாரின் உயிரிழப்புக்காக வருந்தத்தேவையில்லை என்பதைக் கேட்பதன் மூலம் “நாம்” யுத்தத்தின் இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். உயிருக்காக வருந்தவேண்டியவர்கள் மற்றும் வருந்தத் தேவையில்லாதவர்கள் என மக்களைப் பிரிப்பதே யுத்தம் என நாம் நினைக்கலாம். வருத்தப்படத் தேவையில்லாத உயிர் என்பது துக்கம் அனுஷ்டிக்கப்படத் தேவையில்லாத உயிராகும். ஏனெனில், அந்த உயிர் ஒருநாளும் வாழவில்லை. அதாவது, அது ஒருபோதுமே உயிர் எனவே கருதப்படவில்லை.[iii] இந்த உயிர்கள் பொருட்படுத்தத் தேவையற்றவை என மக்கள் நினைத்தால் அவை பின்வரும் காரணங்களினால் இருக்கலாம் என பட்லர் குறிப்பிடுகின்றார்: ‘நாம் இவ்வாறு உணர்வதற்கு ஒரு காரணம் நாம் எம்மைச் சுற்றியுள்ள உலகினை எவ்வாறு அர்த்தப்படுத்தப் பழகியுள்ளோம் என்பதாகும். அதாவது, நாம் எதை உணர்கின்றோமோ அதை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்துகின்றோமோ அது உண்மையிலேயே உணர்வினைத்தாமே மாற்றக்கூடியது மற்றும் மாற்றுகின்றது’. எனவே, படுகொலை செய்யப்பட்டவர்கள் வடக்கில் வாழ்ந்த ஒரே காரணத்தினால் அல்லது அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் பயங்கரவாதிகளாக நோக்கப்பட்டால், அவர்களின் உயிர்களும் ‘உயிர்களே அல்ல’ என்றே கருதப்படும். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘சுனிலைக் காப்பாற்றல்’ எனும் ஆய்வின் மூலம் இது உறுதிப்படுத்தப்படுகின்றது. சுனிலைக் (ரத்னாயக்க) காப்பற்றல் எனும் தலைப்பிலான பேஸ்புக் பக்கம் பயன்படுத்திய உபாயமார்க்கங்களில் ஒன்று சிறுபான்மைச் சமூகங்களை இலக்குவைத்த வெறுப்புரைகளாகும் என்பதுடன் இந்த வெறுப்புப் பிரச்சாரங்கள் தமிழர்களை ஒரு குறிப்பிட்ட முத்திரை குத்தப்பட்ட இனக்குழுமமாக ஆக்கி அவர்களைப் பயங்கரவாதிகளுடன் சமப்படுத்தி அதன் மூலம் மிருசுவில் படுகொலைகள் நியாயப்படுத்தப்பட்டதை ஆய்வு கண்டறிந்தது.[iv] பாதிக்கப்பட்டவர்கள் பச்சாதாபப்படவோ அல்லது துக்கம் அனுஷ்டிக்கப்படவோ தகுதியற்ற யாரோ சிலர் எனச் சித்தரிப்பது அவர்களுக்கெதிராக இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்குவதற்கான அல்லது அவையெல்லாம் குற்றச்செயல்களே அல்ல, மாறாக அவை வீரதீரச் செயல்களே என்ற பிம்பத்தினை உருவாக்குவதற்கான ஒரு வழியே ஆகும்.

கொள்ளை நோய்க் காலத்தில் பிரஜாவுரிமை 

ஜனநாயகத்தில் கொவிட் 19 இன் தாக்கம் எனும் தலைப்பிலான தனது அண்மைய கட்டுரையில் யுவல் நோவா ஹராரி, ‘கொரனா வைரஸ் பிரசாவுரிமையின் பாரிய சோதனையாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.[v] கொள்ளை நோயின் போது அரசாங்கங்கள் குடிமை உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்ற ஆனால் கொள்ளை நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமானது என நியாயப்படுத்தப்படுகின்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகையில் பாதிக்கப்படுகின்ற முதலாவது விடயம் குறிப்பாக அரசின் செயற்பாட்டினை அல்லது அரசு செயற்படாமையினைச் சவாலுக்குட்படுத்தும் அல்லது விமர்சிக்கும் பேச்சு சுதந்திரமாகும்.

