Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ்: எதிர்காலம் எப்படி இருக்கும்? வீழும் பொருளாதாரத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கொரோனா வைரஸ்: எதிர்காலம் எப்படி இருக்கும்? வீழும் பொருளாதாரத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்?

சைமன் மெயர் பிபிசிக்காக 
கொரோனா வைரஸுக்கு பிறகான எதிர்காலத்தை கட்டமைக்கும் வழிகள்Getty Images

(கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து பிபிசி தமிழில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு பகுதிகள் கொண்ட கட்டுரை தொகுப்பின் இரண்டாவது மற்றும் கடைசிபகுதி இது.)

நாம் எதிர்காலத்துக்குச் சென்று பார்ப்பதற்கு உதவும் வகையில் எதிர்காலவியல் ஆய்வுத் துறையில் உள்ள ஒரு பழைய உத்தியை நான் இங்குப் பயன்படுத்தப் போகிறேன். எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று நீங்கள் நினைக்கிற இரண்டு காரணிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் காரணிகள் வெவ்வேறு விதமாகக் கூட்டுச் சேர்ந்து ஊடாடினால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 

நான் எடுத்துக்கொள்ள விரும்பும் இரண்டு காரணிகள் விழுமியங்கள் மற்றும் மையப்படுத்தல். விழுமியம் என்பது நம் பொருளாதாரத்தின் வழிகாட்டும் கொள்கைகளாக எவை இருந்தாலும் அவற்றைக் குறிப்பதாகும். பரிமாற்றத்தையும், பணத்தையும் மேம்படுத்திக்கொள்ள நமது வளங்களைப் பயன்படுத்துகிறோமா? அல்லது வாழ்வை மேம்படுத்திக்கொள்ளப் பயன்படுத்துகிறோமா?

மையப்படுத்தல் என்பது, விஷயங்கள் எப்படி ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பது. ஏராளமான சிறு அலகுகளாக அவை ஒழுங்கமைக்கப்படுகின்றனவா? அல்லது அதிகாரம் செலுத்தும் ஒரே பெரிய ஆற்றலால் அவை ஒழுங்கமைக்கப்படுகின்றனவா என்பது தொடர்பானது அது.

கொரோனா வைரஸ்Getty Images

இந்தக் காரணிகளை நாம் ஒரு தொகுப்பாக்கிக்கொள்வோம். பிறகு கற்பனையான சூழ்நிலைகளில் அவற்றைப் பொருத்திப் பார்ப்போம். 

கொரோனா வைரஸ் சிக்கலுக்கு, கீழ்க்கண்ட நான்கு தீவிர பாணிகளில் காரணிகளை ஒன்று சேர்த்து எதிர்வினையாற்றிப் பார்ப்போம். 

  • அரசு முதலாளித்துவம்: பரிமாற்ற மதிப்புக்கு முக்கியத்துவம் தரும், மையப்படுத்தப்பட்ட எதிர்வினை.
  • காட்டுமிராண்டி நிலை : பரிமாற்ற மதிப்புக்கு முக்கியத்துவம் தரும், பரவலாக்கப்பட்ட எதிர்வினை. 
  • அரசு சோஷியலிசம்: உயிரை, வாழ்வைப் பாதுகாக்க முக்கியத்துவம் தரும், மையப்படுத்தப்பட்ட எதிர்வினை.
  • பரஸ்பர உதவி: உயிரை வாழ்வைப் பாதுகாக்கும் பரவலாக்கப்பட்ட எதிர்வினை.

அரசு முதலாளித்துவம்

கோவிட்-19 நோய்த்தொற்று பிரச்சனைக்கு அரசு முதலாளித்துவம் என்று மேலே கூறியிருக்கும் முறையில்தான் பெரும்பாலும், உலகம் முழுவதும் எதிர்வினையாற்றுகிறார்கள். வகைமாதிரியான எடுத்துக்காட்டுகள்: பிரிட்டன், ஸ்பெயின், டென்மார்க். 

