Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்குத் தளர்ச்சியும்  பாராளுமன்றத் தேர்தலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்குத் தளர்ச்சியும்  பாராளுமன்றத் தேர்தலும்

 
978-23.jpgசகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது.

கொரொணாத் தொற்றின் பின்னர் அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு குறித்து முக்கியமான தளர்வுகள் கடந்த வாரத்துக்கு முன்னைய வாரத்தின் இறுதி நாட்களிலே அறிவிக்கப்பட்டன. கடந்த 20ஆம் திகதி முதல் 18 மாவட்டங்களில் ஊரடங்கு, வார நாட்களில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாத்திரமே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் எதிர்பார்க்கப்பட்டதுக்கும் அதிகளவிலான தளர்ச்சியான முறையில் ஊரடங்கு உத்தரவின் கனதி குறைக்கப்பட்டது.
 
கொரொணாத் தொற்றுப் பரவி வரும் ஒரு காலப் பகுதியில், ஊரடங்கு உத்தரவு மக்களை சமூகத் தூரப்படுத்தல் செயன்முறைகளிலே பங்குபற்றச் செய்வதற்கு அவசியமான ஒன்றாக இருந்தது. ஆனாலும் அது பொருளாதார ரீதியில் வறிய மக்களையும், தொழிலாளர் வர்க்கத்தினரையும், சமூகத்தின் நலிவுற்ற பிரிவினரையும் பல வகைகளிலே பாதித்தது. நாட்டிலே வேலையின்மையின் அதிகரிப்பு, உற்பத்தியின் வீழ்ச்சி போன்றவற்றுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு ஒரு காரணமாக அமைந்தது.
 
 
இறுக்கமான ஊரடங்கு மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் செயன்முறைகளினுள் ஒரு நாடு நீண்ட காலத்துக்குத் தன்னை வைத்திருப்பது, மக்களினை சமூக, பொருளாதார ரீதியாகவும், உடல், உளம் சார் சுகாதார ரீதியாகவும் பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
 
 
கொரொணாவினால் இறப்புக்கள் ஏற்படுவதனைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ஊரடங்கு போன்ற‌ நடவடிக்கைகள், வறுமையினாலும், பட்டினியாலும் மக்கள் இறக்கும் அல்லது நோய்வாய்ப்படும் நிலைமையினைத் தோற்றுவிக்கக் கூடாது என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
 
 
ஊரடங்கு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளல்
 
 
ஊரடங்கு உத்தரவு பல்வேறு மாவட்டங்களிலே கூடிய அளவிலே தளர்த்தப்பட்டாலும், நாடு இன்னமும் கொரொணாத் தொற்றின் அபாயத்தில் இருந்து மீளவில்லை என்பதனையும், சமூகத் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளினை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் எனவும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. இதனால் நோய்த்தொற்று மேலும் பரவுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக எவ்வாறு தீர்மானம் மேற்கொள்வது என்ற கேள்வி எழுகிறது? கொரொணா பற்றிய மருத்துவக் கரிசனைகளை முதன்மைப்படுத்துவதா?
 
 
மக்களினுடைய உணவு, வருமானம் போன்றன தங்கியிருக்கும் பொருளாதாரச் செயன்முறைகளை முதன்மைப்படுத்துவதா?

 

ஊரடங்கு உத்தரவினையும், கடுமையான சமூகத் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளினையும் அடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட, உணவு உற்பத்தி உள்ளடங்கலான, மக்களின் உயிர் வாழ்வுக்கு அடிப்படையான பொருளாதார நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவதும், நாளாந்தம் உழைப்பவர்களுக்கு வேலை செய்வதற்கானதும், வாழ்வாதாரத்துக்கானதுமான‌ வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியம்.

 

எனவே, மக்களின் ஆரோக்கியத்தினை பொருளாதாரச் செயன்முறைகளில் இருந்து பிரித்து வைக்க முடியாது என்ற புரிதலின் அடிப்படையில் இருந்தும், கொரொணாவின் பரம்பல் பற்றி தற்போது நாட்டில் அவதானிக்கப்படும் மருத்துவ நிலைமைகளின் அடிப்படையில் இருந்துமே ஊரடங்குச் சட்டத்தினை எந்த அளவிலே தளர்த்துவது? எந்த அளவுக்குத் தொழிற்சாலைகளினையும், அலுவலங்களையும் மீளியங்கச் செய்வது? எவ்வாறான பொருளாதார நடவடிக்கைகளினை உடனடியாக ஆரம்பிப்பது? எந்த அளவுக்கு மக்கள் நடமாட்டத்தினைப் பொது இடங்களில் அனுமதிப்பது போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