இலங்கையினைப் பொறுத்தளவில் தனது உரிமைகளைச் சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கான பிரஜையின் ஆற்றல் எமது வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு முடக்கப்பட்ட உரிமைகளில் ஒன்றுதான் பேச்சு சுதந்திரம். எவ்வாறாயினும், அடக்குமுறை நிலவிய காலங்களில் கூட அதிகாரத்தினை நோக்கி உண்மையினைக் கூறுவதற்கான ஆற்றல், நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானங்களை விமர்சிப்பதற்கான ஆற்றல் போன்ற ஒருவரின் பிரஜாவுரிமையினைப் பயன்படுத்துவதன் இன்றியமையாத அம்சங்கள் வெவ்வேறு நபர்களினாலும் குழுமங்களினாலும், மீண்டும் ஒரு தடவை, அவர்களின் அடையாளம் மற்றும் சிறப்புரிமை ஆகியவற்றின் அடிப்படையில், வித்தியாசமாக அனுபவிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மௌனம் உள்ளடங்கலாக, மன்னிப்புப் பற்றிய சொல்லாடலானது (அதாவது, யார் பேசுவது, யார் மௌனம் காப்பது மற்றும் பேசுபவர்களினால் என்ன சொல்லப்படுகின்றது) பேச்சுச் சுதந்திரத்தில் பல்வேறு சமூக – பொருளாதார மற்றும் அரசியல் கூறுகள் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன எனும் உண்மையினையே எடுத்துக் காட்டுகின்றது. உதாரணமாக, மன்னிப்புப் பற்றிப் பெரிதும் கரிசனை கொண்டிருந்த நபர்களுடன் நான் கலந்துரையாடியிருக்கின்றேன். ஆனால், அடக்குமுறை பற்றிய அச்சம் காரணமாக அவர்கள் பகிரங்கமாகப் பேசமுன்வராமல் இருக்கின்றனர். இந்த விடயத்தில் நான் என்ன கூறுகின்றேன் என்பது பற்றிக் கவனமாக இருக்குமாறும் இல்லாவிடில் நான் ஒரு துரோகியாக அல்லது தேசத்திற்கு எதிரானவராகச் சித்தரிக்கப்படலாம் என்றும் என்னில் அக்கறை கொண்ட நண்பர்களும் சகபாடிகளும் என்னை எச்சரித்துள்ளனர். அப்படி முத்திரைக் குத்துவதன் நோக்கம், அவ்வாறு முத்திரைக் குத்தப்பட்டவர் தாக்கப்படுவது நியாயமானது என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவதாகும். நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்துவது பற்றிய பகிரங்கமான மற்றும் சுதந்திரமான சொல்லாடல் அடக்குமுறைகள் இன்றி அல்லது மோசமான பின்விளைவுகள் இன்றி நடக்க முடியுமா என்பது கொள்ளை நோயின் போதும் அதன் பின்னரும் கருத்து வேறுபாட்டிற்கான தளம் இருக்கின்றதா? என்பதை வெளிக்காட்டும். இது “நாம் எமது பிரஜாவுரிமையினைச் சுதந்திரமாகவும் பூரணமாகவும் பயன்படுத்தக்கூடியதாக இருக்குமா? என்கின்ற ஒரு பரீட்சையாகும்.”

 சார்ஜன்ட் ரத்னாயக்கவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மரணதண்டனை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் சித்திரவதையாகவும் இல்லாதொழிக்கப்படவேண்டிய தண்டனையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை மரண தண்டனை இல்லாமலாக்கப்படுவதற்கான காரணங்களைப் பற்றிக் கலந்துரையாடாது. ஜனாதிபதியின் மன்னிப்புப் பற்றி மட்டுமே கவனம் செலுத்தும்.

ambika-satkunanathan.jpg?resize=110%2C11அம்பிகா சற்குணநாதன்

Justice in the Time of a Pandemic என்ற தலைப்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் எழுதி கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.


[ii] ஹிரு தொலைக்காட்சியில் திருமதி ரத்னாயக்கவுடனான நேர்காணல்

[iii] https://youtu.be/1c_vGELr5qYஜூடித் பட்லர், ‘ஸ்திரமற்ற ஆபத்தான நிலையும் துயருருநிலையும் – உயிர் வருத்தப்படக்கூடியதாக இருக்கையில்’, 16 நவம்பர் 2015  

[iv] https://www.versobooks.com/blogs/2339-judith-butler-precariousness-and-grievability-when-is-life-grievableரோஷினி விக்ரமசிங்ஹ மற்றும் சஞ்சன ஹத்தொடுவ, ‘சுனிலைக் காப்பாற்றல்: சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பேஸ்புக் பக்கத்திலுள்ள ஆபத்தான பேச்சுக்கள் பற்றிய ஆய்வு, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் 2015   https://www.cpalanka.org/wp-content/uploads/2015/10/SS-Final-RW-SH-formatted.pdf

[v] யுவல் நோவா ஹராரி, ‘கொரனா வைரஸின் பின்னரான உலகம்’ 20 மார்ச் 2020 https://www.ft.com/content/19d90308-6858-11ea-a3c9-1fe6fedcca75

https://maatram.org/?p=8402

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.