அரசு முதலாளித்துவ சமூகங்கள், பொருளாதாரத்தின் வழிகாட்டும் ஒளியாக பரிமாற்ற மதிப்பு என்பதையே கொண்டிருக்கின்றன. ஆனால் சிக்கல் ஏற்படும்போது சந்தைக்கு அரசு உதவி தேவைப்படும் என்பதை இவை ஏற்றுக்கொள்கின்றன. உடல் நலமின்றியோ, உயிர் பயத்திலோ இருப்பதால் தொழிலாளர்கள் பலரும் வேலை செய்ய முடியாத நிலையில் இருப்பதால், அரசு தலையிட்டு விரிவான நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி தருவதன் மூலமாகவோ, கடன் தருவதன் மூலமாகவோ கீன்சிய கருத்தியல் வழியிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் இவை செயல்படுத்துகின்றன.

இத்தகைய உதவிகளைக் குறுகிய காலத்துக்கே செய்யவேண்டியிருக்கும் என்பது இங்குள்ள எதிர்பார்ப்பு. வணிகம் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்யும் வகையில், எத்தனை நிறுவனங்களைச் செயல்பட அனுமதிக்க முடியுமோ அத்தனை நிறுவனங்களை செயல்பட அனுமதிப்பது இந்த நடவடிக்கைகளின் முக்கிய அம்சம். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் இன்னமும் உணவு வகைகளை இன்னமும் சந்தையே விநியோகம் செய்கிறது. இதற்காக போட்டி ஒழுங்குமுறை சட்டங்களை அரசு தளர்த்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள் வழங்கப்படுகின்றன. 

வழக்கமான தொழிலாளர் சந்தை செயல்பாட்டை சீர்குலைக்காத வகையில் இது செயல்படுத்தப்படுகிறது. பிரிட்டனில் உள்ள எடுத்துக்காட்டைக் கொண்டுபார்த்தால் தொழிலாளர்களுக்கான உதவித் தொகை முதலாளிகள் மூலமாக விநியோகிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட தொழிலாளி சமூகத்துக்கு எவ்வளவு பயனுள்ள பொருள்களை உற்பத்தி செய்கிறார் என்பதன் அடிப்படையில் பார்க்காமல், அவர் உற்பத்தி செய்கிறவற்றின் பரிமாற்று மதிப்பின் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகையின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ்Getty Images

இது ஒரு வெற்றிகரமான வழிமுறையாக இருக்குமா? கோவிட்-19 நோய் குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்குமானால், இது வெற்றிகரமான வழிமுறையாக இருக்கக்கூடும். சந்தை தொடர்ந்து செயல்படுவதைப் பராமரிக்கும் வகையில் முழு முடக்க நிலை தவிர்க்கப்பட்டுள்ளதால் தொற்று பரவுவது தொடரும் என்றே தெரிகிறது. 

எடுத்துக்காட்டாக, பிரிட்டனில், அவசியமில்லாத கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதன் மூலம் கட்டுமானத் தலங்களில் மக்கள் ஒன்று கலப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. சாவு எண்ணிக்கை உயருமானால், அரசுத் தலையீட்டை குறைந்தபட்சமாக வைத்திருப்பது கடினமாக இருக்கும். நோய்த் தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தால் மக்களிடம் ஆவேசம் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஆழமடையும். 

இதனால் சந்தை தொடர்ந்து செயல்படுவதைப் பராமரிக்கும் வகையில் மேலும் தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு உருவாகும்.

காட்டுமிராண்டி நிலை

கொரோனா வைரஸுக்கு பிறகான எதிர்காலத்தை கட்டமைக்கும் வழிகள்Getty Images

இந்தப் பிரச்சனை தொடருமானால், எப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்குக் கொண்டு செல்லும் என்று ஆராய்வதற்காக நாம் கற்பனை செய்த நான்கு நிலைகளிலேயே இதுதான் மோசமான நிலையாக இருக்கும். பரிமாற்ற மதிப்பையே வழிகாட்டும் கொள்கையாக நாம் தொடர்ந்து வைத்திருந்தால், அதேநேரம் நோயாலும், வேலையின்மையாலும், சந்தைக்கு வெளியே விரட்டப்பட்டவர்களுக்கும் ஆதரவு காட்ட மறுத்தால் காட்டுமிராண்டி நிலை என்று நாம் குறிப்பிடும் நிலையே எதிர்காலம். நாம் இதுவரை பார்த்திராத ஒரு கற்பனையான நிலையை இது விவரிக்கிறது. 