 
இந்த முடிவுகளை எடுக்கும் போது வைத்தியர்களினதும், பொருளாதாரத் துறை சார்ந்த நிபுணர்களினதும், தொழிற் சங்கங்களினதும், மற்றும் சமூக அமைப்புக்களினதும் கருத்துக்களை அரசு திறந்த மனத்துடன் பரிசீலிக்க வேண்டும். அதே போல மேற்குறித்த தரப்பினரும் தமது பதில்களை மக்களின் மருத்துவப் பொருளாதார நலனினை ஒட்டுமொத்தமாகக் கருத்தில் எடுத்தே முன்வைக்க வேண்டும். நிபுணர்களும், வைத்தியர்களும், ஊடகங்களும் அரசினையும், அதிகாரம் மிக்க சமூகத் தரப்புக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் பதில்களை முன்வைப்பார்கள் ஆயின், அது அவர்கள் தமது சமூகக் கடமையில் இருந்து தவறிவிட்டார்கள் என்பதனையே எமக்கு வெளிப்படுத்தும்.
நெருக்கடியான காலகட்டத்திலே தேர்தல்களும்
பொருளாதார, மருத்துவக் காரணிகளைக் காட்டிலும், ஊரடங்கு நடவடிக்கைகளிலும், சமூகத் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளிலும் கூடிய தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு அரசுக்கு மற்றொரு காரணம் இருப்பது போன்று எமக்குப் புலப்படுகிறது.

 

நாடு எதிர்கொள்ளும் மோசமான மருத்துவ நெருக்கடிக்கு மத்தியிலும், அரசாங்கம் விரைவிலே பொதுத் தேர்தலினை நடாத்துவதற்கு ஆர்வம் காட்டுகிறது. நெருக்கடி மிக்க சூழலினைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தித் தேர்தலிலே வெற்றி பெற முடியும் என ஆளும் கட்சி எதிர்பார்க்கிறது போல படுகிறது. அரசாங்கம் தேர்தலிலே நாட்டங்காட்டினாலும், மக்கள் தற்போதைய சூழலிலே நோய்த் தொற்றுத் தொடர்பாகவும், தமக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலுமே கூடிய கரிசனை கொண்டிருக்கிறார்கள்.

 
நாட்டின் மருத்துவத்துறையினரின் ஒரு பிரிவினர் கொரொணாத் தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து வெளியிடும் முக்கியமான அவதானங்களைக் கூட அரசாங்கம் செவிமடுப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் தற்போதைய அரசாங்கத்துக்கு சார்பாக இயங்கும் ஊடகங்கள் நோய்த் தொற்றின் புள்ளிவிபரங்களைத் திரிபுபடுத்தும் செயன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் நாட்டிலே சாதாரண நிலைமை தோன்றிவிட்டது என்ற விம்பம் செய்ற்கையான முறையிலே கட்டியமைக்கப்படுகிறது.

 

தேர்தலினை இலக்காக வைத்து, வைத்தியத் துறையினரின் கருத்துக்களிற்கு முக்கியத்துவம் வழங்காது, ஊரடங்கு, சமூகத் தனிமைப்படுத்தற் செயன்முறைகளிலே பொருத்தமற்ற தளர்வுகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின், அது மிகவும் அபாயகரமான நிலைமையினுள் மக்களினைத் தள்ளிவிடும்.

 

ஒரு நாட்டிலே காலத்துக் காலம் தேர்தல்கள் நடாத்தப்படுவது அவசியம். ஜனநாயகத்தின் பிரதான வடிவங்களில் ஒன்றாகத் தேர்தல் அமைகின்றது. அதேவேளை, மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் இருக்கும் சூழலிலே, அவர்களினை நோயின் பிடிக்குள் தள்ளிவிடக் கூடிய தேர்தல்களை ஜனநாயகம் என்ற பெயரில் ஊக்குவிப்பதும் மக்கள் விரோதச் செயலே.

 

தேர்தல் ஆணைக் குழு தேர்தலினை எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி வரை பிற்போட்டிருக்கின்றது. ஆனால், தேர்தல் என்பது தனியே வாக்களிக்கும் செயன்முறை மட்டுமல்ல. அதற்காக அரச இயந்திரமும், அரசியற் கட்சிகளும், மக்களும் தம்மை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குத் தயார்படுத்த வேண்டும். கட்சிகள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக மக்கள் மத்தியிலே கொண்டு சென்று சேர்ப்பதற்கான, மக்கள் பங்கேற்கும் பரப்புரைக் கூட்டங்களும் இடம்பெறுவது அவசியம். மக்கள் ஒன்று கூடும் போது நோய்த்தொற்றுப் பரவுவதற்கான அபாயம் தொடர்ந்து நிலவுகையிலே, தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதனை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

தேர்தல்கள் பிற்போடப்பட்ட சூழலில் ஜனநாயகத்தினைப் பேணுவது எப்படி?