இந்த சூழ்நிலை வந்தால், அப்போது வணிக நிறுவனங்கள் தோல்வி அடையும். தொழிலாளர்கள் பட்டினி கிடப்பார்கள். ஏனெனில் அப்போது சந்தையின் கடும் எதார்த்த நிலையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க எந்தப் பொறியமைவும் அப்போது இருக்காது. மருத்துவமனைகளுக்கு அசாதாரண நடவடிக்கைகள் மூலம் ஆதரவு கிடைத்திருக்காது. அதனால் அங்கெல்லாம் பெரும் கூட்டம் இருக்கும். மக்கள் இறப்பார்கள். இந்தக் காட்டுமிராண்டி நிலை என்பது ஒரு ஸ்திரமற்ற நிலை. இந்த நிலை ஒரு முழுமையான பேரழிவிலோ அல்லது அரசியல், சமூக சேதங்களுக்குப் பிறகு இங்கு குறிப்பிட்டிருக்கிற பிற நிலைகளுக்கு மாறிச் சென்றோ முடிவடையும். 

இந்த நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறதா? உலகளாவிய தொற்றின் ஒரு நிலையில் தவறுதலாக ஏற்படலாம், அல்லது தொற்று உச்சநிலைக்குச் சென்ற பிறகு வேண்டுமென்றே உருவாக்கப்படலாம் என்ற கவலை இருக்கிறது. தவறுதலாக என்பது, தொற்று மிக மோசமாக வளரும் சூழ்நிலையில் அரசாங்கம் போதிய அளவு தலையிடாவிட்டால் ஏற்படும். 

கொரோனா வைரஸ்Getty Images

இந்த நிலையில் வணிக நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் உதவிகள் வழங்கப்படலாம். ஆனால் மிகப் பரவலாக ஆகிவிட்ட தொற்று நோயின் காரணமாக ஏற்படும் சந்தை சரிவைத் தடுக்கும் அளவுக்கு இது போதுமானதாக இல்லாவிட்டால் பெரும் குழப்பம் சூழும். இந்நிலையில் மருத்துவமனைகளுக்குக் கூடுதல் நிதியும், ஆட்களும் அனுப்பப்படலாம். ஆனால் அவை போதுமானதாக இல்லாவிட்டால் சிகிச்சை தேவைப்படும் மக்கள் பெருமளவில் திருப்பி அனுப்பப்படலாம். 

அதைப் போலவே ஏற்பட வாய்ப்புள்ள மற்றொரு விளைவு என்னவென்றால், இந்த உலகளாவிய தொற்று நோய் அதன் உச்ச நிலையை அடைந்த பிறகு சகஜ நிலைக்குத் திரும்ப விரும்பும் அரசுகள் ஏராளமான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஜெர்மனியில் இந்த நிலை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த நிலை ஒரு பேரழிவாக இருக்கும். இந்த சிக்கன நடவடிக்கைக் காலத்தில் இன்றியமையாத சேவைகளுக்கான நிதி குறைக்கப்படும், அல்லது ரத்து செய்யப்படும் என்பதால் இந்த உலகளாவியத் தொற்றுக்கு எதிர்வினையாற்றுவதற்கான நாடுகளின் வலிமையை இது பாதிக்கும் என்பது மட்டுமே காரணமல்ல. 

பொருளாதார சமூகத் தோல்விகள் ஏற்பட்டு அதனால் சமூக, அரசியல் ஆவேசமும், பதற்றமும் ஏற்படும் என்பதாலும், இதன் விளைவாக, அரசு தோல்வியடைந்து, அரசும், சமூக நலத்திட்டங்களும் சிதைந்துபோகும். 

அரசு சோஷியலிசம் 

பொருளாதாரத்தின் இதயத்தில் வேறு விதமான விழுமியங்களை நிறுவுகிற பண்பாட்டுப் பெயர்ச்சி ஏற்படுவதன் மூலம் ஏற்பட சாத்தியமுள்ள நிலையே அரசு சோஷியலிசம். பிரிட்டன், ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த நிலையை எதிர்காலத்தில் வந்து அடைவது நாம் ஊகித்த நான்கு சாத்தியங்களில் ஒன்று. 

மருத்துவமனைகளைத் தேசிய மயமாக்குதல், தொழிலாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல் போன்றவை இந்த அமைப்பில் சந்தையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாக அல்லாமல் உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாகப் பார்க்கப்படுவதுதான் முக்கிய வேறுபாடாக இருக்கும். இது போன்ற ஒரு நிலைமையில் பொருளாதாரத்தில் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாக இருக்கும் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகத் தலையிடும். 

எடுத்துக்காட்டாக, உணவு, ஆற்றல், குடியிருப்பு போன்ற துறைகளை அரசு பாதுகாக்கும். இதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் சந்தையின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பாதிக்கப்படாது. அரசு மருத்துவமனைகளைத் தேசிய மயமாக்கும், வீடுகள் குடியிருப்பதற்கு இலவசமாக கிடைக்கும். இறுதியாக அரசே எல்லாவற்றையும் வழங்கும். அடிப்படைப் பொருள்கள், குறைக்கப்பட்ட மனித வளத்தைக் கொண்டு உற்பத்தி செய்ய சாத்தியமாக இருக்கும் நுகர்வுப் பண்டங்கள் உள்ளிட்ட பண்டங்களை அணுகுவதற்கு எல்லா மக்களுக்கும் வழிவாய்ப்புகள் இருக்கும். 

குடிமக்களுக்கும், அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைப் பெறுவதற்கும் நடுவே, இடைத்தரகர்களாக வேலைதரும் முதலாளிகள் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் ஊதியம் நேரடியாக செலுத்தப்படும். அந்த ஊதியம் அவர்கள் உற்பத்தி செய்த பண்டங்களின் பரிமாற்று மதிப்பைக் கொண்டு கணக்கிடப்பட்டதாக இருக்காது. 

கொரோனா வைரஸ்Getty Images

ஊதியம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்கும். நாம் உயிரோடு இருப்பதால் வாழ்வதற்குத் தேவையானதைப் பெறுவதற்கு நாம் தகுதியுடையவர்கள் என்ற அடிப்படையில் அது இருக்கும். அல்லது செலுத்துகிற உழைப்பின் பயன் அடிப்படையில் இருக்கும். சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள், டெலிவரி வாகனங்களின் டிரைவர்கள், கிடங்குப் பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள் ஆகியோரே அந்தப் புதிய உலகின் முதன்மை செயல் அதிகாரிகளாக, அதாவது சிஇஓ-க்களாக, இருப்பார்கள். 

உலகளாவிய தொற்று நீடிப்பதால் ஏற்படும் தாக்கத்தின் காரணமாகவும், அரசு முதலாளித்துவத்தை உருவாக்கும் முயற்சியின் பின் விளைவாகவும் அரசு சோஷியலிசம் உருவாக வாய்ப்பிருக்கிறது. ஆழமான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, இன்று நாம் பார்க்கிற திட்டமான கீன்சிய பொருளியல் கொள்கைகளால்(பணம் அச்சடிப்பது, எளிதாக கடன் கொடுப்பது போன்றவை ) தேவைகளை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு அளிப்புச் சங்கிலி சீர்குலைந்து போகும் நிலையில், உற்பத்தியை அரசு கையில் எடுக்கும். 