தேர்தல்கள் பின்போடப்பட்டமையினால் ஏற்பட்ட அரசியல் யாப்பு நெருக்கடியினை ஜனாதிபதி தனக்குச் சாதகமாக்க முற்படக் கூடாது. அல்லது இந்நிலைமையினைப் பயன்படுத்தி இராணுவக் கட்டமைப்புக்களுக்குத் தேவையற்ற அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது. அரசியலமைப்பு வழங்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்திக் கலைந்து போன பாராளுமன்றினைக் கூட்டுவதற்கான செயன்முறைகளிலே ஜனாதிபதி ஈடுபடல் வேண்டும். இதுவே இந்த நோய் நிலையினைக் கட்டுப்படுத்துவதற்கு உதவக் கூடிய, தற்காலத்துக்கு ஏற்ற நிதி மற்றும் மருத்துவம் சார் சட்டங்களை உருவாக்குவதற்கு வழி செய்யும். எதிர்க்கட்சிகளும் இவ்விடயத்திலே பொறுப்புணர்வுடன் செயற்படுவது அவசியம்.

மேலும், உள்ளூர் மற்றும் பிராந்திய மட்டங்களிலான தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், பெண்கள் சங்கங்கள், கூட்டுறவு அமைப்புக்கள் என அனைத்துத் தரப்பினரினதும் கருத்துக்களைப் பெற்று கொரொணாக் காலத்தில் தோன்றியிருக்கும் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகாணவும், நிவாரணங்களை வழங்கவும் முற்பட வேண்டும். இவ்வாறான செயன்முறைகளின் மூலமாகவே, தேர்தல் பின்போடப்பட்ட சூழலிலும், ஜனநாயகத்தின் குரல்கள் நாட்டிலே உயிர்ப்புடன் வாழ்வதற்கு வழியேற்படும்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 20 தேர்தலுக்கு கொரோனா வழிவிடுமா?

977-21.jpgகொரோனா அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபடாத நிலையில் அரசாங்கம் தேர்தலுக்கு அவசரப்படுவது தொடர்பாக நாம் ஏற்கெனவே கதைகளைச் சொல்லி இருந்தோம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அசரமாகத் தேர்தலை நடாத்தி ஜூன் முதல் வாரத்தில் புதிய பாரளுமன்றத்தை எப்படியும் கூட்டமுடியது என்பது தற்போது முடிவாகி விட்டது. இப்போது ஜூன் 20ல் பொதுத் தேர்தல் என்று உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி இருக்கின்றது. அவசரமாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அழுத்தங்களைக் கொடுத்தவர்கள் இப்போது நாம் அப்படி எல்லாம் கேட்கவில்லை-பேசவில்லை எங்களுக்கு மக்களின் உயிர்கள்தான் முக்கியம் என்று பல்டியத்துப் பேசுகின்றார்கள். நமது அரசியலே பொய்யும் புறட்டும் வஞ்சகம்; சூதும் ஏமாற்றமும் நிறைந்ததுதானே. எனவே நாம் இதனைப் பெரிது படுத்த முடியாது.

குறிப்பிட்ட திகதியிலும் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியுமா என்று நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன. அரசியல் யாப்பு, சட்டங்கள் என்று இருந்தாலும் சில சமயங்களில் இயற்கை அதனை மாற்றி அமைத்த வரலாறுகள் நிறையவே நமது பதிவில் இருக்கின்றன. நான்கு வருடங்களுக்கொரு முறை அதுவும் லீப் வருடத்தில்-நெட்டாண்டில்தான் ஒலிம்பிக் போட்டி என்பது வழக்கம். ஆனால் இந்த முறை அதுகூட அடுத்த வருடத்துக்குத் தள்ளிப் போடப்பட்டுவிட்டது. அதுவும் நிச்சயம் இல்லாத நிலை. நாளை விடிந்தால் திருமணம் என்று எல்லா ஏற்பாடுகளும் தடால் புடாலாக நடந்து முடிந்தாலும் கூட சில சமயங்களில் அந்த நிகழ்வு நடக்காமல் போய் இருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். எனவே ஜூன் 20 பொதுத் தேர்தல் என்று சொல்லப்பட்டாலும் அது சாத்தியமா என்ற ஒரு பலமான கேள்வி இருக்கின்றது.