இந்த அணுகுமுறையில் ஆபத்துகள் உண்டு. எதேச்சாதிகாரம் தோன்றாமல் நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும். ஆனால் சிறப்பாக செயல்படுத்தினால், கோவிட்-19 தீவிரமாகப் பரவும் நிலையில் நமது மிகச் சிறந்த நம்பிக்கையாக இந்த அமைப்பு இருக்கலாம். சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தின் மையக் கருவான செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்காக வளங்களை ஒரு வலிமையான அரசு ஒழுங்கமைத்து ஒன்று திரட்டுவதாக இது அமைந்திருக்கும். 

பரஸ்பர உதவி

கோவிட்-19 சிக்கலின் விளைவாக ஏற்படும் நெருக்கடியால், மாற்றங்களால் உருவாகும் என்று நாம் கணிக்கிற மற்றொரு நிலை- பரஸ்பர உதவி நிலை. 

இந்த நிலையில், உயிரை, வாழ்வைப் பாதுகாப்பதே பொருளாதாரத்தின் வழிகாட்டும் கொள்கையாக இருக்கும். ஆனால் இந்த நிலையில், தீர்மானகரமான பாத்திரத்தை அரசு ஏற்காது. அதற்குப் பதிலாக, தனி நபர்களும், சிறு குழுக்களும் தங்கள் சமூகங்களுக்கான ஆதரவையும், பராமரிப்பையும் ஒருங்கிணைக்கும். 

இந்த நிலையில் உள்ள ஓர் இடர்ப்பாடு, சுகாதாரம் போன்ற துறைகளின் திறனை விரிவுபடுத்துவதற்குத் தேவையான வளங்களை வேகமாகவும், வலுவாகவும் திரட்ட முடியாது. ஆனால் சமுதாய ஆதரவு வலைப்பின்னல்களைக் கட்டமைத்து பலவீனமானவர்களைப் பாதுகாக்கவும், காவல்துறை தனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றுவதன் வாயிலாகவும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை இந்த முறையில் திறமையாக முன்னெடுக்க முடியும். 

கொரோனா வைரஸ்Getty Images

புதிய ஜனநாயக அமைப்புகள் உருவாவது இந்த நிலையின் மிகுந்த லட்சியவாத வடிவமாக இருக்கும். சமுதாய ஒன்றுகூடல் மூலமாக பெரிய அளவிலான வளங்களை ஒப்பீட்டளவில் வேகமாக திரட்ட முடியலாம். நோய்ப் பரவலைத் தடுக்க மக்கள் அந்தந்த சமுதாயங்களில் ஒன்றுகூடி வட்டார அளவிலான உத்திகளை வகுக்கவும், அவர்களுக்கு தேவையான திறமை இருந்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த முறையில் முடியும். 

முன்னர் கூறிய மூன்று முறைகளில் எதிலிருந்து வேண்டுமானாலும் இந்த நிலை உருவாகலாம். காட்டுமிராண்டி நிலை, அல்லது, அரசு முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவதற்கு சாத்தியமான வழிகளில் ஒன்றாக இது இருக்கும். அரசு சோஷியலிச நிலைக்கு உதவி செய்யக்கூடியதாகவும் இது இருக்கலாம். மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றிய எபோலா வைரஸ் பெருந்தொற்றினை சமாளிப்பதற்குச் சமுதாய எதிர்வினையே அச்சாணியாக இருந்தது நமக்குத் தெரியும்.

ஏற்கெனவே நடைபெற்றுவரும், சமுதாய ஆதரவுப் பணிகள், உதவிப் பொருள் தொகுப்புகள் விநியோகம் ஆகியவற்றில் இந்த எதிர்கால நிலைக்கான வேர்கள் இருக்கின்றன. அரசு எதிர்வினைகளின் தோல்வியாகவும் இவற்றை நாம் பார்க்கலாம். அல்லது, புதிதாகக் கிளம்பும் பிரச்சனை ஒன்றை சமாளிப்பதற்கான நடைமுறை சாத்தியமான, கருணை மிகுந்த சமுதாய எதிர்வினையாகவும் இவற்றைப் பார்க்கலாம். 