mahinda-desa-259x300.jpgகொரோனாவுக்கும் பொதுத் தேர்தலுக்கும் நடக்கின்ற பலப்பரீட்சையில் கொரோன ஒரு சின்ன அனுதபத்தை காட்டினால் மட்டுமே இங்கு தேர்தல். இல்லை இன்னும் சில காலத்திக்கு எனது பிடியை நான் தளர்த்த மாட்டேன் என்று அடம்பிடித்தால் தேர்தல் திணைக்களம் தனது வரைபடத்தை சுருட்டிக் கொண்டு ஒதுங்கிப் போக வேண்டி வரும். தேர்தல் வேட்புமனு கையேற்க்கின்ற நிகழ்வு முடிய தேர்தல் ஆணைக்குழு முக்கியஸ்தர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்கள் முன்னே சொன்னது போல் கொரோனதான் நாட்டில் எப்போது தேர்தல் என்று முடிவு பண்ணும் என்ற வார்த்தை இன்னும் அமுலில் இருந்து வருகின்றது என்பதே யதார்த்தமானது.

தேர்தலுக்குத் திகதி குறிக்கப்பட்டிருப்பதால் நாம் கடந்த வாரம் சொன்னது போல் வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் கொடுபட வாய்ப்பு இருக்கின்றது. அதனால் கொரோனா ஆக்கிரமிப்புக்கு மத்தியில் தேர்தல் களத்தில் ஒரு கொதிநிலைக்கு வாய்ப்பு இருக்கின்றது. நீங்கள் என்னதான் தேர்தலுக்கு நாள் குறித்தாலும் அது பற்றிய இறுதி முடியை நானே எடுப்போன் என்று கொரோனா வருகின்ற நாட்களில் தனது அதிரடி ஆட்டத்தைத் துவங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமே இல்லை. எனவே குறித்த தினத்தில் தேர்தல் நடக்குமா இல்லையா என்பதனை கொரோனாதான் தீர்மனானிக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம். தேர்தலில் போட்டியிட இருக்கின்ற பெரும்பாலான கட்சிகள் இந்த சூழ்நிலையில் தேர்தல் நடத்தக் கூடாது தேர்தல் ஆணையகத்திற்கு கூறிவருகின்றன. ஆனால் ஆளும் தரப்போ விரைவில் தேர்தல் நடந்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது. ஆளும் தரப்பிலுள்ள சுதந்திரக கட்சியினர் கூட இந்தத் தினத்தில் கூட தேர்தலை நடத்துவதை விமர்சிக்கின்றார்கள்.

mahinda-20.jpgசரி சொன்ன படி தேர்தல் நடக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கம் தனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்று மக்களிடம் விடுத்திருந்த கோரிக்கையை கொரோனா ஏற்கெனவே துவசம் செய்து விட்டது. ஆனால் இந்த மூன்றில் இரண்டு கனவு ஒருபோதும் சாத்தியம் இல்லை என்று கொரோவுக்கு முன்பிருந்தே நாம் அடித்துச் சொல்லி வருகின்றோம். அதே நேரம் எதிரணியை மக்கள் பதவிக்குக் கொண்டு வருகின்றார்கள் என்று ஒரு முட்டால்தனமான கற்பனையை செய்து பார்த்தாலும் அதனால் மக்களுக்கு எதுவுமே ஆகப்போவதில்லை. ஏற்கொனவே அடுப்பங்கரையில் சிக்கி இருந்த எறும்பு நேரடியாக நெருப்புக்குள் விழுந்த நிலை தான் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கின்றது. எனவே ஆளும் தரப்பு வெற்றி பெற்றாலும் எதிரணி வெற்றி பெற்றாலும் இந்த நாட்டு மக்களின் நிலை அந்த எறும்பின் கதை தான் என்பதனை நாம் முன்கூட்டிச் சொல்லி வைக்கின்றோம்.

பொதுத் தேர்தல் தொடர்ப்பில் ஆணைக்குழு உறுப்பினர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தது என்று சில ஊடகங்கள் தகவல் கொடுத்திருந்தன. அது முற்றிலும் தவறானது. ஆனால் அங்கு மென்மையான கருத்து முரன்பாடுகள் இருந்தாலும் இறுதியில் பொதுவான முடிவுக்கு அவர்கள் அனைவரும் வந்திருக்கின்றனர். வைத்தியத்துறை முக்கியஸ்தர்கள் கொரோனா விவகாரத்தில் அழுத்தங்கள் காரணமாக முன்னுக்குப் பின் முரனாகப் பேசினார்களோ என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருக்கின்றது. கொரோனாவை நாம் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டேம் என்றவர்கள் தற்போது ஆபத்தான கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று பேசி வருகின்றார்கள். சுகாதார அமைச்சர் ஏப்ரல் 19க்குப் பின் கொரோனா நாட்டை விட்டுப் போய்விடும் என்று சென்ன கதையை நாம் சில வாரங்களுக்கு முன்னர் விமர்சித்திருந்தது வாசகர்களுக்கு நினைவில் இருக்கும்.

ranil00-300x200.jpgகலைக்கப்பட்ட பாராளுமன்றத்ததை ஒருபோதும் கூட்ட மாட்டேன் என ஜனாதிபதி ஜீ.ஆர். பகிரங்கமாகக் கூறி இருந்தார். ஆனால் தேர்தல் முடிந்து புதிய பாராளுமன்றம் ஜூன் 2ல் கூட வேண்டும் அது இப்போது சாத்தியம் இல்லை. எனவே இப்போதும் தனக்குத் தேவையாக இருந்தால் அவருக்கு பாராளுமன்றைக் கூட்ட முடியும். ஆனால் இது அவருக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் அமையலாம். 2020 செப்தெம்பரில் நடக்க இருந்த தேர்தலை முன்கூட்டி வைக்கும் தீர்மானம் பண்ணியவரும் அவரே. அவர் இப்படி ஒரு நெருக்கடி வரும் என்று கருதி இருக்க மாட்டார்.

சாதாரண நிலையில் நடக்கின்ற தேர்தல் தொடர்பிலே திணைக்களத்துக்கு வழிகாட்டல்கள் இருக்கின்றன. இது ஒரு அசாதாரண நிலை. எனவே சம்பிரதாயங்கள் சட்டங்கள் கூட இதில் மாறிப் போக இடமிருக்கின்றது. தேர்தல் தொடர்ப்பில் மே முதல் வாரத்தில் மற்றுமொரு சுற்று நிருபம் வெளிவரும். அப்போது தேர்தல் தொடர்ப்பில் இன்னும் பல தகவல்கள் அதில் சொல்லப்படும். வேட்பாளர் இலக்கங்கள் கூட அப்போதுதான் தெரியவரும் என நாங்கள் கருதுகின்றோம்.

வேட்பாளர்களுக்கு சுதந்திர பிரச்சாரத்துக்கு வாய்ப்பு இருக்கின்ற பின்னணியில்தான் தேர்தல் நடக்கும். எனவே பிரச்சாரத்து போதியளவு இடம் கொடுத்து விட்டு திடீர் என்ற ஒரு தினத்தில் தேர்தல் நடக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. அப்படியான தினம் ஜூன் 20தோ அல்லது அதற்குப் பிந்திய ஒரு நாளாகவும் அது அமையலாம். ஆனால் இதுபற்றிய இறுதி முடிவும் இன்னும் கொரோனா கைகளிலேயே இருக்கின்றது.

சில வாரங்களுக்கு முன்னர் இது தான் மிகவும் ஆபத்ததான வாரம் என அமைச்சர்கள் சொல்லி இருந்தார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் ஆபத்ததான வாரம் இதுதான் என்று அந்த வாரம் இறப்பார் போல் இழுபட்டுச் செல்கின்றது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (புஆழுயு) வருகின்ற வாரங்கள் தீர்க்கமான வாரங்களாக இருக்கும் என்று மக்களை எச்சரித்துக் கொண்டு வருகின்றார்கள். எமக்குத் தெரிந்தவரை வருகின்ற இன்னம் சில மாதங்கள் தீர்க்கமானதாக இருக்கப்போகின்றது என்றுதான் செல்லவேண்டும்.

சில வேலை இது வருடக்கணக்கில் என்று இழுபட்டுப்போகவும் வாய்ப்பிருக்கின்றன. கொரோனா வந்து ஐந்து மாதங்கள் கடந்தும் அது எப்படி வந்தது இயற்கையாக வந்ததா அல்லது எவரும் திட்டமிட்டு பறவவிட்டார்களா என்று கூட கண்டறியமுடியாமல் மருண்டவன் கண்ணுக்கு இருன்டது எல்லாம் பேய் என்று தெரிவது போலதான் கொரோனாவை உலகம் பார்க்கின்றது. எனவே கொரோனா எப்போது போகும் என்பதனை வல்லரசுகள் கூட நிச்சயத்துக் கொள்ள முடியாத நிலையில் இலங்கை கொரோனா விடயத்தில் எப்படி நம்பிக்கையான கருத்துக்களைத் தெரிவிக்க முடியும். ஒவ் வொருவரும் தமது மனத்தில் உள்ள விருப்பங்களைத்தான் சொல்லிக் கொண்டு வருகின்றார்ள் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளைப்போலவே தற்போது ஊடகங்களும் கொரோனா தெடர்பாக முன்னுக்குப் பின் முரனான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று வெளியிட்ட செய்திக்கு முற்றிலும் தலைகீழ் மாற்றமான செய்திகள் அடுத்தநாள் அதே ஊடகங்கள் சொல்லி வருவதையும் நாம் பார்க்கின்றோம். எனவே கொரோனா விவகாரத்தில் மட்டுமல்லாது ஏனைய விடயங்களிலும் மக்கள் ஏமாளிகளாக இருந்து விடக்கூடாது. சொல்லப்படுகின்ற செய்திகள் தொடர்பாக அறிவுபூர்வமான ஆய்வும் மக்களிடத்தில் இன்றைய உலகில் தேவைப்படுகின்றது.