நம்பிக்கையும், அச்சமும்

இந்த அகக்காட்சிகள் எல்லாம் நிலைமையின் தீவிர வடிவங்கள், அல்லது தீவிர நிலையின் சித்திரங்கள். ஒரு நிலை நழுவி மற்றொன்றாக மாறக்கூடியவை. அரசு முதலாளித்துவம் தோன்றி அது காட்டுமிராண்டி நிலையாக சரியலாம் என்பதே என் அச்சம். அரசு சோஷியலிசமும் பரஸ்பர உதவி நிலையும் ஒன்று கலந்த ஒரு நிலையே எனது நம்பிக்கை. இந்த நிலையில் வலுவான, ஜனநாயகரீதியான அரசு வளங்களைத் திரட்டி, வலுவான சுகாதார அமைப்பைக் கட்டியெழுப்பும்; சந்தையின் விருப்பு வெறுப்புகளில் இருந்து பலவீனமானவர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும்; பொருளற்ற வேலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக பரஸ்பர உதவிக் குழுக்களை உருவாக்கிக் கொள்கிற குடிமக்களுக்கு எதிர்வினையாற்றக்கூடியதாக, அவர்களை அதிகாரப்படுத்துவதாக இருக்கும். 

 

இந்த அனைத்து நிலைகளிலும் அஞ்சுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன, நம்பிக்கை கொள்வதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவு. நமது தற்போதைய அமைப்பு முறையில் தீவிரமான குறைபாடுகள் இருப்பதை கோவிட்-19 சிக்கல் எடுத்துக்காட்டுகிறது. சிறப்பான முறையில் இதற்கு எதிர்வினையாற்றுவதற்கு தீவிரமான சமூக மாற்றங்கள் தேவைப்படலாம். இதற்கு சந்தையில் இருந்தும், பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதற்கான முதன்மை வழிமுறையாக லாபம் என்பதையே கொண்டிருப்பதில் இருந்தும் தீவிரமாக விலகிச் செல்லவேண்டும் என்று வாதிட்டிருக்கிறேன். 

இந்த சிக்கலின் ஒரு ஆதாயம், எதிர் காலத்தில் தோன்றக்கூடிய உலகளாவிய தொற்றுகள், பருவநிலை மாற்றம் போன்ற நிகழவிருக்கிற அபாயங்களில் தளர்ந்துவிடாமல் காக்கும் அளவுக்கு மனிதாபிமானம் மிக்க அமைப்பை கட்டியெழுப்பும் சாத்தியத்தை உருவாக்கியிருப்பதுதான். 

சமூக மாற்றம் பல இடங்களில் இருந்து உருவாகி வரலாம்; பலவற்றின் செல்வாக்கினாலும் தோன்றலாம். ஆனால் உருவாகவிருக்கிற சமூக வடிவங்கள் மற்றவர்கள் மீது காட்டுகிற அக்கறை, உயிர் வாழ்க்கை, ஜனநாயகம் ஆகியவற்றை மதிக்கிற அறக் கோட்பாட்டில் இருந்து உருவாகி வரவேண்டும் என்று வலியுறுத்துவதே நம் எல்லோரின் முக்கியக் கடமை. 

சிக்கல் மிகுந்த இந்த காலத்தின் மையமான அரசியல் கடமை, வாழ்வதும், இந்த விழுமியங்களின் அடிப்படையில் (மனதளவில்) ஒருங்கிணைவதுமே ஆகும். 

இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க: 

(சைமன் மெயர், சர்ரே பல்கலைக்கழகத்தின், சூழலியல் பொருளாதார ஆராய்ச்சியாளர். The Conversation தளத்தில் முதல் முதலில் வெளியான கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டு கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் பிபிசி ஃப்யூச்சர் தளத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டது.)

 

https://www.bbc.com/tamil/global-52174523

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.