வைத்தியர் சங்கம் அரசையும் திருப்திப்படுத்தி மக்களுக்கும் யதார்த்தத்தை சொல்ல வேண்டி இருப்பதால் அவர்கள் வார்த்தைகளில் பிசகல்கள் வருவதை நாம் பார்க்கின்றோம் இது தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விடுவது போல் ஒரு காரியம். அவர்கள் அறிக்கைகளையும் ஊடகச் சந்திப்புக்களையும் உன்னிப்பாக அவதானித்தால் இது புரியும். தற்போது கொரோனா தொடர்பான வரைபடங்களையும் புள்ளிவிபரங்களையும் அவதானிக்கின்ற போது இத்தாலியைவிட மோசமான நிலையில் இலங்கை இருக்கின்றது என்று வைத்திய சங்கம் தற்போது தெரிவிக்கின்றதுஇ அதே நேரம் நியூயோர்க் நிலை கொழும்பிற்கு வர இடமிருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. எனவே நிலமையை குடிமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏறக்குறைய கொரோனா தொற்றாலர்கள் தொடர்ப்பில் பரீசோதனைக்காக இன்னும் 50000 பேரளவில் இருக்கின்றார்கள். குறைந்தது ஒரு நாளைக்கு 1500 பேரையாவது பரீசோதிக்கும் வசதிகள் நமக்கு வேண்டும். அந்த வசதிகள் இல்லாது நாம் இந்தக் கொரோனாவை எப்படி வெற்றி கொள்ளப்போகின்றேம் என்பதனை எமக்குப் புரியவில்லை என்று வைத்திய துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் தாமதிக்கும் ஒவ்வொருவினாடிகளும் ஆபத்தனவை. இந்த சிறு தொகை எண்ணிக்கையை கையாளுவதற்கே இந்தத் தடுமாற்றம் என்றால் இது பல்லாயிரக் கணக்கில் தொற்றாலர்கள் சென்றால் நிலமை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். குறைந்தது 10000 பேருக்காவது வைத்திய சேவைக்கு அரசு தன்னைத் தயாராக வைத்திருப்பது நல்லது என்பது எமது கருத்து. நாடு முழுவதிலும் ஒரு இலட்சம் பேருக்கு வசதிகள் செய்யப்படுமானால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

கொரோனா தொடர்பான செய்திகள் மக்களுக்கு மூடிமறைக்கப்படுகினறனவா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தேர்தல் தொடர்பான தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக வெளிவந்த பின்னணியில் இப்போது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தகவல்களை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று நாம் எதிர்பார்க்கலாம். கடந்த வாரம் நாட்டில் பெரும்பாலான குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஆளும் தரப்பு உள்ளுர் அரசியல்வாதிகள் ஊடுருவல் இருந்தததையும் அவதானிக்க முடிந்தது.

மேலும் அரசின் சில தீர்மானங்கள் நகைப்புக்கு இடமாகி இருக்கின்றது. சாராயக் கடைகளைத் திறந்த போது மக்களுக்கு அது மன நிம்மதிக்காக என்று சொல்லப்பட்டது. ஆனால் நாட்டில் அனேகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் சாராயக் கடைக்காரர்கள் என்பது நமக்குக் தெரிந்நதே. இப்போது குடிகாரர்களை கொரோனா விரைவாகத் தொற்றும் என்பதால் அந்தத் தீர்மானம் மாற்றப்பட்டு மீண்டும் அவற்றிற்குப் பூட்டுப் போடப்பட்டிருப்பதால் கசிப்பு வியாபாரம் உள்ளுரில் கொடிகட்டிப் பறக்கின்றது.

ஒரு பேரூந்தில் 20 பேருக்கும் குறைவானவர்களே பயணிக்க முடியும் என்றார்கள், ஆனால் பேரூந்துகள் பலவற்றில் டின்மீன்கள் போல் மக்கள் நெருக்கமாகப் பயணிக்கின்றார்கள். வேடிக்கை என்னவென்றால் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கின்ற பாதுகாப்பு படைகளை ஏற்றிச் செல்கின்ற பேரூந்துகளிலும் இந்த டின்மீன் நிலையில் பயணங்கள் தொடர்வதை பாதை ஓரங்களில் இருப்பவர்கள் அவதானிக்க முடியும். அரிசி, டின் மீன், பருப்பு போன்ற பொருட்களுக்கு விலை குறைப்பை அரசு செய்தாலும் தனியார் நிறுவனங்கள் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை எனவே சட்டம் கேளிக் கூத்தாக நிற்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனித வேட்டைக்காரன் சஹ்ரான் குழுவால் நடாத்தப்பட்ட தாக்கதலுக்கு ஓராண்டு பூர்த்தியானது. கொரோனா காரணமாக அந்த நினைவு தினம் மென்மை நிலையில் நடந்து முடிந்ததைப் பார்க்க முடிந்தது. அன்று இந்தத் தாக்குதல் நடந்த போது இது பற்றிய உரிமையை அந்தக் கொலையாளிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதனை நாமும் ஏற்றுக் கொண்டாலும், விரும்பியோ விரும்பாமலோ இந்தப் படுகொலைக்கு முஸ்லிம் சமூகம் சார்பில் பொறுப்பானவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்பது எமது நிலைப்பாடாக இருந்தது.

காரணம் முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்த பிள்ளைகள் அல்லது தமது உடன்பிறப்புக்கள்தான் இந்தக் காரியத்ததை பார்த்தார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் மனட்சாட்சிப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அன்றும் இன்றும் எமது நிலைப்பாடாக இருந்தது இருக்கின்றது. ஆனால் எமது கோரிக்கையை அன்று பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்டு கொள்ள வில்லை. அத்துடன் அதனை விமர்சித்தவர்களும் இருந்தார்கள். அந்த நிலையில் சமூகத்தைச் சேர்ந்த ஊடகக்காரன் என்ற வகையில் நாம் பேராயர் மல்கம் ரஞ்சித் ஊடாக பாதிக்கப்பட்ட சமூகத்திடம் மன்னிப்புக் கோட்டு ஊடகங்களுக்கு-பத்திரிகைகளுக்குச் செய்தி சொல்லி இருந்தோம். ஆனால் ஓராண்டு பூர்த்தியின் போது பொறுப்பானவர்களும் மூளை முடுக்குகளில் உள்ள எல்ல இடங்களிலும் இதற்காக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பிரார்த்தனைகள் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது ஒருசிறிய மனநிறைவு நமக்கு ஏற்பட்டிருக்கின்றது. என்ற செய்தியையும் சொல்ல வேண்டி இருக்கின்றது

http://thinakkural.lk/article/39534

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் தாமதமானாலும் நாடாளுமன்றைக் கூட்டுவதில்லை: உறுதியாகவுள்ள கோத்தாபய

Gotabaya-Rajapaksa-3-300x200.jpgநாடாளுமன்ற தேர்தல்கள் தாமதமாகிவருகின்ற போதிலும் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதில்லை என்பது குறித்து உறுதியாக உள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரத்தை தன்னால் முடிந்தளவு காலத்திற்கு தொடர்வது என்ற நிலைப்பாட்டில் காணப்படுகின்றார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்களை கையாள்வதற்காக அவர் தொடர்ந்தும் செயலணிகளை நியமிக்கின்றார் என்பதையும் கொழும்பு டெலிகிராவ் சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவ முகாம்களில் கொரோனா வைரஸ் குறித்த நடவடிக்கைகளிற்காக திங்கட்கிழமை கோத்தபாய ராஜபக்ஷ செயலணியொன்றை நியமித்துள்ளார் என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.

180 படையினர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளதை தொடர்ந்தே ஜனாதிபதி இந்த செயலணியை உருவாக்கியுள்ளார், ஒரே பகுதியில் இவ்வளவு அதிகமான நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்தடவை என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.

வைரஸ் தொற்றின் போது நிவாரண விடயங்களை கையாள்வதற்காக அவர் செயலணியொன்றை நியமித்துள்ளார்,பொருளாதார விடயங்களை கையாள்வதற்காக தனது சகோதரர் பசில் ராஜபக்ஷ தலைமையில் செயலணியொன்றை அமைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ள கொழும்பு டெலிகிராவ் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றியவேளை இலஞ்சங்கள் பெற்றவர் பசில் ராஜபக்ச எனவும் குறிப்பிட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ தனது ஏனைய அனைத்து நடவடிக்கைகளிற்கும், இராணுவத்தையும் பாதுகாப்பு கட்டமைப்பையும் பயன்படுத்துகின்றார் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் உயர்மட்ட தலைவர்களிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ள கொழும்பு டெலிகிராவ் அமைச்சர்கள் சகிதம் ஆட்சி செய்வதை விட ஜனாதிபதி ஆட்சி சிறந்தது என்ற நம்பிக்கை ஜனாதிபதியிடம் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உயர்மட்ட தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கள் தேர்தல் தொகுதிக்கு செல்வதையும், தேர்தலிற்கு முன்னர் தாங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமாவதையும் தடுக்கும் புதிய சூழ்நிலை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அமைச்சர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் எனவும் கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரங்களை கூட ஜனாதிபதி செயலகம் கையகப்படுத்தியுள்ளது என்ற முணுமுணுப்பு ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன அமைச்சர்கள் மத்தியில் காணப்படுவதாக கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தனது சகோதரர் விவகாரத்தை தந்திரோபாயமான விதத்தில் கையாள்வதற்கான வழிமுறையொன்றை கண்டுபிடித்துள்ளார் போல தோன்றுகின்றது என ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

கோத்தாபயவின் திறமைவாய்ந்த நிர்வாக யோசனைக்கு, மகிந்த ராஜபக்ஷவும் அவரது மகன்களுமே பெரும் தடையாக விளங்குவார்கள் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் நீண்ட நாட்களாக எச்சரித்து வந்துள்ளனர் என அந்த ஆய்வாளர் குறிப்பிட்டார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ஷவை தனிமைப்படுத்தி தனது வழியில் நாட்டை நிர்வகிப்பதற்கான புதுமையான அனுமதியை கொரோனா வைரஸ் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது என குறிப்பிட்ட ஆய்வாளர் தெரிவித்தார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அமைச்சரவையின் பரிந்துரைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை, என தெரிவித்துள்ள ஆய்வாளர் அவர் நாடாளுமன்றத்தை சந்திக்கவேண்டிய அவசியமில்லை என்பது மாத்திரமல்ல அவருக்கு அமைச்சரவையும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டு எதிரணி திங்கட்கிழமை , கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் ஜனாதிபதிக்கு முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளதுடன் அவரது அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைளை எடுக்கமாட்டோம் என்ற உறுதிமொழியையும் வழங்கியுள்ளது.

வலுவான எதிர்கட்சியிடமிருந்து அரசாங்கத்திற்கு எதிரான முன்னொரு போதும் இல்லாத ஆதரவு இது.

எனினும் இதன்காரணமாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பான ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

http://thinakkural.lk/article/39576

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களை திசைதிருப்ப அரசு பொய்களை கூறுகிறது – திகா கொந்தளிப்பு

Digambaram-2.jpg?189db0&189db0

 

கொரோனா அச்சம் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை திசை திருப்புவதற்காக அரசாங்கம் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக எதிர்த்தரப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,

இன்று கொரோனா வைரஸினால் நாட்டில் பாரிய சிக்கல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தால் நாளுக்கு நாள் நோயளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது.

இந்நிலையில். பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தவே அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. இது ஆபத்தான ஒரு விடயமாகும். இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவது பொறுத்தமான விடமாக அமையாது.

பழைய நாடாளுமன்றைக் கூட்டி, அடுத்தக்கட்ட செயற்பாடுகளை ஆராய்வதுதான் முறையான ஒன்றாக அமையும். சில அரசாங்கத்தரப்பினர் இந்த விடயத்தில் மக்களை குழப்புவதற்காக பொய்களைக்கூறி வருகிறார்கள்.

பழைய நாடாளுமன்றைக் கூட்டுவதால், பாரிய செலவு ஏற்படும் என்று கூறுகிறார்கள். நாம் எதிர்க்கட்சி என்ற ரீதியில் சம்பளம், உணவு என எதுவும் வேண்டாம் என கூறியுள்ளோம்.

ஆனால், அரசாங்கம் அதனை மேற்கொள்ளாமல் இதனை வைத்து அரசியல் செய்யத்தான் முயற்சி வருகிறது. 5 ஆயிரம் ரூபாய் நிதியைக் கூட, தங்களின் சொந்தப் பணத்திலிருந்து வழங்குவது போன்றுதான் இவர்கள் காண்பித்துக் கொள்கிறார்கள். – என்றார்.

https://newuthayan.com/மக்களை-திசைதிருப்ப-அர/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.